Advertisement

அத்தியாயம் இரண்டு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தத்தின் மிகச்சிறந்த ஆயுதம் மெளனம்,

யுத்தத்தை சுமூகமாக முடிக்கும் மிகச்சிறந்த ஆயுதம்,

நமக்குள் நாமே போராடினாலும் வெளியே

வார்த்தைகள் வந்து விடும்,

நாம் அடுத்தவரிடம் போராடினாலும்

வார்த்தை வந்துவிடும்,

அதை தடுக்கவல்ல சிறந்த ஆயுதம் மெளனம்,

அதை விட கூர்மையான

எதிராளியை பதம் பார்க்கும்

சிறந்த ஆயுதமும் வேறு இல்லை.  

 

அவர்கள் மெயின் ரோடு சென்றால் அங்கே காலேஜ் பஸ் நிற்கும். வீட்டிலிருந்து சிறிது தூரம் தான். வேகமாக காலேஜ் பஸ் பிடிக்க ஓடும் போதும் ஜெயந்தி அபிராமியிடம், “அக்கா மௌன சாமியார் போறார்!”, என்றாள்.

அப்போது தான் பார்த்திபன், தன் ஜெயாம்மாவுக்கு மாத்திரை வாங்க போனான் அவன் பைக்கில்.

யாரையும் ஏறெடுத்து பார்க்க மாட்டான் பார்த்திபன், தான் போகும் பாதையில் எதிர்வரும் வண்டியை தவிர.

இரு பெண்கள் நடந்து போவது அவன் கவனத்தில் சிறிதும் படவில்லை.

“ஹேய் ஜெயந்தி”, என்று அதட்டிய அபிராமி. “இப்படி யாரையும் கமெண்ட் பண்ண கூடாது சொல்லியிருக்கேன் இல்லையா”,

“அவங்க காதுல விழுந்தா தேவையில்லாமல் பிரச்சனையாயிடும். நம்ம வேலையை மட்டும் பாரு”, என்று அபிராமி ஜெயந்தியை ஏறக்குறைய மிரட்டினாள்.

“போக்கா நீ ஒருத்தரையும் சைட் அடிக்க விடமாடேங்கற. அந்த மௌன சாமியார் எவ்வளவு ஹான்ட்சம் பார்த்தியா. அதைவிட நம்ம எவ்வளவு அழகு, நம்மை திரும்பி கூட பார்த்ததேயில்லை. இந்த மாதிரி யார் அக்கா இருப்பாங்க”, என்றாள்.

“ம். சைட் அடிக்கரியா நீ. இரு ஹிட்லர் காதுல விழற மாதிரி கத்தரேன்”, என்றாள் அவர்கள் தாத்தாவை மனதில் வைத்து.

“போ! போய் சொல்லு!”,

“நான் சொல்ல மாட்டேங்க்ற தைரியம் தான் உனக்கு”, என்றாள் அபிராமி.

“தெரியுதில்லை, அப்புறம் என்ன?”, என்ற ஜெயந்தியிடம்.

“போடி”, என்று செல்லமாக திட்டியவள், “நீ சொன்னதுல ரெண்டு தப்பு இருக்கு”, என்றாள்.

“என்ன”, என்றவளிடம்,

“நாம அழகுன்னு நம்மளே சொல்லிக்க கூடாது. இன்னொன்னு அழகான பொண்ணுங்க போகும் போது திரும்பி பார்க்கலைனா, அவன் நார்மல் கிடையாது, அப்நார்மல்”, என்றாள் அபிராமி

“போக்கா! நீ என் ஹீரோவை அப்நார்மல் சொல்ற, நீயும் பார்க்க மாட்ட என்னையும் பார்க்க விட மாட்டேன்ங்கற, யாராவது நம்ம கிட்ட பேசுனா தானே நம்மை அழகு சொலாங்க. நீ யார் கூடவும் பேச விடமாட்டே, அப்புறம் நம்மளே தான் நம்மை அழகு சொல்லனும். வேற யார் சொல்வா? சொல்லபோனா எனக்கு தாத்தா ஹிட்லர் கிடையாது. நீதான் ஹிட்லர்”,  என்று ஜெயந்தி சலிக்க.

“ஏய் நீ ஓவரா பேசுற ஜெயந்தி! அவன் உன் ஹீரோவா?”, என்று மறுபடியும் கோபிக்க.

“சரி வேண்டாம்! உன் ஹீரோ வா! நீயே வச்சிக்க!”, என்றாள்.

“இதுக்கு நீ முன்னம் சொன்னதே பரவாயில்லை”, என்று அபிராமி சொல்லும் போதே. மெயின் ரோடு வந்திருக்க, அங்கே மற்ற காலேஜ் நண்பர்களை பார்த்தவுடன்.

“ஹாய்!”, என்று ஆராம்பித்து அன்றைய அரட்டை கச்சேரி துவங்க. பார்த்திபனை ஜெயந்தியும் மறந்து போனாள், அபிராமியும் மறந்து போனாள்.

பார்த்திபன் மாத்திரை வாங்கி கொடுத்து. அவசரமாக அவனே தோசை சுட்டு சாப்பிட்டு கிளம்பினான். பாட்டியும் தாத்தாவும் வயதானவர்கள் என்பதால் அவன் அதிகம் தொந்தரவு கொடுக்க மாட்டான், முடிந்த அளவு அவன் வேலைகளை அவனே செய்து கொள்வான்.

அதிகம் பேசமாட்டான், சிறுவயதில் இருந்தே அவன் உண்டு, அவன் வேலையுண்டு, என்றிருப்பான்.

சாப்பிட்டு வேகமாக கிளம்பினான். கிளம்பி அவன் முதலில் செல்லும் இடம். இல்லை. இடங்கள் என்று சொல்லலாம். தினமும் ஒரே மாதிரியான கோயில்கள் என்று சொல்ல முடியாது. மனம் போன போக்கில் தினமும் குறைந்த பட்சம் ஒரு மூன்று கோவில்களுக்காவது சென்ற பிறகே அவன் கடைக்கு செல்வான்.

என்ன வேண்டுவான் என்று கேட்டால்? அவனுக்கு சொல்ல வராது. அவன் உச்சரிக்கும் வார்த்தைகள்.

“I trust you god and I believe you. I know god, you won’t let me god,  you won’t let me. After all I am your child”.  

இந்த இரண்டு வரி வேண்டுதலே அவன் வணங்கும் எல்லா  கடவுளிடமும் வைப்பதே.

அதன் பிறகு அவன் வந்தது டி.நகர் ரங்கநாதன் தெரு. அங்கே தான் அவன் நடத்தும் அவனுடைய கடை இருந்தது. மிக சிறு இடம். பத்துக்கு பத்து தான். ஆனால் அதன் வாடகை வெளியே சொல்ல முடியாது.

அவனுக்கு சிறு வயதில் இருந்தே எலக்ட்ரானிக் பொருட்கள் மீது மோகம் என்றே சொல்லலாம். எந்த பொருள் எடுத்தாலும் அவனுடைய கை பரபரக்கும் அதை பிரித்து பார்பர்தற்க்கு,

அவனுடைய படிப்பு எம்.ஈ எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக் என்ஜிநீரிங், படித்தது, அண்ணா யுனிவேர்சிடியில். காம்பஸ் இண்டர்வியுவில் பி.ஈ முடித்த சமயமே நல்ல வேலை அவனுக்கு வந்தது. போகவில்லை.

எம்.ஈ முடித்தான். பின்பும் அவன் நினைத்திருந்தால் நல்ல வேலையில் அமர்ந்திருக்கலாம். அவன் பாட்டிக்கும் தாத்தாவிற்கும் அதுதான் விருப்பம். ஆனால் அவன் அதற்கு இஷ்டபடாமல் இந்த கடை வைத்து உட்கார்ந்தான். அவனுடைய கடை அது சம்பந்தமானதே. செல்போன், லாப்டாப் சேல்ஸ் அண்ட் சர்வீஸ். அதை ஷோ ரூம் என்றும் சொல்லலாம்.

பத்துக்கு பத்து இடம். ஆரம்பத்தில் நிறைய சிரமப்பட்டான். ஒன்றிரண்டு வருட போராட்டத்திற்குப் பின் தேரிக்கொண்டான். தற்போதைய  அதன் இன்வேஸ்ட்மென்ட், யாரிடமும் அவன் சொன்னதில்லை.

அவனுடன் படித்த நண்பர்கள் நிறைய பேர் வெளிநாட்டில் இருந்ததால் சிறிது பொருட்கள் வெள்ளை பணத்தில் வாங்குவான். சிறிது கருப்பு பணத்தில். அதன் லாபம். அதுவும் அவன் யாரிடமும் சொன்னதில்லை.

புதிது, புதிதாக எலெக்ட்ரானிக் கூட்ஸ் வரும் பொழுது அதில் மூழ்கி விடுவான். எல்லாம் இருக்கும் அவன் ஷோ ரூமில். செல்போன்ஸ், லாப்டாப்ஸ், பால்ம்டாப்ஸ், ஐ பாட், ஐ போன், எல்லாமே. அதிக விலையில் உள்ள  பொருட்கள் மட்டுமே.

காலையில் சரியாக பத்துமணிக்கு கடை திறந்தான், என்றால் இரவு பத்து மணிக்கு தான் மூடுவான். கூட உதவிக்கு ஒரு பையன் இருந்தான்.

அவனுக்கு இது பிடித்திருந்தது. ஆனால் அவன் பாட்டிக்கு இங்கே உள்ள விற்பனை, அதில் வரும் லாபம் புரியாது. அதனால் தெரியாது. தாத்தாவிற்கு ஓரளவிற்கு தெரியும். ஆனால் சொன்னாலும் பாட்டி புரிந்து கொள்ள மாட்டார். அவருக்கும் தெரிந்தது அது மிகவும் சிறிய கடை என்பதே.

யாருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தனக்கு பிடித்ததை செய்யும் தைரியம் உள்ளவன் பார்த்திபன். அதனால் படிப்பை முடித்து இந்த நான்கு வருடத்தில் இதை மட்டுமே செய்தான்.

ஏனோ பெண்கள் மேல் அவனுக்கு அதிக ஈடுபாடு இல்லை. அவன் காலேஜ் மேட்ஸ் இடம் கூட, “ஹாய், ஹலோ”, வோடு நிறுத்தி விடுவான். சமீப காலமாக பாட்டி திருமணத்திற்கு நச்சரித்து கொண்டிருந்தார். “சரி”, என்று சொல்லி விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தான்.

கடையை திறந்தவுடன் தான் செந்தில் வந்தான். அவனுடன் கடையில் இருக்கும் பையன்.

“சாரி அண்ணா, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு”, என்றபடி வந்தவனிடம் முறைத்த பார்த்திபன்,

“டெய்லி இதை தவிர நீ ஏதாவது சொல்றியாடா, நான் என்னைக்காவது லேட்டா வந்து நீ பார்த்திருக்கியா. லைப்ல முன்னுக்கு வரணும்னா பங்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்டா”, என்றவனிடம்.

“நாளையிலருந்து நீங்க என்னை பாருங்க”, என்றான் பதிலுக்கு. 

“நேத்தும் நீ இதைதாண்டா சொன்ன”, என்ற பார்த்திபனை நோக்கி செந்தில்.

“அண்ணா! நேத்து ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு, எல்லாம் கிடையாது. என்னைக்கும் ஒரே பேச்சு தான் நான்”, என்றான் காலரை தூக்கி விட்டபடி.

“டேய்! காலையில கத்தி போடாத, போடா போய் வேலையை பாருடா!”, என்றபடி சிரித்தவாறு அன்றைய வேலையை துவங்கினர்.

மனம் உற்சாகமாக இருக்க. வந்த ஒரு காஸ்டமரிடம் செந்தில் தன் வாய் திறமையை காண்பித்து, அவர் வாங்க நினைக்கும் பொருளை வாங்க வைக்க முற்பட. அதன் பிறகு என்ன மாடல்? என்ன அதன் அம்சங்கள்? என்ற வேலையை பார்த்திபன் பார்க்க.

தொலைபேசி ஒலித்தது, எடுத்தால் ஜெயம்மா, ”என்ன ஜெயம்மா?”, என்றவனிடம்.

“தாத்தா பேசணுமாம்”, என்றார்.

தாத்தா ராமகிருஷ்ணன் ஜெயமாவிடம் இருந்து போனை வாங்கியவர், “டேய்! கண்ணா. பார்த்திபா.”, என.

“தாத்தா கடையில கஸ்டமர் இருக்காங்க, வளவளன்னு பேசாம விஷயத்தை சொல்லுங்க!”, என்று அதட்டினான்.

அவனுக்கு தெரியும், இல்லையென்றால் விஷயத்தை சொல்லாமலேயே தாத்தா பேசிக்கொண்டே இருப்பார்.

“தரகர் வந்திருக்கார், எங்களுக்கு ஒரு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு”, என்றார்.

“பிடிச்சிருந்தா. ஜெயாம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்கன்னா. நீயே கட்டிக்கோ”, என்றான்.

பேரனிடம் கொள்ளை பிரியம் வைத்திருக்கும் பெரியவர். சும்மா கூட என்னால கட்டி பிடிக்க முடியாதுடா. இதுல நான் எங்கடா போய் தாலியை கட்டுவேன். உன் ஜெயாம்மா சம்மதிச்சா கூட என்னால முடியாதுடா.”, என்றார்.

“கர்மம்! பேச்சை பாரு!”, என்று அவரை திட்டிய ஜெயம்மா அவரிடம் இருந்து போனை பிடிங்கி.

“பார்த்திபா சரின்னு சொல்லட்டுமா!”, என்றார்.

பார்த்திபன் அமைதியாக இருக்க. உற்சாகமான அவர், நாளைக்கு நல்ல நாள், பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லட்டுமா”, என்றார்

“ம்.”, என்றான்.

“டேய்! சரியா காதுல விழலை. சத்தமா சொல்லுடா”, என்று போனில் கத்தினார்.

“ஜெயாம்மா, உனக்கு தான் காது சரியா கேக்கலைனா, எனக்கு கூட கேட்காதா, என்னை எதுக்கு கத்தறீங்க”, என.

“பதிலை சொல்லுடா! ராமாயணம் பேசாத!”, என்று அதட்டினார். 

“சரின்னு சொல்லுங்க”, என்றான்.

மறுபடியும் மாற்றி விட்டால்., என்ன செய்வது? என்று பயந்த ஜெயாம்மா, “சரிடாப்பா சொல்லிடறேன்”, என்று வேகமாக வைத்தார்.

அபிராமி காலேஜ் விட்டு வந்து, அவள் வீட்டினுள் நுழைய போகும் சமயம் அவளையறியாமல் கண்கள் பக்கத்து வீட்டை ஆராய. எப்பொழுதும் போல் அங்கு அமைதியே.

அந்த வீட்டில் உள்ளவர்கள் யாரும் வெளியே நின்று பார்த்ததில்லை. யார் யார் இருப்பார் என்றே தெரியாது. வந்த புதிதில் வீட்டில் பேச்சு வாக்கில் கேட்ட போது. “நமக்கும் அவங்களுக்கும் ஆகாது”, என்று வீட்டு பெரியவர்கள் அனைவரும் ஒரே மாதிரி சொல்ல பின்பு விட்டு விட்டாள்.

ஆனால் இவர்கள் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால். அவர்கள் வீடு தெரியும். அது பெரிய ஒட்டு வீடு. பழைய கால பாணியில் இருக்கும். பெரிய வீடு. சுற்றி மரங்கள் இருக்கும்.

இவள் மேலே என்றாவது அதிகாலை எழுந்து அதிசயமாக படிக்க போனாள்,. கீழே எட்டி பார்ப்பாள். பார்த்திபன் செடிகளின் அருகில் நின்றிருப்பான். அங்கே இருக்கும் மரபெஞ்சில் இரு வயதானவர்கள் அமர்ந்து அவன் செய்வதை பார்த்திருப்பார்.

எத்தனை நாட்கள் நின்று பார்த்திருக்கிறாள் எவ்வளவு நேரம் இவள் பார்த்தாளும், அவன் மேலே ஒரு நாளும் பார்த்ததில்லை.

“ஹலோ சார்! மேலே வானம்னு ஒண்ணு இருக்கு. அதை தலை தூக்கி பார்த்திருக்கீங்களா”, என்று கத்த வேண்டும் போல தோன்றும்.

தோன்றும்!, ஆனால் தோன்றும்!, தோன்றும்! மட்டுமே, தன்னுடைய தாத்தாவிற்கும் பாட்டிக்கும் பயந்தே அவள் அதை என்றும் செயல் படுத்தியதில்லை. 

அந்த வீட்டை பற்றி தெரிந்துக்கொள்ள அவளுக்கு ஆர்வமாக இருக்கும். ஆனாலும் ஏதோ ஒன்று அவளை தடுத்து விடும்.

“முன்பே நமக்கும் அந்த வீட்டிற்கும் ஆகாது என்று விட்டார்கள், அங்கே இருப்பவன் வேறு ஹாண்ட்சமாக இருக்கிறான். இல்லாவிட்டாலாவது கேட்கலாம்”.

“இப்பொழுது கேட்டு யாராவது ஏதாவது அர்த்தம் கற்பித்து விட்டால்  ஹப்பா! அம்மாவிடம் யார் பேச்சு வாங்குவது! பெண்ணை என்ன வளர்த்து இருக்கேன்னு என்னை கேட்பாங்க!”, என்று அவர் ஆரம்பித்து விட்டால்.

“ஹே அக்கா! பக்கத்துக்கு வீட்டை சைட் அடிக்கரியா”, என்று ஜெயந்தி சிறிது சத்தமாக கேட்க. அபிராமி அவள் இயல்பான சத்தமாக பேசுவதையும் மீறி,

“ஏய்! வேலையை பாருடி! பெருசு வெளிலேயே உட்கார்ந்திருக்குது. கேட்க போகுது!”, என்று மெதுவாக சொல்லியபடியே வீட்டுக்குள் சென்றாள்.

போர்டிகோவில் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்திருக்க. அங்கேயே அமர்ந்து ஜெயந்தி அவர்களிடம் பேசத்துவன்கினாள், அவர்களின் செல்ல பேத்தி அவள்.

“பாருடி நம்ம வளர்ப்பு உட்கார்ந்து பேசுது, போறவ ஏதாவது கண்டுக்கறாளா. பெரியவங்கன்னு ஒரு மரியாதைகாவது நின்னு பேசறாளா?”, என்று வேணுகோபாலன் தன் மனைவியிடம் குற்றபதிரிக்கை வாசிக்க.

உள்ளே அதே கேள்வியை தன் பெண்ணிடம் சத்திய மூர்த்தி கேட்டார், “தாத்தாவும் பாட்டியும் வெளில உட்கார்ந்து இருக்காங்களே அபிம்மா, அவங்க கிட்ட நின்னு பேசக்கூடாதா. காலையில தான் அவசரமா கிளம்பற, என்று குறை பட.

“ஏன் நான் தான் அவங்களோட பேசணுமா அப்பா? அவங்க பேசமட்டாங்களா”, என்று வழக்கம் போல் அபிராமி எதிர் கேள்வி கேட்க.

பதில் சொல்ல முடியாதவராக டி.வீ யின் பக்கம் பார்வையை திருப்பி, பின்னர் அதுவும் அவரை அமைதிபடுத்தாததால் எழுந்து உள்ளே சென்றார்  சத்தியமூர்த்தி. அப்பொழுது பார்த்து அவர் போன் ஒலிக்க. அவர் வரும் முன்னே அதை எடுத்தாள் அபி.

அந்தபுறம் பேசியவரை உணர்ந்து. “நித்யா ஆன்ட்டி.”, என்று கத்தினாள்.

“எப்படி இருக்கீங்க!”, என்று இவள் கேட்டுகொண்டிருக்கும் போதே, இவளின் கூச்சலை கேட்டு  வெளியே வந்த சத்திய மூர்த்தி.

“ஏன்? இப்படி கத்தற!”, என்று அவளை கடிந்தவராக போனை வாங்கினார்,

“அப்பா நான் பேசறேனே”, என்ற அபியின் வேண்டுதலுக்கு. “ஒரு முக்கியமான விஷயம் பேசணும், ஃப்ரீயா ஆன்ட்டி இருந்தா, நானே கூப்பிடறேன். இப்போ போ”, என்று அவளை உள்ளே அனுப்பிய பிறகு.

“சொல்லு நித்யா”, என்றார்.

“ஏன் அவகிட்ட போன் வாங்கின சத், நான் பேசியிருப்பேன் இல்லை”, என்றார் நித்யா அந்தபுறம்.

“ப்ச், பேசலாம். இப்போ எதுக்கு கூப்பிட்டே”, என்றவரிடம்.

“சும்மா தான்! ஏன் உன்கிட்ட பேச, எனக்கு காரணம் வேண்டுமா”, என்று அவர் அந்தபுறம் கோபிக்க.

“விடு, ஏதோ டென்ஷன் எனக்கு!”, என்றவர் மறுபடியும். “எதுக்கு கூப்பிட்ட”, என்றார்.

இந்த உரையாடலிலேயே சிறிது அப்செட் ஆனா நித்யா, தான் கேட்க வந்ததை கேட்க்காமலேயே, “ஒண்ணுமில்லை”, என்றவர்,

“இரு! பிரகாஷ் பேசறாங்க”, என்று போனை தன் கணவனிடம் கொடுத்தார்.

“என்னடா புருஷனும் பொண்டாட்டியும், இந்த வேளைல கூப்பிட்டு இருக்கீங்க, என்ன விஷயம்”, என்றார் சத்தியமூர்த்தி.

“தெரியலைடா! நித்யா தான் கூப்பிட்டா! இப்போ போன் கொண்டு வந்து என்கிட்ட கொடுக்கறா தெரியலையே!”, என்றார் பிரகாஷ்.

“சும்மா தான் கூப்பிட்டேன்”, என்ற நித்யாவின் பேச்சை இப்பொழுது சத்தியமூர்த்தி நம்பினாலும் பிரகாஷ் நம்பவில்லை.

சிறிது நேரம் மூவரும் பேசிய பிறகு போனை வைக்க போக. “இரு அபி கிட்ட கொடுக்கறேன்”, என்று சத்தியமூர்த்தி கொடுக்க.

“ஹலோ! நித்யா ஆன்ட்டி”, என்று ஆரம்பித்தவள், அரை மணி நேரம் பேசிய பிறகே போனை வைத்தாள்.

சத்தியமூர்த்தியிடம் பேசிய நித்யாவும், பிரகாஷும், சத்தியமூர்த்திக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள்.  மூவரும் காலேஜ் மேட்ஸ். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நித்யா படிக்கும் பொழுது சத்தியமூர்த்தியின் ரொம்ப க்ளோஸ் ஃபிரண்ட்.

ஆண் பெண் நட்பிற்கு அதிக அங்கீகாரம் இல்லாத அந்த சமயத்திலும் அவர்கள் நல்ல நண்பர்கள். பிரகாஷ் கூட அவர்கள் நட்பு வட்டத்தில் பிறகு வந்தவன் தான். மூவரும் எந்த அளவிற்கு நண்பர்கள் என்றால் ஒருவருக்காக மற்றொருவர் எதை வேண்டுமானாலும் செய்வர். அவ்வளவு திக் ஃபிரண்ட்ஸ்.

அங்கே ஹைதராபாத்தில் இருக்கும் போது அடிக்கடி இவர்கள் அவர்கள் வீட்டிற்கு செல்வர். அவர்கள் இவர்கள் வீட்டிற்கு வருவர். நல்ல பழக்கம்.

அதனால் அபிக்கு நித்யாவை நன்றாக தெரியும். அவளுமே நித்யா ஆன்டியுடன் ரொம்ப க்ளோஸ்.

போனை வைத்த பிறகு. “இப்போ எல்லாம் ஏன்பா அவங்க நம்ம வீட்டுக்கு வரதில்லை. நாமளும் போறதில்லை”, என்ற கேள்வியுடன் அபி நிற்க. சத்யமூர்த்தி என்ன சொல்வது? என்று தெரியாமல் தடுமாறினார்.

இதை கேட்ட கலாவதி, “அபி இப்போ தான் காலேஜ் விட்டு வந்த, அதுக்குள்ள அப்பாவை குடையாதே, போய் வேலையை பார்!”, என்று அதட்டினார்.

“ஏன்மா கேட்டுட்டு தானே இருக்கேன்”, என்று அவள் பதிலுக்கு சத்தம் போட.

“கலா அவ என்கிட்ட தானே பேசறா. நான் பதில் சொல்றேன்”, என்று சொல்ல.

“என்ன சொல்வீங்க சொரக்காய்க்கு உப்பு இல்லைனா”, என்று கோபமாக கலாவதி சத்தியமூர்த்தியை பார்த்து கேட்டு,

“எதுக்கெடுத்தாலும் நீ இப்படி கத்தாத! போ அபி”, என்று அவளை பார்த்து அதட்ட.

“இந்த அம்மா ஏன் இவ்வளவு கோபப்படுகிறார் இப்பொழுதெல்லாம்”, என்ற யோசனையோடே அபி சென்றாள். 

“என்னடா இது”, என்று நொந்து கொண்டார் சத்தியமூர்த்தி.

Advertisement