Advertisement

அத்தியாயம் ஆறு :

காலையில் துளசி விழித்த போது அவள் மீனாட்சியின் அருகில் படுத்திருந்தாள். அவளாக இங்கே வரவில்லை. அனேகமாக களைப்பில் உறங்கியிருக்கக் கூடும் என்று அனுமானித்தவள், அவன் தூக்கி இங்கே வந்து படுக்க வைத்திருப்பான் என்பதே அவளின் காலையை வண்ணமயமாக்கியது.

நேரம் ஏழு மணியை தொட்டு இருந்தது. இவ்வளவு நேரம் அவள் உறங்குவது என்பது அரிது. அவளது காலை ஐந்தரை மணிக்கு எல்லாம் தொடங்கி விடும்.

எழுந்தவள் விரைந்து குளித்து வெளியே போன போது தனமே வந்திருந்தாள். திரு இல்லை எப்போதும் போல ஷட்டில் ப்ராக்டிஸ் சென்றிருந்தான். மீனாக்ஷியை பள்ளிக்கு அனுப்பும் வேலை இல்லையென்பதால் அவள் தாமதமாக எழுந்ததால் ஒன்றுமில்லை.

காலை ஆறு மணிக்கு சென்றால் எட்டரை மணிக்கு தான் வருவான். கிட்ட தட்ட பத்து வருடங்களாக அப்படித் தான். அதனால் அவனின் உடல் அவனின் உயரத்திற்கு தக்க கச்சிதமாக இருக்கும். தனியாக உடற்பயிற்சி என்று இல்லை. இதுவே அவனின் உடற் பயிற்சி. ஆறடிக்கும் ஒரு அங்குலமே குறைவு, மாநிறம், வசீகரமான முகம் என இருப்பான்.

என்ன திருவின் முகத்தினில் மீசை இல்லாதது துளசிக்கு மிகப் பெரிய குறை. ஆனால் அவனிடம் சொல்ல முடியாதே!  

அவர்கள் ஊரின் லயன்ஸ் க்ளப் செக்ரட்டரி அவன். அங்கே தான் அவர்களின் பயிற்சியும் கூட. அவன் ஊரில் பெரிய மனிதன், அதையும் விட எல்லாம் பெரிய மனிதர்களும் பழக்கம்.

மேகநாதனுக்கு ஒரு மாதிரி ஆட்களை தெரியும் என்றால் இவனுக்கு வேறு மாதிரி. அதாவது குடும்பம் பாரம்பரியம், அவர்களின் ஆட்கள், அவர்களின் சிறப்பு, கோவில் வேலை, இப்படி அவர் இருக்க, தொழில் வகையில் எல்லோரும் அவனுக்கு பழக்கம். திருவின் கொடுக்கல் வாங்கல் அதிகம். அதனால் அவனுக்கு எல்லோரிடமும் முக்கியத்துவமும் அதிகம். 

திரு உடற்பயிற்சி செய்து உடலை சீராக வைத்திருக்க,  துளசிக்கு அது எதுவும் இல்லாமலேயே உடல் கச்சிதமாக இருக்கும். பன்னிரண்டு வயது பெண்ணிற்கு அம்மா என்றால் யாரும் நம்பமாட்டார்கள். உங்கள் தங்கையா என்று கேட்கும் படியாகத் தான் அவளின் தோற்றம் இருக்கும்.

அவளின் வயதே இருபத்தி எட்டு தான் ஆனாலும் இருபத்தி இரண்டு வயது பெண்ணின் தோற்றம் தான். நல்ல நிறம், அழகான முகம், மென்மையான சருமம், நல்ல உயரம் என சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு அழகி.  

அதையும் விட அவளின் நடை உடை பாவனை, அது இன்னுமே சிறப்பு. ஒரு கசங்கிய உடையிலோ, இல்லை அழுங்கிய முகமோ, கலைந்த தலையோடோ இல்லை நைட்டியோடோ அவளை பார்க்கவே முடியாது.

காலை எழுந்து ரூமை விட்டு வெளியே வரும் போது எப்படி இருப்பாளோ அப்படியே இரவு உறங்கும் வரையிலும் தோற்றம் இருக்கும். உடை கூட கசங்காது. இதற்கு அத்தனை வேலை செய்வாள்.  அவளின் தோற்றப் பொலிவு அப்படி.                 

இவள் சமையல் அறையில் நுழையவுமே “நேத்து மாதிரி இன்னைக்கும் டிஃபன் வேலை ஹோகயான்னு நினைச்சேன்” என தனம் வாயடிக்க,

“ஷ், வேலையை பார்” என்று அவளை அதட்டி , மகளுக்கு பாலை விட ஆரம்பித்தாள். அதட்டினாலும் அதில் ஒரு உரிமை தான் கோபம் இல்லை.

அப்போது வெங்கடேஷ் வந்து சமையல் அறையை எட்டிப் பார்த்தான். “சின்னவரு வந்து பார்க்கறாரு க்கா” என தனம் சொல்ல,

“போ, போய் என்ன வேணும்னு கேளு”  

“என்ன காபிக்கு பார்ப்பாரா இருக்கும், நல்ல அம்மா நல்ல பொண்டாட்டி அவருக்கு” என்று நங்கு பேசினாள்.

“வாயை மூடிட்டு வேலையைப் பார்க்கணும்” என்று துளசி இப்போதும் அதட்ட, அதில் உரிமை இல்லை கோபம் இருந்தது.

தனம் வாயை ஜிப் போட்டு மூடிக் கொண்டாள். துளசிக்கு கோபம் வந்தால் லேசில் போகாது.

வெங்கடேஷ் எப்போதும் துளசியிடம் சகஜமாக பேச மாட்டான். ஏதாவது பெரிய தேவையிருந்தால் மட்டுமே பேசுவான். துளசி எப்போதும் தள்ளி தான் நிற்பாள்.

“காஃபி கேட்டார்க்கா அவருக்கும் அவர் சம்சாரத்துக்கும், குடுத்துட்டேன், அப்படியே உங்க வீட்டம்மா வந்து என்ன சமைக்கன்னு சொல்லுவாங்கலான்னா கேட்டேன். பதிலே சொல்லாம போயிட்டாரு” என தனம் சொல்ல,

“நீ அடங்கவே மாட்ட” என்று சொல்லி மகளை சென்று எழுப்பினாள்.

“மா வலிக்குது” என மீனாக்ஷி சொல்ல, அவளை வெகுவாக தேற்றி அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்து முகம் கழுவ வைத்து உடை மாற்றி விட்டு வந்த போது கிட்ட தட்ட ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.

மெதுவாக அவளை கைபிடித்து கூட்டி வந்து ஹாலில் அமர வைத்தாள். கோவில் விஷயமாக மேகநாதன் விரைவில் வீட்டை விட்டு கிளம்பியிருக்க, அகிலாண்டேஸ்வரியும் அவரோடு சென்றிருந்தார்.

மீனாக்ஷி மட்டும் தனியாக அமர்ந்திருக்க, துளசி சமையல் அறையினுள் சென்று விட, அவள் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்த வெங்கடேஷ் அவளின் அருகில் வந்து, “இப்போ எப்படி இருக்கு வலி மீனா” என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.

“இன்னும் வலிக்குது சித்தப்பா” என அவள் சொல்ல,

“அப்படி தனியா இறங்கி வரலாமா? தப்பில்லையா? இனிமே அப்படி எல்லாம் வரக் கூடாது” என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போது தான் எழுந்து வந்த ஷோபனா இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அருகில் வந்தமர்ந்து,

“ஆமா, ஒரு சின்ன காயத்துக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்” என நேற்று சொன்னதையே திரும்பவும் சொல்ல,

வெங்கடேஷ் “திரும்பவுமா” என்பது போல ஷோபனாவை பார்த்து முறைத்தான், மீனாக்ஷி கல கல வென சிரிக்க ஆரம்பித்தாள் சத்தமாக. இவள் சிரிப்பு சத்தம் கேட்டு துளசியும் சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

மகளின் சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டே தான் திரு வீட்டின் உள் நுழைந்தான்.

“ஏய் எதுக்கு சிரிக்கிற?” என ஷோபனா கேட்க,

அவளிடம் பதில் சொல்லமால் “எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்ல இருந்து போடறாங்க சித்தப்பா” என மீனாக்ஷி சொல்ல, வெங்கடேஷிர்க்குமே சிரிப்பு,

அதோடு விட்டேனா என்பது போல வெங்கடேஷிடம் “ஹை பை” வேறு மீனாக்ஷி கொடுத்தாள்.

“என்ன என்னை கிண்டல் பண்றீங்களா?” என்று ஷோபனா கோபமாக எழவும்,

“ஹேய், உட்காரு, சின்ன சின்ன ஜோக், என்ஜாய் பண்ணனும்” என ஷோபனாவின் கை பிடித்து வெங்கடேஷ் இழுக்க, அவன் மேலேயே அவள் விழ, அதற்கும் வெங்கடேஷும் மீனாட்சியும் சிரிக்க, திரு அவர்களை கடந்து செல்ல, துளசி மீண்டும் சமையல் அறையில் நுழைந்து கொண்டாள்.

மெதுவாக சிரிப்பு அடங்கியதும், மீனாக்ஷி ஷோபனாவை பார்த்து “என்னை ஏய் சொல்லாதீங்க சித்தி, எனக்குப் பிடிக்கலை” என்றாள் நிமிர்வாக.

இந்த மாதிரி ஒரு பாவனை திருவிடம் தான் இருக்கும்.

“ம்ம், சொன்னா என்ன பண்ணுவ?” என்றாள் ஷோபனா அலட்சியமாக.

“நீ பேசறது சரியில்லை ஷோபி” என்று  வெங்கடேஷ் அதட்டினான்.

“அப்படி தான் சொல்லுவேன்” என ஷோபனா திமிராக பேச,

“தட்ஸ் ஓகே, நானும் உங்களை சித்தின்னு கூப்பிடமாட்டேன். ஏய்ன்னு கூப்பிடுவேன் அண்ட் எங்க அப்பா அம்மா கிட்ட உங்களுக்கு குட்டி பாப்பா வரும் போது அப்படி தான் கூப்பிட சொல்வேன்” என்றாள் சொல்வதை செய்வேன் என்ற பாவனையில்.  

“ஆறாவது தான் படிக்கிற? என்ன பேச்சு பேசற நீ?” என கீச்சுக் குரலில் ஷோபனா கத்த, திருவும் துளசியும்  வேகமாக என்னவோ ஏதோவென்று வர, ஷோபனாவின் கத்தலுக்கு சிறிதும் அசையாமல் மீனாக்ஷி அமர்ந்திருக்க, வெங்கடேஷ் எப்போதும் போல ஷோபனாவை முறைத்துப் பார்த்திருந்தான்.

துளசியை பார்த்ததும் “அம்மா பசிக்குது” என meenaakshi சொல்லவும்,  

“ரெண்டு நிமிஷம் இரு” என்றவள் திருவிற்கு பால் எடுத்து ரூமின் புறம் நகர ஆரம்பித்த போது, திரு வந்து ஹாலில் அமர, ஷோபனா எழுந்து உள்ளே சென்று விட்டாள்.   

திரு அமர்ந்ததும் பாலை கொடுத்து விட்டு துளசி நகர்ந்து விட, வெங்கடேஷிற்கு அவர்களை பார்த்து பொறாமையாக இருந்தது. ஒரு நாள் கூட ஷோபனா துளசியை போல பொறுப்பாக இருந்ததில்லை, இப்படி அவனிற்கு எதுவும் செய்ததில்லை அவளாக. வெங்கடேஷ் நான்கு முறை கேட்ட பிறகு தான் இடத்தை விட்டு அசைவாள்.

முன்பெல்லாம் என்ன இவர்கள் பேசிக்கொள்வதில்லை , வெளியே செல்வதில்லை, இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என அலட்சியமாக தான் திருவையும் துளசியையும் பார்த்தால் தோன்றும்.

ஆனால் அவனுக்கு திருமணமான பிறகு, அவர்களை பார்க்கும் போது திருவின் வாழ்க்கை மிகவும் அமைதியாக போவதாக தான் தோன்றுகின்றது.

வீட்டில் எல்லாம் துளசி பார்த்து கொள்வதாகட்டும் அவனுக்கு பார்த்துப் பார்த்து செய்வதாகட்டும், இப்படி எல்லாம் ஷோபனாவிடம் எதிர் பார்க்க முடியாது. அகிலாண்டேஸ்வரி கூட மேகநாதனுக்கோ, மக்களுக்கோ செய்ததில்லை.

மீனாக்ஷிய துளசி பார்த்துக் கொள்வது போல எங்களுக்கு குழந்தை பிறந்தால் இவள் பார்த்துக் கொள்வாளா என்று தான் ஷோபனாவை பற்றி இப்போதெல்லாம் தோன்றிகிறது.

அதுவும் நேற்று அத்தனை பேர் முன் திரு துளசியை அடித்த போதும் அதற்கு எந்த ஆரப்பாட்டமும் செய்யவில்லை, ஏன் சிறு முக சுணக்கம் கூட காட்டவில்லை. அப்படி மட்டும் ஷோபனாவை அடித்து இருந்தால் அந்த நொடியே ஊரையே கூட்டி இருப்பாள். என்னவோ வாழ்க்கை பிடிப்பற்றதாக தோன்ற ஆரம்பித்தது.

அதுவின் ஷோபனாவின் தோற்றம் சுமார், இதில் அவள் எந்நேரமும் அழுது வடிந்து நைட்டியில் சுற்றுவது வெங்கடேஷிற்கு எரிச்சலை தர ஆரம்பித்தது. துளசியை இவ்வளவு அழகாக திருவிற்கு மணமுடித்து வைத்து சொந்தம் என்று தன் அப்பா தனக்கு மட்டும் அநீதி செய்து விட்டதாக தோன்ற ஆரம்பித்து இருந்தது.

ஆனாலும் எங்கேயும் ஷோபனாவை இதுவரை விட்டுக் கொடுத்ததில்லை, அவனால் முடிந்தவரை அவளுக்கு பார்த்து பார்த்து செய்கிறான். அவள் அப்படி இல்லாத போது மனது இப்போதெல்லாம் ஏமாற்றமாக உணர ஆரம்பித்து இருக்கிறது.      

ஒரு பெருமூச்சோடு அமர்ந்திருந்தான். பின்பு உணவு மேஜை மேல் உணவு வைக்கப் பட்டதும் அவனாக எடுத்து போட்டுக் கொண்டு உண்டு, திரும்ப ரூமின் உள்ளே கூட செல்லாமல் வெளியில் சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்து ஷோபனா வந்து வெங்கடேஷை தேடிய போது மீனாக்ஷி அவளாகவே “சித்தப்பா வெளில போயிட்டார்” என்று சொல்ல,

“என்ன போயிட்டானா? வரட்டும்!” என்று அடுத்த சண்டைக்கு காரணம் தேடிக் கொண்டாள்.

அவள் உள்ளே சென்றதை உறுதி படுத்திக் கொண்டு “என்ன மீனாக்ஷி கலாட்டா? என்ன அவங்க கூட வம்பு வளர்க்கற?” என்று துளசி மகளை கடிந்தாள்.  

“அப்பா தான் ஏய் கூப்பிட்டா இப்படி பேசணும் சொன்னாங்க” என்று மீனாக்ஷி பதில் சொன்னாள். ஆம்! திரு தான் ஓரிருமுறை கவனித்து விட்டு சொல்லிக் கொடுத்திருந்தான்.

துளசி திருவை திரும்பிப் பார்க்க, அவன் மும்முறமாக தினசரி படித்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் பேசியது காதில் விழாமலா இருக்கும், துளசி அவனுக்கு கேட்கும் படியாக சத்தமாக, “இப்படி எல்லாம் மரியாதையில்லாம பேசக் கூடாது” என்று மகளிடம் சொல்ல,  

“என்ன பேசினாங்கன்னு தெரியாம மரியாதை இல்லாம பேசக் கூடாதுன்னு உங்கம்மா சூப்பரா சொல்றா” என்றான் மீனாட்சியிடம். அப்போதும் தினசரியிலிருந்து தலையை விலக்கவில்லை.

“ஹ ஹ” என மகள் சத்தமாக எப்பொழுதும் போல சிரிக்க, துளசி இப்போது திருவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

Advertisement