Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தம்

இந்த ஜென்மத்திலா நிகழ்ந்தது

என்று தோன்றும் படி செய்துவிட்டாய்

பெண்ணே !

உனக்கு நன்றி சொன்னேன்

உனக்கே நீ நன்றி சொல்லி கொள்வாயா ?

நீ வேறு நான் வேறா என்கிறாய்

இல்லை நீயும் நானும் ஒன்று

இந்த யுத்தத்தில் நீ வென்று என்னை

வெற்றி பெற செய்து விட்டாய்!!! 

ஊருக்கு வந்தால். “ஏன் அதற்குள் வந்தீர்கள்”, என்றாள் அபிராமி.

“உன்னை பார்க்காம இருக்க முடியலைன்னு, என் வாயால சொன்னா தான் விடுவியா. ஐ மிஸ் யூ”, என்றான்.

“மூணு நாள் தானேங்க ஆச்சு”,

“எத்தனை நாள் அச்சுன்றது இல்லை. உன்னை பார்க்கணும்னா, எனக்கு உடனே பார்க்கணும். என்னை நீ அடிக்ட் பண்ணிட்ட”, என்றான் சீரியசாக.

“எனக்கு அங்கே இருந்த வரைக்கும், எப்போ உன்னை பார்ப்பேன் பார்ப்பேன் இதே தான் நினைப்பு”,

“எப்படி இருக்காங்க மாமா”

“பிழைச்சிட்டாங்க, ஆனா இனிமே முன்ன மாதிரி ஆகறது கொஞ்சம் கஷ்டம் தான்”,

“என்ன பண்ணுவாங்க இனிமே? இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு விஷ்வாக்கு. இன்னும். சரத் வேற பி.ஜி பண்ணும்னு சொன்னான்”, என்றவள்.

மறுபடியும், “என்ன பண்ணுவாங்க”, என்றாள். 

ஏதோ சொல்ல தான் இந்த பீடிகை என்றுணர்ந்த பார்த்திபன்.

“என்ன பண்ணனும்”, என்றான் அவளை பார்த்து,

“அவங்க அண்ணா. அவங்களை பார்த்துக்கணும்”, என்றாள்

தன்னை தான் சொல்கிறாள் என்றுனர்ந்தான். அதில் அவனுக்கு ஒரு சிரமும் இல்லை, இஷ்டமில்லை என்பது போலும் இல்லை.  “பார்க்கலாம்”, என்றான்.

“பார்க்கலாம். இல்லை, பார்க்கணும்”,

“இதென்ன இது அபிராமி.? எல்லா மனைவியும் கணவன் கிட்ட அவங்க குடும்பத்தை பார்க்கவேணாம்னு சொல்வாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். நீ அதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட்டா இருக்க”,

“யார் சொன்னது பொண்ணுங்களை பத்தி இப்படி தப்பா. அப்படி எந்த பொண்ணும் சொல்ல மாட்டா! சொன்னா வேற ஏதாவது காரணம் இருக்கும்! இல்லைனா அந்த கணவனே தான் காரணமா இருப்பான்! ஒரு பீலிங் ஆப் செக்யூரிட்டி இருந்ததுன்னா அதிக பிரச்சனைகள் வராது. ஆனா அது தவறிச்சினா எல்லாமே தவறிடும்”, என்று அவனுடன் சண்டைக்கு வர.

“அம்மா மங்கையர் குல திலகமே! நான் எந்த தப்பும் பொண்ணுங்க மேல சொல்லலை”, என்றான்.

“அது.” என்றவள்.

“அப்போ நித்யா அத்தை மேலயும் கோபமில்லையா”, என்றாள் சமயம் கிடைத்ததென்று.

ஒரு கனமான அமைதி நிலவியது.

பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அவள் முகத்தில் பார்த்தவன். மெதுவாக புன்னகைத்தவாறு. “முன்ன கோபம் இருந்தது. இப்போ வருத்தம் இருக்கு. பார்ப்போம் அதுவும் போகுதான்னு”,

“இப்போ யாரை பத்தியும் பேசாதே. ப்ளீஸ் திஸ் இஸ் டைம் பார்  ஒன்லி மீ”, என்றான்.

“அப்போ நான் போகட்டுமா”, என்று அவள் முகத்தை தூக்கி வைக்க.

“மீ ன்னா, அது நீ தான். இன்னுமா உனக்கு புரியலை”, என்றான்.

அபிராமி அவனை காதலோடு பார்க்க. 

அங்கே ஒரு பேச்சில்லா மெளனம் உதித்தது.

 ஒரு முழு மாதம் பிரகாஷ் ஹாஸ்பிடலில் இருந்த பிறகே டிஸ்சார்ஜ் ஆனார். பேச்சு சற்று குளறி வந்தது. ஓரளவு யாராவது பிடித்தால் தடுமாறியபடி நடந்தார். ஆனால் கை வரவில்லை. அதற்கும், காலுக்கு பிஸியோதெரபி ட்ரீட்மென்ட், பின்பு இனி வாழ்நாள் முழுவதும் மாத்திரை, என டிஸ்சார்ஜ் ஆனார்.

சரத்தையும், விஸ்வாவையும் ஹாஸ்டலில் சேர்த்து, பிரகாஷின் மொத்த குடும்பத்தையும் சென்னைக்கு மாற்றல் செய்தனர், பார்த்திபனும் சத்தியமூர்த்தியும்.  அங்கே அவர்களின் வீட்டிற்கு பக்கத்திலேயே ஒரு வீடு பார்த்து குடி வைத்தனர்.

“எங்களை மன்னிச்சிடு தம்பி”, என்று கேட்டே விட்டனர், பிரகாஷின் தாயும் தந்தையும்.

“உங்க பையன் வாழ்க்கைக்கு நீங்க பார்த்திருக்கீங்க. அதை தப்புன்னு சொல்ல முடியாதுங்க”, என்று கூறி குற்ற உணர்ச்சியில் தவித்த வயதான அவர்களின் மனதிற்கும் சற்று நிம்மதி கொடுத்தான்.

நித்யாவிற்கு. பிரகாஷிர்க்கு இப்படி ஆன வருத்தம் இருந்ததினால் பார்த்திபனின் இந்த செய்கைகளை எல்லாம் சற்று தாமதமாகவே உணர்ந்தார்.

ஜெயாமாவிற்க்கும் ராமகிருஷ்ணனுக்கும் தங்கள் பேரனின் செய்கைகள் கண்டு பெருமை பிடிபடவில்லை. எல்லாவற்றையும் பார்த்து. “சக்கரத்தை காலில் வைத்து சுற்றுகிறானா”, என்று சொல்லும் அளவுக்கு பார்த்திபன் பிசியாக இருந்தான்.

இதற்குள் அபிராமிக்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பிற்க்கு நாள் குறிக்க. பாஸ்கர் தன் வீட்டு ஆட்களை விட்டு  ஜெயந்தியை பெண் கேட்டார்.

பாஸ்கருக்கு தன் மகனுடன் எந்த வகையிலாவது தாங்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற காரணதிர்க்காகவே ஜெயந்தியை வலிந்து பெண் கேட்டார். தன்னோடு பார்த்திபனின் தொடர்பு தன் குடும்பத்திற்கு முடிந்து விடக் கூடாது என்றே நினைத்தார். அதனாலேயே ஆகாஷிற்கு ஜெயந்தியை பெண் கேட்டார்.  

இங்கே அபிராமி வீட்டில் ஜாதகம் பார்த்து. மாப்பிள்ளையை பற்றி ஒன்றிற்கு நான்கு முறை விசாரித்து பின்பு. பெண் கொடுப்பது என்று முடிவானது.  வேணுகோபாலன் அமெரிக்காவில் இருந்த தன் நண்பர்கள் மூலமாக அங்கேயே பையனை பற்றி விசாரித்தார். ஏனென்றால் பாஸ்கரின் வசதியும் பதவியும் மட்டும் பெண் கொடுக்க செய்யவில்லை. மாப்பிள்ளை ஆகாஷும் நன்கு படித்திருந்தான், நல்ல வேலையில் இருந்தான், வெளிநாட்டு உத்தியோகம் வேறு சரி என்று சொல்ல வைத்தது. 

வளைகாப்பு வெகு விமரிசையாக நடக்க. திருமணம் நடந்ததை விட எல்லோர் மனதிலும் ஒரு நிறைவு இருந்தது. 

அபிராமிக்கு திருமணத்தின் போது இருந்த மன உளைச்சல் இல்லை, வளைகாப்பு அன்று நிறைமாத கர்ப்பிணியாக மிகவும் அழகோடும், பார்த்திபனின் காதல் கொடுத்த செருக்கோடும் பார்ப்பவர் கண்படும் படி திகழ. அன்றே இரவு, சுற்றிபோடும் முன் வித்தியாசத்தை உணர்ந்தாள்.

வலி. விட்டு விட்டு. வலி. அப்போதே அன்னையிடம் சொன்னாள்.

“இன்னும் நாள் இருக்கே, கஷாயம் வெச்சி கொடுக்கறேன்”, என்று வீட்டில் இருந்த பெண்கள் கைவைத்தியம் செய்ய. தூங்க போகும் முன் வீட்டில் இருந்து அபிராமியை பார்க்க வந்த பார்த்திபன். இதையெல்லாம் பார்த்தவன். “இல்லை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாம்”, என்றான்

“தேவை இல்லை மாப்பிள்ளை. இந்த மாதிரி வலி வர்றது சகஜம் தான். சரியா போயிடும், இன்னும் நாள் இருக்கு”, என்ற கலாவதி சொல்லியும் கேட்காமல்.

“வலி வரும்போது பாருங்க துடிக்கறா, ஒன்னுமில்லைன்னு டாக்டர் சொல்லட்டும் அத்தை, அவளை கூட்டிட்டு கிளம்புங்க ” என்று அவரிடம் சத்தம் போட்டு அழைத்து சென்றான்.

அங்கே சென்றவுடன் டாக்டர், “இது பிரசவ வலி தான்”, என்றவர் அவளை உடனே அட்மிட் செய்ய,

நார்மல் டெலிவரி ட்ரை செய்ய ட்ரிப்ஸ் போட்டனர்., எனிமா கொடுத்தனர்., ஏனோ இவளுக்கு ஏதோ காம்ப்ளிகேஷன் இருந்ததால் அசையாமல் படுக்கும்படி கூறினர். இவளுக்கு வலி பொறுக்க முடியவில்லை, கதற ஆரம்பித்தாள்.

உள்ளே பிரசவ அறைக்குள் நித்யா மட்டுமே இருந்தார். கலாவதியை கூட அனுப்பி விட்டனர். வலி தாங்க முடியவில்லை. ஒரே பொசிஷனில் படுக்க சொன்னர்.

அபிராமி உணர்ந்தது எல்லாம் வலி. வலி. வலி. மட்டுமே கதற ஆரம்பித்தாள்.  அந்த வலியை பார்த்து அவள் கதறிய கதறலை பார்த்து பார்த்திபன் பயந்து போனான்.

ஒன்பது மணிக்கு அவளை பிரசவ அறைக்குள் கொண்டு போய் படுக்க வைத்தனர். கிட்ட தட்ட நான்கு மணிநேரம் போராடி பார்த்தனர், செர்விக்ஸ் டைலேட் ஆகவில்லை.

அந்த நான்கு மணிநேரமும், அபிராமி உடலில் வலியை உணர. பார்த்திபன் நெஞ்சில் வலியை உணர்ந்தான்.

நித்யாவாளும் உள்ளே அபியை சமாளிக்க முடியவில்லை. “பொறுத்துக்கோ அபி கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்”, என்று சொல்லி சொல்லி பார்த்து. அவருக்கும் பயம் வர ஆரம்பித்தது.

வலி பொறுக்க முடியாமல் கத்த ஆரம்பித்தாள். உள்ளே அவள் கதறிய கதறல். இரவின் நிஷப்ததில் வெளியே நன்றாக கேட்டது.

“என்னை கொன்னுடுங்க, என்னால வலி தாங்க முடியலை. நான் செத்து போறேன், என்னை கொன்னுடுங்க.”, என்று கத்த ஆரம்பித்த பிறகே. வேறு வழியில்லாமல் டாக்டர்  சீசேரியேன் போக முடிவெடுத்தார். 

அவள் கத்திய கத்தல். கலாவதிக்கு அழுகையையே வரவழைத்தது.         

வெளியே வந்த டாக்டர், “கர்ப்பபை வாய் திறக்கலை. பனிக்குடமும் உடைஞ்சிடுச்சு. இனிமே வெயிட் பண்ண முடியாது. பெட்டர் வி வில் கோ ஃபோர் சீசேரியேன்” என்றார்.

சென்ற அரை மணிநேரத்தில் குழந்தையை வெளியே கொண்டு வந்தனர்.  பெண் மகவு.

வெளியே கொண்டு வந்து யார் கையில் கொடுப்பது என்று அந்த சிஸ்டர் பார்க்க. “அம்மா வாங்குங்க”, என்றான் நித்யாவை பார்த்து பார்த்திபன்.

இந்த நான்கு மணிநேர அபியின் போராட்டம் பார்த்திபனை வெகுவாக அசைத்திருந்தது. தன் அன்னையும் தன்னை இப்படி தானே பெற்றிருப்பார். மீறி சிறிது நாட்கள் பாராமுகம் காட்டினார் என்றால் என்ன அவரின் கஷ்டமோ? என்று  எண்ண வைத்தது.

அவர் எப்படி இருந்தால் என்ன? நான் அவருடைய மகனாக இருந்துவிட்டு போகிறேன் என்ற முடிவை அவனையறியாமல் எடுக்க வைத்தது. அதன் தாக்கமே, “அம்மா வாங்குங்க”, என்ற வார்த்தையாக வந்தது.

நித்யாவிற்கு மளமளவென கண்களில் நீர் வடிய. எல்லாரும் குழந்தை பிறந்த சந்தோஷம் என்று நினைத்தனர்.

பார்த்திபன் குழந்தையை வாங்க சொல்லிஅந்த வார்த்தையை சொல்லிவிட்டாலும். குழந்தை பிறந்த சந்தோஷம் பரிபூரணமாக இல்லை. அபிராமியின் பயம் அவளுடைய பி.பியை அதிகப்படுத்தி இருக்க. மிகுந்த சிரமத்துக்கிடையில் அவளின் சர்ஜெரி முடித்து வெளியே கொண்டு வந்தனர்.        

அவளை வெளியே கொண்டு வந்த பிறகு தான் பார்த்திபனுக்கு குழந்தை பிறந்த சந்தோஷமே எட்டி பார்த்தது.

இந்த நான்கு மணிநேரம். அவன் வாழ்க்கை முழுவதும் அனுபவித்த போராட்டத்தை விட அதிகமாக உணர்ந்திருந்தான்.

அபிராமி  கண்விழித்தவுடனே குழந்தையை தேடியவள். அதனை பார்த்தவுடன் அதன் தந்தையை பார்த்து, “ரொம்ப பயப்படுத்திட்டேனா”.          

 “ரொம்ப சொல்ல முடியாத அளவுக்கு”, என்றவன்.

“இப்போ வலி எப்படி இருக்கு”,

“இப்போ வலி இருக்கு, ஆனா சர்ஜெரி வலி. தாங்க முடியும். அப்போ தான் ரொம்ப வலி”, என்றாள்.

“அதுக்காக இப்படி தான், நான் செத்து போறேன், என்னை கொன்னுடுங்கன்னு கத்துவியா, ரொம்பவும் பயமுறுத்திட்டேயே. இரு நம்ம குட்டிம்மா கொஞ்சம் பெருசாகட்டும். அவ கிட்டயே சொல்லி ரெண்டு போட சொல்றேன்”, என்றான்.

அதற்குள் சிஸ்டர் ஏதோ வாங்க சொல்ல. அவன் செல்ல. அருகில் வந்த நித்யா. “ரொம்ப தாங்க்ஸ் அபி”, என்றார்.

“எதுக்கத்தை குட்டிம்மா பொறந்ததுக்கா”,

“இல்லை என் பையன், எனக்கு புதுசா பொறந்திருக்கான். என்னை அம்மான்னு கூப்பிட்டான்”, என்றார் நெகிழ்ச்சியோடு.

“கன்க்ராட்ஸ் அத்தை. கெட்டியா புடிச்சிகங்க. விட்டுடாதீங்க”, என்று சொல்லி சிரித்தாள்.

ஏற்கனவே அபிராமியின் மேல் காதல் தான் பார்த்திபனுக்கு. அது இன்னும் பெருகியது.

நித்யாவிடம் அதிகம் பேசி பழகாவிட்டாலும் முன்பு போல பராமுகம் இல்லை.

“அம்மா”, என்றழைத்து ஓரிரண்டு வார்த்தை பேசுவான். அதுவே போதுமாக இருந்தது நித்யாவிற்கு.

குழந்தைக்கு தன் பாட்டியின் பெயராக, “ஜெயலக்ஷ்மி”, என்று பெயர் சூட்டின்னான்.

குழந்தைக்கு ஆறுமாதம் ஆனா பிறகு. ஒரு முறை டெல்லி போய் வந்தான். பாஸ்கருக்கு மிகுந்த சந்தோஷம். சுதாவுக்குமே. அங்கே இருந்த தன் தம்பியோடும் சுமுகமான ஒரு நட்பை ஏற்படுத்தி கொண்டான்.

திரும்ப வரும்போது அபிராமியிடம், “இது எதுவுமே நீ இல்லைனா நடந்திருக்குமா தெரியலை”,

“இல்லையே நம்ம நடக்களையே, பறக்கரோமே. அப்பா கிட்ட சொல்லுங்க குட்டிம்மா. நம்ம இப்போ விமானத்துல பறந்துட்டு இருக்கோம்னு”, என்று குழந்தையை இழுக்க.

“இது மொக்கை கடியா இருந்தாலும் பரவாயில்லை. அம்மா கிட்ட சொல்லுங்க குட்டிம்மா. நிஜம்மாவே அப்பா அபிராமியை கைபிடிச்ச நாள்ல இருந்து தரைல கால் படாம பறந்துட்டு தான் இருக்கேன்”, என்று காதலோடு அவள் கன்னத்தில் இதழ் பதிக்க.

“அச்சோ பப்ளிக்”, என்று அபிராமி சொல்ல. “அதனால தான் ஹனி கன்னம்”, என்று சொல்லி அவன் சிரிக்க. அவளுக்கும் சிரிப்பு பொங்கியது.

இப்படியாக அவர்கள் இல்லறம் நல்லறமாக இருந்தது. மென் மேலும் சிறந்தது.    

                              (போராடி வென்றோமே)   

Advertisement