Advertisement

அத்தியாயம் ஐந்து:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி

உலகம் அறியாது

நம் மனதிற்குள்ளும் நடக்கும்

மற்ற மனங்களுக்கிடையிலும்  நடக்கும்

இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி

நடக்கும் மனங்களுக்கு மட்டுமே தெரியும்

 

நினைத்தால் உடனே செய்யும் ரகம் பார்த்திபன், இரவு நேரமாகி விட்டதென்றும் பாராமல் அவன் திருமணத்திற்கு பார்த்து வந்திருந்த பெண் ரேகாவை அழைத்தான்.

அந்த பெண்ணிடம் ஃபோன் பேசுவதற்குள் முதலில் அவள் அன்னை பேசினார். பிறகு தந்தை பேசினார். பிறகு அவள் அண்ணன் பேசினான். இத்தனை பேர்களும் பேசிய பிறகே போன் அவள் கைக்கு சென்றது.

எல்லாரும் மாற்றி மாற்றி, “என்ன விஷயம்?”, என்க. “பொண்ணு கிட்ட பேசவேயில்லை, அதனால பேசலாம்னு”, என்று எல்லோரிடமும் அவன் தயக்கத்தோடு கூற வேண்டி வந்தது.

இந்த தயக்கம் அவனுக்கு புதிது. “என்னடா பொண்ணு கிட்ட ஃபோன்ல பேச இவ்வளவு கேள்வி கேக்கறாங்க”. என்று சிறிது எரிச்சல் அவனை அறியாமல் உதித்தது.  “சம்மந்தம் பேசி முடிச்சிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம். அப்போ மட்டும் என்னை எப்படி நம்புவாங்க?” என்று யோசனை ஓட ஆரம்பித்தது.    

முதலில் ரேகாவிடம் அவன் பேசிய வார்த்தை. “உனக்கு தனியா போன் இல்லையா?”, என்றான், வார்த்தைகள் சிறிது காரமாகவே வந்தது. 

“இருந்தது, இப்போ தான் தண்ணில விழுந்து ரிப்பேர் ஆகிடுச்சு”, என்றாள் ஒரு பயத்தோடு, சிறிது பயந்த சுபாவம் உடையவள் தான். எப்போதும் கிடையாது. இப்போது இவன் அதட்டலான கேள்வி அவளை தடுமாற வைத்தது.  கூடவே, “ஹப்பா என்ன அதிகாரம்”, என்று தோன்ற வைத்தது. 

பெண் பார்த்த நாள் முதல் எப்போது அழைப்பான் என்று காத்திருந்தாள் தான். சிறிது கோபம் கூட இருந்தது. கேட்பவர்கள் நிறைய பேர் இருந்தனர். “என்ன மாப்பிள்ளையோட பேசினாயா? என்ன இல்லையா? இப்போல்லாம் ஃபோன்ல குடும்பம் நடத்தறாங்க! நீங்க பேசக்கூடா இல்லையா!”, என்று அதிசயமாக சிலர் பார்க்க. ஆச்சர்யமாக சிலர் பார்க்க. சந்தேகமாக பலர் பார்த்தனர்.

“நான் தான் பெண் முதலில் எப்படி அழைப்பது என்று நினைப்பேன். இவன் என்னை கூப்பிடலாம் இல்லை, நேரில். அட்லீஸ்ட் காலேஜ் வரலாம்”, என்று நினைத்திருந்தவள். இப்போது அவன் குரலில் பதட்டப்பட்டாள்.  பக்கத்தில் அண்ணனை வைத்துக்கொண்டு தான் பேசினாள்.

“இந்த நம்பர் தானே கொடுத்தீங்க! பொண்ணு பார்க்கும் போது”, என்றான் மறுபடியும் அதிகாரமாக.

“இது வீட்ல பொதுவா இருக்கும் நம்பர்”, என்றாள்.

“நாளைக்கு என் ஷாப்க்கு முடிஞ்சா வாயேன்! புது போன் எடுத்துக்குவியாம்”, என்றான்.

“அப்பா கிட்ட கேட்டுட்டு சொல்றேன்”, என்றாள்.

“படிச்சிருக்க. காலேஜ்ல வேலை பார்க்குற. இதுக்கு பெர்மிஷன் கேட்பியா?”, என்றான் யாரிடமும் எதற்காகவும் பெர்மிஷன் கேட்டு பழகியிராத பார்த்திபன்.

“அப்பா கிட்ட கேட்காம எதுவும் செய்ய மாட்டேன்!”, என்றாள்.

“அப்போ என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னது”,

“அப்பா சொன்னதுனால தானே எனக்கு உங்களை தெரியும்”, என்றாள் சாமார்த்தியமாக.

“அப்போ என்னை பற்றி வேறு என்ன விவரம் தெரியும்?”, என்றான்.

அந்த புறம் அமைதி நிலவவே. “சொல்லும்மா!”, என்றான் சற்று தனிவாக. அவனுக்கு அவள் பேர் வேறு சட்டென்று ஞாபகத்தில் இல்லை.

“நீங்க செல்போன், லாப்டாப் ஷோரூம் வைச்சிருக்கீங்க, நல்லா போகுதுன்னு சொன்னாங்க”, என்றாள்.

“அதை கேட்கலைம்மா, என் லைப் பத்தி என்ன தெரியும்”, என்றான். .

“நீங்க உங்க பாட்டி, தாத்தா கிட்ட இருக்கீங்கன்னு தெரியும்”, என்றாள், மேலே வேறு என்ன சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

“நம்ம நேரில் பார்க்கலாமே என் ஷோ ரூம் வர்றீங்களா”, என்றான், அவள் இடம் போக விருப்பம் இல்லாததால்.

“ஒரு நிமிஷம்”, என்றவள் அவள் அண்ணனிடம் கேட்க, “சரி என்று சொல்லு”, என்று சொன்னான்.

“வர்றோம்!”, என்றாள். 

“வர்றோமா? யாரோட!”, என்று மனதினில் நினைத்தவன், வெளியே சொல்லவில்லை, தான் சிறிது அதிகாரம் செய்கிறோமோ என்று அவனே நினைத்தவன், “சரி”, என்று போனை வைத்தான்.

அன்னையிடமும் தந்தையிடமும். “பார்த்திபனை விட்டு எப்படி ஆரம்பத்தில் நித்யா ஆன்டி விலகி போனார்கள். விலக விட்டார்கள்.”, என்று வாக்குவாதம் செய்த அபிராமி,  படுத்தவுடன் உறங்கிடும் இயல்பினள், தன் இயல்பில் இருந்து மாறி அன்று உறக்கத்தை தொலைத்தாள்.

“என்ன வாட்டியது”, அவளை என்று அவளுக்கே சொல்ல தெரியவில்லை. ஆனாலும் தன்னில் ஏதோ குறைவதாக உணர்ந்தாள். இரவு உறங்க நெடுநேரம் ஆயிற்று. அன்னையும் அவளை எழுப்பாததால் காலையிலும் நீண்ட நேரம் உறங்கி விட்ட அவளை எழுப்பியது ஜெயந்தியின் குரல் தான்.

“என்னை விட்டு ரெண்டு நாளா காலையில எங்க போனீங்க. இன்னைக்கு  நானும் வருவேன்”, என்று குளித்து முடித்து பிரெஷாக வந்தாள்.

எங்கே போனாள். யாரை பார்த்தாள். என்று ஞாபகம் வர பெற்ற அபிராமி, நேரத்தை பார்க்க. அது பத்தை காட்டியது. இந்த நேரம் அவன் கோவிலுக்கு போய் சென்றிருப்பானே, தினமும் போவானா? இல்லை இரண்டு நாட்களாக தான் சென்றானா? பார்த்திபனை பற்றி நினைத்த அபி. “நான் இன்னைக்கு எங்கையும் போகலை”, என்று எறிந்து விழுந்தாள்.

கத்துவது அவள் வழக்கம் என்பதால். அது ஜெயந்தியை அதிகம் பாதிக்கவில்லை, “சரி, என்கூட வாங்க”, என்றாள்.

“நான் எங்கையும் வரலை”, என்று மறுபடியும் எறிந்து விழுந்தாள்.

“ஏன் பெரியம்மா. காலையிலயே அக்காவை திட்டுணீங்களா, நான் ரங்கநாதன் ஸ்ட்ரீட் ஷாப்பிங் கூப்பிட்டா வரமாட்டேங்கறாங்க.”, என்ற ஜெயந்தியின் வார்த்தைகள் காதில் விழுந்ததும்.

“ரங்கநாதன் ஸ்ட்ரீட்டா”, என்றபடி வேகமாக எழுந்தாள் அபிராமி, அங்கே தானே பார்த்திபன் ஷோரூம் இருக்கிறது என்று நினைவு வந்தவளாக.   

“நானும் வர்றேன்”, என்று எழுந்தவளை ஆச்சர்யமாக பார்த்தாள் ஜெயந்தி. “இதென்னடா இது ரங்கநாதன் தெரு செய்த மாயம், இவ்வளவு நேரமாக எரிச்சலாக கத்திகொண்டிருந்த அபி அக்கா,  இப்படி எழுந்து உட்கார்றாங்க”, என்று நினைத்தவள்.

வெளியே கேட்கவும் செய்தாள், “என்ன அக்கா எங்கயும் வரமாட்டேணீங்க இப்படி எழுந்து உட்காறீங்க”, கேட்டாள்., அது பார்த்திபன் செய்த மாயம் என்று தெரியாமல்.

“எல்லாம் உன்கிட்ட சொல்லனுமா? எனக்கு அப்போ வரவேண்டாம்னு தோணிச்சு வரலை! இப்போ வரணும்னு தோணுது வர்றேன்! என்றாள் மறுபடியும் எரிச்சலாக.

“என்னடா இது? அக்கா அந்நியன் மாதிரி மாத்தி, மாத்தி, எக்ஸ்பிரஸ்ஸன் காட்றாங்க”, என்று யோசித்தபடியே பெரியம்மாவிடம் வளவளக்க சென்றாள்.

அன்று சனிக்கிழமையாதலால். கல்லூரி விடுமுறை என்பதால். ரேகா அவள் அண்ணனோடு ரங்கநாதன் தெருவிற்கு பார்த்திபனை பார்க்க கிளம்பிய அதே சமயத்தில். அபிராமி ஜெயந்தியோடு பார்த்திபனை பார்க்கவென்று யாருக்கும் சொல்லாமல் ஜெயந்தியோடு கிளம்பினாள்.

காலையிலிருந்து ரேகாவை எதிர்பார்த்து தான் இருந்தான் பார்த்திபன், ஒரு சிறு சங்கடம் இருந்தது, தான் அவளை சரியாக கண்டுபிடிக்க வேண்டுமே. வர்றோம் என்று வேறு சொன்னாள். யாரோடு வருவாளோ என்று எண்ணியபடியே இருக்க. அவனை சோதிக்கவென்று சோதனை அபிராமியின் ரூபத்தில் வந்தது.

ஜெயந்தியிடம், “என் போன் ரிப்பேர் கொடுத்துட்டு போகலாம்”, என்று சொல்லி பார்த்திபன் கடையை கண்களால் துளாவி கண்டு நிறுத்தி., வண்டியையும் அங்கே கொண்டு நிறுத்தினாள்.

அவள் வண்டி நிறுத்தும் போதே அவளை பார்த்துவிட்ட பார்த்திபன், நேற்று பார்த்த அவள் முகம் மனதில் நன்கு இருக்க “இவள் ஏன் இங்கு வருகிறாள்”, என்று சற்று பதட்டமானான்.

அபி ஜெயந்தியுடன் உள்ளே நுழைந்தவுடன் கண்கள் தானாக பார்த்திபனை தேடியது. அவள் கண்கள் உள்ளே நுழைந்தவுடன் எதிர்புறம் பார்க்க இவன் பக்கவாட்டில் இருந்தான். கண்கள் அவனை அவசரமாக தேடி அவசரமில்லாமல் அவன் மேல் நிலைத்தது. 

அவன் ஏதோ செல் போன் பார்த்து கொண்டு இருந்தான். அவன் இவளை பார்த்தது இவளுக்கு தெரியாது. இருந்தாலும் அவனை பார்த்த சந்தோஷத்தில் இருந்தாள்.

“வாங்க மேடம்! என்ன வேண்டும்?”, என்றும் முன்னே இருந்த செந்தில் வினவ. “உங்க சர் வேண்டும்”, என்றாள் உற்சாகமாக அவனை விழி அகற்றாமல் பார்த்தவாறு. 

கேட்ட செந்திலும் விழித்தான், கூட வந்த ஜெயந்தியும் விழித்தாள், இதை கேட்ட பார்த்திபன், “இதென்னடா புது வம்பு, இந்த பொண்ணு ஏன் என்னை இவ்வளவு உரிமையா இப்படி பார்க்குது”, என்று நினைத்தான்.

ஜெயந்தி அக்காவை பார்க்க. அக்காவின் பார்வை சென்ற இடத்தை பார்க்க. அங்கே இருந்த பார்த்திபனை பார்த்த அவள் வாய் அவளையறியாமல், “மௌன சாமியார்”, என்று முனுமுனுத்து தன் அக்காவை ஆராய்ச்சி பார்வையோடு அளவிட்டது, அக்காக்கு இவனை தெரியுமா என்று.

எல்லாரும் தன்னை பார்ப்பதை உணர்ந்த பார்த்திபன். எழுந்து வந்து பொறுமையை இழுத்து வைத்தபடி, “என்ன” என்றான் அபியை பார்த்து ஒருமையில். செந்தில் ஆச்சர்யமாக பார்த்தான் யாரையும் இப்படி பார்த்திபன் ஒருமையில் விளித்து பார்த்ததில்லை.

“என் செல்போன் ரிப்பேர் கொடுக்க வந்தேன்”.

“நான் தான் நேற்றே கம்பெனி சர்வீஸ் சென்டர்ல கொடுக்க சொன்னேனே”, என்றான்.

“நீங்க சொன்னா! நான் கேட்கணுமா!”, என்று மனதிற்குள் நினைத்தவள். வெளியே, “எனக்கு உங்க கிட்ட தான் கொடுக்கணும்”, என்றாள்.

“வேண்டாம்!”, என்று சொல்ல பார்த்திபன் வாயெடுத்த நேரம்., “நானும் உள்ளேன் ஐயா”, என்று அங்கே ரேகா ஆஜரானால் அவள் அண்ணனுடன்.

உள்ளே நுழைந்தவர்களை பார்த்தவுடனே அடையாளம் தெரிந்தது. யோசிக்கும் போது ஞாபகத்திற்கு வராத அவள் முகம். நேரில்  பார்த்தவுடனே அடையாளம் தெரிந்தது.

முதன் முறையாக பதட்டமாக, சற்று தடுமாற்றமாக உணர்ந்தான் பார்த்திபன். அவனை பதட்டபடுதியது அபியின் பார்வை. அதில் தெரிந்த உரிமை. அவன் கவனமெல்லாம் அபியிடமே இருந்தது. “ஏன் இவள் வந்திருக்கிறாள்?”, என்று.

ஆனால் அதே சமயம், ரேகாவையும் அவள் அண்ணனையும்  வரவேற்கவும் மறக்கவில்லை.

“ஹாய், வாங்க!”, என்று அவர்களிடம் சொன்னவன். இவளை விடுத்து அவளை நோக்கி சென்றான்.

“யார் இவர்கள்? இவர்களை பார்த்ததும் இவன் ஏன் தடுமாறினான்”, என்ற யோசனை அபியினிடத்தில் ஓட.

அவர்களையே பார்த்தாள். அவள் பார்ப்பது இன்னும் பார்த்திபனை பதட்டப்படுத்தியது.

“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை”, என்றான் ரேகாவின் அண்ணன்.

“என்ன மாப்பிள்ளையா?”, என்று வாயை பிளந்தாள் அபி. “ஒஹ்! அப்பா இதைத்தான் தன்னிடம் கூறினாரோ. இவனை நான் விட்டுவிட வேண்டுமா”, என்ற கேள்வி மனதில் உதித்தது.

உதித்த அடுத்த நிமிடம், “நீ அவனை பிடித்திருந்தாயா என்ன? நிறைய நாட்களாக பார்த்தாலும். மூன்று நாட்களாக தானே அவனை உனக்கு தெரியும்.”, என்று மனசாட்சி கூற.

“போடி உன் வேலையை பார்த்துட்டு, என்னை நீ கேள்வியெல்லாம் கேட்க கூடாது”, என்று அதை திட்டிய அபி.

அதன் பிறகு அபி செய்த வேலை.

“இவங்க யாரு? நமக்கு தெரிஞ்சவங்களா பார்த்தி!”, என்றாள் வேண்டுமென்றே. உரிமையாக அவனிடம் கேட்டவாறு, யாரும் எதிர்பாராமல் அவர்கள் பேச்சில் என்ட்ரி கொடுத்தாள்.

ஜெயந்தி அதிர்ந்தாள் என்றே சொல்ல வேண்டும், “என்ன ஆகிவிட்டது அக்காவிற்கு! ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?”, என்று அவள் ஒரு பக்கம் டென்ஷன் பட.

யாருடைய டென்ஷனுக்கும் கட்டுப்படாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள் அபி.

“யார் நீங்க?”, என்று இதை. இந்த உரிமையை. பார்த்த ரேகா கேள்வி அபிராமியை பார்த்து கேள்வி கேட்டாள்.

“அதை பார்த்தி தான் சொல்லனும். இன்ஃபாக்ட் அதைத்தான் நாங்க பேசிக்கொண்டிருந்தோம்”, என்றாள் மேலும் உரிமையாக சந்தேகப்படும் வகையில். 

“யார் மாப்பிள்ளை இந்த பெண்”, என்று ரேகாவின் அண்ணனும் கேட்டான் பார்த்திபனை பார்த்து. 

அவனையே பார்த்திருந்தாள் அபிராமி. அவன் சொல்லபோகும் வார்த்தைகளுக்காக. ஏதாவது தரக்குறைவாக தன்னை அவன் திட்டி விட்டாள்?. கேள்வி எழுந்த நேரம், அவள் இதையத்துடிப்பின் ஓசை அவளுக்கு கேட்டது.

“என்ன பதில் சொல்வது?”, என்று தெரியாத பார்த்திபன் சற்று தடுமாறினான். என்ன சொல்லுவான்?

நேற்று தான் பார்த்தேன் என்றா சொல்லுவான். இல்லை என்னோடு தொடர்பில்லாத, நான் தொடர்பு கொள்ள விரும்பாத, என் அன்னையின் நெருங்கிய நண்பரின் பெண் என்று சொல்லுவானா. இல்லை பக்கத்துக்கு வீட்டு பெண் என்று சொல்லுவானா. இல்லை அவளோடு நேற்று பேசிய பிறகு உணர்ந்த, தான் ரசிக்கும் குரலுக்கு சொந்தக்காரி என்று சொல்லுவானா. என்ன சொல்லுவான்?????????

என்ன சொன்னாலும்? அவளை மரியாதை குறைவாக எதுவும் சொல்ல விரும்பாதவன். ஏதோ சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன். “தெரிந்த பெண்!”, என்றான். அதை சொல்லும் போது அபியின் முகம் மலர்ந்த விதம். இன்னும் அவனை பதட்டப்படுத்தி முதலில் அவளை இங்கிருந்து கிளப்பு என்று சொன்னது

“ஒரு நிமிஷம்!”, என்று ரேகாவிடமும் அவள் அண்ணனிடமும் சொன்னவன். “கொடுங்க அந்த போனை! என்னன்னு பார்த்துட்டு சொல்றேன்”, அபிராமியிடம் அவசரமாக போனை வாங்கினான்.

“நீங்க நாளைக்கு வாங்க! நான் பார்த்து வைக்கிறேன்!”, என்று சொல்லியவன். கிளம்பு. என்று தன்னை சொல்லாமல் சொல்வது புரிய. நிமிஷத்தில் அபியின் முகம் சூம்பி போயிற்று.

அவனை விடுத்து ரேகாவை பார்த்து முறைத்தபடி சென்றாள்.

அவள் முறைத்த முறைப்பு ரேகாவை பயப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். ரேகாவை மட்டுமல்லாது அவள் அண்ணனையும் ஒரு அலட்சிய பார்வை பார்த்தபடி சென்றாள்.

இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த பார்த்திபன் டென்ஷன் ஆனான். “யார் இவள்? எங்கிருந்து வந்தாள்? நேற்று இருந்து என்னை பதட்டப்படுத்தி கொண்டிருக்கிறாள்”, என்று நினைத்துக்கொள்ள. அது ஜெயந்தியையும்  பயப்படுதியது. “இந்த அபிக்கா என்ன செய்து கொண்டிருக்கிறாள்?”, என்று.

ஆனால் எதுவும்? யாரும்? அபியை பதட்டப்படுத்தவில்லை. அவள் கண்களில் தெரிந்த அலட்சியம் ரேகாவின் அண்ணனை, “யார் இந்த பெண்? இவளுக்கு பார்த்திபனுக்கும் என்ன தொடர்பு?”, என்று யோசனையை தானாகவே தருவித்தது.

வெளியே வந்த ஜெயந்தி தன் அக்காவிடம் பொறிந்தாள். “என்ன பண்ற அபிக்கா நீ. உனக்கு அவனை தெரியுமா? எதுக்கு அவங்க முன்னாடி இப்படி நடந்துக்கற. அவனை சைட் அடிக்கறதுக்கு என்னை நீ திட்டுவ! இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?”, என்றாள்.

கேட்ட அபி அவளையறியாமல் யோசனையில் ஆழ்ந்தாள், “ஆமாம்! நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். அவன் திருமணம் செய்துகொள்ள போகும் பெண் முன்னாள், அவனை உரிமையாக பேசி வந்திருக்கிறேன்”. ஏன்? ஏன்? ஏன்? என்று அவளே பல ஏன்களை போட்டு கொண்டிருக்க.

“ஏன் அபிக்கா? அப்படி செஞ்சீங்க”, என்று ஜெயந்தி மறுபடியும் கேட்க. “அதைத்தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்”, என்றாள் சீரியஸாக.

ஜெயந்தி அவளை முறைத்து பார்த்தாள். “நீங்க என்ன பண்ணியிருக்கீங்க தெரியுமா? நீங்க அவன் கிட்ட ஏன் அப்படி நடந்துகிட்டீங்க?”, என்றாள் மறுபடியும்.

“அவன், இவன்னு, சொல்லாத ஜெயந்தி”, என்றாள் அதட்டலாக.

“ஏன்?”, என்றாள் குரலின் ஸ்ருதியிறங்கி, அது வரகூடாது என்று ப்ரார்தித்து கொண்டே. ஆனால் அதுவே வந்தது.

“எனக்கு அவரை பிடிச்சிருக்கு”, என்றாள் அபிராமி.

“பிடிச்சிருக்குன்னா????????”.

“பிடிச்சிருக்கு, ரொம்ப”, என்றாள், இதுநாள் வரையில் காதல், கல்யாணம் என்று எந்த நிகழ்வையும் நினைத்துக்கூட பார்த்திருக்காத அபி. அது வரையில் அவளுக்கு தெரிந்தது எல்லாமே படிப்பும், விளையாட்டுத்தனங்களும் தான். முடித்த பிறகும் எந்த மாதிரியான வேலைக்கு போவது என்ற யோசனை மட்டுமே நேற்று முன்தினம் வரை இருந்தது. இப்போது?????????? 

“அக்கா இதுக்கு அர்த்தம் தெரியுமா”, என்றாள்.

“தெரியாமையா சொல்லுவேன்”, என்றாள் அபி.

“எப்படி அக்கா இது. ரெண்டு நாளா நீ அவரை பக்கத்தில் பார்த்திருக்கலாம். மே.பி ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசியிருக்கலாம். அதனால மட்டும் பிடிக்குமா”, என்றாள்.

“பொண்ணு பார்க்கும் போது என்ன பண்றோம்? சும்மா பார்க்கறோம்! நீ சொன்ன மாதிரி ரெண்டு வார்த்தை பேசறோம்! அப்போ கேட்டா பிடிச்சிருக்குன்னு சொல்லலை”, என்று பதில் கேள்வி கேட்டாள்.

“அக்கா எனக்கு பயமாயிருக்கு?”, என்றாள் ஜெயந்தி

“நானே பயப்படலை. நீயேன் பயப்படற! நான் பார்த்துக்கறேன் விடு!”, என்றாள்.

“அக்கா அவங்களுக்கு உங்க மேல ஆர்வம் இல்லை போல இருக்கே”, என்றாள் பார்த்திபனை மனதில் கொண்டு.

“அவங்களா யார் அது?”, என்றாள் வேண்டுமென்றே.

“அது தான் ஹாய் ஹாண்ட்சம்”,  என்றாள் தயக்கமாக, மௌன சாமியார் என்று சொன்னால் அதற்க்கும் திட்டுவாளோ என்று

சிரித்த அபி. “சொல்லு நல்லாயிருக்காங்க தானே. ஐ லவ் யூ சொல்லிடட்டுமா”, என்றாள்.

“ஹான்”, என்று வாயை பிளந்த ஜெயந்தி. “ஐ லவ் யூ வா.  அக்கா எனக்கு பயமாயிருக்கு! ஹாண்ட்சம்க்கு உங்களை பிடிக்குதா தெரியதயலையே!”, என்றாள்.

“பிடிக்கலைன்னா என்ன? பிடிக்க வச்சிட்டா போகுது!”, என்று சிரிக்க அக்காவின் கையை ஆதரவாக பிடித்தாலும்,

“உங்களுக்கு ஏன் அவங்களை பிடிச்சது?”, என்றாள். 

“தெரியலை?  ஏன்னும் தெரியலை? எப்போ இருந்தும்னு தெரியலை? என்ன காரணம்னும் தெரியலை?”.

மனதிற்குள். “அவன் கதையை கேட்டதாலா தெரியலை. அவன் நித்யா ஆண்டியின் பையன் என்பதாலா தெரியலை. இல்லை நித்யா ஆண்டிக்கு அப்பா கட்டாயபடுத்தி இன்னொரு திருமணம் செய்து வைக்காமல் இருந்திருந்தால் அவன் அம்மாவோடே வளர்ந்திருப்பானா என்பதாலா தெரியலை. இல்லை நானே அவனை நிறைய நாட்களாக நீ சொன்ன மாதிரி சைட் அடித்திருந்தேனா தெரியலை.”, என்று நினைத்தாள்.

“நம்ம வீட்டு ஆளுங்க, உங்க ஹாண்ட்சம்”, என்று அபியின் முன்னாள் ஜெயந்தி கேள்வி வைக்க.

“யாராவது என்னை நிறுத்த முடியும்னு நினைக்கிறியா”, என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

“அந்த இப்போ பார்த்த பொண்ணு”, என்று ரேகாவை மனதில் வைத்து கூற.

“தாலி கட்டுற வரைக்கும் எதுவுமே உறுதியில்லை”, என்றாள் உறுதியான குரலில்.

Advertisement