Advertisement

                         கணபதியே அருள்வாய்

                           சத்தமின்றி முத்தமிடு

அத்தியாயம் ஒன்று :

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்

மெல்லிய குரலில் மீனாக்ஷி பாடிக் கொண்டிருந்தாள் பூஜையறையில். தினமும் கந்த ஷஷ்டி கவசம் முழுதாக சொல்ல வேண்டும் அவளின் அம்மாவின் கட்டளை அது.

“மீனா ஸ்கூல்க்கு டைம் ஆச்சு” என்ற துளசியின் குரல் கேட்க,

“மா, இப்போ தான் ஸ்டார்ட் பண்ணினேன்” என்று பதில் கொடுத்தாள்.  

“மனசுக்குள்ள சொல்லிக்கோ, டைம் ஆச்சு, ஸ்கூல் பஸ் வந்துடும் வா!”  

“மா” என மகள் அங்கேயே நிற்க,

“ஷ், வா! அப்படியே சாப்பிட ஏமாத்தலாம் பார்க்காதே, நான் ஊட்டி விட மாட்டேன், நீயே தான் சாப்பிடணும்”  

“மா” என்று சிணுங்கியபடி மகள் வர,

“சாப்பிடு” என்று அவளின் முன் தட்டை நீட்டினாள் துளசி.

“அம்மா ப்ளீஸ், இன்னும் நான் பேக் எடுத்து வைக்கலை. இன்னைக்கு ஒரு நாள் ஊட்டி விடு. நாளைக்கு இருந்து நானே சாப்பிட்டுக்குவேன்”

“நீ தினமும் இதை தான் சொல்ற”

“எஸ் மா, நேத்து ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சு, என்கிட்டே கிடையாது” என்று மீனா சொல்லியபடி சத்தமாக சிரித்தாள். எப்போதே கைபேசியில் அவளின் அப்பா யாரிடமோ பேசியதை கேட்டது  மகளின் வாய்மொழியாக வந்தது. ஆம் அப்பா வீட்டினில் இருக்கும் பொழுது எல்லாம் மகளின் கவனம் அப்பாவினடதினில் தான்.

“என்ன இது? சத்தமா சிரிக்கிற பழக்கம் பொம்பளை பிள்ளைக்கு!” என்ற கணீர் குரல் ஒலிக்க..

“மெதுவா மெதுவா” என்ற சிறு பதட்டத்துடன் துளசி சொல்ல..

“அது கிடக்குதும்மா ஓல்ட் லேடி” என்று அலட்சியமாய் சொன்ன மீனாக்ஷி, திருநீர்வண்ணன் – துளசியின் பன்னிரண்டு வயது மகள், ஆறாவது வகுப்பில் இருந்தாள்.

மீனாக்ஷியின் இந்த அலட்சியம் அம்மா துளசியை கொண்டு இல்லை, அப்பா திருநீர்வண்ணனை கொண்டு. மகளோடு நேரம் செலவழிக்கும் தந்தையோ, இல்லை மகளை கொண்டாடும் தந்தையோ, இல்லை மகளை கொஞ்சும் தந்தையோ, இல்லை கண்டிக்கும் தந்தையோ திருநீர்வண்ணன் கிடையாது.

ஆனாலும் அவனின் குணம் அனைத்தும் ஒன்று விடாமல் மீனாக்ஷியிடம் இருக்கும், ஏன் உணவு வகைகள், பிடித்தங்கள், பழக்க வழக்கம் எல்லாம் தந்தையை போல தான் மீனாக்ஷிக்கு. அதனால் மகள் என்பதையும் மீறி மீனாக்ஷியை ஆராதிப்பால் துளசி, கணவனிடம் அது முடியாதே!

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் ரகம் துளசி! அப்படி ஒரு பிடித்தம் கணவன் மீது! திருமணதிற்கு பின் தான். இல்லாவிட்டால் திருமணமாகி பன்னிரண்டு வருடங்கள், அவளிடம் சிரித்து பேசியது கிடையாது, அவளை வெளியில் அழைத்து சென்றது கிடையாது, எதுவும் கிடையாது.

இருட்டினில் நடக்கும் சில விஷயங்களை தவிர கணவன் என்ற செய்கை வேறு எதிலும் இருக்காது. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த ஒரு விஷயம் கணவன் மனைவி ஆக்கிவிடுகிறதே!

மனதில் எத்தனை குறைகள், ஏக்கங்கள் இருந்தாலும் சிறிதும் காட்டிக் கொள்ள மாட்டாள் துளசி. ஏனென்றால் காட்டுவதற்கு ஆள் கிடையாது. மகளின் முன் முடியவே முடியாது. புத்திசாலிக் குழந்தை, அதையும் விட அம்மாவின் சிறு முக சுணக்கம் அவளிடம் எதிரொலிக்கும். துளசியை விட பத்து மடங்கு முகத்தினை தூக்கி வைத்து சுற்றுவால்.

ஏற்கனவே “அவ அப்பனை கொண்டு அப்படியே இருக்கா! மனுஷங்களை மதிக்கறதே கிடையாது!” என்பது எல்லோரின் பேச்சு. அதனால் துளசி முகத்தினை அமைதியாய் வைக்க கற்றுக் கொண்டாள், மகளால் அவளின் மனநிலையை கணிக்க முடியாதபடி.

“பெரியவங்களை மரியாதையில்லாம பேசக் கூடாது” என்ற கண்டிப்பு துளசியிடம் கிளம்பியது.

“நீ பேசாம எனக்கு ஊட்டி விடு” என்று அம்மாவை அதட்டினாள் மகள்.

காலை ஏழரை மணி அப்போது, ஏழு நாற்பத்தி ஐந்திற்கு அவளின் பஸ் வந்து விடும், உணவுண்டு கொண்டே “லஞ்ச் என்ன?” என்ற மகளிடம் “தேங்காய் சாதம், வெண்டைக்காய்” என்று பதில் கொடுத்தாள். 

“தேங்காய் சாதத்துல நிறைய முந்திரி போட்டியாம்மா” என்றாள் மீனாக்ஷி. ஆம், உணவை ரசித்து உண்பாள்.

‘போட்டேன்” என அம்மா சொல்ல, “இப்படி தான் சொல்லுவ, ஆனா ஒன்னு ரெண்டு தான் இருக்கும்” என மீனா சிணுங்கவும்,

“அதுக்கு மேல எல்லாம் சாப்பிடக் கூடாது” என்று உணவை ஊட்டிக் கொண்டிருந்த துளசி மகளை பார்வையால் ஆராய்ந்தாள். துளசியே உயரம், இந்த வயதிலேயே அவளுக்கு சற்றே குறைவு மீனாக்ஷி.

அவளின் வயதிற்கு அவளின் உயரம் மிக அதிகம், உடலும் அதற்கு தக்கார் போல இருக்கும். “இன்னைக்கு ராத்திரி திருஷ்டி சுத்தி போடணும்” என மனதிற்குள் நினைத்துக் கொண்டே மகள் செல்லும் பக்கமெல்லாம் சென்று உணவை ஊட்டி முடித்தாள்.

அகிலாண்டேஸ்வரி அப்போது தான் குளித்து தயாராகி வெளியே வந்தார்.

திருநீர்வண்ணனின் அம்மா! அதாகப் பட்டது துளசியின் மாமியார். துளசியின் பேச்சு அப்படியே நின்று விட்டது.

“அது என்ன பொட்ட புள்ளைக்கு அப்படி சத்தமா சிரிப்பு” என மீனாவிடம் மீண்டும் வம்பிழுக்க, துளசியின் பார்வை “நீ பேசக் கூடாது” என்ற செய்தியை மகளுக்கு தெரிவித்தது.

மீனா அமைதியாக அவளின் பையை தூக்கி கொண்டு வாசல் போக, துளசி லஞ்ச் பேக் எடுத்துக் கொண்டு பின்னே சென்றாள்.

இருவரும் பதில் சொல்லாமல், எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லாமல், யாரோ யாரிடமோ பேசியது போல சென்றது அகிலாண்டேஸ்வரிக்கு அப்படி ஒரு கோபத்தை கிளப்பியது.

“வரட்டும் இவளை” என்று துளசி மீண்டும் வீட்டின் உள் வர பார்த்திருந்தார்.

மகளிடம் பத்திரமாக போ என்று சொல்லியபடி கேட்டை பிடித்து துளசி சொல்ல, “ஓகே மா பை” என்ற படி வீதியில் இறங்கி மீனாக்ஷி நடக்க துவங்கினாள். சிறிது தூரம் நடக்க வேண்டும் மெயின் ரோடிற்கு, அவள் சில அடி எடுத்து வைத்ததுமே பைக்கின் சத்தம் விழ, மீனா செல்லுவதற்கு எதிர்புறமாக திருநீர்வண்ணன் வந்து கொண்டிருந்தான்.

காலையில் ஷட்டில் காக் விளையாட சென்று விட்டு வந்திருந்தான். எப்போதும் எட்டரை மணிக்கு தான் வருவான், இன்று என்னவோ விரைவாக வந்து விட்டான்.

“மீனா நில்லு” என்ற துளசியின் குரலில் மீனாக்ஷி தேங்கி நிற்க, திருநீர்வண்ணன் அருகில் வரவுமே “பஸ்க்கு விடுங்க” என்ற துளசியின் குரல் மெலிதாக உரைத்தாலும், அதில் செய் என்ற செய்தி தான் இருந்தது.

ஆம்! துளசிக்கு திருவினடத்தில் எல்லா விஷயத்திற்கும் தயக்கம். ஆனால் மகள் என்று வந்து விட்டால் சிறு தயக்கமும் இருக்காது. யார் பேச்சினையும் எதற்கும் எப்போதும் கேட்காதவன் திரு. ஆனால் மகள் என்று வந்து விடும் போது மனைவி சொல்வதை செய்து விடுவான்.

அப்பா என்றால் எப்போதும் மீனாட்சிக்கு சற்று பயம். அவன் நின்று என்ன என்பது போல ஒரு பார்வை பார்த்தாலே கண்களில் நீர் தளும்பிவிடும் அவளுக்கு. அவ்வளவு குறும்பு, அவ்வளவு அட்டகாசம் தான் மீனாக்ஷி.

பைக்கை வட்டமடித்து அவன் திருப்பி நிறுத்த, “வா” என்பது போல துளசிக்கு கை அசைத்தாள் மீனா, துளசி அவள் சொல்வது புரிந்து அருகில் வரவும், “இது கழட்டி கொடுத்திடலாம் பா” என்றாள் அவன் முதுகில் இருந்த ஷட்டில் பேட்டை.

மெளனமாக அவன் கழற்றிக் கொடுக்க, “பை மா” என்று மகள் ஏறி அமர, கையசைத்தாள் துளசி.

எல்லாம் செய்தாலும் துளசியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க மாட்டான், சுவரோடு பேசுவது போல தான்.  

பதிமூன்று நீண்ட வருடங்கள், இப்படிப் பட்ட வாழ்க்கை வாழ்வது என்பது எல்லோருக்கும் சாத்தியம்மல்ல, ஏன் யாருக்குமே சாத்தியமல்ல, எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி, வாழ்க்கை செல்லும் பாதையில் அதன் போக்கில்.

பதினாறு வயதில் இந்த வாழ்க்கையில் நுழைந்தாள். ஆம்! அவளின் திருமணம் பதினாறாவது வயதில், அவளின் பத்தாவது பரீட்சை விடுமுறையில் நடந்தது.    

திருநீர்வண்ணன் அவனின் இளங்கலை படிப்பின் இறுதியில் இருந்த போது வேற்று மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் மீது காதல் வயப்பட்டான், அந்த பெண்ணுமே, மிகவும் தீவிரமான காதல் அவர்களின் பாஷையில். 

அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள இழுத்துக் கொண்டு ஓடிய போது, அவனது அப்பாவினால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, அந்த பெண்ணின் மொத்த குடும்பமும் சிறையெடுக்கப் பட்டது அவனது அப்பாவினால்.

அந்த பெண்ணின் குடும்பத்தை கூண்டோடு அழித்து விடுவேன் என்ற அப்பாவின் பயமுறுத்தலால், அப்பா சொன்ன திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான்.

திருவின் வீட்டில் வேலை செய்த வேலவனின் பதினாறு வயது மகளான துளசி அவசர மணமகளானாள்.

அப்படி நடந்தது தான் அவர்களின் திருமணம்.   

வேலவன் அவர்களின் வீட்டினில் வேலை செய்த சாதாரண வேலையாள். இவர்களின் வசதிக்கும் வாய்ப்பிற்கும் எங்கேயும் நிகரில்லை. இருந்த ஒரே நிகர் அவர்களின் இனம்.

இன்னும் வசதியாகக் கூட உடனே பெண் பார்த்திருக்கலாம். ஒரே நாளில் கூட நான் நீ என்று போட்டி போட்டு பெண் கொடுத்து இருப்பர் திருவிற்கு.

ஆனால் தன்னுடைய மகன் இப்படி ஒரு காரியத்தை செய்தான் என்று யாருக்கும் தெரிய வருவதில் கூட விருப்பமில்லை அவனின் அப்பாவிற்கு.

அப்படி ஒரு இனப் பற்றுடைய மனிதர் மேகநாதன். திருவின் அப்பா. அதனோடு கூட அவர்களது பெரிய குடும்பம், அவருக்கு இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள். திருநீர்வண்ணன் தான் முதல் மகன் அந்த வீட்டிற்கு. இவனுக்கு கீழே ஆறு பேர், இவனது மற்றும் இவனது சித்தப்பா வீட்டினில்.   இவனது திருமணம் மற்ற எல்லோரையும் பாதிக்கும் என்பதும் அவருக்கு நிச்சயம். அதை எப்படி அனுமதிக்க முடியும். பாதிப்பு அதையும் விட ஒரு தவறான முன்னுதாரணம்.

ஆனால் இதுவரை அவனின் அவசர திருமணதிற்கான காரணம் யாருக்கும் தெரியாது. ஏன் திருவின் அம்மாவிற்கு கூடத் தெரியாது. ஜாதக தோஷம் திருமணம் நடக்க வேண்டும் என்று மூன்றே நாட்களில் திருமணம் நடத்தினார்.

ஏன் பெண்ணின் தந்தை வேலவனுக்கு கூட தெரியாது. வீட்டில் மேகனாதனையும், திருவையும் தவிர தெரிந்த ஒரே ஜீவன் துளசி. அவளிடம் மேகநாதன் திருமணதிற்கு முன்பே சொல்லி தான் சம்மதம் வாங்கினார்.

அது எப்படி வேறு மத பெண்ணை திருமணம் செய்ய முடியும் என்பது அவளின் எண்ணமும் கூட. திருவை எப்போதாவது பார்த்திருந்தவளும் கூட, அவர் சொன்னதும் சரியென்று விட்டாள்.

இன்று வரை திருவின் ரகசியம் அவளிடம் மட்டுமே. அவளுக்கு தெரியும் என்று திருவிற்கும் தெரியும். ஏனென்றால் திருமணதிற்கு முன் அப்பாவிற்கு தெரியாமல் அவளிடம் சொல்லி திருமணத்தை நிறுத்த முயன்ற பொழுது, “எனக்குத் தெரியும்” என்றிருந்தாள்.

திரு அதிர்ந்து விழித்து வேறு என்ன செய்து திருமணத்தை நிறுத்தலாம் என்று நினைத்திருக்கும் போதே அவனின் திருமணம் முடிந்து இருந்தது.

இது தான் இருபத்தியொரு வயது திருநீர்வண்ணனிற்கும், பதினாறு வயது துளசிக்கும் திருமணம் நடந்த கதை.

உண்மையில் திருமணத்தில் அவனின் தோள் உயரம் தான் துளசி இருப்பாள். திருமணதிற்கு பின் தான் தோளுக்கு மேலேயே வளர்ந்தாள்.

இப்படி வசதியற்று அவசரகதியில் வந்த மருமகளை அந்த வீட்டினில் யாருக்கும் பிடிக்கவில்லை, வசதி என்பதை விட அவர்களின் வீட்டின் வேலையாளின் பெண்.

அகிலாண்டேஸ்வரிக்கும் பிடிக்கவில்லை, மேகநாதனின் தம்பிகளுக்கு, தம்பி மனைவிகளுக்கு தங்கை குடும்பத்தினருக்கு என யாருக்கும்.

“டேய் வேலா” என்பது தான் அவர்களின் அழைப்பாக இருக்கும். அவர்களின் பெண் இந்த வீட்டு மருமகளா? அவன் எங்கள் சம்பந்தியா? அவர்களுக்கு நினைக்கவே முடியவில்லை.

 ஆனாலும் நடந்தது!  

மேகநாதனை அங்கே மறுத்து பேச யாருக்கும் தைரியம் கிடையாது. அவர் சொல்வது தான் அங்கே ஆணை. எல்லோருக்கும் திருவை பார்த்து அப்படி ஒரு பரிதாபம்! இப்படி ஒரு பெண் மனைவியாக வந்து விட்டாளே என்று.

அவனுக்கு இந்த திருமணம் துளசியை கொண்டு பிடிக்காமல் தான் பேசுவதில்லை, எங்கேயும் அழைத்து செல்வதில்லை என்று தான் இதுவரையும் எல்லோரும் நினைத்து இருந்தனர்.

யாருக்கும் அவனின் காதல் கதை இதுவரை தெரியாது.  

துளசியை மேகநாதன் அவர்களின் இனம் என்பதை கொண்டு மட்டும் பார்க்கவில்லை. சிறுவயதில் இருந்தே துளசியை பார்த்திருந்திருகின்றார். அவளின் அமைதியான பதின் வயது அழகு அவரை எப்போதும் ஆகர்ஷிக்கும். பெண்கள் இப்படி இருக்க வேண்டும் என்று தோன்றும்.

என்னவோ துளசியால் திருநீர்வண்ணனை பிடித்து வைக்க முடியும் என்று மனதிற்கு ஸ்திரமாகப் பட, அவளை திருமணம் செய்து வைத்தார்.

திருநீர்வண்ணன் அவளிடம் ஒரு வார்த்தை பேசி யாரும் பார்த்திருக்க முடியாது.  பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன? துளசியின் பதினேழாவது வயதில் மீனாக்ஷி பிறந்து விட்டாள்.

மேகனாதனிற்கு அதன் பிறகே மனதினில் நிம்மதி வந்தது. 

இன்று வரை வீட்டினில் யார் என்ன பேசினாலும் துளசி திரும்ப ஒரு வார்த்தை பேசியது கிடையாது. அமைதியாக கடந்து விடுவாள். யாரும் மதித்து பேசியது கிடையாது, அன்பாக பேசியது கிடையாது. ஆனால் எதையும் அவள் கண்டு கொள்வது கிடையாது

உண்மையில் அவள் மதிப்பதில்லை போல தான் ஒரு தோற்றம் கொடுக்கும்.

அதனால் அவர்களின் பேச்சு எல்லாம் “இப்படி இவ புருஷன் பிடிக்காம இவ கூட குடும்பம் நடத்தும் போதே இந்த புள்ளைக்கு இவ்வளவு திமிரு, இன்னும் நல்லா பொழைச்சா, இவ என்ன பண்ணுவா? வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாளா இருக்கும்” என்பது தான் அவர்களின் நக்கல் பேச்சாக இருந்தது.   

திரு என்ற ஒற்றை வார்த்தையே அவளை வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க வைக்கும் என்பது தான் உண்மை.

காதல் அது இளம் பெண்களுக்கு தான் வரும் என்று யார் சொன்னது! பெண்களுக்கு அதனை கடந்து, வாழும்போதும், அதனையும் விட வாழ்ந்து முடிக்கும் போதும் இருப்பது தான் அதீதம்!    

  

Advertisement