Advertisement

அத்தியாயம் ஏழு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

எனக்குள் நடக்கும் இந்த யுத்தம்

உன் ஒரு பார்வையில் வெளியே தெரிந்துவிடுகிறது

மறைத்தாலும் மறைவதில்லை

எனக்கு புரிந்தாலும் உனக்கு புரிவதில்லை

உனக்கு புரிய வைக்க முடியுமா

எனக்கு தெரியவில்லை?

அபி உள்ளே நுழைந்தவுடனே  பார்த்துவிட்டான் பார்த்திபன்.

“அந்த போனை எடுத்து அவ கிட்ட கொடுத்து அனுப்பு”, என்றான் செந்திலை பார்த்து.

அபி, செந்திலை விடுத்து அவனிடத்தில் வந்தவள். “நான் உங்களை பார்க்க தான் வந்தேன்”.

“இன்னும் உளர்றதுக்கு என்ன பாக்கி வச்சிருக்க”, என்றான், அவள் ஐ லவ் யூ சொல்லியதை மனதில் வைத்து.

“எதை உளறினேன்! நான் எதையும்.”, அவளால் கோபத்தில் பேசக்கூட முடியவில்லை. முகமெல்லாம் சிவந்து விட்டது. பெருமூச்சு எடுத்து ஆசுவாசபடுத்தி. “நான் எதையும் உளறலை, உணர்ந்து தான் சொன்னேன். இப்போ இங்க வந்தது, நேத்து இங்க பார்த்தனே ஒருத்தன், அவன் கிட்ட சொன்னதை சொல்ல தான் வந்தேன்”.

“யாரை பார்த்தே”,

“நேத்து இங்க ஒரு பொண்ணும். அவ கூட ஒருத்தனும் வந்தாங்க இல்லை”,

“அது அவங்க அண்ணன்”, என்றவன். “என்ன சொன்ன அவங்க கிட்ட?”,

“என் கிட்ட வந்து என் மாப்பிள்ளைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டான். அவன் உன் மாப்பிள்ளை இல்லை என் மாப்பிள்ளைன்னு சொன்னேன்” என்றாள் அனைத்தையும் கோபமாக சொன்னாள்.

“என்ன சொல்லி வெச்சிருக்க நீ. உனக்கு அறிவே கிடையாதா”, என்று அவன் பேசும் போதே உள்ளே ரேகாவின் அண்ணன் நுழைந்தான். நுழைந்தவன் அபிராமியை பார்த்தவன் இன்னும் டென்ஷன் ஆனான்.

“யார் மாப்பிள்ளை இந்த பொண்ணு. என்னெனவோ சொல்லுது”, என்றபடி கோபமாக  கேட்டான்.

அபிராமி சொல்லியதை கேட்டிருந்த பார்த்திபன். ரேகாவின் அண்ணனின் கோபம் நியாயம் என்பதாகவே உணர்ந்தான்

அவரை சமாதனப்படுத்தும் பொருட்டு. “விடுங்க, அவ ஏதோ உளர்றா”, என்றான்.

“என்ன மாப்பிள்ளை இப்படி பேசறீங்க, அந்த பொண்ணு என்னை பார்த்து நீங்க என் மாப்பிள்ளை இல்லை அவ மாப்பிள்ளைன்னு சொல்றா”, என்றார்.

“அது நிஜம் இல்லைங்க, ஏதோ தெரியாம வேணும்னு சொல்றா”,

“நிஜம் இல்லைன்னா, அந்த பொண்ணை சொல்ல சொல்லுங்க”, என்றான் ரேகாவின் அண்ணன்.

“அவளை எல்லாம் சொல்ல வைக்க முடியாது. என்னை பொருத்தவரை அது நிஜம் இல்லை”, என்றான் பார்த்திபன்.

“ஆனா, அந்த பொண்ணு தெளிவா சொல்லுதே”,

“அந்த பொண்ணு சொன்னா அவ வரைக்கும். எனக்கு தெரியாது! என்னை பொருத்தவரை ஒண்ணும் இல்லை!”, என்றான் மறுபடியும் பொறுமையாக.

ரேகாவின் அண்ணன் புரிந்து கொள்ளவேயில்லை.

“நீங்க பாருங்க, நான் உங்க முன்னாடியே கேட்கறேன்”, என்றவன்.

மறுபடியும், “ஏய் பொண்ணு”, என்றான்.

“ஏய்ன்னு சொல்லாதன்னு இப்போ தானே சொன்னேன். வீணா என்னை டேய் போட வச்சிடாத”, என்றாள் அபிராமி.

ஏற்கனவே அவள் சொன்ன, “ஐ லவ் யூவை உளறல்”, என்று பார்த்திபன் சொன்னதில் கோபத்தில் இருந்தாள்.

“நீ பேசறதுக்கு ஏய்ன்னு சொல்லாம வேற என்ன சொல்லுவாங்க, நாங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளையை என் மாப்பிள்ளைன்னு வெட்கமே இல்லாம சொல்ற.”, என்று ரேகாவின் அண்ணன் கோபப்பட.,

இந்த மாதிரியான வார்த்தைகளை கேட்டு பழக்கபட்டிராத அபி, “ஹலோ வார்த்தையை யோசிச்சு பேசு”, என்றவள் கண்களில் வெட்கமே இல்லாமல் என்ற வார்த்தையை கேட்டவுடனே கண்ணீர் தளும்ப ஆரம்பித்தது.

பேசியவனை விடுத்து பார்த்திபனை பார்த்து முறைத்தாள்.

பார்திபன் ரேகாவின் அண்ணனை பார்த்து. “நான் தான் ஒன்னுமில்லைன்னு சொல்றேனே, அதிகமா பேசாதீங்க”, என்றான்.

“யாரு? நான் அதிகமா பேசறனா! இந்த பொண்ணு வந்து கொஞ்சம் கூட கூச்சமேயில்லாம நாங்க நிச்சயம் பண்ணியிருக்கிற உங்களை என் மாப்பிள்ளைன்னு சொல்லுது. நல்ல குடும்பத்துல பொறந்திருந்தா இப்படி சொல்லும்மா”, என்று பேச.

அபியின் கோபம் எல்லை மீறியது, கண்ணீரும் கண்களில் இருந்து வேகமாக இறங்கியது. ஆனால் அவள் பேசுமுன்னே பார்த்திபன் பேசினான்.

“ரொம்ப பேசாதீங்கன்னு இப்போ தான் சொன்னேன். அந்த பொண்ணா உங்க கிட்ட வந்து என் மாப்பிள்ளைன்னு சொல்லிச்சா. இல்லையே நீங்க ஏன் போய் கேட்டீங்க. என்னை உளவு பார்க்க வந்தீங்களா? நான் இல்லைன்னு சொல்றேன்! நம்பாம மறுபடியும் மறுபடியும் கேட்டா? நான் என்ன சொல்ல முடியும்”,.

“நீங்க நல்ல குடும்பமா? முன்ன பின்ன தெரியாத பொண்ணை, இப்படி பேசறீங்க.”,

“இப்படியெல்லாம் பேசாதீங்க மாப்பிள்ளை. என் தங்கச்சிக்கு உங்களை பிடிச்சிருக்கு, இல்லைன்னா கல்யாணத்தை இப்போவே நிருத்திடுவேன்”, என்றான்.

“என்ன? என்னை பார்த்தா எல்லோருக்கும் எப்படி இருக்கு, ஆளாளுக்கு ப்ளாக் மெயில் பண்றீங்க. என்னை உளவு பார்த்ததில்லாம இந்த பேச்சு வேறையா! கல்யாணத்தை  நிறுத்தறதுன்னா நிருத்திக்கோ! இங்க யாரும் உன் தங்கச்சி தான் வேணும்னு அழலை”,

வார்த்தைகள் தடித்தன.  

அபி சொல்லிவிட்டாள் தான். இப்போது இருவரும் சண்டையிடுவதை பார்த்தால். தன்னால் பார்த்திபன் அவபெயருக்கு ஆளாவதை பார்த்து தன் மேலேயே கோபம் வந்தது. இன்னொரு பெண் வேறு சம்பந்தமில்லாமல் பேசப்படுகிறாள்.

நடுவில் என்ன பேசுவது? என்றும் தெரியவில்லை. இந்த சண்டையை நிறுத்தவேண்டும் என்றால் தனக்கும் பார்த்திபனுக்கும் ஒன்றுமில்லை என்று சொல்ல வேண்டும். அது முடியாது, செய்வதறியாது திகைத்தாள்.

செந்திலும் எதுவும் பேசமுடியாது பார்வையாளரானான், அதற்குள்  கஸ்டமர் வர.

“நீங்க உங்களுக்கும் இந்த பொண்ணுக்கும் எதுவும் இல்லைன்னு ப்ரூவ் பண்ணற வரைக்கும் கல்யாணம் நடக்காது”, என்றான் ரேகாவின் அண்ணன்.

“அதெல்லாம் முடியாது. உனக்கு என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ! என் வாயில் இருந்து இந்த கல்யாணம் நடக்காதுன்ற வார்த்தை வராது! அது நீங்க உங்க தங்கச்சிக்கு மறுபடியும் மாப்பிள்ளை பார்க்கும் போது தேவையில்லாத கேள்விகளை உருவாக்கும். அதனால நீயே இந்த கல்யாணத்தை நிறுத்திடு!”, என்றவன் கஸ்டமரை பார்க்க செல்ல. ரேகாவின் அண்ணன் கோபத்துடன் வெளியே சென்றான்

அந்த நிலையிலும் நிதானம் இழக்காமல் அந்த பெண்ணை நினைத்து பேசிய பார்த்திபனை பார்த்த அபிராமிக்கு. இன்னும் அவன் மேல் காதலோடு ஒரு மரியாதையும் வந்தது.  

அவன் வெளியே சென்றவுடனே அபிராமியிடம் வந்த பார்த்திபன். “உங்க அப்பா நம்பர் சொல்லு”, என்றான்.

“எதுக்கு?” என்று இந்த நிகழ்வின் தாக்கத்தால் சோர்வாக கேட்ட அபிராமியிடம்.

“சொல்லுன்னு சொன்னேன்” என்று அவன் போட்ட அதட்டல். எதற்கும் பயப்படாத அபிராமியையை தூக்கி போட்டது.

தன் அப்பா நம்பர் தந்தவள் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

சமீபமாக அவள் அழுததாக அவளுக்கு ஞாபகமில்லை. இந்த மாதிரி மரியாதையில்லாமல் பேசும் பேச்சுகளும் அவளுக்கு புதிது.  அவள் அன்னையும் தத்தையும் எதற்கும் அழவிட்டதில்லை. இவள் தான் வீட்டில் கத்திக்கொண்டும், கலாட்டா செய்து கொண்டும், இருப்பாள்.

அதுவும் அப்பா மிகவும் செல்லம். அம்மா தான் சற்று கண்டிப்பு. அதனால் தான் நிமிஷத்தில் எதை பற்றியும் யோசிக்காமல் அவளுடைய விளையாட்டு தனமான செய்கையில் பார்த்திபனிடம் தன் காதலை உரைத்தாள். 

இப்பொழுது அவசரப்பட்டு விட்டோமோ என்று தோன்றியது. அதே சமயம் நாள் எங்கே இருந்தது. அடுத்த வாரம் அவனுக்கு நிச்சயம். அதன் பிறகு இன்னும் கடினம் அல்லவா என்று தோன்றியது. பிறகு சொல்லியாகி விட்டது. இனி எது வந்தாலும் பார்த்துக்கொள்ள வேண்டியது தான். இது ஆரம்பம் தானே இன்னும் எத்தனை ஏச்சும் பேச்சும் கேட்கவேண்டி வருமோ.

அவள் வீட்டில் அவள் அப்பா மேல் அவளுக்கு நம்பிக்கையிருந்தது. தன்னை புரிந்து கொள்வார் என்று, ஆனால் தன்னுடைய தந்தையை எதிர்த்து ஏதாவது செய்வாரா தெரியாது. பார்த்து தானே ஆகவேண்டும் எதுவந்தாலும் என்று தன்னை தானே சமாதபடுத்தியவள்.      

அவளுக்கு தன் தந்தைக்கு தான் விஷயத்தை சொல்லும் நேரத்தை விட குறைவான நேரத்தில் தெரிந்துவிடும் என்பதால் அமைதியாகி விட்டாள். 

“அப்பா”, என்று சொன்னவுடன் முகத்தில் பயத்தை தேடிய பார்த்திபனுக்கு அது அபியின் முகத்தில் தென்படவில்லை அவனுடைய அதட்டலுக்கு ஒரு அதிர்வு தெரிந்தது அவ்வளவு தான்.

இதை பார்த்த பார்த்திபனுக்கு இன்னும் கோபம் அதிகமாகியது. அவனுக்கு அவளை பார்த்தால் ஒரு வளர்ந்த பெண் போல தோன்றவில்லை. இந்த இரண்டு நாட்களாக அவள் செய்கை எல்லாம் பார்த்தவனுக்கு அவள் ஒரு சிறு பெண் போலவே தோன்றினாள்.

கையில் குச்சி வைத்து குறும்பு செய்யும் மாணாக்கனை எப்படி வாத்தியார் பென்ச் மேல் நிற்க வைப்பாரோ அது போல் அவளை அமர வைத்து இருந்தான்.

வேறு எண்ணம் எதுவும் அவள் மேல் இல்லை. வேறு எண்ணத்தில் அவளை பார்க்க பிரியப்படவும் இல்லை. அதைவிட தோன்றவும் இல்லை.

சத்தியமூர்த்தி அதிக நேரம் செய்யாமல் கால் மணி நேரத்திலேயே வந்துவிட்டார். சென்னை ட்ராபிக்கில் எந்த சந்து பொந்து புகுந்து வந்தாரோ. அவருக்கு பார்த்திபன் சொன்னது, “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ என் ஷோ ரூம் வாங்க. உங்க பொண்ணு இங்க இருக்கா”, என்று போனை வைத்திருந்தான்.

உள்ளே வந்ததும் அவள் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்தவர். “என்ன அபிம்மா”, என்று அருகில் பதட்டத்தோடு வந்தார்.

“நல்லா தான் இருக்கா உங்க பொண்ணு”, என்றான் கடுமையான குரலில் பார்த்திபன்.

அந்த த்வனியில் பார்த்திபன் சத்தியமூர்த்தியிடம் பேசியதுமே அபிக்கு மறுபடியும் கோபம் பொங்க, “எங்க அப்பாகிட்ட இப்படி பேசவேண்டாம். உங்களுக்கு என்னோட பிரச்சனைன்னா என்கிட்ட பேசணும் அதை விட்டுட்டு எங்கப்பா கிட்ட இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது”, என்றாள் குரலில் கோபம் ஒலிக்க.     

அவளிடம் சற்றும் திரும்பாதவன், “உங்க மொத்த குடும்பமும் என் உயிரை எடுக்க போறீங்களா. உங்க பொண்ணு ஏதோ உளர்றா, கண்டிச்சு வைங்க இப்போ கூடிட்டுட்டு போங்க”, என்றான்.

“என்ன பண்ணி வச்சிருக்கா தெரியுமா உங்க பொண்ணு.”, என்று மூன்று நாட்களாக நடந்த அனைத்தையும் கூறியவன். “என் கிட்ட வாங்கினது உங்களுக்கு பத்தலையா”, என்றான். முன்பு நித்யா விஷயமாக சத்தியமூர்த்தி தன்னிடம் பேசியதை மனதில் வைத்து.

“நான் மறுபடியும் சொல்றேன் இந்த மாதிரி ஹார்ஷா எங்கப்பா கிட்ட பேசவேண்டாம்னு, அவர்கிட்டயே பேசினா என்ன அர்த்தம். நான் என்ன உங்களை பற்றி உங்க அப்பா கிட்டயா பேசினேன்”, என்றாள்.

அப்பா என்ற வார்த்தை மிகவும் பாதிக்கும் பார்த்திபனை. அவர் போட்டோ கூட பார்த்ததில்லை. நல்லவனோ கெட்டவனோ அவன் முகம் கூட பார்த்ததில்லை. அந்த வருத்தம் எப்போதும் உண்டு. இப்போதைக்கு அவன் அம்மாவை கூட அவன் தான் தள்ளி வைத்தான். ஆனால் அவன் அப்பா. என்ன மாதிரியானவன் என்று கூட அவனுக்கு தெரியாது. தான் மறக்க விரும்பும் மனிதர்களோடு தொடர்புடையவர்கள் இப்படி தன் முன் பேசவும் கண்மண் தெரியாத கோபம் பொங்க.     

பார்த்திபன் டென்ஷன் ஆகிவிட்டான், “உனக்கு நிஜமாவே அறிவு கிடையாது. வாய்க்கு வந்தது எல்லாம் பேசுவியா. எங்கப்பாவை நான் இன்னும் நேரில் பார்த்தது கூட இல்லை. என்னைவிட எங்கப்பாவை உங்கப்பாக்கு நல்லா தெரியும். போய் அவன்கிட்ட நீ. உங்க பையன்னு சொன்னா எந்த பையன்னு கேட்பான். போடி அடிச்சிற போறேன்.”, என்றவன் கடையை விட்டு அவன் வெளியே சென்று விட்டான்.

தலையும் புரியாமல் வாலும் புரியாமல், “என்ன அபிம்மா இதெல்லாம்?”, என்றார் சத்தியமூர்த்தி. 

“ப்ச்”, என்றவள். “நம்ம வேற எங்கையாவது போகலாம்பா”, என்றாள். சிறு கடை, ஒரு கஸ்டமர், வந்தவர் இவர்களை வேடிக்கை பார்க்க.

“என் வண்டி இங்க இருக்குதுப்பா”, என்றவளிடம் அவர் டூ வீலர்ரில் வந்திருந்ததால் அதை அங்கேயே நிறுத்தி, “அப்புறம் எடுக்கலாம் வா”, என்று அவள் தந்தை ஒரு காபி ஷாப் அழைத்து செல்ல.

“அப்பா, ஐ அம் சாரி பா! உங்க கிட்ட சொல்லாம ஐ லவ் யூ சொல்லிட்டேன் பார்த்திகிட்ட”, என்றவளை. அதுக்குள்ளயா என்பது போல் பார்த்தவர். “இதெல்லாம் அப்பா அம்மா கிட்ட சொல்லி யாரும் சொல்ல மாட்டாங்க! வேற என்னவெல்லாம் பண்ணின சொல்லு!”, என்று கேட்க.

“நீங்க என்னை கோபிக்கரீங்களா அப்பா”, என்றாள் குரலில் ஏமாற்றத்தோடு. “சொல்லு”, என்பது போல் சைகை செய்ய. நடந்தது சொல்ல.

‘நிற்க போகுதா நிச்சயம்”, என்றார், இப்போது குரலில் அவர் ஏமாற்றத்துடன், விட்டால் நின்றதற்கு அவளிடம் சண்டைபோடுவார் போல.

“அப்படி தான் நினைக்கிறேன்”, என்றாள்.

பிறகு அங்கு ஒரு அமைதி நிலவியது, இருவருக்கும் மேலே என்ன பேசுவது என்பது தெரியவில்லை.

மெதுவாக. “அவங்கப்பா உங்களுக்கு நல்லா தெரியுமா அப்பா”, என்றாள்.

“முன்னே நல்லா தெரியும், அதனால தான் நித்யாக்கு ஓ.கே சொன்னேன். நித்யா அவனை பிரிஞ்ச பிறகு எந்த தொடர்பும் இல்லை, எங்க அக்காவோடயே இல்லை.”, என்றார்.

“தாத்தா, பாட்டி, அத்தையை பார்க்கணும்னு சொல்லலையா”, என்றாள்.

“கேட்டாங்க. ஆனா அவங்க வீட்ல பெரியவங்க விடலை. இந்த மாதிரி அவங்க சின்ன பையனுக்கு ஆயிடுச்சின்னு”.

“இப்போ மறுபடியும் நீங்க யாரும் போகலையா”, என்றாள். “போகலை”, என்றவரிடம். “இப்போ ஒரு சான்ஸ் எடுத்து போகலாமாப்பா”, என்றாள்.

“இதெல்லாம் உடனே எதுவும் முடியாது அபி. அங்கே போய் என்ன செய்ய போற”, என்றார்.

“அத்தையோட சமாதானமாயிட்டா அப்புறம் எல்லாமே கொஞ்சம் ஈஸியாகும். தாத்தா பாட்டிய சமாதானப்படுதிடலாம், பார்த்திபன் அப்பா  என்ன செய்யறார் என்று தெரியவரும் இல்லையா”, என்றாள்.

“இது நமக்கு தேவையில்லாதது அபிம்மா. நீயும் அவனும் லவ் பண்ணின்னாலாவது பரவாயில்லை. இது ஒன் சைட். இதுக்கு நான் என்ன பண்ண முடியும், என்னால ஒண்ணும் முடியாது”,

“நீ இந்த மாதிரி பண்ணினேன்னு தெரிஞ்சதுன்னா, உங்கம்மா உன்னை என்ன பண்ணுவான்னு எனக்கு தெரியாது, என்னை ஒரு வழி பண்ணிடுவா! அதை விட அவ பொண்ணை வளர்த்தது சரியில்லையோன்னு ரொம்ப வருத்தபடுவா”,

“அப்பா! அம்மா கிட்ட எல்லாம் சொல்லிடுவீங்களா”,,

“கண்டிப்பா எதையும் நான் மறைக்க மாட்டேன்! நீ வீட்டுக்கு போ!”, என்று பார்த்திபன் ஷோ ரூம் முன் வந்து அவள் வண்டியை எடுத்தவர், அவளிடம் கொடுத்து, “வீட்டுக்கு போ”, என்றார்.

அவர் கவனித்தது. அந்த இரண்டு மூன்று நிமிடத்திலேயே அபியின் கண்கள் பார்த்திபனை தேடுவதை உணர்ந்தார்.

சிறுவயதியில் இருந்தே ஒன்றில் நின்று விட்டாள், அதிலே தான் நிற்பாள் அபிராமி. அது சரி வந்தாலும், சரி வராவிட்டாலும் மாறமாட்டாள்.

பார்த்திபனை பார்க்க சென்றார். அவன் அங்கே தான் இருந்தான். “ஐ அம் சாரி! என் பொண்ணுனால உங்க கல்யாணம் ப்ரச்சனையாயிடுச்சா. நான் பொண்ணு வீட்டுகாரங்க கிட்ட பேசட்டுமா”, என்றார்.

“வேண்டாம்! நான் பார்த்துக்கறேன்”, என்றான்.

மறுபடியும், “ஐ அம் சாரி”, என்றவர் கிளம்ப.

“தயவு செஞ்சு மறுபடியும் உங்க பொண்ணு என்னை பார்க்காத மாதிரி பார்த்துக்கோங்க”, என்றான்.

நின்றவர். “வேற யாராவதுன்னா இதை நான் சொல்லியிருக்க மாட்டேன். நீங்கன்றதால சொல்றேன்”, என்று நிறுத்தினார், அந்த நீங்க அவன் நித்யாவின் மகன் என்பதால் வந்தது என்பதை இருவருமே அறிவர்.

“அவ உங்க விஷயத்துல ரொம்ப சீரியஸ் போல தெரியறா! என்ன செய்வான்னு எனக்கே தெரியலை. முடிஞ்ச வரைக்கும் கண்டிக்கறோம்”, என்றார் ஆழ்ந்த குரலில் ஒரு பெருமூச்சோடு. 

பிறகு நிற்காமல் சென்று விட்டார். நேரே வீட்டுக்கு சென்றவர், “அபிராமி எங்கே” என்றார் கலாவதியிடம். “இன்னும் வரலை”, என்றவரிடம். “அவ.”, என்று ஆரம்பித்தவர் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒன்று விடாமல் சொல்ல.

கேட்ட அபியின் அம்மா அதிர்ந்தார். தன் பெண்ணை பற்றி எல்லோரையும் விட நன்கு அறிந்தவர் தான். இருந்தாலும் தன் பெண் இப்படி பேசியது அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

“முன்பின் தெரியாத யாரிடமோ அவனை என் மாப்பிள்ளை என்று சொல்லியிருக்கிறாள். அது இரண்டு பேரும் காதலித்து இருந்தாள் கூட பரவாயில்லை, அந்த பையனே கூப்பிட்டு சொல்லியிருக்கிறான். எவ்வளவு கேவலம்”, என்று நினைத்து கொண்டிருக்கும்போதே அபிராமி வர.

உள்ளே வந்தவளை பார்த்தவுடனே, “இப்படியாடி நான் உன்னை வளர்த்து வச்சிருக்கேன். எனக்கு நல்ல பேர் தேடி கொடுத்துட்ட. எல்லாரும் சின்ன வயசுல இருந்து சொன்ன மாதிரி, உன் வாயால இன்னும் என்ன என்ன கஷ்டத்தை தேடிகொடுக்கபோறியோ! இந்த மாதிரி ஒரு பொண்ணை.”,

மேலே பேசாமல் அவள் அருகில் வந்தவர் அவளை ஓங்கி ஒரு அரை வைக்க. அவர் வைத்த அரையில் நின்று கொண்டிருந்த அபிராமி கீழே விழுந்தாள். சத்தம் கேட்டு அவள் தாத்தாவும் பாட்டியும் ஓடி வந்து பார்த்தனர்.    

ஓடிச்சென்று அவள் தந்தை அவளை தூக்க முற்பட அவர் கையை தட்டி விட்டு. அவளாகவே எழுந்து அமர்ந்தாள். அடிவாங்கியத்தில் ஒரு பக்க முகமே வீங்கியிருந்தது.

“கடைசி வார்த்தை என்ன அம்மா சொல்ல வந்தீங்க? இந்த மாதிரி ஒரு பொண்ணை பெத்ததுக்கு பெறாமயே இருந்திருக்கலாம்னு தானே! இல்லைன்னா இந்த மாதிரி ஒரு பொண்ணு இருக்கறதுக்கு இல்லாமையே போயிடலாம்னு தானே!”.

எழுந்தவள். பிறகு ஒன்றும் சொல்லாமல் அவள் அறைக்குள் சென்றவள் கதவை தாளிட்டாள். வெளியே எல்லாரும் என்னவோ ஏதோவென்று கதவை தட்ட. அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாமல்.

பார்த்திபனுடைய தொலைபேசி எண்ணை அவன் கடையிலிருந்து எடுத்ததை டயல் செய்தவள், “எங்கம்மா என்னை அடிச்சிட்டாங்க, இந்த மாதிரி பொண்ணை பெத்ததுக்கு பெறாமயே இருந்திருக்கலாம்னு சொல்லிட்டாங்க. சாரி நான் உங்களை இனிமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”.

“எங்கம்மா சொன்ன மாதிரி நான் இல்லாமையே போயிடறேன்”, என்றவள் பென்சில் சீவும் ப்ளேட்டால் கையில் கீறினாள்.       

Advertisement