Advertisement

அத்தியாயம் பன்னிரெண்டு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

ஏன் எனக்குள்  இந்த யுத்தம் யோசிக்கறேன்

யாரோடு என்றும் யோசிக்கிறேன்

முடிவில்லா யுத்தமாகி போகுமோ என்று பயம்

உன்னை பார்த்த பின்பு நீ முடித்துவிடுவாய்

என்று தோன்றுகிறது

செய்வாயா பெண்ணே. நீ.??  

“வாங்க உட்காருங்க!”, என்றார் பாஸ்கர்.

“வணக்கம் தம்பி!”, என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டவர்கள், தாங்கள் அவரின் மகனின் திருமணத்தை தெரியப்படுத்தி அழைக்க வந்திருப்பதாக கூறினர்.

மிகவும் ஆச்சர்யமாக பார்த்தார் சிறிது யோசித்தவர் “நித்யாவோட பையனா”, என்று கேட்டார்……

“உங்க பையன் கூட தான் தம்பி., சரிவரலை ரெண்டு பேரும் பிரிஞ்சிடீங்க. அதனால உங்க பையன் இல்லைன்னு ஆகிடுமா”, என்றார் அபியின் தாத்தா.

“அதை அவன் அம்மா விரும்பமாட்டா. சரி விடுங்க, என்ன சாப்பிடறீங்க”, என்று உபசரித்தார்.

மரியாதையாகத்தான் பேசினார்…………. பேசிய வரை அபியின்                           தாத்தாவுக்கு அவரிடம் ஏதாவது தவறு இருக்கும் என்றே தோன்றவில்லை.

பின்பு எந்த புத்தில் எந்த பாம்போ என்று மனதை தேற்றி திருமணத்திற்கு அழைக்க…….

“இது ஒரு பார்மாலிட்டிக்காக கூப்பிடரீங்களா, இல்லை நிஜமா கூப்பிடரீங்களா………….”, என்றார் தெளிவாக.

“இல்லை தம்பி நீங்க வரணும் அப்படின்றதுக்காக தான் வந்து இருக்கோம்”, என்றார்

“கட்டாயம் வர்றதுக்கு முயற்சி பண்றேன்……….”, என்று வாக்கு கொடுத்தவர்……. சிறிது நேரம் அவர்களை அமர வைத்து பின்பு அவரே வந்து அவர்களை சாப்பிட அழைத்து போய் சாப்பிட வைத்தார்.

பொறுக்கமுடியாமல் அபியின் தாத்தா மறுபடியும். “உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா”, என்றார்

“ஆச்சுங்க! ரெண்டு பசங்க. ஒருத்தன் என்ஜினீயர், அமெரிக்கால வேலைல இருக்கான். ஒருத்தன் இப்போ தான் டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கான்”, என்றார்.

“பொண்ணு எந்த ஊரு தம்பி!”,

“அங்க நம்ம ஊருப்பக்கம் தான் ஸ்ரீரங்கம்”, என்றார்.

“வீட்டுக்கு வந்துட்டு போங்களேன். நான் அதிகமா ஊர் பக்கம் வர்றதில்லை. நம்ம ஆளுங்களை பார்த்தால் சுதா ரொம்ப சந்தோஷப்படுவா”, என்றார்.

“இல்லைங்க! இப்போ சாயந்தரம் கிளம்பறோம்! வீட்ல எல்லோரையும் அழைச்சிட்டு வாங்க”, என்றார்.

கிளம்பும்போது மறுபடியும். “நீங்க நிஜம்மா கூப்பிடரீங்களா, நான் அங்க வந்தா பிரச்சினை ஆகாதா?”, என்று கேட்டு மறுபடியும் ஒருமுறை  கன்பார்ம் செய்த பிறகே அனுப்பினார்.   

அவருக்கு தெளிவாக தெரிய வேண்டி இருந்தது, தனது ரத்தம். தனது மகன். யாரோ வந்து அவரது மகனின் திருமணத்திற்கு வந்து அழைக்கிறார்கள். தனது மகன் தான். ஆனால் இதுவரை அவனை பார்த்ததில்லை. எங்கிருக்கிறான் என்று தெரியும். ஆனால் பார்க்க முற்படவேயில்லை. நித்யா அவனை பார்க்க அனுமதிக்கவில்லை. நித்யாவின் வாழ்கையில் மறுபடியும் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்று விட்டுவிட்டார் அவருக்கு அவள் மறுமணம் செய்த்தது தெரியும் அதன் பிறகே அவர் திருமணம் செய்தார்.

“போவோமா! அவனை பார்ப்போமா!”, என்ற எண்ணம் ஓட ஆரம்பித்தது.

வெற்றிகரமாக அவர்களை திருமணத்திற்கு அழைப்பு விடுத்து, ஊர் வந்து சேர்ந்தனர்.

பிறகே ராமகிருஷ்ணன்னுக்கு தெரிந்தது.

“ஏன் வேணு இப்படி பண்ணுனீங்க? உங்க பொண்ணை அழைச்சதோட நின்னிருக்கலாம். இப்போ பாஸ்கரை அழைச்சு என் பேரன் ஏதாவது பிரச்சினை பண்ணினா.”, என்றார்.

“என்ன வந்தாலும் பார்கலாம்ப்பா! எனக்கு பார்த்திபன் அப்படி பண்ணுவான்னு தோணலை”, என்றார் வேணுகோபாலன்.

“எதுக்கும் பார்த்திபன் கிட்ட முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிடு ராமகிருஷ்ணா. பார்த்திபன் அம்மாவும் வருவா தானே!”, என்றார் வேணுகோபாலன்.

ராமகிருஷ்ணனுக்கு எப்படி பார்த்திபனை சமாளிக்க போகிறோம் என்றிருந்தது. அவன் எவ்வளவு சத்தம் போட்டாலும் வாங்கி கொள்வார். ஆனால் திருமணத்திற்கு ஏதாவது பங்கம் வந்துவிட்டால் அதை வெளியிலும் சொல்ல முடியாது.

இருதலைகொல்லி எரும்பானார், ஜெயாமாவிடம் கேட்க. “நித்யா வரட்டும்! ஆனது ஆகட்டும்!, எல்லோர் முன்னாடியும் பார்த்திபன் கலாட்டா பண்ண மாட்டான்! பையன் கல்யாணத்தை பார்க்க விடலைன்ற பேச்சு நமக்கு வேண்டாங்க. இங்க வந்தா பார்த்திபன் ஏதாவது சொல்லுவான்! நம்மால மீற முடியாது. அதனால நேரா மண்டபத்திற்கு வரட்டும்”, என்றார்.

பார்த்திபனுக்கு அவன் அம்மாவும் அப்பாவும் வரும் செய்தி மறைக்க படவில்லை. ஆனால் யாரும் சொல்லவில்லை, பயம் அவனிடம்.

திருமணத்திற்கு சொற்ப நாட்களே இருந்தன. மும்முரமாக அழைக்கும் வேலை. திருமண ஏற்பாடுகள். என்று ஜரூராக நடந்துகொண்டிருந்தன.

பார்த்திபனிடம் ஏதாவது கேட்க்க வேண்டும் என்றாள் கலாவதியை விட்டே சத்யமூர்த்தி கேட்பார். இப்போது அவனுக்கு திருமணத்திற்கு முன்தினம் மாலை அணிவதற்கு உடை தேர்வு செய்ய வேண்டும். மறு நாள் காலைக்கு பட்டு வேஷ்டி சட்டை எடுக்க வேண்டும். அவனுக்கு நகைகள் வாங்க வேண்டும்.

தாங்களே வாங்கி விடுவதா. அழைத்தால் வருவானா? பயமாக இருந்தது சத்யா மூர்த்திக்கு.

அபிராமியிடம் வந்தார். “அபிம்மா நிச்சயதார்த்ததுக்கு பிறகு மாப்பிள்ளை உன்னோட பேசினாராமா”, என்றார்.

“அன்னைக்கு சாயந்தரம் பேசினேன்பா, அதுக்கு பிறகு பேசலையே”, என்றாள்.

“அவருக்கு டிரெஸ் செலக்ட் பண்ணனும், நீயும் அவரும் போகரீங்களா, நான் அம்மாவை கூட அனுப்பறேன், நீ சரின்னு சொன்னா நான் பக்கத்துல ஜெயாம்மா கிட்ட பேசறேன்”, என்றார்.

“நானா அவர்கிட்ட கேட்டுட்டு சொல்லட்டுமாப்பா”, என்றாள்.

“சரிம்மா”, என்று அவர் செல்ல. பார்த்திபன் அவளிடம் அன்று சாப்பிட்டு தூங்கு என்று சொன்ன பிறகு அவள் அவனை அழைக்கவேயில்லை.  என்ன சாக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள், இன்று அப்பா சொன்னவுடனே அழைத்தாள். 

அவனுக்கு போன் செய்தவள், “உங்களுக்கு டிரெஸ் செலக்ட் பண்ணனும்னு அப்பா சொன்னாங்க. உங்களோட என்னையும் அம்மாவையும் போய் செலக்ட் பண்ண சொன்னாங்க. நம்ம போவோமா இல்லை நீங்களே செலக்ட் பண்றீங்களா”, என்று நிறுத்த.

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எந்த பெண்களுடனும் அவன் இதுவரை வெளியே சென்றதே இல்லை. பாட்டியுடன் எங்கேயும் சென்றது இல்லை. மிஞ்சி போனால் பாட்டியுடன் கோவிலுக்கு போவான். அதுவும் சிறியவனாக இருக்கும் போது.

சத்தியமூர்த்தி தன்னை தவிர்ப்பது புரிந்தது. அது அவனுக்கும் பரவாயில்லை என்பதால் ஒன்றும் தோன்றவில்லை. இந்த ஜெயாம்மா கூட அபிக்கு முகூர்த்த புடவை நகை வாங்க வேண்டும் என்றார்.

பேசாமல் ஜெயாம்மாவிடமே கேட்டுவிடுவோம் என்று நினைத்தவன்  “நான் ஜெயாமா கிட்ட பேசிட்டு கூப்பிடறேன்”, என்றான்.

ஜெயாமாவிடம் கேட்க்க. “நீ எப்படி சொல்றியோ, அப்படிதான்“,என்று விட்டார்

“எனக்கு தெரியலைன்னு தானே உன்னை கேட்கறேன்”, என்று எறிந்து விழுந்தான். 

“சரிடா நானும் நீயும் போகலாம். தாத்தா ஏற்கனவே அழைப்பு அது இதுன்னு நிறைய வேலை  அலைச்சல், அவர் வேண்டாம்”, என்றார்.  

அபிராமியை மறுபடியும் அழைத்தான்

அவன் நம்பர் பார்த்தவள் அவன் ஹலோ சொல்லும் வரை சொல்லவில்லை. “அபிராமி”, என்றழைத்தான். பிறகே “சொல்லுங்க”, என்றாள். “ஜெயாம்மாவும் நானும் வர்றோம். எப்போ எங்கேன்னு மட்டும் எனக்கு மெசேஜ் பாஸ் பண்ணு”,

இதை சாக்காய் வைத்து அபி இன்னும் எத்தனை போன் பண்ணுவாள் என்று அறியவில்லை பார்த்திபன். ஒரு வழியாக அப்பாவிடம் இந்த மெசேஜை சொன்னாள். “ஹப்பா பிரச்சினை முடிந்தது”, என்று சத்தியமூர்த்தி நினைக்க. “இல்லை”, என்று சொன்னார் வேணுகோபாலன்.

அவர் அப்போதுதான் திருமணத்திற்கு சத்தியமூர்த்தியின் அக்கா இந்துமதியை போய் அழைக்க வேண்டும் என்றவர். “உன் மாமனார் போய் பாஸ்கரனை கூப்பிடிருக்கார்”, என்றார்.

“ஏன் அப்பா? அக்காவை அழைத்தாள் பத்தாதா”, என.

“எனக்கே தெரியாது டா. உன் மாமனார் டெல்லி போயிட்டு வந்து தான் சொன்னார்”, என்றார்.

“எதுக்கு கலா உங்க அப்பாவுக்கு இந்த அதிகப்ரசிங்கித்தனம்”, என அவரிடம் கத்த.

 கலா அவர் தனது தந்தைக்கு போன் செய்து, “அப்பா வேலை செஞ்சு திட்டு வேற ஏன் வாங்கறீங்க, எப்படியோ போறாங்கன்னு விடாம சமாதானம் பேசி கெட்ட பேர் வேற”, என்று கடிய.

அபி தான் பார்த்திபனின் தந்தையை அழைக்க சொன்னால் என்று மறந்தும் கூட சொல்லவில்லை.

ஆடைகள் எடுக்க போகும் நாளும் வர கடையின் பெயரை சொல்லி அங்கே பார்த்திபனை வரசொன்னாள். அவன் கடையில் இருந்து பக்கம் என்பதால் அவனை வரச்சொல்லி தாங்களே ஜெயாம்மாவை அழைத்து வந்துவிடுவதாக கூறினாள்.

கடையின் வாசலில் போய் பார்த்திபன் நின்ற கால் மணி நேரத்திற்கு பிறகே வந்தனர். வந்தவர்களை பார்த்து மலைத்தான். அபிராமி, அவள் அம்மா, அபியின் தாய் வழி பாட்டி, தந்தை வழி பாட்டி, அபியின் தாய்மாமாவின் மனைவி, ஜெயந்தி, அவள் அம்மா, இவர்களுடன் ஜெயாம்மா. என்று எல்லாரும் பெண்கள்.

“ஹய்யோ! இத்தனை பெண்களுடன் தான் போய் உடை தேர்ந்தெடுப்பதா திரும்ப போய்விடலாம்”, என்று சத்தமில்லாமல் அவன் எண்ணும் போதே “தோ! அங்கே நிக்கறாங்க”, என்று கரக்டாக அபிராமி அவனை கண்டு பிடித்து ஜெயாம்மாவிடம் காட்டி கொடுத்தாள்.  அவள் கண்தான் அவனை தேடுதே.

எல்லோரும் இவனை பார்த்தவுடனே. “வாங்க மாப்பிள்ளை! வாங்க மாப்பிளை!”, என வரவேற்க என்னவோ பார்த்திபனுக்கு எல்லோரும் அவனையே பார்ப்பது போல தோன்றியது.

தலையில் கை வைக்கவில்லை பார்த்திபன். ஜெயாம்மாவின் அருகில் வந்தவன், “இன்னும் யாரும் லேடீஸ் இவங்க  வீட்ல இல்லையா கூட்டிட்டு வர”, என்றான்.

அதைகேட்ட  ஜெயந்தி அதற்கு பதில்  சொன்னாள். “இன்னும் இருந்தாங்க நீங்க கோபப்பட்டா என்ன செய்யறதுன்னு அக்கா வேண்டாம்னு சொல்லி நிறைய பேரை கட் பண்ணிட்டா”, என்றாள்.

“அதுக்குன்னு ஒரு ஜென்ட்ஸ் கூட இல்லையா”, என்று அபியிடம் மெல்லிய குரலில் கடிந்தான்.

“எங்கப்பா தான் இருந்தாங்க! நிறைய கேஷ் எடுத்துட்டு வந்திருக்கோம்! அப்போ கூட நீங்க போயிட்டு வாங்கம்மா சொல்லிட்டார், பாக்கி எல்லோரும் ஏதோ வேலை சொல்றாங்க, என்ன செய்யட்டும்?”, என்றாள் சீரியசாக. 

“ஒண்ணும் செய்யாத! முதல்ல நான் செலக்ட் பண்றேன்! என்னை அனுப்பிட்டு நீங்க என்ன வேண்ணா பண்ணுங்க”, என்றான்.

கடையில் மேல் தளத்துக்கு செல்ல எல்லாரும் லிப்டில் ஏற. இவர்கள் இருவரும் பேசிகொண்டிருந்ததால் கடைசியாக நிற்க. அதற்குள் லிப்ட் நிரம்பி விட்டது.

பிறகு செல்லலாம் என்று இவர்கள் நிற்க. அடுத்த முறை இவர்கள் ஏறும்போது. ஏதோ காலேஜ் பையன்கள் நிறைய பேர் வந்து  நிற்க. அபி லிப்டிர்க்குள் பார்த்திபன் அருகில் நெருங்கி நிற்க வேண்டி வந்தது.

முடிந்தவரை தள்ளி நிற்க பார்த்தாள், முடியவில்லை. அவனை இடித்துகொண்டே நிற்க வேண்டி வந்தது.  இருவருக்கும் பெரும் தர்மசங்கடத்தை கொடுத்தது. அதுவும் பார்த்திபனுக்கு பெண் என்பவள் மிகவும் புதியவள் அபிராமியின் அருகாமை பெரும் அவஸ்தையை கொடுத்தது.

அவன் அவஸ்தையை பார்த்த அபிராமிக்கு சிரிப்பு வந்தது. இவ்வளவு சங்கோஜமா அவனுக்கு என்று. வேண்டுமென்றே இன்னும் நெருங்கி நின்றாள்.

பார்த்திபனுக்கு இனம் புரியாத புதிய அவஸ்தை. விருப்பா? வெறுப்பா?. அறியமுற்படுவதர்க்குள் தளம் வந்திருந்தது.

ஒரு பெருமூச்சு கிளம்பியது. அது அச்சோ அதற்குள் வந்துவிட்டதே என்பதற்க்கா? இல்லை ஹப்பா வந்துவிட்டதே என்பதற்க்கா? அவனே அறியான்.        

அவன் உடைகளை பத்து நிமிடத்தில் தேர்வு செய்தான். உடனே கிளம்ப போக. “இருங்க தம்பி, முகூர்த்த புடவை எடுத்தவுடனே போங்க.”, என்றார் கலாவதி. “நீங்க தானே எடுக்கணும், நீங்க சொல்லிட்டு போங்க, ஜெயம்மா தடுமாறினா”, என்றார் கலாவதி. அதை அங்கே இருந்த பெருசு அனைவரும் ஆமோதிக்க. 

திரும்பி அபியை ஒரு பார்வை பார்த்தான். அபி, “சாரி”, என்று பார்வையாலேயே கெஞ்சினாள்.

அங்கே சென்று விலையை பார்த்தால். அவனுக்கு புடவை இவ்வளவு விலை என்றே தெரியாது. பணம் பிரச்சினை இல்லை, என்றாலும் விவரம் தெரியாது

“எனக்கு இதெல்லாம் தெரியாது”, என்றான் கலாவதியை பார்த்து. “அத்தைன்னு சொல்லுங்க தம்பி”, என்று உரிமையாக சொன்னார்.

“உங்களுக்கு எது பிடிக்குதுன்னு ரெண்டு பேரும் பாருங்க, நாங்க மத்த எல்லோருக்கும் செலக்ட் பண்றோம்”, என்று அபிக்கும் பார்த்திபனுக்கும் தனிமை கொடுத்து மற்ற புறம் இருந்த புடவைகளை பார்க்க செல்ல.

“ஜெயாம்மா நீங்க இருங்க”, என்றான்.

“டேய் பொண்ணோட அம்மாவே பொண்ணை விட்டிட்டு போறாங்க, என்னை ஏண்டா இருக்க சொல்ற. அபிகிட்டயே கேளு”, என்று ஜெயம்மாவும் அவர்களோடே செல்ல.

“யூ டூ ஜெயாம்மா”, என்று பார்த்தபடி பார்த்திபன் நிற்க. “அவங்க போய்ட்டாங்க! இன்னும் யாரை பார்க்கறீங்க”, என்று அபிராமி கேட்டாள்.

அந்த குரலுக்கு திரும்பியவன். “எனக்கு இதை பத்தி ஒண்ணும் தெரியாது” என்றான்.

“பரவாயில்லை நான் பார்த்துப்பேன். உங்க பட்ஜெட் மட்டும் சொல்லுங்க”, என்றாள்.

“பட்ஜெட்டா”, என்றான்.

“அதாங்க என்ன விலைல எடுக்கட்டும். அதுக்கு தகுந்த மாதிரி செலக்ட் பண்ணுவேன்”,

“விலை பிரச்சினை இல்லை. எல்லோரும் எப்படி எடுபாங்களோ, எடு! உனக்கு பிடிச்சா சரி”, என்று விட்டான்.

அங்கே இருந்த விற்பனை பணியாளன் `மளமளவென்று முகூர்த்த புடவைகைளை எடுத்து போட்டான்.

போட்டவன் அமைதியாக இருக்காமல். “உங்க கலருக்கு இது நல்லா இருக்கும் மேடம்”, என்றான்.

“உங்க உயரத்திற்கு இது நல்லா இருக்கு மேடம்”, என்றான், “மேலே போட்டு பாருங்க”, என்றான்.  மேலே ஏதோ சொல்ல வர.

அந்த விற்பனையாளன் பார்வையே அபிக்கு பிடிக்கவில்லை. தன்னை எதிரில் இருப்பவன் அளப்பது பிடிக்காமல் அபிராமி அந்த விற்பனையாளனிடம்.

“எடுத்து போடறதோட நிறுத்திகங்க. இந்த மாதிரி சஜ்ஜெசன் சொல்லாதீங்க”, என்றாள் ஸ்ட்ரிக்ட்டாக.

அப்போது அபிராமி ரொம்பவும் மெச்சுர்டாக தெரிந்தாள் பார்த்திபனுக்கு, எதிராளியை நிமிடத்தில் எடை போட்டு அடக்கிவிட்டாள். அதன் பிறகு தான்  அபிராமியை பார்த்திபன் எடை போட்டான்.

நல்ல நிறமாக இருந்தாள். உயரமாக இருந்தாள். ஒல்லி என்று சொல்ல முடியாதபடி சற்று பூசினார் போல இருந்தாள். மொத்தத்தில் அழகாக இருந்தாள். அருகே அவளை கடக்கும் ஆணோ பெண்ணோ ஒரு முறை அவளை திரும்பி பார்த்து சென்றனர்.

எதிரே இருந்த கண்ணாடியில் தன்னை ஆராய்ந்தான். இயல்பிலேயே நிறம் மாநிறம் என்பதை தவிர ஹான்ட்சம் பெர்சனாலிட்டி தான் பார்த்திபன். கண்ணாடி என்பது நாம் எப்படி இருக்கிறோம் என்பதை காட்டும். உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடி. 

அதே சமயம் நாம் எப்படி பார்க்கிறோமோ அப்படி தான் காட்டும். நாம் அழகாக பார்த்தால் அழகாக காட்டும். நாம் சுமார் என்று நினைத்தால் அப்படி தான் தோன்றும். 

இப்போது பார்த்திபனுக்கு தன்னை பார்த்தால் சுமாராக தான் தோன்றியது.

என்ன பார்த்தால் இந்த பெண் தன்னிடம் இப்படி பிடிவாதம் பிடித்து தன்னை திருமணம் செய்கிறாள். யோசிக்கும்போதே. 

அதற்குள் அபிராமி செலெக்ட் செய்திருந்தாள். பச்சை பட்டு உள்ளே நிறைய ஜரிகையாலேயே வேலைப்பாடு செய்தது, அருமையாக இருந்தது.

அபியின் அம்மா வந்து பார்த்துவிட்டு. “ஏன் அபி பச்சை எடுத்த மெருன் இல்லைன்னா பாக்கு கலர் எடுத்தா எடுப்பா இருக்கும்ல”, என்று சொல்லும்போதே. “நான் செலெக்ட் பண்ணினேன் அத்தை”, என்று விட்டான் பார்த்திபன்.

சற்று ஆச்சர்யமாக பார்த்தாள் அபி, அவள் தானே தேர்ந்தெடுத்தாள். இதெல்லாம் பார்த்திபன் பார்க்கவேயில்லை, “நான் கிளம்பட்டுமா”, என்றான்.

“ஏதாவது தேவைன்னா கூப்பிடு பக்கத்துல தானே இருக்கேன்”, என்று விட்டு அவன் கடைக்கு சென்றுவிட்டான்.

காலை பதினோரு மணிக்கு வந்தனர். மாலை நான்கு மணியாகிவிட்டது. எல்லோரும் களைத்து விட்டனர். நிறைய பேர் என்பதால் காரில் இடம் பத்தாது என்று மூன்று ஆட்டோவில் வந்தனர்.

இத்தனை புடவைகளையும் தன்னால் தனியாக எடுத்துப்போக முடியும் என்று தோன்றவில்லை அபிக்கு. அம்மாவும் சித்தியும் கூட தடுமாறுவர். 

“வர்றீங்களா”, என்று பார்த்திபனை அபி அழைக்க. “இன்னுமா இருக்கீங்க”, என்று அதிசயப்பட்டான் பார்த்திபன்.

அவனுக்கு பெண்கள் புடவை எடுக்க இவ்வளவு நேரம் செய்வர் என்று தெரியாது.

வந்து பார்த்தால் பார்சளோடு போராடிகொண்டிருந்தார்கள்.

காலையில் அவன் டிரெஸ் மற்றும் முகூர்த்த புடவை தனி பில். அதுவே கிட்டதட்ட அறுபதாயிரத்தை நெருங்கி இருந்தது. அதற்கே இவ்வளவா என்று நினைத்தான் பார்த்திபன்.

இங்கே வந்து பார்த்தால் அதில்லாமல் இரண்டு லட்ச ரூபாய்க்கு எடுத்திருந்தனர்.

இது தான் நிறைய பேரின் கல்யாண பட்ஜெட் என்றறிந்த பார்த்திபன், அதை வெளியில் சொல்லவில்லை, தன்னை ஒன்றுமில்லாதவன் என்று நினைத்துவிட்டால் என்று அமைதியாகவே இருந்துவிட்டான்.

ஆனால் அவன் பார்வையிலேயே அவனை அறிந்த அபி. “எனக்கு மட்டும்  இல்லை. எல்லோருக்கும்”, என்று அவனிடம் சொன்னாள்.

இவள் தன் மனதை நன்கு படிக்கிறாள் என்று வியந்தான் பார்த்திபன். இந்த கடைக்கு உடைகள் எடுக்க வந்ததில் இருந்து. காலையில் இருந்து சற்று சகஜமாக அபி அவனிடம் பேச ஆரம்பித்திருந்தாள், அவன் பேசுகிறானோ இல்லையோ. அவள் பேசிக்கொண்டிருந்தாள்.

“ இது டேலி பண்ணுங்க, கரக்டா பாருங்க”, என்றாள்.

“நாங்க சாப்பிடனும்”, என்றாள்.

உணவு விடுதிக்கு அவர்கள் உணவு உட்கொள்ளும் நேரம் அவனை அந்த துணிகளுடன் இருக்க வைத்தாள். அவனையே “பில் பே பண்ணுங்க”, என்றாள் உரிமையாக. 

பின்பு, “எங்களுக்கு போக. ஆட்டோ ஏற்பாடு பண்ணுங்க”, என்றாள்.

“மூன்று ஆட்டோ பேசி அந்த பாக்கேஜ் மூன்றாக பிரித்து கொடுத்து அவர்களை அனுப்புவதற்குள் அவனுக்கு உஸ் ஹப்பாடா”, என்றாகிவிட்டது. இதையெல்லாம் ஒரு ஆச்சர்யமான அமைதியோடு பார்த்திருந்தார் ஜெயாம்மா.

அவன் எப்போதும் தனிமை விரும்பி. அதிகமாக யாரோடும் பேசமாட்டான், பழக மாட்டான். இன்று அவன் இயல்புக்கு மாறாக எல்லா வேலைகளையும் செய்ய வைத்துகொண்டிருந்தாள்.  

அவன் வாழ்வில் வரும் சந்தோஷத்தை தவிர வேறு என்ன வேண்டும் இனி ஜெயாம்மாவுக்கு. கண்களில் நீர் பணித்திட இதையெல்லாம் நிறைவாய் பார்த்திருந்தார்.

Advertisement