Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தத்திலும் உண்டு

இன்று போய் நாளை வா

எதற்கு

மன்னிபிற்கு  !!!

கிடைத்ததா  

கிடைத்தது எனக்கு நிம்மதி

உன்னால் பெண்ணே உன்னால்

நீயின்றி நானில்லை

இதுவே இந்த யுத்தத்தின் முடிவு !!! 

சலசலப்போடே வாழ்கை சென்றது. தனிகாட்டு ராஜாவாக இருந்துவிட்ட பார்த்திபன் அபிராமியுடனான வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான் என்றாலும் அதில் சில புதிய பழக்கங்களை அவனுக்கு அவனே ஏற்படுத்திக்கொண்டதால் மிகவும் சிரமமாக உணர்ந்தான்.

ஒன்று. அவன் தாயும் தந்தையும் அடிக்கடி அபிராமியோடு தொலைபேசியில் பேசி இவர்கள் வாழ்க்கையோடு தொடர்பில் இருந்தனர். பாஸ்கர் தொலைபேசியோடு நிறுத்திகொள்வார்.  ஊருக்கு வர வேண்டும் என்ற அழைப்பு கட்டாயம் அதில் இருக்கும்.

நித்யா மாதம் ஒரு முறை குடும்பத்தோடு சென்னை வந்து இரண்டு நாட்கள் கட்டாயம் இருந்து போவார். அங்கே அவருடைய மாமனார் மாமியார் உடன் இருப்பதால் நிறைய நாட்கள் எப்பொழுதும் முடியாது. இரண்டு நாட்கள் இருப்பார்.  நிறைய நாட்களுக்கு பிறகு தாய் வீட்டு சீராடல் அதை தவற விட  மனமில்லை.

பார்த்திபன் செய்யும் மற்றொன்று யாரும் கேள்வி கேட்க இடம் கொடாதவகையில் எல்லாவற்றையும் யோசித்து யோசித்து செய்வது.

“தேவையில்லை உங்கள் இஷ்டம் போல இருங்கள்”, என்று அபிராமி எவ்வளவோ சொல்லியும். “இது சரியா, அது சரியா”, என்று பத்து முறை கேட்பான்.  

அது சிறுகுழந்தைகள் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன் தன் அன்னையுடம் சரிபார்ப்பது போல இருக்கும்.

நாட்கள் வேகமா சென்றனவா, ஓடினவா, பறந்தனவா, தெரியாது. அபிராமி பைனல் செமஸ்டர் எழுதி இருந்தாள். அவள் ஐந்து மாதம் கர்ப்பம். மாற்றி மாற்றி எல்லாரும் தாங்கினர்.

அதுவும் பார்த்திபனின் அதட்டல், உருட்டல், மிரட்டல், அதிகமாக இருந்தது. அவனுக்கு கிடைக்காத தாயன்பையும் தந்தை அன்பையும் கர்பத்திலேயே அவன் குழந்தைக்கு வழங்க முடிவு செய்தவன் போல. இதை செய்யதே, அதை செய்யாதே என்றான். 

ஒரு சமயம் வேகமாக நடக்காதே.  மற்றொரு சமயம் இவ்வளவு மெதுவாக நடந்தால் குழந்தை எப்படி ஆக்டிவாக இருக்கும். என்று மாற்றி மாற்றி சொல்ல. அபிராமி முற்றிலுமாக பொறுமை இழந்தாள்.

“டேய்! ரொம்ப படுத்துன, ரெண்டு குழந்தை பெத்துப்போம்ன்ற ஐடியாவை  கான்சல் பண்ணிடுவேன். அப்புறம் ஒரு குழந்தை தான்”, என்று மிரட்டினாள்.

“சரி. சரி, ரொம்ப பண்ணலை”, என்றவன் அவன் வாக்குறுதியை ஒரு நாள் மட்டுமே காப்பாற்றுவான்.

தாய் வீடு பக்கத்துக்கு வீடாக போய்விட்டதால் அங்கே போய் இருந்து சீராடும் வழக்கம் எல்லாம் அபிராமிக்கு இல்லை. திருமணம் ஆனதில் இருந்து ஒரு நாள் கூட இரவு தங்க  அனுப்ப மாட்டான்.

“எப்போ வேணா போ, எப்போ வேணா வா, ஆனா நைட் மட்டும் நம்ம வீட்ல தான் இருக்கணும்”, என்றுவிடுவான். “எனக்கு தனியா தூங்க முடியாது”, என்பான்.

 “குழந்தை பிறந்தா போய் தானே ஆகனும்”, என்றதற்கு. “அப்போ பார்க்கலாம், இப்போவே ஏன் சொல்ற. என்னை உங்க அம்மா வீட்டுக்கு கூப்பிடமாட்டியா” என்பான்.

மொத்தத்தில் அபிராமியை எல்லா வகையிலும் படுத்தி கொண்டிருந்தான்.

இதனிடையில் பாஸ்கர் நிறைய முறை மனம் தளராமல் மறுபடியும் மறுபடியும் டெல்லிக்கு அழைக்க. எத்தனை முறை தட்டி கழிப்பது அபிராமிக்கே கஷ்டமாக இருந்தது.   

“ஒரு முறை போய் வரலாமா”, என்று பார்த்திபனை நச்சரிக்க. “இப்போ எப்படி முடியும். உனக்கு இப்போ அஞ்சு மாசம், இப்போ  எப்படி முடியும். அப்புறம் பார்க்கலாம்”, என்றான் அவளை   சமாதனபடுத்துவதற்க்காக.

அவன் ஒரு வார்த்தைக்காக தான் பிறகு போகலாம் என்று சொல்கிறான். பிறகு அழைத்தாலும் வேறு ஏதாவது காரணம் சொல்லுவான் என்று தெரியும். இருந்தாலும் முயற்சியை கைவிட அபிராமிக்கு மனமில்லை.

இதனிடையில் ஒரு நாள் பார்த்திபனை பாஸ்கர் போனில் அழைத்தார். தயக்கத்தோடு பேச்சை ஆரம்பித்தவர், “நான் ஆகாஷிற்கு ஜெயந்தியை திருமணம் பேசட்டுமா”, என்றார்.

ஆகாஷ் சுதாவிற்கு பிறந்த  பெரிய மகன். அமெரிக்காவில் பணியில் இருந்தான்.

என்ன சொல்வது என்பதை அறியாதவனாக “கேளுங்களேன், இதை ஏன் என்கிட்ட சொல்றிங்க”, என்றான். அவனுக்கு ஆகாஷை தெரியாது.  

“இல்லை இன்னும் நான் யார்கிட்டயும் இதை பற்றி இன்னும் பேசலை, உன்கிட்ட பேசிட்டு பின்ன அபிராமிகிட்ட பேசிட்டு தான். எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி அபிராமி வீட்ல பேச சொல்லனும்”,

“அவங்க ஓ.கே சொன்னா தான், நான் இங்கே வீட்லயே சொல்லலாம்னு இருக்கேன். அதுவரை யார் மனசுலயும் ஆசையை வளர்க்க இஷ்டமில்லை. அவங்க கொடுக்கறாங்களோ இல்லையோ?”, என்றார்.

எதுவும் சொல்லாதவன், “அபிராமி கிட்ட போனை கொடுக்கிறேன்”, என்றான்.

நித்யாவிடமும் சரி பாஸ்கரிடமும் சரி “வாங்க, போங்க”, என்று மொட்டையாக தான் பேசுவான். “அம்மா, அப்பா” என்ற அழைப்பு வராது. 

அபிராமியிடம் விஷயத்தை சொன்னார். “பேசுங்க மாமா! ஆனா இப்போ தான் மூணாவது வருஷம் போறா கல்யாணத்துக்கு வீட்ல ஒத்துப்பாங்களான்னு தெரியலை”.

“எனக்கு ஆச்சுன்னா, நான் ரொம்ப பிடிவாதமா இவரை பண்ணிபேன்னு சொன்னதால வேற வழியில்லாம பண்ணி வெச்சாங்க”, என்றாள் பார்த்திபனை பார்த்து கண்சிமிட்டியபடி.

பதிலுக்கு அவன் போனில், “ஒழுங்கா பேசு”, என்று ஜாடை காட்டினான்.

“போடா போடா”, என்று பதிலுக்கு ஜாடை காட்டினாள்.

ஒருவழியாக அவர் போனை வைத்த பிறகு. விட்ட சண்டையை ஆரம்பித்தாள் அபிராமி. “என்ன? போனில் ஒழுங்கா பேசுன்னு ஜாடை.”,

“அப்போ ஒண்ணும் செய்ய முடியாதுன்னு தானே கண்ணடிச்ச இப்போ அடியேன் என்று கணவன் பார்வை பார்த்தவனை, “இதோ என்னை ஜெயாம்மா கூப்பிட்டாங்க”, என்று சொல்லி ரூமை விட்டு வெளியே வந்து “ஹப்பா எஸ்கேப்”, என.

அவள் பின்னோடு வந்தவன், “யார்கிட்டயிருந்து”, என்ற கேள்வியில் தூக்கி வாரி போட திரும்பியவள் பயந்து. “அச்சோ”, என்று என்றாள்

சிரித்தவனை பார்த்து. “உன்கிட்ட இருந்து தான்”, என்றாள்.

“அதெல்லாம் அவ்வளவு   ஈசியில்ல”, என்றவன். “ஜெயாமா நீங்க இவளை கூப்பிடீங்களா”, என. “இல்லையேப்பா”, என்றார்.

அந்த இடத்தை விட்டு நகர முற்பட்டவளை அப்படியே தூக்கினான். “அச்சோ பாப்பாக்கு வலிக்கும் விடுங்க”, என்றவளை.

“உங்க ஊர்ல பாப்பாக்கு தூக்கினா வலிக்குமா, எங்க ஊர்ல வலிக்காது”, என்றபடியே அவளை தூக்கி நடக்க,

“யாராவது பார்க்க போறாங்க”, என்று அவள் கெஞ்சும் போதே மீண்டும் அவள் தொலை பேசி அடித்தது.

“இப்போ யார்ரா”, என்று கேட்டவாறே அதை பார்க்க. இப்போது அவன் அம்மா நித்யா. அபிராமி எடுத்தாள். நித்யா ஒரே அழுகை “மாமாக்கு உடம்பு சரியில்லை”, மட்டும் தான் கேட்டது. வேறு ஒன்றும் கேட்கவில்லை. அழுது கொண்டே இருந்தார்.

“இறக்கி விடு”, என்று அவனை பார்த்து சைகை செய்த்தவள். “அத்தே! அழாதீங்க சொன்னா தானே தெரியும்”, என.

நித்யாவிற்கு பேசவே முடியவில்லை. அதற்குள் சத்தியமூர்த்தி இவர்கள் வீட்டிற்கு வந்தார். “இப்போ தான் விஸ்வா போன் பண்ணினான். பிரகாஷ் ஒரு ஒன் ஹௌவர் முன்னாடி சட்டுன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டானாமா. ஹாஸ்பிடல் தூக்கிட்டு போய் இருக்காங்க. ஐ. சீ. யு. ல இருக்கான் போல. இன்னும் நினைவு வரலை. அங்கே எல்லாரும் தடுமார்றாங்க. நான் உடனே போறேன். சொல்லிட்டு போக வந்தேன்”, என்றார்.

அதுவரைக்கும் விஷயம் ராமகிருஷ்ணனுக்கும் ஜெயாம்மாவுக்கும் தெரியவில்லை.

இவர் வந்தவுடனே. “வா சத்தியமூர்த்தி”, என்று அவரை வரவேற்க இருவரும் வர.

மூவர் முகமும் சரியில்லாததை பார்த்து, “ஏன்? என்ன விஷயம்?”, என்க.

மூவரும் தயங்கினர்.

“என்ன விஷயம்? சொல்லுங்க!”, என்று மறுபடியும் வற்புறுத்த.

சத்யமூர்த்தி, “பயப்பட ஒண்ணுமில்லை மாமா! பிரகாஷ்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல் அட்மிட் ஆகியிருப்பாங்க போல”, என்றார்.

ராமகிருஷ்ணன் அப்படியே உட்கார்ந்து விட்டார்.

“ஒண்ணுமில்லை தாத்தா! உடம்புன்னு இருந்தா ஏதாவது வர தான் செய்யும்! சரியா போயிடும்! நீங்க ஏதோன்னு நினைச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க”, என்றான் பார்த்திபன்.

“சரி”, என்று கண்களாலேயே விடைபெற்று சத்திய மூர்த்தி பெங்களூர் கிளம்ப போக, “நானும் போகிறேன்”, என்று ராமகிருஷ்ணன் கிளம்ப ,

கண்களாலேயே அபிராமி. “நீங்களும் போங்களேன்”, என்று பார்த்திபனிடம் கெஞ்சினாள். அவள் பார்வையை படித்த பார்த்திபன் தயங்க. அடுத்து கெஞ்சல் பார்வை வரவில்லை. “நீ கிளம்பரியா  இல்லையா?”, என்ற மிரட்டல் பார்வை வர. அவளின் அந்த பார்வையின் தீவிரத்தை உணர்ந்த பார்த்திபன் அதை தட்ட முடியாமல்.

“நானும் வரேன்” என்று பார்த்திபனும் கிளம்பினான். ஜெயம்மாவையும் அழைத்து கொண்டு. அபிராமியை கொண்டு போய் கலாவதியிடம் விட்டு கிளம்பினர்.

அங்கே நிலைமை சற்று சீரியஸ் தான். அவருக்கு ஸ்ட்ரோக் அட்டாக் ஆகி இருந்தது. அதுவும் உடல் நிலை சீராகவில்லை. விஸ்வாவிர்க்கும் அதிகம் தெரியவில்லை, சரதிர்க்கும் அதிகம் தெரியவில்லை, என்பதைவிட நித்யாவை சமாளிக்க முடியவில்லை. அழுதே கரைந்தார்.

தாய், தந்தை, சத்தியமூர்த்தி மற்றும் பார்த்திபனை பார்த்த பிறகு அழுகை இன்னும் அதிகம் ஆகியது. அவரின் அழுகை பார்த்திபனின் மனதை பிசைந்தது. என்னவென்று  தெரியாமல் மனதை அழுத்தியது.

விஸ்வாவிற்க்கும், சரதிற்க்கும் பணப்ரச்சனை பெரிதாக இருந்தது. அதுவரை மட்டுமே ஒரு லட்சம் கட்டியிருந்தனர், அதுவும் அவர்கள் நண்பர்கள் இடத்தில் புரட்டி கட்டியிருந்தனர்.

சரத், காலேஜ்  யு.ஜி டிகிரி பைனலில் இருந்தான் என்றான், விஸ்வா பி.ஜி டிகிரி பைனலில் இருந்தான். இருவரும் படித்து கொண்டிருந்ததால் பிரகாஷிற்கு அதிக செலவு. பெரிதாக சேவிங்க்ஸ் என்பது போல பிரகாஷிடம் எதுவும் இல்லை. வயதான பிரகாஷின் தாய் தந்தை வேறு அங்கே தான் அமர்ந்திருந்தனர். யாருக்கும்  பெரிதாக பண விவரம் எல்லாம் தெரியவில்லை.  

இவர்கள் சென்ற பிறகு டாக்டரை சத்திய மூர்த்தியும் பார்த்திபனும் சென்று சந்திக்க. “கொஞ்சம் சீரியஸ் தான். லெட்ஸ் ஹோப் போர் தி பெஸ்ட்”, என்றனர். 

“சீரியஸ் இன் தி சென்ஸ், உயிருக்கு.”, என்று இழுத்தார் சத்தியமூர்த்தி.

“உயிருக்கு பாதிப்பு இருக்காதுன்னு தான் நாங்களும் நம்பறோம்”, என்ற டாக்டர். “ஸ்ட்ரோக்ங்கரதால அவர் எந்த அளவுக்கு முன்ன மாதிரி நடப்பார்ன்னு சொல்ல முடியாது”,

“மிடில் செறேப்ரல் ஆர்டரி இவால்வ் ஆகியிருக்கு. டேமேஜ் கொஞ்சம் அதிகமா இருக்கு. ஸோ பாதிப்புகள் அதிகமா இருக்கும். ஸ்பாஸ்டிசிட்டி எந்தளவு செட் ஆகுது, அது திரும்ப எப்படி ரிகவரி ஆகுதுன்னுந்ரதை பொறுத்து சொல்ல முடியுமான்னு நாங்க ஒரு ட்ரை பண்ணலாம். ஆனால் எதையும் தெளிவாக சொல்ல முடியாது. பிகாஸ் ஒரு ஒருத்தற்கும் பாதிப்புகள் ஒரு மாதிரி இருக்கும். ரிகவரி ஒரு மாதிரி இருக்கும்”,என்றார்.

கேட்ட எல்லோர் மனங்களும் கனத்தது. 

வெளியே வந்து யார் விவரம் சொல்வது அவர்களிடம். சத்தியமூர்த்தியே சொன்னார். “ சரியாயிடும்னு தான் சொல்றாங்க டாக்டர். ஆனா டோட்டலா நாற்பத்திஎட்டு மணி நேரம் ஆகணுமாம், எதையும் சரியா சொல்ல”, என்றார்.

பிரகாஷின் வயதான பெற்றோருமே அழ ஆரம்பித்தனர். அப்போது ஏதோ இன்ஜெச்ஜனுக்கு எழுதி கொடுக்க. அதை வைத்துக்கொண்டு சரத்தும் விஸ்வாவும் ஏதோ பேசிக்கொண்டு இருக்க. பணப் பிரச்சினை என்பது பார்த்திபனுக்கு புரிய. “என்கிட்ட கொடுங்க”, என்று அவர்கள் தயங்க தயங்க வலுக்கட்டாயமாக வாங்கி கொண்டு போனான்.

“நான் பார்த்துக்கறேன் தாத்தா”, என்று ராமகிருஷ்ணனிடம், ஜெயாம்மாவிடமும்  சொல்லியவன், அங்கே இருந்த சூழ்நிலையை சத்தியமூர்த்தியின் உதவியோடு கையில் எடுத்து கொண்டான்.

அம்மா விலகியதால் பிறகு அவரை விலக்கி வைத்தவன் தான். ஆனாலும் அவர் துக்கத்திலும் கஷ்டத்திலும் இருக்கும் போது பார்த்திபனுக்கு, “எப்படியோ போ”, என்று விட மனமில்லை.

அபிராமியை அழைத்து இந்த மாதிரி டாக்டர்கள் கூறினார்கள் என்று விவரம் கூறினான். கேட்டவள். “முடிந்தவரை நிலைமை சற்று சரியாகும் வரை அங்கே இருங்களேன்”, என்றாள்.  

அதோடு மட்டும் நில்லாமல். “உங்க அம்மா கிட்ட நான் இருக்கேன். நான் பார்த்துக்கறேன் அம்மான்னு சொல்லுங்க”, என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம் அபிராமி. நீ சொல்றதால பார்த்துக்கறேன்”, என்றான் அவனை அவனே விட்டு கொடுக்காமல்.

“அப்படி ஒண்ணும் எனக்காக நீங்க அவங்களை பார்க்க வேண்டாம். அவங்களுக்காக பார்த்தா போதும்”,

“ப்ச்! அபிராமி யாருக்காக இருந்தா என்ன? பார்த்துக்கறேன் முடிந்தவரைக்கும்”,

“அப்படி ஒண்ணும் பார்த்துக்க வேண்டாம். எங்க அப்பா இருக்காங்க, நித்யா அத்தையோட அப்பா இருக்காங்க, நீங்க செய்யறதுக்கு ஒண்ணுமில்லை. நித்யா அத்தைக்காக பார்துக்கறதுன்னா பார்த்துக்கங்க. இல்லைன்னா வாங்க”, என்று ப்ளாக் மெயில் செய்ய.

அவன் இப்படி நித்யாவை பார்த்த பிறகு எப்படி வருவான். அவனுமே வருத்தத்தில் தான் இருந்தான்.  

“சரி உங்க நித்யா அத்தைக்காக பார்த்துக்கறேன்”, என்றான். அப்போதும் “எங்க அம்மா”, என்ற வார்த்தை வரவில்லை.   

இரண்டு நாட்கள் பிரகாஷ் கண் விழிக்கும் வரை வரை யாரும் இடத்தை விட்டு நகரவில்லை. பார்த்தவுடனே இரண்டொரு ஆறுதல் வார்த்தை சொல்லி பணம் தேவையென்றால் கொடுத்து போய் இருக்கலாம் பார்த்திபன். அவனை கட்டாயப்படுத்த யாராலும் முடியாது.

உண்மை. நித்யாவை பார்த்திபனுக்குமோ பிடிக்குமோ பிடிக்காதோ அப்படி ஒரு சூழலில் விட்டு போக மனமில்லை.  

இருந்தான். அவன் இருந்தது. விஸ்வாவிற்க்கும் சரதிற்க்கும் எவ்வளவோ ஆறுதலை கொடுத்தது. ஏனென்றால் அவன் வரும் முன்னர் பணத்திற்காக நிறைய அலைந்து தான் அந்த ஒரு லட்ச ரூபாயை திரட்டினார்கள்.

“அப்பா என்ன வைத்திருந்தார்”, என்பது அவர் கண்விழித்தால் தான் தெரியும். நித்யா அழுகையிலேயே கரைந்தார். அவரிடமும் ஒன்றும் விவரம் கேட்கமுடியவில்லை. பார்த்திபன் எல்லாவற்றையும் பார்த்துகொண்டான்.

ராமகிருஷ்ணனுக்காக என்று மட்டும் சொல்ல முடியாது. நித்யாவிற்க்காகவும் சேர்த்தே செய்தான்.

பிரகாஷ் ஒரு வழியாக கண்விழித்தார். ஆனால் கண் மட்டுமே விழித்தார். பேச்சு வரவில்லை. ஒரு பக்கம் கையும் காலும் அசைக்க முடியவில்லை.

“சரியாவதர்க்கு நாள் ஆகும். சரியாகும், ஆகாமலும் போகலாம். நாம் ஆகும் என்றே நினைப்போம்”, என்றனர்.

அவர் கண்விழித்தவுடன். “நான் வீட்டிற்கு போகட்டுமா”, என்று பார்த்திபன் கேட்க.

எல்லாரும் விழித்தனர். இனி என்ன செய்வது என்று

பிரகாஷின் தாய் தந்தை ஒரு படி மேலேயே போய். “இன்னும் கொஞ்சம் சரியாகும் வரை, இங்கே இருக்கரியா தம்பி”, என்றனர், தங்களுக்குள்ளேயே வெட்கியவாறு, ஏனென்றால் சிறுவயதில், “இந்த பையனை, திருமணம் ஆனால் நித்யா அழைத்துக்கொண்டு வரக்கூடாது”, என்று சொன்னது அவர்கள் தானே.

இன்று தங்கள் பையனின் ராஜ வைத்தியத்திற்கு காரணம் பார்த்திபன் தான் என்று உணர்ந்தே இருந்தனர்.

தான் சொன்னவுடனே எல்லாரும் விழிப்பதை பார்த்த பார்த்திபன். “மாமா இங்கே தான் இருப்பாங்க. அவங்க பார்த்துப்பாங்க”, என்றான் சத்தியமூர்த்தியை சம்மதத்திற்கு பார்த்தவாரே. மாமனார் மருமகனிற்குள் தயக்கமில்லாமல் சகஜமாக ஒரு பேச்சு இங்கே ஹைதராபாத் வந்த பிறகு வந்தது. 

“நான் இருக்கேன்”, என்று சத்தியமூர்த்தி சொல்ல. சற்று ஆறுதலாக உணர்ந்தனர்.

அவரிடம் தேவையான அளவு பணம் கொடுத்து. தீர்ந்து போனால் தன்னை கேட்க வேண்டும், தானாக செலவு செய்யக்கூடாது என்று கட்டாயப்படுத்தி சொல்லிய பிறகே. “நீ போ நான் பிறகு வருகிறேன்”, என்று சொல்லிய ராமகிருஷ்ணனை. “நாம் பிறகு வரலாம்”, என்று அழைத்து கொண்டு சென்னை வந்து சேர்ந்தான்.

Advertisement