Advertisement

அத்தியாயம் ஒன்று:

புலர்கின்ற பொழுது, புலராத ஜனங்கள்,

புலர்ந்த ஜனனம். புலர வேண்டாம் என்று நினைக்கின்ற மரணம்,

பொழுது புலரும் வேளையில் நான் இருக்கிறேன்

என்று வரும் உதயன், அவனுடன் உதிக்கும் பொழுது

புலர்ந்தும் புலராத மனித மனம்,

அதில் தினம் உதிக்கும் ஆயிரம் யுத்தம்,

இந்த யுத்தம், இதன் சத்தம்,

யாருக்கு கேட்க்கும், அது அவனுக்கு மட்டுமே கேட்கும்,

அது மற்றவர்களுக்கு கேட்டால் அவன் மனிதனல்ல,

அது மற்றவர்களுக்கு கேட்க்காதவரை தான் அவன் மனிதன்,

நாம் எல்லாரும் இங்கு மனிதர்களே,

இது ஆயுதம் கொண்ட போர்களமல்ல ,

இதில் ஆயுதமில்லாத போர் உண்டு,

இதில் தோற்பதும் நாமே ஜெயிப்பதும் நாமே,

தோற்க பிறந்தவர்கள் தோல்வியை பற்றி நினைப்பார்கள்,

ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயிப்பதை மட்டுமே நினைப்பார்கள்,

நாம் தோற்க பிறந்தவர்களா, ஜெயிக்க பிறந்தவர்களா ? 

இது நம் ஒவ்வொருவரின் உள் நடக்கும்   சத்தமில்லாத யுத்தம்.

அவன் கூற்று இது. அவன் பார்த்திபன். அது மட்டுமே அவன் அடையாளம் வேறு அடையாளம் இல்லாதவன். இல்லாமல் அவனே ஆக்கி கொண்டான்.  வேறு அவன் வைத்துக்கொள்ள பிரியப்படவில்லை.

யாரால். இந்த கேள்விக்கு அவன் அவனுக்கே கொடுக்கும் பதில் கடவுள். அவர் நினைத்திருந்தால் அவனை நல்லபடியாக எல்லாமுடன் படைத்திருக்கலாம்.

ஆனால் இல்லை. அவன் தந்தை யார் அவன் அறியான். அவன் தாய் உண்டு. ஆனால் தொடர்பில்லை. முன்பு அவர்களுக்கு பிரியமில்லை தொடர்புகொள்ள. தற்பொழுது இவனுக்கு பிரியமில்லை தொடர்பு கொள்ள.

வளர்ந்தது தனியாக. வளர்த்தவர்கள் அவன் அன்னையை பெற்ற தந்தையும் தாயும். எங்காவது பேரனை மகனாக தத்தெடுப்பார்களா தெரியவில்லை. ஆனால் இவனை எடுத்தார்கள். தாய் தந்தை அருகில் இல்லாத குறை தெரியாமல் அவர்கள் வளர்க்க பிரியப்பட, அப்படி வளர்ந்தானா அவனுக்கே தெரியாது. 

அவன் தந்தை யார் என்று தெரிந்து கொள்ள அவன் முயற்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் தெரிந்து கொள்ள ஆவல் இருந்தது. சில சமயங்களில் அவனுக்கே தோன்றும், அவர் யார் என்பது தனக்கு தெரியாது. ஆனால் நான் இங்கே இருக்கிறேன் என்று தெரியுமல்லவா, அவர் வராத போது நான் ஏன் போகவேண்டும் என்று.

அவனுக்கு தெரியும், இது அவன் மட்டுமே இருக்கும் யுத்தகளம். இதில் கண்களுக்கு தெரியாத எதிரிகள் அவன் எண்ணங்கள்.

ஆனாலும் அவனுக்கு தெரியும். அவனுக்கு அவனே சொல்லி கொள்வது நான் ஜெயிக்க பிறந்தவன். இது அவனுள் நித்தமும் நடக்கும்.

                 சத்தமில்லாமல் ஒரு யுத்தம்.  

“பார்த்திபா………”, என்ற ஜெயாம்மாவின் அழைப்பு,

“சொல்லுங்க ஜெயாம்மா”, என்று வந்து நின்றான்.

அப்படி தான் அழைப்பான், அம்மா என்ற தனி அழைப்போ, பாட்டி என்றோ  அழைப்போ, அவன் வாயில் இருந்து வராது.  

“எனக்கு மாத்திரை முடிஞ்சிடுச்சே, இன்னைக்கு காலையில சாப்பிட இல்லை”,

“ஏன் என்கிட்ட முன்னமே சொல்லலை, எத்தனை தடவை சொல்றேன், இப்படி சுத்தமா காலியானபிறகு சொல்லாதீங்கன்னு, வாங்க தவறிடுச்சுன்னா?.”

“காலையில நான் எப்போ கடைக்கு போய் வாங்கிட்டு வந்து, மறுபடியும்                 நான் கடைக்கு போகிறது. ஏன்? ஜெயாம்மா உங்களுக்கு மாத்திரை சாப்பிடறதை விட என்ன கவனம். நேற்றே சொல்லி இருக்க வேண்டாமா”, என்று கடிந்து கொள்ள.

“ஆமாம்! அது பெரிய கடை அதை பிடிச்சிட்டு உயிரை எடுக்கிறான். படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி வேலைக்கு போவானா?. ஏதாவது சொல்லிட்டா. அப்புறம் பேச மாட்டான். சாப்பிட மாட்டான்.”

“நாராயானா! இந்த பையனுக்கு ஒரு நல்ல புத்திய கொடப்பா!”, என்று ஜெயாம்மா கடவுளை அந்த காலை வேலையில் தொந்தரவு செய்து கொண்டிருந்த போது.

“ஐ நோ பா.!”, என்று ஒரு குரல்  சத்தமாக  கேட்க.

“காலையிலே ஆரம்பிச்சிட்டா போல”, என்று மனதிற்குள் நினைத்தபடியே இருக்க அவனை அறியாமல்  முகத்தில் ஒரு புன்னகை கீற்று மலர்ந்தது.

நிமிடத்தில் ஜெயாமாவுக்கு தெரியாமல் மறைத்தான்.

அந்த குரல். தினம் அவன் காலையில் கேட்பது தான். அவள் குரல் மட்டுமே கேட்கும். எதிர் குரல் கேட்டதில்லை. இவள் மட்டும் தான் வீட்டில் சத்தமாக பேசுவாள் போல என்று நினைத்தவன். மேலே அந்த வீட்டு ஆட்களை பற்றி நினைக்க பிரியமில்லை.

யாரும் நம்புவார்களா தெரியாது, இந்த குரலை இரண்டு வருடமாக நிறைய நாட்கள் காலையில் கேட்பதுதான்.

ஆனால் அவள் முகம் பார்த்ததில்லை. பார்க்க ஆவலோ பிரியமோ இல்லை. குரல் மட்டும் வெகு பரிட்சயம். அவள் சத்தம் அப்படி.      

“இன்னைக்கு காலையிலயே ஆரம்பிச்சிட்டாடா. நம்ம வீடும் அவங்களதும் பக்கத்தில் இருந்தாலும், ரெண்டு வீட்டுக்கும் எவ்வளவு தூரம். ஆனா அங்க கத்தறது, இங்க கேட்குது பார்.”, என்று ஜெயாமாவும் வழக்கம் போல் அவர் பேச்சை ஆரம்பிக்க.

“நான் ஏதாவது மெடிக்கல் ஷாப் திறந்திருக்கா பார்க்கிறேன்”, என்றபடி அந்த இடத்தை விட்டு அகன்றான்.     

“அபிராமி எழுந்துக்கோ! அப்பா திட்டுவாங்க! மணி ஆறாச்சு! பிரம்ம முகூர்த்தம் தாண்டியாச்சு! எழுந்துக்கோ அபி இல்லைன்னா. அப்பா தாத்தா எல்லாம் திட்டுவாங்க.”, என்று ஒரு புறம் எழுப்பிகொண்டிருக்க, அது அவள் காதை எட்டாத நல்ல உறக்கத்தில் இருந்தாள் அபிராமி.

“எழுந்திரு”, என்று மறுபடியும் ஒரு அதட்டல் போட்ட பிறகு, மெதுவாக கண்களை திறந்தவள்……………. “ரொம்ப நேரம் படிச்சிட்டு இருந்தேன்மா கொஞ்ச நேரம் தூங்கறேனே.”,

“அதை ஏண்டி நைட் படிச்ச. காலையில எழுந்து படிக்க வேண்டியது தானே”,

“இவங்க மத்தியில நான் மத்தளம். எழுந்திருடி இல்லைனா பொண்ண வளர்த்து வெச்சிருக்கேன் பாருன்னு, காலையிலேயே எனக்கு அர்ச்சனையை ஆரம்பிச்சிடுவாங்க, பாரு! நான் வாசல் கூட்டி தெளிச்சிட்டேன். போய் கோலம் மட்டுமாவது நீ போட்டுடு. எழுந்துரு.”, என்று சொல்லிவிட்டு போனார்.

வேறு வேலை பார்த்து பதினைந்து நிமிடம் கழித்து, அபிராமியின் அன்னை கலாவதி  வந்து பார்த்தால், இன்னும் அபிராமி உறக்கத்தில் இருந்தாள்.

“எழுந்திரு அபி, காலையில வாய் பேச வைக்காத, எழுந்திரு”, என்று அவளை எழுப்பி. ஒரு வழியாக கோலம் போட அனுப்பிய பிறகே அவர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.     

“யாரு இந்த ரூல்ஸ் எல்லாம் கண்டுபிடிச்சாங்க! பொண்ணுங்கன்னா கோலம் போடணும்னு. அந்த தடிமாடு கூட தூங்கறான்”, என்று அவள் தம்பியை திட்டியவள்,

“அவனை எழுப்பி கோலமா போடச் சொல்றீங்களா இல்லைன்னா நான் வேணா காலேஜ் போகமா வீட்ல உட்கார்ந்து நீ சொல்ற வேலையெல்லாம் செய்யறேன்”.

“ஏன் நான் அப்பா தாத்தா மாதிரி வாக்கிங் போக கூடாதா., அவங்க மட்டும் வாக்கிங் போயிட்டு வந்து பேப்பர் படிப்பாங்க, நான் மட்டும் கோலம் போட்டுட்டு காபி அவங்களுக்கு குடுக்கணும்”.

 “பயம் இவங்களுக்கு எல்லாம் பயம். நான் பேப்பர் படிச்சா இவங்களை விட புத்திசாலி ஆயிடுவேன்னு பயம். நானும் படிப்பேன்”.

“ஆமாண்டி, நீ எழறதே இல்லை. இதுல வாகிங் போய் பேப்பர் படிக்கறளான். நான் பேப்பர் படிச்சிட்டு உட்கார்ந்தா காலையில உங்களுக்கு காப்பி டிபன் வந்துடுமா. கலக்கி வச்ச காப்பிய கொடுக்க நீ இத்தனை வாயடிக்கற, நானும் உன் மாதிரி பேசுனா குடும்பம் விளங்கும்”, என்று கலாவதி எதிர் கேள்வி கேட்க.

“உன்னை யார் செய்ய சொல்றா. நீயும் படி, அப்புறமா எல்லாரும் சேர்ந்து ஆளுக்கொரு வேலையா செஞ்ஜோம்னா சீக்கிரம் வேலை முடிஞ்சிடும்”, என்றாள்.

“எல்லோரும்னா யாரு?.”,

“அதுதான் அப்பாவும் நீயும்”, என்க.

“என்ன? உங்க அப்பாவா, ஏண்டி காலையிலேயே நீ என் காதை புன்னாகினாலும் பரவாயில்லை. என் மனசை புன்னாக்காதே”,  என்று அவள் அன்னை வாயை பிளந்து அதிர்ச்சியை காட்ட.

“எதுக்கு இப்போ ஓவர் எக்ஸ்ப்றசன். வாயை மூடு!”, என்று அன்னையை அதட்டியவள். மேலும் கலாவதியை எரிச்சல் செய்யாமல் கோலம்போட சென்றாள்,

“குழந்தையை சேர்ந்து பெத்துபாங்கலாம், ஆனா சேர்ந்து சமைங்கன்னு சொன்னா மட்டும் மாட்டாங்களாம். இந்த அம்மாவே இப்படி ஒரு எக்ஸ்ப்ரஸன்”, என்று முனுமுனுத்துகொண்டே செல்ல.,

“ஐயோ காலையிலயே நீ என்ன பேச்சு பேசற! யார் காதுலயாவது விழுந்து வைக்க போகுது. வாய அடக்குடி! பொட்டபிள்ளைங்க இப்படியெல்லாம் பேசக்கொடாது!”, என்றார் அவள் அன்னை இன்னும் பதட்டமாக, விட்டால் அவள் பேசியதற்கு அழுதுவிடுவார் போல இருந்தார். 

“ஒஹ்! பையங்க பேசலாமா! பொண்ணுங்க தான் பேசக்கூடாதா. ஆமா காலையில எழுந்தவுடனே எல்லோருக்கும் நான் பேசறது கேட்கறதுதான் வேலை. இவங்களே இப்படி. இதுல எங்க அப்பா எங்க போய் கிழிப்பார்”, என்று மனதிற்குள் எல்லோரையும் திட்டி கொண்டே, அவளுக்கு நன்றாக போட வரும் கோலத்தை வேண்டும் என்றே கோணல் மாணலாக போட்டாள் அபிராமி.

காலையில் இவள் பேசுவதை கேட்பதை ஒருவன் வேலையாக வைத்திருப்பதை அறியாமல்.

அதற்குள் தந்தை வாக்கிங் முடித்து வர, “என்ன அபி இன்னும் குளிக்கலையா. செவென் தர்ட்டிக்கு பஸ்!”, என்றார்.

“ஐ நோ பா!”, என்று மெதுவாக சொல்லுவதை கூட கத்தி சொன்னாள்.

இவள் கத்தியதை பாத்து என்னவோ ஏதோவென்று வீட்டில் இருந்த மற்றவர் வந்து எட்டி பார்த்தனர். அதைத்தான் பார்த்திபனும் கேட்டான். ஜெயாமாவும் திட்டினார். 

பார்த்தவர்களுள் அடக்கம் அவள் அன்னை கலாவதி, தம்பி ஸ்ரீகாந்த்.

அவள் கத்திய கத்தல் பக்கம் உள்ளவர்களுக்கும் கேட்க. அவர்கள் வீட்டில் இருந்து இந்த எட்டி பார்க்கும் படலம் நடந்தது.

அவர்களுடைய தாத்தா வேணுகோபாலன். அவருடைய சீமந்த புத்திரன் சத்திய மூர்த்தி,  அவர்கள் மனைவி மக்கள் தான் கலாவதி, அபிராமி, ஸ்ரீகாந்ந்.  வேணு கோபாலனின் மற்ற மக்கள்  ராஜசேகரன், இந்துமதி.

இத்தனை நாட்களாக ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஓர் மென் பொருள் நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்தவர் சத்தியமூர்த்தி.

அபிராமி ஹயர் செகண்டரி முடித்த சமயம், அவள் தாத்தாவும் பாட்டியும் மகன் வீட்டிற்கு வர. அங்கே அவர்கள் பார்த்த நாகரிகம் அவர்களை தங்கள் மகனை உடனே சென்னைக்கு வரும் படி பணித்தது.

இங்கே காலேஜில் பி.டெக் பயோடெக்னாலஜி சேர்ந்தாள் அபிராமிக்கு இது மூன்றாவது வருடம். ஸ்ரீகாந்த் இந்த வருடம் தான் ஒன்பதாம் வகுபிற்க்கு போகிறான். அபிராமியவிட ஆறு வயது இளையவன்.  

பிறந்ததில் இருந்து ஹைதராபாத் வாசியான அபிராமியும் ஸ்ரீகாந்தும் இங்கே சென்னை வந்த பிறகு தாத்தா மற்றும் பாட்டியின் அடக்கு முறையில் நொந்து விட்டனர்.

சத்தியமூர்த்தியும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் நடுவில் தடுமாறினார். அப்பா சொல்வது நல்லதே. பெண்ணின் கருத்துகளும், “எங்களுக்கு மட்டும் ஏன்.”, என்பதும் சரியானதே.

சமயத்தில் அவள் பாட்டி அன்னபூரணி நடுவில் இருவரையும் அடக்குவார். சில சமயம் வேலை செய்யும். சில சமயம் அதுவும் செய்யாது.    

ஒரே காம்பௌண்ட்டினுள் இரண்டு பெரிய வீடு. வீடு என்றும் சொல்ல முடியாது. பங்களா என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் நடுவில். இரண்டும் ஒரே மாதிரி இருக்கும். வேணுகோபாலன் அவருடைய ஆண் மக்கள் இரண்டு பேர்களுக்காக கட்டியது.

ராஜசேகரன், தன் மனைவி லதா மற்றும் மக்கள் ஜெயந்தி, மாதவனுடன் பக்கத்தில் இருந்த வீட்டில் வாசம் செய்தனர்.

ஒரு வீட்டில் வேனுகோபாலனும் அவர் மனைவி அன்னபூரணியும் இருக்க இத்தனை நாட்களாக தனியாக தான் இருந்தனர். அவருடைய மகன் சத்தியமூர்த்தி சென்னை வந்த பிறகு, ஒரு வீட்டில் இவர்கள், மற்றொரு வீட்டில் ராஜசேகரன்.

ராஜசேகரனுடைய மக்கள் ஓரளவிற்கு தாத்தா பாட்டியின் கட்டு திட்டங்களுக்கு பழகியிருன்தனர். அங்கேயும் ஜெயந்தி பெரியவள். அபிராமி படிக்கும் அதே காலேஜில் பி.ஈ இ.சீ.இ சேர்ந்திருந்தாள். மாதவன் பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்தான்.     

இவர்கள் சென்னையில் இருக்க. இந்துமதியை திருச்சியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.

அந்த குடும்பத்தில் வேணுகோபாலன் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. அவர் வைத்தது தான் சட்டம். அதை மீறுபவரும் அவராக மட்டுமே இருப்பார்.

தன் பிள்ளைகளை கட்டுகோப்பாக வளர்த்தார். அதை தன் பேரப் பிள்ளைகளிடமும் எதிர்பார்க்க அந்த எதிர்பார்ப்பை மொத்தமும் பொய்யாக்குவதர்க்கு  உருவெடுத்தது போல் இருந்தாள் அபிராமி.

அவர்கள் கருத்துக்கள் அத்தனைக்கும் எதிர் கருத்துக்கள் வைத்திருந்தாள். தினம் போராட்டம் இருவருக்குமிடையில்.

இது அத்தனையும் பிறகு கலாவதியின் மேல் விடியும். நேரடியாக திட்டாவிட்டாலும், “பொண்ணை பொண்ணா லட்சணமா  வளர்க்க தெரியுதா”, என்று வேணுகோபாலன் சத்தமாக கலாவதிக்கு கேட்குமாறு சத்தம் போடுவார்.

மிகவும் பொறுமைசாலி கலாவதி. எந்த வேறு பாடும் யாரிடத்திலும் காட்டாவிட்டாலும் தன் பெண்ணின் மீது அத்தனையையும். “இப்படி செய்! அப்படி செய்!, இப்படி நட! அப்படி நட!”, என்று கட்டுபாடுகளை போட.

அதை மீறினாலும் பரவாயில்லை. ஆனால் அபிராமி மீறாமல் அத்தனையையும் திட்டி கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் செய்வாள்.

தாத்தாவும் பேத்தியும்  இருந்தால் ஆளுகொரு பக்கம் சத்தமாக இருக்கும். இருவரையும் அடக்கும் திறமையும் தைரியமும் உள்ளவர்கள், அந்த வீட்டில் யாரும் கிடையாது.

“ஐ நோ பா,.” என்ற அபிராமியின் கத்தலுக்கு எல்லோர் தலையும் வாசலுக்கு வர.

அவள் தந்தையை முறைத்த படியே உள்ளே சென்றாள். “இன்னைக்கு என்னோட இன்டர்னல் எக்ஸாம். போய் கோலம் போடறது எப்படின்னு எழுதறேன்”, என்ற படி கத்தி கொண்டே போனாள்.

“ஏன் கலா. நீ போட கூடாதா”, என்று சத்திய மூர்த்தி கேட்க.

“உங்களுக்கு தெரியாதா, என்னோட கோலம் எப்படி இருக்குன்னு உங்க அம்மாக்கும் அப்பாக்கும் தெரியும். மார்கழி மாத பூஜைக்கு காலைல போய் இருக்காங்க. வந்து நான் போட்டேன்னு தெரிஞ்சா. அவ்வளவு தான்”.

“விடுங்க கத்திட்டு போறா! ஏதோ செஞ்சா சரி! அவளாவது எக்ஸாம் நல்லா எழுதாம வரதாவது. என் பெண்ணை எனக்கு தெரியாதா?”, என்றவராய் உள்ளே சென்றார்.

“என்னாடா இது? ஐ நோ பா. வோடு சத்தம் நின்று விட்டது இன்று”. என்று யோசித்தபடியே பார்த்திபன் குளிக்க செல்ல. அவளுடைய இன்டர்னல் எசாம் கேட்க. “அதானே, ஒரு பேச்சில் எப்படி விடுவாள் இவள்”, என்று நினைத்தபடியே இருந்தான்.

தாத்தாவும் பாட்டியும் வந்த பிறகும் அபிராமியின் முனுமுனுப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. லேசில் விடமாட்டாள். முனுமுனுப்பு தொடர்ந்தாலும் வேலைகள்  ஜெட் வேகத்தில் நடந்தன.

பெரியவர்களிடம் மரியாதையில்லாமல் பேசக்கூடாது என்று தன் தந்தையும் தாயும் நிறைய முறை வேண்டி கேட்டதால் அவர்கள் எதிரில் பேசமாட்டாள்.

பெண்கள் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும், என்று யாராவது பேசினாள் போதும். அபிராமியால் பொறுக்கவே முடியாது. ஏன்? என்ற கேள்வியோடு அடுத்த நிமிடம் அந்த இடத்தில் ஆஜராகி விடுவாள்.

அதுவும் ஆண்கள் சொன்னால் கூட அலட்சியம் காட்டும் அவள். பெண்கள் இந்த மாதிரி ஏதாவது கருத்தை சொல்லி விட்டால் பொங்கி எழுந்து விடுவாள்.

அதற்காக என்ன வேண்டுமானாலும் பெண்கள் செய்யலாம் என்ற கருத்தெல்லாம் இல்லை. அவளுக்கு சரி என்று எது படவில்லையோ அங்கே கட்டாயம் அவள் சத்தம் இருக்கும்.     

வேகமாக கிளம்பி வெளியே வந்தால் ஜெயந்தி நின்றிருந்தாள். “சாப்பிட்டியா அக்கா”, என்றவளிடம்.

“சாப்படர டைம் கோலம் போடறதுல போயிடுச்சி. வா லேட் ஆனா மறுபடியும் எனக்கு பஸ்ல எல்லோரோடையும் சண்டை வரும்”,.

“அபி சாப்பிட்டுட்டு போடி”, என்று அம்மா சொல்ல சொல்ல.

“உள்ள ஹிட்லர்ரும் அவங்க பொண்டாட்டியும் இருப்பாங்க, அவங்களுக்கு கொடு”, என்று சொல்லிவிட்டு செல்ல.

“இந்த பெண்ணை என்ன செய்வது”, என்று அறியாதவராக கலாவதி தடுமாற.

“குடுங்க பெரியப்பா!”, என்று வழக்கம் போல் சத்தியமூர்த்தி வைத்திருந்த டிஃபன் பாக்சை வாங்கி ஜெயந்தி அவள் பின்னோடு அவள் வேகத்திற்கு ஓடினாள்,

சத்திய மூர்த்தி தன் பெண்ணின் பிடிவாதம் அறிந்தவர். அவளிடம் பேசுவதை விட ஜெயந்தியிடம் கொடுத்து விட்டால் கோபம் குறைந்தவுடன் சாப்பிட்டு விடுவாள் என்று தெரியும்.

என்ன சத்தம், அவள் போட்டாளும். அவருக்கு அவருடைய மகளை நினைத்து பெருமையே. மிகவும் நியாயவாதி. யாரும் குறை சொல்ல முடியாதவள். கட்டுபாடுகள் விதிக்க படாமலேயே கட்டுபாடானவள். 

ஆனால்  அது விதிக்கப்படும் பொழுது. ஏன்? அதை மீறினால் என்ன? என்றும் தோன்றும் எண்ணம், அதனுடன் அவளுக்கு நடக்கும் யுத்தம். அதன் சத்தம். அவளுக்கு மட்டுமே கேட்கும்.

Advertisement