Advertisement

அத்தியாயம் இருபது:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தத்தில்

என் காயங்களுக்கான

மருந்து நீ மட்டுமே

உணர்ந்தாயா பெண்ணே???

ப்ளாக் கலர் ரெனால்ட் டஸ்டர் காரை…………. மறுநாளே கொண்டு வந்து நிறுத்தினான்.

கார் எதற்கு வாங்கினானோ………… அதன் உபயோகம் பரிபூரணமாக அமைந்தது. தினமும் அபிராமிக்கு டயர்டாக இருந்தது. அதனால் காலேஜ் வரை டிராப்பிங் படலம் நடந்தது.  தினமும் வீட்டிற்கு வந்த பிறகு அதிகமாக பேச நேரமில்லாததால் போனில் ஒரு மணி நேரம் பேசினான்.

என்ன பேசினான்……… இவனுக்கும் தெரியாது? அவளுக்கும் தெரியாது? இருவரும் அறியார். 

கார் வாங்கியது ராமகிருஷ்ணனுக்கும் ஜெயாம்மாவுக்கும் சந்தோஷமே. ஆனால் அங்கே கலாவதிக்கும் சத்தியமூர்த்திக்கும் அகல கால் வைக்கிறானோ பார்த்திபன் என்று பயம். அவர்களுக்கு வந்த பயம்………., அது  விளைவித்த விளைவுகள்……… பல.

இப்பொழுது தான் திருமணம் முடிந்திருக்கிறது. இதில் பத்து லட்ச ரூபாய்  கார் வாங்கியிருக்கிறான்.

எப்படி? எப்படி? என்று அபிராமியை துளைத்து எடுக்க. அபிராமிக்கு ஒன்றும் தெரியவில்லை. அபிராமிக்கு பார்த்திபன் மேல் பூரண நம்பிக்கை. அவளை விட அவனுக்கு அதிகமாக எல்லாமே தெரியும் என்பது அவள் எண்ணம். அதனால் எதை பற்றியும் அவள் கேட்கவில்லை. அதுவுமில்லாமல் திருமணம் ஆகி சில நாட்களிலேயே பணவிவரம் பற்றி கேட்பது அவளுக்கு விருப்பமும் இல்லை.    

அதனால் அவள் எதுவும் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.

இங்கே பெற்றோர்கள் அதை பற்றி சீரியசாக பேச.

“என்னம்மா இப்படி கேட்கறீங்க”, என்று அபிராமி கலாவதியை கேட்க.

“பின்ன பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்தா அப்படியே விட்டுட முடியுமா. எதுவும் கேட்க கூடாதா. ஒரு ரூபாயில்லை ரெண்டு ரூபாயில்லை, பத்து லட்சம் போட்டு கார். ஏன் கொஞ்சம் கம்மி விலையில வாங்கினா ஆகாதா. பணம் ப்ரச்சனையாகிட போகுது அபிராமி”, என்று அவளை ஒரு வழியாக்க.

இவர்கள் அவளை ஏதாவது பணப் ப்ரச்ச்சனையில் மாட்டி கொள்ள போகிறார் மாப்பிள்ளை என்று நச்சரிக்க. பார்த்திபனுக்கு பிரச்சினை என்றதும் அது அபிராமியிடம் எதிரொலித்தது.

நமது பெண்கள் காலம் காலமாக கடை பிடித்து வரும், சொல்வதை சொல்ல வேண்டும்.  விடுவதை விட வேண்டும். நமது பிறந்த வீட்டிடமும், புகுந்த வீட்டிடமும், என்பது. எது எது என்பதையரியாத அபிராமி. 

இதையெல்லாம் அப்படியே  பார்த்திபனிடம் கேட்டாள் அபிராமி.

“எப்படி நீங்க இவ்வளவு பணம் போட்டு வாங்குனீங்க. லோனா இல்லை ஃபுல் பேமென்டா. எப்படி?”, என்றாள்.

“கார் வாங்கி ஒரு வாரம் கழிச்சு உனக்கு என்ன சந்தேகம் அபிராமி திடீர்ன்னு”, என்றான்.

“அது அப்பாக்கும் அம்மாக்கும் ரொம்ப கவலை. நீங்க ஏதாவது மணி ப்ராப்ளம்ல மாட்டிகிட்டா”, என்றாள்.

“உனக்கு என்னை கேள்வி கேட்க்க எல்லா உரிமையும் இருக்கு அபிராமி ஆனா உனக்கு மட்டும் தான் இருக்கு. வேற யாருக்கும் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன நடந்தது?”,

நடந்தது எல்லாம் சொல்ல.

“பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தா கேள்வி கேட்பாங்கலாமா?”, “சரி என்ன பண்ணலாம் அதுக்கு?”, என்றான் எரிச்சலாக யாருக்கும் பதில் சொல்லி பழக்கபட்டிராத பார்த்திபன்.

“இப்படி பேசினா எப்படி?”, என்றாள் அலட்சியமாக பதிலுக்கு அபிராமி.  

“லுக் அபிராமி, நீ தான் இதையெல்லாம் சமாளிக்கணும். நான் சம்பாரிக்க ஆரம்பிச்சதில் இருந்து இதுவரைக்கும் நான் யாருக்கும் கணக்கு சொன்னது கிடையாது. எனக்கு என்ன செலவு பண்ணனும்னு தெரியும்”,

“ஆனா அவங்க நீங்க ஏதாவது பிரச்சினையில மாட்டிபீங்கலோன்னு கேக்கறாங்க”

“கேட்டா. எனக்கு பதில் சொல்லனும்னு அவசியமில்லை. அவ்வளவு நம்பிக்கை இல்லாதவங்க எதுக்கு பொண்ணை கொடுத்தாங்க”,

“இதுல நம்ம கல்யாணம் எங்க இருந்து வருது. அவங்க கொடுத்தாலும் கொடுத்திருக்கலைன்னாலும் நான் உங்களை தான் கல்யாணம் பண்ணி இருப்பேன். அதனால நம்ம கல்யாணத்தை எதுக்காகவும் எப்பவும் இழுக்க வேண்டாம், ஒரு பதில் அதை சொல்றதுல உங்களுக்கு என்ன கஷ்டம்”, என்றாள் கோபமாக.

“அது அப்பா அம்மாவோட நான் வளரலை இல்லையா. அதனால அவங்க எப்படி கேள்வி கேட்பாங்க. எப்படி பதில் சொல்லனும். எதுவும் எனக்கு தெரியாது”, என்று முதன் முறையாக வாழ்க்கையில் தன்னையும் மீறி கத்தினான்.

“என்னோட சம்பாத்தியம் கூட தெரியாம எதை பார்த்து எனக்கு உன்னை  கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க உங்கப்பா. நித்யா பையன்னா? அப்படி இருந்ததுன்னா எனக்கு நீ தேவையேயில்லை. போ போய்டு, உங்க அப்பாக்கு எல்லாம் என்னால கணக்கு சொல்ல முடியாது. போடி”, என்றான்.

அவனுடைய நெடு நாள் சந்தேகம். ஆதங்கமாக வெளி வந்து, தப்பான வார்த்தைகளை பிரயோகிக்கவைத்தது.

அபிராமிக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. “எங்க போக சொல்ற. எங்கேயும் போகமாட்டேன். உங்க அப்பாவோட இல்லை உங்க அம்மாவோட. ஏதோ குணம் உனக்கும் வருதா? என்னை போன்னு சொல்ற. என்னோட சாவு மட்டும் தான் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியும்.”,

“உங்க அப்பா மாதிரி அம்மா மாதிரி பிரிஞ்சிடலாம்னு மட்டும் நினைக்காதே”, என்ற வார்த்தைகள் அவன் “போ” என்று சொன்னதால் அவளையும் மீறி அவள் வாயிலிருந்து வந்தது.

வந்ததற்கு பிறகு சொன்னதை உணர்ந்தாலும் சொன்னதற்கு வருத்தமில்லை. அவ்வளவு கோபம் இருந்தது கண்களில் நீர் ஒருபக்கம் பெருகியது. 

“எங்க அப்பா அம்மா பத்தி எல்லாம் பேசாத, என்னை பத்தி மட்டும் பேசு”, என்று பதிலுக்கு அவனும் கத்தினான்.

பரவாயில்லை இந்த கத்தலுக்கு ராமகிருஷ்ணனனோ ஜெயாம்மாவோ எழுந்திருக்கவில்லை.

“நான் செத்தா தான் நீ என்னை விட்டு பிரிய முடியும்”, என்ற வார்த்தை பார்த்திபனுக்கு எவ்வளவு நிம்மதியை கொடுத்தது என்று அபிராமிக்கு தெரியாது.

அவள் ஏன் அவனை திருமணம் செய்தாள் என்ற அவனுடைய நெடுநாள் சந்தேகம் வார்த்தையாக வர, வார்த்தைகள் தடித்து விட்டன. அவள் கண்ணீர் அவனை வெகுவாக அசைத்தாலும். அவள் சொன்ன வார்த்தை அவனுக்கு நிம்மதியை தந்தாலும். தான் இஷ்டபடாத தன் தாய் தந்தையை உதாரணமாக சொன்னதால் அவளை சமாதானப்படுத்த முயலவில்லை. தான் பேசியதும் தவறு தான் என்ற குற்ற உணர்ச்சியில் அப்படியே அமர்ந்து விட்டான்.

என்ன முயன்றும் அபிராமிக்கு மனசே ஆறவில்லை. என்னை போக சொல்லிவிட்டானா இவன் என்ற எண்ணமே அவள் கண்ணை கண்ணீரால் மறைக்க. அவள் எண்ணத்தையும் கோபத்தால் மறைத்து. அவன் தாய் தந்தையை பேச்சில் இழுக்க வைத்தது.  

இழுத்ததற்க்கு வருத்தம் இருந்தாலும். அவள் பேசியதற்கு அவளுக்கு சற்றும் வருத்தம் இல்லை. என்னை போ என்று சொல்லிவிட்டானா என்ற எண்ணமே கண்ணை கருத்தை எல்லாவற்றையும் மறைத்தது.       

“நீ மட்டும் எதுக்கெடுத்தாலும் எங்கப்பாவை பேசலாமா. நான் உன்னை உனக்காக மட்டும் தான் கல்யாணம் பண்ணினேன். நீ நம்பினாலும் சரி, நம்பலைன்னாலும் சரி, அது தான் நிஜம்”.

“எங்கப்பா எனக்கு பிடிச்சது அப்படின்ற ஒரே காரணத்துக்காக தான் என்னை உனக்கு  கல்யாணம் பண்ணினார். அதனால தான் அதிகமா உங்க சம்பாத்தியம் பத்தி எல்லாம் தெரிஞ்சிக்களை போதுமா”  

ஒன்றுமில்லாத பிரச்சினை எவ்வளவு பெரிய வார்த்தை பிரயோகத்தில் கொண்டு வந்து விட்டது.

இருவருக்குமே தாங்கள் பேசியது தவறென்று தெரியும். ஆனால் தாங்கள் பேசியதற்கு காரணம் அடுத்தவர் தான் என்றறிந்து, யாரும் யாரையும் சமாதனப்படுத்தவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை.

அன்று அப்படியே ஹாலிலேயே உறங்கினான். அவளும் ஏன் என்று கேட்கவில்லை. அவள் ரூமிற்குள் சென்று அடைந்து கொண்டாள்.

இருவருக்கும் உறக்கம் தான் வரவில்லை.  தினமும் இரவு தாமதமாக தான் உறங்குவர். ஆனால் அது வேறு, இது வேறு. அது வேறு பார்த்திபனை இம்சித்தது. அபிராமிக்கு பழக்கப்பட்டிருந்தான். இன்று அவள் அருகில் இல்லாமல் உறக்கம் இல்லை. விடியலில் உறங்கி சற்று நேரத்திலேயே எழுந்து விட்டான்.

தனியாக உறங்கிய உறக்கம் அவனுள் புதிய முடிவை எடுக்க வைத்தது. அவள் காலில் விழுந்தாவது சமாதனம் செய்வது என்பது தான் அது. இத்தனை நாட்கள் அவள் இல்லாமல் தான் உறங்கினான், ஆனால் இனி அது முடியும் போல தோன்றவில்லை, வார்த்தையை வேறு விட்டுவிட்டான்.

ஆவலாக அவளை எழுப்ப போக.      

 அவள் பார்த்திபன் எழுப்பாமலேயே எழுந்து கொண்டாள். 

ஸ்ரீகாந்த் அப்போது ட்யுஷன் படிக்க வந்து விட்டிருந்தான். அவனிடம் பார்த்திபன், “எனக்கு உங்கப்பாவை பார்க்கணும் வர சொல்றீயா, ஒரு டென் மினிட்ஸ்”,  என்று நல்ல விதமாகவே சொல்லி அனுப்பினான்.

இவளுக்கு எதுவும் கேட்க நேரமில்லை. அவசரமாக கிளம்பி கொண்டிருந்தாள். அவள் தந்தை வந்தவுடன் பார்த்தாள். இவர் எதற்கு வந்திருக்கிறார் என்று தெரியாதவள். “வாங்கப்பா! என்ன இவ்வளவு காலையில வந்திருக்கீங்க”,

“மாப்பிள்ளை தான்மா பார்க்கணும்னு சொன்னாங்க”, என்றார்.

வீட்டில் மற்றவர்கள் “என்ன” என்பது போல் எதுவும் நோன்டவில்லை. சாதாரணமாகவே நினைத்தனர். எல்லா விஷயத்தையும் ராமகிருஷ்ணனோ ஜெயாமாவோ கேட்கமாட்டர். அதனால் தான் புதிதாக கேள்வி எழுந்தவுடனே பார்த்திபனுக்கு பொறுக்க முடியவில்லை.  

“உட்காருங்க!”, என்றவன் ஒரு பைலை அவரிடம் கொடுத்தான். இது நான் மூணு வருஷமா கட்டற இன்கம்டாக்ஸ். சந்தேகம் இருந்தா இது என் ஆடிட்டர் போன் நம்பர் அவருக்கு போன் பண்ணி கேட்டுக்கலாம், சொல்லுவார். வேற என்ன வேணும்?”, என்றதும் அவர் விழித்தார். 

இதை அவர் எதிர்பார்க்கவில்லை .

“இது எதுக்கு என்கிட்ட காட்டறீங்க”, என்றார் தயங்கி தயங்கி. 

“நீங்க தான் நான் திடீர்ன்னு எப்படி கார் வாங்கினேன்னு சந்தேகப்பட்டீங்கலாம், ஒரு வேலை கடன் வாங்கினேன்னு நினைச்சிருக்காலாம். இல்லை. கடன் எல்லாம் வாங்கலை. ஆனா பேங்க் லோன் போட்டுருக்கேன்.  எல்லா பணத்தையும் கேஷா கொடுத்திருப்பேன். ஆனா இன்கம்டாக்ஸ் ப்ரோப்ளம் வரும்ன்னு தான் விட்டுடேன்”, என்றான். இதையெல்லாம் அபிராமியும் கேட்டு கொண்டு தான் இருந்தாள். தலையிடவில்லை. 

“போதுமா! இன்னும் ஏதாவது விளக்கம் வேணும்மா”,

அவன் பேச பேசவே, “என்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது”, என்று எண்ணிய சத்தியமூர்த்தி. “அது வந்து தம்பி நீங்க உங்களை சிரமப்படுதிக்க கூடாதேன்னு தான்”, என்க.

“இவ்வளவு நாளா என்னை நான் தான் பார்த்துகிட்டேன். ஒரு சிரமமில்லை. என்னை மட்டுமில்லை, உங்க பொண்ணையும் நல்லா பார்த்துக்குவேன், என்னை நம்பலாம்”,.

“நான் ரெண்டு மூணு பெரிய செல் போன் கம்பெனியோட ஆதரைஸ்டு டீலர்”.

“என்கடைல மட்டும் சேல்ஸ் கிடையாது. தமிழ்நாட்ல இருக்கிற நிறைய சின்ன சின்ன கடைங்களுக்கு சப்ளை நான் தான். பெரிய ஷோரூம்ஸ் அந்த மாதிரி ஆட்களை நம்பி சப்ளை பண்ண மாட்டாங்க. ஆனா நான் கொடுக்கறதால எனக்கு கஸ்டமர்ஸ் அதிகம்”.

“இதுல ரிஸ்க்கும் இருக்கு. ஒண்ணு ரெண்டு முறை ஏமாந்தும் போய் இருக்கேன். ஆனா அதை விட லாபம் அதிகம். வெளில நான் என்ன பண்றேன்னு இது வரைக்கும் சொல்ல வேண்டிய அவசியம் வந்தது இல்லை. அதனால சொன்னது இல்லை”.

“உங்க பொண்ணும் நானும் இப்போ தான் பேசி பழக ஆரம்பிச்சிருக்கோம். அவ இதை எல்லாம் என்கிட்ட கேட்டதில்லை, நானும் சொன்னதில்லை. சொல்லக்கூடாதுன்னு இல்லை. சொல்ற மாதிரி அவசியம் எதுவும் வரலை.  இந்த விளக்கம் போதுமா”, என்றான்.

இதையெல்லாம் கேட்டிருந்த அபிராமி. “எதுக்கு இந்த விளக்கம் எல்லாம். அவங்க என்கிட்ட தான் கேட்டாங்க. உங்களை கேட்கலை. அது கூட உங்க மேல இருக்கிற அக்கறையால தான் கேட்டாங்க, அவங்களுக்காக நான் உங்க கிட்ட சாரி கேக்கறேன்”, என்று தாய்க்காகவும் தந்தைக்காகவும் பரிந்து பேசினாள். .

சொன்னவள் பார்த்திபன் பதில் பேச இடம் கொடுக்காது. “எந்திரிங்கப்பா போகலாம்! எனக்கு நேரமாகுது, ஜெயந்தி இன்னைக்கு வரலையாம். இப்போ தான் போன் பண்ணினா”, என்று அவள் தந்தையையும் அதட்டினாள்.

சத்தியமூர்த்திக்கு ஏதோ பிரச்சினை என்று புரிந்தது. அதுவும் தங்களால் தான் என்றும் புரிந்தது.

“இரும்மா தம்பிகிட்ட.”, என்று ஆரம்பிக்கும் போதே. “போகலாம்பா”, என்று அதட்டினாள்.

“சும்மா அவரை அதட்டாதே அபிராமி. நான் உன்னை ட்ராப் பண்றேன்”, என்றான்.

“தேவையில்லை பஸ்க்கு இன்னும் டைம் இருக்கு”, என்றவளை மதியாமல் சத்தியமூர்த்தியை பார்த்து. “மாமா உங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா என்னை நேரடியா கேளுங்க. அதை விட்டுட்டு கவலைப்படரேன்னு எங்களை கவலைப்படவைக்காதீங்க.”, என்றான் பளிச்சென்று.

அவர் பாவமாக பார்த்து நிற்க. “ஜெயாம்மா”, என்று உள்ளே வேலையாக இருந்தவரை அழைத்தவன். “மாமாக்கு ஒரு காபி”, என்றான் அவர் மறுக்க மறுக்க. பிறகு இவள் மறுக்க மறுக்க இவளை கையை பிடித்து இழுத்து கொண்டு போனான். நான் இவளை காலேஜ் விட்டுட்டு வரேன் என்று சொல்லியவாறே. 

சிறிது தூரம் சென்றவுடனே ஒரு ஹோட்டல் முன் நிறுத்தினான். அவளுக்கு பசி அதனால் மறுத்து பேசவில்லை. உள்ளே போய் அவரவர்க்கு வேண்டியதை அவரவர் ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

வெளியே வந்தவுடனே. “இன்னைக்கு ஏதாவது முக்கியமான கிளாஸ் எதுவும் இல்லைனா, காலேஜ் லீவ் போட்டுக்கலாமா”, என்றான்.

“போடி! சொல்லிட்டு எதுக்கு இப்போ என் பின்னாடி வர்ற நீ!” என்று அவள் சீரியசாக கேட்க.

அதைவிட சீரியசாக. “இல்லையே நான் உன் முன்னாடி தானே போறேன்”, என்றான்.

“போடாங்.?”, என்று கெட்ட வார்த்தையில் திட்டினாள்.

“அவ்வளவு தான் தெரியுமா இன்னும் வேற ஏதாவது வேற வெச்சிருக்கியா”, என்றான் இம்மியளவும் அலட்டாமல். 

அவனை முறைத்து பார்த்தவள்.

“இப்போ எதுக்கு என்னை கட்டாயபடுத்தி இழுத்துட்டு வந்திருக்க. எதுக்கு நேத்து நைட் விட்ட சண்டையை மறுபடியும் போடவா”,

“அப்படியும் சொல்லலாம் இல்லைன்னா முந்தாநேத்து நைட் விட்ட ரொமான்ஸ் கூட கண்டின்யூ பண்ணலாம்”, என்றான் சீரியசாக.

இவன் நம்மை கிண்டல் செய்கிறானா என்று அபிராமி அவன் முகத்தை கோபமாக பார்க்க.

“நான் நிஜம்மா தான் சொல்றேன். ஐ அம் சாரி! நான் போ சொன்னது ரொம்ப தப்பு தான். என்ன செஞ்சா என் தப்பு போகும்”, என்றான் கெஞ்சுதலாக,

அதை கேட்ட அபி நேற்று இரவு விட்ட அழுகையை கண்டின்யூ செய்தாள்.

“ஷ்! இதென்ன இப்படி ரோட்ல அழற முதல்ல கார்ல ஏறு”,

ஏறியவள். “நீ எப்படி என்னை போயிடுன்னு சொல்லலாம்”, என்று முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழ.

என்ன சமாதானம் சொல்வது என்றே தெரியவில்லை, தொடபோனால் “போடா”, என்று கையை தட்டினாள்.

“நான் தான் சாரி சொல்றேனே”, என்றான் பரிதாபமாக.

“சாரி சொன்னா சரியா போயிடுமா. ஒரு வேளை நான் போயிருந்தா என்ன பண்ணியிருப்ப”,

“உன் பின்னாடியே வந்திருப்பேன்”

“சும்மா அதெல்லாம், நீங்க நான் தான் பொண்ணுன்னு தெரியாம தான் நிச்சயம் வரைக்கும் வந்தீங்க. அதுவும் என்கிட்ட இருந்து தப்பிக்க வந்து என்கிட்ட மாட்டிக்கிடீங்க”, என்று அவனின் அன்றைய மனநிலையை அப்படியே உரைத்தாள்.

“ நீங்க என்னை ஏன் நம்ப மாட்டேங்கறீங்க. நான் நித்யா அத்தைக்காக மட்டும் உங்களை கல்யாணம் பண்ணிக்கலை”, என்றாள் தேம்பலோடு.

“என்னோட அறிவுக்கு அது புரியுது. ஆனா மனசு கேட்குது, அப்படி என்ன இருக்குன்னு இந்த பொண்ணு உன்னை துரத்து துரத்தி கல்யாணம் பண்ணிகிச்சின்னு. நான் என்ன சொல்வேன்?”,

“ஸோ சிம்பிள், அந்த பொண்ணு ஒரு பைத்தியம், அதான் கல்யாணம் பண்ணிகிச்சின்னு சொல்லுங்க”, என்றாள்.

கேட்டு கோபம் வரவில்லை சந்தோஷமே வந்தது. “எஸ், நிஜமாவே இந்த பொண்ணு என் மேல பைத்தியம் தான். இல்லைனா திட்டுனா கோபத்துல எல்லாரும் போடான்னு சொல்லிட்டு கோபிச்சிட்டு போனா. இவ நான் செத்தா தான்டா உன்னை விட்டு போவேன்னு சொல்வாளா?”, என்றான் சொல்லும்போதே அவன் குரல் கமறியது.

அபிராமிக்கு கோபம் போகவில்லை தான். ஏனென்றால் அவன் சொன்ன வார்த்தை அப்படி. ஆனாலும் அவன் வருத்தபடுவது பிடிக்காமல், “விடுங்க”, என்றாள்,

“சாரி அப்பா அம்மா இருந்தும் இல்லாம வளர்ந்த பையன். ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடேன்”, என்றான்.

“காயமும் அவனே செய்கிறான். மருந்தும் அவனே ஆகிறான்”,என்று நினைத்தவள்.  என்ன சொல்வாள்??. அபிராமி சமாதானமாகாமல் சமாதானமாகினாள்.

“இப்படி இனிமே பேசாதீங்க. என்ன கோபம் வந்தாலும் என்னை போன்னு சொல்லாதீங்க. எல்லார்கிட்டயும் போராடி உங்களை கல்யாணம் செஞ்சிருக்கேன். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று மறுபடியும் ஒரு கேவலோடு அழுகை வர.

“சாரி, சாரி,”

“இப்போ மட்டும் சாரி இல்லை. இனிமேலும் இந்த மாதிரி ஏதாவது எனக்கு தெரியாம பேசினா என்னை மன்னிச்சிடு அபிராமி.  என்ன பேசறேன்னு தெரியாம பேசினேன்”,

அபிராமி முகம் அழுது அழுது சிவந்திருந்தது. பார்த்திபனுக்கு பார்க்க பார்க்க அவன் மீதே கோபம் வந்தது. அதே சமயம் பார்க்க பார்க்க அவள் மீது காதலும் பொங்கியது.

“சாரி அபிராமி உன்னை விட்டுட்டு என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது. நானா கோபப்பட்டு போனா கூட என்னை விட்டுடாத. நீ சொன்ன மாதிரி என் அப்பாவோட குணமோ அல்ல அம்மாவோட குணமோ என்கிட்ட இருக்கலாம்”, என்று அவன் சொல்ல.

“அது நான் தெரியாம கோபத்துல”,  என்று அவள் சொல்ல வரும்போதே. அவள் முகம் பார்த்தவன்  “ஐ குட் நாட் ரெசிஸ்ட் எனி மோர்”, என்றவன் வேகமாக அவள் முகம் பற்றி அருகில் இழுத்து அவள் இதழோடு இதழ் பதிக்க. அவள் தயங்கி,  மயங்கி, பின்பு முடியாமல் அவனை தள்ளி விடும்வரை அவளை அவன் விடவில்லை. 

Advertisement