Advertisement

பின் மகளை பார்த்து முறைக்க, மீனாக்ஷி வாய் மேல் சிரிக்க மாட்டேன் என்பது போல கைவைத்து அப்போதும் சிரித்துக் கொண்டிருக்க,

அவளின் சிரிப்பு துளசியையும் தொற்ற, “போடி” என்று சலிப்பவள் போல அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் புன்னகை முகத்தோடு.

அவள் நடக்க, “மா, நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க” என்று மீனாக்ஷி சொல்ல, “என்னடா பேச்சு இது?” என திரும்பிப் பார்த்தாள்.

பேப்பர் மறைத்திருந்த திருவின் முகத்தினில் புன்னகை. ஆம்! அவனின் முகம் தெரியாமல் இருக்க பேப்பரை உயர்த்தி பிடித்திருந்தான்.

“ஆனா மா நீங்க என்னை மாதிரி சிரிச்சா இன்னும் ரொம்ப அழகா இருப்பீங்க” என்றும் மீனாக்ஷி சொல்ல, துளசியின் முகத்தினில் விரிந்த சிரிப்பு கூடவே அவளின் பார்வை திருவின் புறம்.

அந்தோ! அவனின் முகத்தை தான் பேப்பர் மறைத்து இருந்ததே!

இந்த மாதிரி அவன் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, மீனாக்ஷி சொல்லும் போது கூட முகம் பார்க்க மாட்டானா! அவன் பார்க்காவிட்டால் போகின்றது எனக்கு முகம் காட்ட மறுக்கிறான்.

சட்டென்று மனம் சுணங்க “அதெல்லாம் தானா வரணும் மீனா” என்று சொல்லி திரும்பி நடந்து விட்டாள். மீனாக்ஷியால் துளசியின் குரலின் பேதத்தை கண்டு கொள்ள முடியவில்லை.

திருவிற்கு புரிந்தது. பேப்பரை இறக்கி அவன் பார்க்கும் போது சமையல் அறையின் உள் நுழைந்திருந்தாள்.            

உள்ளே சென்றவளுக்கு தானாக ஒரு பெருமூச்சு கிளம்ப, “எப்போதிருந்து நீ இதெல்லாம் எதிர் பார்க்க ஆரம்பித்தாய்” என்று தோன்ற, சுதாரித்து கொண்டவள், மகளுக்கு உணவை தட்டில் போட்டு கொண்டு போய் கொடுக்க,

“மா ஊட்டி விடு” என்று வாய் திறந்தாள்.

“இன்னைக்கு எந்த பஸ் போகும், நீயே சாப்பிடு!” என்று துளசி சொல்ல,

“இல்லை நீதான் ஊட்டி விடணும்” என்று மீனாக்ஷி பிடிவாதம் பிடித்தாள்.

“நீ பெரிய பொண்ணு ஆகிட்ட, இன்னும் சின்ன பொண்ணு மாதிரி பிடிவாதம் பிடிக்க கூடாது” என துளசி அதட்ட,

“சின்ன பொண்ணா இருந்தாலும், பெரிய பொண்ணு ஆனாலும், நான் உன் பொண்ணு தானே! என்று சொல்லி ஒரு மயக்கும் புன்னகை சிந்த,

“சரியான வாயாடி” என்று சொல்லி துளசி உணவு ஊட்ட ஆரம்பித்தாள். மகளோடும் மனைவியோடும் இருக்கும் அந்த பொழுது ரம்மியமாய் இருக்க, குளிக்க போகும் எண்ணம் கூட இன்றி அப்படியே அமர்ந்து கொண்டான் திரு.

துளசி மகளுக்கு ஊட்டி முடித்து எழுந்து போன பிறகு, “பெரிய பொண்ணாகிட்ட இன்னம் அம்மாவை ஊட்ட விட சொல்வியா” என்று அப்பா கேட்க,

“அம்மா ஊட்டி விட்டா அவ்வளவு டேஸ்டா இருக்கும் பா , வேணும்னா நீங்களும் ஊட்டி விட சொல்லுங்க, அப்புறம் சொல்லுங்க நான் செய்யறது சரியா தப்பான்னு” என்று வியாக்கியானம் பேசினாள்.

“இதேதடா” என்று அசடு வழிய இருந்தவன், நொடியில் சுதாரித்து, மகளை ஒரு பார்வை பார்த்தவாறே, குளிக்க எழுந்து சென்று விட்டான்.         

“தப்பா பேசிட்டோமா, இல்லையே, அப்பா கோவிச்சிட்டாங்களா?” என்று எப்போதும் போல மீனாக்ஷி கவலையில் ஆழ்ந்து விட,

துளசி அந்த புறம் நடக்க, “மா அப்பா கோவிச்சிட்டாங்க போல” என்று நடந்ததை சொல்ல,

“உன்னை யாரு அதிகமா பேசச் சொன்னா” என்று மகளை கடிந்து, “இனிமே இப்படி எல்லாம் பேசாதே” என்று சொன்னாள்.

மீனாக்ஷியின் முகம் மொத்தமாய் சுருங்கிவிட, துளசியின் மனமும் சுருங்கியது. நேற்றைய இரவின் இனிமையில், இன்றைய பகலில் திருவிடம் ஒரு இணக்கத்தை எதிர்பார்த்திருக்க, இன்னும் முகம் கூடப் பார்க்க மறுப்பது எப்போதையும் விட ஒரு காயத்தைக் கொடுத்தது.     

“மா தாத்தா” என்ற மீனாக்ஷியின் குரல் செவியைத் தீண்ட, வாசலை பார்க்க வேலவன் மனைவி ரத்னாவுடன் வந்து கொண்டிருந்தார். “ஹை பாட்டி கூட வர்றாங்க” என்று மீனாக்ஷி குதூகலித்தாள்.

“வாங்கம்மா, வாங்கப்பா” என்று  துளசி முகத்தை சற்று உற்சாகமாய் மாற்றி வரவேற்றாள்.

“மீனாக்கு அடிபட்டிருக்கு, நீ ஏன் எங்களுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லலை” என்று வந்தவுடனே ரத்னா குறைபட,

“சின்ன அடிதான் மா” என்று துளசி சமாளித்தாள்.

“இல்லை பாட்டி, பெரிய அடி, ரொம்ப வலிக்குது” என்று மீனாக்ஷி அதற்கு ஒத்து ஊதினாள்.

“உங்களுக்கு யார் சொன்னா பா?” என்று துளசி கேட்க,

“பிரசன்னா சொன்னான் மா” என்று வேலவன் சொல்ல,

“அவனுக்கு எப்படி தெரியும்” என்று துளசி கேட்டாள்.

“அது தெரியலை, நான் கேட்டுக்கலையே” என்று அவர் நிறுத்திக் கொள்ள, எப்போது தான் இவர் மாறுவாரோ என்றிருந்தது.   

“எப்படி தெரியும்?” என்று துளசியின் மண்டை குடைய,

“அவன் சொன்னாலும் அப்படிதானான்னு நீங்க எனக்கு ஏன் பா ஃபோன்ல கேட்கலை” என்றவளிடம்,

“உன்னை பார்க்கணும் போல இருந்துச்சுன்னு அம்மா சொன்னா, நாங்க கேட்டா நீ வேண்டாம்னு சொல்லுவ, அதான் சொல்லாம கொள்ளாம வந்துட்டோம்” என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் துளசி மௌனியாகிவிட்டாள்.    

“யாராவது ஏதாவது பேசுவாங்க, இல்லை சரியா மரியாதை கொடுக்க மாட்டாங்கன்னு தான் நீ சொல்ற. எங்களுக்கு புரியுது! ஆனா எங்களுக்கு உன்னை விட அதெல்லாம் பெருசில்லை துளசி” என்று அம்மா மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னார்.

திரு கிளம்பி வெளியில் வர, அவனை பார்த்ததும் அமர்ந்திருந்த வேலவனும் ரத்னாவும் எழுந்து நின்றனர்.

“வாங்க” என்றவன், “உட்காருங்க” என்று சொல்லி, “நான் மில்லுக்கு கிளம்பறேன்” என்று வேலவனை பார்த்து ஒரு வார்த்தை சொல்லி கிளம்பிவிட்டான்.

முன்பெல்லாம் அது கூட சொல்ல மாட்டான் இப்போது ஓரிரண்டு வார்த்தைகள் வருகிறது.

சாப்பிடாமல் போகிறான் என்று துளசிக்கு தெரிந்த போதும், அப்பா அம்மா வந்திருப்பதால் அப்படி செல்கிறான் எனப் புரிந்தது.

அவன் தனியாக சாப்பிட முடியாது, மரியாதைக்கு அவரையும் அழைக்க வேண்டும். இன்னும் அந்த சகஜ மனப்பான்மை கிடையாது, ஒட்டுதலும் கிடையாது. அதுதான் உண்ணாமல் செல்கிறான் என்று புரிந்தது.

ஆனாலும் எதுவும் செய்ய இயலாதவளாக பார்த்து நின்றாள். பின்னே இவன் மரியாதை கொடுத்தால் தானே வேலையாள் என்ற பேச்சு மறையும்.

இவளின் யோசனைகள் ஓடும் போதே அவன் பைக்கை கிளப்பி சென்று விட்டான். செல்லும் அவனையே பார்த்து நின்றாள்.

பின்பு அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தண்ணீர் கொடுத்து சாப்பிட கட்டாயப் படுத்த, வேறு வழியில்லாமல் உண்ண அமர்ந்தனர்.

அப்போது பார்த்து ஷோபனாவும் டைனிங் டேபிள் வந்தவள், துளசியின் அப்பாவும் அம்மாவும் உண்டு கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தும், அருகில் வந்து ஒரு ப்ளேட் எடுத்து தனக்கு தேவையானதை வைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

எப்படி பார்த்தும் பேசாமல் இருப்பது என “வாம்மா” என்று ரத்னா பேச,

அலட்சியமாய் அவரை பார்த்தவள் “நீங்க எதுக்கு என்னை வாம்மா சொல்றீங்க. எங்க வீடு இது” என்றாள் பட்டென்று. அங்கே ஒரு சங்கடமான சூழ்நிலை.

ரத்னா என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் விழிக்க, வேலவன் சாப்பிடுவதையே நிறுத்தி இருந்தார். 

சொல்லிவிட்டு ஷோபனா பாட்டிற்கு சென்றிருந்தால் கூடப் பரவாயில்லை. அவள் பதிலை வேறு எதிர்பார்த்து நிற்க, வேறு வழியில்லாமல் துளசி பதில் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள்.    

“அது சும்மா ஒரு பேச்சுக்கு, ஒரு மரியாதைக்கு சொல்றது. இது உன் வீடு தான். இவங்க அதை இல்லைன்னு சொல்லலை” என்றாள் அழுத்தமாக.

பொதுவாக ஷோபனா எது பேசினாலும் துளசி பதில் பேசுவது கிடையாது. ஷோபனாவும் அதிகமாக எல்லாம் துளசியை வம்பிழுக்க மாட்டாள். “நீயெல்லாம் ஒரு ஆளு, உன் கூட சண்டை போடணுமா?” என்ற பார்வை தான் துளசி பார்ப்பதாகத் தோன்றும். 

“நான் ஒன்னும் உன்கிட்ட பேசலை” என்று துளசியை பேசினாள். இதற்கு துளசியை விட நான்கு வயது இளையவள்.

என்னவோ திருவின் பாராமுகம் அன்று துளசிக்கு ஒரு எரிச்சலை கொடுத்திருக்க, பதிலுக்கு பதில் பேசினாள்.

“நீ என்கிட்டே பேசலைன்னாலும், நான் உன்கிட்ட தான் பதில் சொல்றேன்” என்று துளசி இன்னும் அழுத்தமாக சொல்ல,

“இந்த வீட்ல நிம்மதியா சாப்பிடக் கூட முடியலை. இந்தா நீயே கொட்டிக்கோ” என்று எடுத்த உணவினை அப்படியே மேஜை மீது வைத்து அவளின் ரூமின் உள் புகுந்து விட்டாள்.

மீனாக்ஷி இதெல்லாம் பார்த்து சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.

ரத்னாவும் வேலவனும் என்ன செய்வது என்று தெரியாமல் உணவினையும் உண்ணாமல் இருக்க,

“நீங்க சாப்பிடுங்கப்பா அவ எப்பவும் அப்படி தான்” என்று சொல்லி துளசியும் ஒரு தட்டை வைத்துக் கொண்டு உணவினை உண்ண ஆரம்பித்தாள்.

ரூமின் உள்ளே இருந்து எட்டி பார்த்த ஷோபனாவிற்கு அது அப்படி ஒரு கடுப்பை கிளப்பியது.  

வேகமாக வெளியே வந்தவள் “ஏய் தனம், எனக்கு டிஃபன் கொண்டு வா. என் வீட்ல கண்டதும் உட்கார்ந்து சாப்பிடுதுங்க, எனக்கு சாப்பாடு இல்லை” என்று கத்தினாள்.

ரத்னாவும் வேலவனும் திகைத்து எழுந்து நின்று விட, துளசிக்கு கோபம் கட்டுக் கடங்காமல் பொங்கியது. 

Advertisement