Advertisement

அத்தியாயம் பதினொன்று:     

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தத்தில் நான் என்னுடன்

போராடும்பொழுது என் 

நிழலை பிடித்ததாய் நினைத்தேன்,

அதுவும் என் கையினில் தான் இருந்தது,

பிடித்ததாய் நினைத்தது,

பிடிக்க முடியாததாய் இருந்தது,

நான் பிடிக்க முயற்சிக்கும் போதும்

எனக்கு தெரியவில்லை,

நான் பிடித்த பிறகு தெரிந்தது,

நான் என்னை பிடிக்க முடியாதது,

நான் பிடிக்கமுடியவில்லை, தோற்றேன்.

என்னை பிடிக்க முடியவில்லை, வென்றேன். 

 

கட்டுபடித்தியும் முடியாமல் கண்களில் கண்ணீர் துருத்தி வழிய ஆரம்பித்தது

திருநீறு உறுத்துவது போல அதை துடைத்தாள்………… ஆனாலும் நிற்காமல் வழிந்தது………….

எதற்கோ திரும்பிய பார்த்திபன்………. இதை பார்த்து இன்னும் எரிச்சலுற்றான், “இன்னும் இந்த அழுகை வேறா”, என்று. எல்லோரும் பார்த்தால் பரிகாசமாகிவிடும் என்றுனர்ந்தவன்………….  மெளனமாக அவன் பாக்கெட்டில் இருந்து கர்சீப் எடுத்து அவள் புறம் திரும்பி, “அபிராமி”, என்றழைத்தான்.

முதல் முறையாக அவள் பெயர் சொல்லி அழைக்கிறான். அவளையறியாமல் திரும்பினாள்…………. “இன்னும் சின்ன பொண்ணு மாதிரி சீன் க்ரியேட் பண்ணாத”, என்று சத்தமில்லாமல் கடிந்தவன், கர்சீப்பை அவளிடம் கொடுத்து…………. “துடை இல்லைன்னா கேமெரால ரெக்கார்ட் ஆகும். வாழ்க்கை பூராவும் அதை தான் நீ பார்ப்ப”, என்று திரும்பி கொண்டான்…………  இந்த திருமணத்தை நிறுத்தும் எண்ணம் அவனுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டான்.

“என்ன தான் நினைத்துகொண்டிருக்கிறான்? என்னை மெசின் என்றா?”, என்றவளுக்கு அதோடு சேர்த்து. “ஹப்பா”, என்று இருந்தது. இவன் திருமணத்தை நிறுத்த மாட்டான் என்பதற்க்கா.

தான் இவ்வளவு வெட்கம் கெட்டு போய்விட்டோமா என்று மறுபடியும் அழுகை பொங்கியது. திட்டுவான் என்று தெரிந்து அழுகையை அடக்கினாள்.

கலாவதி வேறு எல்லோரையும் உபசரித்து கொண்டிருந்தாலும் பார்வை எல்லாம் மகள் மீது இருந்தது. கண்களை துடைகிறாளா? அழுகிறாளா? இல்லை மஞ்சள் குங்குமம் கண்ணில் விழுந்து விட்டதா?. ஜெயந்தியிடம் சைகையாலே என்னவென்று கேட்க.

“என்ன அக்கா?”, என்றாள் அபியிடம் ஜெயந்தி. “கண்ணுல விழுந்துருச்சு”, என்றவள். “அதான் நலுங்கு முடிச்சிடாங்கள்ள, எந்திரிக்கலாமான்னு கேளு”, என்றாள் மெல்லிய குரலில்.

ஜெயந்தி அதை கலாவதியிடம் கேட்க. அதை அவர் அத்தையிடம் கேட்க. அவர் ஜெயாம்மாவிடம் கேட்டு. “சரி”, என.

எழுப்பிய அடுத்த நிமிடம். “நான் ரெஸ்ட் ரூம் போகணும் அர்ஜென்ட்”, என்று அம்மாவிடம் சொல்லி போனாள்.

பாத்ரூமில் நுழைந்த அடுத்த நிமிடம் ஒரு கேவல் அவளையறியாமல் வந்தது, சத்தம் வெளியே கேட்காமல் இருக்க தண்ணீரை திறந்து விட்டு அப்படியே அந்த கதவு மேலேயே சாய்ந்து அழத்துவங்கினாள். நின்றுவிடும் என்று பார்த்தால் நேரம் தான் கடந்ததே தவிர அழுகை நிற்கவேயில்லை.

நிறுத்திய பிறகும் தேம்பல் நிற்கவேயில்லை. இது தானே தேடிக்கொண்டது. யாரையும் எதுவும் சொல்ல முடியாது. ஏன் பார்த்திபனையும் எதுவும் சொல்ல முடியாது. அவனுக்கு விருப்பமில்லை என்று தனக்கு முன்பே தெரிந்தது தானே.

ஜெயந்தி, “அக்கா இன்னும் என்ன பண்ற?”, என்று கதவை தட்டிய பிறகே சற்று மட்டுபட்டவள். “தோ வரேன்”, என்று குரல் கொடுத்து சற்று ஆசுவாசப்படுத்தி சென்றாள்.

“சாப்பிடறதுக்கு மாமா வெயிடிங்”, என்றாள்,

“எந்த மாமா”, என்றாள் புரியாமல் அபி.

“அச்சோ! பார்த்திபன் மாமா”, என்றாள் ஜெயந்தி.

அமைதியாக வந்தாள். என்னதான் மறைத்தாலும் அவள் அழுதது அவள் அம்மாவிற்கு நன்றாக தெரிந்தது, பார்த்திபனும் பார்த்தான். அவனுக்குமே முகம் ஏதோ வித்தியாசமாக இருந்தது. சற்று அழுது அழுது உப்பியிருந்தது. கொஞ்சம் ரூஜ் போட்டு அதை டச் அப் வேறு செய்திருந்தாள்.

பார்த்திபன் இப்போது அவளை நன்றாக பார்த்தான். முகம் ரோஸ் நிறமாக இருந்தது. அழுதது மூக்கின் நுனி செந்நிறமாக இருந்தது. “இவள் நல்ல நிறமாக இருக்கிறாள். நாம் கொஞ்சம் மட்டம் தான்”, என்று சம்பந்தமில்லாமல் நினைத்தான். 

பார்த்திபன் எப்போதும் யாருக்கும் காட்சி பொருளாவதை விரும்பமாட்டான். இவள் இப்படி அழுது வைத்திருந்தாள் அதனால் யாராவது ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று அவனுக்கு பயம். பார்த்தால் தான் ஏதோ கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்வது போல தோன்றும். என்னடா இது? என்று அவளை திட்ட எழுந்த ஆவலை முயன்று கட்டுபடுத்தினான்.

“சாப்பிட வாங்க தம்பி”, என்று கலாவதி வந்து அழைத்தார். அபிராமியிடம் மெதுவான குரலில். “என்ன ஆச்சு? முகம் ஒரு மாதிரி இருக்கு, அழுதியா?”, என்று கேட்டார்.

முன்பு சென்று கொண்டிருந்த பார்த்திபன் காதிலும் அது நன்கு விழுந்தது.

“ஒண்ணுமில்லைம்மா கண்ல ஏதோ விழுந்துடுச்சும்மா உறுத்துது”, என்றாள்,

“வேற ஒண்ணுமில்லையே”, என்றார் மறுபடியும்.

“நோ மா”, என்றாள்.

இருந்தாலும் மனசில்லாமல் அவள் முகத்தை பார்த்த படி. பார்த்த படி, “ஜெயந்தி. அபியோட இரு!”, என்று சொல்லியபடி சென்றார்.

அப்போது பார்த்து ஜெயாம்மா வந்து, “என்னம்மா முகம் ஒரு மாதிரியா இருக்கு”, என்று விசாரித்தார்.   

“லேசா சளி பிடிச்சிருக்கு பாட்டி”, என்றாள்.

“அப்படியா காலையில நல்லா தானே இருந்த”, என்று ஒரு நம்பாத பார்வை பார்த்தார்.

ஆனால் இதற்கு அபி எதுவும் சொல்லவில்லை. 

“பண்றதை எல்லாம் பண்ணிட்டு, இப்போ என்ன கேள்வி ஜெயாம்மா?”, என்று அடிக்குரலில் அவரிடம் பார்த்திபன் சீறினான்.

“நீ ஏதாவது திட்டுனியா”, என்றார் ஜெயாம்மா. “இல்லை கொஞ்சினேன்”, என்றான் கிண்டலாக.

“வேற எந்த பொண்ணுன்னாலும் நீ சொல்லலைன்னா ஓ.கே. நான் தான் தேவையில்லைன்னு சொன்னேன். ஆனா சத்தியமூர்த்தி சாரோட பொண்ணை ஏன் நீ சொல்லலை”, என்று அவன் ஆரம்பிக்க.

“டேய்! எனக்கு எதுவும் தெரியாது! நீ எது கேட்கனுன்னாலும் உன் தாத்தா கிட்ட தான் கேட்கணும். என் கிட்ட நீ கோபப்படமாட்டேன்னு சொன்ன.”,

“பார்த்திபா! இது மண்டபம் பா. நம்ம எதுன்னாலும் வீட்ல போய் பேசலாம். இங்க எல்லோருக்கும் தெரிஞ்சா நல்லா இருக்காது”, என்றார்.

“அந்த ஒரு காரணத்துக்காக தான் நானும் அமைதியாயிருக்கேன். இல்லை.”, என்று பார்த்திபன் சொல்ல. மறுபடியும் அழுகை பொங்கியது அபிக்கு.

இதையெல்லாம் பார்த்திருந்த ஜெயந்தி விழிக்க. “ஷ்! இது யாருக்கும் தெரிய வேண்டாம்! கஷ்டபடுவாங்க!”, என்று இந்த விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருக்க ஜெயந்தியிடம் அபி கேட்டுகொண்டிருந்தாள்.

அதற்குள் பந்தி வந்திருக்க. சாப்பிட அமர்ந்தனர். எங்கிருந்தோ வேகமாக வந்த கேமாரா ஆட்கள் இவர்களிடம் ஒருவருக்கொருவர் ஊட்டுவது போல் போஸ் கொடுக்க சொல்ல. பார்த்திபன் பதில் சொல்லும் முன்னே, “அதெல்லாம் முடியாது! வேண்டாம்!”, என்று அவசரமாக மறுத்தாள் அபிராமி.

“வேண்டாம் சார் அதெல்லாம்”, என்று பார்த்திபனும் மறுத்தான். அவர்களும் எவ்வளவோ சொல்ல. “முடியாது”, என்று இருவருமே சொல்ல. வேறுவழியில்லாமல் அவர்கள் உணவு உண்பது போல் ரெகார்ட் செய்து சென்றனர்.

இலையை பார்த்தால், கேப்பே இல்லாமல் அத்தனை வகைகள். பொதுவாக அபிராமி சாப்பாட்டு பிரியை. ஆனால் அன்று சாப்பிடவே பிடிக்கவில்லை.

அங்கே அங்கே கொறித்தாள். பின்பு அவன் சாப்பிடுவதற்காக காத்திருந்தாள். உணவை வீணாக்குவது பார்த்திபனுக்கு பிடிக்காத ஒன்று. அதனால் அவனுக்கு உணவு உட்கொள்ள அவ்வளவாக இஷ்டமில்லாத போதும். கஷ்டப்பட்டு உணவை உள்ளே தள்ளி கொண்டிருந்தான்.

முடித்து பார்த்தால். அவள் அப்படியே அமர்ந்திருந்தாள். “சாப்பிடலையா”, என்றவனின் கேள்விக்கு. “இல்லை”, என்பது போல் தலையாட்டினாள்.

“சாப்பாடை வேஸ்ட் பண்றது தப்பு”, என்றான்.

“இவன் என்ன என்னை நினைத்துகொண்டிருக்கிறான்? சும்மா அதையும் இதையும் சொல்லிகொண்டிருக்கிறான். எனக்கு தெரியாதா? சாப்பாடு வேஸ்ட் செய்வது தப்பு என்று. சாப்பிட முடியாதபடி ஏதாவது சொல்லிட வேண்டியது. அப்புறம் சாப்பாடு வேஸ்ட் பண்றது தப்பு சொல்றது. எப்படி சாப்பிட முடியும்? எவ்வளவு ஐட்டம். இதை சாப்பிட விடாம பண்ணிட்டு, பேசறதை பார்!”, என்றவள் எரிச்சல் மிகுதியில்.

“அது எனக்கு தெரியும்”, என்றாள், திரும்பி அவனை பார்த்தாள்.

“நான் ஒண்ணு உங்ககிட்ட சொல்லலாமா”, என்றாள்.

என்ன? என்பது போல் பார்க்க.

“இப்படி என்னை சின்ன பொண்ணு மாதிரி நடத்தறதை முதல்ல நிறுத்துங்க! ஏதாவதுன்னா என்கிட்ட தான் சொல்லனும்! உங்களை கல்யாணம் பண்றது என்னோட ஹோல் சோல் டேசிஷன். அதனால ஏதாவது சொல்லனும்னா என்கிட்ட சொல்லனும்! முன்ன மாதிரி எங்கப்பா கிட்ட, அவங்க இவங்க கிட்ட சொல்றதை நான் பிரியப்பட மாட்டேன்!”, என்றாள் அவனை பார்த்து கட்டளையிடுவது போல.

இந்த த்வனி பார்த்திபனுக்கு அவனையறியாமல் பதில் பேசத்தூண்டியது, “நீ சொல்ற மாதிரி தெரியலை. கட்டளை போடுவது மாதிரி இருக்கு”, என்றான்.

“நீங்க எப்படி எடுத்துகிட்டாலும். எனக்கு பிரச்சனையில்லை. ஆனா இதை விட்டு மாற நான் விரும்பமாட்டேன்”, என்றவளுக்கு இப்போது பசிப்பது போல தோன்ற.

“நான் சாப்பிடட்டுமா”, என்றாள்.

சிரிப்பு வந்துவிடுமோ என்று பார்த்திபனுக்கு தோன்றியது.

“சாப்பிடு”, என்று சைகை செய்து முகத்தை சீரியசாக வைத்து போனை எடுத்து நோண்டத் துவங்கினான்.

இதை எதையும் அறியாதவளாக ஜெயந்தி. “அக்கா இவ்வளவு லேட் பண்ற! சீக்கிரம் சாப்பிடு! மாமா நமக்காக சாப்பிட்டு முடிச்சு. இருக்காங்க”, என்றாள்.

“இருக்கட்டும்”, என்று சொல்லி மெதுவாக தான் சாப்பிட்டாள் அபிராமி. கலாவதி வந்து, “நீ இன்னுமா சாப்பிடற”, என்று கேட்ட பிறகே எழுந்தாள்.

இதையெல்லாம் பார்த்த பார்த்திபன். “பண்றது எல்லாம் சின்ன பசங்க மாதிரி வேலை, இதுல நான் இவளை சின்ன பொண்ணு மாதிரி ட்ரீட் பண்றனா”, என்று அவனுக்கு அவனே கேட்டு கொண்டிருந்த போது. அதை மேலே யோசிக்க விடாமல் எல்லாரும் வந்து அவனோடு விடைபெற சொல்லிக்கொள்ள. அதில் பிசியானான்.

சத்யமூர்த்தி எதற்கும் பார்த்திபனிடம் வந்து கேட்கவில்லை. ஏதாவது கேட்க வேண்டுமென்றால் வேணுகோபாலனும், கலாவதியையும் தான் வந்தனர்.

நிச்சயம், வெளிப்பார்வைக்கு நல்ல படியாக சிறப்பாக முடிந்தது. வீட்டிற்கு வந்தும் ராமகிருஷ்ணனிடமும் ஜெயாம்மாவிடமும் எதுவும் கேட்க முடியவில்லை, உறவுகள் சிலர் இருந்தனர். ஊரிலிருந்து வந்ததால் இரண்டு நாள் சென்னையில் தங்கி சுத்திப்பார்க்க வென்று இருந்தனர்.

அப்படியும் பொறுக்கமுடியாமல் அவன் ரூமிற்குள் கூப்பிட்டு. “இப்படி செய்வீங்கன்னு நான் எதிர்ப்பார்க்களை தாத்தா”, என்றான்.     

“நீ எந்த பொண்ணுன்னாலும் சரின்னு தானேடா சொன்னே! இப்போ என்னடா?”, என்றார்.

“எந்த பொண்ணுன்னாலும் எனக்கு சரின்னு சொன்னேன். நீங்க எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் சத்யமூர்த்தி பொண்ணை பார்ப்பீங்கன்னு தெரியாதே”,

“தெரிஞ்சோ தெரியாமலோ பார்த்திபா! உன் கல்யாணம் அந்த பொண்ணோட சில நடவடிக்கைனால நின்னுடுச்சு. முதல்ல பார்த்த பொண்ணோட குடும்பம் கல்யாணம் நின்னது இவளால அப்படின்னு ஊர் பூராவும் சொல்லிட்டாங்க, இதை தவிர வேற வழி கிடையாது”.

“ஏன்னா சத்யமூர்த்தி எனக்கு வேண்டியவன் தான். நித்யாக்கு நிறைய பண்ணியிருக்கான்”, என்றார்.

“இந்த காரணத்துக்காக தான் தாத்தா, நானும் வேண்டாம்னு சொன்னேன்’, என்றான்.

“அவ யார்கிட்ட விட்டா உன்னை? எங்க கிட்ட தானே! இன்னுமும் இப்படி பேசினா எப்படிடா? என் குழந்த இங்க வரணும்னு ஆசைபடுறாடா”, என்றார் அவரும் சந்தடிசாக்கில்.

“தாராளமா வரட்டும்! வருபோது சொல்லுங்க, நான் இங்க வராம இருந்துக்கறேன்” என்றார்.

“டேய் இப்படி பேசினா எப்படி? அவளும் எங்க குழந்தை தான்! நீயும் எங்க குழந்தை தான்!”, என்றார்.

“இந்த மாதிரி எல்லாம் வரும்னு தான் நான் சத்தியமூர்த்தி பொண்ணு வேண்டாம்னு சொனேன்! தெரிஞ்சே என்னை மாட்ட வச்சிடீங்க.”,

ராமகிருஷ்ணன் ஏதோ பேச வர. இதை பற்றி மேலே பேச விரும்பாமல். “நான் வெளியே போயிட்டு வரேன் தாத்தா”, என்று கிளம்பினான்.  

பேச விரும்பாத நேரங்களில். பேச முடியாத நேரங்களில். பார்த்திபன் வெளியே எழுந்து போய்விடுவான்.

மிகவும் வருத்தம் கொடுக்கும் தருணங்கள் சில அவனுக்கு. “அவர்கள் பெண். அவரை பார்க்க வேண்டாம். என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவனுக்கு அவனே கேட்டவன். இந்த விஷயம் கல்யாணத்துடன் முடியாது. சத்திய மூர்த்தியின் பெண் என்றாள். பிறகும் தொடரும் என்ற ஒரே காரணத்திற்க்காக தான் அபியுடன் அவன் திருமணத்தை  விரும்பவில்லை. இப்போது தான் தேவையில்லாமல் அதில் இணைக்கப்பட்டு விட்டோம்.”

“என் வாழ்க்கை எனக்கு அதை தீர்மானிக்க உரிமையில்லையா. இப்படி செய்துவிட்டார்களே”, என்று கோபம் கோபமாக வந்தது. அதை யார் மீது காட்டுவது என்று அவனுக்கு தெரியவில்லை. வண்டியிலேயே கிட்ட தட்ட ஒருமணி நேரம் சுற்றினான். பெட்ரோல் தீர்ந்து தானாக வண்டி நின்றபின் சுய நினைவிற்கு வந்தவன். எங்கேயும் போக பிடிக்காமல் பீச்சிற்கு போய் அமர்ந்து கொண்டான்.

வீட்டிற்கு போன அபிக்கும் அதே நினைவாக இருந்தது. அவனுக்கு தன்னை இவ்வளவு பிடிக்காத போது. தன்னோடான இந்த திருமணத்தை அவன் விரும்பாத போது, தான் அவனை. என்ன செய்வது? என்றே தெரியவில்லை.

யோசித்து யோசித்து களைத்தவள்.

அவனிடமே பேசி விடுவது என்று முடிவெடுத்து அவனை அழைத்தாள்.

அவன் பீச்சில் இருந்த சமயம் போன் அடித்தது.

அன்நோன் நம்பர், கால் யாரென்று தெரியாமல் அவன் எடுக்க.

“நான் அபிராமி பேசறேன்”, என்றாள்.

வைத்துவிடலாமா என்று உடனே தோன்றியது பார்த்திபனுக்கு.

அதை உணர்ந்தாலோ என்னவோ. “வச்சிடாதீங்க”, என்றாள் அவசரமாக, அப்படியே காதில் வைத்திருந்தான்

“உங்களால என்னை கொஞ்சம் கூட டாலரேட் பண்ண முடியாதுன்னா நானே ஏதாவது பண்ணி கல்யாணத்தை நிறுத்திடவா”, என்றாள்.

அந்த முகம் டாலரேட் பண்ண முடியாத முகமா என்ன? என்று நினைத்தவன். அமைதியாகவே இருந்தான்.

“ரொம்ப தொந்தரவு பண்றனா, நான் உங்களை”, என்றாள்.

“இந்த பெண், என்ன இவள்”, என்று தோன்றியது.

“நான் உன்னை டாலரேட் பண்றது இருக்கட்டும், உன்னால என்னை டாலரேட் பண்ண முடியுமா? அதை யோசிச்சுக்கோ! உனக்கு என்னை பண்ண முடியாதுன்னா, ஏதாவது பண்ணு! இல்லைன்னா தேவையில்லை”,

“ஏற்கனவே ஒரு பொண்ணு நிச்சயம் வரைக்கும் வந்து வேண்டாம்னு ஆயிடுச்சு. மறுபடியும் இன்னொன்னு நிச்சயம் பண்ணி வேண்டாமா. இப்படியே இருக்கட்டும். என்னை கொஞ்சம் தனியா விடு. ப்ளீஸ், எதுவும் குழப்பாத! இனிமே ஏதாவது செஞ்சா. என்ன வாழ்க்கை விளையாட்டுன்னு நினைச்சியா. ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ அபிராமி. நான் ரொம்ப சீரியஸ் பெர்சனாலிட்டி. நீ விளையாட்டுத்தனமா இருக்க.”,

“நிஜமாவே என்னை பொருத்துக்கறது ரொம்ப கஷ்டம், யோசிக்காம செஞ்சிட்ட. நல்லா யோசிச்சுக்கோ”, என்றான்.

இவன் பேசுவதே எனக்கு புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது. இவன் என்ன சொல்கிறான்? என்று எண்ணியவள், சொல்வதறியாது. “என்ன பண்ணட்டும்”, என்றாள்.

பார்த்திபன் கையை திருப்பி மணி பார்த்தான். மணி இரவு எட்டு என்றது.

“சாப்பிட்டிட்டு தூங்கு”, என்று போனை வைத்தான்.

அதன் பிறகு நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு அபி வர. அதன் பிறகு வேலைகள் வேகமாக நடந்தன.

பார்த்திபன் பிறகு யாரிடமும் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. வேலைகள் வேகமாக நடந்தது, கலாவதி ஒரு பிரச்சனையும் இல்லையே என்று அபியிடம் தினம் ஒரு முறையாவது கேட்டு விடுவார்.

“நோ மா! இல்லை!”, என்று வித விதமாக பதில் சொல்வாள்.

கலாவதியின் தந்தை வேணுகோபாலனிடம் சொன்னது போல அவருடைய மகள் வீட்டுடன் சமரசம் செய்யும் வேலையில் இறங்கினார்.  

முதலில் வேணுகோபாலன் மகள் வீட்டுக்கு சென்றவர். அங்கே இருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தி. “என்ன காரணமாக இருந்தாலும் இத்தனை வருஷம் அதை இழுத்து பிடிக்க வேண்டுமா? பெண்ணை பார்க்க பெற்றவர்கள் தவிக்கிறார்கள்.”,

அவர்களுடைய பேரனுக்கு அவன் இந்த வீட்டில் பிறந்தவன் என்பதாலேயே பெண் கொடுப்பதாக கூறி. சற்று அவர்களை குளிர வைத்தார். பின் பார்த்திபனின் தந்தையை பற்றி விசாரிக்க. அவர் தற்போது டெல்லியில் பணியில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

அவர் மகனுக்கு திருமணம் என்று கூற வேண்டும். நம்பர் இருக்கிறதா என்று அவர் முகவரியும் வாங்கி. பின்னர் அவர்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் வேணு கோபாலன் வீட்டினர் திருமணத்திற்கு நேரில் வந்து அழைக்க விருப்பம் தெரிவிக்க.

இத்தனை வருடம் தங்கள் சொல் மீறாது கேட்ட தாங்கள் மருமகளை இனியும் பெற்றோரை பார்க்க கூட கூடாது என்று சொல்வது சரியல்ல. என்றுணர்ந்த அவர் வீட்டினர். “திருமணத்திற்கு வந்து கூப்பிட சொல்லுங்க”, என்று கூறினர்.

ஒரு பிரச்சனையை முடித்த அவர் பார்த்திபனின் தந்தையை பார்க்க டெல்லிக்கு உடன் அவர் மகனையும் அழைத்து  சென்றார்.

அங்கே அவரின் அலுவலக முகவரி இருந்தது.

மிஸ்டர் பாஸ்கரன்,

ரீஜனல் பாஸ்போர்ட் ஆபீஸ்,

நியூ டெல்லி.

என்று இருந்தது

பாஸ்போர்ட் ஆபீசில் எத்தனை பேர் இருப்பார்களோ எங்கே தேடுவது என்று தெரியாமல் உள்ளே நுழைந்தவுடன் இருந்த செக்யூரிட்டியிடம் அதை காட்டி கேட்க “நீங்கள் யார்” என்றான்.

“இவரின் உறவினன் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்”. என்றார்.

“அப்படி அப்பாயின்மென்ட் இல்லாம யாரும் சாரை பார்க்க முடியாது”, என்றான் ஹிந்தியில். சைய்கையோடு. வேறு வழியில்லாமல் அவரின் போன் நம்பருக்கு அழைத்தனர்.

மறுபுறம் அவர் போன் எடுத்தவுடனே. இந்த மாதிரி தாங்கள் சென்னையிலிருந்து பார்க்க வந்திருப்பதாக கூற.

அவரை அனுப்பி இடம் சொல்லுமாறு அந்த செக்யூரிட்டி பணிக்கபட்டான்.

உள்ளே எல்லாபுறமும் ஆயுதம் தாங்கிய செக்யூரிட்டிகள். வாயை பிளந்து பார்த்து செல்ல. உள்ளே விடும் முன் மறுபடியும் அவர்களை செக் செய்து கேள்வி கேட்டு உள்ளே விட்டனர்.

உள்ளே ஒரு மனிதர் கம்பீரமாக அமர்ந்திருந்தார், மேஜையின் மேலே மிஸ்டர் பாஸ்கர், ரீஜனல் பாஸ்போர்ட் ஆபிசர் என்று இருந்தது. 

Advertisement