Advertisement

அத்தியாயம் பதினேழு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

நனவில் நடக்கும் யுத்தம்

என் கனவிழும்,  இப்பொழுது.

அதில் வரும் நீ………….

விழிதிறந்து நான் காணும் கனவு 

விழிமூடினாலும் மறைவதில்லை.

கனவிலும் நனவிழும் வரும் நீ……….

நானாக வருவாயா ??

சிறிது நேரம் தான் அபி யை பார்க்க முடிந்தது. அதன் பிறகு பார்த்திபனுக்கு மாமனார் வீட்டிற்கு வந்தது போல இல்லை……… ஏதோ  இன்டர்வ்யூவிற்கு வந்தது போல இருந்தது.

அவனுக்கு தன்னோடு பேசியது யார் என்றெல்லாம் தெரியவில்லை. அபியின் தாத்தா, சித்தப்பா, மாமா,  மாற்றி மாற்றி மற்ற உறவுகள் எல்லாம்  அவன் என்ன  செய்கிறான்? என்ன படித்திருக்கிறான்? என்ற கேள்விகள் வந்தவண்ணம் இருந்தது.

இதெல்லாம் தெரியாமலேயேயா பெண்ணை கொடுத்தார்கள் என்று சற்று எரிச்சல் ஆராம்பமாக ஆரம்பித்தது. அபியும் என்ன இப்படி ரவுண்டு கட்டி கேள்வி கேட்கிறார்கள். இவனுக்கு கோபம் வருமோ? என்ற பதட்டம் வர ஆராம்பித்தது.

இவ்வளவு படிச்சிருக்கிற நீங்க ஏன் இந்த ஷாப் வெச்சிட்டு உட்கார்ந்திருகீங்க நல்ல வேலை கிடைக்குமே. சொல்லபோனா வெளிநாட்லயே ஈசியா வேலை கிடைக்குமே என்ற அறிவுரைகள் வர முகம் மாறாமல் காக்க மிகவும் சிரமப்பட்டான்.

இவ்வளவு படிச்சிருக்கிற எனக்கு என்ன பண்ணனும்னு தெரியாதா? உங்களுக்கா தெரியும்! என்ற கேள்வி வாய் வரை வந்ததை அடக்கினான்.

சத்தியமூர்த்தியும் இதை பார்த்துகொண்டு இருந்தார். அவன் யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடகூடாதே என்ற பயம் வர ஆரம்பித்தது. நித்யாவிற்காக பேச போனபோது பார்த்திபனின் கோபத்தை நேரடியாக பார்த்தவர். இப்பொழுது திருமணம் பேச ஆரம்பித்த பிறகு பார்க்கும் பார்த்திபன் அவருக்கு புதியவன். எவ்வளவோ பரவாயில்லை.

அதற்குள் அங்கே வந்த அபி, “தாத்தா நான் நம்ம வீட்டை அவருக்கு காட்டட்டுமா”, என்று கேட்டு அவனை அங்கிருந்து கூட்டிக்கொண்டு மேலே மாடிக்கு போனாள்.

“சாரி எல்லாரும் அட்வைஸ் திலம்ங்க! என்ன பேசனும்னு தெரியாது!”, என்றாள் அபி பார்த்திபனை பார்த்து.

“அட்வைஸ் தான் இந்த உலகத்திலேயே ரொம்ப ஈசியா கிடைகிறது எனக்கு தெரியும்”, என்ற பார்த்திபன் சற்று இடைவெளி விட்டு. “அபிராமி உனக்கு ஏதாவது இந்த என்னோட வேலை பிடிக்கலையா”, என்றான்.

“ச்சே! ச்சே! ஏன் இப்படி கேட்கறீங்க? எனக்கு உங்ககிட்ட எதுவுமே குறையில்லை”, என்றாள் பதட்டமாக. அவனை சங்கடத்தில் இருந்து காப்பாற்ற அழைத்து வந்தது இப்போது தங்களை வாக்குவாதத்தில் கொண்டு போவதை உணர்ந்தாள். 

“இல்லை? உங்க வீட்ல நான் வந்தவுடனே இத்தனை பேர் கேக்கறாங்கலே ஏதாவது கல்யாணத்துக்கு முன்னாடியே பேசினாங்களா என் வேலையை பற்றி”,

“இல்லையில்லை யாரும் பேசலை! சும்மா பொழுதுபோகாமா பேசறாங்க! அப்படியே நீங்க இவ்வளவு படிச்சிருக்கீங்க ஏன் இதை செலெக்ட் பண்ணினீங்கன்னு ஒரு ஆர்வத்துல கேட்பாங்க. அவ்வளவு தான், டோன்ட் மேக் இட் அன் இஸ்யு”,

“ஒரு வேலை உங்கப்பா சொன்னாரோ”,

“நோ, நோ அப்பா கட்டாயம் சொல்லலை, அவர் எந்த பெரிய மறுப்பும் நான் உங்களை திருமணம் செய்ய விரும்பிய போது கூட சொல்லலை”,

“உங்கப்பா ஏன் மறுப்பு சொல்லலை”,

“அது. எனக்கு தெரியாது”,

“எனக்கு தெரியும்! நான் உங்க நித்யா ஆன்டி சன் இல்லையா? அதனால”,

“ப்ச்! நித்யா அத்தை பையன்றது எங்கப்பாக்கு ஒரு காரணம் அவ்வளவு தான். அதுக்காக கல்யாணம் எல்லாம் யாராவது பண்ணுவாங்களா”, 

“உனக்கு ஏன் என்னை பிடிச்சது? என்ன காரணம்? எனக்கு தெரிஞ்சு எல்லாம் உங்க நித்யா அத்தையில தான் போய் முடியுது”, என்றான். பேச்சு தங்களுக்குள் மிகவும் திசை மாறுவதை உணர்ந்தாள்.

தயங்கி தயங்கி. 

“எனக்கும் நித்யா அத்தை உங்களை ஏன் விட்டாங்கன்ற காரணம் தான் திரும்ப பார்க்க வச்சது உண்மைதான். ஆனா அதனால மட்டும் உங்களை பிடிச்சதுன்னு சொல்ல முடியாது, பிடிக்கறதுக்கும் காரணம் சொல்ல முடியாது பிடிக்காததுக்கும் காரணம் சொல்லமுடியாது. ப்ளீஸ் தப்பா ஏதாவது நீங்களா எடுத்துக்காதீங்க”, என்றாள் வேண்டும் குரலில்.

அவன் இதற்கு பதிலே சொல்லவில்லை அமைதியாகவே நின்றான். அவனுக்கே வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று தான் தோன்றியது. வாழ்க்கையில் நிறைய நம்பிக்கை வைத்து சாதிப்பவன் தான். ஆனால் அபிராமிக்கு ஏன் தன்னை பிடித்தது என்பதில் தன் மீது நம்பிக்கை வைக்க மறந்தான்.  

 “நீங்க என்னை நம்பலியா”, என்றாள்.

“நம்பிக்கைன்ற பெரிய வார்த்தையெல்லாம் ஏன் பேசற அபிராமி”,

“அப்போ நான் உங்களை நித்யா அத்தையோட பையன்னு தான் கல்யாணம் பண்ணினேன்னு நினைக்கறீங்களா”,

“அதுவும் ஒரு காரணம்னு நீ இப்போ தானே சொன்னே”,

“அது அப்படியில்லை”, என்று சொல்லும்போதே. “அம்மா டீ குடிக்க வர சொல்றாங்க” என்று ஸ்ரீகாந்த் வந்தான்.

அவன் வந்ததும் அப்போதைக்கு பேச்சு முற்று பெற்றாலும் எதிலோ ஆரம்பித்து எதிலோ முடிந்தது இருவருக்குமே வருத்தம் கொடுத்தது. 

நித்யாவிற்காக தன்னை திருமணம் செய்துகொண்டாளோ என்ற எண்ணி பார்த்திபன் மனதில் வருத்தம் தோன்ற.

நித்யா அத்தைக்காக தன்னை திருமணம் செய்ததாக இவன் எப்படி நினைக்கலாம் என்ற அவள் மனதிலும் லேசாக கோபம்  தோன்ற.

அதை விடுத்து இருவருமே இயலாபாக ஸ்ரீகாந்தை நடத்தினர்.   

“வா ஸ்ரீ! நீ இன்னும் மாமாகிட்ட சரியா பேசலை. இப்போ பேசு”, என்றாள் அபிராமி.

என்ன பேசுவான் அந்த சிறுவன். “என்ன பேசறது”, என்றான் அபிராமியின் பக்கத்தில் வந்து மெதுவாக, அவன் பேச தயங்குவதை உணர்ந்த பார்த்திபன். 

“எதுவேனாலும் பேசலாம் நீ என் கிட்ட. சொல்லு நீ எந்த ஸ்டாண்டர்ட்”, என்று பார்த்திபன் ஆரம்பிக்க. 

“போடா டேய்”, என்றாள் அபிராமி ஸ்ரீகாந்தை பார்த்து. “இதுக்கு தான் உன்னை பேச சொன்னேன். போ போய் உனக்கு மேக்ஸ் கஷ்டம்ன்னு சொல்லி அழுவியே சொல்லு”, என்றாள் எரிச்சலாக பார்த்திபன் மறுபடியும் படிப்பை பற்றி ஆரம்பித்ததால்.

“மேக்ஸ் கஷ்டமா. புரிஞ்சிட்டா அது மாதிரி எதுவும் ஈசி கிடையாது”, என்று பார்த்திபன் மறுபடியும் சீரியசாக சொல்ல.

“இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்டா”, என்றாள் மனதிற்குள்ளேயே.

அதற்குள் மறுபடியும் அழைப்பு வர. கீழே சென்றனர். அப்போதுதான் பாஸ்கர் காத்திருப்பது ஞாபகம் வந்தது.

இவர்களை பார்த்ததும் புன்னகைத்தார். அபிராமி பதிலுக்கு புன்னகைக்க மறுபடியும் புன்னகைக்கவா வேண்டாமா என்று பார்த்திபனின்  உதடுகள் மெதுவாக அசைவை காட்ட.

“உங்களை டின்னர்க்கு கூப்பிட தான் சீக்கிரம் வந்தேன். இன்னைக்கு ஈவ்னிங் என்னோட டின்னர் வர்றீங்களா.”, என்றார்.

போவதா வேண்டாமா என்று பார்த்திபன் குழம்பி அபிராமியை பார்க்க. அவனின் நிலை புரிந்தவள், “வர்றோம் மாமா”, என்றாள்.

பார்த்திபன் பதில் சொல்லாதது அவருக்கு ஒரு குறையாக இருந்தாலும் அபிராமி வருகிறோம் என்று சொல்லியதால் விட்டுவிட்டார்.  

ஸ்ரீகாந்த் பார்திபனோடு நன்றாக ஒட்டிகொண்டதால் சற்று அபிராமிக்கு வேறு வேலை பார்க்க சௌகரியமாக. அவளுடைய ரூமில் உருட்டி கொண்டிருந்தாள்.

அப்போது அங்கே வந்த அவளுடைய சித்தி, “கொஞ்சம் நேரம் தூங்கு அபிராமி. ஏன் அதையும் இதையும் இழுத்து போட்டுட்டு இருக்க,”.

“கொஞ்சம் திங்க்ஸ் எனக்கு அங்க எடுத்துட்டு போகணும் சித்தி”, என்றவள் அவர் கேட்காத கேள்வியாக, “நல்லா தூங்கினேன் சித்தி”, என்றாள்.  

புதிதாக மனமானவர்கள் நன்றாக தூங்கினேன் என்றால் என்ன சொல்வது . அவருடைய சித்தி மறுபடியும். “நைட் நல்லா தூங்கினியா”, என்றார்.

“ஒஹ்! சித்தி தூங்கினேன்”, என்றாள்.

இதை கேட்ட அவர் வேகமாக கலாவதியிடம் ஓடி காதை கடிக்க.

“ஒண்ணும் நடக்கலை போல அக்கா நல்லா தூங்கினேன்னு சொல்றா”,.

“அவ்வளவு இஷ்டப்பட்டு தானே கல்யாணம் பண்ணிகிட்டா. ஒரு வேலை மாபிள்ளைக்கு பிடிக்கலையா”, என்ற கேள்வியை எழுப்ப.

அவசரமாக கலாவதி, “அப்படி எல்லாம் இருக்காது. இந்த காலத்து பசங்க எல்லாம் ரொம்ப ப்ளான் பண்ணி தான் செய்யறாங்க. வேற எதுவும் இருக்காது”, என்றார். சித்தியை சமாதனப்டுதியவாறு தன்னை தானேயும் சமாதானம் செய்து கொண்டார்.      

எதற்காகவும் காத்திராத நேரம் மறுபடியும் ஓட மாலை நல்கியது.

பாஸ்கரன் அவர்களை அழைத்த பிறகு சென்று விட்டார். அவர் சொல்லியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு அபிராமியும் பார்த்திபனும் கிளம்பினர்.

அவனோடு முதல் முறையாக டூ வீலரில் செல்கிறாள்.

அவனை இடிக்காமல் பிடிக்காமல் எப்படி உட்காருவது. அவனை பிடிக்காமல் வண்டியை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். அவன் மேல் படாமல் உட்கார முடியவில்லை. அவனை உராய்ந்தவாரே அமர. அவனுடைய அருகாமை, அவனோடு அமர்ந்து கொண்டு போவது, சற்று புது வித அனுபவமாக இருந்தது. 

எல்லோரும் அவளையே பார்ப்பது போல தோன்றியது. ஆனால் அதற்கு மேல் இடிப்பதற்கு அவசியமில்லாமல் வண்டியை ஸ்மூத்தாக ஓட்டினான் பார்த்திபன். அவர்களுக்குள்ளும் எந்த பேச்சும் இல்லை. மௌனமான பயணமாக அமைந்தது அது.

அவன் தந்தையை பார்க்கும் மனக்குழப்பதில் இருப்பதால் அபிராமியும் பேச்சு கொடுக்கவில்லை. காலையில் டின்னருக்கு சரி என்று விட்டதால் பார்த்திபன் தன்னிடம் கோபிப்பானோ என்று அபிராமி எதிர்பார்க்க, அந்த மாதிரி எந்த நிகழ்வும் இல்லை.  

அவர்கள் செல்லும் இடமும் வர. அங்கே அவன் தந்தை லாபியிலேயே காத்திருந்தார். இவர்களை வரவேற்க. அபிராமி அவரிடம் சகஜமாக பேசினாள். பார்த்திபன் வெறும் தலையசைப்போடு சரி.

ஒரு முறை டெல்லி வரும்படி அழைப்பு விடுத்தார், பார்த்திபனுக்கும் அபிராமிக்கு. இந்த முறையும் ஒரு மரியாதைக்காகவேனும் அபிராமி தான் “வர்றோம் மாமா”, என்றாள் பார்த்திபன் வாயை திறக்கவில்லை.

சாப்பிடும் ஹாலுக்கு செல்லும் முன் ஒரு பொட்டீக் இருக்க. “நீங்க பேசுங்களேன். நான் ஒரு ஜஸ்ட் அஞ்சு நிமிஷம் வந்துடறேன்”, என்று இருவருக்கும் தனிமை கொடுத்து விலகினாள்.

“ஏன் போகிறாய்?”, என்று பாஸ்கரும் கேட்கவில்லை, பார்த்திபனும் கேட்கவில்லை.

பாஸ்கர் தான். “என்ன பண்ற பார்த்திபா?”, என்று பேச்சை ஆரம்பித்தார்.  தெரியும் அவருக்கு இருந்தாலும் சொன்னான். தற்போழுது தெரிந்து கொண்டிருந்தாலும் என்ன படித்தான்? எங்கு படித்தான்? என்று விசாரித்தார்.  

கேட்ட கேள்விக்கு பதில் மட்டுமே பார்த்திபனிடம் இருந்து வந்தது. தன்னை பற்றி கூறினார். தன்னுடைய வேலை, மணமாகிவிட்டது. இரு பிள்ளைகள், ஒருவன் படித்துகொண்டிருகிறான், மற்றவன் அமெரிக்காவில் வேலையில் இருக்கிறான், என்ற விவரம் எல்லாம் சொன்னார்.

தான் ஏன் அவனை பார்க்க வரவில்லை என்று கூற விழைந்து தனக்கும் நித்யாவுக்கும் இடையில் நடந்த பிரிவை பற்றி கூற ஆரம்பித்தபோதே.,

“நடந்து முடிந்ததை பேசவேண்டாம், எனக்கு அதை தெரிஞ்சுக்க விருப்பமில்லை”, என்று விட்டான்.

“உங்கம்மா  சொல்லலை”, என்றார் பாஸ்கர். 

மௌனமே பதிலாக கிடைத்தது.

“நீ என்னோட முகம் கொடுத்து கூட பேசுவியோன்னு பயந்துட்டு தான் இருந்தேன்”, என்றான் மனதை மறையாமல்.

மறுபடியும். “உங்க அம்மாக்கு விருப்பமில்லை, அதனால நான் உன்னை பார்க்க வரலை”, என்றார்.

“எனக்கு எந்த குறையுமில்லை, அதை பற்றி இனி பேசி பிரயோஜனமில்லை”, என்றான்.

“இப்போ என்னவோ உங்கம்மாக்கு பிடிக்கலைன்னா கூட உன்னை வந்து பார்திருக்கனும்னு தோணுது. இது பெரிய, சரி பண்ண முடியாத தப்பு, எனக்கு தெரியும்”, என்றார் பாஸ்கர்.

சிறிது விட்டு. “உனக்கு என்ன வேணும்னாலும் என்னை கேளு”, என்றார்.

சொன்ன அவரை ஒரு நிமிடம் கண் எடுக்காமல் பார்த்தான்.  பின்பு. “அப்பா மகனுக்கு செய்யற வயசு, பக்குவம், எல்லாம் தாண்டிட்டேன். இனி மகன் தான் அப்பாவுக்கு செய்யனும். உங்களுக்கு ஏதாவது செய்யனும்னா என்கிட்ட கேளுங்க, கட்டாயம் செய்வேன். முடிஞ்சாலும் செய்வேன். முடியலைன்னாலும் முயற்சி செய்வேன்”, என்றான் உறுதியான குரலில்.

இதைகேட்ட அவருக்கு கண்களில் கண்ணீரே தளும்பிவிட்டது. “தேங்க்ஸ்”, என்றார். பிறகு “ஐ அம் சாரி. என்னால உங்கம்மாக்கு என்னை புரிய வைக்க முடியலை. அதனால நீ பாதிக்கப்படுவேன்னு கூட நான் நினைக்கலை. என்னை பார்க்கவே உனக்கு பிடிக்காது. என்னை பார்த்தால் உனக்கு வெறுப்பா இருக்கும்னு தான் நினைச்சேன். நிச்சயம் இந்த வரவேற்பை நான் எதிர்பார்க்கலை”.

“உனக்கு நீ என்ன செஞ்சிருக்கன்னு தெரியாது பார்த்திபா. எனக்கு ஒரு நிம்மதியான சாவை நீ கொடுத்துட்ட”, என்றார் உருக்கமாக. “நீ கூடவே இருக்கறதுக்கு உங்கம்மா ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும்”, என்றார்.

பேசும் கடைசி நிமிடம் வரை தனக்கு தன் அன்னை மேல் தாங்கல் என்பதை சிறிது கூட  தெரிய வரும்படி பேசவில்லை. தன் அன்னையை அவர் முன் அவன் விட்டு கொடுக்கவேயில்லை.

நேற்றிலிருந்து அவரவர்க்கு அவரவர் காரணங்கள் என்ற பக்குவத்தை அவனாக முயன்று வளர்த்துக்கொள்ள பெரு முயற்சி செய்து கொண்டிருந்தான். மன அமைதியையும் வர வெய்துக்கொண்டிருந்தான்.

அதானால் தான் எதிர்பார்த்த தன் தந்தையின் சந்திப்பை அமைதியாகவே கையாண்டான்.

“நம்ம கூப்பிடற வரைக்கும் அபிராமி வரமாட்டா. நான் அவளை கூப்பிடறேன்”, என்றான் பாஸ்கரனை பார்த்து, சிறிது தூரம் சென்று திரும்பி வந்தவன். நீங்க இப்போ என்னோட பேச முழு காரணமும் அவ தான், உங்களை இங்கே வரவழைச்சது, என்னை உங்களை பார்க்கவைத்தது எல்லாம் அபிராமி தான், இல்லைன்னா இப்போ கூட நான் உங்களை பார்த்திருக்க மாட்டேன்”,  என்று சிறு புன்னகையோடு சொல்லி சென்றான்.

“போகலாமா”, என்று உள்ளே வந்து அவளிடம் கேட்டான்.

மெதுவாக தயங்கி தயங்கி, “அது. வந்து.”, என்று இழுத்தாள் அபிராமி. என்ன? என்பது போல பார்தவனிடம். “ரொம்ப நேரமா இங்க இருந்த இந்த பொண்ணு, நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல, எடுக்கலைன்னாலும் பரவாயில்லை பாருங்கன்னு நிறைய டிசைன்கள் காட்டிட்டா. எடுக்காம போக என்னவோ மாதிரி இருக்கு. ஒண்ணு எடுதறலாமா. நீங்க பணம் கொண்டு வந்து இருக்கீங்களா”, என்றாள்.

“இதுக்கா இந்த இழு இழுத்த! எடுத்துக்கோ”, என்றான், என்னவோ ஏதோவென்று அவள் தயங்கியவுடனே நினைத்தவன்.

“வெளில அவர் காத்திருக்கார் சீக்கிரம் எடுத்திடு”, என்றான்.

இரண்டு சுடிதார், இரண்டு சேலை, செலெக்ட் செய்தவள், எது எடுக்கட்டும் சுடிதாரா? சேலையா?, சுடிதார்னா இதுல ஒண்ணு செலக்ட் பண்ணுங்க. சேரீன்னா இதுல ஒன்னை செலக்ட் பண்ணுங்க”, என்றாள் நிமிஷத்தில்.

அதைவிட நிமிஷத்தில் அந்த விற்பனை பெண்ணிடம். “எல்லாம் பில்  பண்ணிடுங்க”, என்றான்.

“அச்சச்சோ! எல்லாம் வேண்டாம். ஒண்ணு போதும். நானே வேணுன்னா எடுக்கறேன்”, என்று இவள் வேகமாக பேச.

“வேண்டாம் எல்லாம் இருக்கட்டும்”, என்றான்.

“வேண்டாம், வேண்டாம், ரொம்ப செலவு”,

“நம்ம எண்ணி எண்ணி செலவு பண்ணற நிலைமையில இல்லை அபிராமி” என்றான்.

அவள் கவனித்தே இருந்தாள் ,அவன் தனியாக பேசவில்லை, அவளையும் சேர்த்தே பேசினான்.

 அது கொடுத்த சந்தோஷம். “அதுக்குன்னு இப்படியா? இவ்வளவு நான் எடுத்துட்டு போனா உங்கப்பா என்ன நினைப்பாங்க”, என்றாள்.

“அவர் எங்கப்பான்றதே நீ வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியும். அவர் என்ன நினைச்சாலும் கவலை இல்லை வா”, என்று அழைத்துக்கொண்டு போனான்.

Advertisement