Advertisement

அத்தியாயம் பதினைந்து:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தம் உங்களுக்கும் எனக்கும்

என்று தெரியும்

ஆனால் அது நீங்கள் தான் என்று தெரியாது

தெரியும் முன் வெற்றி பெறவேண்டும்

என்று நினைத்தேன்

தெரிந்த பிறகு தோற்றால் என்ன

தோன்றுகிறது !

 

மண்டபத்தில் நெருங்கிய உறவுகள் மட்டுமே இருந்தனர். பார்த்திபனை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தாள் அபிராமி. அவன் முகபாவனைகளில் இருந்து ஏதாவது கண்டு பிடிக்க முடிகிறதா என்று. எதுவும் தெரியவில்லை.

பாஸ்கர் மண்டபத்திற்குள் வந்தவுடனே சிறு சலசலப்பு. பாஸ்கர் அவர் தந்தையையும் தாயையும் பார்த்தவர் நேரே அவர்களிடம் சென்றார். வேணுகோபாலன், மற்றும் அபிராமியின் தாய் வழி தாத்தா அவரை சென்று வரவேற்றவர்கள்., சத்தியமூர்த்தியை தேடி அவரையும் சென்று பாஸ்கரை வரவேற்க்குமாறு செய்தார்.

சிறிது நேரம் அவரை விடாது பார்த்த பார்த்திபன், எப்படி இவர்கள் எல்லாரும் வந்தனர். இத்தனை வருடங்களாக வராத தந்தை எப்படி வந்தார். பின்பு அவனையறியாமல் திரும்பி அபிராமியை பார்த்தான்.   அவள் முகத்தில் ஒரு பதட்டம் இருந்தது. திட்டுவானோ என்று பார்த்தால் “நீயா?.” என்றான் ஒற்றை வார்தையாக.

“இல்லை. ஆமாம். அது. வந்து.”, என்று அபிராமி இழுக்க.

அவள் தான் என்று உணர்ந்தவன், “அதான் வந்துட்டாரில்லை”, என்றான்.

அவன் முகத்தில் என்ன இருந்தது என்று அபிராமி ஆராய, கோபமா? வருத்தமா?, ஆனந்தமா?.  அவளுக்கு ஒன்று புலப்படவில்லை.

ஏதோ ஒன்று அவன் தன்னை திட்டவில்லை, என்றவுடனே அமைதியாகி விட்டாள்.

“கல்யாணத்துக்கு முன்ன ஆசிர்வாதம் வாங்கின. கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கலையா”, என்றான்.

யாரிடம் என்று புரியாமல் அபிராமி பார்க்க. நித்யாவின் புறம் அவன் பார்வை சென்றது.

“நிஜமாவா சொல்றிங்க”, என்றாள் நிஜம் என்பது போல தலையை மட்டும் அசைத்தான்.

நேற்றிலிருந்து ராமகிருஷ்ணனும் ஜெயாம்மாவும். “நிறைஞ்ச சபையில உங்க அம்மாவை விட்டுக்குடுத்துடாதடா”, என்று வருந்தி கேட்டிருந்தனர். 

அதுவுமில்லாமல் அவனே கவனித்தான். நேற்று வந்த போது இருந்த மாதிரி நித்யா இல்லாததாகவே பட்டது. இவனுடைய தந்தை குடும்பம் திருச்சியில் இருந்து வந்த பிறகு அறவே ஒதுங்கி கொண்டார்.

இப்போது பாஸ்கர் வந்த பிறகு. அவர் தான் தந்தை என்று அவனுக்கே தெரிந்த பிறகு. நித்யாவின் புறம் பார்க்க. அவர் கிளம்ப காத்திருப்பது போலவே தோன்றியது. பிரகாஷ் அவரிடம் ஏதோ சமாதானம் சொல்வதாகவே அவனுக்கு பட்டது.  

அதனால் தான் ஆசிர்வாதாமாவது வாங்கி விடுவோம். அதுவாவது அவரை சகஜமாக்குகிறதா இல்லையென்றால் ஜெயாம்மா நிறைய வருத்தபடுவார் என்று நினைத்து அபிராமியின் புறம் கோடி காட்ட. 

அவன் மனம் மாறி விடுவானோ என்று க்ஷண நேரம் கூட தாமதியாது, “வாங்க”, என்றழைத்து சென்றவள். “ஆன்டி, அங்கிள் நில்லுங்க”, என்றாள். “ஷ்”, என்று உதட்டை கடித்தவள். “அத்தை மாமா நில்லுங்க”, என்றாள் நித்யாவிடமும் பிரகாஷிடமும்.

பக்கத்தில் பார்த்திபனை பார்த்த நித்யா. தன் தந்தையை பார்த்தவுடன் தன்னை திட்ட வந்திருக்கிறானோ என்று பயத்தோடு நித்யா. எழுவதா? வேண்டாமா? எல்லாரும் பார்ப்பார்களே என்ற ஆராய்ச்சியில் ஈடுபட. “எழுந்திருங்க அத்தை”, என்ற அபிராமி அவள் கைபிடித்து எழுப்பினாள்.

இதை தூரத்தில் இருந்து ராமகிருஷ்ணனும் ஜெயாமாவும் பார்த்துகொண்டு தான் இருந்தனர். என்னவோ தெரியவில்லை என்று ராமகிருஷ்ணன் பதட்டமாக அருகில் வர. அதற்குள் பிரகாஷையும் நித்யாவையும் நிற்க வைத்திருந்த அபிராமி அவர்கள் கால்களில் பார்த்திபனையும் தன்னோடு சேர்த்து விழுந்தாள்.

இதை எதிர்பார்க்கவில்லை நித்யாவும் பிரகாஷும். அவர் வாயிலிருந்து தன்னை அறியாமல், “தீர்காயுஷ்மான் பவ!, தீர்க்க சுமங்கலி பவ!”, என்ற வார்த்தை உதிர்ந்தது. எழுந்து நின்றவுடன் என்ன பேசுவது என்று தெரியவில்லை நால்வருக்கும்.

அபிராமி பேச்சை வளர்க்கும் பொருட்டு, “எப்படி இருக்கீங்க அத்தை”, என்றாள். கண்களில் நீர் தளும்பி இருந்தது நித்யாவிற்கு பேச முடியவில்லை. பிரகாஷ்தான். “சொல்லுங்க கல்யாண பொண்ணு, நீங்க எப்படி இருக்கீங்க”, என்றார்.

“நல்லா இருக்கேன் மாமா”, என்றவள். “ஏன் சரத்தையும் விஷ்வாவையும் கூப்பிட்டுட்டு வரலை”, என்றாள்.

சரத்தும் விஷ்வாவும் அவரின் மக்கள். “நீ கூப்பிடலைன்னு அவங்க வரலை”, என்றார் பிரகாஷ். இந்த பேச்செல்லாம் நடக்கும் போது அமைதியாக தான் இருந்தார்கள் அன்னையும் மகனும்.

“நிஜமாவா சொல்றிங்க அங்கிள்”, என்றாள்

“பின்னே பொய்யா சொல்றேன். அபி கிட்ட யாராவது பொய் சொல்ல முடியுமா. நீ சரத்துக்கும் விஷ்வாவுக்கும் எவ்வளவு ஃபிரன்ட். நீ கூப்பிடலயே”, என்றார் மறுபடியும்.

“அவங்க அண்ணா கல்யாணத்துக்கு யாராவது கூப்பிடனுமா என்ன? அவங்க தான் வந்து எல்லா வேலையும் பார்த்திருக்கணும். நான் இப்போ ஸ்பெஷல் இல்லையா. அண்ணின்னு அவங்க தான் வந்து பேசியிருக்கணும்”, என்றாள் சளைக்காமல் அபிராமியும். பார்த்திபனை அவர்கள் குடும்பத்தோடு இணைத்து.

“இப்போ நீ சொல்லு. ஈவினிங்குள்ள வரவைக்கிரேன்”.

பார்த்திபனை பார்த்தவள் அவனை பார்த்துக்கொண்டே. “வரவைங்கலேன் அங்கிள்” என்றாள்.

“வா! நீயே சொல்லு!”, என்று தனியாக பார்திபனையும் நித்யாவையும் விட்டு அபிராமியை சற்று தள்ளி அழைத்துக்கொண்டு போனார்.      

தனியாக இருப்பதால் ஏதாவது பேச ஆசை தூண்ட. அதே சமயம்  பேசும்  அவசியத்தையும் உணர்ந்த நித்யா., என்ன பேசுவது என்று தெரியாமல்.  “அபிராமி நல்ல பொண்ணு”, என்றாள்.

“ம்”, என்றான் நித்யாவை நேருக்கு நேராக பார்த்தபடி.

இன்னும் தெளிவாக்க விஷயங்கள் இருப்பதால், “எனக்கு உன்கிட்ட பேசணும் வீட்டுக்கு வரட்டுமா”, என்றார் நித்யா.

அந்த குரலில் தெரிந்த பயத்தோடு கூடிய தயக்கம் அவனியரியாமல் “வாங்க”, என்று சொல்லியது, அதோடு நிறுத்தாமல். “அது உங்க வீடும் தான்”, என்றான் ஜெயாமாவையும் ராமகிருஷ்ணனையும் கருத்தில் கொண்டு.  

அந்த சூழலில் அந்த வார்த்தை மிகவும் மனதைரியத்தை நித்யாவிற்கு கொடுத்தது. 

அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்பது போல என்று நித்யாவும் நிற்க பார்த்திபனும் நின்றான். 

இப்படியே இரண்டு மூன்று நிமிடங்கள் கரைய. தூரத்திலிருந்து இருவரும் பேசிக்கொள்ளாமல் நிற்பதை பார்த்த அபிராமி பக்கத்தில் வந்தாள்.

“நான் சொல்லிட்டேன் நாளைக்கு காலையில இங்க இருப்பாங்க சரத்தும் விஷ்வாவும் ஆன்டி.”, என்றவள் நாக்கை கடித்து மறுபடியும். “இல்லை அத்தை”, என்றாள். அவள் சொன்ன பாவனை எல்லோர் முகத்திலும் புன்னகையை வரவைத்தது.

அதற்குள் பார்த்திபன் ஃபிரண்ட்ஸ் இருவர் அவனை விஷ் செய்ய வர. அவர்களோடு பேசியபடி நகர்ந்தான்.

நித்யா அபிராமியை பார்த்து. “தேங்க்ஸ்”, என்றார்.

“எதுக்கு அத்தை, நான் சொல்லலை. அவங்களா தான் ஆசிர்வாதம் வாங்க வந்தாங்க”, என்றாள்.

ஒன்றும் பேசாமல் அவளை அணைத்து  நெற்றியில் முத்தமிட்ட நித்யா. அவளை பார்த்து கண்ணீர் மல்க சிரித்தார். “இது நீ என் பையன் வாழ்க்கையில் வந்ததற்கு”, என்றபடி.

“உங்க பையன்னு எனக்கு தெரியாதே அத்தை. தெரிஞ்சிருந்தா இன்னும் முன்னாடியே எப்படியும் அவங்க கூட ஃபிரன்ட் ஆயிருப்பேன். நிறைய நாள் உங்களால தான் நான் மிஸ் பண்ணிட்டேன்” என்றாள்.

இதை கேட்டு இன்னும் சந்தோஷத்தில் அதிகமாக சிரிப்பும் வந்தது. அழுகையும் வந்தது.      

இதை பார்த்த பிரகாஷ், “ஹப்பா! மறுபடியும் கண்ல இருந்து தண்ணிய தொறந்து விட்டுடியா”, என்று சூழ்நிலையை லகுவாக்கினார்.

அதற்குள் அபிராமியை அவர் அம்மா வந்து அழைத்துக்கொண்டு போனார். அவள் அத்தை கூப்பிட்டதால் அங்கே அழைத்து சென்றார்.

அங்கே பாஸ்கரன் இருக்க. அங்கே அவருக்கு அபிராமியை அறிமுகப்படுத்தினர்.

“என்ன படிக்கிறாய் அபிராமி”, என்று அவர் சகஜமாக பேச ஆரம்பித்தவர். பேசிய சில நிமிடங்களில் மிக நன்றாக பேசக்கூடியவர் என்பது அபிராமிக்கு புரிந்தது.

அதற்குள் வேணுகோபாலன் போய் பார்த்திபனையும் அழைத்து வந்திருந்தார். அவன் வந்தவுடன் இருவரும் பாஸ்கரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். 

இவ்வளவு நேரமாக சலசலவென்று பேசிய பாஸ்கர் இப்பொழுது மகனை பார்த்ததுமே மௌனியானார்.

அவர்கள் கால்களில் பணிந்து எழுந்தவுடன் அபிராமியின் முன் ஒரு நகைபெட்டியை கொடுத்தார்.

வாங்குவதா? வேண்டாமா? என்று அபிராமி பார்த்திபனை பார்க்க. அங்கே மற்றொரு ஒரு க்ஷண நேர பார்வை பரிமாற்றம் நடந்தது. பார்த்திபன் அவன் அம்மாவை பார்க்க. நித்யா, “சரி”, என்பது போல சின்ன  தலையசைவு. இது வெகு இயல்பாக நடந்தது.

அப்பா அவன் அறியத் தேவையில்லை என்று இதுநாள் வரை வைத்திருந்த அம்மா. அந்த அம்மாவை கேட்காமல் வாங்குவது சரியல்ல என்று அவனுக்கு அந்த கணத்தில் தோன்றவே நித்யாவை பார்த்தான்.

பார்த்திபன் அபிராமியை, “வாங்கு”, என்பது போல பார்க்க. அதை அபிராமி கைகளில் வாங்கினாள். அந்த பார்வை பரிமாற்றத்தை  பார்த்திபனை பார்த்துகொண்டிருந்த அபிராமியும் உணர்ந்தாள், பாஸ்கரனும் உணர்ந்தார்.

“அவ்ளோ தூரம் வந்தாச்சா அதுக்குள்ள”, என்று அபிராமி நினைக்க. “அம்மாவும் மகனும் ரொம்பவும் க்ளோஸ் போல”, என்று பாஸ்கரன்  நினைத்தார்.

“ஹப்பாடா! அந்த மட்டிலும் நித்யா வாங்க சொல்கிறாளே,  நாம் இன்னும் முன்னேயே பார்த்திபனை பார்க்க முயற்சி எடுத்திருக்க வேண்டுமோ”, என்று பாஸ்கரனுக்கு தோன்றியது. அவருக்கு எங்கே தெரியும் இன்று தான் அம்மாவும் மகனும்  பேசவே முயற்சி செய்திருக்கிறார்கள் என்று.

“நான் இன்னும் ரெண்டு நாள் சென்னைல தான் இருப்பேன். நம்ம ஒரு நாள் பார்க்கலாமா”, என்றார் பாஸ்கர் பார்த்திபனை பார்த்து. “சரி”, என்பது போல தலையசைத்தான் பார்த்திபன்.

அதற்குள் மற்ற நிகழ்வுகளுக்கு நேரமாக. பெற்றோரை பார்க்கும் படலம் பார்த்திபனுக்கு முடிவுக்கு வந்தது.     

“ஹப்பா!”, என்று அவனையறியாமல் பெருமூச்சு வந்தது. அவனின் செய்கைகளை தான் அபிராமி பார்த்துக்கொண்டே இருக்கிறாளே. இவன் எதற்கு பெருமூச்சு விடுகிறான் என்பது போல பார்க்க. அதை உணர்ந்த பார்த்திபன்.

“இன்னும் எவ்வளவு நேரம் என்னை பார்ப்ப. அங்க பார் எத்தனை பேர் இருக்காங்க. அவங்களை பார். கல்யாணத்துக்கு யார் வந்தா வரலை? எதுவும் உனக்கு தெரியாது”, என்றான்.

“ஒஹ்! இவன் நம்மை கவனிக்கிறானா”, என்று நினைத்த அபிராமி. “நீங்க என்னை பார்க்காதீங்க, அப்போ நான் உங்களை பார்க்கறது தெரியாது”, என்றாள்.

“இவகிட்ட பேச முடியாது போல இருக்கே”, என்று நினைத்த பார்த்திபன். “பார்காமயே தெரியுது”, என்று சொல்ல வாயேடுத்தவன் அதற்கும் ஏதாவது பேசி வைப்பாள் என்றுணர்ந்து அமைதியாகி விட்டான்.

ஏதோ சொல்ல வந்ததையும். பிறகு நிறுத்தியதையும் பார்த்த அபிராமி. அதை கேட்க விழைய. அதற்குள் மதிய உணவிற்கு எல்லாரும் செல்ல. அப்புறம் கேட்கலாம் என்று விடுத்தாள்.

ஒரு வழியாக மண்டபத்தை காலி செய்து மணப்பெண்ணும் மணமகனும் மணமகன் வீடு போக. நித்யாவும் பிரகாஷும் பலவருடங்களுக்கு பிறகு அங்கே வந்தனர்.

பாஸ்கர் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல். நாளை சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு வருவதாக கூறி சென்றார்.

மணமக்கள் வீட்டுக்கு வந்தவுடனே. பாலும் பழமும் கொடுத்து. சிறிது ரெஸ்ட் எடுத்து கோவிலுக்கு போகவேண்டும் என்று சொல்ல பட.

ஜெயாம்மா பார்த்திபனின் ரூமை காட்டி. “கொஞ்ச நேரம் தூங்கும்மா”, என்றார்.

உள்ளே போய் படுத்தவள் தான். ரூம் எப்படி இருக்கிறது என்று கூட பார்க்கவில்லை உறங்கிவிட்டாள். பார்த்திபனை. அவன் தாயையும் தந்தையையும் பார்க்க வைத்துவிட்டாள். பேச வைத்துவிட்டாள். திருமணத்திற்கு வரவைத்துவிட்டாள். என்ற நிம்மதி இருக்க, நன்றாக உறக்கம் வர, உறங்கி விட்டாள்.

சற்று பொறுத்து பார்த்திபன் வந்து பார்த்தால் நல்ல உறக்கம். புடவையை கூட மாற்றவில்லை. மண்டபத்திலிருந்து என்ன சேலையில் வந்தாளோ அதிலேயே உறங்கி இருந்தாள்.  

 பார்த்திபனுக்கு உறக்கம் எப்போதும் சற்று குறைவு தான். இதில் புதிதாக அபிராமி வேறு அறைக்குள் இருக்கவும் கட்டிலில் படுக்காது ஒரு சேரை எடுத்துபோட்டு அமர்ந்தவன், கட்டிலில் கால் மட்டும் வைத்து சாய்ந்த வாக்கில் அமர்ந்து கொண்டான்.   

அவனுக்கு அசை போட நிறைய விஷயங்கள் இருந்தன. உறங்கும் அபிராமியையே பார்த்திருந்தான். எவ்வளவு பிடிவாதம் இவளுக்கு என்ன இருக்கிறது என்னிடம் இந்த பிடிவாதம்.

நிச்சயம் நடக்கபோன திருமணத்தை தடுத்து. தன் வீட்டில் போராடி தன்னையே திருமணம் செய்து. தன் தாயோடு தன்னை பேச வைத்து. தந்தையை திருமணத்திற்கு வரவழைத்து. அவரையும் எனக்கு காட்டி. எத்தனை வேலை. யோசித்தே உறங்கி விட்டான். 

ஜெயம்மா, “பார்த்திபா”, என்று கூப்பிடும் குரல் கேட்டு தான் பார்த்திபன் விழித்தான். ஆனால் அதற்கும் அபிராமி எழவில்லை.

“என்ன ஜெயாம்மா”, என்று சென்று கேட்க.

“கோயிலுக்கு போகணும் ரெடியாகனும் என்ன பண்றா அபிராமி”, என்க.

“தூங்கறா ஜெயாம்மா”, என்றான்.

“எழுப்புப்பா, ரொம்ப நேரம் தூங்கினா யாராவது ஏதாவது சொல்லுவாங்க. பத்து நிமிஷத்துல ரெடியாகனும்”, என்று சென்றார்.

சென்றவன். “அபிராமி”, என்று அழைத்தான். இரண்டு மூன்று முறை அழைத்தும் அசைவில்லை. இதற்கு மேல் அழைத்தாள் அது கத்தியது போல தான் என்று எண்ணியவன்.

அவளை தொட்டு தான் எழுப்பவேண்டும் வேறு வழியில்லை என்று எண்ணியவன், மெதுவாக அவளை தோள் தொட்டு அசைக்க. “ம்! இன்னும் ரெண்டு நிமிஷம்”, என்று கண்திறவாமலேயே கூறிவிட்டு அந்தபுறம் திரும்பி உறங்கினாள்.

இதனால் தான் தினமும் அவளும் அவள் அன்னையும் சத்தம் போல என்று நினைத்தவனுக்கு அவனையறியாமல் சிரிப்பு வந்தது. மெதுவாக சிரித்து விட்டான். அத்தனை முறை கூப்பிட்டும் விழிக்காத அபிராமி. சிரிப்பு சத்தத்திற்கு கண்விழித்து யாரோ வந்துவிட்டார்களா என்று  பார்க்க.

யாருமில்லை. “யார்கிட்ட சிரிச்சீங்க”, என்றாள்.

“உன்னை பார்த்துதான். எவ்வளவு நேரம் எழுப்பறது. எழுந்திரு, ஜெயாம்மா கூப்பிட்டாங்க”, என்று சொல்லி வெளியே வர. அங்கே இரண்டு இளைஞர்கள்  அமர்ந்திருந்தனர்.

பக்கத்தில் நித்யாவும் பிரகாஷும் இருந்தனர். ஜெயாம்மாவும் ராமகிருஷ்ணனும் கூட இருந்தனர். இவன் வெளியே வந்தவுடன் என்ன சொல்வானோ என்று எல்லாரும் அவன் முகத்தையே பார்க்க. அதுவே சொன்னது அவர்கள் நித்யா, பிரகாஷின் மக்கள் என்று.

இவனை பார்த்ததும் இருவரும் தயக்கமேயில்லாமல் புன்னகைத்து, “ஹாய் அண்ணா, ஹலோ அண்ணா”, வந்தது.

அப்போது தான் அபிராமி வெளியே வர. இவர்களை பார்த்து வியந்தவள். “அதற்குள்ள வந்துடீங்களா எப்படி?”, என்று கேட்டபடியே வந்தாள்.

“ம்! உன் பேரை சொல்லலாம்னு பார்த்தோம். ஆனா ஃப்ளைட் எங்களை ஏற்றலைன்னா.”, என்றான் கிண்டலாக சரத். 

“நாங்க ஒண்ணும் உன்னை பார்க்க வரலை. அண்ணாவை பார்க்க வந்தோம். நீ தான் எங்களை கூப்பிடவேயில்லையே”, என்றான் விஷ்வா.

“நீங்க என்ன வேறேயா கூப்பிட. நீங்களே வந்திருக்கணும்”, என்று சரிக்கு சரி வாயாடினாள்.

ஜெயாம்மா. “அபிம்மா கல்யாண பொண்ணு நீ! மெதுவா பேசு!”, என்றார் செல்லம்மாக.             

  “சரி பாட்டி! நான் பேசக்கூடாது, இவங்க பேசலாம் இல்லை”, என்று பார்த்திபனை காட்டியவள். “மீட் மை எனிமீஸ். சரத் அண்ட் விஷ்வா அண்ணா”, என்றவள். “நோ! நோ! அண்ணா கட். இனிமே நான் தான் பெரியவ அண்ணி”, என்றாள்.

பார்த்திபன் இவர்கள் உரையாடலை பார்த்திருந்தவன். “எனிமீஸ்”, என்று அறிமுகபடுதியவளை. “என்ன இது?”, என்பது போல பார்க்க.

“அவங்க ரெண்டு பேரும் எங்கம்மாவைவிட ரூல்ஸ் ஆ. போடுவாங்க”, என்றாள் மெதுவாக ஜெயாம்மா திட்டியதாள்.

“அவ எப்பவுமே அப்படிதான் அண்ணா சாட்டர் பாக்ஸ்”, என்றான் விஷ்வா, பார்த்திபனை பார்த்து ஸ்நேஹமாய் புன்னகைத்தபடி.

நித்யா அதட்டினார். “இப்போ அபிராமி உன் அண்ணி! அவ சொல்லகூடாது! அவங்க சொல்லு”, என்று  விஷ்வாவை அதட்டினார்.

“இன்னும் நீங்க எங்களை திட்டு வாங்க வைக்கிறது விடலை”, என்றான் சரத் அபிராமியை பார்த்து. இவர்கள் பேச்சில் இருந்தே இவர்கள் நல்ல நண்பர்கள் என்று பார்த்திபனுக்கு புரிந்தது.

“நீங்க திட்டாதீங்க ஆன்டி. இல்லையில்லை அத்தை. அதெல்லாம் நானே பார்த்துக்கறேன்”,  என்றாள் மறுபடியும்.

சரத்தும் விஷ்வாவும் அவளுடன் சகஜமாக பேசி நடுவில். “அண்ணா அபி அப்படி! அபி இப்படி!”, என்று பார்த்திபனையும் பேச்சில் இழுத்தனர்.

இதெல்லாம் பார்த்திபனுக்கு மிகவும் புதிது. முகம் மாறாமல் காக்க மிகவும் சிரமப்பட்டான். ஆனால் நெடு  நாட்கள் அறிந்தவர்கள் போல சரத்தும் விஷ்வாவும் பேசினர்.

அவன் மனதில் அதை ஆச்சர்யமாக ஏற்றுகொண்டிருக்கும் போதே. அபிராமியின் வீட்டில் இருந்து ஆட்களும். அவர்களோடு சீரும். வர சத்தியமூர்த்தியும் கலாவதியையும் தங்கள் பெண்ணுக்கு நிறைய செய்திருந்தனர்.

அதற்குள் அபிராமியின் சித்தி அவளை வேகமாக தயார் செய்து கோவிலுக்கு கிளப்பிவிட. அவர்களோடு அபியின் சித்தியும் சித்தப்பாவும் வர பேச சந்தர்ப்பம் அமையாது அபிராமியும் பார்த்திபனும் அமைதியாகவே வந்தனர்.   

கடவுள் சந்தினாத்தில் அன்றும் பார்த்திபன். “நான் உன்னை நம்புகிறேன். கடவுளே என்னை கைவிடாதே”, என்று வணங்கினான்.

எல்லா சீர்வரிசையையும் வைத்தபிறகு கலாவதி அபிராமிக்கு ஒரு நீண்ட அறிவுரை வழங்கினார். “இப்படி நடந்துக்கோ! அப்படி நடந்துக்கோ! இதை செய்! அதை செய்யாதே!”, என்று.

அறிவுரையை கேட்ட அபிராமிக்கு தலை சுற்றியது.                

இரவு நல்க. மணமக்கள் பலருக்கு எதிர்ப்பார்ப்பை கொடுக்கும். சிலருக்கு பயத்தை கொடுக்கும். சிலருக்கு பதட்டத்தை கொடுக்கும். என வரும் திருமண இரவு நம் மக்கள் இருவருக்கும் எதையும் கொடுத்ததாக தெரியவில்லை.

உள்ளே மறுபடியும் அன்னை. “பார்த்து நடந்துக்கோ அபிராமி”, என்று அத்தனை அறிவுரைகள் சொல்லி அனுப்ப. ரூமிற்கு உள்ளே வந்தாள் போதும் என்று ஆனது. 

ரூமிற்கு உள்ளே வந்தாள். பார்த்திபன் இனி எப்படி அவளிடம் நடப்பது என்ற ஆராய்ச்சியில் இருக்க. திருமணம் வரை தான் என் வேலை, இனி நான் வேண்டுமென்றால் நீதான் வரவேண்டும் என்ற முடிவோடு இருந்த அபிராமி. “இதை கொடுக்க சொன்னாங்க” என்று பாலை அவனிடம் கொடுத்தாள்.

“வேற என்ன சொன்னாங்க?”, என்று பார்த்திபன் வேண்டுமென்றே கேட்க. “ம்! தூங்க சொன்னாங்க”, என்ற நக்கலாக சொன்ன  அபிராமி. சொல்லியபடி செயலிலும் காட்ட. கட்டிலில் ஒருபுறமாக ஏறி படுத்து தூங்க முயற்சித்து கண்களையும் மூடிகொண்டாள்.

என்ன செய்வது?, என்ன பேசுவது?, என்றறியாத பார்த்திபன். பெற்றோரை, தம்பிகளை, பார்த்த மனஅசதி இருக்க. என்னை ஏன் யாரும் வைத்துக்கொள்ளவில்லை என்ற யோசனை ஓங்க. அவனும் ஒன்றும் பிறகு பேசாது மறுபுறம் படுத்து உறங்க ஆரம்பித்தான்.    

Advertisement