Advertisement

அத்தியாயம் எட்டு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தம் என்னுள் தொடங்கிய நாள்

நான் உன்னை என்னுள் உணர்ந்த நாள்

அந்த நாளில் இருந்து நான் நானாக இல்லை

யாருக்கும் என்னை பிடிக்கவில்லை

உனக்கும் என்னை பிடிக்கவில்லை

பைத்தியமானேனா, உன்னால் ஆக்கப்பட்டேனா.

ஆகும் என்பார் ஆகாது, ஆகாதென்பார் ஆகும்.

உன்னை நினைத்து நினைத்து நித்தம்

என்னுள் நடக்கும் யுத்தம் இதுமாதிரிதான்.   

கீறியது தான் தெரியும், அது ஆழமாக இறங்கிவிட்டது. அவளையறியாமல் “அம்மா”, என்று கத்தினாள் அபி. ரத்தம் வேகமாக கொட்ட ஆரம்பித்தது. தன் ரத்தத்தை பார்த்து தானே அலறினாள் அபி.

வலி அவளுக்கு அதிகமாக தெரியாத ஒன்று. அது தெரிந்தவுடன் தாங்க முடியவில்லை.

அவளுடைய அலறலை கேட்டு அதிர்ந்த, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, என்று அனைவரும் பதறி கதவை உடைக்க முற்பட தேக்கு மரக் கதவு அசையவில்லை. ஆனால் வலி தாங்க முடியாத அபி. அலறிக்கொண்டே  அவளே கதவை திறந்தாள்.

“அப்பா வலிக்குதுப்பா”, என்று கதறினாள், அந்த வலியிலும் அருகே வந்த அன்னையை பக்கத்தில் விடவில்லை, “எல்லாம் உன்னால தான் போ”, என்று அவரை அருகில் விட மறுக்க.

“வாயை மூடுடி”, என்று அவளை அதட்டியவர், வேகமாக ஒரு துணியை ஈரப்படுத்தி அவள் கையை சுற்றி ரத்தம் வராமல் இறுக்கி பிடித்தார். சத்தியமூர்த்திக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, “என்ன செய்வது?”, என்று தெரியாமல் தடுமாற.

“போங்க போய் காரை எடுங்க. ஹாஸ்பிடல் போகலாம்”, என்று கலாவதி கத்தினார், அபி…………. “அழுத்தாதீங்கம்மா!”, என்று வலியில் கதறினாள்.

“சரியாயிடும். ஒண்ணுமில்லை. நீ கத்தறதை முதலில் நிறுத்து”, என்று அதட்டியபடியே வெளியே கூட்டி வந்தார். “வலிக்குது, வலிக்குது”, என்று அவள் கத்திய கத்தல் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தெளிவாக கேட்டது. 

ஜெயம்மா, “ஏன் இந்த பொண்ணு இப்படி கத்துது”, என்று பார்க்க வாசலுக்கே வந்தார்.  

பதட்டம் இருந்தாலும் வெளியே காட்டாமல் மளமளவென்று அவளை காரில் ஏற்றியவர், சத்யமூர்தியை விடுத்து அவர் தம்பி ராஜசேகரை கூப்பிட்டு. “நீங்க வண்டி ஓட்டுங்க”, என்று ஜெயந்தியை அழைத்து கொண்டு சென்றார்.

கத்தி கத்தியே மயக்கத்துக்கு சென்று கொண்டிருந்தாள் அபி. “ஏன் பெரியம்மா என்ன அச்சு அக்காவுக்கு”, என்று அழுகையோடு ஜெயந்தி கேட்க. “கிறுக்கு பிடுச்சுருச்சிடி உங்கக்காவுக்கு. எங்க மானத்தை வாங்காம விடமாட்டா”, என்றார் எரிச்சலோடு.

சத்யமூர்த்தி, “அவ இப்படியிருக்கா நீ இப்பவும் அவளை திட்டற”, என்று கோபப்பட………….

“அப்போ பெத்து வளர்த்து ஆளாகியிருக்கிற நமக்கு ஒரு வார்த்தை சொல்ல உரிமையில்லையா?. எனக்கு என் பொண்ணுகிட்ட இருக்கிற உரிமை அவ்வளவுதானா! யாரோ ஒருத்தன் சாகற அளவுக்கு முக்கியமா போய்ட்டானா!”, என்று கலாவதி ஒரு பக்கம் கண்ணீரில் கரைந்தார்.

அதற்குள் ஹாஸ்பிடல் வந்திருக்க, அங்கே கொண்டு சென்றால் ஆயிரத்தெட்டு கேள்விகள்…………… பிறகு எப்பொழுதும் பார்க்கும் டாக்டரை அழைத்து. அவரை சொல்ல சொல்லி. எதுவானாலும் நாங்கள் பொறுப்பு என்று எழுதிக்கொடுத்து.

ஹாஸ்பிடல் ப்ரோசீஜரினால் பெண்ணை பற்றிய கவலை கூட பின்னுக்கு சென்றது. ஐ.சீ.யுவில் கொண்டு வைத்து இருக்கும் அத்தனை ட்யுபையும் மாட்டினர்.

இப்போது தான் கலாவதிக்கு பயம் ஆரம்பித்தது, வேகமாக தன்னுடைய தந்தையை அழைத்தார். அவர்கள் திருச்சியை சேர்ந்தவர்கள். உடனே அடுத்த ரயிலில் வருவதாக கூறி, “ஒன்றும் ஆகாது தைரியமாக இரு”, என்று கூறலானார்கள்.

கொண்டு போய் அரை மணி நேரம் ஆயிற்று, யாரும் ஒன்றும் சொல்லவில்லை. இதனால் உயிருக்கு பதிப்பு வந்திருக்காது என்பது தான் கலாவதியின் எண்ணம். இவர்கள் செய்யும் முஸ்தீபுகளை பார்த்தால் பயமாக இருந்தது.

கடவுளை வணங்கியபடியே அமர்ந்திருந்தனர். இன்னொரு ஜீவனும் இவளுக்காக கடவுளை வணங்கியபடி அமர்ந்திருந்தது. அது பார்த்திபன்.

ஜெயாம்மா வெளியே வந்து பார்த்த போது இவளை காரில் கொண்டு போவதை பார்த்தார். அவள் தான் ஊருக்கே கேட்கும் படி, “வலிக்குது, வலிக்குது”, என்று வேறு கத்திக்கொண்டு இருந்தாளே.

காலையிலேயே பார்த்திபன் அவளை பற்றி சொல்லியிருந்ததால், ஜெயாம்மா அவனை அழைத்து கூற. அவனுக்கு மறுபடியும், “என்ன பெண் இவள். என் உயிரை எடுக்கிறாள்”, என்று கட்டுக்கடங்காமல் அவள் மேல் கோபம் வந்தது.

சிறிது பயமாகவும் இருந்தது, ஏதாவது ஆகிவிட்டால் என்று.

“இப்படி பார்த்த இரண்டு நாட்களில் இவ்வளவு தொந்தரவு கொடுக்கிறாள். இவளை எப்படி ஒருவன் திருமணம் செய்வான். உயிரை எடுத்துவிடுவாள். என்ன பிறவியோ?”, என்று மனதிற்குள் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையால் கண்டபடி அவளை திட்டி கொண்டிருந்தான்.

அவளை பார்த்த நாள் முதல் ஏதோ சூழலில் மாட்டிக்கொண்டது, போல இருந்தது. மிகவும் டிஸ்டர்ப் ஆக உணர்ந்தான். 

அவளுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்ற பிரார்த்தனை மட்டுமே இருந்தது. மற்றபடி அவளை பார்க்க வேண்டும் ஆர்வமும் இல்லை. அதற்காக ஒரு சிறு முயற்சியும் அவன் எடுக்கவேயில்லை.  

அங்கே ஹாஸ்பிடலில் போலீஸ் கேஸ் ஆகாமல் இருக்க பெருமுயற்சி எடுக்க வேண்டி இருந்தது.

டாக்டர் வந்து அவள் நிலை கூறலானார். “கரக்டா வெய்ன்ல கட் பண்ணியிருக்கா. நிறைய ப்ளட் லாஸ். மற்றபடி உயிருக்கு பயமில்லை. ஸ்டிச் போட்டிருக்கோம். எதுக்கும் வாஸ்குலர் சர்ஜன் கிட்ட ஒரு ஒபினியன் வாங்கிடலாம்”, என்றார்.

அதற்குள் விவரம் தெரிந்து, உறவுகள். தொலைபேசி மூலமாக விசாரிக்கலானர்கள். எப்படி தான் தெரியுமோ தெரியாது. அதுவும் கலாவதியின் மாமியார் ஓட்டை வாய். சொல்லவேண்டும் என்று நினைக்காமலேயே எல்லா விஷயத்தையும் சொல்லி விடுவார்.

நேரில் ஒன்றிரண்டு பேர் வந்தனர். எல்லோரிடமும் அவள் தெரியாமல் கையை கிழித்து கொண்டாள் என்று இவர்கள் சொல்லும் முன்னர். அவர்களே “அச்சச்சோ, பொண்ணு கையை கிழிச்சிடாளாமே”, என்று துக்கம் விசாரித்தனர்.

“எக்ஸாம் சரியா பன்னைலைன்னு சொன்னா அண்ணி, திட்டினேன். இப்படி பண்ணிட்டா”, என்று ஒருமாதிரி சமாளித்தாலும். இவர்கள் முன் “இந்த காலத்து பசங்களை ஒரு வார்த்தை சொல்ல முடியறது இல்லடி அம்மா”, என்று நீட்டி முழக்கினாலும். “என்ன கசமுசாவோ, நமக்கு ஏண்டியம்மா பொல்லாப்பு”, என்று பின்னாடி பேசி சென்றனர்.

சத்தியமூர்த்தி முன்பே பயந்திருந்தார், இவ்வளவு நேரமாக மனதளவில் தைரியமாக இருந்த கலாவதி கூட பயம் கொள்ள ஆரம்பித்தார். “ஊர் வாயை மூட முடியுமா? ஆளுக்கொன்றாக, அவர்களாக காரணம் கற்பித்து பேசுவார்களே!”.

“என்ன ஆயிற்று இந்த பெண்ணிற்கு. சும்மா கூட இந்த மாதிரி ஏதாவது பிரச்சினை என்று வந்தவள் கிடையாது. ஆண் ஸ்நேஹிதர்கள் உண்டு. வீட்டிற்கு வரும் அளவுக்கு பழக்கம் தான். எல்லாரும் ஃப்ரன்ட் என்றாலும் அளவு தெரிந்து பழகுபவள், அளவு அறிந்து பழகவிடுபவள்”.

இந்த மாதிரியாகும் என்று கனவிலும் நினைத்தாறில்லை அவள் பெற்றோர்கள்.

“உள்ளே ஒரு ஒருவராக சென்று பாருங்கள்”, என்று சொல்ல பட முதலில் சென்றது அவள் அம்மா.

அபிராமி மருந்தின் வீரியத்தால் உறக்கத்தில் இருந்தாள். துக்கம் பொங்கியது அவளை அந்த கோலத்தில் பார்த்ததுமே! ஆங்காங்கே சொருகியிருந்த ட்யூப் இன்னும் பயத்தை அதிகபடுத்த. பொங்கிய அழுகையை சிரமப்பட்டு அடக்கி வெளியே வந்தவர் தாங்க மாட்டாமல் அழுதார்.

“சிறுபிள்ளைத்தனமாக என்ன செய்துவிட்டாள். அவளை பற்றி எனக்கிருந்த கருவம் அனைத்தும் ஒடுங்கியதே.”,

பின் ஒருவர் பின் ஒருவராக போய் வர., எப்போதும் அவளை குற்றம் சொல்லி பேசும் அவள் தாத்தா பாட்டி கூட அமைதியாக இருந்தனர்.

“கண்முழிச்சவுடனே யாரும் அவளை திட்டாதீங்க”, என்று சொல்லி சென்றனர். எல்லொரும் பார்த்து செல்ல, நான் உங்களுடன் இருக்கிறேன் என்று சொன்ன ஜெயந்தியை கட்டாயப்படுத்தி அவள் தந்தையுடன் அனுப்பினர்.

எஞ்சியது சத்தியமூர்த்தி, கலாவதி, ஸ்ரீகாந்த் மட்டுமே.

“அப்பா ஏன் பா என்ன அச்சு”, என்ற ஸ்ரீகாந்தின் கேள்விக்கு பெற்றோர்களால் என்ன சொல்ல முடியும், ஒன்பதாவது படிக்கும் சிறுவன். ஆனால் இன்றைய சிறுவர்களுக்கு தெரியாது என்று நாம் நினைக்க. கரக்டாக நமக்கு முன்னால் கூறுவர்.

“ஏம்பா எதுலயாவது சிக்கிடாளா அக்கா என்றான். புரியாமல் பார்க்க. ஏதாவது லவ்ன்னு மாட்டிகிட்டாளா”, என்றான் மறுபடியும்.

நாம் பேச யோசிக்கும் வாக்கியங்களை இன்றைய இளைய சமுதாயத்தினர் சிறிதும் கூச்சமில்லாமல் பேசுகின்றனர்.

கட்டாயம் காதல் என்பது. சிக்கிடாளா என்ற வார்த்தையில் வரும் சிக்கலோடு தொடர்புடையது தான். மாட்டியவர்கள் அந்த சிக்கலை விடுத்து வெளியே வருவது சிரமமே.

என்ன தான் பெற்றோர்கள் புத்திசாலியாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகள் இதில் சிக்குவார்களா? மாட்டார்களா? என்று கணிக்க முடியாது. அதே சமயம் சிக்கிய பிள்ளைகள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், நல்லது கெட்டது தெரிந்தவர்களாக இருந்தாலும், பிறகு அவர்கள் செயலை அனுமானிப்பது சிரமமே.

தாங்கள் வாழ்க்கையே மிகவும் சிக்கலாகி விட்டது போல் உணர்ந்தார் கலாவதி.

அவர்கள் யோசித்து கொண்டு அமர்ந்து கொண்டிருக்கும் போதே கலாவதியின் தந்தையும் தமையனும் வந்தனர். அவர்களை பார்த்ததும் கலாவதிக்கு இன்னும் அழுகை பொங்கியது.

“அப்பா! இந்த பொண்ணு பண்ணி வெச்சிருக்கிற வேலையை பாருங்கப்பா!”, என்று கதறினார்.

“அம்மா! ஹாஸ்பிடல் இது. என்ன சத்தம்? பொண்ணு தான் நல்லா இருக்காள்ள”, என்று அங்கே இருந்த சிஸ்டர் கூட கடிந்து சென்றார்.

“என்ன நடந்தது”, என்று விவரம் கேட்டனர். சொன்னார். “என்ன கலா? நம்ம அபியா இப்படி! எனக்கு ஆயிரத்தெட்டு விஷயம் சொல்லுவா! அது அப்படி தாத்தா! இது இப்படி தாத்தா! அதை செய்ங்க! இதை செயங்கன்னு, தற்கொலைக்கு அவ முயற்சி பண்ணியிருக்கறான்னா என்ன சொல்றது?”,

“ இந்த வயசுல இருக்கற பொண்ணுங்களை எல்லாம் கவனமா பார்த்துக்கனும்மா! நம்ம வேண்டாம்னு சொல்ல சொல்ல அதை செய்யனும்னு பிரியபடுவாங்க, நமக்கு தான் சிரமம்!”,

“ பார்த்து நடந்துக்க வேண்டாமா! நீ ஏன் கோபப்பட்ட?”, என்று அவரை தான் கடிந்தார்கள் கலாவின் அப்பாவும் அண்ணாவும்.

“நான் என்னப்பா கண்டேன், என் பொண்ணு இப்படி செய்வான்னு கனவுளையும் நினைச்சதில்லையே”,

“விடு! இனி ஆகறதை பார்ப்போம்”.

“ஆகறதை பார்போம்னா! என்ன பார்க்கறது? நான் எதையும் பார்க்கலை! அவ தேறி எழுந்தா போதும்”,

“என்னமா இப்படி பேசற? அவ யாரையோ விரும்பறேன்னு சொல்லிட்டு தற்கொலை முயற்சி பண்ணியிருக்கிறா! ஒண்ணு அவனோட கல்யாணத்தை பண்ணு, இல்லை வேற மாப்பிள்ளை பார். எதுனாலும் கல்யாணம் செய் இல்லைன்னா இன்னும் கண்ணு, காது, மூக்கு, வச்சு பேசுவாங்க”, என்ற அவரின் தந்தையை பார்த்த கலாவதி.

“பாருங்கலேன்ப்பா, இனி நான் எல்லோர் முகத்திலும் எப்படி முழிப்பேன். என்ன காரியம் பண்ணி வச்சிருக்கா எம் பொண்ணு”, என்று மறுபடியும் ஆரம்பிக்க.

“என்ன காரியம் பண்ணியிருக்கா?”,

“ஒரு காரியமும் பண்ணலை. யார் வீட்ல இதெல்லாம் இல்லை. எல்லோர் வீட்லயும் தான் இருக்கும். அதுக்காக் நீ இன்னும் அவளை திட்டாத. நான் பார்த்துக்கறேன்”.

“எல்லாம் உன் மாமனார் மாமியார் கிட்ட விட்டா ரூல்ஸ் பேசியே ஒருவழியாக்கிடுவாங்க, அந்த பையனை நம்ம பொண்ணுக்கு பிடிச்சிருந்தா., பையன் பழக்க வழக்கம் நல்லா இருந்தா கட்டி வெக்கலாமே என்ன தப்பு”,

“அப்படி அந்த பையன் சரியில்லைன்னு தோணினா, எடுத்து சொல்வோமே, என்ன தப்பு”, என்றார்.

“அப்பா பையன் இவரோட ப்ரெண்ட் நித்யாவோட பையன். நம்ம ஊருல கொடுத்தாங்களே. அதாம்பா நம்ம பெரிய வீட்டுக்காரங்க. எங்க நாத்தனாரை கொடுத்திருக்கே. அவங்க சின்ன பையனுக்கு பொறந்தவன்பா.

“அவங்க ரெண்டு பேருக்கும் விவாகரத்து ஆயிடுச்சுள்ள. அவங்க பையன்”, என்றார், அவரின் நினைவை தட்டி எழுப்ப முயற்சிக்க. .

“யாரு?”, என்றார் அவரின் அப்பா மறுபடியும்.

“அப்பா”, என்று எரிச்சலில் பேசிய கலாவதி. “அண்ணா! அவருக்கு தெரியும்! எல்லோர் கிட்டயும் பண்ற மாதிரி எல்லா விஷயத்தையும் என்கிட்ட மறுபடியும் திரும்ப கேட்கிறார்”, என்றார்.

“அவரை பத்தி தெரியாதா, ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கேட்டுப்பார்”,

“அப்படியில்லைம்மா! ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தெரிஞ்சிக்கறது தப்பொன்னுமில்லையே, அது என்ன காதல்னா உடனே, என்ன விவரம்? யார் பையன்னு? கேட்காமயே வேண்டாம்னு சொல்லிடுவீங்களா. நம்ம பார்க்கறதை விட நல்லவனா இருக்கலாமில்லையா”,

“அப்படியில்லைபா! அடுத்த வாரம் அந்த பையனுக்கு நிச்சயம்”,

“அதனால என்ன? இன்னும் கல்யாணம் நடக்கலயே”,

“அப்படியில்லைப்பா! அவங்க அப்பா அம்மா பிரிஞ்சதுக்கு அப்புறம். பையனை சில வருஷம் அம்மா திரும்பி பார்க்கலை. அதனால பையன் இப்போ பார்க்கறதில்லை, அவன் தாத்தா பாட்டியோட தான் இருக்கான்”.

“பரவாயில்லை பையன் ரோஷக்காரன்”,

“அப்பா! நீங்க என்ன அவனுக்கு புகழ் மாலை சூட்ட வந்தீங்களா”,

“அப்படியில்லைம்மா, நல்ல விஷயம் யார்கிட்ட இருந்தாலும் பாராட்டனும்”,

“அவங்கப்பா அந்த பையனை திரும்பி கூட பார்க்கலை”,

“அவன் பார்த்தா என்ன? பார்க்காட்டி என்ன? சொத்துல பங்கு கொடுத்தா போதும். பையன் என்ன படிச்சிருக்கான்”,

“அப்பா, நீங்க விட்டா அபிக்கு அவனையே கட்டி வச்சிடுவீங்க போல இருக்கே”,

“ஏன்? என்ன தப்பு? பையன் நல்லவனா இருந்தா செய்யலாமே. பொண்ணு சொன்னான்றதுக்காக சும்மா வேண்டாம்னு சொல்ல கூடாது, நமக்கு தெரிஞ்சவங்க நல்ல வரன்னு சொன்னா பார்க்க மாட்டோம். அது மாதிரி நினைச்சிக்கோ”. 

“ம்க்கும்”, என்று கோபம் மிகுதியால் செய்த  கலாவதி. “பையன் ஒத்துகணுமே”, என்றார்.

“ஒத்துக்காம எங்க போய்டுவான். முதல்ல நான் பையனை தெரிஞ்சுக்கறேன். அதுக்கு பிறகு எல்லாம் பார்த்துக்கலாம். இப்போதைக்கு அபியை நல்ல படியா வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்”, என்றார்.

கண்விழித்த அபி அதிகமாக யாரோடும் பேசவில்லை. “என்ன அபி இப்படி பண்ணிட்ட?”, என்ற அவள் அம்மாவின் கேள்விக்கு முகத்தை திருப்பி கொண்டாள். அந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவில்லை. மற்றபடி கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாள். 

அடுத்த நாள் ரூமிற்கு மாற்றினர். மெளனம் அவளுக்கு பழக்க மில்லாத புதிய ஆயுதத்தை கையில் எடுத்தாள். வளவள சலசல என்று பேசும் அவளுடைய வாய் இப்பொழுது ஒவ்வொரு வார்த்தையும் எண்ணி எண்ணியே பேசியது. 

“என்ன அபிம்மா? தாத்தா கிட்ட ஒரு வார்த்தை சொல்றது இல்லையா. அம்மா திட்டினா எனக்கு போன் போட்டிருக்க வேண்டாமா. உடனே நான் வந்திருப்பேனே. அம்மா திட்ற மாதிரி ஏன் நடந்துக்கறீங்க?”, என்று அங்கேயும் சமயம் பார்த்து தாக்கினார்.

வாஸ்குலர் சர்ஜன் பார்த்து விட்டு. “ஒரு மைக்ரோ வாஸ்குலர் சர்ஜெரி பண்ணிடறது பெட்டர்”, என்றார். மருத்துவரின் இஷ்டதிற்க்கே விட்டனர்.

யாரும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை, பேசவில்லை, அவள் கையை அறுத்து கொண்டது பற்றி.

மனம் பொறுக்காமல் கலாவதி ஆரம்பிக்கும் போது அவரை பார்வையாலேயே அடக்கினர். தனியாக இருக்கும் நேரங்களில் அவரை பேசவிடாமல் எச்சரித்து இருந்தனர்.

எல்லாம் முடிந்து அவள் வீடு வந்தாள். வந்த பிறகு கிடைத்த தனிமையில் அவள் அம்மாவின் அப்பா அவளிடம், “ஏன் அபிம்மா இப்படி செஞ்ச”, என்றார்.

“அப்படி உனக்கு வாழ இஷ்டமில்லாம சாகற அளவுக்கா உன் அப்பாவும் அம்மாவும் பார்த்துக்கறாங்க. உன்னை கண்ல வச்சு தாங்கறாங்க. நீ இப்படி பண்ணலாமா, அவங்களுக்கு உன்னை ஒரு சொல் சொல்ற உரிமையில்லையா”,  என்றார்.

“நான் சாகனும்னு எதுவும் பண்ணலை தாத்தா”, என்றாள்.

“சும்மா அம்மா பேசின கோபம்”,

“அவங்க வேற என்னை புரிஞ்சுக்களை. அப்பா கிட்ட சொல்லி. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அதான் ஒரு கோபத்துல அப்படி பண்ணினேன். இப்படி ஆகும்னு தெரியாது”,

“நீ என்ன சின்ன பொண்ணா? இப்படி ஆகும்னு தெரியாதுன்னு சொல்லறதுக்கு. எனக்கு புத்தி சொல்றவ நீ”, என்றவர். “இந்த அவங்கன்னு சொன்னியே யார் அது”,

“பார்த்திபன்”, என்றாள், குரலில் அத்தனை வருத்தம்.

“நான் கையை அறுத்துக்கற முன்னாடி அவங்களை போன்ல  கூப்பிட்டேன். அவங்க என்னை வந்து பார்க்கவேயில்லை தாத்தா”,

“பார்க்கலைன்னா போறான்மா. அவன் உனக்கு வேண்டாம்மா”,

“இல்லை! எனக்கு வேண்டும்!”, என்றாள் தீவிரமான குரலில்.

“அவன் வேணும்னா வந்து பார்த்திருப்பான் இல்லையா”,

“அதெல்லாம் எனக்கு தெரியாது. அவனை தான் கல்யாணம் பண்ணிபேன். நீங்க பண்ணகூடாதுன்னா யாரையும் பண்ண மாட்டேன்”,

“அவங்க யாரு தாத்தா என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றதுக்கு”,

“எப்படியும் எல்லோருக்கும் இல்லைன்னாலும். கொஞ்சம் பேருக்காவது தெரியும் நான் அவங்களுக்காக இந்த மாதிரி செஞ்சேன்னு. அட்லீஸ்ட் நம்ம குடும்ப ஆளுங்க, அவங்க குடும்ப ஆளுங்களுக்கு தெரியும். உண்மையா சொல்லனும்னா ஏதோ ஒரு கோபம். “.

“என்னை பார்த்தி ஒத்துக்காதது. பார்த்தி நடந்ததை அப்பாகிட்ட சொன்னது. அப்பா அதை உடனே அம்மா கிட்ட சொன்னது. அம்மா திட்டனது. நான் நினைச்சது நடக்காம போயிடுமோன்னு ஒரு நினைப்பு. இதெல்லாம் என்னை யோசிக்காம அப்படி செய்ய வச்சது”.

“சும்மா ஒரு மிரட்டல் தான். நான் ஏன் செஞ்சேன்னு எனக்கே தெரியலை. என் கோபத்தினால. ஹர்ட் பண்ணனும், காயப்படுத்தனும். இது மட்டும் தான் என் எண்ணம். சாகனும்னு என் எண்ணமே கிடையாது.

“என்னவோ கோபம் ஏன் மேலேயே, மே பி என்னை அவங்க சமமா கூட ட்ரீட் பண்ணலை. சின்ன பசங்க மாதிரி அப்பாவ கூப்பிட்டு சொல்றாங்க”,  

“இப்போ எனக்கே என்னை நினைச்சு வெக்கமா இருக்கு. நான் அவங்களுக்காக சாக துணிஞ்ச மாதிரி இப்போ எல்லோருக்கும் தெரியும். இனிமே நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா எனக்கு அது அசிங்கமில்லையா.”,

“நான் இவங்களுக்காக கெட்ட பேர் வாங்குவேன். இவங்க ஹாயா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிபாங்களா. அதெல்லாம் முடியாது தாத்தா”, என்றாள்

தாத்தாவிற்கு தலை சுற்றியது. “இது விளையாட்டிள்ள அபிம்மா. ஏட்டிக்குப்போட்டியா செய்யறதுக்கு”,

“எனக்கு அவங்களை பிடிச்சு கூட இருக்கு தாத்தா”,

“ஆனா இது சரி வராது அபிம்மா”,

“ஏன் தாத்தா?, நீங்க அவங்க கிட்ட ஒரு தப்பு சொல்லுங்க பெருசா. நான் அவங்களை கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்கமாட்டேன் ஆனா வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்”,

“ஒருத்தங்களுக்காக தற்கொலை வரைக்கும் போயிருக்கேன்னு ஒரு இம்ப்றஸன் விழுந்துடுச்சு”,

“இனிமே வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். நடந்தா நடக்கட்டும், நடக்காட்டி போகட்டும், எனக்கு அவங்களை பிடிச்சிருக்குன்னு அவங்க கிட்டயும் சொல்லிட்டேன். அப்பா அம்மாக்கும் தெரியும். நடக்கறது நடக்கட்டும். அதுக்காக யார் பின்னாடியும் போய் கெஞ்ச முடியாது. நான் இப்படிதான்”, என்றாள்,

இன்னும் தீவிரமான குரலில்.,

“ஐ டோன்ட் கேர்” என்றாள்.

மனதிற்குள், இன்னும் தீவிரமாக. “கொடுப்பதாய் சொன்ன இதயத்தை, திருப்பி நான் வாங்க மாட்டேனே”, என்று ஓடியது.

Advertisement