Advertisement

அத்தியாயம் பதினாறு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

உன்னுள் நடக்கும் யுத்தம்

எனக்கு தெரியும்!

முடிக்க முயற்சிகள் எடுத்துவிட்டேன்! 

என்னுள் நடக்கும் யுத்தம்

உனக்கு தெரியுமா?

முடித்து வைப்பாயா.?

புது இடம் என்பதாலோ என்னவோ அதிகமாக உறக்கம் வராமல் விடியற்காலையிலேயே விழித்துவிட்டாள் அபிராமி. எப்படி இரவு பார்த்திபன் படுத்தானோ அப்படியே படுத்துகொண்டிருந்தான், சற்றும் கலையாமல் இருந்தது அவன் போர்த்தியிருந்த போர்வை. தூக்கத்தில் இப்படி சற்றும் நகராமல் உறங்கினான் என்றாள் உறங்கும் போதும்  இவன் அசந்து உறங்க மாட்டான்  என்றுணர்ந்த அபிராமி அவனையே அவன் விழிக்கும் வரை கிட்டதட்ட அரைமணிநேரம் பார்த்திருந்தாள்.

அதிகாலை விழிக்கும் பழக்கமுடைய பார்த்திபன் எப்பொழுதும் போல் ஐந்தரை மணிக்கு உறக்கம் களைய அவன் கண்விழித்தவுடன் பார்த்தது அபிராமி தன்னை பார்த்துகொண்டிருந்தது தான்.

இவன் விழித்தது தெரிந்து இவனை பார்த்து சிரித்தவாறே, “குட் மார்னிங்”, என்றாள். “நான் உதைக்களை போல நீங்க கிரேட் எஸ்கேப்”. என்றாள்.

அவன் புரியாமல் பார்க்கவும். “எப்பவும் என் ரெண்டு சைடுல இருக்கிற தலைகானியும் நான் உதைச்சு உதைச்சு கீழ தள்ளியிருப்பேன். உங்களை நான் உதைக்களை போல, எப்படி படுத்தீங்களோ அப்படியே இருக்கீங்கன்னு நினைக்கிறேன்”, என்று படுதிருந்தவாரே அவனோடு பேசி சிரித்தாள்.

அவள் முக மலர்ச்சி அவளையும் புன்னகைக்க வைத்தது. அவள் சகஜமாக அவனோடு பேச முயல்வதை உணர்ந்தான். அவனுக்கு அது வரவில்லை.  அவளை பார்த்து “குட் மார்னிங்”, என்று சொன்னவன். “நான் வெளில போகிறேன்”, என்று போக.

அவள் அம்மா நேற்றே சொல்லியிருந்தார் கண்விழித்தவுடன் குளித்துவிட வேண்டும் என்று. அதை ஸ்ட்றிக்டாக அபிராமி கடைபிடிக்க குளியலறை புகுந்தாள்.

  அவன் அதிகாலை நேரம் எப்பொழுதும் போல தோட்டம் போக, வெளியே வர. ஹாலிலேயே சரத்தும், விஸ்வாவும் உறங்கி இருந்தனர்.

“இவர்கள் என் புது சொந்தங்களா. எனக்கு பேச தயக்கமாக இருக்கிறதே. பேச வரவில்லையே. ஆனால் இவர்கள் எப்படி தயக்கமில்ல்லாமல் பேசுகிறார்கள்”, என்று எண்ணியவாறே சிறிது நேரம் அவர்களை பார்த்தவன். அவர்களை கடந்து தோட்டம் சென்றான்.

உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த நித்யாவும் வெளி கதவு திறக்கும் சத்தம் கேட்டு  வெளியே வந்து பார்க்க. பார்த்திபன் தோட்டம் நோக்கி செல்வது புரிந்து அவன் பின்னோடு சென்றவர், பார்த்திபனின் அருகில் சென்று நின்றார். எப்படி ஆரம்பிப்பது, என்ன பேசுவது என்று தெரியவில்லை.

பார்த்திபன் அவர் பக்கம் நின்றபோது பார்த்தவன் அவரை பார்த்து புன்னகைக்கவா வேண்டாமா என்று யோசிக்க. அதை உணரும் மனநிலையில் இல்லை நித்யா.

“பார்த்திபா! நான் ஏன் அப்படி நடந்துகிட்டேன்னா”, என்று ஆரம்பிக்க “எப்போ?”, என்றான். “சின்ன வயசுல”, என்று மறுபடியும் ஆரம்பிக்க.

“பேச வேண்டாம்”, என்பது போல கை காட்டிய பார்த்திபன்.

அவரிடம் தன் சிறுவயதில் தனித்து விடப்பட்ட விஷயத்தை முதலும் கடைசியுமாக பேசவேண்டிய அவசியத்தை உணர்ந்தவன்.

“நடந்தது எதுவும் மாறாது. என்ன விளக்கம் இருந்தாலும் எனக்கு அது வேண்டாம். நியாயமா இருந்தாலும் பரவாயில்லை! இல்லாட்டாலும் பரவாயில்லை! நீங்க ஜெயாமாவோட பொண்ணு. அதுதான் எனக்கும்”,

“பார்த்திபா”, என்று ஆரம்பிக்க.

எப்போதும் பேசாத பார்த்திபன் இன்று இதை பேசிவிடுவது என்ற முடிவோடு அவரை பேசவிடாமல்.    

“ப்ளீஸ்! எந்த விளக்கமும் தேவையில்லை எனக்கு. நீங்க எப்போ போணீங்கன்னு என்னை விட்டு போனீங்க தெரியாது. எப்போ?.”, என்றான் நித்யாவையே பார்த்து.

“உனக்கு நாலு வயசு”, என்றார்.

“எனக்கு அது ஞாபகமில்லை. ஆனா நீங்க என்னை கூட்டிட்டு போக வந்தது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கு. அப்போ நான் செகண்ட் ஸ்டாண்டர்ட். அப்போவே நான் வரமாட்டேன்னு சொன்னேன்”.

“நீங்க மறுபடியும் மறுபடியும் வந்தீங்க! நான் ஒரு நாள் நீங்க வந்தப்போ வீட்டை விட்டு போயிட்டேன். எல்லாரும் என்னை தேடி, கூட்டிட்டு வந்தாங்க. நீங்க போனா தான் வருவேன்னு சொன்னேன். ஏன் சொன்னேன்னு எனக்கு தெரியாது, என்கிட்ட விளக்கமும் கிடையாது”.

“நடந்ததை இனி உங்களால, இல்லை, என்னால, யாராலையும் மாற்ற முடியாது. அதனால அதை பற்றி பேசவேண்டாம். நடந்தது எதுவா இருந்தாலும் அப்படியே இருக்கட்டும். உங்களுக்கு நல்ல கணவர், நல்ல மக்கள், என்னை நிமிஷம் அவங்க ஏத்துகிட்டாங்க. என்னால முடியுமா எனக்கு தெரியலை.”, என்று இடைவெளி விட்டவன் நித்யாவின் முகத்தை பார்க்க வாயடைத்து போனவராய் அவனையே பார்த்திருந்தார்.    

அவர் முகத்தையே பார்த்து தயவு தாட்சண்யமின்றி சொன்னான், “மறந்துபோன நான் மறந்து போனவனாவே இருக்கேன். என்னை மறந்து அவர்களை கவனிங்க. எனக்கு யாரும் தேவையில்லை”, என்று அவனையரியாமலேயே கடினமான குரலில் வெளிவந்தது.

“நான் உன்னை எப்பவும் மறக்களை”, என்று அழுகை ஆரம்பிக்கும் தொனியோடு வந்தது நித்யாவின் குரல்.

சட்டென்று குரலை மாற்றியவன். “இனிமே என்ன நடக்கும் எனக்கும் தெரியாது, நல்லதாவே நடக்கும்னு நம்புவோம்”, என்றவன் எதையோ தரையில் கீழே பறித்தவன். என்பேச்சு முடிந்தது என்பது போல. “அந்த தண்ணிய கொஞ்சம் எடுங்க” என்றவன் அவர் எடுத்து வந்து கொடுத்தபிறகு வேலையை பார்க்க. இதையெல்லாம் பின்னோடு வந்த பிரகாஷ் கேட்டிருந்தார். அவர்கள் கவனிக்கவில்லை.

நித்யா தண்ணீரை கொடுக்கும் போதே. “நித்யா”, என்று அப்போதுதான் உள்ளே இருந்து வந்தவர் போல கூப்பிட்டார்.

உள்ளே வந்த நித்யாவிடம் கடுமையான குரலில். “என்ன சொல்ல போன?”, என்றார்.

“அது நான் அவனை விட்டுடேன் இல்லையா”, என்று ஆராம்பிக்க .

“நீ அவனை விடலை, நீ அவனை பிரிஞ்சிட்டேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது”.

“என்ன காரணம் சொல்லுவே அவன் கிட்ட? உங்கப்பாவை எனக்கு பிடிக்கும் நீ அவர் மாதிரி இருந்ததால உன்னை விட்டுடேன்னு சொல்வியா”, என்று அதட்டி கேட்க்க

நித்யாவிர்க்கு அழுகை வந்து அழ ஆராம்பித்தார்.

சற்று தணிந்த பிரகாஷ். “இது தான் காரணம். இந்த விளக்கம் கட்டாயம் நீ அவன் கிட்ட சொல்லமுடியாது. அப்புறம் நம்ம இப்போ வாழற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போய்டும் நித்யா. பார்த்திபன் சமாளிச்சுகுவான் ஆனா சரத்தும் விஸ்வாவும் கட்டாயம் சமாளிக்க மாட்டாங்க”, என்றார்.

“நான் என்ன பண்ணட்டும்”, என்றவரிடம். “ஒண்ணும் பண்ண வேண்டாம். இப்போ கொஞ்சம் சரியாயிருக்கு. இன்னும் காலம் சரி செய்யுதா பார்ப்போம்”, என்றவர் அழும் அவரை தேற்ற முயன்றார்.   

இதையெல்லாம் அறியாத அபிராமி குளித்து வந்து பார்த்தால். ஹாலில் சரத்தும் விஸ்வாவும் தூங்க. வேறு யாரையும் வீட்டிற்குள் நடமாட காணாததால் வெளியே வந்து பார்த்திபனை பார்த்தவள். “இன்னும் யாரும் எழலியா”, என்று பேச்சு கொடுத்தாள்.

செடிகளிடத்தில் ஏதோ செய்து கொண்டிருந்த பார்த்திபன். “உங்க நித்யா அத்தை இருந்தாங்களே.”, என்றான் உங்க நித்யா அத்தையில் அழுத்தம் கொடுத்து. “என்னோட பேசினாங்கலே. இப்போ தான் போனாங்க”, என்க.

“நீங்க பேசினீங்களா”, என்று ஆர்வமாக கேட்டு. கீழே உட்கார விழைய. “அச்சோ மண்ணு. டிரெஸ் பாழாயிடும். அங்கே போய் உட்கார்.”, என்று உட்கார கட்டியிருந்த திட்டை காட்டினான்.

“மத்தவங்களுக்கு சத்தம் கேட்காதா? அங்கே இருந்து பேசினா”, என்று அபிராமி கேட்க.

“உங்க வீட்டு மாடியில இருந்து என்கிட்ட பேசுவ. அப்போ சத்தம் கேட்காதா.  இப்போ இந்த தூரம் உனக்கு அதிகமா?”, என்றான்.

அன்றைய நாட்களின் நினைவுகளில் புன்னகை மலர்ந்தது அபிக்கு. 

“இப்படி திரும்ப பதிலே சொல்ல முடியாதபடி பேசினா. நான் என்ன பண்ணட்டும். வேணும்னா நான் மறுபடியும் மேலே போய் நின்னு பேசவா”,

“இப்போ பதில் பேச முடியாதபடி நீ தான் பேசுற”, என்றவன். “இருந்தாலும் உனக்கு சத்தம் அதிகம் தான். தினமும் நானும் ஜெயாமாவும் அதை கேட்போம். நீ உங்க அம்மா கூட எழுந்திருக்க, கோலம் போட சண்டை போடறதை”, என்றான் அவனும் இப்போது புன்னகையுடன்.

“இங்க யார் போடுவா. நான் போடணுமா?”, என்று அபி கேட்க.

“தேவையில்லை அதுக்கு ஒரு ஆள் இருக்காங்க. தினமும் வந்து அவங்க போடுவாங்க, நோ ப்ராப்ளம்” என்றான்.  

  “அப்போ நான் இங்க என்ன வேலை செய்யணும்”,

“உங்க வீட்ல என்ன வேலை செஞ்ச?”,

“ரொம்ப செய்யமாட்டேன் படிக்கணும் இல்லையா”,

“இங்கயும் அதே செஞ்சா போதும்! படிக்கற பொண்ணை கல்யாணம் பண்ணி படிப்பு கெட கூடாது. முன்னாடி எப்படி படிச்சியோ? இனிமே நீ நல்லா படிக்கணும் அபி. கல்யாணம் எந்த வகையிலும் படிப்பை பாதிக்க கூடாது”, என்றான்.

“கடவுளே! கல்யாணம் ஆகி முதல் நாள் நன்றாக படிக்க வேண்டும் என்று வசனம் பேசுகிறான். இவன் பார்க்க கஷ்டப்பட்டு நான் தயாராகி வந்திருக்கிறேன். என்னை பார்த்தானா கூட தெரியவில்லை”, என்று அவள் யோசிக்கும் போதே.

“என்ன அபிராமி”, என்றான்.

“ம்! நான் ரொம்ப லேட் பிக் அப்! நல்லா படிப்பேன்னு சொல்ல முடியாது!”, என்றாள் வேண்டும் என்றே சற்று குரலில் எரிச்சல் இழையோட.     

அவள் சொல்லும் விதம் பார்த்து. “பொய் சொல்றீயா”, என்றான்.

“தெரியுதில்லை! அப்புறம் என்ன கேள்வி? நான் போய் எங்க நித்யா அத்தையை பார்க்கிறேன்”, என்று வேண்டுமென்றே எங்க வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொல்லி சென்றாள்.

“இவள் என்னடா பேசாத நம்மை கூட அதிகம் பேச வைத்து விடுவாள் போல”, என்று எண்ணி வேலையை தொடர.

“பார்த்திபா இன்னைக்குமா தோட்ட வேலை. சீக்கிரம் குளிப்பா. உங்க மாமனார் வீட்டுக்கு மறு வீட்டு விருந்துக்கு போகணும். அங்கே இருந்து கூப்பிட வந்துடுவாங்க”, என்றார்.

“இனி இது வேறயா”, என்று சலித்துக்கொண்டே குளிக்க சென்றான்.

“அதற்குள் அவனுக்கு டீ எப்படி போடவேண்டும்”, என்ற பக்குவத்தை ஜெயாம்மா அபிராமிக்கு கற்று கொடுத்தவர். “நீ எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாமடி பொண்ணு, அவனுக்கு என்ன தேவையோ அதை பார்த்துக்க போதும்”.

“ஆனா அவனை நல்லா பார்த்துக்கோ. எது வேண்டுமனாலும் வாயை தொறந்து கேட்க மாட்டான். நம்மளா பார்த்து பார்த்து தான் செய்யணும். சின்ன வயசுல இருந்தே அந்த கெட்ட பழக்கம். அவன்கிட்ட அடிபட்டா கூட சொல்ல மாட்டான். நானா பார்த்து மருந்து போட்டா தான்”.

“வெளி காயத்துக்கே இப்படின்னா. உள் காயம் என்ன இருக்குன்னு கூட எங்களுக்கு தெரியாது, பார்த்துக்கோ அவனை”, என்றார் மிகவும் உணர்ந்த கலங்கிய குரலில்.

அவர் வருத்தப்டுவதை பார்த்தவள் “கட்டாயம் பார்த்துபேன் பாட்டி. அவரையும், உங்களையும். ஆனா என்னை நீங்க தான் பார்த்துக்கணும். என்ன செய்யணும்னு சொல்லுங்க? செய்யறேன். எனக்கா தெரியாது, தடுமாறுவேன்”, என்றாள்.

“அதுகென்னடியம்மா சொல்லிட்டா போச்சு”, என்றார். “இப்போ போய் இந்த டீயை அவன் கிட்ட கொடு, பசிக்கும்.  எவ்வளவு நேரம் ஆனாலும் வாயை தொறந்து கேட்க மாட்டான். காலையில இருந்து தோட்டத்துல இருக்கான்”.

“உனக்கும் எடுத்துட்டு போ, நீ என்ன குடிப்ப?”, என்று கேட்டு அவளுக்கு வேண்டியதையும் கொடுத்து அனுப்பினார்.

அவள் ரூமிற்குள் சென்றாள். குளிக்கும் ஓசை கேட்டது. அப்பொழுதுதான் அறையை நன்றாக பார்த்தாள், பெரிய அறை, ஆனால் எதுவும் ஒழுங்கில்லை எல்லாம் அப்படி அப்படியே இருந்தது.             

எதை எங்கெடுத்து வைப்பது என்று தெரியாததால் அமைதியாக இருந்தாள். 

அதற்குள் குளித்து வெளியே வெற்று மார்புடன் ஒரு துண்டை மட்டுமே உடுத்தி வந்த பார்த்திபன் அபிராமியை அங்கு எதிர்பார்கவில்லை. ஆண்மகன் அதுவும் கணவன் உள்ளே போக சொல்லி அவனுள் எழுந்த கூச்சம் சொல்ல. பொண்ணு முன்னாடி வெட்கப்பட்டு உள்ளே போவதா என்று கௌரவம் தடுத்தது. மறுபடியும் உள்ளே போக முடியாது. அதே சமயம் உடை அணிய வேண்டும். அவள் முன்னாள் கூச்சமாக இருந்தது.

தடுமாறினான். இப்படி ஒரு கோலத்தில் பார்த்திபனை பார்த்த அபிராமிக்கு அவன் தோற்றம் மனதில் உரைக்கவில்லை. அவன் தடுமாற்றம் சிரிப்பை கொடுக்க. “டீ ஆறிடும் குடிங்க”, என்று அங்கேயே அமர போக.

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணரீயா அபிராமி”, என்றான்.

“என்ன?”, என்பது போல பார்த்தவளிடம். “நான் டீ குடிச்சிட்டே பேப்பர் படிப்பேன். வெளில பேப்பர் இருக்கும் எடுத்துட்டு வர்றீயா”, என்றான் சீரியசாக

அபிராமியும் வெளியே செல்ல. அவசரமாக ரூம் தாளிடும் சத்தம் கேட்டவள் தான். இவன் டிரெஸ் மாற்றுவதற்காக சொல்லியிருக்கிறான் என்று உணர்ந்து முகம் புன்னகையை பூச.

“யப்பா! ஒரு டிரெஸ் மாட்டறதுக்கு எவ்வளோ யோசிக்க வேண்டி இருக்கு”, என்று வேகமாக உடையனிந்தவன் கதவை திறக்க. அபிராமி இல்லை. அப்போதுதான் அவன் டீயோடு சேர்ந்து அவள் பாலும் இருக்க. “ஜெயாம்மா அபிராமி பால் ஆருது. அவ எங்கே?”, என்று குரல் கொடுக்க.

“வெளில தள்ளி கதவை சாத்திட்டு. என்ன ஆருதுன்னு சத்தம்”, என்று அவனிடம் சத்தமிட. அவசரமாக உள்ளே அவளுக்கு வழிவிட்டவன், “மெதுவா பேசு அபிராமி, எல்லாரும் கவனிப்பாங்க”, என்றான்.

“ஆறிபோச்சு”, என்றாள். “நான் சூடு பண்ணட்டும்மா”, என்றவனிடம்.

“அம்மாடியோ! இவ்வளவு நேரமா பாட்டி நான் உங்களை எப்படி பார்துக்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க! இப்போ நீங்க இதை சூடு பண்ண போனீங்க அவ்வளவு தான்! முதல் நாளே உங்க கிட்ட வேலை வாங்கரேன்னு சொல்வாங்க. ஆரிபோனாலும் போனாலும் பரவாயில்லை,  அதையே குடிக்கறேன்”, என்று ஒரே மூச்சில் கடகடவென குடித்தாள்.

“ஐ அம் சாரி”, என்றவனிடம்.

“பார்க்கலாம் என்னை எவ்வளவு நாள் வெளில தள்ளுரீங்கன்னு”, என்று மறுபடியும் அவனிடம் சற்று கோபமாக பழிப்பு காட்டியவாறே வெளியில் சென்றாள்.

அந்த கோபம் சற்று பார்த்திபனை பதட்டபடுத்தியது.

அதற்குள் சரத்தும் விஸ்வாவும் எழுந்திருக்க அவர்களோடு பேசி. நித்யா வோடு பேசி. என்று நன்றாக பொழுது அபிக்கு போக.

அதற்கு பிறகு எந்த வேலையும் இல்லாமல், யாரோடு பேசுவது என்று தெரியாமல். மறுபடியும் தோட்டம் நோக்கி பார்த்திபன் கால்கள் திரும்ப. அவன் மறுபடியும் தனிமையை நாடி போவதை உணர்ந்த அபிராமி. அவனையும் தங்கள் பேச்சோடு இணைத்து நிறுத்தினாள். உன்னை விடமாட்டேன் என்பதுபோல இருந்தது அவள் செய்கை.

இதை அங்கிருந்த யாரும் அறியா வண்ணம் செய்தாள். அவளுக்கு பார்த்திபனை கவனிப்பதை விட என்ன வேலை?. சரத்தும் விஸ்வாவும் என்ன படிக்கிறார்கள் என்று பேச ஆரம்பிக்க. பேச்சு படிப்பை பற்றி திரும்பியதால் சற்று பார்த்திபனின் கவனம் பேச்சில் லயித்தது. சரத்தும் விஸ்வாவும் அவனோடு உரிமையோடு பேசினர்.

பாதி அபியின் புராணமும் குறும்புகளும். அவளை பற்றி நிறைய அவர்களுக்கு தெரிந்திருந்தது. கேட்க சுவாரஸ்யமாயும் இருந்தது.    

சரத்தும் விஸ்வாவும் பார்த்திபனிடம் பேச ஆர்வம் காட்டினர். அதனாலயே பேச்சை வளர்த்தனர். நித்யாவும் அங்கே இருக்காமல் சமையலறையில் புகுந்து கொண்டார். தான் இருப்பது பார்த்திபன் அவர்களோடு பேசுவதை தடுக்குமோ என்ற காரணத்தால்.  

பேசிமுடிக்கும் முடிக்கும் முன்னரே மறுவீட்டு விருந்துக்கு அழைக்க அபிராமியின் சித்தியும் சித்தப்பாவும் வர.

சாப்பிட்டு முடித்து பார்த்திபனோடு அபிராமி தன் தாய் வீடு நோக்கி தூரமே இல்லாத தூரமாய் பயணப்பட……… அங்கே இவர்களுக்கு முன் பாஸ்கர் இருந்தார். பாஸ்கர் வருவார் என்ற காரணத்தினாலேயே அபிராமியின் அத்தை இந்துமதியின் குடும்பம் தங்கியிருந்தது.

இவர்களை பார்த்தவுடன் ஆரவாரமாய் வரவேற்க.

கலாவதியை பார்த்தவுடன் அபி “அம்மா”, என்று ஓட.

அவரும் பாசமாய் அணைத்துக்கொள்ள.

“வருஷமா ஆகிவிட்டது, நேற்று தான் பார்த்தார்கள். அதுவும் பக்கத்துக்கு வீடு. இப்படி ஏன்”, என்ற யோசனை தாயன்பை அனுபவிக்காத பார்த்திபனுக்கு புதிதாய் தோன்றியது. 

புது இடம், புது வரவேற்பு. மிகவும் சங்கோஜமாய் உணர்ந்தான் பார்த்திபன்.  

அவனையே விடாது பாஸ்கர் பார்த்திருக்க., சத்தியமூர்த்தியும் பார்த்திபனோடு என்ன பேசுவது என்று ஆராய. ஸ்ரீகாந்தை அவன் அருகில் செல்ல சொல்ல. அவனும் நான் போகலை என்று பின்னடிக்க.  

இதையெல்லாம் பார்த்தும் பாராமல் பார்த்த பார்த்திபனுக்கு இன்னும் சங்கோஜம் அதிகமாக துவங்கியது.

யாரையும், எப்போதும், எதற்கும் தேடாத பார்த்திபன் முதல் முறையாக அபியை தேடினான்.

தன் அன்னையை பார்த்த நிமிடத்தில் அபி பார்த்திபனை மறந்து அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க.

அந்த இடத்தில் மிகவும் அந்நியமாக உணர்ந்து. காப்பாற்ற அபி வருவாளா? என்று பார்த்திபன் பார்த்திருந்தான்.

Advertisement