Advertisement

அத்தியாயம் பதினான்கு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

நான் உன் மீது கொண்ட 

காதலினால் வந்தது.

உன்னோடு இருந்தபோது

அறிந்தேன்  நான்.

என் காதலுக்கு தண்டிக்க தான் தெரியும்

என்னை.!

மன்னிக்க தெரியாது

உன்னை.!

உன்னை பிரிந்த பிறகு.

இதையும் அறிந்தேன்.

யாரும் எதிர்ப்பார்க்காமல் தவறாகி போன அந்த தவறு சுதா.

பாஸ்கரனின்  வாழ்க்கையில் திருமணதிற்க்கும் முன் இனிய தென்றலாக இருந்தவள். மூன்று நான்கு வருட பழக்கம். இருந்தாலும்…………….,. வேறு வேறு பிரிவு. அதனால் அவர்கள் காதல் சுதாவின் வீட்டில் ஒத்துக்கொள்ளப்படவில்லை. இங்கே பாஸ்கரனின் வீட்டிலும் ஒத்துக்கொள்ளவில்லை, காரணம் சுதா வீட்டினரின் நிதி நிலைமை. ஏழை என்றும் சொல்ல முடியாது, வறுமையில் இருந்தனர்.

பாஸ்கரின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரியின் பெண் சுதா. பன்னிரெண்டாவது படித்திருந்தாள். அவள் அம்மாவுடன் எப்போதாவது வீட்டிற்கு வரும் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

அந்தஸ்து பேதம் பொருட்டு சுதா ஒதுங்கியே தான் இருந்தாள். ஆனால் விடாமல் துரத்தி அவளுக்கு நம்பிக்கை அளித்து. பிறகே அவர்கள் தொடர்பு காதல் என்றானது.

இது தெரிய வந்தவுடனேயே சுதாவின் தாய் அழுது ஆர்பாட்டம் செய்து இறந்துவிடுவேன் என்று கூறி., சுதாவை அவசர அவசரமாக வேலையின் பொருட்டு சென்னையில் இருந்த பாஸ்கரனுக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க.

அவன் குடித்து குடித்து ஏற்கனவே குடல் வெந்து இருந்தவன். அவன் திருமணமான ஆரே மாதத்தில் இறந்துவிட்டான். அந்த ஆறுமாதமும் நரக வேதனை சுதாவுக்கு. தினமும் அடி உதை மனதளவில் மிகவும் தளர்ந்து இருந்தாள் சுதா.

அவளுக்கு திருமணமானது தெரிந்த பிறகு வீட்டினரின் கட்டாயத்தின் பேரில் திருமணத்திற்கு சம்மதித்தான் பாஸ்கர். 

இதற்கிடையில் சுதாவின் கணவன் இறந்துவிட்டான் என்று தெரிந்த பிறகு, அவளை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து அவளின் பெற்றோரை அணுக அவர்கள் மறுத்துவிட்டனர்.

சும்மாவே அந்தஸ்து பேதம் அவர்கள் ஒத்துகொள்ள மாட்டார்கள். இப்போது அவள் விதவை கூட என்று மறுத்துவிட்டார்கள்.  

பின்பு சுதாவிடம். “வந்துவிடு சுதா”, என்று எவ்வளவோ சொல்லியும் அவளுக்கு தைரியம் வரவில்லை. அதற்குள் நித்யாவை பார்த்து வீட்டில் திருமணம் நிச்சயத்துவிட்டனர். வேறு வழியில்லாமல் நித்யாவோடான திருமணத்திற்கு தயாரானார் பாஸ்கர்.

 அங்கே சுதாவை மறுபடியும் யாருக்கோ ஒரு வயதானவனுக்கு, அவன் பையனுக்கே திருமணமாகி குழந்தைகள் இருந்த ஒருவனுக்கு  இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய முற்பட. அவர் பெற்றோரை விட்டு பாஸ்கரனை தேடி வந்த போது காலம் கடந்திருந்தது. அவரின் திருமணம் நடைபெற்று இரண்டு நாட்களே ஆகியிருந்தது.

திரும்ப சுதாவிற்கு போக இடமும் கிடையாது. பாஸ்கரன் சுதாவிர்க்கு உதவ நினைத்து. அதனால் அவர் இருக்கும் ஊரிலேயே  சுதாவை குடி வைத்தார். அவரை அந்த நிலையில் பார்த்த பாஸ்கரன் ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைத்தார். பனிரெண்டாவது படித்த சுதாவிர்க்கு என்ன வேலை கிடைக்கும். அவருக்கு என்ன செய்யலாம் என்று  பாஸ்கர் நினைத்தார் தான்.

ஆனால் நித்யாவிற்கு மறந்தும் கூட துரோகம் நினைக்கவில்லை.  எல்லாவகையான உதவிகளும் சுதாவுக்கு அவர் தான் செய்தார். சுதாவும் அவர் வாழ்க்கையில் வரவேண்டும் என்று நினைக்கவில்லை. 

ஆனால் அவரால் சுதா இப்படி இருக்கும் போது நித்யாவிடம் நெருங்க முடியவில்லை. சகஜமாக இருக்க முடியவில்லை. ஏதோ ஒன்று ஒரு விரிசல் இருவருக்குள்ளும் வந்துவிட்டது. சகஜமாக சிரித்து சகஜமாக இருக்க முடியவில்லை.

நித்யா அவர் புறம் இருந்து எவ்வளவோ முயன்றார். புதிதாக திருமணமானவர். வேலையின் பொருட்டு தனிக்குடித்தனம் வேறு. யாரிடம் பேசுவார். காலையில் அலுவலகத்திற்கு போனால் இரவு எட்டு மணியளவில் தான் வீடு திரும்புவார்.

இப்படியே தான் நாட்கள் ஓடின.      அவர் பாஸ்கரனை இஷ்டப்பட்டு தான் திருமணம் செய்தார். சத்யமூர்த்தி அவரை பற்றி நல்லவர் என்ற பிறகு அவர் பாஸ்கரை திருமணம் செய்தார்.

காலம் காலமாக நம் பெண்கள் ஒரு மஞ்சள் கயிற்றில் விழுந்து விடும் மாயம் நித்யாவுக்குள்ளும் நடந்தது. திருமணமான அந்த இரண்டு நாட்கள் சுதா வரும் வரை ஒரு நெருக்கம் இருவருக்குள்ளும் வந்தது. அது மறுபடியும் செய்த மாயம். நித்யா பாஸ்கரை மிகவும் நேசித்தார். ஆனால் சுதா வந்த பிறகு ஒரு அன்னியோன்யம் இருவருக்குள்ளும் வரவில்லை.   

நித்யா அவர் முகம் பார்த்து நடக்கவே பிரியப்பட்டார். ஆனால் பாஸ்கர் அவர் முகம் பார்க்கவேயில்லையே. இதனிடையில் நித்யா கருத்தரித்தார்.

அவரின் சிந்தனை முழுவதும் பாஸ்கர் தான் இருந்தார். ஏன் இப்படி இருக்கிறார் என்ற யோசனைகள் தான் ஓடின ஒழிய. குழந்தை என்று ஒரு பெரிய சந்தோஷம் இல்லை.

இவர் ஏன் இப்படி பாராமுகமாக இருக்கிறார் என்று யாரிடமும் பகிர முடியவில்லை. இப்படி சுவரையே பார்த்துகொண்டு யாரிடமும் பேசாமல் இருந்தால் பைதியமாகிவிடுவோமோ என்ற எண்ணமே வர ஆரம்பித்தது.    

ஏன் என்னவாயிற்று என்று குழம்பிய நித்யா பாஸ்கரனிடம் இரண்டு மூன்று முறை கேட்கவும் செய்தார். பாஸ்கரும் தன்னால் முயன்ற அளவு நித்யாவிடம் நல்ல விதமாகவே நடந்தார். ஆனாலும் ஒரு அன்யோன்யம்  கணவன் மனைவிக்குள் மிஸ்ஸிங்.

சுதாவும் நிராதரவான நிலையில் இருந்ததால் சிறு சிறு தேவைக்கும் பாஸ்கரனையே நாடினார்.      

பாஸ்கரன் தன்னுடன் பணி உரிந்த ஒருவன் லஞ்சம் பெற்றதை கண்டிக்க அவன் இவரை எப்படி தண்டிப்பது என்று சமயம் பார்த்துக் காத்திருக்க.,

அவரை பின் தொடர்ந்தவன் தினமும் மாலை இவர் ஆபிஸ் முடிந்ததும் ஒரு வீட்டுக்கு சென்று பிறகே தன் வீட்டுக்கு போவதை அறிந்தவன்.

அதை நித்யாவிடம் சென்று போட்டு கொடுத்தான்.

நித்யா அவனிடம் அதை பற்றி மேலே துருவவில்லை, என் கணவர், எனக்கு தெரியும் யார் வீட்டுக்கு போகிறார் என்று. அவர்கள் எங்கள் குடும்ப தோழி என்று கூறி மேலே அந்த மாதிரி அவன் எங்கேயும் பேச ஊக்கமளிக்காமல் அவனை அனுப்பினாள்.  

நித்யாவிற்கு எதையும் மறைத்து மனதில் மருகும் பழக்கம் இல்லை.

பாஸ்கர் வந்தவுடனேயே, “யார் அது? யார் வீட்டுக்கு போயிட்டு வர்றீங்க? தினமும்”, என.

அதிர்ந்தான் பாஸ்கர். அந்த அதிர்ச்சியே இவன் தினமும் செல்வது உண்மை என காட்டி கொடுத்தது. “என் ஃபிரன்ட், ஆதரவில்லாம இருக்கா  போய் பார்த்துட்டு வர்றேன்”, என்றான்.

“தினமும் ஏன் போகணும் என்க.”,

“வேற யாரும் இல்லை நித்யா. அதனால தான்”, என்றான்.

“தினமும் போகறது சரியில்லை, யாரும் தப்பா பேச இடம் கொடுக்காதீங்க”, என்றதுடன் பேச்சை முடித்து கொண்டாள் அவள்.

சிறிய பையன் அல்லவே மிரட்டுவதற்கும் அட்வைஸ் செய்வதற்கும். அவனாக மாறினாலன்றி மாற்றம் வராது என்றே உணர்ந்தாள்.

அதே சமயம் தூய நட்பை மதிப்பவள் நித்யா. அவளும் சத்தியமூர்த்தியும் நல்ல நண்பர்கள் தானே. நட்பை அவள் என்றுமே கொச்சை படுத்தமாட்டாள். 

அவளுக்கு தெரியவில்லை. இவன் தான் எல்லா செலவுகளையும் செய்கிறான் என்று.

இதற்கிடையில் மசக்கை வேறு அவளுக்கு படுத்தி எடுத்தது. மூன்று மாதத்திற்கு மேல் ஆகியும் தலைசுற்றல் வாந்தி என்று எதுவும் நிற்கவில்லை. வந்து கொண்டே இருந்தது.

எது சாப்பிட்டாலும் அடுத்த நிமிடம் வந்துவிடும். ஜெயாம்மா ஒரு பத்து நாட்கள் வந்து இருந்து பார்த்துகொண்டார். அவர் முன்னிலையில் எதுவும் காட்ட முடியவில்லை.

அங்கே சுதாவும் தனியாக தான் இருந்தாள். பாஸ்கரன் வரும் அந்த ஒரு மணி நேரம் மட்டுமே அவளுக்கு பேச்சு துணை. அதை மட்டுமே சுதாவும் விரும்பினாள். வேறு போக்கிடம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

“ஏதாவது செய்யுங்கள்”, என்று பாஸ்கரிடம் சொன்னால் அவருக்கும் தெரியவில்லை.

இவர்கள் குழப்பத்தில் அவர் நித்யாவை அதிக அக்கறை காட்டி பார்த்துக்கொள்ள மறந்துபோனார்.

ஒரு நாள் சுதாவிற்கு காய்ச்சல் வந்து அது அதிகமாகி. அன்று அவர் சுதாவை பார்த்துக்கொள்ள ஆளிலாததால் ஹாஸ்பிடலில் இருக்க வேண்டி வந்துவிட்டது.

அதே நேரம் அன்று மிகவும் மசக்கை நித்யாவிற்கு, தொந்தரவு கொடுத்து விட்டது. எழ கூட முடியவில்லை. பாஸ்கர் தன்னால் அன்று வரமுடியாது என்று தொலைபேசியில் அழைத்து சொல்ல. நித்யா, “என்னடா வாழ்க்கை இது”, என்று மனதொடிந்து போய்விட்டார்.

தான் இவர்  மேல் வைத்த நம்பிக்கையும் காதலும் ஒன்றுமே இல்லையா. அவளுக்கு யாரும் இல்லை என்றாள் என்னை யாரை நம்பி திருமணம் செய்து கொடுத்தார்கள் இவரை நம்பி தானே.

“நான் யார்? அந்த பெண் என்னை விட முக்கியமா?” என மனதில் ஒரு குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.   

அன்றும் வரவில்லை. அடுத்த நாளும் லீவ் போட்டு பார்த்துக்கொண்டார். இது நித்யாவிற்கு தெரிய வர. அன்று ஆரம்பித்தது அவள் யுத்தம் அவள் மனதோடு. மற்றவரோடு.

பாஸ்கர் அன்று இரவும் நீண்ட நேரம் கழித்தே வந்தான். அதுவும் சுதா அவனிடம், “நான் சமாளித்து கொள்வேன். நீ போ. நேத்தே நித்யா தனியா இருந்தா”, என்று சொல்லி வேறு அனுப்பினாள். 

பாஸ்கர் வீட்டுக்கு வந்தவுடனே, “இது இன்னும் எத்தனை நாளைக்கு”, என்றாள் கோபமாக நித்யா.

அவள் சுதாவை தான்  குறிப்பிடுகிறாள் என்றுணர்ந்த பாஸ்கர். “தெரியலை”, என்றான் உண்மையாகவே.

“ஆனால் எனக்கு இப்போ தெரியணும். இனிமேலும் இதை நான் அனுமதிக்க முடியாது”, என்றாள்.

“அவளுக்கு ரொம்ப உடம்பு உடம்பு முடியலை, இல்லைன்னா இப்படி ஆகாது”,

“சரியான பிறகு, மறுபடியும் சரியில்லாம போனா என்ன பண்ணுவீங்க”,

“இல்லை! சுதா சமாளிச்சிக்குவா. ரொம்ப முடியலை. அதனால தான்”, என்றவன். இன்னொரு தவறையும் அப்போது செய்தான். “இப்போ கூட நீ தனியா இருப்பேன்னு, அவ தான் என்னை கட்டாயபடுத்தி போக சொன்னா”, என்றான்.

“ஒஹ்! அந்த பொண்ணு சொன்னா தான் நீங்க வீட்டுக்கு வருவீங்களா”, என்றாள்

“அப்படியில்லை நீ தப்பா பார்க்காதே”, என்றான்.

“இல்லை நான் எல்லாத்தையும் சரியா தான் பார்க்கிறேன். என்னால இனி ஒரு நிமிஷம் கூட இதை பொறுக்க முடியாது. நீங்க ஏதாவது பண்ணி அந்த பொண்ணை எங்கயாவது அனுப்புங்க”,

“எங்க அனுப்புவேன், எங்க போவா? அவளுக்கு வேற யாருமில்லை”,

“அவளுக்கு வேற யாருமில்லை, அப்படிங்கறதுக்காக என்னால உங்க செய்யலை அனுமதிக்க முடியாது”,

“நீ எங்களை சந்தேகப்படறியா”,

“சந்தேகம்ன்ற பேச்சே கிடையாது. என்னை பொருத்தவரைக்கு என் கணவரோட முதல் உரிமை எனக்கு தான்”,

“இப்போ யாரும் அது இல்லைன்னு சொல்லலை”,

“இது சொல்ற விஷயம் இல்லை. புரியவைக்கிற விஷயம். இது வரைக்கும் என்னை அந்த மாதிரி நீங்க உணர வைச்சதேயில்லை”.

“புரிஞ்சுக்கோ நித்யா”,

“உங்களுக்கு தான் புரியலை, நீங்க யாரு அவளுக்கு? அவளை பார்த்துக்க. நட்புன்னு சொல்லாதீங்க. ஆண் பெண் நட்புக்கு கட்டாயம் ஒரு அளவு கோல் இருக்கு. அதை தாண்டினா அது சரிவராது. நீங்க யார் அவளுக்கு? நண்பன் இப்படி தினமும் போய் பார்க்கறது ஆகாது. அப்பாவா. அம்மாவா. அண்ணனா. யார் நீங்க? இது  சரி வராது”,

“கொஞ்ச நாள் டைம் கொடு நித்யா”,

“கொஞ்ச நாள் நான் ஏன் டைம் கொடுக்கணும். என் வாழ்க்கையில் பொன்னான நிமிஷங்கள் எல்லாம் வீணாப்போகுது, இதை என்னால் ஜீரணிக்கவே முடியலை”,

“இந்த குழந்தை அது உண்டானதுல இருந்து நான் எவ்வளவு உடல் உபாதைகளை அனுபவிக்கரேன். இன்னைக்கு என்னை கவனிப்பீங்க நாளைக்கு என்னை கவனிப்பீங்க, எத்தனை நாள் காத்திருக்கிறது”.

“எனக்கு ஒரு வார்த்தை தான் வேணும்! அவளை விட முடியுமா? முடியாதா?”,

“இப்போதைக்கு விட முடியாது. கொஞ்சம் டைம் கொடு”,

“நான் இந்த மாதிரி ஏதாவது பண்ணினா உங்களால ஒதுக்க முடியுமா? அப்போ ஆண்கள் எதுவேணா செய்யலாமா, நிதியுரிமை இருந்தா, எது வேணா செய்வீங்களா?”,

“நான் இந்த மாதிரி தினமும் யாரையாவது போய் பார்த்தா ஒத்துபீங்களா? கற்புன்றது உடல் ரீதியானது மட்டுமல்ல. மன ரீதியானது கூட. நீங்க தப்பு செய்யறீங்கன்னு நான் சொல்லலை. ஆனா எந்த காலத்துலயும் என்னைவிட யாராவது உங்க கிட்ட அதிக உரிமை எடுத்துகிட்டா, அது எனக்கு முடியாது. என்னால இனிமே இங்க இருக்க முடியாது”.

“இப்படி ஏன் பேசற நித்யா? உன் வயிற்றில் வளர்ற குழந்தையை நினைக்க வேண்டாமா”,

“ஏன் அதுக்கென்ன? இந்த மாதிரி ஒரு அப்பா என் குழந்தைக்கு என்னைக்கும் தேவையில்லை”,

“சின்ன விஷயத்தை நீ பெருசாகுற நித்யா”,

“எது சின்ன விஷயம், ஒரு பொண்ணு உங்க வாழ்கையில இருக்கிறது, சின்ன விஷயமா? மறுபடியும் சொல்றேன். தொடர்புன்றது உடல் ரீதியானது அல்ல. மனரீதியானது. நான் ரொம்ப நேசிக்கிற ஒருத்தருக்கு என்னை விட வேற ஒருத்தர் முக்கியம்னா. அந்த ஒருத்தர் எனக்கு தேவையில்லை. என் குழந்தைக்கும் தேவையேயில்லை”. என்று கோபமாக சென்று ரூமிற்குள் சென்று விட.

பாஸ்கருக்கு மன அசதி, உடல் அசதி, ஏதோ ஒன்று அவர் உள்ளத்தினுள் நீ செய்வது சரியல்ல சொல்ல. என்ன செய்வது? என்று அறியாதவராக. பசி வேறு அதிகமாக இருக்க. அதே சமயம் சாப்பிடவும் மனமில்லாமல். ஹாலிலேயே உறங்கினான்.

காலையில் எழுந்து பார்க்கும்போது, நித்யா அவள் ஊருக்கு கிளம்பியிருந்தாள்.

ஒரு சிறு கடிதம் மட்டுமே இருந்தது. “நான் போகிறேன். நீங்களாக வந்தாலும் நான் வருவேனா? என்னை நான் அறியேன்?”, என்று தெளிவான தமிழில். தெளிவில்லாத கையெழுத்தில் இருந்தது.

இரவு முழுவதும் உறங்காமல் யோசித்து. பல நாள் அவளை குழப்பிய பிரச்சனைக்கு  சட்டென்று முடிவெடுத்து கிளம்பிவிட்டாள்.

பின்னே கணவன் வர. உரிமையிருந்தும், கடமையாக வரும் வாழ்கை தேவையில்லை என்றுவிட்டாள். அதே சமயம் காரணத்தையும் யாரிடமும் சொல்லவில்லை.

என்ன வென்று காரணம் சொல்லுவாள். உடல் ரீதியான தொடர்பில்லை. இது மன ரீதியான தொடர்பு. உலகத்தாருக்கு உடல் ரீதியான தொடர்பு தான் தவறாக தெரியும். மன ரீதியாக பார்க்க மாட்டார்கள்.

அவன் தவறு செய்யவில்லை. நாங்கள் அந்த பெண்ணை பிரிக்கிறோம் என்பார்கள். இத்தனை நாட்களில் பாஸ்கரை அறிந்த அவளுக்கு இது முடியும் என்று தோன்றவில்லை. 

வந்ததில் இருந்து பாஸ்கரின் ஞாபகம் தான் இருந்தது. அதிலிருந்து குழந்தை பிறக்கும் வரையும் அவளால் மீள முடியவில்லை. பிறந்த பிறகு அதை பார்க்க பார்க்க பாஸ்கரின் ஞாபகம் அதிகமாகியது.

பாஸ்கரின் ஜாடை குழந்தையினிடத்தில் அதிகம். அதனால் அதை பார்க்க அவ்வளவு இஷ்டமில்லை. அவன் மீதான வெறுப்பா? காதலா? நினைவா? ஏதோ ஒன்று  அதிகம் ஆகி. குழந்தையிடம் பாராமுகம் காட்ட வைத்தது. குழந்தையை பாஸ்கர் பார்க்க கூட அனுமதிக்கவில்லை.

பின்பு தந்தையும் சத்தியமூர்த்தியும் வற்புரித்தி கேட்டதால். சுதாவை பற்றி தெரிவித்தாள். சொல்லப்போனால் சுதாவை பற்றி ஒன்றும் தெரியவில்லை. இதை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றுவிட்டாள். எவ்வளவோ சொல்லியும் இதை வெளியே சொல்ல விடவேயில்லை.

“என் கணவர் என்னை விட்டு உடல் ரீதியாக கூட அல்ல. மன ரீதியாக இன்னொரு பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது எனக்கு கேவலம் சத்.” என்றுவிட்டாள் சத்தியமூர்த்தியிடம்.

யார் சமாதானமும் ஒத்துக்கொள்ளவில்லை. தனக்கு விவாகரத்து வாங்க சொல்லி தந்தையிடம் சொல்லிவிட்டாள். விவாகரத்திற்கு பாஸ்கர் சம்மதிக்கவேயில்லை. வருடங்கள் போராடி வாங்கினர்.

இந்த உளைச்சல்கிளைடையில் குழந்தை, நித்யாவிற்கு. பாஸ்கரை ஞாபகப்படுத்துவதாகவே இருந்ததால். நித்யா குழந்தையை  நெருங்கவில்லை. விவாகரத்து கிடைத்த பின்னர். எதிலும் பிடித்தம் என்பதே சற்றும் இல்லாமல் இருந்த நித்யாவை சத்தியமூர்த்தி வெகுவாக தேற்றினான்.

ஏனென்றால் பாஸ்கரை சரி என்று சொல்ல சொன்னது அவனல்லவா, அந்த சமயத்தில் பிரகாஷ் நித்யாவை மறுபடியும் திருமணம் செய்ய கேட்க. மிகவும் போராடி சம்மதிக்க வைத்தான்.

இன்னொரு திருமணம் அவள் ஏற்கவேயில்லை. பிரகாஷும் இவள் திருமணத்திற்கு சம்மதிக்கும் வரை அவன் வாழ்வில் திருமணம் என்பதே இல்லை என்று காத்திருக்க.

நித்யா திருமணத்திற்கு அங்கே பிரகாஷ் வீட்டில் இருந்த எதிர்ப்பு. குழந்தை கூட வரகூடாது என. சீக்கிரம் குழந்தையை அழைத்துக்கொள்ளலாம் என்று பிரகாஷ் திருமணம் செய்ய.

பிரகாஷின் அன்பு சிறிது சிறிதாக பாஸ்கரின் நினைவுகளின் பிடியில் நித்யாவை வெளி கொண்டுவந்தது.  பின்பு நித்யா குழந்தையை தேட. அவன் சிறிது வளர்ந்திருந்தான். அதற்குள் ஜெயாம்மாவுடன் பழகி இருந்த பார்த்திபன் நித்யாவுடன் போகவில்லை.

சிறுவனான பின் அறவே அவரை எதிர்த்து விலக்கினான். நித்யா பிரகாஷுடன் ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது வீட்டை விட்டு போய் விட்டான்.,தேடி கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு ஜெயாமாவிற்கும் ராமகிருஷ்ணனுக்கும் பார்த்திபன் உலகமாகி போனான்,

பார்த்திபன் தந்தை தாய் இல்லாமல் வளர. தாய் தந்தை இருந்தும் நித்யா அவர்களை அதன் பிறகு உறவாட முடியவில்லை. அதன் பிறகு பிறந்த இரு குழந்தையும் அவள் தாய் வீட்டு சீராடல் இல்லாமல் தான் பிறந்தது. பிரகாஷ் இல்லையென்றால் நித்யா என்னவாகியிருப்பால் என்றே தெரியாது.

அவள் பார்த்திபனை நினைத்து துவளும் சமயத்தில். அவளின் சக்தி அவரே ஆகிபோனார். அது தன் மற்ற குழந்தைகளிடம் காட்டி விடக்கூடாது என்பதில் இருவரும் ஜாக்ரதையாக இருந்தனர்.

நித்யா திருமணம் செய்த பிறகு சுதாவிற்காவது வாழ்க்கை கொடுப்போம் என்று பாஸ்கர் சுதாவை திருமணம் செய்தார். அவர் சற்றும் அறியார் பார்த்திபன் நித்யாவின் நிழல் கொண்டு வளரவில்லை என்பதை.

மூவருமே ஒருவகையில் பாதிக்க பட்டனர். பாஸ்கரன் தன் மகன், தன் அச்சாக பிறந்தவன். தன் நிழலில் வளர்க்க முடியாமல் போனார். நித்யாவையும் இழக்க விருப்பமில்லாமல் இழந்தார்.

நித்யா பாஸ்கரன் நினைவினை அதிகபடுத்தும் பார்த்திபனிடத்தில் ஆரம்பத்தில் பாராமுகம் காட்டின்னாலும். பிறகு அவர் முகம் காட்டும் போது பார்த்திபன் அவரை பார்க்க தயாராயில்லை.

“ஏன் விட்டனர் தந்தையும் தாயும் தன்னை”, என்ற கேள்வி பார்த்திபனிடத்தில் ஓடினாலும். அதை அவன் தன் தந்தையிடமோ தாயினிடமோ கேட்கும் உத்தேசம் சற்றும் இல்லை பார்த்திபனுக்கு.

இதன் சுவடுகள் தன் வாழ்க்கையில் எந்த நிகழ்வுகளிலும் வந்து பாதித்து விடாமல் தன் வாழ்கையை வளர்த்துக்கொண்டான்.

“எப்படி இருப்பார் தன் தந்தை”, என்ற நினைப்பே பார்த்திபனுக்கு இருந்தது. பார்த்துவிட்டான். அதனுடன் அவன் வேலை  முடிந்தது என்றது போல் அவன் மனநிலை ஆகிவிட்டது.

Advertisement