Advertisement

அத்தியாயம் பதினெட்டு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

நீ இந்த யுத்தத்தில்,

கண்ணை திறந்து வாங்கும்

மழைத்துளி  போல் ஆனாய் .

நான் பிடிக்க நினைத்து முடியாத

விண்ணில் ஓடும் மேகம் ஆனாய்.

தொடாமலே சுடும் நெருப்பும் ஆனாய்.

நிலம் போல் என்னை தாங்கி நின்றாய். 

காற்றாய் என்னை சுவாசிக்க செய்தாய்.

ஐம்புலனாய் என்னுள்ளே நிறைந்தாய்.

நிறைந்தவள் என்னுள் நானாய்

ஆவது எப்போது?????????

வெளியே வந்து டின்னர் ஹால் நோக்கி சென்றனர். மூவரின் மனமும் நிறைந்திருந்ததால் வயிரும் நிறைந்தது. கட்டாயம் டெல்லி வரவேண்டும் என்று மறுபடியும் மறுபடியும் வருத்தி கேட்டு விடைகொடுத்தார் பாஸ்கர்.

வண்டியில் வரும்பொழுது. “நான் இப்போ இத்தனையும் தூக்கிட்டு போறேன். அங்கே ஜெயாம்மா, நித்யா அத்தை, எல்லாரும் இருப்பாங்க. நான் இந்த சேரில ஒன்னை அவங்களுக்கும் கொடுக்கட்டா” என்றாள்.

ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தியவன். “இந்த பேட்ச் அப் வேலையை விட்டுடேன். நான் அவங்களுக்கு எடுத்து தரணும்னு நீ எப்படி எதிர்பார்க்கறேன்னு புரியலை. நான் இவங்களோட எல்லாம் பேசறதே உனக்காகத்தான்”.

“அவங்க உங்க அம்மா அப்பா. அவங்க அப்படி இருந்தா நீங்களும் அப்படி இருக்கணுமா என்ன?”, என்று கேள்வி எழுப்பினாள்.

“நான் என்ன மகாத்மாவா?”

“இதுக்கு சாதாரண ஆத்மாவே போதும். எதுக்கு மகாத்மா?”, என்று முதன் முறையாக அவன் தாய் தந்தை மேல் தப்பென்று தெரிந்தும் அவர்களை கொண்டு அவனுக்காக அவனிடமே சண்டையிட்டாள்.

“ப்ச்! என்று சலித்தவன், என்ன என்கிட்ட இருக்குன்னு நீ இப்படி என்னை துரத்தி கல்யாணம் பண்ணியிருக்கிறன்னு   நான் யோசனை நிறைய பண்றேன். அதனால தான்  உன்னுடைய செய்கைகளை மறுக்க முடியலை”.

“உனக்காக ரெண்டொரு வார்த்தை பேசறேன். ஜெயாம்மாவுக்காக அவங்களை வீட்டுக்கு வர சொன்னேன். இதுக்கு மேல எதிர்பார்க்காத அபிராமி. மூணு நாலு நாளைக்கு முன்னால யாராவது கேட்டிருந்தா கூட  ரொம்ப கோபப்ட்டிருப்பேன்.  நான் இப்படி நடந்துக்குவேன்னு எனக்கே தெரியாது. இப்போவே ரொம்ப மாறிட்டேன். என்னை விட்டுடேன்”, என்றான் பரிதாபமாக.

அந்த வார்த்தையை கேட்டு அவள் முறைக்க. “ஐ மீன்! இந்த என்னை பெத்தவங்களோட நீ செய்யற பேட்ச் அப் வேலையை”.

பதில் பேசாமல் சிறிது நேரம் நின்றவள். “போகலாமா ரொம்ப நேரமாயிடுச்சு”, என்றாள்.  

வீட்டிற்கு சென்றாள். அங்கே நித்யா, பிரகாஷ், சரத், விஷ்வா, என்று அவர்கள் எல்லாரும் ஹாலில் அமர்ந்து ராமகிருஷ்ணன் ஜெயாம்மாவோடு பேசிகொண்டிருந்தனர். தன் வீட்டிலேயே தான் அந்நியமானது போல உணர்ந்தான்.          

பழைய நித்யாவாக இருந்தாள். கட்டாயம் பாஸ்கரோடு சென்றதற்கு கோபம் கொண்டு இருப்பாள். இப்போது இரண்டொரு வார்த்தை பார்த்திபன் நித்யாவோடு பேசியிருந்ததாலும், பாஸ்கர் நகையை கொடுத்த போது தன்னை பார்த்து வாங்கியதாலும், அந்த அங்கீகாரம். தங்களுக்குள் இருந்த பிரிவினை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துகொண்டதால்., தற்பொழுது கோபம் வரவில்லை.

அபி உள்ளே வந்தவுடன் சகஜமாக பேச துவங்க, பார்த்திபன் ரூமிற்குள் போய் அடைந்துகொண்டான்.

அவர்கள் மறுநாள் காலை ஐந்து மணிக்கு ட்ரெயின். அதிலே செல்வதாக கூறியதால், உள்ளே சென்று. “நாளைக்கு அவங்க ஊருக்கு போறாங்கலாமா. நீங்க வரீங்களா பேசிட்டு இருக்கலாம்”, என்றாள்.

“இப்போ தானே அவ்வளவு பேசினோம், ஏதாவது கண்டுக்கறாளா, மறுபடியும் வந்து பேச கேட்கிறா. இவளை என்ன செய்யலாம்?”, என்று பார்த்திபன் அபியை பார்த்து முறைக்க.,

அந்த முறைப்பய் பார்த்தவள், “ஒஹ்! நீங்க வரலையா. சொல்ல வேண்டியது தானே, அதுக்கு ஏன் முறைக்கறீங்க”, என்று அவளே பதில் சொல்லிகொண்டவள்,

“நீங்க தூங்குங்க நான் பேசிட்டு வர்றேன்”, என்று திருமணமாகி நெடு நாள் ஆனது போல சொல்லி வெளியே சென்று அப்படியே எல்லோருடனும் பேச அமர்ந்துவிட்டாள்.  எல்லாரும் போ, போ, என்ற போதும். போகிறேன், போகிறேன், என்று பேசியே, பேசியே நேரம் ஓடியது.

பார்த்திபனை பற்றி தெரியும் வரை நித்யாவோடு அபிராமி ரொம்ப நெருக்கம். பார்த்திபனை பற்றி தெரிந்த பிறகு அவனை திருமணம் செய்யும் வரை ஒரு வார்த்தை கூட நித்யாவோடோ இல்லை அவர் குடும்பதாரோடோ பேசவில்லை.

இப்போது பார்த்திபன் நித்யாவோடு பேசிய பிறகு சற்று மறுபடியும் பழைய மாதிரி பேசத்துவங்கியிருந்தாள். அதனால் அவர்கள் ஊருக்கு போவதால், சரத்தொடு, விஸ்வாவோடு. என்று  கிட்ட தட்ட ஒருமணிநேரம் பேசிய பிறகு எழுந்தவள், “நான் வாங்கினேன் அத்தை”, என்று கூறி அவளுக்கு பார்த்திபன் வாங்கி கொடுத்ததில் இருந்து ஒரு புடவையை எடுத்து கொடுத்தாள்.  

நித்யாவிற்க்கு சந்தோஷமோ இல்லையோ. இதை பார்த்த ராமகிருஷ்ணனும் ஜெயாமாவும் மிகவும் சந்தோஷப்பட்டனர். தாங்கள் இருக்கும் போதே பார்த்திபன் நித்யாவை பார்ப்பதில்லை.பிறகு எப்படியோ என்ற எண்ணத்தில் இருந்தவர்கள், இப்பொழுது தங்கள் காலத்திற்கு  பிறகு அபிராமி பார்த்துகொள்வாள் என்று தோன்ற. அந்த முதியவர்கள் மனதில் சொல்லொணா நிம்மதியும் அமைதியும் விளைந்தது.

பார்த்திபனும் இப்போது அபி வந்துவிடுவாள் என்று நேரத்தை கடத்தி தூங்காமல் இருக்க. அவள் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை. ஒரு புறம் அவன் மனம் அவள் தான் தூங்கு என்று சொல்லிதானே சென்றாள். நேற்றிலிருந்து தானே உனக்கு அவளை தெரியும் என்று மனம் இடித்துரைக்க. அபி சொல்வது போல, தன் மனதிடம் “போடா டேய்”, என்று சொல்லி  அமர்ந்த நிலையிலேயே உறங்கி விட்டான். 

அபி அவர்களிடம் காலையில் சொல்லிக்கொண்டு தான் செல்ல வேண்டும் என்று கட்டாயபடுத்தி சொல்லி. உறங்க வந்து பார்த்தால் உட்கார்ந்த நிலையிலேயே பார்த்திபன் உறங்கி கொண்டு இருந்தான்.

எப்படி எழுப்பி நன்றாக உறங்க சொல்வது. தொட்டு எழுப்புவதா. இல்லை கூப்பிடுவதா. காலையிலேயே அம்மா சொன்னார்கள், பேர் சொல்லி கூப்பிடுவது நம்ம வழக்கம் இல்லை. பேர் சொல்லி கூப்பிடக்கூடாது என்று.

“அம்மா நீ இந்த காலத்திலும் இப்படி பேசறியே”, என்று பதிலுக்கு வாயடிக்க.

“தனியா இருக்கும் போது உன் இஷ்டம். ஆனா எல்லாரும் இருக்கும் போது கூப்பிடக்கூடாது”, என்று ஸ்ட்ரிக்ட் ஆர்டர். தனியாக கூப்பிட்டு பழகினால் அது மற்ற சமயங்களிலும் வரும் என்று நினைத்தவள். “ஏங்க கூப்பிடட்டுமா? என்னங்க கூப்பிடட்டுமா? அத்தான்? மாமா?”. எது சரி என்று மூளையை குழப்பியவள். முடிவாக நாளைக்கு யோசிக்கலாம் என்று முடிவெடுத்து எப்படியும் கூப்பிடாமல். 

அவனை தொட்டு உலுக்கினாள். அவளின் முதல் தொடுகைக்கே விழித்தவனை பார்த்து. “நீட்டி படுத்து தூங்குங்க” என்றவள், தலையணையையும் அவனுக்கு வசதியாக போட்டு  பக்கத்தில் படுத்து. படுத்தவுடன் கண்மூடி உறங்கிவிட. உறக்கம் பார்த்திபனுக்கு பை சொல்லி போய் அபிராமியை தஞ்சமடைய. உறக்கம் முற்றிலும் தொலைந்தது பார்த்திபனுக்கு.

இத்தனை நாள் தான் எடுத்து முடிவுகளை நொடியில் தகர்க்கிறாள். முதலாய் வரவேண்டிய தாய் தந்தை உறவை  புதிதாய் எனக்கு கொடுத்திருக்கிறாள் என்று எதையெதையோ மனம் யோசிக்க. அபிராமியை பார்த்தவாரே மறுபடியும் எழுந்து அமர்ந்தான்.

இரவில் அடர்ந்த காட்டின் நடுவில் வழி தேடி தடுமாறும் பார்த்திபனுக்கு அந்த காட்டிலேயே இருக்கும் சோலைவனமாக தெரிந்தாள். நல்ல அழகி மறுபடியும் எதனால் தன்னை இவ்வளவு துரத்தி திருமணம் செய்தாள் இவ்வளவு தனக்காக செய்கிறாள் என்ற கேள்வி மறுபடியும் அவனுள் நுழைந்து அவனை குழப்ப ஆரம்பித்தது.

தூங்கும் போது ஒரே இடத்தில் தூங்க மாட்டாள் அபிராமி அசைந்து கொண்டே இருப்பாள். இப்போதும் திரும்பி படுத்தாள். திரும்பி படுக்கும்போது தூக்கத்தில் கண்ழித்த அவள், பாதி உறக்கநிலையிலேயே  அவன் அமர்ந்திருப்பதை பார்த்தவள், “நீங்க தூங்கலையா”, என்று அனிச்சை செயலாக அவன் கைபிடித்து பக்கத்தில் இழுத்து படுக்க வைத்து, அவன் கை பிடித்த படியே  மறுபடியும் தூங்கிவிட்டாள்.

சும்மாவே உறக்கம் வராமல் இருந்தவன் இப்பொழுது அபிராமியின் அருகாமை வேறு. எங்கிருந்து வரும் உறக்கம். உறக்கமில்லா இரவானது.

விடியல் வேகமாய் வந்தது. நான்கு மணிக்கு ரூம் கதவு தட்டப்பட அவர்கள் ஊருக்கு போக சொல்லிக்கொள்ள எழுப்புகிறார்கள் என்றுனர்ந்தவன் அபிராமி என்று அவளை எழுப்ப. “ம்கும்”, அசையவில்லை. வெகு நேரம் கூப்பிட்டும் அசைவில்லை. பிறகு அவளை உலுக்க எழுந்தவள், “என்ன”, என்று கேட்டு உறங்கினாள். 

“எழுந்திரு வெயிட் பண்றாங்க”, என. எழுந்து அப்படியே போனாள். சேரீயோடு உறங்கியிருந்ததால் ஆடைகள் கலைந்திருந்தன. அதை பார்த்தவன். அவசரமாக, “இரு! இரு!”, என்றான். பாதி உறக்கத்திலேயே என்ன? என்பது போல பார்த்தாள். “உன் டிரெஸ் சரியாயில்லை”, என்றான்.

தூக்கத்திலேயே. “நீ போ”, என்று கோபப்பட்டாள்.

 “அம்மா தாயே! நானே அனுப்பறேன். நீ போய் தூங்கு”, என்று மறுபடியும் அவளை கட்டிலின் அருகில் அனுப்ப. படுத்து உறங்கினாள். 

இவனே போய் ரூம் கதைவை திறந்தான். வெளியே எல்லாரும் இருந்தனர். “நாங்க போயிட்டு வர்றோம். கட்டாயம் ஹைதராபாத் வரணும்”, என்று சொல்லி கிளம்ப, “அபிராமி எந்திரிக்களை” என்றான் அவர்களை பார்த்து  சங்கடமாக.

அங்கே ஒரு சிரிப்பலை கிளம்பியது. “நீங்க அவளை எழுப்பணீங்களா அண்ணா”, என்றான் சரத்.

எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரியாமல் பார்க்க .

“அச்சோ! அண்ணா அவ சரியான கும்பகர்ணி. சாமான்யத்துல எந்திரிக்க மாட்டா. சின்ன வயசுல இருந்தே அப்படிதான். நாங்க எல்லாரும் யார் இவ கிட்ட மாட்ட போறாங்களோ சொல்வோம். எங்க அண்ணாவே மாட்டுவாங்கன்னு நாங்க நினைக்கவேயில்லை” என்றான் சிரிப்புடன்.

“டேய்! அவ இவ சொல்ல கூடாது அண்ணி சொல்லுங்க”, என்று நித்யா ஞாபகப்படுத்த.

அவன் எழுப்பியதாளும் பேச்சு சத்ததினாலும் விழிதிருந்தவள், இதனை கேட்டு. தன்னை சரிபடுத்தி வெளியே வந்து அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தாள். பிறகு பார்த்திபனை பார்த்து.

“அவனை ஒரு அடி அடிங்க”, என்று  பார்த்திபன் கையை பிடித்து அவனை அடித்தவள், “மகனே ஊருக்கு போறதால இதோட விட்டேன். இல்லைன்னா என்ன பண்ணியிறுப்பேன்னு எனக்கே தெரியாது”.

“என்ன பண்ணியிருப்பீங்க அண்ணி”,  என்றான் சரத் அபிராமியை பார்த்து.

“எனக்கே வா”, என்றவள் நித்யாவை பார்த்து. “அத்தை எனக்கு எப்போ எப்போ தோணுதோ, அப்போ எல்லாம் போன் பண்ணுவேன், என் சார்பா நீங்க அடிச்சிடுங்க”, என்றாள்.

இதைக்கேட்டு எல்லோருக்குமே சிரிப்பு பொங்கியது. ஜெயாம்மாவுக்கு கண்களில் நீர் தளும்பிவிட்டது. தங்கள் வீடு சிரிப்புடன் இருக்கிறதா? பார்த்திபன் எல்லோருடனும் சேர்ந்து சிரிக்கிறானா?.

இந்த பெண் மாயம் செய்பவள் தான் எங்கள் குடும்பத்தின் மீது என்று நினைக்க தோன்றியது.

யாரும் அறியாமல் கண்களை துடைத்தார். அங்கிருந்த எல்லோருமே பார்த்தனர். ஆனாலும் அவர் மோனத்தை சந்தோஷத்தை கலைக்காமலேயே  விடைபெற்று சென்றனர்.

அந்த புன்னகையோடே சென்று மறுபடியும் உறங்க. ஏழு மணிக்கு அபிராமி கூட விழித்துவிட்டாள் பார்த்திபன் விழிக்கவில்லை. யாரும் அவனை எழுப்பாததால் அவன் எழுந்தபோது மணி பத்து.

அபிராமி குளித்து ஜெயாம்மா சமைப்பதை வேடிக்கை பார்த்து  முடித்திருந்தாள். 

நேற்று இரவு நடந்தது கனவு போல இருந்தது, பார்த்திபனுக்கு. அபிராமியை பார்த்தாலே சிரிப்பு வந்தது. இன்னும் சிறு பெண்ணாகவே இருக்கிறாள் என்று தோன்றியது.

என்ன நிகழ்வுகள் என்று தெரியாமலேயே நாட்கள் ஓடின, அபிராமி புது இடத்திற்கு தன்னை பழக்கப்படுத்தினாள். பார்த்திபன் தன்னை அபிராமிக்கு பழக்கப்படுத்தினான்.    

என்ன சந்தேகம் என்றாலும் தன்னுடைய அம்மாவிற்கு ஒரு மிஸ்சுடு கால் விட்டு மொட்டை மாடிக்கு வரவைத்து கீழேயிருந்து பேசினாள். மூன்றாவது நாளே பார்த்திபன் அவனுடையை கடையை திறந்து விட. அபிராமி ஒரு வாரம் கழித்து காலேஜ் போனாள்.

சத்தியமூர்த்தி அவர்கள் ஹனி மூன் போக ஏற்பாடு செய்ய விரும்பினார்.  ஹனி மூன் என்ற வார்த்தையை தவிர்த்து. கலாவதியை விட்டு ஊருக்கு போக ஏற்பாடு செய்து தர்றோம் என்று சொல்ல சொன்னார்.

என்ன பார்த்திபனிடம் சொல்வது என்றாலும் சத்தியமூர்த்தி கலாவதியிடம் சொல்லியே சொன்னார். கலாவதி சொன்ன போது பார்த்திபன் மறுத்துவிட்டான்.

இப்பொழுதே திருமணதிற்காக ஒரு வாரம் கடை லீவ் ஆகிவிட்டது. மேலும் விட முடியாது என்று விட்டான். 

கலாவதிக்கு, “கடைக்காக இப்படி சொல்கிறானா இல்லை, அபிராமியின் சித்தி சந்தேகப்பட்டது போல மனத்தாங்கலா. இந்த பெண் வாயை திறக்க மாட்டேன் என்கிறாள்”, என்று பயந்து விட்டார்.

பார்த்திபனிடமே, “தம்பி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அபிராமி சின்ன பொண்ணு. விவரம் பத்தாது ஏதாவது அவகிட்ட குறையிருந்தா சொல்லுங்க நான் அவள் குணத்தை மாத்திக்க சொல்றேன். உங்களுக்குள்ள எல்லாம் நல்லா இருந்தா தான் எங்களுக்கு சந்தோஷம்”, என்றார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாதவனா என்ன? ஆனால் அன்னையின் உணர்வு புதிது.

“அபிராமியை பத்தி எனக்கு எந்த குறையுமில்லை அத்தை. நீங்க எந்த கவலையும் படவேண்டாம். நாங்க சந்தோஷமா இருக்கிறோம்”, என்று அவருக்கு சமாதானம் கூறினாலும். இந்த பெண் என்ன உளறி வைத்திருக்கிறாள் தெரியவில்லையே? என்று சற்று டென்ஷன் ஏறியது.       

பார்த்திபனுக்கும் தனக்கும் இடையில் சகஜமான பேச்சுவார்த்தையை அபிராமி உலவ விட்டிருந்தாள். ஆனால் பேச்சு வார்த்தை மட்டுமே சகஜமாக இருந்தது. வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. அபிராமி படிப்பில் மூழ்கிவிட்டாள்.

அவளிடம் பார்த்திபன், “உன் அம்மா ஊருக்கு டிக்கெட் எடுத்து தர்றேன்னு சொன்னாங்க. அப்புறம். நீ ஏதாவது சொன்னியா? நாம சந்தோஷமா இருக்கமான்னு கேட்டாங்க”, என்றான்.

“இந்த அம்மாக்கு வர வர அறிவே கிடையாது”, என்று திட்டியவள். நேரிலும் அவரை வாங்கு, வாங்கு, என்று வாங்கி விட்டாள்.  

“என்ன பயம் உனக்கு? என்கிட்ட பத்து தடவை கேட்ட! நம்பாம அவர் கிட்ட கேட்டிருக்க, கல்யாணம் ஆனவுடனே இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி இன்ஸ்டன்ட் குழந்தையை பெத்தா ப்ரூவ் பண்ண முடியும்”, என்று கத்தினாள்.

ஏற்கனவே தேவையில்லாததை பேசிவிட்டோமோ பயத்தில் இருந்த அவளது அன்னை கண்களே கலங்கி விட்டார்.

“அச்சோ அம்மா! அழறியா சாரி, சாரி!  என்று நிறைய சமாதனபடுத்திய பிறகே கலாவதி தெளிந்தார்.

இங்கே வந்து பார்த்திபனிடம் மறுபடியும் சண்டை பிடித்தாள், “உங்களால அம்மாவை திட்டிடேன், அம்மா அழுதுட்டாங்க”, என்று அவனை ஒரு பிடி பிடித்தாள். கலாவதி அழுதார். பார்த்திபன் அழவில்லை. அதுவே வித்தியாசம்.    

இப்படியாக அபிராமி எல்லோரையும் கலக்கி. கலங்கவும் வைத்தாள்.

கலாவதியின் பேச்சு. அபிராமியின் சிறிதளவு கூட அலைபாயாத மனது. இதெல்லாம் சிறிது சிறிதாக பார்த்திபனுக்கு தான் அபிராமியின் அருகாமை இன்னும் தேவையாக தோன்ற துவங்கியது. சிறு பெண் படிக்கிறாள் என்று அறிவு உணர்த்தினாலும் மனம் அவள் அருகில் இருந்தாலும் அவள் தொடுகைக்கு ஏங்க துவங்கியது.

அது அவனை அபிராமியிடம் இருந்து விலக்கி நிறுத்தியது.       

Advertisement