Advertisement

அத்தியாயம் பத்து:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தம் நடப்பது

எனக்கு உன்னுடனா இல்லை

எனக்கு என்னுடனா

இதுவும் எனக்கு நானே கேட்கும் கேள்வி

கேள்விகளை எனக்கு நானே கேட்கிறேன்

விடை தருவாயா பெண்ணே ??. நீ.

அபியை தேடி. பார்த்திபனின் கண்கள் தான் களைத்து போயின. ஆனால் அவள் கண்களில் படவில்லை.

வேணுகோபாலன் இதற்கிடையில் ராமகிருஷ்ணனையும் ஜெயாம்மாவையும் வீட்டில் சென்று பார்த்து பெண் கொடுக்க விருப்பம் தெரிவித்து ஜாதகம் கேட்க.

அவர்களுக்கு அதிர்ச்சியே.

சத்தியமூர்த்தியின் பெண் என்பதால் ராமகிருஷ்ணனுக்கு மறுக்க முடியவில்லை, மறுக்க காரணமும் இல்லை, அதுவும் வேணுகோபாலனே இறங்கி வந்து சம்பந்தம் பேசும் போது.

“எனக்கு பரிப்பூறன சம்மதம். இது நடந்தால் அதைவிட எனக்கு என்ன சந்தோஷம். ஆனால் பார்த்திபன், அவனை ஒரு வார்த்தை கேட்டு சொல்லிவிடுகிறேன்”, என்றார்.

அதற்காக ஜாதகம் பார்ப்பதை நிறுத்த வேண்டாம் என்று சொல்லி ஜாதகத்தை இருபுறமும் பரிமாறிக்கொண்டனர். இதை பற்றி அபியிடம் யாரும் சொல்லவில்லை. அவள் விரும்பியவன் தானே. சரி வந்தால் பிறகு சொல்லி கொள்ளலாம் என்று விட்டு விட்டனர்.

அங்கே பார்த்திபன் இரவு வீடு வந்தபோதே மணி பத்தரையை நெருங்க. ஜெயம்மாவும் ராமகிருஷ்ணனும் விழித்திருந்தனர்.

“என்ன ஜெயாம்மா? இன்னும் தூங்கலையா! நான் போன் பண்ணி சொன்னேனே. இன்னைக்கு என் ஃபிரன்ட் வர்றான், வெளில சாப்டுக்கறேன்னு சொன்னேன்ல.”, என்று கடிந்தான்.

“அதில்லைப்பா உன் கல்யாண விஷயமா.”, என்று ஜெயாம்மா ஆரம்பித்தவுடனேயே. “மறுபடியுமா”, என்றான்,

“பின்ன அப்படியே விட்டுட முடியுமா. ஒரு வரன் தானா வந்திருக்கு”, என்று ராமகிருஷ்ணன் பீடிகையோடு ஆரம்பிக்க.

அவரை முறைத்து பார்த்தான்.

“எதுக்குடா அவரை முறைக்கிற”, என்ற ஜெயாம்மா. “ஏற்கனவே அவளால தான் அப்படி ஆயிடுச்சு அதனால.”, என்று அவர் முடிக்க கூட இல்லை.

அவர் அபியை குறிப்பிடவும். அபியின் ஞாபகம் வர. கண்கள், மனது அவளை தேடினாலும், அவளுடைய ஷேம லாபத்துக்காக தான் தேடியது, மற்றபடி திருமணம் என்று யோசித்ததில்லை.

ஜெயாம்மா சொல்ல வந்தது. “அதனால சீக்கிரமா அவளையே கல்யாணம் பண்ணிகோடா. அவங்களுக்கு சம்மதம்”, என்று சொல்ல வந்தார். “அவளால”, என்ற வார்த்தையிலேயே அபிராமியின் ஞாபகம் வர பெற்றவன். மீண்டும் அவள் வந்து ஏதும் உளறக்கூடாது என்று நினைத்தவனாக வேகமாக.

“நீங்க எந்த பொண்ணை பார்த்தாலும் சரி, இந்த தடவை பொண்ணு பார்க்க அது இதுன்னு செய்யாதீங்க. ஜாதகம் பாருங்க! பொண்ணை உங்களுக்கு பிடிச்சா போதும். நான் அவங்ளுக்கு ஓ.கேன்னா. சரின்னு சொல்லிடுங்க! சும்மா இதை வைச்சு என்னை டென்ஷன் பண்ணக்கூடாது”, என்று கோபப்பட்டான்.

“டேய்! இதென்ன கத்திரிக்காய் வியாபாரமா?”, என்று ஜெயாம்மா குறைபட.

“அது கத்திரிக்காய் வியாபாரமோ! புடலங்காய் வியாபாரமோ! ஏதோ ஒண்ணு! நீங்களே பார்த்து முடிச்சிடு! நான் கல்யாணம் பண்றதே, உனக்காக தான்”, என்றான் கோபமாக.

அவனுடைய கோபத்தை பார்த்த ராமகிருஷ்ணன் ஜெயாமாவிடம். “மேல பேசாத ஜெயா, அவன் தான் நமக்கு பிடிச்சா போதுன்னுட்டான்ல! விட்டுடு!”, என்றார்.

“அதுக்கில்லைங்க. அது சத்தியமூர்த்தியின் பொண்ணு”, என்று ஜெயமா சொல்ல வரும்போதே. “அதுக்கில்லைங்க”, என்று ஜெயம்மா ஆரம்பித்தவுடனேயே மேலே பேச விடவில்லை ராமகிருஷ்ணன்.

“நமக்கு பிடிச்சா போதும்னுட்டான் மேல பேசாத”, என்றார்.

இதில் பார்த்திபன் வேறு. “அதான் தாத்தா சொல்றாரில்லை, சும்மா நீங்க வேற ஏன் நைய் நைய்ந்றீங்க. விடுங்க, எல்லாம் அவர் பார்த்துப்பார்.”, என்று சப்போர்ட் செய்ய.

“எனக்கென்னப்பா அப்புறம் பொண்ணை எனக்கு பிடிக்கலைன்னு நீ எந்த கலாட்டாவும் பண்ண கூடாது. என்னை கோபிக்க கூடாது.”, என்றார்.

“அது அபியாக இருக்கும்”, என்ற சிறு சந்தேகம் கூட பார்த்திபனுக்கு வரவில்லை. “நான் ஏன் ஜெயம்மா உங்களை போய் கோபிக்க போறேன்! மாட்டேன்!”, என்றான் சமாதானமாக.

“சரிப்பா அப்புறம் உன் பாடு! பொண்ணு பாடு!”, என்றார் ஜெயாமா.

அப்போது பார்த்திபன் மனதில். “யாரும் அந்த பக்கத்துக்கு வீட்டு பிசாசு போல என்னை தொல்லை பண்ண மாட்டாங்க, ரெண்டு நாள்ல என்னை ஒரு வழி ஆகிட்டா. எந்த பொண்ணும் அவ அளவுக்கு என்னை தொந்தரவு பண்ண மாட்டா”, என்று மனதிற்குள் நினைத்தான்.

அவன் சென்ற பிறகு ஜெயாம்மா. “என்னங்க இப்படி பண்ணிடீங்க. விஷயம் தெரிஞ்சு முடியாதுன்னு மறுத்துட்டான்னா”, என்றதற்கு ராமகிருஷ்ணன்.

“விதி வலியது ஜெயா. திருமணம். யாருக்கு யார்? என்று இருக்குதோ அவர்களுடன் தான் நடக்கும். நாம் என்ன தான் புத்திசாலிகளாக இருந்தாலும் வாழ்க்கை துணை என்பது அமைவது தான். என்ன தான் அமைக்க நினைத்தாலும் அமைவது தான் அமையும்.”

“நாம் வாழ்க்கையின் கரங்களில் விளையாட்டு பொம்மையே. ஒரு பாடலில் வருவது போல ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா. என்பது போல தான்”, என்று சமாதானம் கூறினாலும் ஜெயம்மா சமாதானமாகவில்லை என்று புரிந்தது.

“நம்ம பொண்ணு எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு நின்னப்போ. அவளை தேற்றி பிரகாஷ்க்கு கல்யாணம் பண்ணி கொடுத்தது சத்யமூர்த்தி. தெரிஞ்சோ தெரியாமலோ நம்ம பார்த்தியோட பேரோட அவன் பொண்ணு பேர் சேர்ந்திடுச்சு.”,

“அது மேல மேல கண்ணு காது மூக்கு வச்சு  வளரக்கூடாதுன்னு தான் வேணுகோபாலனே இறங்கி வந்து சம்பந்தம் பேசறான். தப்பு யார் மேல இருக்குன்னு யோசிக்கற காலகட்டத்தை கடந்துட்டோம்”,

“நடக்கறது நடக்கட்டும்! நீ சொல்லகூடாது ஜெயா! அங்கே தெரிஞ்சதுக்கு அப்புறம் என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கறேன்”, என்று திட்டமாக அவரிடம் கூறினார் ராமகிருஷ்ணன். 

ஒரு பெருமூச்சோடு இடத்தை விட்டு அகன்றார் ஜெயாம்மா

ஜாதகம் பார்க்க பத்திற்கு ஏழு பொருத்தம் இருந்தது. முக்கியமாக வசிய பொருத்தம் இருந்தது. அதனால் கணவனும் மனைவியும் ஒருவரின் மீது ஒருவர் விருப்பப்பட்டு ஒருவர் மற்றொருவரின்  குணம் அறிந்து நடந்து கொள்வர் என்பதால் ஏழு பொருத்தம் உன்னதமே என்று தீர்மானிக்கப்பட்டது.

நிச்சயதிர்க்கும் நாள் குறித்த பிறகு தான் அபிராமியிடம் சொன்னர். அவளுக்கு இது எதிர்பாராத செய்தி தான். தன்னுடைய அம்மா வழி தாத்தா தனக்காக முயற்சி செய்வார் என்று தெரியும். ஆனால் தந்தை வழி தாத்தா தனக்காக இத்தனை வருட விரோதத்தை விட்டு முன்னின்று செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

அப்படி ஒன்றும் அதிகபடியாக அவளுக்கு பெரிய சந்தோஷம் தோன்றவில்லை. ஏன்? என்றும் அவளுக்கு புரியவில்லை. என்ன எதிர்ப்பர்த்தால் என்றும் அவளுக்கே தெரியவில்லை. இது முன்பே நடக்கும் என்று அவளே திட்டமாக நம்பினாளா, அதனால் பெரிய சந்தோஷம் தோன்றவில்லையா தெரியவில்லை.

அவளுக்கு இன்னுமே சந்தேகம் இருந்தது, பார்த்தி நிஜமாகவே திருமணத்திற்கு ஒத்துகொண்டானா இல்லை சந்தர்ப்பமா தெரியவில்லை!

இதைபற்றி யாரிடமும் கேட்க அவளுக்கு விருப்பமில்லை. வருவது வரட்டும் என்று இருந்துவிட்டாள். ஒரு படபடப்பு, ஒரு எதிர்பார்ப்பு, எதுவும் தோன்றவில்லை. ஆனால் நிச்சயம் இது நன்றாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

நித்யாவிற்கு ரொம்ப சந்தோஷம். சத்தியமூர்த்திக்கு அவள் சொன்ன நன்றிகள் அளவே இல்லை.

“எனக்கு என் பையன் அபியை கல்யாணம் பண்ணிக்கறது ரொம்ப சந்தோஷம், அபியை எனக்கு பொறந்துதுல இருந்து தெரியும். என் பையன் அவளோட சந்தோஷமா இருப்பான்ற நம்பிக்கை இருக்கு”, என்றார்.

அதே சமயம் தழுதழுத்த குரலில். “அவன் கல்யாணத்தை எனக்கு பார்க்க ஆசையா இருக்கு சத். அவன் சம்மதிப்பானா தெரியலை! ஏன் அபியுமே பார்த்திபன் என் மகன்னு தெரிஞ்சதில் இருந்து என்னிடம் பேசவேயில்லை. உன்னால முடியுமா”, என்றார் தயங்கி தயங்கி.

“இங்க பசங்க ரெண்டு பேர் கிட்டயும் அவங்க அண்ணா கல்யாணம்னு சொல்லி வச்சிருக்கேன், நாங்க கல்யாணத்தை பார்க்க முடியுமா”, என்றாள்.  “பார்த்திபனுக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறகு எங்க அம்மா வீட்டுக்கு நாங்க வரவேயில்லை. பார்த்திபனுக்கு பிடிக்காததால. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவன் முக்கியம். எனக்கும் அவன் நிம்மதி முக்கியம்ன்றதால நான் வரவேயில்லை.”,

“வளர வளர அது குறையும்னு பார்த்தால். அது இன்னும் அதிகம்தான் ஆச்சு குறையலை”,

“பிரகாஷ் ரொம்ப அட்ஜஸ்ட் பண்றார்தான் இருந்தாலும் சில சமயம் என்னால உன் பையனும் நீயும் பிரிஞ்சிடீங்களான்னு வருத்தபடறார்.  என்னோட இன்னும் ரெண்டு பசங்களுக்கும் பாட்டி தாத்தா வேணும் இல்லையா”, என்றார்.

“என்னோட ஒரு சில வருஷ ஆரம்பகால பிரிவு என்னை ரொம்ப தூரம் அவன்கிட்ட இருந்து விலக்கிருச்சு”, குரலில் இருந்த கலக்கம் அவர் அழுகிறார் என்று காட்ட.

“ஹே நித்யா! நீ ஏன் இவ்வளவு அப்செட் ஆகுற! எல்லாம் உடனே சரியாகாது. ஆனா அபிராமிக்கு உன் பையனை ஏன் பிடிச்சதுன்னு எனக்கே தெரியலை, யார்கிட்டயும் நம்மால பேச முடியாது பொறுப்போம்”,.

“முதல்ல எல்லாம் நல்ல படியா முடியட்டும் நித்யா, எனக்கு இன்னமுமே இதை நம்ப முடியல. அப்பா பணிஞ்சு போய் சம்பந்தம் பேசுவார்ன்னு நினைக்கலை! உன் பையன். உண்மையா சொல்லனும்னா எனக்கு அவனை. அச்சோ என் பொண்ணு அவன்னு சொன்னா தொலைச்சிடுவா. அவரை பார்த்தா கொஞ்சம் டென்ஷன் ஆவேன். அப்பா பார்வையிலயே என்னை பயமுறுத்துவான்”,

“அவன் பார்க்கிற பார்வையே என் அம்மாவை என்கிட்ட இருந்து நீதான் பிரிச்சிடேன்னு சொல்லும். எனக்கு அதுவே ஒரு சங்கடம். என் பொண்ணு அதுல இருந்து என்னை வெளில கொண்டுவந்தாலே போதும். அவங்க அப்பாவை பத்தி யோசிக்காம இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சதே அதுக்கு தான்” என்றார் சத்யமூர்த்தி பார்த்திபனின் அப்பாவை மனதில் வைத்து.

 

“என் பையன் அவங்க அப்பா மாதிரி இருப்பான்னு நினைக்கறியா சத்”.

“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன் நித்யா. நான் நாலும் யோசிக்கணும், உன் நிலைமை நாளைக்கு என் பொண்ணுக்கு வந்துடக்கூடாது இல்லையா”,

“பாஸ்கரை எனக்கு தெரியும் நித்யா! என்னவோ அவன் கண்ணுல தெரிஞ்ச ஒண்ணு. இவர் கண்ணுல இல்லை. ஒரு நேர்மை இருக்கு. அதுவுமில்லாம எல்லாத்துக்கும் மேல என் பொண்ணுக்கு அவனை. சாரி அவரை பிடிச்சிருக்கு”,

“லெட்ஸ் ஹோப் போர் தி பெஸ்ட்”,

“பார்ப்போம் நித்யா,  என்னால  முடிஞ்ச வரைக்கும் கல்யாணத்துக்கு நீங்க வர்றதுக்கு ஏதாவது வழி இருக்கா பார்ப்போம்”, என்றார் சத்யமூர்த்தி.

இங்கே ஒரு பெருமூச்சு நித்யாவிடம் இருந்து கிளம்பியது.

ராமகிருஷ்ணன் தங்கள் வீட்டில் நிறைய நாட்களுக்கு பிறகு நடக்கும் முக்கிய விஷேசம், ஆதலால் எல்லோரையும் அழைத்தார்.  நித்யாவிடம் “பொறுமையாக இரும்மா. எப்படியாவது உன்னை கல்யாணத்திற்கு அழைக்க பார்க்கிறேன்”, என்றார்.

அங்கே வேணுகோபாலனும் எல்லோரையும் அழைத்தார். ஒரு கல்யாண கூட்டத்தில் பாதியை சேர்த்தனர்.

மனதின் ஓரத்தில் எல்லோருக்கும் ஒரு இனம் புரியாத பயம் இருந்தது. எல்லாம் நன்றாக நடக்க வேண்டுமே என்று. திருமணம் முடிவானதர்க்கும்  நிச்சயம்  நடப்பதற்கும் இடையில்  ஒரு வாரம் இருந்தது.

பெண்ணை பற்றி ஒரு விவரமும் பார்த்திபன் கேட்கவில்லை. மனது மட்டும் ஒரு முறை இந்த அபிராமியை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று அவனையறியாமல் நினைத்தது, அவள் நன்றாக இருக்கிறாளா என்று தெரிந்து கொள்வதற்காக. .

நிச்சயத்திற்கு எந்த நாள் என்று மட்டுமே ராமகிருஷ்ணன் பார்த்திபனிடம் சொன்னார். வேறு வேலைகள் எதுவும் சொல்லவில்லை. எல்லாவற்றையும் அவரே செய்தார். அதனால் பார்த்திபனுக்கு எதுவும் தெரியவில்லை.

தினமும் காலையில் எழுந்து தோட்டத்தை பார்க்கும் பொழுது. அண்ணாந்து பக்கத்துக்கு வீட்டை பார்க்காமல் இருப்பதற்கு பெரு முயற்சி செய்து மனதை கட்டுக்குள் கொண்டுவருவான்.  காலையில் கேட்கும் அவள் சத்தமும் கேட்கவில்லை

எல்லோரும் எதிர்பார்த்த நிச்சய நாளும் வந்தது. நித்யாவிடம் மட்டுமே முகத்தை எப்பொழுதும் திருப்புவான். மற்ற உறவுகளிடம் நன்றாக பேசாவிட்டாலும்  முகத்தை திருப்ப மாட்டான். இன்று தன்னுடைய விஷேசதிர்க்கு வந்திருந்ததால் அவர்கள் எல்லோரிடமும் ஒரிரெண்டு வார்த்தை பேசி மண்டபத்திற்கு சென்றால். அங்கே முதலில் இவர்களை வரவேற்க நின்றது சத்தியமூர்த்தி.

இவர் ஏன் இங்கே நிற்கிறார் என்ற யோசனை மனதிற்குள் ஓடிகொண்டிருந்ததில் அவனுக்கு தெரியாமல் தலையசைத்தான்.

பிறகு ஜெயாமாவை தேடினால். அவர் தனியாக கிடைக்கவில்லை. எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் எல்லோரும் நித்யாவை பற்றி கேட்க. “திருமணத்திற்கு வருவாள். இப்பொழுது அவளுக்கு.”, என்று இழுத்து ஏதாவது காரணம் கூறி ஜெயாம்மா எல்லோரையும் சமாளித்துக்கொண்டிருந்தார்.

அவரை தேடும் போது சிரித்து எல்லோரிடமும் பேசிகொண்டிருந்த ஜெயந்தி கண்ணில்பட்டாள்.

இந்த பெண் ஏதடா இங்கே என்று யோசிக்கும் போதே, “ஹலோ நான் ஸ்ரீகாந்த்! பொண்ணோட தம்பி”, என்று தானாகவே ஒரு பையன் வந்து அறிமுகப்படுத்திக்கொள்ள.

பார்த்திபன் அவனிடம் விவரம் கேட்கும் முன்னரே. “டைம் ஆயிடுச்சாம். வர சொன்னாங்க”, என்று அவன் சொல்ல. வேறு பேசாமல் அவனோடு போனான்.

இரண்டு நாற்காலியை நடுநாயகமாக போட்டிருந்தனர். இரண்டில் ஒன்றில் அவனை வேணுகோபாலன் வந்து அமர சொல்ல. மிகுந்த குழப்பம்.

எங்கிருந்தோ சரியாக அந்த சமயம் வந்த ராமகிருஷ்ணன். “உட்காருப்பா! தாத்தா சொல்றபடி கேளு”, என்றார்.

குழப்பத்தோடு அவரை பார்க்க. உட்காருப்பா! நீ உட்கார்ந்த பிறகு தான் பொண்ணை கூட்டிட்டு வருவாங்க”, என்றார்.

நிறைய பேரை இருவரும் அழைத்திருந்தனர். நிறைய கூட்டம். அந்த சபையில். அத்தனை பேர் நடுவில். எதுவும் வாய் பேச முடியாதவனாக அமர்ந்தான்.

அமர்ந்த பிறகு பெண் வந்து அமர. திரும்பி பார்த்தவனால் கண்களை அகற்றவே முடியவில்லை. அபிராமியை பார்த்து அவன் அதிர்ந்தான். அவன் அபிராமியை எதிர்பார்க்கவேயில்லை.

கண்களால் ஜெயாம்மாவை தேட. அவர் அங்கே தான் இருந்தார். ராமகிருஷ்ணனும் அங்கே தான் இருந்தார். இருவருமே இவன் என்ன செய்ய போகிறான் என்று எதிர்பார்த்து பார்க்க.

அதிர்ச்சி! குழப்பம்! என்று ஒருசேற தாக்க என்ன செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை. கட்டாயம் இத்தனை உறவுகளுக்கு மத்தியில். கூட்டத்துக்கு மத்தியில். எழுந்து போக முடியாது.

“இவள் என்ன தான் நினைத்து கொண்டிருக்கிறாள். அவ்வளவு சொல்லியும் அறிவில்லையா? இவளுடைய அப்பாவுக்குமா இல்லை?”, என்று நினைத்தவன். முதலில் அபிராமியை பார்த்தால், ஜெயந்தி ஏதோ கேள்வி கேட்க அபிராமி பதில் சொல்லி கொண்டிருந்தாள்.

அவள் முகத்தை பார்த்தால் மலர்ச்சி இல்லை, சந்தோஷம் மாதிரி அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. மாறாக ஒரு அமைதி இருந்தது.

அந்த நேரத்திலும் அவள் முகத்தை பார்த்த அவனுக்கு தோன்றியது. “இவள் ஏதாவது ஆசிரமத்திற்கு அமைதியை தேடி வந்திருகிறாளா! முகத்தை வைத்திருப்பதை பார்”, என்று நினைத்தவன். வேகமாக அவளின் தந்தையை பார்வையில் தேட.

அவரும் அவனை பார்த்து கொண்டிருந்தார். அவரை விடாமல் இப்படியா செய்வீங்க என்பது போல பார்க்க. அவரும் புரியாமல் பார்த்தவர். “எதற்கு இங்கே சபையில் உட்கார்ந்து இப்படி பார்க்கிறான்”, என்று கலக்கமானார்.

அபி இந்த பார்வைகளை பார்த்தவள். “எதுக்கு இப்போ எங்க அப்பாவை விடாம பார்க்கறீங்க”, என்றாள் மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்குமாறு. 

அவனும் மெதுவான குரலில், “அவர் பண்ணின வேலைக்கு.”, என்று இழுத்தவன். “இது சரி வராதுன்னு தானே உங்க அப்பாவை கூப்பிட்டு சொன்னேன். உனக்கு தான் அறிவு கிடையாதுன்னா, உங்க அப்பாவுக்குமா! இப்படி ஒரு சூழ்நிலையில் என்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க. என்ன? எல்லார் முன்னாடியும் என்னை கார்னர் பண்றீங்களா”, என.

“உங்களுக்கு என்னோட தான் நிச்சயம்ன்னு தெரியுமா? தெரியாதா?”, என.

“தெரியாது”, என்றான் வார்தையாலேயே.

“ஒஹ்! அதான் சம்மதிச்சிட்டீங்களா. எப்படி ஒத்துடீங்கன்னு யோசிச்சேன்.”, என்று அவள் சொல்லும் போதே சடங்குகளை ஆரம்பித்துவிட்டனர்.

பார்பவர்களுக்கு ஏதோ மெதுவான குரலில் அவசியமானத்தை பேசுவது போல தோற்றமளித்தது.

மேல பேச வாய்ப்பேயில்லை. அங்கங்கே ஏதாவது யாராவது கேட்டனர். வாழ்த்தினர். இருவர் முகமும் தெளிவில்லாமல் இருக்க. யார் யாரோ வந்து போட்டு வைத்து திருநீறு பூசினர்.

பின்பு லக்னபத்திரிக்கையும் வாசித்தனர். இருவர் மனதுமே உளைக்கலமாக கொதித்து கொண்டிருந்தது.

அபி எதிர்பார்க்கவேயில்லை. கட்டாயத்துக்கு சம்மதித்து இருப்பான் என்று நினைத்தாள். ஆனால் தான் தான் மணப்பெண் என்றே தெரியாமல் தான் வந்து அமர்ந்திருக்கிறான் என்று நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

கண்களில் நீர் நிறைந்தது.  எழுந்து போய் விடலாமா என்று நினைத்தாள். இனி அது தன்னால் கட்டாயம் முடியாது என்று தெரியும். 

எழுந்தும் போக முடியாது. முன்பு செய்த மாதிரி பைத்தியக்காரத்தனமாக கையை அறுத்து கலாட்டா செய்யவும் முடியாது. இனி தன் கையில் எதுவும் இல்லை வாழ்க்கை போகும் வழி போகவேண்டுமோ.?.

செய்வதறியாது திகைத்தாள்.   

Advertisement