பெண்ணை அழைத்துக் கொண்டு வந்த சிவசு, பாலாவை கை கால் வாய் கட்டி தூக்கி வந்தார், பின்னேயே மோகனசுந்தரம். மோகன சுந்தரம் முகத்தினில் அவ்வளவு ஆத்திரம், அவ்வளவு துவேஷம்.
வல்லபனின் பார்வை முழுவதும் நடந்து வரும் அர்ச்சனாவின் மீது தான். நடையில் ஒரு தொய்வு தெரிய, அவளின் முகத்தில் இருந்து வல்லபனுக்கு ஒன்றும் தெரியவில்லை.
பாலாவை தூக்கி வருவதற்கான பதட்டம் எதுவும் முகத்தினில் இல்லை. அதுவே சொன்னது பாலாவை அவள் விரும்பவில்லை என்று. விரும்பாவிட்டால் போகிறது நண்பன் என்று சொன்னார்களே அந்த பதட்டம் கூடவா முகத்தினில் இல்லை.
அவளின் முகத்தினை தான் விடாது ஆராய்ந்தான்.
இந்த பெண்ணா இப்படி வரவேற்பில் நின்று விட்டு கடைசி நிமிடத்தில் பிரச்சனை செய்திருக்கும் என்று தோன்றக் கூடிய முகம்.
இருக்க வேண்டிய இடத்தினில் எல்லாம் கச்சிதமாக இருக்க எங்கேயும் கூடவோ குறையவோ இல்லாத உடலமைப்பு. மிக சிலருக்கே அமையும். உயரம் நிறம் என எல்லாம் சிறப்பு. இந்த முகம் புன்னகைத்தால் இன்னும் அழகாக இருக்குமே என்ற வல்லபனுக்கு தோன்றியது.
இது எதையும் ரசித்துப் பார்த்தான் இல்லை! எல்லாம் ஆராயும் பார்வையே. எந்த பெண்ணையுமே வல்லபன் ரசித்து பார்த்திருப்பானா? இதையே ஒரு ஆராய்ச்சி செய்யலாம். இரண்டு அக்காள்களோடு பிறந்து விட்டதினால் அந்த ஒரு உணர்வு இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. அதன் கரணம் நாயகி மட்டுமே! அக்காள்களிடம் தம்பியை பார்த்துக்கொள்ளச் சொல்லி வளர்க்கவில்லை.
பிறந்த முதல் நாளே குழந்தையை கையினில் வாங்கியதும் நாயகி குழந்தையிடம் சொன்ன வார்த்தை “அக்காங்களை பார்த்துக்க தம்பி பையன் பொறந்துட்டான்யா” என்பது தான். அவர்கள் மட்டுமல்லாது உறவிலும் நிறைய பெண்பிள்ளைகள். “யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம நீதான் பார்க்கணும்” என்பது தான் நாயகியின் வழிநடத்தலாக இருக்க,
ஒரு பிரச்சனை என்றால் பெற்றோரியம் சொல்லும் முன் இவனை தேடி தான் “தம்பி” என்றோ, “வல்லபா” என்றோ, “அண்ணா” என்றோ, “மாமா” என்றோ வருவர்.
பெண்கள் என்றால் போற்றப் படவேண்டியவர்கள் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள், மரியாதைக்குரியவர்கள் என்று நாயகியால் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டிருக்க, அந்த உணர்வு அவனின் நரம்புகளில் மட்டுமல்ல ரத்த அணுக்களில் கூட கலந்திருந்தது என்றால் மிகையல்ல
அதே சமயம் அதன் தாக்கங்கள் சில எதிர்மறையான எண்ணங்களும் அவனுக்கு கொடுத்திருந்தன. “பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும், அமைதியாக இருக்க வேண்டும், பெரியவர்களை மதிக்க வேண்டும், உடைகளில் எப்போதும் கவனம் வேண்டும், ஒழுக்கம் என்பதனை உயிராய் மதிக்க வேண்டும், வேற்று ஆண்களை கண்ணெடுத்தும் பார்க்க கூடாது” என்பது போல.
அதனால் திருமணதிற்கு முன் ஆணோ பெண்ணோ புரியும் காதல் என்பது அவனுக்கு பிடிக்காத வார்த்தை ஆகி போனது.
இப்படி எல்லாம் சேர்ந்த கலவை வல்லபன்!
அதற்காக ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது எல்லாம் அவனின் எண்ணம் கிடையாது. ஒழுக்கக் கேடுகளும் ஒழுங்கீனங்களும் என்றுமே அவனால் பொறுத்துக் கொள்ள முடியாத விஷயங்கள்.
அதனை கொண்டு தான் சொல்வது தான் சரி, தான் செய்வது தான் சரி, என்ற எண்ணம் கொண்டவன் மட்டுமல்ல, அது அவனின் சொல் செயல் எல்லாவற்றிலும் தெரியும்.
இப்போதும் அர்ச்சனாவை ஏன் இப்படி செய்தால் என்ற எண்ணம் ஓட அதிருப்தியாக பார்த்து நின்றான்.
சிவசுவுடன் வந்த ஆட்கள் பாலாவை சேரில் அமர்த்தினர். மோகனசுந்தரம் நேரே ராஜமாணிக்கத்திடம் சென்று “மாமா, தப்பு பண்றீங்க. என் மகனை ஆள் வெச்சு தூக்கறீங்க, தூக்கிட்டு வந்துட்டா மட்டும் இந்த கல்யாணம் நடந்துடுமா?” என்று அவர் கோபமாக சண்டையிட்டார்.
இருந்த இடத்தில இருந்தே அர்ச்சனாவை வரவழைத்த வல்லபனின் செயலில் தைரியம் வரப் பெற்றவர் “அர்ச்சனா கல்யாணம் கண்டிப்பா நடக்கும். இருந்து பார்த்துட்டு விருந்து சாப்பிட்டிட்டு போடா. சொந்தக்காரன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டா பொண்ணை தூக்குவீங்களா நீங்கல்லாம்” என்று அவரும் ஆவேசமாக பேசினார்.
“நாங்க தூக்கலை, உங்க பொண்ணு தானே வந்தது. கண்ணை என்ன புடனிலையா வெச்சிருந்தீங்க”
“அது நீங்க ஏதாவது மிரட்டி தூக்கியிருப்பீங்க” என்று அவரும் பதில் பேசினார்.
சிவசுவோ வல்லபனோ எதுவும் பேசவில்லை. பாலாவை சேரில் போட்டு நிமிரவும் சிவசு வல்லபனை பார்க்க, அவனின் கவனம் அர்ச்சனாவில் இருப்பதை புரிந்த சிவசு அமைதியாக நின்று கொண்டார்.
அதுவரை பார்த்திருந்த செல்வநாதன் “மோகன் நீ பேசறது செய்யறது சரியில்லை” என்று பேச,
“பார்றா ஊர் முழுசும் நீ பஞ்சாயத்து பண்றேன்னு கிளம்பலாம். ஆனா அதுக்கு நான் ஆளில்லை. உன் வேலையைப் பார்” என்று அண்ணன் முறையில் இருக்கும் அவரை மரியாதை இல்லாமல் பேசினார்.
வல்லபன் இருப்பதை கவனிக்கவில்லை.
“உன்னால நம்ம மொத்த ஆளுங்களையும் அவர் தப்பா பேசறார்” என்று அப்போதும் செல்வநாதன் பொறுமையாக பேச,
“உனக்கு மரியாதை அவ்வளவு தான் நீ வாயை மூடு” என்று மோகன சுந்தரம் எகிறினார்.
இன்னும் வல்லபன் தான் அர்ச்சனாவை கொண்டு வரச் செய்தான் என்று அவர் நினைக்கவில்லை. ராஜமாணிக்கம் தான் தூக்கி வரச் செய்தார் என்று நினைத்திருந்தார்
“அப்பா நீங்க இந்த பக்கம் வாங்க” என்ற வல்லபனின் குரல் நிதானமாக ஆனால் ஓங்கி ஒலிக்க, மோகன சுந்தரம் அப்போது தான் அவனைப் பார்த்தார்.
பார்த்தவுடனே சற்று அதிர்ச்சி, பின் முரடன் என்று கேள்வி பட்டிருக்கிறார். இன்னும் முரட்டுத்தனத்தை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் எதுவும் காட்டிக் கொள்ளாமல் “உங்கப்பா கிட்ட சொல்ல மாட்டியா நீ, இது எனக்கும் என் தங்கச்சி வீட்டுக்கும் உள்ளது” என்று அவனிடமும் எகிற,
அணிந்திருந்த நாலு முழ வேஷ்டியை மடித்து கட்டியபடி அவரின் முன் வந்து நின்றவன், “அதை அவங்க சொல்லட்டும்” என்று அர்ச்சனாவின் அம்மாவை காண்பித்தான். ஏனென்றால் அவர் தானே “பொண்ணை கொண்டு வர முடியுமா தம்பி” என்று கேட்டார்.
“முதல்ல எங்கப்பா கிட்ட மரியாதை இல்லாம பேசினதுக்கு மன்னிப்பு கேளுங்க” என்று சொல்லிக் கொண்டே அவனின் முழுக்கை சட்டையை மடித்து விட,
அவனின் தோரணைகளை பார்த்து “என்ன அடிச்சிடுவியா என்னை நீ” என்று அவர் எகிறினார்.
“அதை நான் எங்க சித்தப்பா சொல்றேன், நீங்க தான் சொல்றீங்க! ஒரு வேலை அதுதான் உங்க ஆசையோ?” என்றபடி சிவசுவிற்கு கண்ணை காண்பித்தான்.
அவர்கள் பாலாவை அவிழ்த்து விட, “அப்பா, என்ன பண்றீங்க?” என்று இருவருக்கும் நடுவினில் தடுமாறியபடி வந்து நின்றான்.
இப்போது அர்ச்சனா பிரச்சனை பின்னுக்கு போய் இவர்களது சண்டை முன் நின்றது.
“வல்லபண்ணா அப்பா தெரியாம பேசறார். இதுல நீங்க தலையிட வேண்டாம். அப்பா சார்பா நான் பெரியப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கறேன்” என்று பாலசுப்ரமணியம் பேசினான். வல்லபன் படித்த பள்ளியில் தான் பாலாவும் படித்திருக்க அவனை விட ஒரு வகுப்பு குறைந்தவன். அதனால் வல்லபனை பற்றி நன்கு தெரியும்.
இதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்திருந்த மாப்பிள்ளை தினேஷ் எகிறினான்.
“என்னங்கடா எங்களை என்ன மொத்தமா எல்லோரும் சேர்ந்து அவமரியாதை பண்றீங்களா? எங்களை என்னன்னு நினைச்சீங்க. இவ என்ன தைரியம் இருந்தா என்னைப் பிடிக்கலை சொல்வா? முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க. இந்த கல்யாணம் இப்போ நடக்கணும்” என்று எகிறினான்.
தினேஷ் பேசியதில் அர்ச்சனாவின் முகத்தினில் ஒரு அசூயை தோன்ற “என்ன பேச்சு இது?” என்பதனை முகத்தினில் அப்படியே காண்பித்தாள்.
ராஜமாணிக்கம் “என்ன?” என்று அர்ச்சனாவிடம் பேச வர, அவளின் அம்மா அவளின் அருகினில் வர,
“என்னடி முகத்தை இப்படி வெச்சிருக்குற? பணம் இருக்குற திமிரா! கொஞ்சம் நேரம் முன்ன என்னோட நின்ன முகம், இப்படி இல்லையே! நடுவில் என்ன நடந்தது? இத்தனை நாள் சொல்லாம இப்போ சொல்லி என்னை எல்லோர் முன்னையும் அசிங்கப் படுத்துவியா? என்னை வேண்டாம்னு சொல்வியா நீ?” என்று அவனும் நெருங்கி வந்தான்.
“அப்போ சொன்னல்ல, தைரியம் இருந்தா இப்போ சொல்லு, என்னை பிடிக்கலையா உனக்கு?” என்று அடிப்பது போல நெருங்கினான்.
“தம்பி, பொறுமையா பேசுங்க, நான் சொல்றேன்!” என்று அவளின் அம்மா சொல்ல,
அவளின் தாத்தாவும் “இப்படி பேசாதீங்க, என்னன்னு கேட்போம், கல்யாணம் நடக்கும்” என்று சொல்ல,
அர்ச்சனா தினேஷின் பாவனைகளில் அவனின் வார்த்தைகளில் கோபம் வரப் பெற்றவளாக, அவனைப் பார்த்தபடி கண்களில் ஒரு தீவிரத்தோடு, எனக்கு உன்னைப் பிடிக்கலை” என்று சொல்ல,
அப்படி ஒரு ஆத்திரம் பெருக யாரும் அனுமானிக்கும் முன் “என்னடி சொன்ன?” என்று அர்ச்சனாவை அப்படியே ஓங்கி ஒரு அரை வைத்தான்.