Advertisement

அத்தியாயம் நான்கு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

போர்க்களத்தில் நடக்கும் யுத்தத்தில் ரத்தமுண்டு

இந்த மனக்களத்தில் நடக்கும் யுத்தத்தில் கண்ணீர் உண்டு

அந்த ரத்தம் துடைத்தாலும் துடைக்காவிட்டாலும்

நின்றுவிடும் உறைந்துவிடும்

இந்த கண்ணீர் வற்றாத நதி போல

என்றும் நிற்காது வந்து கொண்டே இருக்கும்

யுத்தம் ஓய்ந்தாலும் இது ஓயாது   

 

“என்ன?????????? நித்யா ஆன்டியோட மகனா பார்த்திபன்!” என்று அபிராமி கத்தியதை கேட்ட. சத்தியமூர்த்தி, “கத்தாதீங்க அபிம்மா”, என்று அதட்டினார்.

“தாத்தா, பாட்டி காதுல விழப்போகுது”, என்று கடிந்தவர்.

“மேல வா!”, என்றார். “நீயும் வா கலா!”, என்றவரிடம்.

“அப்புறம்! இப்போ வேண்டாம். டிஃபன் வேலை முடிச்சு, அத்தையும் மாமாவும் சாப்பிட்ட பிறகு போகலாம். இல்லைன்னா என்னவோ ஏதோன்னு நினைப்பாங்க”, என்றார்.

“அம்மா! இன்னும் அதுக்கு ரெண்டு மணிநேரம் ஆகும்மா”, என்றாள்.

“ஆகட்டும் அபி!”, என்று சொல்லி கலாவதி செல்ல.

“நான் ஹெல்ப் பண்றேன்”, என்று பின்னோடு வந்த மகளை ஆச்சரயமாக பார்த்தார்., “நீயா ஹெல்ப் பண்ற”, என்பது போல் அம்மா பார்வை பார்க்க.

“சீக்கிரம் தெரிஞ்சிக்கலைன்னா எனக்கு தலை வெடிச்சிடும் அம்மா!”, என்றவளை பார்த்தவர். “கேட்டாலும் தலை வெடிக்கும்”, என்று நினைத்தவர்  வெளியே சொல்லவில்லை.

வேகமாக அத்தனை வேலைகளையும் முடித்தவர்கள், தாத்தாவும் பாட்டியும் தூங்க போகும் வரை காத்திருந்து. ஸ்ரீகாந்திடமும் ஏதோ சாக்கு சொல்லி. அவனையும் தூங்க அனுப்பிய பிறகு மேலே சென்றார்கள்.

“என்ன வரபோகிறதோ?”, என்ற பதட்டம் அவளையும் அறியாமல் அபிக்கு நிறைய இருந்தது. ஏன் இவ்வளவு பதட்டமாக, ஆர்வமாக, இருக்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.

ஒரு வேளை நித்யா ஆன்டியை பற்றி என்பதாலா இல்லை பார்த்திபனை பற்றியது என்பதாலா????????

அவளுக்கே தெரியவில்லை.

பார்த்திபன், நித்யா ஆன்டியின் மகன் என்று கேள்விப்பட்டதில் இருந்து பார்த்திபன் முகம் அவள் மனக்கண்ணில் தோன்றி கொண்டே இருந்தது. இனம் புரியாத உரிமை அவன் மேல் தோன்றியது.

எப்படி இரண்டு வருடங்களாக நிறைய நாட்களில் பார்த்திபன் அபியின் குரலை  கேட்கிறானோ அது போல நிறைய நாட்கள் பார்த்திபனை பாராமல் பார்த்திருக்கிறாள் அபி.

ஜெயந்தி வேறு அவனை பார்த்துவிட்டாள் வாய் ஓயாமல் பஸ் ஸ்டாப் போகும் வரை அவனை பற்றி தான் பேசுவாள். ஒரு முறை கூட நேருக்கு நேர் இவர்களை கண்ணெடுத்து பார்த்ததில்லை பார்த்திபன். இவளை போல் பாராமல் பார்த்தானா தெரியாது.

நேருக்கு நேர் பார்க்காமல் இருந்தவரை ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பார்த்த பிறகு.    

அதுவும் அவள் தந்தையின் பேரை கேட்ட பிறகு அந்த கண்களில் உதித்த அந்நியத்தன்மை நிச்சயம் அவளை பாதித்தது.

இதற்கு, அவளை தெரிந்தவன் அல்ல பார்த்திபன். ஆனாலும் பாதித்தது.

அவள் அப்பா ஆரம்பிக்கும்போது அவளை அறியாமல் வந்த வார்த்தை “அப்பா உங்களுக்கு தெரிஞ்சதை அப்படியே சொல்லனும் பா. என்கிட்ட எதையும் மறைக்க கூடாது”, என்றாள்.

அவள் அன்னையும் தந்தையும், “என்ன இவள் இப்படி சொல்லுகிறாள்”, என்று பார்க்கும் பார்வையையும் பொருட்படுத்தாது அவர்களை பார்த்தாள்.

“எங்களுக்கு முன்னே இருந்தே இங்கே தான் நித்யாவோட குடும்பம் இருக்கு. நான் டென்த் படிக்கும் போதுதான் இங்க நாங்க வீடு கட்டி குடி வந்தோம்”.

“வீடு இந்த மாதிரி இருக்காது. இது இப்போ கட்டினது. நித்யா எல்லாரோடையும் ஈஸியா ஃபிரன்ட் ஆகிடுவா. அப்போ அவளும் டென்த்ல இருந்தா. அதனால என்னோட ஈசியா ஃபிரன்ட் ஆகிட்டா”, என்று அந்த காலத்திற்குள் சென்றார்.

அபிக்குமே தெரியும் நித்யா ஆண்டியும் பிரகாஷ் அன்குளும் அவள் அப்பாவின் நெருங்கிய நண்பர்கள் என்று. சத்தியமூர்த்தி ஆரம்பித்தார்.

அப்போது தான் அங்கே புதிதாக குடி பெயர்ந்திருந்தார்கள். காலையில் அன்று சத்யா எழுந்து ஸ்கூலுக்கு அவனுடைய சைக்கிள எடுத்து கிளம்ப. அருகே மற்றொரு சைக்கிளில் அவனுக்கு சமமான வேகத்தில் வந்தது.

“நீங்க தான் எங்க பக்கத்து வீட்டுக்கு வந்து இருக்கீங்களா”, என்று ஒரு பெண் குரல் கேட்டது . திரும்பி பார்த்தால். அவன் வயதையொத்த பெண்.

பார்த்தவுடனே சிறிது பதட்டம் ஆனது சத்யா மூர்த்திக்கு, அவசரமாக யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பி பார்த்தான்.

“ஏன் யாராவது பார்ப்பாங்கன்னு பயமா?”, என்று அடுத்த கேள்வி உடனே வந்தது.

அந்த குரலில் ஒலித்த தைரியம் சத்தியமூர்த்தியையும் தொற்ற, தானாகவே “இல்லையே”, என்றான். 

“நீங்க புதுசா வந்திருக்கீங்களா. எங்க ஏரியா பசங்க கலாட்டா பண்ண நிக்கறாங்க. என்னோட பேசிட்டு வாங்க ஒண்ணும் பண்ண மாட்டாங்க!”, என்றாள்.

“ஏன் உன்னோட வந்தா மட்டும் ஒண்ணும் பண்ண மாட்டாங்களா?”, என்ற அவனின் பதில் கேள்விக்கு.  

“ம்கும்! நான் முன்ன இருந்தே இந்த ஏரியா தானே. எல்லோருக்கும் என்னை நல்லா தெரியும். நீ என் ஃப்ரன்ட்னா விட்டுடுவாங்க”, என்று புன்னகைத்தாள்.

இது புன்னகை நிறைய தைரியத்தை சத்தியமூர்த்திக்கு கொடுத்தது. பொதுவாகவே அப்பாவின் கட்டுப்பாடுகளினால் எதையும் கேட்டு, கேட்டு, செய்து கொஞ்சம் தைரியம் கம்மியாக வளர்ந்த பயந்த சுபாவமுடைய சத்தியமூர்த்திக்கு நித்யாவின் நட்பு தைரியத்தை கொடுத்தது. 

தினமும் பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் பேச்சுகள் தொடர்ந்து இருவரும் நல்ல நண்பர் ஆகினர்.

வீடுகளிலும் அந்த நட்பு தொடர்ந்தது. மிகவும் நெருங்கிய நட்பு என்று சொல்ல முடியாது. இருந்தாலும் ஒரு நட்பு வட்டம் தொடங்கியது.

காலேஜ் போகும் போதும் சத்தியமூர்த்தியும் நித்யாவும் ஒரே காலேஜ் சென்றனர். நித்யா அழகான பெண் என்பதால். சத்யமூர்த்தி அவள் நண்பன் என்பதாலேயே. நிறைய நட்பு வட்டம் சத்தியமூர்த்திக்கு அமைந்தது.

அப்படி வந்தவன் தான் பிரகாஷ். அவனுக்கு நித்யா என்றாள் மிகுந்த காதல். அதனாலேயே சத்தியமூர்த்தியிடம் நட்பை ஏற்படுத்திக்கொண்டான். இது நிறைய நாட்கள் கழித்து தான் சத்தியமூர்த்தியே உணர்ந்தான்.

உணர்ந்தவன் அவனுடைய நட்பை தவிர்க்க. தான் நித்யா மேல் கொண்ட காதலை ஒத்துக்கொண்டு அதற்கும் தன் நட்பிற்கும் எந்த சமந்தமுமில்லை என்று அவன் மன்றாடிய பிறகு.

“நித்யா ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, அதற்கு தன்னிடம் இருந்து எந்த உதவியும் கேட்க கூடாது.  ஆனால் அவள் ஒத்துகொள்ளாத பட்சத்தில் அவளை தொந்தரவு செய்ய கூடாது”, என்ற நிபந்தனையோடு அவர்கள் நட்பு தொடர்ந்தது.

நித்யாவின் தைரியத்தின் முன்னாள் பிரகாஷால் தன் காதலை சொல்லவே முடியவில்லை. அவனை ஏதோ தடுத்து கொண்டே வர. அவன் சொல்ல நினைக்கும் சமயம் அவளுக்கு திருமணம் நிச்சயமாக போகிறது என்று சத்தியமூர்த்தி சொன்னான்.

“எங்க அக்கா இந்துமதியோட கணவரோட தம்பி தான் மாப்பிள்ளை. எங்க அக்கா வீட்டுக்கு வரும்போது இவளை பார்த்து பிடிச்சி போய் அங்க அவங்க புகுந்த வீட்ல சொல்லி நிச்சயம் பண்றாங்க”, என்றான்.

“என்ன செய்யறது”, என்று பாவமாக பிரகாஷ் சொல்லும் போது, “சரியோ தப்போ சொல்லிடு”, என்றான் அவனுக்கும் நண்பனாக.

நித்யாவை அணுகி தன் விருப்பத்தை பிரகாஷ் சொன்ன போது. “என் தந்தை சொல்வது தான்! எனக்கென்று எந்த விருப்பமும் இல்லை”, என்றாள், தன் பெற்றோரின் ஒற்றை மகள், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு. 

பிரகாஷிற்கு அவர்களிடம் போய் பெண் கேட்கும் அளவிற்கு அந்த சமயத்தில் வேலையோ, வசதியோ இல்லாத காரணத்தினால் அவன் காதலை அவனோடே புதைத்துக் கொண்டான்.

பக்கத்துக்கு வீடு, அவர்களுடைய பெண்ணை கொடுத்த இடம், அவர்கள் பெண்ணே கேட்கிறாள் என்றவுடன் அதிகமாக மாப்பிளையை பற்றி விசாரிக்கவில்லை என்று சொல்ல முடியாது.

நிறைய விசாரித்தனர். வேலை பார்க்கும் இடத்தில், நண்பர்கள் இடத்தில், உறவினர்கள் இடத்தில், யாரும் ஒரு வார்த்தை தவறாக சொல்ல வில்லை.

முழு திருப்தி என்றவுடன் தான் பெண் பார்க்க ஒத்து கொண்டனர். நித்யா அம்மா அப்பா சொல்லியதை கூட கேட்கவில்லை, அவள் கேட்டதெல்லாம் சத்தியமூர்த்தியிடத்தில் தான். “மாப்பிள்ளை ஓ.கே வா! உனக்கு தெரியுமா?”, என்க.

சத்தியமூர்த்திக்கும் மாப்பிள்ளை பாஸ்கரனை அவன் அக்காவை திருமணம் செய்த நாளாக தெரியும், குறையென்று எதுவும் சொல்ல முடியாதவன். அவர்களே வசதியானவர்கள்.

சென்ட்ரல் கவர்மண்டில் நல்ல வேலை. எதுவும் தவறாக இருக்குமென்றோ, தவறாகி போகுமென்றோ. மனதுக்கு படாததால் சரியென்று விட்டான்.

தோன்றுவது எல்லாம் தோற்றமல்ல, அது வெளித்தோற்றமே, உள் தோற்றம்????????????? 

திருமணம்மாகி  ஆறு மாதத்தில், ஐந்து மாத குழந்தை வயிற்றில். நித்யா அப்பா வீட்டிற்கு வந்து விட்டாள்.

“யார்? என்ன கேட்டும் பதில் இல்லை!”,. என்ன சொல்லியும் கணவனுடன் மீண்டும் போக மறுத்துவிட்டாள். கணவன் மீது ஏதாவது தவறென்றால் கூறு என்று கேட்டதற்கு காரணம் எதையும் சொல்லவேயில்லை.

கணவன் வந்து கூப்பிட்டும் செல்லவில்லை. கணவன் வீட்டினர் காரணம் கேட்டும் சொல்லவில்லை.

இந்த விஷயங்களை சொல்லிக்கொண்டே வரும் போது இதை சொன்னவுடன் கலாவதியின் துளைக்கும் பார்வையை சத்திய மூர்த்தி கண்டு கொள்ளவேயில்லை.

“இங்கே நம் வீட்டில் உன் தாத்தா, பாட்டி, யார் காரணம் கேட்டும் சொல்லவில்லை”.

“இந்த மாதிரியான ஒரு வீட்டில் நம்மால் தான் அவர்கள் சம்பந்தம் செய்து விட்டார்கள் என்று இரு பக்கமும் சங்கடம் வர.  அங்கே இந்துக்கா வீட்டிற்கும் நம் வீட்டிற்கும் தொடர்பே அறுந்தது விட்டது”.

“அந்த வேதனையில் நம் வீட்டிற்கும் நித்யா வீட்டிற்கும் இருந்த தொடர்பு விட்டு போய் விட்டது. எனக்கும் அவளுக்கும் ஆன நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது”.

“அவளுக்கு குழந்தை பிறந்த பிறகு நான் பார்க்க சென்றேன். குழந்தை பிறந்த பிறகு ஓரளவிற்கு மனம் மாறி இருப்பாளோ என்று நான் அவளிடம் இந்த குழந்தையின் தந்தையை பார்க்க வர சொல்லட்டுமா”, என்று கேட்டேன்.

“அவன் நல்லவனில்லை சத், சேர்ந்து வாழ தகுதியில்லாதவன். நீ ஏமாந்துட்டே சத். நீ ஏமாந்ததால நானும் ஏமாந்துட்டேன்”, என்றாள் நித்யா என்னை பார்த்து.

அவள் சொன்ன காரணம். அதற்கு தான் அவளை தேற்றியது. எல்லாம் மறைத்து விட்டான். அதை மறைத்து அபியிடம். 

“மிகவும் தைரியமான பெண். எல்லோரையும் சுலபத்தில் எடைபோட கூடியவள். நான் சொன்னேனென்று அவன் எந்த மாதிரி ஆசாமி என்று கூட எடை போடவில்லை போல.”,

“நான் என்ன செய்யட்டும்”, என்றேன்.

“எனக்கு அவனிடம் இருந்து விடுதலை வேண்டும்”, என்றாள்.

“மிகவும் போராடி தான் விவாகரத்து வாங்கினோம். அவள் கணவன் சுலபத்தில் விவாகரத்து கொடுக்கவில்லை. பின்பு இன்னும் அவளை கன்வின்ஸ் செய்து மற்றுமொரு கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தோம்”.

“இதையெல்லாம் முன்னின்று நான் செய்யவில்லை. இங்கே என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பயந்து தெரியாமல் தான் செய்தேன்”.

“பிரகாஷ் ஏற்கனவே அவளை விரும்பி இருந்ததால் அவனாகவே மறுபடியும் வந்தான். அவன் பெற்றோர்கள் வைத்த ஒரே கண்டிஷன்  குழந்தை அவளுடன் வராமல் இருந்தால் தான் திருமணம் நடக்கும் என்பதே”.

சத்திய மூர்த்தி பதில் சொல்லும் வரையில் கூட பொறுமை இல்லை அபிக்கு. “நித்யா ஆன்டி அவங்க மகனை விட்டுட்டு போயிடாங்காளா?”, என்றாள்.

சத்திய மூர்த்திக்கு அந்த வார்த்தையை சொல்ல விருப்பம் இல்லை, ஆனாலும் உண்மையாக அந்த குழந்தை மீது அவ்வளவு பிடித்தம் நித்யாவிற்க்கு அந்த சமயத்தில் இல்லை. ஒரு வெறுப்பே இருந்தது, தன் தந்தையை கொண்டு இருந்தால் என்ன செய்வது என்று. .

குழந்தையை அவள் பெற்றதோடு சரி. ஆனால் வளர்த்துக்கொண்டு இருந்தது எல்லாம் ஜெயாமாவும் ராமகிருஷ்ணனும் தான்.

அவள் திருமணத்திற்கு தயாராக இருக்கவில்லை தான். ஆனால் குழந்தை அவளை எந்த விதத்திலும் பாதித்ததாக தெரியவில்லை. பிரகாஷின் அன்னையும் தந்தையும் தான் அந்த நிபந்தனை விதித்தனர். ஆனால் பிரகாஷ் அந்த மாதிரி எதுவும் சொல்லவில்லை. அவன் நித்யாவை எந்த நிலையிலும் ஏற்றிருப்பான். குழந்தையுடன் என்றாலும், அது  இல்லாவிட்டாலும். 

“இப்போதைக்கு கல்யாணம் முடியட்டும். பிறகு குழந்தையை கூட அழைத்து கொள்கிறேன்”, என்று தான் சொன்னான்.

“மறுபடியும் ஒரு திருமணத்திற்கு சாமான்யத்தில் நித்யா  ஒத்துக்கொள்ளவில்லை. ஒருவாறாக பெற்றோர், நண்பன், என்று அனைவரும் கட்டாயப்படுத்த ஒத்துக்கொண்டு திருமணம் செய்துகொண்டவள், உடனே தன்னுடன் பார்த்திபனை அழைத்து கொள்ளவில்லை”.

“திருமணம் நடந்த போது அவன் இரண்டு வயது மகன். பிரகாஷ் அவனை பிறகு அழைத்துக்கொள்கிறோம் என்று சொன்னாலும். அதற்கு அவசியமில்லாமல்  ஜெயமாவும் ராமகிருஷ்ணனும் முறைப்படி பார்த்திபனை  தத்தெடுத்து கொண்டனர்”.

பிறகும் பொருமையில்லாதவளாக, “அவன் அப்பா வரவேயில்லையா”, என்றாள் அபிராமி தன் தந்தையை நோக்கி .

இதென்னடா இந்த பெண்ணை நித்யாவின் வாழ்க்கை சிறிதும் பாதித்ததாக தெரியவில்லை. பார்த்திபனை பற்றியே கேட்டு கொண்டு இருக்கிறாள், என்று அவள் அன்னையும் தந்தையும் நினைக்க. அதை பற்றின கவலை சிறிதும் இல்லை அபிக்கு.

“அவங்க அப்பாவை பற்றி அவனுக்கு யாரும் சொல்லி கூட இருக்கமாட்டாங்க அபி. எனக்கு தெரிஞ்சு, அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் அவங்க அப்பா நம்ம சொந்தம்ன்னு தான், அவங்கப்பாவும் அவன் பிறந்ததிலிருந்து ஒரு தடவை கூட பார்த்தது கிடையாதுன்னு தான் நினைக்கிறேன்”, என்றார் சத்தியமூர்த்தி.

“அதுக்கா என்னை பார்த்து ஒண்ணுமே பேசாமா போனாங்க”, என்றாள் மறுபடியும்.

எல்லோரையும் மரியாதையில்லாமல் அவன், இவன், என்று பேசும் மகள் பார்த்திபனை அவங்க, இவங்க, என்று மரியாதை பன்மையிலேயே பேசுவதை சத்தியமூர்த்தி கவனிக்காவிட்டாலும் கலாவதி கவனித்தார்.

கவனித்தவர், “எப்போல்லாம் பார்த்திபன் உன்கிட்ட பேசியிருக்கிறான், இப்போ பேசாத மாதிரி பேசற.”, என்றவரின் கேள்விக்கு அவரை திரும்பி முறைத்து பார்த்தாள். 

அவள் அன்னைக்கும் தந்தைக்கும் சிறிது கவலை எட்டி பார்க்க துவங்கியது. “ஏன் இந்த பெண்ணிற்கு அவன் மேல் இவ்வளவு ஆர்வம்”, என்று.

“அவன் ஏன் பேசாம போனான்னு எனக்கு தெரியாது அபிம்மா”, என்ற சத்தியமூர்த்தி. 

“அவனுக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்”, என்றார் அவள் கேட்காததர்க்கு பதிலாக.

“ஓ!”, என்று நிறுத்தினாள் அபி. அவள் குரலில் என்ன இருந்தது சத்திய மூர்த்திக்கு கண்டறிய முடியவில்லை. கலாவதியும் அவள் குரலில் என்ன இருந்தது என்று அறியவே முயன்றார். 

உடனே பதில் கேள்வியாக. “உங்களுக்கு எப்படி தெரியும்”, என்றாள். “நான் நித்யாவோட பேசிட்டு தானே இருக்கேன், அவ சொன்னா”, என்றார்.

“நித்யா ஆன்டி ஏன் இங்கே அவங்க அம்மா வீட்டுக்கு வரலை”,

“அது”, என்று இழுத்த சத்தியமூர்த்தியை பார்த்து. “சொல்லுங்கப்பா”, என்றாள்.

“பார்த்திபனுக்கு பிடிக்காது”, என்று பளிச்சென்று சொல்லுவதற்கு பதிலாக தலையை சுற்றி மூக்கை தொட்டார்.

“நித்யா முதல்ல அவனை கூட்டிட்டு போகலை இல்லையா. பிறகு கொஞ்ச வருஷம் கழிச்சு கூட்டிட்டு போக வந்தா, இவன் போகலை போல”, என்றார்.

“அதுக்கு இங்க வீட்டுக்கு கூட வரமாட்டாங்களா”,

“அவங்க வந்தா இவன் வீட்டுக்கே வரமாட்டான், அபிம்மா ரொம்ப கோபக்காரன் போல”, என்றார்.

இதையெல்லாம் கேட்டிருந்தவள். மறுபடியும் அதே கேள்வியில் வந்து நின்றாள். “அதுக்கு ஏன்பா உங்க பேரை கேட்டவுடனே என்கிட்ட பாராமுகம் காட்டனும்”, என்றாள்.

அவள் அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்தனர்.

“எப்போது பார்த்திபன் இவளோடு பேசிக்கொண்டு இருந்தான். இப்போது பாராமுகம் காட்டுவதற்கு“,

அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு, “விடுங்க அபிம்மா, அடுத்த வாரம் அவன் நிச்சயம். அதுக்கு அடுத்த மாசம், அவன் கல்யாணம் போல விடுங்க.”, என்றார்.

“அவனுக்கு அடுத்த வாரம் நிச்சயமா?”, என்றாள் கேள்வியாக.

“என்னடா இந்த பெண் இப்படி கேட்கிறாள்”, என்று கலாவதியையும் சத்தியமூர்த்தியும் கவலை கொண்டனர்.

“ஏன் அபிம்மா இப்படி கேட்கறீங்க?”, என்ற கேள்விக்கு எரிந்து விழுந்தாள், “சும்மா தான் கேட்டேன்”, என்றவள்.

“எப்படிப்பா எனக்கு எத்தனை வருஷமா நித்யா ஆண்டியை தெரியும். என்கிட்ட இதை என் மறைச்சீங்க”, என்றாள்.

“நித்யா அவள் முதல் திருமணத்தை பற்றி பேசறதை விரும்பமாட்டாம்மா”, என்றவரை பார்த்து. “கல்யாணம் என்னவோ தப்பா போயிடுச்சு அது அவங்க காரணம். சொல்ல மாட்டாங்க சரி. ஆனா அவங்க மகன் அதை ஏன்ப்பா பேசறதில்லை”,

“இன்னும் ரெண்டு பசங்க இருக்காங்களே அபிம்மா. உனக்கு தான் அவங்களை தெரியுமே”, என்றார். 

“நான் கேட்டது பார்த்திபனை. நீங்க அவங்க நண்பர்ன்னா, ஏன்பா நல்லது, கெட்டது சொல்றது இல்லையா. ஏன்பா? அவங்க பார்த்திபனை விட்டாங்க”, என்றாள்.

“அம்மாவும் இல்லாம அப்பாவும் இல்லாம அவங்க இருக்கறது தெரிஞ்சும் அவங்க நிராகரிப்புல வாழறது சிரமம் இல்லையா”,

“எங்க அபிம்மா வளர்ந்தான் அவன், அவங்க தாத்தா பாட்டிகிட்ட தானே” என்ற சத்தியமூர்த்தியின் பதிலில் அபி திருப்தி அடையவில்லை. 

“எனக்கு அவங்க அப்பாவை பற்றி தெரியாது. ஆனா நித்யா ஆன்டி ஏன் அவனை விட்டாங்க? உங்க அப்பா அம்மாக்கு தெரியாம அவங்களோட இன்னும் பிரின்ட் ஷிப் வெச்சிருக்கிற நீங்க.”,

“அவங்களுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்த நீங்க. ஏன்? அவங்க பையனை மட்டும் விடாத நீயே பார்த்துக்கோ, அவன் உன் பையன்னு நித்யா ஆண்டி கிட்ட சொல்லலை”, என்றாள் கோபமாக. ஆவேசமாக.

அவள் ஆவேசத்தை பார்த்து அப்படியே சமைந்து நின்றனர், அவள் அன்னையும் தந்தையும்.

“ஒரு வேளை அதனால தான் என்கிட்ட அவங்க பேசலையா”, என்றாள் பார்த்திபனை மனதில் வைத்து.

“என்ன சொல்வது”, என்று தெரியாமல் அவள் பெற்றோர் விழித்தனர். “அவன் பேசாததர்க்கு இவள் ஏன் இவ்வளவு வருத்தபடுகிறாள், இப்பொழுது தானே அவனை பற்றிய விவரமே தெரியும்”, என்று செய்வதறியாது அன்னையும் தந்தையும் ஒருவரையொருவர் பார்த்தனர். 

தனக்காக ஒரு பிறவி இங்கே சண்டை போடுவதை இம்மியளவும் அறியாத பார்த்திபன். “திருமணத்திற்கு பார்த்த பெண்ணின் முகம் கூட ஞாபகத்தில் இல்லையே, ஃபோனிலாவது பேசலாமா”, என்று யோசித்து கொண்டிருந்தான்.  

இரண்டு வருடமாக கேட்கும் குரலையே சட்டென்று ஞாபகத்தில் வைக்காதவன்.

.கண்ணில் எல்லாம் பட்டாலும், கருத்தில் பதியாதது எதிலுமே பதியாது. அதனால் தான் பெண்ணின் முகம் ஞாபகத்தில் இல்லை என்பதை உணர்வானா. 

அபி அவன்  கருத்தில் பதிவாளா?

Advertisement