Advertisement

“தங்கம்மை இதென்ன இப்படி பண்ற..” என்றபடி தீனாவும் பின்னோடு செல்ல, அவளோ அப்போதும் விசும்பிக்கொண்டு தான் இருந்தாள்.

“என்ன தங்கம்மை இது..” என்று தீனா கேட்க,

‘பார்த்தா தெரியலையா??!!’ என்று பார்க்க, “ம்ம்ச் இப்படி பார்த்தா என்ன அர்த்தம்..” என்றவன், அவள் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருக்க, அவனோ அங்கேயே கீழே அமர,

“மேல வந்து உக்காருங்க..” என்றாள் விசும்பளோடு.

 “இது நீ இங்க தனியா வந்து படுக்குறப்போ தெரியலையா??” என்றான் கடினக் குரலில்..

தங்கம்மைக்கு தெரியும். ஏனெனில் அவளின் பொருட்களை எல்லாம் தீனா ஒரே அறையில் தான் வைத்திருந்தான். இவள் தான் மாற்றி எடுத்துக்கொண்டு இங்கே வந்தாள். எப்படியும் அதை சொல்வான் என்று தெரியும் ஆனால் இப்போது சொல்வான் என்று பார்க்கவில்லை.

தான் அப்படி பேசியதும், இங்கே வந்து இப்படி செய்ததும் தவறு என்று அவளுக்குத் தெரியும். முகத்தை உம்மென்று வைத்து அமர்ந்திருக்க,

“சொல்லு தங்கம்மை.. அப்போ தெரியலையா..” என்றவன் எழாமலே அப்படியே தான் கீழே அமர்ந்திருந்தான்.

“ம்ம்ச்…” என்றவள் இறங்கி வந்து கீழே அமர,

“யார் மேல உட்கார்றோம் கீழ உட்கார்றோம் எல்லாம் ஒரு விசயமே இல்லை.. நமக்குள்ள என்ன இருக்குன்னு தான் பார்க்கணும்..” என்றவன் “சொல்லு எதுக்கு அழுத??!!” என,

“நான்.. நான் போன் பண்ணதுமே பதறிப்போய் என்னாச்சுன்னு கேட்டீங்க தானே.. அப்போ அப்படித்தானே எனக்கும் இருக்கும்..?? நீங்க இவ்வளோ லேட்டா வர்றப்போ..” என்று தங்கம்மை சொல்லவும் தான் அவனுக்கு இதுதான் விசயம் என்று விளங்கியது..

“அது…” என்று இழுக்க, அவளோ அவன் முன்னே கை நீட்ட, அவள் என்ன கேட்கிறாள் என்று புரிந்து அவனின் அலைபேசி எடுத்துக்கொடுத்தான்.

“ம்ம்..” என்று அவள் எத்தனை அழைத்திருக்கிறாள், எத்தனை மெசேஜ் அனுப்பியிருக்கிறாள் என்று காட்ட,

“ரியல்லி சாரி தங்கம்மை.. ஒரு அர்ஜென்ட் மீட்டிங் மெய்ன் பிரான்ச்ல இருந்து.. அப்போ போனை சைலேன்ட்ல போட்டேன்.. அடுத்து மறந்தே போச்சு..” என

“அதானே… உங்களுக்கு எப்படி என்கிட்ட சொல்லனும்னு நியாபகம் வரும்..” என்று தங்கம்மையும் இடக்காய் பேசினாள்.

தீனா கண்களை இடுக்கிப் பார்க்க, “அன்னிக்கு என்னை மட்டும் சொல்லிட்டு போகலைன்னு திட்டினீங்க.. இப்போ நீங்களும் சொல்லனும்தானே வர லேட்டாகும்னு..” என்று தங்கம்மை கேட்க,

“நான் தான் சாரி கேட்டுட்டேனே தங்கம்மை.. எனக்கு கொஞ்சம் வொர்க் ப்ரஷ்ஷர் நிறைய.. இல்லை புரியாம நீ இதையே பேசுவன்னா, எனக்கும் ஓகே.. பேசத் தெரியாதுன்னு இல்லை.. உன்னை ஏற்கனவே ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்.. சோ தப்பா எதுவும் பேசிடக் கூடாதுன்னு தான் இருக்கேன்..” என்றவன்,

“நான் பேசுறது எல்லாத்துக்கும் உன்னால பதில் சொல்ல முடியாது புரிஞ்சாத??!!” என்றும் கேட்க,

“பேசித்தான் பாருங்களேன்..” என்றாள் வீம்பாய்..

அவளின் வீம்பு, பிடிவாதம் இதெல்லாம் தீனாவிற்கு புதியது.. அங்கே ஊரினில் இதெல்லாம் இல்லை.. ஆனால் இங்கே வந்ததில் இருந்து தங்கம்மை இப்படிதான் என்று அவனும் கவனித்துத்தான் வைத்திருந்தான்.

இது தன்மீது இருக்கும் உரிமையின் காரணமாய் வருவது என்றும் தெரிந்து வைத்திருந்தான்.

ஆக “பேசிடுவேன்.. அப்புறம் நீ தான் ச்சி போங்கன்னு முகத்தை மூடிக்குவ..” என்று சொல்ல,

அவன் எதை சொல்கிறான் என்று புரியவும் “ச்சே நீங்க இருக்கீங்களே..” என்று நிஜமாகவே சிலுப்பிக்கொண்டாள்.

கோபம் போய், அழுகை போய் இப்போது திணறலாய் ஒரு சிரிப்பு அவள் முகத்தினில் தெரிய, அவளையே பார்த்திருந்தவனோ  “இந்த விசயத்துல நான் பண்ணது தப்புதான்.. லேட்டாகும்னு சொல்லிருக்கணும்.. ஐம் சோ சாரி.. ஆனா இனிமே இப்படி அழாத..” என்றான் நிஜமான வருத்தத்தோடு.

தீனாவின் குரல் இறங்கிப் போனது மட்டுமல்லாது, அவனின் முகத்திலும் ஒரு மாற்றம் தெரிய, ‘ஷ்… நான் ஒரு மட்டி..’ என்று தலையில் அடித்துக்கொண்டவள் “நீங்க இப்போ ஒன்னும் சொல்ல வேணாம்.. பிரெஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்..” என,

“இல்ல தங்கம்மை.. மனசுல இருக்கிறதை பேசிடுறது தான் பெட்டர்.. இல்லைன்னா இப்படிதான் அடிக்கடி ஏதாவது வந்துட்டே இருக்கும்..” என்றான் இன்றே இதற்கெல்லாம் ஒரு முடிவு வந்தாக வேண்டும் என்ற எண்ணத்தோடு..

அவளுக்கோ அது இன்னமும் சங்கடமாய் போனது. வந்தவனுக்கு ஒருவாய் தண்ணீர் கூட கொடுக்காது, தான் இப்படி செய்கிறோமே என்று தோன்ற,

“சாப்பிட்டுக்கிட்டே கூட பேசலாம்ங்க…” என்று இவளும் இறங்கி வந்தாள்.

வேறு என்ன செய்வது, இருவருக்குமே சண்டையை வளர்க்கப் பிடிக்கவில்லை, ஒருவர் மாற்றி ஒருவர் இறங்கிவர, கொஞ்சம் சுமுகமாய் சூழல் மாற, உணவு உண்ண ஆரம்பித்த பிறகு தான் இருவருக்குமே எத்தனை பசி என்பது நன்குப் புரிந்தது.

“ஹப்பாடி செம பசி..” என்று தங்கம்மை சொல்ல,

“அதனால தான் அவ்வளோ கோவம் உனக்கு..” என்றான் வாயை வைத்துகொண்டு சும்மா இறாமல்.

“என்னது??!!” என்று அனைத்தையும் ஒதுங்க செய்துகொண்டே தங்கம்மை கேட்க,

அவனோ அதற்கு பதில் சொல்லாது “நீ உட்கார் நான் கிளீன் பண்றேன்..” என்று அவனும் ஒதுங்கச் செய்ய, பின் இருவருமே தான் வேலைகளை பகிர்ந்துக்கொண்டனர்.

இது அவன் எப்போதுமே செய்வது. தங்கம்மை இங்கே வந்ததில் இருந்து. ஒருத்தியாய் அனைத்தும் செய்கிறாள் என்பதால், அவன் வீட்டில் இருக்கும் நேரம் தங்கம்மை அதிகம் வேலை செய்யாது பார்த்துக்கொள்வான்..

சிறு சிறு கரிசனைகள் வார்த்தைகளில் வெளிப்படுவது விட, செயல்களில் காட்டுவது இன்னும் அழகு.. அதை தீனா அவன் அறிந்து செய்தானா இல்லையா என்றெல்லாம் தெரியாது ஆனால் தங்கம்மைக்காக செய்தான்..

அது தங்கம்மையும் இப்போது உணர்ந்துகொள்ள ‘இப்படிதான் எதையாவது செஞ்சு என்னை மாத்திடுறாங்க…’ என்று அவள் மனம் செல்லமாய் கடிந்துகொள்ள,

தீனாவோ “உனக்கு தெரியாது தங்கம்மை நீ என்னை எவ்வளோ மாத்தியிருக்கன்னு..” என்றான் அவனும்..

“நா.. நான் அப்படி எதுவும் செய்யலையே..” என்றவளுள் ஒரு இனிய அதிர்வு.

“நீ செய்யனும்னு செய்யலை.. ஆனா உன்னோட இயல்பு.. உன்னோட இருப்பு எல்லாமே என்னை மாத்திச்சு.. அதுதான் உண்மை.. ப்ரம் தி டே ஒன்… முதல்நாள் நம்ம சேர்ந்து வாழ்றது சரிப்படாதுன்னு நான் சொன்னேன் தான்.. ஆனா ஏதோ ஒரு வகையில நீ என்னை கவனிக்க வச்ச உன்னை..” என்று தீனா சொல்லி சிரிக்க, தங்கம்மை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

“நிஜமாதான் சொல்றேன் தங்கம்மை.. நீ என்னை விட்டு போகலைன்னு தெரிஞ்சதும் மனசுல அப்படி நிம்மதி.. அது எதுனாலன்னு எல்லாம் சொல்ல தெரியலை.. ஆனா ‘பாருடா தீனா உனக்காகவும் ஒருத்தி வெய்ட் பண்றா’ அப்படின்னு அது ஒரு பீல்..”  என்றவன் முகத்தினில் ஒரு பெருமை வரத்தான் செய்தது..

தங்கம்மை அவனை ரசித்துப் பார்க்க “என்ன பாக்குற.. அதெல்லாம் பசங்களா பொறந்திருந்தா தான் புரியும்.. நமக்காகவும் ஒருத்தி நம்மளோட வாழ  வெய்ட் பண்ணிட்டு இருக்காங்கிறது எல்லாம் சாதாரணம் இல்லை..” என்றவன்,

“அப்படி ஒரு பீல் எனக்கு நீதான் கொடுத்த தங்கம்மை..” என்றான் அவளின் கரங்களை இறுகப் பற்றி, அதனில் முத்தமிட்டு.

இத்தனை நாள் தீண்டல்கள் எல்லாம் கொடுக்காத ஓர் உணர்வு அந்த ஸ்பரிசம் கொடுக்க, தங்கம்மைக்கு மனதில் இருந்த அத்தனை மாற்று எண்ணங்களும் ஓடிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும்.. 

“உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதான்.. ரீசன் எல்லாம் தெரியாது.. மே பீ நீங்க ஏதாவது கொடுமை பண்ணிருந்தா நான் போயிருப்பேனோ என்னவோ..” என்றவள், “பட் அதெல்லாம் பேசிக்கலி கொடுமையான மனசு உள்ளவங்க பண்றது..” என,

“ம்ம்… என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் நீ கல்யாணம் பண்ண..” என்று தீனா சொல்லும்போதே, “அதெல்லாம் வேண்டாமே..” என்றாள் தங்கம்மையும்.

“இல்லை பழசு பத்தி எதுவும் பேசலை.. ஆனா நம்ம மேரேஜ் அப்போ நிஜமா நான் ஒரு குழப்பமான மைன்ட் செட்ல தான் இருந்தேன்.. ஆனா நீயும் போயிருந்தா கண்டிப்பா இப்போ நான் ஒண்ணுமே இல்லாம போயிருப்பேன் தங்கம்மை..” என, ‘ச்சே இவனைப் போய் அன்று அப்படி பேசினோமே..’ என்றாகிப் போனது அவளுக்கு.

உணவு முடிந்து, பேச்சு தொடங்கி அப்படியே வேலையும் முடிந்து இருவரும் திரும்ப எந்த அறைக்குப் போவது என்று நிற்க,

தீனாவோ “எனக்கு நீ தனியா அந்த ரூம் யூஸ் பண்றது சுத்தாம பிடிக்கல..” என,

“எனக்குக் கூடத்தான் நீங்களும் தனியா அந்த ரூம் யூஸ் பண்றது பிடிக்கலை..” என்று தங்கம்மை சொல்ல, “அப்போ பெட் தூக்கி ஹால்ல போடறேன் இரு..” என்று தீனா வேகமாய் அறையினுள் செல்ல,

“அய்யோ.. இல்லல்ல நானே வர்றேன்..” என்றவள் வேகமாய் அவளின் பெட்டியை தூக்கிக்கொண்டு வந்தாள்.

“ஒண்ணுமே எடுத்து வைக்காம தான் நீ பாவலா காட்டிட்டு இருந்தியா??!!” என்று தீனா சிரிக்க, “ஹாலோ ஆபிசர்.. ரொம்ப பண்ணாதீங்க..” என்று சொன்னாலும் அவளுக்குமே சிரிப்பு.

மனதினில் விரும்பங்கள் இருக்கையில் எத்தனை நாளைக்குத்தான் வீம்புகள் வளர்க்க முடியும்??!!

தீனா புழங்கும் அறைக்கு வந்தவள், “ரூம் மாதிரியா வச்சிருக்கீங்க..” என்று வேண்டுமென்றே சீண்ட,

“ஆ!! சரி நீ ரூம்ம ரூம் மாதிரி வச்சிடு.. நான் உன்னை என்ன மாதிரி வைக்கன்னு யோசிக்கிறேன்!!” என்று அவனும் சீண்ட, இருவருக்குமே மனதினில் ‘அப்பாடி..’ என்றதொரு உணர்வு.

தங்கம்மையோ அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்து பதில் பேசாது போய் படுத்துக்கொள்ள, “என்ன நீ நான் சரியா பேசலைன்னு சொல்ற.. ஆனா பேசினா அப்பப்போ பதில் பேசறது இல்லை..” என்றவன்,

“நீ ஏன் தங்கம்மை என்னை விட்டு போகலை??!!” என்று கேட்கையில் அவனின் குரலில் அப்படியொரு உணர்வு கலவை..

முன்பும் இதையே கேட்டிருக்கிறான் தான். ஆனால் அப்போது விட இப்போது இன்னமும் அவளின்பால் நெருக்கம் தெரிய, திரும்பி அவனைப் பார்த்தவள்,

“போகலை…!! போயிருந்தா நீங்க சொன்னது போல நிஜமா நானும் ஒன்னும் இல்லாமத்தான் ஆகியிருப்பேன்..” என்றவள், “அப்புறம் எங்கம்மா.. அவங்களும் நொறுங்கிப் போயிருப்பாங்க..” என்றதும் தீனாவிற்கு அப்போதும் கூட மனது வலித்தது..

தான் அப்படி சொல்கையில் அவளின் மனது எத்தனை வேதனைப் பட்டிருக்கும் என்று..

அவனின் முகம் பார்த்தே “சாரி எல்லாம் சொல்லிட்டு கிட்ட வந்திடாதீங்க..” என,

“வேறன்ன சொல்லிட்டு கிட்ட வர..” என்றபடி அவனும் வந்து படுக்க,

“எதுவுமே சொல்லவேணாம்.. ரெண்டுபேருக்கும் எல்லாமே தெரியும்.. சும்மா சும்மா மாத்தி மாத்தி அதையே பேசி வேணாங்க..” என்றவள், அவளாகவே அவனை ஒட்டியும் படுத்துக்கொண்டாள்.

காரணமும், விளக்கங்களும் யார் யாருக்கு சொல்லவேண்டும்??!! இருவருமே தங்களின் பிடிவாதம் விட்டு இறங்கிவந்துவிட்ட பிறகு, பேச்சுக்கள் கூட நிறைய தேவையில்லைதான்..

தங்கம்மையின் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தியவன், “உனக்கு வீட்ல தனியா இருக்க போர் அடிக்கலையா??!!” என்றான்..

“ம்ம் அடிக்குது.. என்ன செய்றது..”

“பேங்க் எக்ஸாம் எழுதிறியா நான் சொல்லித் தரேன்..” என்று தீனா சொல்ல, அவனின் கைகளில் இருந்து தங்கம்மை தன் கையை உருவிக்கொண்டாள் பட்டென்று..

“ஹேய்.. இப்போ நான் என்ன டி சொல்லிட்டேன்.. எழுதிறியான்னு தானே கேட்டேன்..” என,

“ஒரு வீட்ல ஒரு ஆபிசர் இருந்தா போதும்..” என்றவள், “எனக்குத் தூக்கம் வருது..” என்று அவனை ஒட்டியே உறங்கியும் போனாள்.

ஆனால் தீனா வெகு நேரம் தூங்கவில்லை.. தங்கம்மையை பார்த்தபடி தான் படுத்திருந்தான்.. ஒரு முழுமையான வாழ்விற்குள் வந்தது போலிருந்தது.. இத்தனை நாள் அவன் அனுபவித்த தனிமை இப்போது ஓடியிருந்தது.. தங்கம்மை என்ற ஒருத்தி அவனோடு இல்லையெனில் அதை தீணாவால் நினைத்தும் பார்க்கக் கூட முடியவில்லை..

எங்கும் அவள்.. எதிலும் அவள்..

அப்படிதான் ஆகிப்போனான்..

அவளோ அதற்குமேலே.. அவன் காட்டும் காதலில் இன்னும் இன்னும் என்று அவன்மீது பித்தாகிப் போனாள்.

தீனா.. தீனா.. தீனா.. தான்..

எப்போது பார் அவன் இருக்கும் நேரமெல்லாம் ‘ஏங்க… என்னங்க..’ என்று எதையாவது பேசி பேசி அவனை சுற்றிக்கொண்டே தான் இருப்பாள்.

அவளைப் பொருத்தமட்டில் இந்த வாழ்வு அவளுக்குப் போதும்.. தீனாவிற்கோ இதுவே அவனுக்குக் கிடைத்த பொக்கிசமாய் எண்ணினான்..

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அப்படித்தான் நகர்ந்தது.. எப்போதடா வேலை முடிந்து வருவான் என்று அவளும், எப்போதடா வேலை முடிந்து வீடு செல்வோம் என்று அவனும் அவர்களின் விருப்பங்களுக்குள் ஓடிக்கொண்டு இருக்க, ஊரில் இருந்து ரோஜா, சங்கர் மற்றும் ப்ரித்வி இவர்களை பார்க்க வருவதாய் சொன்னார்கள்.  

சங்கர் ட்ரைனிங் முடித்து வந்திருக்க, இவர்களை பார்க்கவேண்டும் என்று வந்தனர்.. அவனுக்குமே கூட சென்னைக்கு தான் மாற்றலாகி இருந்தது.

அதனை தீனாவிடம் சொல்ல “அப்போ எல்லாரும் ஒண்ணா இங்கவே இருக்கலாம்..” என்று தீனா சொல்லவும்,

“எதுக்குடா… நீயும் நானும் ஏதாவது சண்டை போடுவோம்… தங்கம்மை உன்னை ரூம்குள்ள வரக்கூடாது சொல்லுவா..” என்று ரோஜா பட்டென்று சொல்லிவிட,

“இன்னுமா இது…” என்றுதான் பார்த்தனர் இருவரும்..

“ஹேய்!! நான் சும்மாதான் சொன்னேன்… நான் என் புருசனோட தனியா இருக்கனும்பா..” என்று ரோஜா சொல்லிட, தங்கம்மை எதுவுமே சொல்லவில்லை..

சங்கர் கூட கேட்டான் “என்ன தங்கம் எதுவுமே பேசாம இருக்க..” என்று..

“இவங்க ரெண்டு பேர் பேசுறப்போ நான் என்ன சொல்றதுண்ணா..” என்றவள் ப்ரித்வியை கொஞ்சிக்கொண்டு இருக்க,

தீனாவோ “அப்போ இதே ஏரியால வீடு பார்க்கலாம்..” என்றான்..

“இதுவேனா செய்..” என்று ரோஜா சொல்ல, அடுத்த இரண்டு நாட்களும் சங்கரும் ரோஜாவும் வீடு பார்க்கும் வேலையில் இறங்க, தங்கம்மை தான் ப்ரித்வியை பார்த்துக்கொண்டாள்.

தீனாவிற்கு இது போதாதா…

அன்றைய தினம் அவனும் சீக்கிரமே வந்துவிட, சங்கரும் ரோஜாவும் ப்ரித்வியை விட்டுவிட்டு வெளியே சென்றிருக்க தீனா ப்ரித்வியை வைத்து கொஞ்சிக்கொண்டு இருக்க, வீட்டின் காலிங் பெல் அடித்தது.

“நீங்க இருங்க நான் போய் பார்க்கிறேன்..” என்றவள், கதவு திறக்க “மேம் கொரியர்..” என்று வந்தவர் சொல்ல,

“தீனதயாளன்..” என்றும் பெயர் கேட்க, “நான்  Mrs.. தீனதயாளன் தான்..” என்றுசொல்லி தங்கம்மை தான் கையெழுத்துப் போட்டு வாங்கினாள்,

அவனுக்குத் தான் அலுவல் விசயமாய் எதுவோ வந்திருந்தது. ஆனால் தீனாவிற்கோ அவளின் ‘Mrs. தீனதயாளன்..’ மனதை வருடிச் செல்ல, பார்வையோ அவளையே தான் தொடர்ந்துகொண்டு இருந்தது..

தன்னை அவளின் அடையாளமாக்கிக் கொண்டாள்.

வாழ்வில் ஒருத்தியால் அவமானங்கள் சந்தித்த ஒருவனுக்கு,  இந்த உணர்வு இப்படியானதொரு நிமிர்வு கொடுக்கும் என்று அவன் மட்டுமே அறிவான்..

தங்கம்மை, என் வாழ்வு என் உரிமை என்றெல்லாம் குரல் எழுப்பவில்லை. அவளுக்கு அமைந்த வாழ்வை அமைதியாய் அவள் அவளின் விருப்பத்திற்கு மாற்றிக்கொண்டாள். மாறியும்கொண்டாள்..

தீனதயாளன், ஒருமுறை தோல்வி கண்டு, பின் மனம் குழம்பி தெளிவற்று இருந்தாலும் தங்கம்மையின் அன்பில் அவனும்தான் தன்னை தெளிவுபடுத்தி, வாழ்வை மேம்படுத்திக்கொண்டான்..                      

“தங்கம்மை..” என்று அவனின் உதடுகள் உச்சரிக்க, அவளோ ப்ரித்வியை தூக்கிக்கொண்டு போக,

“எங்க போற நீ..” என,

“அவனுக்கு ட்ரெஸ் மாத்தனும்..” என்றபடி அறைக்கு தூக்கிச் சென்றவள், அவனுக்கு உடை மாற்ற, அவள் எப்போதும் பாடும் பாடல் தான் அவள் இயல்பில் பாடினாள்,

‘சின்ன குட்டி மைனரு..

செல்ல குட்டி டவுசரு..’

என்று அவனின் குட்டி உடைகளை கையில் வைத்து லேசாய் ஆட்டியபடி ப்ரித்வி பார்த்து சிரித்தபடி பட, அவனும் சிரிக்க,

“தோடா.. இது பாட்டா…” என்று தீனா நினைத்தவன், அன்றைய இரவில் “எனக்கும் ஒரு பாட்டு பாடு..” என்றான் வீம்பாய்..

“என்னது??!!” என்று தங்கம்மை புரியாது கேட்க,

“அதான் அவனுக்கு எல்லாம் பாடின.. என்னிக்காவது எனக்கு ஒரு பாட்டு பாடி இருக்கியா..” என்று இப்போதும் பிகு செய்ய,

“ஏங்க.. அவன் கொழந்தைங்க..” என்று தங்கம்மை சொல்ல, “புருசன்தான் பொண்டாட்டிக்கு முதல் குழந்தை..” என்றான் இவனும்..

“அட கடவுளே..” என்று கை வைத்தவள் “வர வர நீங்க ரொம்ப மோசம்…” என்றுசொல்லி படுக்க,

“ஆமா மோசம்தான் போடி..” என,

“இன்னொரு தடவ போ டி சொன்னீங்க நான் போய் ஹால்ல படுதுப்பேன்..” என்று அவள் சொல்ல,

“என்னது??! எங்க திரும்ப சொல்லு.. சொல்லு சொல்லு.. போவியா நீ..” என்று கேட்டபடி அவளை அணைத்தவன், தன்னோடு சேர்த்து இறுக்கி,

“போவியா நீ…??!” என்று கேட்டவன் கொஞ்சம் வன்மையாகவே அவளை முத்தமிட், அவனின் அணைப்பும், அவனின் தீண்டலும்  வலித்தாலும், அது தங்கம்மைக்கு பிடித்தும் இருக்க, அவளுமே அவனை தன்னோடு இறுக்கியபடி,

“விலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலே…”  என்று பாட,

“ம்ம் அது..” என்று தீனா சொன்னபடி மெதுவாய் அவனின் பிடியை தளர்த்தியவன், இப்போது இதழ்களால் அணைக்க,  

“எதற்கு இடைவெளி என்றுதான் இதயம் கேட்கிறதே…” என்று அப்போதும் தங்கம்மை பட, அடுத்து அவர்களுள் இடைவெளி என்பது இல்லாது தான் போனது..

Advertisement