Advertisement

அவன் அமர்ந்த ஓரிரு நிமிடங்களுக்கு எல்லாம் அவனின் சித்தப்பாக்கள் வந்து விட, கூட அவனின் அப்பா, வெங்கடேஷ், அம்மாவும் இருந்தனர். அவர்களிடம் இடம் வாங்குவதை பற்றி கூறினான்.   

ஊரின் மிக முக்கிய இடத்தில இருப்பதால் அதுவும் தொகையும் மிக அதிகம் என்பதால் “வாங்கி என்ன செய்ய போற திரு அங்கே” என்ற கேள்வி எழ,

சமைத்துக் கொண்டே அந்த பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டு தானிருந்தாள். ஷோபனா அங்கே ஹாலில் இருந்து கேட்டுக் கொண்டிருக்க, துளசி சமையல் அறையில் நின்று. தனம் இல்லாததால், எல்லோருக்கும் காஃபியும் டீயும் அவரவர்க்கு தக்க மாதிரி போட்டு எடுத்து துளசி அங்கே சென்று கொடுக்க, எல்லோரும் எடுத்துக் கொள்ள “வேண்டாம்” என்று திரு மறுத்து விட்டான்.

அவள் சென்ற நேரம் தான் அதனை என்ன செய்யப் போகிறாய் என்ற கேள்வி!

“ஷாப்பிங் மால் வித் சினிமா தியேட்டர் கட்டப் போறேன் சித்தப்பா”  

“பட்ஜெட் என்ன?” என்று அவர் கேட்க,

“அது இன்னும் முடிவு பண்ணலை, பட் பட்ஜெட் பெருசு” என்றான். அவன் முடிவு செய்து விட்டான், ஆனால் பகிரப் பிரியப்படவில்லை. அவனின் செயல்கள் எல்லாம் துளசிக்கும் அவனின் அம்மாவிற்கு தெரிந்தால் போதும் என்ற எண்ணம் தான்

துளசிக்கு சொல்லாமல் அம்மாவிடம் மட்டும் சொல்ல இஷ்டமில்லை, விட்டுவிட்டான்.

“ஆனா இந்த ஊர்ல அது ஓடுமா என்ன?”

“என்னோட டார்கெட் இந்த ஊர் இல்லை சித்தப்பா, சுத்தி இருக்குற ஊருங்க தான். ஓடும், எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றான் ஸ்திரமாக.

காஃபி கொடுத்த பிறகு எல்லாம் துளசி கேட்டு தான் இருந்தால். அவளிடம் ஒரு பிரதிபலிப்பும் இல்லை. 

கோடிக்கணக்கில் ஒரு ப்ராஜெக்ட், இடமும் கட்டுமானம் செயல் பாடு எல்லாம் சேர்த்து. யாரோ என்னவோ பேசுவதாக நின்றிருந்தாள்.

அது அவர்களது என்ற உணர்வோ அல்லது ஒரு சந்தோஷமோ எதுவுமே இல்லை.

“இப்போ துளசி மாசமா இருக்கு, நிலம் வாங்கற சரி, இப்போ வேலையும் ஆரம்பிக்க போறியா” என சத்தியநாதன் கேட்க,

“எஸ் சித்தப்பா, இப்போ ஆரம்பிச்சாதான் முடிக்க முடியும். எப்படியும் ஒரு வருஷத்துக்கும் மேல ஆகிடும். அதுவுமில்லாம நிலம் மட்டும் தான் என்னோட பணம், பாக்கி பேங்க் லோன். நம்ம ஃபிரண்ட் ஒருத்தர் மேனேஜரா இருக்கார். இப்போவே வாங்கி வேலையை ஆரம்பிச்சிட்டா பரவாயில்லை”  

“பார்த்து செய் திரு, ரொம்ப அகலக் கால் வேண்டாம்” என்று கமலநாதன் சொல்ல,

“பார்த்துக்கலாம் சித்தப்பா, கொஞ்சம் ரிஸ்க் தான். நிறைய பணம் இறக்கரேன். சரியா வரும்னு நம்பிக்கை இருக்கு” என்றான்.

அவன் அப்படி சொல்லும் போது என்ன செய்ய முடியும்? சித்தப்பாக்கள் கிளம்பிவிட்டனர்.

பின்னர் வெங்கடேஷிடம் “உன் மாமனார்க்கு குடுத்த பணம் வேணும்டா, கேளு, கேட்டு வாங்கு” என்றான்.

“ராதா கிட்டயும் பேசியிருக்கேன், இன்னும் பத்து நாள்ல பணம் வேணும்னு பார்ப்போம்” என்றான்.

இப்படியாக பணத்தை பற்றி பேச ஆரம்பிக்க, மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அவர்கள் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று என்றாலும் எல்லோருக்கும் பொதுவாய் சொல்லும் போது தங்களுக்கும் மகன் சொல்வது எதோ மாதிரி இருக்க, சிறிது நேரம் கழித்து அகிலாண்டேஸ்வரி சொல்லியே காண்பித்து விட்டார்.

“என் பையன் என்ன பண்றான்னு எங்களுக்கு தெரியலை? எல்லோருக்கும் சொல்ற மாதிரி சொல்ற!” என்று சொல்ல,

உண்மையில் துளசியிடம் சொல்லிவிட்டு அம்மாவிடம் சொல்லி பின் தான் அனைவரிடமும் சொல்ல நினைத்திருந்தான், துளசி செய்த கலாட்டாவில் எல்லாம் மறந்து விட்டது.

“அதும்மா சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை, கொஞ்சம் டென்ஷன்” என்று முகத்தினில் வேதனையோடு சொல்லவும்,

அவ்வளவு தான் அகிலாண்டேஸ்வரிக்கு திருவின் மீது வருத்தம் போய் “என்ன திரு?” என்று மகனின் அருகில் எழுந்து அமர்ந்து கொண்டார். 

என்ன சொல்வது என்று தெரியாமல் “பணம் கொஞ்சம் எல்லா இடத்துலையும் மாட்டிகிச்சு, நானும் யோசிக்காம நிலத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டேன், ஐம்பது லட்சம் கொடுத்திருக்கேன்” என்றான்.

“ஒரு வார்த்தை சொல்லணும் திரு, நீ என்ன பண்றேன்னு யாருக்காவது தெரியணும்! இப்படி யாருக்கும் தெரியாம இவ்வளவு பெரிய தொகை கொடுத்திருக்க” என்றவர்,

“இப்போ இன்னும் எவ்வளவு வேணும்” என,

“எழுவத்தஞ்சு லட்சம்” என்றான்.

மேகநாதன் மெளனமாக எல்லாம் கேட்டு அமர்ந்திருந்தார். துளசியும் அங்கே தான் இருந்தாள்.

“சரி நான் தர்றேன், நீ இந்த வாரத்துக்குள்ளயே பத்திரப் பதிவை வெச்சிக்கோ” என்றார்.

வீடே “ஆங்” என அகிலாண்டேஸ்வரியைப்  பார்த்தது. அகிலாண்டேஸ்வரியிடம் பணம் இருப்பது தெரியும் ஆனால் எவ்வளவு என்று மேகநாதனிற்கே தெரியாது.  

“மா, என்ன சொல்ற? உன்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா?”

“இல்லாம எப்படி தர்றேன்னு சொல்லுவேன், என் அப்பா வீடு எனக்கு கொடுத்த காசுடா, ஆனா நீ எனக்கு திரும்ப கொடுத்துடணும்” என்றார் கறாராக.

“கண்டிப்பா கொடுத்துடுவேன், நம்பும்மா என்னை!”

“நம்பாமன்றது கிடையாது, ஆனா பணம்ன்னு வந்துட்டா நாம உஷாரா இருக்கணும், அது புருஷன்னாலும் சரி, பையன்னாலும் சரி, யார் கையையும் எதிர்பார்க்க முடியாது, கூடவும் கூடாது!” என்றார்.

“அதுதான்மா இடத்தை துளசி பேர்ல வாங்கறேன்! அதுல வர்ற வருமானம் எல்லாம் அவளுக்கு போகற மாதிரி தான் செய்ய போறேன்!” என அம்மாவிடம் சொன்னான். துளசியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

இப்போதே வீடே “ஆங்” என திருவையும் துளசியையும் பார்த்தது.

“என்கிட்டே ஒரு வார்த்தைக் கூட சொல்லலை துளசி” என்று அகிலாண்டேஸ்வரி கேட்க,

அவர் கேட்பது கூட உணராமல் “என்ன? என் மீதா?” துளசி அதிர்ச்சியாய் திருவைப் பார்த்திருந்தாள். அதை சொல்ல தான் திரு பேசவந்தான், அவள் தான் சமையல் அது இதென்று பேசி அவனை எரிச்சல் படுத்தி விட்டாள்.

“அவளுக்கு இன்னும் தெரியாது மா” என்று திரு சொல்ல,

வெங்கடேஷை ஷோபனா பார்த்திருந்தாள், “பாருங்க உங்க அண்ணன் எப்படி?” என்பது போல,

“உங்கப்பா இந்த மாதிரி எனக்கு செய்யலைடா?” என அகிலாண்டேஸ்வரி குறைப்பட்டார்.

“விடு முதல்ல துளசி பேர்ல செய்வோம், அடுத்தது உன் பேர்ல செஞ்சிடலாம்” என திரு பேசினான்.

இப்படியாக பேச்சுக்கள் நீண்டு கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பேச்சு தேங்க,

திரு எழுந்து மில்லிற்கு கிளம்பிவிட்டான். சாப்பிடவில்லை. தெரிந்தே தான் செய்தான். அவன் கிளம்புகிறான் என்று தெரிந்து துளசி வேகமாக வாயில் வந்த போது கிளம்பியிருந்தான்.

என்ன செய்வது என்று புரியாமல் அவனின் அலைபேசிக்கு அழைக்க அது வீட்டின் உள் இருந்து ஒலித்தது.

விட்டு சென்றிருந்தான். சிறிது நேரத்தில் மில்லில் இருந்து ஆள் வந்தது அவனின் ஃபோன் எடுக்க, உணவை கொடுத்து விட்டாள்.

மாலையில் மீனாவை பள்ளியில் இருந்து அழைத்து வந்தவன் வாசலோடு விட்டுச் சென்று விட, பின்பு இரவு வரையிலுமே அவன் வரவில்லை.  

கோபமாக இருக்கிறான் என்று புரிந்தது. சண்டை போடவும் பிடிக்கவில்லை, கோபம் காட்டவும் பிடிக்கவில்லை, மீனாவிடம் கைபேசியை கொடுத்து “அப்பாவை வீட்டுக்கு வரச் சொல்லு நிறைய டைம் ஆச்சு சொல்லு” என்றாள்.

மீனாட்சியும் அப்படியே ஒலிபரப்ப,

உறங்கும் மகளை எழுப்பி பேசச் சொல்கிறாள் எனப் புரிந்து விரைந்து வந்து விட்டான்.

அவன் வருவதை பார்த்ததுமே உணவு மேஜையின் முன் இருதட்டுக்களை வைத்து விட, காலையில் இருந்து உணவு உண்ணாமல் தன்னை வருத்திக் கொண்டிருந்த திருவும் பேசாமல் வந்துவிடவிட்டான். துளசி அனுப்பியதை அவன் உண்ணவில்லை.

உண்டு முடித்து திரு உறங்கப் போய்விட, எப்போதும் போல கணவனுக்கு பால் எடுத்துக் கொண்டு போனவள் “என் பேர்ல எல்லாம் வேண்டாம், வேணும்னா மீனாக்ஷி பேர்ல வாங்குங்க” என்று சொல்லியபடி கொடுக்க

“அட, அதிசயமா இருக்கு. சாப்பாடை தவிர இதெல்லாம் கூட என்கூட பேசுவியா” என்றான் படு நக்கலாக.

“கல்யாணம் ஆனதுல இருந்து எனக்கு உங்களோட சம்மந்தம் அதிகம்ன்னு பார்த்தா சாப்பிடற நேரம் மட்டும் தான். அந்த நேரம், அந்த பொறுப்பு, அது மட்டும் தானே! இப்போ நீ அதை மட்டும் செய்யறன்னு சொன்னா, நான் என்ன செய்வேன்? எனக்கு அது மட்டும் தான் உங்ககிட்ட வருது!” என்று நீளமாக ஆதங்கத்தில் பேசியே விட்டாள்.

“ஓஹ் அப்படியா?” என்று நக்கலாய் கேட்டவன், “நீ எனக்கு சாப்பாடு போடறதுனால மட்டும் உனக்கு குழந்தை வந்துடுச்சா? என்னவோ அது மட்டும் தான் சம்மந்தம்ன்னு பேசற, நீ என்ன குந்தி தேவியா? மந்திரத்தை சொல்லி குழந்தை பெத்துக்கிடியா? இல்லை இப்பவும் அப்படி தான் உருவாகி இருக்கா?” என்று நேரடியாக காட்டமாக பேசினான்.

அவளுக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது. ஆனாலும் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இந்த பேச்சு அவளுக்கு அப்படி ஒரு வருத்தத்தை கொடுத்தது. அதற்கான பிரதிபலிப்பு என்ன காண்பிக்க என்று கூட தெரியவில்லை.

 கோபமா? ஆவேசமா? ஆக்ரோஷமா? வருத்தமா? எதுவாகினும் அவனின் அருகில் போகும் நினைப்பு மட்டும் வரவேயில்லை அவன் வரவேண்டும் என்பது தான் எதிர்பார்ப்பு எப்போதுமே! அவன் அப்படி தான் பழக்கியிருந்தான்.      

“என் பேர்ல வேண்டாம்” என்று திரும்பவும் சொல்ல,

“உனக்கு பிள்ளையை கொடுக்கவே உன் கிட்ட கேட்டதில்லை. இன்னும் சொத்து குடுக்கவா கேட்கப் போறேன்! வாயை மூடிட்டு போடி!” என்று அதட்டினான்.

அவனை முறைத்தவாரே உள்ளே செல்ல,

“அட, முறைக்க கூட செய்வியா நீ! ஒரு ஃபோன் செஞ்சு வான்னு கூப்பிட முடியலை. மீனா விட்டு ஃபோன் பண்ற” என்று அதற்கும் கிண்டலடித்தான்.

முன்பெல்லாம் எப்போதும் அப்படி தான் பேசுவாள்.

“ஏன் நிக்கற? போ, போ, போய் தூங்கு! எவ்வளவு நேரம்னாலும் நின்னுட்டு தான் இருக்க போற? என் பக்கத்துல தூங்கவா போற?” என்றும் சொல்ல,   

அவனின் கோபத்தை விட அவனின் கிண்டல் வெகுவாக பாதித்து. “இங்கேயே படு” என்று சொல்லியிருந்தால் படுத்திருப்பாள். ஆனா திரு சொல்லவில்லை. அவனுக்கு இன்னும் புரியவில்லை, அவளாக வருவதற்கு நாட்களாகும், அது சரியாவது அவனின் கையினில் என்று. 

கோபப்பட்டு “இங்கே படு” என்று சொல்லிவிடமாட்டானா என்று சில நொடிகள் நிற்க, திரு கண்டு கொள்ளவேயில்லை. அவன் கோபத்தை காண்பிக்க, திட்ட , கிண்டல் செய்ய என்று இப்படி இருக்க, மனம் அவனின் அமைதியான அருகாமைக்கு ஏங்க ஆரம்பித்தது.  முன்பு போல அவன் பேசாமல் இருந்து விட்டால் கூட போதும் என்று நினைக்க ஆரம்பித்தது.    

மீனாவின் அருகில் சென்று படுத்துக் கொண்டாலும் உறக்கம் அணுகவில்லை.

திருவிற்கு அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்றே தெரியவில்லை. அவள் அருகில் வரவேண்டும் என்று விருப்பட்டு அவளை இன்னும் தள்ளி போக செய்து கொண்டிருந்தான்.  

    

Advertisement