Advertisement

அத்தியாயம் பதினைந்து :

துளசி உள்ளே வந்து அவனுக்கு காஃபி கொடுக்கும் வரை கிட்ட தட்ட கால் மணிநேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

அம்மா சொன்ன “கொஞ்சுவாங்களா” என்ற வார்த்தையை மனதிற்குள் அசை போட்டபடி, பல சமயம் தோன்றியிருந்த ஏக்கம் அவனுள் அப்போது ஞாபகம் வந்து அவனை அசைத்து இருந்தது.  

அவள் வந்து காஃபி கொடுக்கவும் ஒரு முறைப்புடன் வாங்கினான்.

“இப்போ என்ன தெரியலையே?” என்று நினைத்த போதும் “எதுக்கு அவளை அடிச்சீங்க?” என்றாள் அவனை நேர் பார்வை பார்த்து.  

“உன்கிட்ட வர்றேன்னு ரொம்ப ரகளை பண்ணினா அதுதான் அடிச்சிட்டேன்” என்றான் அதே முறைப்புடன்.

“என்கிட்டே வரணும்னு கேட்டா அடிப்பீங்களா?” என்று ஆதங்கமாகக் கேட்க,

“ஆமாம் அடிப்பேன்! உன்னை இங்க கூட்டிட்டு வர கேட்காம நான் அங்க போறேன்னு சொன்னா, அடிக்காம என்ன பண்ணுவாங்க?” என்ற அவனின் பதிலில், “ஷப்பா, என்ன பதில் இது! அத்தை உங்களை அடிக்க வந்ததுல தப்பே இல்லை!” என மனதிற்குள் நினைத்து, அதனை கண்களில் காண்பித்தாள்.

“ஏய் சும்மா பார்க்காத போடி, இவ என்னை கொஞ்சுவாலாம் என் பொண்ணு சொல்றா, அவங்கம்மாவை பத்தி தெரியாம! என் முன்ன நிக்காத போடி, அவ்வளவு கோபம் வருது எனக்கு!” என்று சொல்லி திரு எழுந்து போய் விட்டான்.

“அய்யோடா, இவனை என்ன செய்ய?” என்று புரியாமல் குழம்பியவள், “இவனை நான் கொஞ்சனுமா, எப்படி கொஞ்ச?” என்று முகத்தை சுருக்கி பார்த்திருந்தாள்.

“இவன் என் முகத்தை கூடப் பார்க்க மாட்டானாம், கேட்டா, பார்த்துட்டே இருக்க முடியாதாம்! இதுல நான் கொஞ்சனுமாம், என்னை என்ன பைத்தியம் நினைச்சானா?”

அதற்குள் அம்மா என்று மகள் அழைக்க “தோ வர்றேன்” என்று குரல் கொடுத்தவள் சென்று விட, பின்பு வேலைகள் இழுத்துக் கொள்ள, நேற்றைய சோர்வு துளசியிடம் குறைந்திருக்க, வேலைகள் துரிதமாக நடந்தது.

குளித்து முடித்து திரு வந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க, சமையல் அறையில் இருந்து வந்தவள், அவனிடம் வந்து “நான் குளிக்க போறேன், நான் வர்றதுக்குள்ள ஓடிடக் கூடாது, சாப்பிடாம போகக் கூடாது!” என்று மெல்லிய குரலில் சொல்லிச் சென்றாள்.

“என்ன நான் ஓடறேனா? இருடி உன்னை!” என்று எழுந்து ரூமிற்குள் அவளிடம் சண்டை பிடிக்க சென்றான்.

அதற்குள் துளசி குளிக்க சென்றிருக்க, “ப்ச்” என்று சலித்து அங்கேயே அமர்ந்தான்.

குளித்து முடித்து வந்தவள் பார்க்க, அவன் அங்கேயே அமர்ந்திருப்பதை பார்த்து, அரை குறையாய் கட்டிய புடவையை சரியாய் கட்ட நினைத்து “கொஞ்சம் வெளிய இருக்கீங்களா, நான் புடவையை நல்லா கட்டிக்கறேன்” என  

அவளை இன்னும் முறைத்து பார்த்தான்! பின் அவளிடம் “என் முன்னாடி புடவை கட்ட மாட்டியோ? இங்கேயே கட்டு!” என்று பேச,

இப்போது துளசி அவனை முறைத்து பார்த்தவள், திரும்ப நின்று புடவை கட்ட,  

“எதுக்குடி இப்ப என்ன முறைச்ச?” என்று அவளின் முன் வந்து நின்றான்.

அவசரமாக முந்தியை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள் “ஏன் இந்த கலாட்டா பண்றீங்க?” என்று கேட்டே விட,

“அப்படி தான் பண்ணுவேன், அப்படி ஒரு கலாட்டா பண்ணின ஒரே ஒரு நாள் தான் நீ எனக்கு போனாப் போகுதுன்னு ஒரு முத்தம் குடுத்த”

“எப்போவாவது என்னை இப்படி நீ முறைச்சு பார்த்திருக்கியா? இல்லை நான் பேசணும்னு சண்டை போட்டிருக்கியா? எதுவுமே கிடையாது!”

“நான் என்ன பண்ணினாலும் பொருத்து போயிடுவ, ஏதாவது என்கிட்டே பேசினா மீனாக்ஷிக்காக மட்டுமா தான் அது இருக்கும்”      

“இதுல நீ என்னை கொஞ்சறியாம்!” என்றவன் குரலை சிறியதாக்கி அருகில் வந்து “உண்மையா சொல்லு, நான் பக்கத்துல வராம நீ எப்போவாவது வந்திருக்கியா, அதை விடு நாம சேர்ந்து இருக்கும் போது, ஏதாவது ஒரு செயல் உன்னோடதா இருந்திருக்கா?” என ஆழ்ந்த குரலில் கேட்க,

“ஷப்பா” துளசி வாயடைத்து போனாள்!

“எனக்கு ஆசை இருக்காதா? வேளாவேளைக்கு எனக்கு சமைச்சு சாப்பாடு போடறது தான் உன் வேலையா? இல்லை எனக்கு எப்போ தேவைன்னாலும் வர்றதா?” என,

“அம்மாடி, என்ன குற்றச்சாட்டு இது?” என்று துளசி அதிர்ந்து பார்க்க,

“ஏன் பொண்ணுங்கன்னா புருஷன் பக்கத்துல வரக் கூடாதா? வந்தா நல்ல பொண்ணுங்க இல்லையா?  எனக்கு பதில் சொல்லு!” என்றான் பிடிவாதமாக.

“இல்லையே, அப்படி இல்லையே!” என்று அவசரமாக துளசி பதில் என்ற பெயரில் உளறினாள்.

“இல்லை, எப்போவாவது உன்னை நான் ஹர்ட் பண்ணியிருக்கேனா? ஆண்ன்ற கோபத்தையோ திமிரையோ படுக்கையில காட்டி இருக்கேனா? அதை விட உலகத்துல மோசமான பாவம் எதுவும் கிடையாது, சொல்லுடி செஞ்சிருக்கேனா?” என்று ஆத்திரமாகப் பேசினான்.

“இல்லையே” என்று அவள் குரல் கமற சொல்ல,

“ஓரே ஒரு தடவை எல்லார் முன்னும் நீ கலங்கி நின்னப்போ அந்த கோபத்துல அடிச்சேன், நீ நிமிர்வா இருக்க வேண்டாமான்னு, அப்புறம் போடி சொன்னேன், அவ்வளவு தான் எனக்கு தெரிஞ்சு! வேற இருக்கா சொல்லு, சொல்லுடி?”

“இல்லை” எனக் கலக்கமாகச் சொல்ல,

“அப்போ ஏண்டி என் பக்கத்துல வரலை? சும்மா பேசலை முகத்தை பார்க்கலைன்னு கதை விடக் கூடாது! அதையும் மீறி நமக்குள்ள எதுவும் உன்னால உணர முடியலையா? இல்லைன்னு பொய் மட்டும் சொல்லாத, கொன்னுடுவேன்!” என்று அவ்வளவு கோபமாக பேசினான்.

கண்களில் நீர் தளும்பி விட்டது துளசிக்கு!

“சொல்லு, எப்போவாவது உன்னை ஹர்ராஸ் பண்ணியிருக்கேனா? ஆனா ஒரு தடவை கூட நீ என்னை தேடலை!”  

அப்படியே ஒரு கேவல் வெடித்தது துளசியிடம்!

பின்னே ஒவ்வொரு அணுவும் அவனைத் தேட, தேடவில்லை என்கிறான்.   

அந்த கேவல் அவனை அசைக்க,

“சொல்லு, எப்போவாவது நீயா என் பக்கத்துல வந்திருக்கியா?”  என்றான் கோபத்தை எல்லாம் விட்டு ஆற்றாமையோடு.

அப்போதும் துளசி அழ,

அதை பார்த்ததும் சற்று மட்டுப் பட்டவன் “ரொம்ப நாள் நான் மனசுல நினைச்சது, என்னவோ இன்னைக்கு மீனாக்ஷி சொல்லவும் வந்துடுச்சி!” என்றவன்,

“சாரி” எனக் கேட்டு, “புடவை கட்டிட்டு வா, அழாத ப்ளீஸ்!” என்று சொல்லி வெளியில் சென்று விட்டான்.

அப்படி ஒரு அழுகை துளசிக்கு வந்தது, சில மணித்துளிகள் அப்படியே அமர்ந்து அழுது விட்டவள் நேரம் கடப்பதை உணர்ந்து புடவை கட்டி முடித்து வெளியில் வர,

திருவை காணவில்லை, “மா அப்பாக்கு வேலையாம், கிளம்பிட்டாங்க, உன் கிட்ட சொல்ல சொன்னாங்க!” என்று மீனாக்ஷி சொன்னாள்.

மனதே விட்டது! உண்மையில் துளசியிடம் அப்படி பேசி அழ வைத்து விட்ட குற்ற உணர்ச்சியில் அவளை காண தைரியம் அற்றவனாக சென்று விட்டான்.

மகள் அம்மாவின் முகத்தை பார்த்ததும் “என்னம்மா, உன் முகம் ஒரு மாதிரி இருக்கு”  

“தலைவலி மீனா”  

அப்போதுதான் ரத்னா வந்தவர், மகளின் முகத்தை பார்த்து “என்ன?” என்று வர, அவருக்கும் அதே பதில் தான் துளசியிடமிருந்து.

உடனே அவர் மீராவை அழைத்து விட்டவர் “அக்கா தலைவலி சொல்றாடி, முகவும் வீங்கி இருக்கு, என்ன பண்ணலாம்” என்றார் கவலையாக.

“ஒன்னும் பண்ணக் கூடாது. ஏதாவது மாத்திரை எல்லாம் சாப்பிடப் போறா மா, அவ கிட்ட குடுங்க”  

கொடுத்ததும் “அக்கா கர்ப்பமா இருக்கும் போது எந்த மாத்திரையும் சாப்பிடக் கூடாது. டாக்டர் கிட்ட கேட்டு ரொம்ப அவசியம்னா தான் சாப்பிடணும். டாக்டர் அட்வைஸ் இல்லாம சாப்பிடக் கூடாது. ஏதாவது மாத்திரை சாப்பிட்டா அது குழந்தையை பாதிக்கும், தலைவலின்னா கொஞ்சம் நேரம் படு!” என்றாள் மீரா.

“ம்ம் சரி” என்றாள், அவளுக்கும் தனிமை தேவையாய் இருக்க “அத்தை” என ஆரம்பிக்கும் போதே,

“பிள்ளைதாச்சி ஓடியாடாதேன்னு சொன்னா கேட்கறியா?” என்று அவளை திட்டியவர், “ஒழுங்கா போய் படு, நாங்க என்னவோ பண்றோம். காலையில டிஃபன் நான் கொடுத்து விடறேன்” எனும் போதே துளசி அவளின் அம்மாவைப் பார்த்தாள்.

“உங்கம்மாவை நான் பத்திரமா பார்த்துக்கறேன் போ” என்று துளசியின் முகம் பார்த்தே பயந்த அகிலாண்டேஸ்வரி விரட்ட,

“மா, நீ போ நான் பார்த்துக்குவேன்” என மீனாக்ஷி சொல்ல,

ரத்னா “நான் இருக்கேன் தானே” என்று சொல்ல, 

இத்தனை பேரின் பேச்சுக்கு பிறகு அமைதியாய் சென்று படுத்து கொண்டாள்.

அவனின் குற்றச்சாட்டில் மனம் ஆறவே இல்லை. கூடவே மனதில் குற்ற உணர்ச்சியும் , உண்மையாய் அவனின் குற்றச்சாட்டு உண்மையும் கூட!

மீண்டும் அழுகை வர , யாரும் வந்துவிட்டால் என்ன செய்வது என்று அழுகையை அடக்கினாள். நினைத்தது போல அம்மா உணவுடன் வந்தவர் “சாப்பிட்டிட்டு தூங்கி எழு, தலைவலி போய்டும்!”  

முயன்று இரண்டு தோசைகளை உள்ளே தள்ளினாள், அவளுள் ஒரு ஜீவன் இருக்கிறதே!

உண்டு படுக்க உறக்கம் தழுவிக் கொண்டது.

Advertisement