Advertisement

நட்சத்திர விழிகள் – 12
விஷ்ணுவின் திடீர் செய்கையில் அவனுக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் விழித்தாள் கௌரி.
“உங்களுக்கென்ன ஆச்சு?…” என உள்ளூர உருவான படபடப்பை மறைக்க படாதபாடுபட்டவாறே கேட்கவும்,
“அதான் சொன்னேனே காதலிக்கலாம் அப்டின்னு…” என்றான் கூலாக.
“என்ன விளையாடுறீங்களா? அதான் கல்யாணம் முடிவு பண்ணியிருக்காங்கள்ள. அப்றம் என்னவாம்?…” என்று கூறினாள்.
இன்னும் அவன் மண்டியிட்டு பூவை கௌரியை நோக்கி நீட்டிய நிலையிலேயே இருக்க அதை யாராவது பார்த்தால் என்னவாகும் என கலவரபட்டாள். அவனோ அதுபற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.
“நான் இப்போதானே உன் கிட்ட சொன்னேன், லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கனும்னு. கல்யாணம் முடிவு பண்ணினா காதலிக்க கூடாதுன்னு எவன் சொன்னான்?…” என்று எகிற,
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க கிளம்புங்க யாராவது வந்திரப்போறாங்க…” என அவனை அனுப்புவதிலேயே குறியாய் இருக்க,
“ஏய் சவுரி, கொஞ்சமாவது இரக்கம் இருக்கா உனக்கு? எவ்வளோ நேரம் இப்டி மண்டி போட்டுட்டு இருக்கேன். டக்குன்னு மாமா ஐ லவ் யூ அப்டின்னு பளிச்சுன்னு சொல்லிட்டு நான் குடுக்குற இந்த ரேடியோவை காதோரம் சொருகு பார்ப்போம்…” என்றவனை நன்றாக முறைத்தாள்.
“இப்டிலாம் ரொமான்ஸ் லுக் விட்டா அப்புறம் மாமா கண்ட்ரோல்ல இருக்கமாட்டேன். அப்புறம் நடக்கும் சம்பவம் எதுக்கும் நான் பொறுப்பாக முடியாது…”
“என்னது, என்ன சொன்னீங்க?…” என கெளரி குதிக்க,
“ம்ம். சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன். ஏற்கனவே சரி நமக்கு அரேஞ்ச்டு மேரேஜ் தான்னு மனசை தேத்திட்டேன். ஆனாலும் லவ் பண்ணனும்னு ஆசை இன்னமும் மனசுலையே சுத்திட்டு இருக்கு. நாமா பார்க்கிற பொண்ணை பண்ணாதான் லவ்வா? நமக்கு பார்த்திருக்கிற பொண்ணையும் காதலிக்கலாமேன்னு இப்போ தோணுது…” என ஆவலே வடிவாக கேட்டவனை பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று தடுக்க அவ்விடம் விட்டு அகல நினைத்தாள்.
விஷ்ணுவோ வழிவிட்டால் தானே?
“சவுரி இப்போ ஓகே சொல்லபோறியா இல்லையா?…” என்று மிரட்டும் தொனியில் கேட்கவும் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முறைத்த கெளரி,
“சொல்ல முடியாது. இல்லைன்னா என்ன பண்ணுவீங்க?…” என்று தெனாவெட்டாக கேட்கும்,
“அங்க உன் அண்ணன் அலும்பு தாங்கலை. நீயெல்லாம் அவனுக்கு தங்கச்சியா? சின்ன கேப் கிடச்சா கூட சந்துல சிந்து பாடிட்டு இருக்கான் உன் பாசமலர். நீ என்னடான்னா இன்னும் பப்பரமிட்டாயை சப்பிட்டு இருக்க. எல்லாம் என் நேரம்….” என்று புலம்பியவன் வானத்தை பார்த்து,
“போச்சு, போச்சு எல்லாம் போச்சு. டேய் விஷ்ணு இனி உன் லைப் அவ்வளோதாண்டா…” என்று வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர எத்தனிக்க அவனை தடுத்தாள் கெளரி.
அவனது ஏமாற்றத்தை தாங்கமுடியாமல் தான் அவனை நிறுத்தினாள். அதன் பின் அவனிடம் பேச நாவெழாமல் அங்குமிங்கும் பார்த்தவளை கண்டவனுக்கோ சிரிப்பு தாளவில்லை. அவளே பேசட்டுமென்று முகத்தை இன்னும் அப்பாவியாக வைத்துக்கொண்டு நின்றான்.
“ம்க்கும்…” என தொண்டை செருமியவள், “இங்க பாருங்க, நீங்க வந்து என்னமேன்னமோ பேசறீங்க? எனக்கு இப்டிலாம் பேசவராது. ஆனாலும்…” என இழுக்க,
“ஆனாலும் என்ன சொல்லு சவுரி சொல்லு…” என அவளை ஊக்குவித்தான்.
அவள் மேல் தனக்குண்டான காதலுக்கு சற்றும் குறைவில்லாத காதலோடான தேடலை அவள் கண்கள் பிரதிபலித்தாலும் அது அவளிடமிருந்து வாய்மொழியில் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பினை எங்கே பொய்த்துபோக செய்துவிடுவாளோ என்றஞ்சினான்.
இவ்வாறு அவன் யோசிக்க வார்த்தைகளில் தான் புரியவைக்கவேண்டுமா? உணர்ந்தால் போதாதா? தன் கண்களே காட்டிகொடுத்ததே என்று கெளரி எண்ணினாள்.
அவனை முறைத்துக்கொண்டே, “ஆனாலும் உங்களை போல சட்டுன்னு இப்டி சொல்ல வராது. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. என் மனசு உங்களை விரும்பறதா தான் தோணுது. அதை இப்டி பொட்டுல அடிச்சது போல சட்டுன்னு சொல்ல வராது. எனக்கும் வெக்கம், கூச்சம் இதெல்லாம் இருக்குமில்லயா?…” என இன்னும் இடுப்பில் இருக்கும் கையை எடுக்காமல் அவனை நேருக்கு நேர் பார்த்து முறைத்துக்கொண்டே எல்லாம் சொல்லிகொண்டே சொல்ல வராது என்று கூறினாள் கெளரி.
விஷ்ணுவிற்கோ கெளரிக்கு தன்னை பிடிச்சிருக்கு, விரும்பறேன் என்றதை கேட்டு ஆகாசத்தில் மிதந்தாலும், கூச்சம், வெக்கம் பற்றி சிறிதும் கூச்சப்படாமல் சொன்ன கௌரியை பார்த்து சிரிப்பை அடக்க வழி தெரியாமல் கடகடவென சிரித்துவிட்டான்.
அவனது நகைப்பு இன்னும் கௌரியை கோபத்திற்குள்ளாக்கியது. தான் அப்படி என்ன சொல்லிட்டோம்னு சிரிக்கிறான்? விரும்பறதா சொல்றது  அவ்வளோ கேலிக்குரிய விஷயமா? என தனக்குள் பொருமியவள் அவனிடம் என்னவென்று கேட்டும் விட்டாள்.
“நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்டி கெக்கேபிக்கேன்னு சிரிக்கிறீங்க?….” என கோவத்தோடு கேட்கவும்,
“அதில்லை சவுரி பொண்ணுங்கன்னா இப்டி முறைச்சுட்டே தான் வெக்கப்படுவாங்களா? அதுவும் இந்த ஊர்ல?…” என இன்னும் கேலியாக முறுவலித்தவாறே கேட்கவும்,
அவ்வளவு தான் மலையேறியே விட்டாள் கெளரி. “ஓஓஹோ!!! அப்டி எத்தனை பொண்ணு சார் உங்க கிட்ட வந்து வெட்கப்பட்டு பார்த்திருக்கீங்க?…” என கிடுக்கிபிடி போட்டாள் கெளரி.
அவளது எதிர்க்கேள்வியில் நொந்தே விட்டான். பேந்த பேந்த விழித்தவன் அதற்குமேல் பொறுக்கமாட்டாமல் அலறிவிட்டான்.
“சவுரி!!! அம்மா தாயே நீ ஆளை விடு, கல்யாண பேச்சு ஆரம்பிச்ச அன்னைக்கே அமர்க்களமா? இப்போ நீ பண்ண பாரு இதுதான் வெட்கம், கூச்சம் ஒத்துக்கறேன். தெரியாத்தனமா கேட்டுட்டேன்…” என்று கூறி விட்டு அகன்றவனை,
“நில்லுங்க…”
“எதுக்கு?. திருப்பி எனக்கு பல்ப் குடுக்கவா? எதுல ஒற்றுமையா இருக்கணுமோ அதுல இல்லை, ஆனா என்னை ரிவிட் அடிக்கிறதுல அண்ணனும் தங்கச்சியும் ஒண்ணு…” என்று சலித்தவனிடம்,
“உங்களோட அந்த ரேடியோவை குடுத்துட்டு போங்க…” என்று கறாராக கேட்டவளை பார்த்து எங்கேயாவது போய் முட்டிகொண்டால் என்னவென்றுதான் தோன்றியது. அவனது முகபாவனைகளை கவனித்தவண்ணம் அவனது கையிலிருந்த செம்பருத்திப்பூவை வாங்கி தலையில் சூட்டியவள் அவனை பார்த்து,
“சொன்னால் மட்டும் தான் காதலா? சரியான மங்குனி மாக்கான். போடா ட்யுப்லைட்…” என வெட்கத்தோடு கூறிவிட்டு சிட்டாக பறந்துவிட்டாள்.
அவள் முதலில் சொன்னால் தான் காதலா என்றதையும் அதை சொல்லும் போது அவளது முகத்தில் தவழ்ந்த நாணத்தையும் ரசித்தவன் நொடியில் அதை விட்டுவிட்டு தன்னை ட்யுப்லைட் என்று சொல்லிவிட்டாளே என பரிதாபமாக நொந்தேவிட்டான். இப்போவே இப்படி திட்டுபவள் திருமணத்திற்கு பின் என்னவெல்லாம் பேசுவாளோ? என்ற திகிலோடு சிக்காமலா போய்விடுவாள் என்றெண்ணி கொண்டே உள்ளே சென்றுவிட்டான்.
விஷ்ணுவை எதிர்க்கொண்ட உதயா வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல்,
“என்னடா மச்சான், கூவமா இருக்க போல?…”என கோவத்தை கூவமாக்கி நக்கலடிக்க,
“உன் தங்கச்சி பேசினதை கேட்டா கூவமா இல்லாம கங்கையும் காவேரியுமாவா இருப்பாங்க?..” என திருப்பி நக்கல் கலந்து கடுப்படிக்க,
“கங்கா, காவேரியா? யார்ரா அது?. கெளரி, இங்க வா…” என வினையமாக கேட்டு லூரியை அழைத்தவனை பார்த்த விஷ்ணு அவ்வளவுதான் அழுதுவிடுபவன் போல ஆகிவிட்டான்.
“டேய் அடப்பாவி, சத்தியமா சொல்றேண்டா நீயும் உன் தங்கச்சியும் நல்லா வந்துட்டீங்க.கல்யாணத்துக்கு மேன்னமே டைவர்ஸா?…” என்று புலம்பிக்கொண்டே இருக்கையில் அமரவும் திருமணத்திற்கு நாள் குறிக்க குடும்ப ஜோசியர் வரவும் சரியாக இருந்தது.
அவருக்கு நந்தினி வீட்டினரை அறிமுகபடுத்தி விட்டு விஷ்ணு, கெளரி ஜாதகம் கொடுக்கப்பட்டதும் தன் வேலையில் ஆழ்ந்தார் ஜோசியர்.
விஷ்ணுவிற்கோ இருப்புக்கொள்ளவில்லை. என்ன சொல்லுவாறோ என அவன் தவித்த தவிப்பில் அவனது இருதயம் எகிறிக்குதித்து வெளியே வரப்பார்த்தது.
அனைவரும் விஷ்ணுவை பார்த்து நமுட்டுசிரிப்பொன்றை பரிமாறிகொண்டனர். அந்த அளவிற்கு விஷ்ணுவின் முகம் அப்படி காட்டிகொடுத்தது.
காலையில் அந்த குதி குதித்தோமே கல்யாணம் வேண்டாமென. இப்போது இந்த திருமணத்தில் எதுவும் தவறாகிவிட கூடாதென  தத்தளிப்பதென்ன? என தன்னையே ஆச்சர்யமாக உணர்ந்தான் விஷ்ணு.
அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த முடிவை கூற ஜோசியர் தலை நிமிர்த்தியதும் இருக்கையின் நுனியில் வந்தமர்ந்த விஷ்ணுவிடம்,
உதயா, “அடச்சீ!!! ஒழுங்கா உட்காரு. உன்னை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப ஆடர் வாங்க போறமாதிரி ஆக்ட் பண்ணுற? தாங்க முடியலைடா. அடங்கு…” என்று கூறவும் சரியாக அமர்ந்து இளித்தான்.
ஜோசியர் விஷ்ணு கெளரி இருவருக்கும் பொருத்தங்கள் சரியாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் ஒரு சுபமுகூர்த்தம் இருப்பதாகவும் அந்த நாளில் திருமணத்தை வைத்துகொண்டால் மிக நல்லதெனவும் கூறி சடுதியில் விஷ்ணுவின் விரோதியாக அவதாரமெடுத்தார்.
அனைவரும் ஜோசியர் குறித்த நாளிலேயே திருமணத்தை நடத்திக்கொள்ளலாமென முடிவெடுத்தனர்.
தன் தகப்பனை கண்ட விஷ்ணு “புள்ளைக்கு ஏழு கழுதை வயசுக்கு மேல வயசாகுதே சட்டுபுட்டுன்னு பத்து பதினஞ்சு நாளுக்குள்ள நல்ல நாளா பார்த்து கல்யாணத்தை பண்ணி சீக்கிரம் பேரன், பேத்தியை பார்த்தோமா, அதை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய்ட்டு திரும்பி அழைச்சுட்டு வந்தோமான்னு இல்லாம இங்கே இவங்க சொல்றதுக்கெல்லாம் நல்லா தஞ்சாவூர் பொம்மை போல தலையாட்டிவைக்காங்களே?…” என முணுமுணுக்க அது சரியாக உதயாவின் காதில் விழுந்துவைத்தது.
“மச்சான்…” என அழைத்து விஷ்ணுவின் கண்ணீர் வராத கண்களை துடைத்து விட்டு,
“புரியுது மச்சான் புரியுது. கல்யாணத்தை இவ்வளோ சீக்கிரமா வைக்கிறாங்கன்னுதானே நீ வருத்தபடர? நான் வேணும்னா…” என்ற வாக்கியத்தை உதயா முடிக்க கூட இல்லை அவசரமாக அவனது வாயை தான் கரங்களால் அடைத்த விஷ்ணு,
“போதும் ராசா, இன்னைக்கு இந்த அளவு போதும். இதுக்குமேல தாங்கமாட்டான் இந்த விஷ்ணு. எனக்குன்னு வந்து சேர்ந்திருக்குதுங்க பாரு…” என தன் போக்கில் பிதற்றிக்கொண்டிருந்தான்.
நிச்சயதார்த்தம் திருமணத்திற்கு முதல்நாள் வைத்து கொள்வதாக ஒருமனதாக தீர்மானிக்க பட்டது. ஒருவழியாக அனைத்தும் பேசிமுடித்து ஜோசியர் கிளம்பிவிட மற்ற விஷயங்களை தங்களுக்கு ஆலோசிக்க தொடங்கினர்.
தங்களின் கருத்துக்களை அனைவரின் முன் ஒவ்வொருவரும் எடுத்துரைக்க அதில் நந்தினியின் குடும்பத்தினரையும் உள் இழுத்துகொண்டனர். ஏழுமலையிடமும் நேசமணியிடமும் எப்படி செய்யலாம் என அவர்களது எண்ணங்களையும் கேட்டு அவர்களுக்குண்டான மரியாதையை சரியாக செய்தனர் உதயா குடும்பத்தினர்.
அவர்களது உரிமைப்பேச்சிலும், தங்களை வேறாக எண்ணாமல் அவர்களின் குடும்பத்தில் மிக இலகுவாக இணைத்துக்கொண்ட பாங்கிலும் ஏழுமலையின் மனதில் இருந்த நூலிழை சுணக்கமும் காணாமல் போய் முகமே மலர்ந்துவிட்டது.
அனைத்தும் பேசி முடித்து மாலை நெருங்கியதும் ஏழுமலை குடும்பத்தினர் கிளம்ப ஆயத்தமானார்கள்.
“நாங்க கிளம்பறோம் சம்பந்தி. இப்போவே கிளம்பினாத்தான் நைட் வீட்டுக்கு போக சரியா இருக்கும்….” என்று ஏழுமலை கூறவும் கிருஷ்ணமூர்த்தியோ அதை மறுத்து,
இல்லை சம்பந்தி இங்க இரண்டுநாள் தங்கி எங்க எல்லோரோடும் சேர்ந்து இருந்துட்டு போகலாமே?…” என்று கேட்டார்.
“அதற்கென்ன? இன்னொரு முறை வந்து தங்கிட்டா போச்சு. ஊருக்கு போய்ட்டு ஒரு நல்ல நாளா பார்த்து மாப்பிள்ளையையும் பொண்ணையும் மறுவீட்டுக்கு அழைக்கவரோம்…”என கூறிக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றவர் நந்தினியிடம் வந்து சொல்லிக்கொள்ளும் போது உடைந்துவிட்டார்.
மகள் கலங்குவதை பொறுக்காமல் தன்னை தேற்றிக்கொண்டு, “கிளம்பறோம் மித்தும்மா. உடம்பை கவனிச்சுக்கோ. இங்க பதவிசா நடந்துக்கணும் என்ன? அப்பா போய்ட்டு வரேன்…” என கூறிவிட்டு நகர்ந்தவரின் முன் வந்து நின்றான் உதயா.
வழிமறித்து நின்றவனை பார்த்தவர் எதற்கென புரியாமல், “மாப்பிள்ளை…” என்று அவரை அறியாமலே அழைத்தும் விட்டார். அந்த ஒற்றை வார்த்தையில் ஏழுமலையின் மனதில் உதயா மேல்  உள்ள வருத்தம் மறைந்து இருவரும் சுமூகமாகி விட்டதில் அனைவருக்குமே நிறைவை தந்தது.
“இருங்க மாமா…” என்றவன் கௌரியிடம் ஏதோ கிசிகிசுக்க கௌரியும் உள்ளே சென்றவள் திரும்பி வரும் போது கையில் அட்சதை பூவும் விபூதி குங்குமமும் நிறைந்த ட்ரேயை எடுத்து வந்தாள்.
தம்பதி சமேதரராக ஏழுமலை சந்திராவை நிற்கவைத்து நந்தினியோடு அவர்கள் பாதம் பணிந்து ஆசிர்வாதம் வாங்கினான் உதயா. இச்செயலில் ஏழுமலையின் மனதில் உதயாவின் மேல் மதிப்பை கூட்டியது.
நெகிழ்வோடு ஆசிர்வதித்தவர், கண்களை துடைத்துக்கொண்டதும்,
‘என்ன மாமா சும்மா பூவை போட்டு ஆசிர்வாதம் பண்ணினா போதுமா?, பதினாறு பெற்று பெருவாழ்வு வாழணும்னு வாழ்த்தாட்டிலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் பதினாறுல ஆறாவது பெத்துக்கோங்கன்னு வாழ்த்தலாமில்ல…” என்று தன் மாமனாரை பார்த்து கண் சிமிட்டி கூறி அவரை வாயடைக்க வைத்தான்.
முதலில் திகைத்தாலும் அவனது சகஜமான உரையாடலில் தானும் கலந்துகொண்டார்.
“ஏன் மாப்பிள்ளை ஆறு மட்டும்?. பதினாறும் சேர்த்து சொன்னாலும் வேண்டாம்னா சொல்லுவீங்களா?…” என  மருமகனுக்கேற்ற மாமனார் என்று நிரூபித்தார். ஏழுமலையின் கேலியில் நந்தினி குடும்பத்தாருக்கு தலையே சுற்றிவிட்டது. பேசியது ஏழுமலையா என்ற சந்தேகமும் பிறக்க தங்களை கிள்ளி நடந்தது உண்மையா என்று உடனடியாக உணர்ந்துகொள்ள விழைந்தனர்.
விஷ்ணுக்கோ, “ஆரம்பிச்சுட்டான். இவன் வெறும் கையாலேயே சிக்ஸர் அடிக்கிறவன். கையில மட்டையை குடுத்து அடிக்க சொன்னா இனியும் சும்மா இருப்பானா?…” என்று ஒரு பெருமூச்சோடு கெளரி பக்கம் பார்த்தால் அவளோ தன் அண்ணனை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தாள்.
“உனக்கு குடுத்துவச்சது அவ்வளோதாண்டா விஷ்ணு…” என்று தானும் கௌரியின் வேலையை பார்க்க தொடங்கினான். வேடிக்கை பார்க்கும் வேலை.
ஏழுமலை சாதாரணமாக இவ்வாறு பேசுபவரல்ல. இன்றைய நிகழ்வுகளும், புகுந்த வீட்டில் மகளின் மணவாழ்வு அளித்த நிம்மதியும் என்ற ஏகாந்தமான மனநிலை அவரின் இயல்பையே மாற்றி மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரை திக்குமுக்காட வைத்துக்கொண்டிருந்தது.
ஏழுமலை தம்பதியினரை தொடர்ந்து நேசமணி, பூரணி கோசலை என அனைவரிடமும் ஆசி வாங்கியவன் கோசலையிடம், “நீங்க சொன்னதை அன்னைக்கே கேட்டிருக்கலாமோன்னு தோணும்மா. இரண்டரை வருஷம் வீணாப்போச்சு..” என்று பெருமூச்சுவிட்டவனை பார்த்து நகைத்தவர்,
“அதனால என்னப்பா, நீங்க ரெண்டுபேரும் சேர்ந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம்..” என்று அகமகிழ்ந்து சொன்னவரை கண்டு புன்னகைத்தான்.
“சரி சரி கிளம்பலாம் நேரமாச்சு…” என்று விஜி துரிதப்படுத்த அவனை முறைத்த நந்தினி தன் தாயோடு வாசலுக்கு சென்றாள். உடன் அவள்  கணவனும்.
சந்திராவின் முகத்தை பார்த்தே அவரது எண்ணவோட்டத்தை புரிந்தவனாக, “நந்தினியை நான் பார்த்துப்பேன் அத்தை. கவலைபடாமல் போய்ட்டு வாங்க. நாங்களும் சீக்கிரமே மீனாட்சிபுரம் வருவோம்…” என்று நந்தினியை தோளோடு அணைத்துக்கொண்டே அவன் கூறிய மருமகனை மெச்சாமல் இருக்கமுடியவில்லை. 
“புரிந்துகொண்டதற்கு ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. நாங்க கிளம்பறோம்…”என்று கரம் கூப்பி விடைபெற்று அனைவரும் கிளம்பிவிட்டனர்.
அவர்களது வாகனம் பார்வையிலிருந்து அகலும் வரையில் கண்கள் பனிக்க பார்த்துக்கொண்டே இருந்தாள் நந்தினி. இனி தன குடும்பத்தினரை எப்போது தன வீட்டிற்கு செல்வோம், அனைரையும் பார்ப்போமென்னும் ஏக்கம் முழுவது விழிகளில் நிரம்பி ததும்பியது.
அவளது உணர்வுகள் புரிந்தது போல அவளை அணைத்திருந்த தன் கைகள் அவளது தோள்களில் ஆறுதலளிக்கும் விதமாக அழுத்தம் கொடுத்தது. அவளது கண்களில் நிறையவிருந்த கண்ணீர் கண்டதும் இனியும் தாமதித்தால் டேமை திறந்துவிடுவாள் என்றெண்ணி அவளை திசைதிருப்பும் விதமாக தன் மனையாளை பின்னால் இருந்து அணைத்தவன்,
“அப்புறம்..” என்று கழுத்துவளைவில் குறுகுறுக்க,
அவனது நெருக்கத்தில் தன்னை மீட்டெடுத்தவள், “ஐயோ என்ன இது வாசல்ல, யாராச்சும் பார்க்க போறாங்க…” என்று பதறி விலகபார்த்தாள்.
“ம்ஹூம் யாரும் பார்க்க வாய்ப்பே இல்லை மேடம்…” என்று விடாமல் பேசினான்.
லேசாக இருள் கவிழ தொடங்கிய அந்த மாலை பொழுதில் ஆள் அரவமில்லாத போர்டிக்கோவின் அருகில் அவன் சொன்னது போல யாரும் பார்க்க முடியாதுதான். ஆனாலும் அவனிடமிருந்து விலகி நின்றவள் அவனை முறைக்க முயன்று அவனது பார்வையில் விழிகளை தாழ்த்திக்கொண்டு உள்ளே செல்ல திரும்ப,
“அப்புறம் என்னனு கேட்டதுக்கு பதிலே சொல்லலையே?..” என்று அவளை விட்டு விலகி நின்றாலும் அவனது பார்வை நந்தினியை தழுவியபடியே இருந்தது.
மெல்ல சுதாரித்தவள், “என்ன கேள்வி இது?. அப்புறம் என்ன சாப்பிட்டு தூங்கனும். அவ்வளவுதான்…” என்று வேகமாக கூறியவள் உதயா வேறேதும் சொல்லும் முன் சென்றுவிடலாம் என நினைக்க அவளை வழிமறித்தவன்,
“நினைப்புத்தான். தூங்குவியோ?, ம்ம் பார்க்கலாம்…” என்று குறும்போடு கூறிவிட்டு அவளை முந்திக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான் உல்லாசமான மனநிலையோடு.
நந்தினிக்குத்தான் கால்கள் நகர மறுத்து அவ்விடத்திலேயே வேரூன்றி போய்விட்டது. சிறிதுநேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு உள்ளே சென்றால் அவனது பார்வை வீச்சு அவள் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்தன. இதனால் நகரும் ஒவ்வொரு கணமும் நந்தினிக்கு அவஸ்தையை கொடுத்தது என்றால் மிகையல்ல. ஆனாலும் அதை அவளது மனம் விரும்பத்தான் செய்தது.
சிறிது நேரத்திலேயே விஷ்ணு குடும்பத்தினரும் இரவு உணவை முடித்துகொண்டு புறப்பட்டுவிட்டனர். இரவு நெருங்க நெருங்க நந்தினிக்கு திண்டாட்டமாகவும் உதியாவிற்கு கொண்டாட்டமாகவும் போய்விட்டது.
இவர்களது கண்ணாம்பூச்சி ஆட்டத்தினை கண்ட குடும்பத்தினருக்கு நல்லது நடந்தால் போதுமென்று அனைவரும் அவரவர் அறைக்கு உறங்க சென்றுவிட்டனர்.
வேணிக்கோ இன்றைய நிகழ்வுகளில் தாக்கம் ரணமாய் எரிந்து ஆறாமல் இருக்க இப்போது உதயா, நந்தினி என இருவரது விழிகளின் பாஷையை ஓரளவு யூகித்தவரின் உள்ளத்தின் கனல் அணையாமல் இன்னும் நெருப்பை வளர்த்துக்கொண்டிருந்தது.
இருந்தாலும் எதுவுமே முகத்தில் காட்டிகொள்ளாமல் இதயத்தின் ஆழத்தில் மறைத்தாலும் அவரால் முடியவில்லை. பிரசாத்தை உடனடியாக சந்திக்க துடிக்க ஆரம்பித்தது. அதற்கான வழிகளை தேடியவர் அதற்கான வழி புலப்பட்டும் குறையாத கொந்தளிப்போடு தன் அறைக்கு சென்று மறைந்தார்.
அனைவரும் சென்றதும் ஹாலே நிசப்தமாக இருக்க நகத்தை கடித்தபடி மாடி நோக்கி தன் அறையை நிமிர்ந்து பார்த்தவள் தயக்கத்தோடு அங்கேயே அங்குமிங்கும் அலைபாய்ந்த விழிகளோடு நடந்துகொண்டிருந்தாள்.
பின்னாலிலிருந்து யாரோ தன்னை தூக்கவும் பயத்தில் அலற,
“ஏய்!! அடங்குமா. விட்டா கத்தி ஊரை கூட்டிடுவ போல?…” என்று அசால்ட்டாக சொன்னான் உதயா.
“கீழே இறக்கி விடுங்க முதல்ல. ஏன் இப்டிலாம் பண்றீங்க?…” என கூறி இறங்க நினைத்தாலும் முடியவில்லை.
“நீயா வருவன்னு பார்த்தேன். வரலை. அதான் நானும் சும்மா பேச்சுக்காக மட்டும் உன்னை தூக்கிட்டு போகனுமான்னு ஒவ்வொரு தடவையும் கேட்கல. நிஜமாதான் கேட்டேன். நீயும் அதை கண்டுக்கவே இல்லை. அதான் எதுக்கு பர்மிஷன் கேட்கனும்னு தூக்கிட்டேன். எப்டி?…” என்று பெருமை பேச அவளது பொறுமை பறந்தது.
திமிறிக்கொண்டு இறங்க முற்பட அதை செயல்படுத்த விடாமல் தங்களது அறைக்கு சென்று தானே இறக்கிவிடவும் தான் அவளால் தரையில் நிற்க முடிந்தது. ஆனாலும் இத்தனை நாள் இல்லாமல் இன்று ஏனோ முச்சுமுட்டியது அந்த அறைக்குள்.
“இங்க பாரு உங்கப்பாம்மா சம்மதம் கிடைக்கவும் தான் நம்மோட வாழ்க்கையை துவங்கணும்னு நினச்சேன். அது கிடைச்சிருச்சு…” என்று கூலாக கூறிவிட்டு அவளை நெருங்க முயல அவளோ அவனை முறைத்துகொண்டு,
“அப்போ என் சம்மதம் முக்கியம்னு தோணலையா?…” என கெத்தாக கேட்டவளின் கழுத்தை வளைத்தவன்,
“உன் சம்மதம் கிடச்சுதான் ரொம்ப நாளாச்சே? இன்னொரு முறை வாங்கனுமா என்ன?…”  என்று அவளை நன்கு அறிந்தவனாக கூறவும் பிடிபட்டவளாக முழித்தவள் அவனது விழிவீச்சிலிருந்து தப்ப அவனது தோள்களிலேயே தன் முகத்தை மறைத்தவளை சிறு புன்னைகையோடு தனக்குள் புதைத்துக்கொண்டான்.
காதலையே ஆராவரமில்லாமல் வெளிப்படுத்திக்கொண்டவர்களுக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச இடைவெளியும் தயக்கங்கள் தகர்த்து சருகாய் உதிர்ந்து அவர்களின் தாம்பத்திய வாழ்விற்கு வழிவிட்டது. அழகான இல்லற வாழ்க்கையில் இருமனம் ஒப்பி இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்து பயணிக்க தொடங்கினர்.
விடியலில் பூஜையறைக்கு வந்து விளக்கேற்றிய நந்தினியின் சிவந்த முகத்தில் இருந்த பரவசமும் மிச்சமிருந்த நாணத்தையும் காணாமல் கண்ட நாச்சிக்கும், பாக்கியத்திற்க்கும்  இனி பிரச்சனைகள் தங்களை அண்டாது என்றெண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்திகொண்டனர்.
அடுத்த மூன்றுநாட்களுக்கு நந்தினியோடு கொடைக்கானல் சென்றுவிட்டு அன்று காலை தான் வந்தவனிடத்தில் நாச்சியும் கிருஷ்ணமூர்த்தியும் தனம் வீட்டிற்கு சென்று வருமாறு கூறியதும் உதயாவிற்கு தூக்கிவாரிபோட்டது.
இன்னைக்கு நேரமே சரியில்லையே. தனக்கு மட்டும் ஏன் இப்படி அடுக்கடுக்காக சோதனை? என்று தனக்குள் புலம்பியவனை அழைத்த  கிருஷ்ணமூர்த்தி,
“என்ன பிரபா யோசனை?, தனம் உங்களை விருந்துக்கு வரசொல்லி நாளாச்சுப்பா. போகாம இருந்தா நல்லா இருக்குமா?…” என்று கேட்க,
“இல்லைப்பா கார்மெண்ட்ஸ் ல வேலைகள் நிறைய இருக்குதே?, அதையெல்லாம் முடிச்சிட்டு மெதுவா போகட்டுமா?…” என்று இழுத்தான்.
அங்கே போனால் பிரசாத்தை நந்தினி பார்க்க நேரிடும். அதன் பின்னால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வருமோ? என்று இதிலிருந்து தப்பும் மார்க்கம் கிடைக்குமா என்று மனம் துரிதகதியில் தேடத்தொடங்கியது.
அவனது நினைப்பிற்கு வாய்ப்பளிக்காமல் இடைபுகுந்த நாச்சி,
“அங்க ஆயிரம் வேலை தினத்திற்கும் தான் இருக்குது. அதுக்குன்னு ஆகவேண்டிய காரியத்தை பார்க்காம தள்ளியா போடமுடியும்? அதை பார்த்துக்கத்தான் விஷ்ணுவும், உன் மாமாவும் இருக்காங்களே? நீ இன்னைக்கு போய்தான் ஆகணும். நான் போய் உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லி கிளம்ப சொல்றேன்…” என்று தன் அறை நோக்கி நகர்ந்த நச்சியை நிறுத்தி தானே அவளிடம் சொல்லி அழைத்துச்செல்வதாக உறுதியளித்துவிட்டு மாடிக்கு சென்று மறைந்தான்.
அறைக்குள் நுழைந்தவன் நந்தினி குளியலறையில் இருப்பதை உறுதிபடுத்திவிட்டு பால்கனிக்கு நகர்ந்தவன் மொபைலை எடுத்து தனத்திற்கு அழைத்து விட்டு அவரது குரலுக்காக காத்திருந்தான்.
“சொல்லுப்பா பிரபா, ஊர்ல இருந்து வந்துட்டியா?..” என்று வாஞ்சையாக கேட்ட தனத்தின் குரலில்,
“நான் நல்லா இருக்கேன் சித்தி, நீங்க எப்டி இருக்கீங்க?..” என்று அன்போடு கேட்டான்.
“எனக்கென்னப்பா இருக்கேன், அதை விடு நீயும் என் மருமகளும் வீட்டுக்கு எப்போ வருவீங்க?…” என்று கேட்டதும்,
“ம்ம் அப்பா சொன்னாங்க சித்தி. இன்னைக்கே வரோம். ஆனா பிரசாத்?…” என்று இழுக்க,
“நீ கவலைபடாம வா. மதிய சாப்பாட்டுக்கே வந்திருங்க. நீங்க வரும் போது அவன் இருக்கமாட்டான்…” என்று சற்று சத்தமாக சொன்னவரது குரலிலேயே அவரது அருகில் பிரசாத் இருக்கிறான் என்பது தெளிவாகியது உதயாவிற்கு.
“சாரி சித்தி…” என்று குற்ற உணர்வோடு கூறி மன்னிப்பை வேண்ட,
“ச்சே ச்சே அதெல்லாம் சொல்லாதே பிரபா, எனக்கு தெரியாத. அதை விடு நீயும் நந்தினியும் புறப்பட்டு வாங்க. நான் உங்களுக்காக காத்திருப்பேன். என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டு பிரசாத்தை பார்க்க அவனோ புரிந்தாற்போல கசந்த முறுவலோடு வெளியே கிளம்பிச்சென்றான்.
வார்த்தையால் சொல்லாமல் தன் பார்வையிலேயே புரிந்துகொண்டு வெளியேறிய மகனை பார்த்த தனத்திற்க்கோ உள்ளமெல்லாம் வலித்தது. இது அவனாக ஏற்படுத்திக்கொண்டதுதானே. மகனது மனவாட்டம் புரியாதவரா? ஆனாலும் வேறு வழியில்லையே.
உதயா வரும் போது இவன் பிரச்சனை ஏதும் செய்து வம்பிழுத்துவிட்டால் என்ன செய்வது என்றுதான் தனம் நினைத்தார். அதனால் தான் உதயா தயங்கினான் என்றும் தவறாக எண்ணினார். அவருக்கு தெரியாதது தன் மனைவிக்காகத்தான் உதயா தயங்கினான் என்பது. பிரசாத்தால் எத்தகைய ஆபத்தை நந்தினி சந்தித்தாள், அவனால் எவ்வாறு பாதிக்கபட்டாள் என்று அறிந்தால் தனத்தின் மனநிலை எவ்வாறு மாறுபடும், தன் மகனை மன்னிப்பாரா?
இங்கே உதயாவும் நந்தினியும் காலை உணவை முடித்துக்கொண்டு பிரசாத் இல்லத்திற்கு கிளம்பினார்கள்.
நந்தினி எங்கே யார் வீட்டிற்கு போகிறோமென்று கேட்டதற்கு, நெருங்கிய சொந்தம், தனக்கு சித்தி என்று மட்டும் கூறியவன் வேறெதுவுமே கூறவில்லை.
கிளம்பும் போதே பாக்கியமும் நாச்சியும் பலகாரங்கள் அடங்கிய சில பாத்திரங்களை கொடுத்து தனத்திடம் கொடுத்துவிட்டு பொறுமையாக இருந்து பேசிவிட்டு வருமாறு சொல்லவும் தனம் யாரென்று பாக்கியத்திடம் கேட்டாள்.
“தனம் எனக்கு சகோதரி முறை வேணும் நந்தும்மா. சில காரணத்தால பிரிந்து இருக்க வேண்டியதாகிவிட்டது…” என்று பெருமூச்சு விட,
பிரசாத் பத்தி எதுவும் சொல்லிவிடுவார்களோ என்றஞ்சி அவர்களின் பேச்சை துண்டித்து வேறுதிசைக்கு திருப்பினான்.
“நானும் நந்தினியும் கோவிலுக்கு போய்ட்டு தனம் சித்தி வீட்டுக்கு போறோம்…” என்று சொல்லிவிட்டு மேலும் பேச்சை வளர்க்காமல் நந்தினியோடு வாசலுக்கு விரைந்து விட்டான்.
“பிரசாத் நந்தினி முன்னால ஏதும் பிரச்சனை பண்ணிடுவானோன்னு பிரபா கவலைப்படறான் போல அத்தை. அவன் முகமே ஒரு மாதிரி வாட்டமா இருக்கே?..” என்று பாக்கியம் நாச்சியிடம் வருந்த,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை பாக்கியா. நீ கவலைபடாதே. தனத்திற்கு தெரியாததா?. எல்லாம் அவ பார்த்துப்பா. இப்படியெல்லாம் நினச்சு போகாம இருக்கமுடியுமா?…” என்று பாக்கியத்தை சமாதானபடுத்திவிட்டாலும் கிருஷ்ணமூர்த்தியின் முகமும் அதைதான் எண்ணிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவர் ஒன்றும் செய்ய இயலாமல் பூஜையறைக்கு சென்றுவிட்டார்.
போனவர்கள் போகும் போது இருந்த சந்தோஷத்தோடே திரும்பி வரவேண்டுமென்று பிராத்தனை மட்டுமே செய்ய முடிந்தது.
இவர்கள் அனைவரும் யாரால் பிரச்சனை வரும் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார்களோ இவர்களின் சஞ்சலத்திற்கு சொந்தக்காரன் தங்கள் இல்லத்திலேயே நுழைய ஆகவேண்டிய காரியங்களை வெற்றியோடு முடித்துவிட்ட திருப்தியில் அவ்வூரிலேயே இல்லை என்பதை அறியாமல் போய்விட்டனர்.
உதயா தம்பதியினர் வெளியே சென்ற சிறிதுநேரத்தில் பிரசாத்தின்  ஏற்பாட்டால் வள்ளி என்னும் பெண் கௌரியின் கல்யாண வேலைக்கு உதவியாக இருப்பாள் என்ற போர்வையில் வேணியின் சொல்லுக்காக நாச்சியால் வேலைக்கு அமர்த்தபட்டாள்.
இனி வேணியின் எண்ணங்களுக்கு பிரசாத்தின் கட்டளையின் பெயரில்  செயல் வடிவம் கொடுக்க வந்துவிட்டாள்.
உதயா நந்தினியின் நிம்மதிக்காக பெரிய பள்ளத்தை பறித்து தக்க சமையத்தில் அதில் அவர்களை தள்ள திட்டம் தீட்டினார் வேணி. அதற்கு பிரசாத்தும்  ஒத்துழைப்பு தர இனி தான் நினைத்ததெல்லாம் நிறைவேறிவிடும் என்ற இறுமாப்போடு வள்ளியை பார்த்து சிரித்தார்.
விதியும் சிரித்தது.
பிரசாத் வீட்டிற்கு சென்ற உதயா திரும்பி வரும்போது முகம் முழுவதும் பதட்டத்தோடு கைகளில் மூச்சுப்பேச்சில்லாமல் இருக்கும் நந்தினியை ஏந்தியவாறே வீட்டினுள் நுழைந்தான். அவன் பின்னே டாக்டர் பெருமாள்சாமியும்.
பிரசாத்தின் வீட்டில் நந்தினிக்கு நேர்ந்ததென்ன?

Advertisement