Advertisement

பதினோரு மணிவாக்கில் திரு வீட்டிற்கு அழைத்தான். அதுவரையிலும் அவனை அவனே அவனின் அலுவலக அறையில் அமர்ந்து திட்டிக் கொண்டிருந்தான்.

“ஒரு பொண்ணை இவ்வளவு டார்ச்சர் பண்ணுவியா நீ, அவளா இருக்கவும் இருக்குறா! வேறா யாரா இருந்தாலும் உன்னோட குப்பை கொட்ட முடியாது!” என்று. உறங்குகிறாள் என்று சொல்லப் பட, அவனால் அங்கே இருக்க முடியவில்லை. என்னவோ ஏதோவென்று பதறி மதிய உணவிற்கு வீட்டிற்கு வீட்டிற்கு வருவது போல வந்தான்.

“என்னடா திரு உன்னை பார்க்க முடியலை! அண்ணா, எங்கே உன்னைக் காணோம்” இப்படி பல விசாரிப்புகள்! அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே மனைவியைக் கண்கள் தேட,

துளசி ஓரிடத்தில் அமர்ந்திருந்தாள். ஆம்! அமர்ந்து தானிருந்தாள். அகிலாண்டேஸ்வரி அவளை எழுந்திருக்க விடவில்லை.

கிட்ட தட்ட பதிமூன்று வருடங்களாக துளசியைப் பார்க்கிறார். இப்படி சோர்ந்து பார்த்ததில்லை. கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் ஏதாவது உடம்பிற்கு இழுத்து வைத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து அவளை சேர் அர்ரஸ்ட் செய்து வைத்திருந்தார்.

திரு நேராக உணவு மேஜையில் அமர, துளசி எழப் போக,

“அவன் எனக்கும் பையன் தான், நான் போடமாட்டேனா” என்று அகிலாண்டேஸ்வரி சொல்ல, துளசி அப்படியே அமர்ந்து கொண்டாள்.

அகிலாண்டேஸ்வரி பரிமாற வர, “மா, துளசி வைக்கட்டும்” என்றான் திரு.

“ஏன்டா, நான் போட்டா சாப்பிட மாட்டியா? அவ சோர்ந்து தெரியறா, அவ அமைதியா உட்காரட்டும்!” என்று திருவை அதட்டினார்.

ஏதும் பதில் பேச இயலாதவனாக உண்டு விட்டு எழுந்தான். பின்பு உறவுகள் எல்லோரும் இருப்பதால் அவன் மீண்டும் மில்லுக்கு சென்று விட்டவன், அன்று ஆறு மணிக்கே வீடு திரும்பிவிட்டான்.

அன்றைக்கும் மீனாட்சியை வித விதமாய் அலங்கரித்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்க,

துளசிக்கு அவளை பார்ப்பதற்கே சரியாய் இருந்தது. எத்தனை பேர் இருந்தாலும் “மா” என்று மீனாக்ஷி அவளை தான் தேடினாள்.

திரு துளசியின் முகம் தான் பார்த்தும் பாராமல் பார்த்து இருந்தான். மதியம் இருந்ததற்கு சற்று தெளிவாக இருந்தது.

அப்போது தான் மனம் சற்று திருவிற்கு சமன் பட்டது. அதுவரை அப்படி ஒரு உளைச்சலில் இருந்தான். அதனால் ஒரு புதிய முடிவிற்கே வந்து விட்டான். இனி அதிகம் துளசியிடம் பேசுவதில்லை என. இந்த மூன்று நாட்களிலேயே அவளை ஒரு வழியாக்கி விட்டான் என்று அவனிற்கே புரிந்தது.

இரவு உணவு எல்லோரும் உண்ண ஆரம்பிக்க, ராதாவின் கணவன் தருண் வந்திருந்தான். அவனோடு அமர்ந்து உண்ணும்படி அகிலாண்டேஸ்வரி அழைத்தார்.  

வீட்டின் மாப்பிள்ளை, வேறு வழியில்லாமல் அமர்ந்தான். தருணும் அப்படி அதிகம் வரமாட்டான். வந்தால் செலவு வைக்காமல் செல்ல மாட்டான். திருவை ஏதாவது எப்போதும் குடைவான். திருவின் சமீப கால வளர்ச்சி அவனின் கண்களை உறுத்தியது.

ராதாவும் அவளின் மகன் விஷாலுடன் உணவு உண்ண அமர, கூடவே சாரதாவும் சித்ராவும் அமர அதற்கு மேல் உணவு மேஜையில் இடமில்லை.

திருவிற்கு இத்தனை பேர் இருக்கும் போது என்னை எதற்கு கூப்பிட வேண்டும் என்று அம்மாவை பார்த்து முறைத்தான். அகிலாண்டேஸ்வரி கண்களால் கெஞ்சினார்.  

துளசிக்கோ வேறு கவலை! இத்தனை பேர் இருக்கும் போது அவன் சரியாக உணவு உண்ண மாட்டானே என்று. காலையில் அவன் சாடியது எல்லாம் அந்த நிமிடம் நினைவில் இல்லை.

திருவிற்கு தருண் மேல் வேறு ஒரு கோபமும் இருந்தது. அவசரத்திற்கு என முப்பது லட்சம் ஒரு ஐந்தாறு மாதம் முன்னால் வாங்கியிருந்தான். சில நாட்களுக்கு முன் தான் தருண் அந்த பணத்தை வட்டிக்கு விட்டிருப்பது தெரிந்தது.

திருவிடம் பணமிருந்தாலோ, இல்லை அதற்கான தேவை இல்லாமல் இருந்தாலோ, எப்படியோ தொலையட்டும், கொடுக்கும் போது கொடுக்கட்டும் என விட்டிருப்பான்.

ஆனால் இப்போது தேவை இருக்கவும் “என்னுடைய பணத்தை வாங்கி இவன் வட்டிக்கு விடுவானா?” என்ற கடுப்பு இருந்தது. ராதாவிடம் அழைத்து இப்படி விஷயம் என ஒரு கோடி காண்பித்து இருந்தான். திரு சொல்லவும் தான் தெரியும் அதற்கு முன் ராதாவிற்கு தெரியாது.   

அமர்ந்து உணவு உண்ண ஆரம்பிக்க, அகிலாண்டேஸ்வரியும் ஷோபனாவும் பரிமாறினார். “அப்புறம் மச்சான் இடமெல்லாம் வாங்கறீங்க போல” என்று தருண் பேச்சினை எடுத்தான்.

திருவை விட தருண் ஒரு வயது இளையவன், அதனால் பேர் சொல்லியே கூப்பிடுவான் திரு.

“அப்படியா தருண்” என்றான் திரு எதோ புதிய விஷயம் கேட்பது போல.

இன்னும் திரு வீட்டினில் யாரிடமும் சொல்லியிருக்கவில்லை. துளசியிடம் மட்டுமே இரண்டு தினம் முன் சொல்லியிருந்தான்.

“அப்படியா?” என்றார் சித்ரா உடனே, “எங்கே?” என்று அவர் ஆரம்பிக்க,

“அதையும் தருணே சொல்லுவான் அத்தை” என்று திரு முடித்தான்.

அகிலாண்டேஸ்வரி “இது என்ன புது பேச்சு?” என்று பார்க்க, மேகநாதன் அங்கே இருந்தவரும் இவர்களின் பேச்சினை கவனித்தார்.

“என்ன மச்சான் நீங்க சொன்னா தானே சரியா இருக்கும்!” என்று தருண் பேசினான்.

ராதாவை பார்த்தான் திரு, அந்த பார்வை சொன்னது “உன் புருஷன் இப்போ வாயை மூடணும்” என்று.

“மா, சமையல் நல்லாவே இல்லை போல” என்றாள் ராதா திடீரென்று.

“தனம் நல்லா சமைக்குமே” என்று அகிலாண்டேஸ்வரி சொல்ல, அவரின் கணீர் குரல் சத்தமாய் இதனை சொல்ல என்னவோ ஏதோவென்று துளசி அவர்களின் அருகினில் வந்தாள்.

“சமையல் நல்லா இருந்தா, என் வீட்டுக்காரர் சாப்பிடறதை விட்டு அதையும் இதையும் ஏன் பேசப் போறாரு. ஒரு விருந்துன்னா இதெல்லாம் பார்க்க வேண்டாமா” என்று சண்டைக்கு போவது போல பேசிக் கொண்டே தருணை ஒரு பார்வை பார்த்தாள்.

“அதில் நீ பேசக் கூடாது” என்ற செய்தி இருந்தது.

சில நாட்களுக்கு முன்பே “எங்கண்ணன் கிட்ட பணம் வாங்கி நீங்க வட்டிக்கு விடறீங்களா?” என்று சண்டை பிடித்து இருந்தாள், இன்னம் அவ்வப் போது பிடித்துக் கொண்டு தான் இருந்தாள்.  

அதனால் தருண் வாயை மூட,

“எங்கே? எவ்வளவு இடம்? என்ன விலை?” என்று சித்ரா விட்டேனா என்று கேட்டார்.

“அதுதான் உங்க பையன் சொல்வாருன்னு அண்ணா சொல்றான் தானே, வீட்டுக்கு போய் சாவகாசமா பேசுங்க. இப்போ சாப்பிடுங்க நேரம் ஆச்சு” என்று ராதா அதட்ட, சித்ராவும் அடங்கி உண்ண ஆரம்பித்தார்.

காலையில் இருந்து அகிலாண்டேஸ்வரி துளசியை தாங்குவதை பார்த்து இருந்த சாரதா, இப்போது திரு இடம் வாங்குவது பற்றி எல்லாம் எல்லோரும் பேச, ஒரு கடுப்பில் வேண்டுமென்றே, “ஏய் தண்ணி கொண்டு வா” என்று துளசியை பார்த்துச் சொல்ல,

ஏற்கனவே கனமாக ஆரம்பித்த சூழல் இன்னும் இறுகியது.

அதற்குள் தள்ளி அமர்ந்திருந்த வசுமதியும் மேகலாவும் தண்ணீர் கொண்டு வர எழ, “ஐயோ இந்த அம்மா” என மனதினில் திட்டிக் கொண்டே ஷோபனா ஒரு பக்கம் போக,  

ராதா அவளின் அருகினில் இருந்த தண்ணீரை சாரதாவிடம் “குடிங்க” என்று எடுத்து கொடுக்க.

எல்லோருக்கும் முன் துளசி சமையல் அறை நோக்கி நடக்க ஆரம்பித்து இருந்தாள்.

அது அப்படி ஒரு கோபத்தை திருவிற்கு கொடுத்து இருந்தது. சாதாரண நாளாக இருந்தால் துளசி செல்லாமல் கூட இருப்பாள். இப்போது அவர்களின் மகளின் விகேஷதிர்க்கு வந்தவரை எப்படி அவமதிப்பது என நினைத்து மனம் நொந்தபடி போக,  

“துளசி” என்று அழைத்தான் திரு.

துளசி திரும்பவும் “உனக்கு சூடு சொரணையே கிடையாதா? எவ்வளவு சொன்னாலும் புரியாதா! போய் உட்காருடி முதல்ல! கொஞ்சம் கூட அறிவே கிடையாது! யாரு ஏய்ன்னு கூப்பிட்டு வேலை சொன்னாலும் போயிடுவியா. உன் மரியாதை தான் நீ பார்க்கறது இல்லைன்னாலும், என் மரியாதை கூட பார்க்க மாட்டியா நீ” என்று வார்த்தைகளை ஆங்காரமாய் கடித்து துப்பினான்.

மீண்டுமா என்று அங்கிருந்த அத்தனை பேரும் ஸ்தம்பித்தனர்.

துளசிக்கு கடகடவென்று கண்களில் நீர் இறங்கியது.

அதை பார்த்ததும் இன்னும் அவனுக்கு எரிச்சலாக, அதையும் விட அகிலாண்டேஸ்வரி “என்னடா எதுக்குடா அவளை திட்டுற?” என்று சண்டைக்கு கிளம்பினார்.

அம்மா அழுவதை தூரமாக இருந்து என்றாலும் பார்த்திருந்த மீனாக்ஷியும் அழ, ரத்னா அப்படியே நின்றிருந்தார்.

“வேற என்னை என்ன தான் பண்ண சொல்றீங்க, இவளை மட்டும் தானே என்னால திட்ட முடியும், எத்தனை தடவை எல்லோருக்கும் சொல்றது. ஆனா இனிமே அதுக்கு கூட எனக்கு தெம்பில்லை, இந்த விஷேஷம் முடியட்டும் நாங்க தனியா போயிடறோம். உங்களுக்கு யாரை வேணுமோ வெச்சிக்கங்க. இப்படி எப்பவும் அவளை மரியாதை இல்லாம பேசறதை என்னால பொறுத்து போக முடியாது” என்றவன்,

“சும்மா எல்லோர் முன்னாடியும் எப்பவும் அழுதுட்டு நிற்பியா, போடி உள்ள!” என்று துளசியை பார்த்து மீண்டும் கர்ஜிக்க,

மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் எதையும் கவனிக்கு நினைப்பில் இல்லவே இல்லை,

என்ன திரு வீட்டினை விட்டு போவதா?  

மற்ற எல்லோரும் சாரதாவை தான் முறைத்து பார்த்தனர் “சே, நீயெல்லாம் ஒரு மனுஷியா” என்பது போல,

வெங்கடேஷ் தன் மாமியாரை பேச வாயெடுக்க, “நாம எவ்வளவு வேணா அழுதுக்கலாம், நம்ம வீட்டை விட்டு இவங்க அழுதுட்டு போகக் கூடாது” என்று சாரதாவையும் சித்ராவையும் கைகாட்டினான் திரு.  

துளசிக்கு அழுகையோடு கூட கால்கள் வேரோடியது. அந்த இடத்தில் இருந்து அசையக் கூட முடியவில்லை.

சில நொடிகள் துளசியை பார்த்த திரு எழுந்து வந்தவன், “வா” என்று அவளின் கை பிடித்து நகர்த்தினான்.  

Advertisement