Advertisement

அத்தியாயம் பதிமூன்று:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தத்தை நான் மற்றவர்களுக்கு

தெரியாமல் நடத்தி நடத்தி ஓய்ந்து விட்டேன்

நான் ஓயும்போது தான் இது ஓயுமோ

தெரியவில்லை. வாழ்க்கை எனக்கு

என்ன வைத்திருக்கிறது என்று.???

 ஜெயாம்மா நடந்ததை எல்லாம் ராமகிருஷ்ணன் தாத்தாவிடம் சென்று சொல்லி கொண்டிருந்தார்.

“ஏதோ அவன் இனிமேலாவது சந்தோஷமா இருந்தா சரி. நாம எவ்வளவு தான் நல்லா பார்த்துகிட்டாலும் அவனுக்கு மனசுல நிறைவு கிடையாது. அப்பா அம்மாவை நினைச்சு அவனையே வருத்திக்கறான். இனிமேலாவது நிறைவோட வாழ்ந்தா சரி”, என்று பேசிகொண்டிருந்தார்.

தினமும் ஒருமுறையாவது ஏதாவது காரணம் வைத்து அபிராமி  பார்த்திபனுக்கு போனில் பேசி விடுவாள். அவனாக இதுவரை ஒருமுறை கூட அழைத்தது இல்லை. அதெல்லாம் அபிராமியை நிறுத்தவில்லை. அவன் பதில் பேசுகிறானா இல்லையா என்று கூட கவலைப்படமாட்டாள். பார்த்திபனுக்கு அபிராமியிடம் பேசவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் முடியவில்லை. அவனுக்கு அது தெரியவில்லையா, வரவில்லையா, அவனுக்கே புரியவில்லை. அவள் பேசுவது அவனுக்கு பழக்கமாகிவிட்டது.      

எல்லாரும் எதிர் பார்த்த திருமண நிகழ்வு நெருங்கி வர. திருமணத்திற்கு முதல் நாள் நித்யா சென்னை வந்து ஹோட்டலில் தங்கினார். பலமுறை பிரகாஷிடம், “அங்கே பார்த்திபன் எப்படி நடந்து கொள்வான் என்று தெரியாது. எப்படி நடந்தாலும் எனக்காக பொருத்துக்கொள்ளுங்கள்”, என்று கேட்க.

“உனக்காக இல்லைனாலும் அவனுக்காக கண்டிப்பா”, என்று பிரகாஷ் பதில் கொடுத்தார்.

ஏதாவது ரசாபாசமாகிவிட்டால் என்ன செய்வது என்று அவர்களுடைய பிள்ளைகளை விட்டு வந்திருந்தனர். ஒருவன் காலேஜ்  கடைசி வருடத்தில் இருந்தான். மற்றொருவன் இரண்டாவது வருடத்தில். இருவருக்கும் ஒரு அண்ணன் இருப்பது தெரியும். இருவருக்கும் சத்தியமூர்த்தி குடும்பம் நல்ல பழக்கம் என்பதால் இருவரும் அபிராமியின் திருமணத்திற்கு வர ஆர்வம் காட்டினர்.

“அங்கே என்ன நிலவரமோ தெரியவில்லை பின்பு கூப்பிட்டு கொள்கிறேன்”, என்று அவர்களிடம் பலமுறை சமாதனம் சொல்லிய பிறகே இருந்தனர்.   

நித்யாவிற்கு பதட்டமாக இருந்தது.

அங்கே அவரின் தந்தை  ராமகிருஷ்ணனும் பதட்டமாக இருந்தார்.

நித்யா வரவேண்டும், இந்த பார்த்திபன் ஏதும் பிரச்சினை செய்யாமல் இருக்க வேண்டும். அதே போல் பாஸ்கரன் வராவிட்டால் பரவாயில்லை, ஒருவேளை வந்து விடுவானோ. வந்து விட்டால்.

சத்தியமூர்த்திக்கும் மிகுந்த பதட்டம். இங்கே நித்யா வந்தாள், பார்த்திபன் எப்படி எடுத்துகொள்வான். இன்னும் தன்னிடமே ஒரு வார்த்தை சரியாக பேசாதவன். 

அவருக்கும் பாஸ்கர் ஒருவேளை திருமணத்திற்கு வந்துவிட்டால் பார்த்திபன் அவரை எப்படி எதிர்கொள்வான். நித்யா எப்படி எதிர்கொள்வாள். அவருக்கும் பதட்டமாக இருந்தது. திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டுமே என்ற கவலை அதிகமாக இருந்தது. எப்படி இவர்களை சமாளிக்க போகிறோம் என்று.

அன்று மாலை நடந்த பெண் அழைப்பிற்கு மண்டபத்தில் எல்லாரும் மும்முரமாக இருக்க. எல்லா கடவுளையும் வணங்கியபடி நித்யா மண்டபத்திற்கு பிரகாஷோடு வந்தார்.

அப்போது தான் அழைப்பு முடிந்து மேடையில் பெண்ணும் மாப்பிள்ளையும் நிற்க. பார்த்திபன் நித்யாவை பார்க்கவில்லை, பார்த்தும் வருடக்கனக்காகி விட்டது. அபிராமி உடனே பார்த்துவிட்டாள். பார்த்தவுடன் பார்த்திபன் எப்படி எடுத்துகொள்வானோ என்று பயம்.

அங்கே வேணுகோபாலனின் பெண் மகள் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் வர. அவர்கள் தானே பார்த்திபனின் தந்தை வீட்டினர். அபிராமி வீட்டினர் அவர்களை வரவேற்று கவனிப்பதில் இருந்தனர். சத்தியமூர்த்தி பிரகாஷை பார்த்தவுடன் தன்னுடன் இருத்திகொண்டார்.

நித்யா தன் பிறந்த வீட்டு உறவுகளை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தவுடன். அவர்களுடன் பேசும் அவசியத்தை உணர்ந்தவளாக அவர்கள் எல்லோருடனும் அளவளாவிக் கொண்டிருந்தார். நெஞ்சில் பார்த்திபனை பற்றி மிகுந்த பதட்டம் இருந்த போதும் அவனை ஆசை தீர கண்களால் நிரப்பிக்கொண்டு மற்றவர்களுடன் பேசிகொண்டிருந்தார். அவர் வெறுத்த அந்த தோற்றத்தை இன்று அவர் அறியாமலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்துக்கொண்டேயிருந்தார்.

ஜெயாம்மா ஊரில் இருக்கும் அத்தனை கடவுளிடமும் தன் பேரனுக்கு கோபம் வரகூடாது என்று வேண்டிகொண்டிருந்தார்.

அழகான அபிராமி மணப்பெண் அலங்காரத்தில் இன்னும் ஜோளித்துகொண்டிருந்தாள். பார்த்திபனின் நண்பர்கள் வர அவர்களிடம் பேசியபடியே மேடையில் நின்றிருந்தவன் பார்வை வட்டத்தில் அப்போது தான் நித்யா விழுந்தார். ராமகிருஷ்ணனை பார்க்க, “இருகட்டும்டா”, என்று கண்களாலேயே கெஞ்சினார்.

அவர் பெண். அவர்கள் வீட்டு திருமணமாகி விட்டதா. நான் யார் என்று அவனுக்கு அவனே கேட்டு. யார் மீதும் கோபத்தை காட்ட முடியாத இயலாமையில் இருக்க,  அப்போது பார்த்து வேணுகோபாலன் தனது மகளையும் அவரது குடும்பத்தையும் மேடைக்கு அழைத்து வந்தார்.

“இது உன்னோட தாத்தா பாட்டி”, என்று அறிமுகப்படுத்த. யாரையோ அறிமுகப்படுதிகிறார் என்று முயன்று முகத்தை சரி படுத்த நினைக்க.

“அப்படியே நம்ம பாஸ்கரை சின்ன வயசுல பார்த்தது மாதிரி இல்லைங்க”, என்றார் அந்த அறிமுகப்படுத்தபட்ட பாட்டி தாத்தாவை பார்த்து.

“ஆமாம்”, என்பது போல தலையசைத்தார் அவர். இப்போது தான். யார் இவர்கள் என்பது போல் சந்தேகமாக பார்க்க.

“என்ன பா சரியா தெரியலை இல்லையா, நான் உன் பெரியம்மா”, என்று வேணுகோபாலனின் மகள் அறிமுகபடுத்திகொள்ள. “நான் பெரியப்பா”, என்றார் ஒருவர். அவரோட இன்னும் யாரோ அண்ணன் என்றார். அண்ணன். நித்யாவை பார்த்த அதிர்ச்சியிலிருந்த பார்த்திபனுக்கு இப்போது சுத்தமாக புரியவில்லை

யாரை பார்ப்பது என்று கண்கள் தேட. பக்கத்தில் அபிராமி இருந்தாள் அவன் மனதை படித்தவள், “இது எங்க அத்தை”, என்றாள்.

இவள் உறவு போல என்று அவன் நினைக்கும் போதே. “நானே இன்னைக்கு தான் பார்க்கிறேன்”, என்றவள். “உங்களுக்கு பெரியம்மா, அதாவது உங்க அப்பாவோட அண்ணி”, என்றாள்.

உறவு முறைகள் இப்படி சொன்னால் பார்த்திபனுக்கு புரிவது சிரமமே. ஆனால் அப்பா என்ற வார்த்தை புரிந்தது அல்லவா. அவனுக்குள் என்ன நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. அவனுக்கு என்ன மாதிரியான ஒரு பாவனையை காட்டுவது என்று கூட தெரியவில்லை.

நித்யாவை பார்த்தான். அவரும் இந்த நிகழ்வுகளை பார்த்து கொண்டிருந்தார். பார்த்திபன் அவரை பார்க்கவும். அவருக்கும் அவர்கள் பார்த்திபனின் தந்தையின் உறவுகள் என்று தெரியும். அவர்களை முதல் முறையாக பார்க்கிறான் என்றும் தெரியும். அவர்கள் அழைக்கப்பட்டதும் சத்திய மூர்த்தியின் மூலமாக தெரியும்.

இவன் என்ன செய்ய போகிறான் தன்னிடம் முகம் திருப்புவது போல அவர்களிடம் திருப்புவானா. இல்லை அவர்களிடமும் முகம் காட்டுவானா.  அவரும் பார்த்திபனையே பார்க்க. நித்யாவின்  நேர் பார்வையை விரும்பாத பார்த்திபன் முகம் திருப்பினான்.

திருப்பியவன் கண்களில் பட்டது அபிராமி. அவளை பார்க்க. அவள் நான் பார்த்துகொள்கிறேன் என்றொரு பார்வை பார்த்து அவனுக்கும் ஈடு கொடுத்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் இருந்ததால் ஜெயாமாவும் ராமகிருஷ்ணன் தாத்தாவும் மேடைக்கு வராமல் என்ன நடக்கிறது என்று பார்த்தனர்.

என்ன செய்வது? என்ன சொல்வது? என்ன கேட்பது? என்ன பேசுவது? என்று எதுவும் அறியாத பார்த்திபன் அமைதிகாத்தான். அவர்கள் அவனை விடுவதாக இல்லை. அவனை ஏதேதோ கேள்வி கேட்க பதில் சொன்னான்.

என்ன கேட்டார்கள்? என்றால் அவனுக்கு சொல்ல தெரியாது என்ன இவன் சொன்னான்? என்றும் தெரியாது.

இதையெல்லாம் ஒரு மௌன பார்வையோடு நித்யா பார்த்திருந்தார். “ஒஹ் இன்று அவர்களிடம் கூட அவனால் பேச முடிகிறது. ஆனால் என்னை இன்னும் அந்நிய பார்வை பார்க்கிறான்”, என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அவர் பார்க்கும் போதே பிரகாஷும் சத்தியமூர்த்தியும் அருகில் வர.

“அவங்களை மாதிரி கூட என்னால பேச முடியலை, அந்த அளவுக்கு நான் என் பையனுக்கு வேண்டாம்”, என்றார் கண்களில் கண்ணீர் துளிர்க்க.

“என்ன நித்யா இது, இப்படி நினைக்காத, மேடையில போய் பேசும்போது போங்கண்ணா சொல்லுவாங்க. என் பையன் என்ன பண்ணினாலும் நான் பொருத்துக்குவேன்னு சொல்லிட்டு வந்த நித்யாவா இது.”, என்று பிரகாஷ் கடிய.

“அதுக்காக எத்தனை வருஷமா என்னை அவன் பார்க்கமாட்டானான்னு ஏங்கறேன். எங்கப்பா அம்மாவை கூட இவனுக்கு பயந்து வீட்ல பார்க்க மாட்டேன். என் வீடு, நான் பிறந்து வளர்ந்த வீடு. இவனுக்காக தள்ளி வச்சேன்.”, என்றார் ஆற்றாமையுடன்.

“ஒரு காலத்துல அவனை கூட நீ தள்ளி வச்சே”, என்றார் பிரகாஷ் பளிச்சென்று.

“அது நாலஞ்சு வருஷம் தானே, அதுக்கப்புறம் எத்தனை முறை அவன் கிட்ட அவனுக்காக போயிருப்பேன். என் முகத்தை கூட பார்க்காம வீட்டை விட்டு போய்டுவான். அதனால தானே மறுபடியும் நான் அவனை தொந்தரவு பண்ணலை”,

“அவங்க எல்லாரும் மேல போன மாதிரி என்னால போக முடியுதா”, என்றார் அடக்க முடியாமல்.

“நீ போகறதை யார் நித்யா தடுத்தா”, என்றார் சத்தியமூர்த்தி.

“ப்ச்! பேசாத சத்”, என்று கோபத்தை எல்லாம் அவர் மேலும் பிரகாஷ் மேலும் நித்யா திருப்பினார்.

இதை எதையும் உணராத பார்த்திபன். இவர்கள் எப்போது மேடையை விட்டு கீழே இறங்குவார்கள் என்று தவித்தபடி நின்றிருந்தான்.

“அப்பா”, என்ற வார்த்தை அவனை மிகவும் அசைத்திருந்தது.  இமை மூடா மயக்கமான சஞ்சலத்தில் இருந்தான்.

அதன் பிறகு யார் வந்தார்?, யார் போனார்?, என்ன நடந்தது?, தெரியவில்லை. ஆனால் இயந்தரகதியில் நன்றாக நடந்தது வெளிப்பார்வைக்கு.

அவர்கள் கீழே இறங்கியபிறகு. “நீங்க மேல போறீங்களா”, என்று சத்தியமூர்த்தி கேட்க. அவரை முறைத்தார் நித்யா. இதே கேள்வியை சிறிது நேரத்திற்கு பிறகு ஜெயாம்மாவும் ராமகிருஷ்ணனும் கேட்க. “நான் வரவில்லை”, என்று மறுத்துவிட்டார். பிரகாஷ் எவ்வளவோ சொல்லியும் அசையவில்லை.

எல்லாரும் இதில் பார்வையாளர்களே. புதிதாக மணமாகபோகிறவர்கள் என்ற உணர்வு பார்த்திபனுக்கு கொஞ்சம் கூட இல்லை. பார்த்திபனின் மனநிலையை கருத்தில் கொண்டு அபிராமிக்கும் இல்லை. ஆனால் வரவேற்பு நன்றாக இருந்தது நடந்தது.

நித்யாவிற்கு சாப்பிட பிடிக்கவில்லை. அங்கே பார்த்திபனும் அபிராமியும் சாப்பிட அமர்ந்த போது அன்று அபிராமி செய்த வேலையை பார்த்திபன் செய்தான். உணவை அளந்தான். அபிராமியும் ஒரு பயத்தில் இருந்தாள்.

நாளை அவன் தந்தை வந்துவிட்டால். அவன் எப்படி அதை எதிர் கொள்வான் என்று. அதுவில்லாமல் அவரை அழைக்க காரணம் அவள் என்று தெரிந்தால் எப்படி தன்னை நடத்துவான் என்று தெரியவில்லை. உணவை வீணாக்குவதை விரும்பாத பார்த்திபன் அன்று வீணாக்கி எழுந்தான்.

அபிராமி சாப்பிடும் வரை இருக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அவன் எழுந்ததால் பாதி சாப்பாட்டிலேயே அபிராமி எழுந்துவிட்டாள்.

சீக்கிரம் தூங்கினால் தான் காலை எழ முடியும் முகூர்த்தம் ஆறுலிருந்து ஏழுவரை என்பதால் பிறகு முடிக்க வேண்டிய சடங்குகள் மளமளவென்று நடந்து உறங்க சொல்ல உறக்கம் மருந்துக்கும் கூட பார்த்திபனை தீண்டவில்லை.

இப்படி எல்லாம் நடக்கும் என்று தானே இவரின் பெண்ணோடு திருமணம் வேண்டாம் என்று சொன்னேன். புரிந்ததா இவருக்கு என்று சத்தியமூர்த்திய   திட்டி கொண்டிருந்தான்.

இவனுக்கு மட்டுமல்ல  நித்யாவுக்கும் அது தூக்கமில்லா இரவாக அமைந்தது. “நான் அவனை கவனிக்கவில்லையா. சிறு வயதில் சிறு பாராமுகம் எனக்கு அவனிடம் இருந்தது. ஏன் இருந்தது யாராவது என்னை புரிந்து கொள்வார்களா. பிறகு அவனை என்னுடன் அழைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்தேன். எதற்கும் அவன் அசையவில்லை”.

“நான் சாகும் வரை அந்த நிம்மதி எனக்கு கிடைக்காதா. அவனோடு அந்த பாராமுகம் வருவதற்க்கு காரணம் பாஸ்கர். அவனின் நினைவு எனக்கு வேண்டாம் என்று நினைதேன். அவனை நினைவு கொடுக்கும் எதுவும் எனக்கு வேண்டாம் என்று நினைதேன். ஆனால் என் மகன் அவனையே கொண்டு பிறந்திருக்கிறான். என்ன சொல்ல.?” 

“என்னை பார்த்திபன் என்றாவது புரிந்து கொள்வானா அவனுக்கு என்னை என்னால் புரிய வைக்க முடியாதா.?

“இப்படியே முடிந்து விடுமா என் வாழ்க்கை”. 

“இந்த பெண் அபிராமி எனக்கு இன்னொரு பெண் போல. அவள் கூட என்னிடம் பேசவில்லை. வாங்க ஆன்ட்டி என்று என்னை கூப்பிடவில்லை”

“எனக்கு யாருக்கும் என்னை புரிய வைக்க வேண்டாம். நாளை காலை முகூர்த்தம் முடிந்ததும் சென்று விட வேண்டும்”, என்று நினைத்தவறாக உறங்கமால் இருந்தார்.

அவர் உறங்கமால் இருப்பதை நடுவில் விழித்த பிரகாஷும் பார்த்தார். “வர்றதை எதிர்கொள். இனி நடந்தது எதையும் மாற்ற முடியாது. தூங்கு”, என்றார்.

“இவருக்காக நான் இருக்க வேண்டும். இன்னும் எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். யார் என்ன நினைத்தால் என்ன?”, தன்னை தானே தேற்றி. அவர் முகம் பார்த்து விழிகளை மூடினார். ஆனாலும் உறக்கம் அவரை தீண்டவில்லை.

பார்த்திபனும் நித்யாவும் மட்டும் உறங்காமல் இருக்கவில்லை. மற்றொருவரும் உறங்காமல் தான் இருந்தார், அவர் பாஸ்கர். தன்னுடைய எண்ணங்களுக்கு தானே கடிவாளமிட்டு இருந்தார்.

தன் மகனை முதன் முதலில் பார்க்க போகிறார். மாலையே சென்னை வந்துவிட்டார், இருந்தாலும் தயக்கம். அவர் அப்பாவும் அம்மாவும் தாங்கள் திருமணத்திற்கு போகிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இருந்தாலும் ஏதோ தடுக்க.    “நித்யா எப்படி அவனை வளர்திருப்பாள். என் அடையாளம் எதுவும் வேண்டாம் என்றாளே. எப்படி இருப்பான் அவன். அவனிடம் ஒரு வார்த்தையாவது என்னை பற்றி சொல்லியிருப்பாளா.”,

“நான் விதியின் கைகளில் விளையாட்டு பொம்மையாகி விட்டேன். நான் ஒன்றும் எதிலும் குறைந்துவிடவில்லை. நல்ல மனைவி, நல்ல மக்கள் செல்வங்கள், நல்ல உயரம், வாழ்க்கையில் இருந்தும் ஏதோ ஒன்று என்னில் குறைகிறதே அது நிறைவு பெறுமா.?”

காலை மூகூர்தத்திற்கு எல்லாரும் பரபரப்பாக இயங்க மாப்பிள்ளையையும் பெண்ணையும் மணமேடையில் அமர வைக்கும் முன்னாள் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க சொல்ல.,

பார்த்திபன் ராமகிருஷ்ணன் காலிலும், ஜெயாமாவின் கால்களில், மட்டுமே விழுந்தவன் வேகமாக இன்னும் யாராவது கால்களில் விழ சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று அதை கவனமாக தவிர்த்தபடி மேடையில் போய் அமர்ந்து கொண்டான்.

அபிராமியை இருக்கும் அத்தனை பெரியவர்களின் கால்களிலும் விழுந்து ஆசி வாங்கிய பிறகே மணமேடைக்கு அவர் அத்தை அழைத்து செல்ல. இன்னும் நித்யா ஆன்ட்டி கிட்ட வாங்கலை என்று தன் அம்மாவை பார்த்து சைகை செய்ய.

“இருங்க அண்ணி!”, என்று தன் அண்ணியிடம் சொன்ன கலாவதி பின்னால் இருந்த நித்யாவையும் பிரகாஷையும் முன்னாள் வரவழைத்து அவர்களிடம் ஆசி பெற்ற பிறகே அவளை கூட்டி கொண்டுபோய் மனையில் அமர வைத்தார்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டு தான் இருந்தான் பார்த்திபன். திருமணம் மிக அமைதியாக நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் ஒலிக்க மங்கள நாண் பூட்டினான் பார்த்திபன் அபிராமியின் சங்கு கழுத்தில்.

எல்லாரும் ஏதோ ஒரு வகையில் எதிர்பார்த்த பாஸ்கர் வரவேயில்லை. தாரை வார்த்து கொடுக்க இந்தப்புறம் ராமகிருஷ்ணனும் ஜெயாமாவும் நிற்க அந்த புறம் வேணுகோபாலனும் அவர் மனைவியும் நின்றனர்.

பார்த்திபனின் சங்கடம் உணர்ந்த சத்திய மூர்த்தி, தான் நிற்பதை அவன் எப்படி எடுத்துகொள்வானோ என்று  தாரை வார்த்து கொடுக்க அவரது தந்தையையும் தாயையும் நிறுத்தினார். அபிராமிக்கு பார்த்திபன் மனநிலையை ஆராய்வதே வேலையாகி போயிற்று.

தனக்கு தாலி கட்டிய பிறகு அவன் எப்படி இருக்கிறான் என்று ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டிருந்தாள். அவன் முகத்தில் இருந்து எதையும் அறிய முடியவில்லை.

நித்யாவிற்கு அங்கே தான் அந்நியமானது போல தோன்றியது.   எல்லாச் சடங்குகளும் முடியும் நேரம் பெரும்பான்மையான  உறவுகள் கிளம்பியிருக்க. நெருங்கிய உறவுகள் மட்டுமே இருந்த நிலையில் பாஸ்கரன் மண்டபத்திற்கு வந்தார்.

அவரை பார்த்த மறுக்ஷனம், “நம்ம போலாம்”, என்று நித்யா கிளம்ப எத்தனிக்க. “யாரை பார்த்து ஓடற”, என்று பிரகாஷிர்க்கு கோபம் வந்தது. “அவர் வந்தா வரட்டும். நம்ம ஏன் போகணும்”.  

“இருங்க., இரு நித்யா போகலாம்”, என்று சத்தியமூர்த்தி கட்டாயமாக கூறினார்.

நித்யாவிற்க்கு பாஸ்கரனை பார்த்து சற்று பயமாக இருந்தது. “நான் பார்த்துக்கொள்கிறேன் என் மகனை, உன் நிழல் கூட அவன் மேல் பட வேண்டாம் என்று பேசினாயே, இன்று அவனை நீ ஏன் தனியாக வளர விட்டாய்”, என்று கேட்டால் என்ன சொல்லுவாள். 

பாஸ்கரன் மட்டுமே வந்திருந்தார். மனைவி மக்கள் என்று  யாரையும் அழைத்து வரவில்லை. பாஸ்கரனிற்கு பயமாக இருந்தது. நித்யா தன் மீது வெறுப்பு காட்டி பார்த்திபனை வளர்த்திருந்தால் அவன் தன்னை எப்படி எதிர்கொள்வானோ என்று. உறவுகள் முன் தலைகுனிவு வேண்டாம் என்றுதான் எல்லோரையும் விடுத்து வந்திருந்தார்.

பார்த்திபனுக்கு அவர் தான் தன் தந்தை என்று சொல்லாமலே தெரிந்து போனது யூகத்தில். நேற்று வந்தவர்களுடன் இருந்தார். அதைவிட அவர் தோற்றம். அவனைக்கு வயதானால் எப்படி இருப்பானோ அப்படி இருந்தார். உயரமும் நிறமும் மட்டுமே சற்று வித்தியாசம். பார்த்திபனை விட சற்று உயரம் குறைவு பாஸ்கரன், அதே மாதிரி அவனை விட நல்ல நிறமாக இருந்தார்.

இவரை பார்க்க எனக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டதா. நல்லவரோ கெட்டவரோ அடையாளம் காணப்படாமல் இருப்பது எந்த வகையிலும் சரியல்ல.

யாரால் இந்த தவறு.

அவரும் பார்த்திபனை தான் பார்த்தார்.   

இவர்கள் இருவரையும் தான் விடாமல் நித்யாவும் பார்த்திருந்தார்.  

தவரென்று நினைத்து செய்யாமலேயே எல்லாம் தவறாகி போனது, யார் தவறு????

Advertisement