Advertisement

                                               தங்கம்மை – 9

தங்கம்மைக்கு தீனா ஏன் இத்தனை நேரம் அழைக்கவில்லை என்று யோசனை இருந்தாலும், வெகு நாளைக்கு பிறகு பிறந்த வீட்டிற்கு வந்திருப்பதால் அம்மா அண்ணன் அண்ணியோடு பேசிக்கொண்டு இருந்தாள்.

பாரிஜாதத்திற்கு மகளின் முகத்தினில் இப்போது இருக்கும் தெளிவு கண்டு நிம்மதி.

அன்று அவள் போனில் அழவும், என்னவோ ஏதோ என்று எண்ணித்தான் அங்கே போனார். சங்கர் மூலமாய் தீனாவை ஓரளவு அறிந்திருந்தாலும், மகளின் வாழ்வு என்று வருகையில் யாராகா இருந்தாலும் பெற்றவர்களுக்கு கேள்விகள் பிறக்கும் தானே??!!

இப்போது அக்கவலை சற்று மட்டுபடுவதாய் இருக்க “என்னம்மா அப்படியே பார்த்துட்டு இருக்க??!!” என்று தங்கம் கேட்க,

“ம்ம் ஒண்ணுமில்ல தங்கம்.. நீயும் இப்படி வந்துகூட நாளாச்சு..” என,

“நாளாச்சா ?!! மறுவீட்டுக்கே சும்மா காலைல வந்துட்டு சாயந்தரம் கிளம்பிட்டாங்க..” என்று சுப்ரஜா சொல்ல,

“இப்போ என்ன அண்ணி. அடுத்து அவர் வர்றபோ வந்து தங்குறோம் போதுமா??” என்றாள் தங்கம்மையும்.

தினேஷோ “அதெல்லாம் நீயா எதுவும் சொல்லிக்க வேணாம்.. போக போக எல்லாம் தானா பழகும்..” என, அப்போதுதான் சரியாய் தீனா அழைத்தான்.

‘அவர்தான்..’ என்றவள், போனை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி வந்து “என்னங்க??!!” என்று சொல்ல,

“என்ன என்னங்க??!! எங்க டி போன நீ..” என்றான் கோபமாய்..

‘எங்க போன வா??!!’ என்று யோசித்தவள், “நீ.. நீங்க எங்க இருக்கீங்க??!!” என்று கேட்கும்போதே, வந்திருப்பானோ என்று ஆவலில் லேசாய் இதழ்கள் நடுங்கியது.

“ம்ம்ம் அது எதுக்கு உனக்கு.. நான் வரலைன்னா கிளம்பி போயிடுவியா??!! சொல்லனும்னு எல்லாம் தோணாது அப்படிதானே.. வர வரைக்கும் வெய்ட் பண்ணவெல்லாம் தோணாது..” என்று கத்த,

‘அச்சோ…’ என்றுதான் ஆனது தங்கம்மை.

“என்ன டி பதில் பேசு..”   என்று அதட்ட, “அ.. அது.. சாரி.. நீங்க வருவீங்கன்னு தெரியாது..” என,

“அப்போ ஏன் சொல்லலை..” என்றான் பதிலுக்கு..

என்ன பேசினாலும் தீனாவின் கோபம் அடங்குவதாய் இல்லை. ஆவலாய் வந்தவனுக்கு ஏமாற்றம் கொடுத்த கோபம் இது.

“சொல்லத்தான் கூப்பிட்டேன்.. நீங்க தானே கால் யூ லேட்டர்னு மெசேஜ் பண்ணீங்க??!!” என்று தங்கம்மை இறங்கி வந்து பேச,

“அப்போ பதிலுக்கு நீயும் மெசேஜ் பண்ணிருக்க வேண்டியதுதானே.. சர்ப்ரைஸா வந்து நிக்கனும்னு வந்தா.. நீ இல்ல.. போயிட்ட போ..” என்று இப்போதும் சொல்ல, நிஜமாகவே தங்கம்மைக்கு கொஞ்சம் குற்றவுணர்வாய் தான் போனது.

‘மெசேஜ்ல சொல்லிருக்கலாமோ..’ என்று தோன்ற,

“சரி கோவிக்காதீங்க.. நான் இப்போ வர்றேன்..” என, “நீ என்னவோ பண்ணு போ..” என்று தீனா சொல்ல,

“நான் தான் வர்றேன் சொல்றேனே..” என்று தங்கம்மையும் சொல்ல,

“நான் வர்றப்போ நீ இல்லைதானே..” என்றான் திரும்ப முதலில் இருந்து..

“ஷ்..!!!” என்றவள், பதிலே சொல்லாது அமைதியாய் இருக்க, “அப்போ பேசவும் மாட்டியா???!!” என்று தீனா கேட்கவும்,

“நீங்க வைங்க நான் வர்றேன்..” என்றுவிட்டாள்.

ஆனால் வந்ததுமே கிளம்புகிறேன் என்றால் அது நன்றாகவும் இருக்குமா என்ன??!! சொன்னால் புரிந்துகொள்வார்கள் தான்.. இருந்தாலும் தங்கம்மைக்கு சங்கடமாய் இருந்தது..

மற்ற கணவன் மனைவி போல் ஓர் இயல்பான வாழ்க்கை புரிதல் இருந்திருந்தால், “நீங்க இங்க வாங்க..” என்றோ, இல்லை “நாளைக்கு காலைல வர்றேன்..” என்று உரிமையாய் சொல்லியிருக்கலாம்..

இப்போதுதான் வந்து அரைமணி நேரம் கூட ஆகிடவில்லை. அதற்குள் கிளம்புகிறேன் என்றால் நிச்சயம் இங்கேயும் அனைவரும் சங்கடப்படுவர் என்று நினைக்க, தங்கம்மைக்கு யாருக்கு பார்ப்பது என்று ஒன்றும் விளங்கவில்லை..

அலைபேசியை கையில் வைத்துகொண்டு அப்படியே நிற்க, “என்ன தங்கம்??!!” என்றார் பாரிஜாதம்..

“அது.. அதும்மா.. அவர் வந்திருக்காராம்..” என,

“ஓ!! அப்படியா!!” என்று அனைவரும் சொல்ல, “ம்ம் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லலையாம்…” என்றும் சொல்ல,

சுப்ரஜாவோ “இப்போ என்ன நீ போகனுமா??!!” என்றாள் கிண்டலாய்..

வாயை திறக்காது ‘ஆம்..’ என்றுமட்டும் தலையை தங்கம்மை ஆட்ட,  பாரிஜாதம் மகளின் முகத்தினை ஒருநொடி ஆழப் பார்த்தவர்,

“சரி நீ கிளம்பு..” என,

“ம்மா..!!!” என்றாள் சிணுங்கலாய்..

“இருன்னு சொன்னாலும் உன்னால நிம்மதியா இருக்கவும் முடியாது.. நீ போய்ட்டு நாளைக்கு மாப்பிள்ளையோட வா..” என்றவர்,

“அவளை விட்டுட்டு வா தினேஷ்..” என,

அவனோ “ம்மா அவளுக்கு இருக்கணும்னா இருக்கட்டுமே.. நாளைக்கு போய் மாப்பிள்ளையை நான் கூட்டிட்டு வர்றேன்..” என,

“டேய்.. அவ முகம்பார்த்தா தெரியலையா.. போகணும்னு முடிவு பண்ணிட்டு பேருக்கு நம்ம மூஞ்சியப் பார்த்து நிக்கிறா…” என்று அம்மா சிரித்துவிட,

“அம்மா போதும் ரொம்பத்தான் கிண்டல் பண்ணாதீங்க..” என்ற தங்கம்,

“நான் கோபமா எங்க வீட்டுக்கு போறேன்..” என, இப்போது அனைவருமே கிளம்பிவிட்டனர்..

தினேஷோ “மோச புடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாது…” என, “டேய் அண்ணா வேணாம்..” என்று மிரட்டியவள்,

“நான் ஆட்டோல போயிப்பேன்..” என்று பிகு செய்ய,  சுப்ரஜாவோ “கிளம்புறேன்னு சொல்லி சொல்லி இன்னும் நகர்ந்த மாதிரி தெரியலையே..” என்று மேலும் வார,

“ச்சே நீங்க எல்லாம் ரொம்ப மோசம்..” என்று சந்தோசமாய் கோபித்துக்கொண்டே அண்ணனோடு வீடு வந்து சேர்ந்தாள் தங்கம்மை..

சந்தோசமாய் இருந்தது. தனக்காக வந்திருக்கிறான் என்று. அவனின் கோபம் தானே. எப்படியும் சமாளித்து விடலாம் என்று தோன்ற,  போனவள் திரும்பி வரவுமே அங்கே எல்லாரும் என்னவென்று தான் பார்த்தனர்.

“என்னம்மா??!!” என்று குருசாமி கேட்க,

தினேஷ் தான் “மாப்பிள்ளை வந்திருக்காருன்னு கிளம்பிட்டா மாமா…” என்றவன் “நாளைக்கு அங்க வாங்க..” என்று தீனாவிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட,  

“ஏன்டா நாளைக்கு கூட நீ போய் கூட்டிட்டு வந்திருக்கக் கூடாதா…” என்று செவ்வந்தி கேட்க,

“நான் எதுவுமே சொல்லலை..” என்று முறுக்கிக்கொண்டான்.

“அத்தை.. நானா தான் வந்தேன்..” என்று தங்கம்மை சொல்ல,

ரோஜாவோ “ஆனாலும் நீ இவனுக்கு ரொம்ப பாக்குற தங்கம்மை.. அதான் இவ்வளோ ஆடுறான்..” எனும்போதே, ப்ரித்வி அம்மாவின் கையில் இருந்து அத்தையிடம் பாய,

“வாடா செல்லம்..” என்று தங்கம்மை தூக்கிக்கொள்ள, தீனாவிற்கு கடுப்பாக இருந்தது.

இருந்திருந்து வந்தால் இப்போது எல்லாம் குறை சொல்கிறார்கள் என்று. அதிலும் தங்கம்மை வந்ததில் இருந்து முகத்தை முகத்தை தான் பார்க்கிறாளே தவிர ஒருவார்த்தை பேசவில்லை.  அதெல்லாம் எரிச்சலாய் இருக்க மேலே வந்துவிட்டான். 

“போ போ.. போய் அவனைப் பாரு..” என்று ரோஜா சொல்ல,

“சரிண்ணி…” என்றவள் ப்ரித்வியை தூக்கிக்கொண்டே தான் போனாள்.

குழந்தையை கொஞ்ச நேரம் வைத்திருந்தால், அவனின் கோபம் எல்லாம் கொஞ்சம் சமன்படும் என்று தோன்ற, அறைக்குச் சென்றவள், “குட்டி மாமா கூட இரு…” என்று சொல்லி, தீனாவின் மடியில் அவனை அமர வைத்தவள்,

“பார்த்துக்கோங்க..” என்றுவிட்டு, உடை மாற்றச் செல்ல, தீனா ஒன்றும் சொல்லவில்லை.

ப்ரித்வி அவனைப் பார்த்து சிரிக்க, “இப்போ சிரிடா.. வந்ததுமே தூக்கினதுக்கு அழுத.. படவா..” என்று கொஞ்ச, ப்ரித்வியோ இன்னமும் சிரிக்க,

“எல்லாம் உன்னால வந்ததுதான்டா..” என்று இன்னும் கொஞ்சம், தங்கம்மை உடை மாற்றி வந்தவள்,

“அவன்கிட்ட சொன்னா அவனுக்கு என்ன தெரியுமாம்..??!!” என்றாள்தங்கம்மை சலுகையாய்.

தீனா பதில் சொல்லாது இருக்க, “என்னங்க… உங்கக்கிட்ட தானே பேசுறேன்..” என்று தன்மையாகவே சொல்ல,

“ஆமாமா… ரொம்பத்தான்.. போ டி…” என்றவன், ப்ரித்வியை தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் அமர, அவனோ உறக்கம் வந்துவிட்டது போல, கண்ணை கசக்கினான்..

“இப்போ நான் என்னடா பண்ணிட்டேன்..” என, “அவனுக்குத் தூக்கம் வந்திடுச்சு.. குடுங்க கொண்டு போய் கொடுத்துட்டு வர்றேன்..” என்று தங்கம்மை கை நீட்ட,

“எனக்கும் கொண்டு போய் கொடுக்கத் தெரியும்..” என்றவன், பிள்ளையை தூக்கிக்கொண்டு போய் ரோஜாவிடம் கொடுத்துவிட்டு வந்து திரும்ப கட்டிலில் அமர,                                  

“நீங்க பண்றது உங்களுக்கே நல்லாருக்கா??!!” என்றாள் தங்கம்மை.

“ஏன் இப்போ நல்லா இல்லாம என்ன பண்ணிட்டேன் நான்..” என்றான் இன்னும் முறைப்பு குறையாது.

“ஒன்னும் பண்ணலை தான் ஆனா.. இதெல்லாம் உங்களுக்கே ஒரு ரெஸ்ட்லெஸ்னஸ் கொடுக்குது தானே.. ஒன்னு இந்த எக்ஸ்ட்ரீம் இல்லை அந்த எக்ஸ்ட்ரீம்..” என,

“எது எது எந்த எக்ஸ்ட்ரீம்னு நீயே சொல்லிடு.. என்னால இப்போ ரொம்ப எல்லாம் யோசிக்க முடியலை..” என்றவன் அப்படியே படுத்தும்கொள்ள,

“கண்ணை தொறந்து என்னை பாருங்க..” என்றாள் தங்கம்மை..

“முடியாது போ.. எவ்வளோ ஆசையா வந்தேன்.. ஆனா நீ வந்ததுமே அந்த பொடிச தானே கொஞ்சின நீ..” என்று பிடிவாதம் செய்ய,

“ஹா ஹா பொறாமை…” என்று சிரித்தவள், பின் மெதுவாய் அவனின் தலை கோதி “ஏன் உங்களை நீங்களே இவ்வளோ டென்சன் பண்ணிக்கிறீங்க??!!” என,

“எனக்கும் அதுதான் தெரியலை…” என்றான் உண்மையை உணர்ந்து..

“ம்ம்..” என்றவள், விளக்கணைத்து வந்து படுக்க, “சரி இப்போ நான் வந்திட்டேன் தானே.. இப்போ ஹேப்பியா..” என, “அதுவும் தெரியலை..” என்றான்..

உண்மையும் அதுதான்.. மனது சந்தோசமாய் உணர்கிறது தான். ஆனால் அது முழுமையாய் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். தீனா அமைதியாய் இருக்க,

“இதைதான் சொன்னேன்.. ஒன்னு அந்த எக்ஸ்ட்ரீம் இல்லைன்னா இந்த எக்ஸ்ட்ரீம்…” என, அப்போதும் தீனா அமைதியாய் இருக்க

“நம்ம சேர்ந்து வாழ முடியாதுன்னு சொன்னீங்க.. ஒன்னு நான் போகணும் இல்லை நீங்க போகணும்னு தான் சென்னைக்கும் போகணும்னு கிளம்பினீங்க.. அடுத்து இப்போ நான் இல்லைன்னு இவ்வளோ ஆர்பாட்டம்.. இதெல்லாம் உங்களை நீங்களே படுத்திக்கிறது தானே…” என்று தங்கம்மை கேட்க,

“ம்ம்ச்.. எனக்கு நிஜமா என்ன செய்றதுன்னு புரியலை.. நான் மேரேஜ் பண்ணிக்கனும்னு எல்லாம் நினைக்கலை.. போதும்டா சாமின்னு இருந்தேன்.. ஆனா வீட்ல பண்ணிவச்சிட்டாங்க.. எது எப்படின்னாலும் வாழணும்னு நினைக்கிறப்போ, நான் க்ராஸ் பண்ணி வந்த முக்காவாசி பேர் என்னவோ ‘புது பொண்ணு என்ஜாய் பண்ணு..’ அப்படிங்கிற மாதிரியே பேசினா.. எனக்கு அதுவே ஒருமாதிரி அசிங்கமா போச்சு தங்கம்மை…” என,

தங்கம்மைக்கு அப்போதுதான் ஓரளவு அவனின் பிரச்னை என்னவென்று புரிந்தது.. யாரும் வெறும் உடல் சுகத்திற்கு மட்டும் இரண்டாவாதாய் திருமணம் செய்வது இல்லையே??!!!

அவரவர் வாழ்வில் ஆயிரம் இருக்கும்.. சொல்பவர்கள்.. கிண்டல் செய்பவர்கள் எல்லாம் யாரும் உடன் வந்து நிற்கப் போவதில்லை தானே.. கஷ்டமோ நஷ்டமோ நம் வாழ்வை நாம்தான் வாழ வேண்டும்..

தங்கம்மை சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் “சொன்னவங்க எல்லாம் நம்ம வாழ்க்கை வாழ முடியாது..” என்றவள்,

“இப்போ சொல்லுங்க.. உங்களுக்கு என்னோட வாழ்றது கஷ்டமா இருக்கா?? இல்லை அன்னிக்கு நமக்குள்ள அப்படி ஆகிடுச்சுன்னு, அதனால என்னை விட முடியாதுன்னு நீங்க..” என்று அவள் பேசும்போதே,

“ஏய் என்ன பேச்சு இது??!!” என்று அதட்டியபடி எழுந்துவிட்டான் தீனா..

குறைந்த கோபம் இப்போது மீண்டும் கூடிக்கொண்டது.

தங்கம்மை அமைதியாய் இருக்க “உன்னைத்தான் தங்கம்மை.. உனக்கு அப்படியா தோனுச்சு…” என்றவன், அவளை இறுக அணைத்து முத்தமிட்டு,

“சொல்லு டி இப்போ உனக்கு தோணுதா நான் கட்டயாதுக்காக, கடமைக்காக உன்னோட இப்படி இருக்கேன்னு…” என்று கேட்க,

தங்கம்மை அவனைப் பார்த்தவள் “ஒரு கிஸ்ல என்ன கெஸ் பண்ண முடியும்??!!” என்று லேசாய் கண்ணடித்துக் கேட்க,

தீனா வெகுவாய் முறைத்தவன், இன்னும் வன்மையாய் முத்தமிட்டு “இப்போ..??!!” என, தங்கம்மை எதுவோ சொல்ல வர, “வேணாம்ம்மா தாயே.. நீ ஒன்னும் சொல்லாத.. உசுப்பேத்தி விட்டு அப்புறம் பேச வந்தது கூட மறந்திடும்..” என்றவன்,

“நான் முழு மனசாத்தான் வாழறேன்…” என்று கடுப்பாய் கூறி மீண்டும் படுத்துக்கொண்டான்..

“அதை இப்படி உர்ருன்னு சொல்லாட்டி என்னவாம்???!!” என்றவளோ “அப்புறம் ஏன் தேவையில்லாம இப்படி நீங்க டென்சன் ஆகணும்??!! பழைய விஷயங்கள் எல்லாமே பழசாகிடுச்சு.. அது ஓரமா இருந்துட்டு போகட்டும்.. தெரிஞ்சோ தெரியாமலோ அதைப்பத்தின ஏதாவது நம்ம கண்ணுல பட்டா, நமக்கு இது தேவையேயில்லைன்னு கடந்து வந்திடனும்..” என,

“எனக்கு கிளாஸ் எடுக்காத நீ..” என்றான்..

என்ன சொல்லியும் தீனாவின் இந்த கோபம் மட்டும் குறையவேயில்லை.. கடைசியில் என்ன கேட்டுவிட்டாள் ‘விட முடியாது என்பதற்காக??!! இவளோடா??!!’ நினைக்கவே அவனுக்கு எப்படியோ இருந்தது..

“ச்சே…” என்றபடி மெத்தையில் குத்தியவன் “போ டி நான் வந்திருக்கவே கூடாது..” என, “இப்போ என்ன நான்வேணா கிளம்பிடவா??!!” என்று அவளும் கேட்க,

அவளைத் திரும்பிப் பார்த்தவன் “போ.. போயேன்.. போய்த்தான் பாரேன்…” என்றபடி, அவளை மீண்டும் இழுத்து தன்மீது போட்டுக்கொண்டு அணைத்துக்கொள்ள,

“இப்படி பண்ணா எப்படி போறதாம்??!!” என்றாள் தங்கம்மையும்..

“முதல் நாளே போகாதவ.. இப்போ போவியா நீ??!!” என்றபடி அவளின் கன்னத்தினை லேசாய் கடித்தவன்

“உன்னை சேலை கட்டுன்னு சொன்ன, எதுக்கு நைட்டி மாத்தின நீ..” என்று அதற்கும் ஒரு பிடிபிடிக்க,

“இதென்ன…??!!” என்று பார்த்தவள் “ஆமா நான் ஏன் போகணும்.. உங்களோட வாழத்தான் வந்தேன்.. நீங்க உங்களையே குழப்பிக்கிட்டா நான் ஒன்னும் செய்ய முடியாது.. அதுக்காக உங்கக்கிட்ட வந்து நான் கெஞ்சிட்டும் நிக்க முடியாது..” என்றவள்,

“நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.. அதையும் இதையும் எதுவும் யோசிக்கவே வேணாம்..” என,

இப்படியே பேச்சு நீண்டு கொண்டே போனது.. எப்போது உறங்கினார்கள் என்று இருவருக்கும் தெரியாது..

ஆனால் தீனாவிற்கு எதோ ஒரு அமைதி கிட்டியது நிஜம்.. அது தங்கம்மையின் வார்த்தைகள் கொடுத்தவையா?? இல்லை அவளின் அருகாமை கொடுத்ததா?? அந்த ஆராய்ச்சிக்கு எல்லாம் அவன் இறங்கிட நினைக்கவில்லை..

இருந்தாலும் மனதில் தோன்றிய அந்த அமைதியை அனுபவித்தான்..

மறுநாள் காலை உணவு முடிந்ததுமே அவனேதான் கேட்டான் “உங்கம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாமா??!!” என்று..

தங்கம்மையோ “சாயங்காலம் போயிட்டு.. நைட்டு அங்க இருந்திட்டு நாளைக்கு மதியம் சாப்பிட்டு வருவோமா??!!” என, “ம்ம் வந்தும் நான் ஊருக்கு போகணுமே..” என்றவன் பின் சரி என்றுவிட்டான்..

தீனா ஊருக்கு கொண்டு செல்லவென்று வேறு உடைகளை எல்லாம் தங்கம்மை எடுத்து வைக்க, “ம்ம் இந்த சட்டை கூட எனக்கு ஒழுங்கா மடிக்க வரலை தெரியுமா??!!” என்றவனைப் பார்க்க நிஜமாகவே பாவமாய் போனது தங்கம்மைக்கு..

தீனா வீட்டு சூழலுக்கு அப்படி பழகியிருந்தான். வேலைக்குச் செல்வது மட்டுமே அவன் செய்யும் வேலை. மற்றது எல்லாம் இத்தனை நாள் செவ்வந்தி பார்த்துக்கொண்டார். பின் இப்போது தங்கம்மை..

தங்கம்மை “எல்லாம் சரியாகிடும்..” என்று மட்டும் சொல்லிவிட்டு, அப்படியே பொழுதும் நகர்ந்தது. மாலை போல்  தங்கம்மையின் பிறந்த வீடு சென்று, தங்கிவிட்டு பின் மறுநாள் மதியம் மேல் வந்து, அன்றைய தினம் மாலையே தீனா மீண்டும் சென்னை கிளம்பிவிட்டான்.

சென்னை வந்ததுமே அவன் செய்த முதல் வேலை, வீடு பார்க்க ஏற்பாடு செய்தது தான்.. குருசாமியும் மகனிடம் சொல்லித்தான் அனுப்பியிருந்தார்.

“வீடு பார்க்க ஏற்பாடு பண்ணிடு தீனா.. அந்த பொண்ணு எத்தனை நாளைக்கு தனியா இருக்கும்..” என்று..

நாட்கள் இப்படியே செல்ல, ஓரளவு அவன் நினைத்தது போல் வீடு கிடைத்துவிட்டது.. சென்று நேரில் பார்த்தவன், புகைப்படங்கள் எடுத்து தங்கம்மைக்கு அனுப்ப, அவளுக்கும் அது பிடித்துத்தான் இருந்தது.

மனதில் ஒரு புது உற்சாகம்.. புதிய இடம்.. புதிய சூழல்… தனியாய் தீனாவோடு ஒரு வாழ்வு என்று..

செவ்வந்தியிடம் சொல்ல, அவரோ “அடுத்த வாரம் அவன் வர்றப்போ பொருள் எல்லாம் டெம்போல போட்டு கொண்டு போகட்டும்.. அடுத்து ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம எல்லாம் போய் பால் காய்ச்சிக்கலாம்..” என்றிட, தீனாவிற்கும் சரி தங்கம்மைக்கு சரி மனது அத்தனை சந்தோசமாய் இருந்தது.

தீனா புதிய வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்திட, அந்த வாரம் வந்தவன், அம்மா சொன்னது போல் அங்கே தேவையான பொருட்களை எல்லாம் மூட்டைக்கட்டிக்கொண்டு போனான். இவர்கள் எல்லாம் அதற்கு அடுத்த வாரம் சென்று பால் காய்ச்சுவதாய் இருக்க, நாட்கள் வேகமாய் செல்வது போல் இருந்தது தங்கம்மைக்கு.                  

தீனாவும் மறுவாரம் திரும்ப வந்துவிட்டான். தங்கம்மையோ “எப்போடா அங்க வருவோம்னு இருக்கு..” என்று வாய்விட்டே சொல்லிட,

“ஆமா… திங்க்ஸ் எல்லாம் கூட நானே ஓரளவு செட் பண்ணிட்டேன்.. உனக்கு வந்ததும் ரொம்ப எல்லாம் வேலை இருக்காது..” என்று தீனா சொல்ல, இருவரும் எப்போதடா என்று நேரம் பார்த்து காத்திருக்க,   இப்படியாகும் என்று யாரும் நினைக்கவில்லை..

வீட்டினர் அனைவருக்குமே மனது சங்கடமாய் போய்விட்டது. இன்னமும் இரண்டு நாளில் சென்னை கிளம்புவதாய் இருக்க, செவ்வந்தி இப்படி கீழே விழுந்து காலை உடைப்பார் என்று யாரும் எண்ணவில்லை. மருத்துவமனையில் தான் இருந்தனர்.

சங்கருக்கு ட்ரைனிங் போட்டிருக்க அவன் வெளியூரில் இருந்தான். ரோஜா பிள்ளையை வைத்துகொண்டு வீட்டினில் இருக்க, அந்த இரண்டு நாட்களும் அப்பாவும் மகனும் தான் மருத்துவமனையில் மாறி மாறி இருந்தனர்.

தங்கம்மைக்கு மூன்று வேலையும் சமைத்து, அங்கேயும் கொடுத்துவிட்டு, பின் வீட்டிலும் மற்ற வேலைகள் பார்க்கவே நேரம் போனது. குருசாமி வந்து குளித்துவிட்டு, மதிய சாப்பாடு வாங்கிக்கொண்டு மருத்துவமனை செல்ல அடுத்து தீனா வந்தான்.

வந்தவன் அமைதியாய் இருக்க, தங்கம்மையோ “ஒன்னும் வொர்ரி பண்ணிக்காதீங்க.. கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்..” என,

“ம்ம்.. நீ எப்படி சமாளிப்ப??!!” என்றான்.

அப்போது தான் அவளுக்கு முழுதாய் விளங்கியது. சென்னை செல்ல முடியாது என்று. இந்த இரண்டு நாட்களும் அதைப் பற்றிய சிந்தனை சிறிதும் அவளுக்கு வரவில்லை. செவ்வந்தி நல்லபடியாய் வீட்டிற்குத் திரும்பினால் போதும் என்று இருந்தது.

ரோஜா கை குழந்தையை வைத்துக்கொண்டு அவளாய் எதுவும் செய்யவும் முடியாது.. செவ்வந்தியால் இப்போது எழுந்து நடக்கவும் முடியாது. ஆக தங்கம்மை இங்கே தான் இருக்கவேண்டும் என்று..

முகத்தினில் எதையும் காட்டிக்கொள்ளாது “நான் பார்த்துப்பேன்..” என,

“ம்ம் கூட ஆள் போட்டுக்கலாம்.. நீ ரொம்ப எல்லாம் எதுவும் இழுத்துப் போட்டுக்காத..” என்றவன், பின் என்ன நினைத்தானோ “சாரி தங்கம்மை..” என்றான்.

‘இது எதுக்கு??!!’ என்று தங்கம்மை பார்க்க,

“என்னை கல்யாணம் பண்ணி நீ ஒருநாள் கூட நிம்மதியா இல்லை..” என, “இப்போ நான் நிம்மதியா இல்லைன்னு சொன்னேனா??!!” என்றாள் அவளும்..

“பார்த்தாலே தெரியுதே.. உன்னோட முகம் இந்த ரெண்டு நாள்ல டல்லடிச்சு போச்சு..” என, “அது சரி.. கால் ஆட்டிட்டே உட்கார்ந்து இருந்தா சரியாகிடுமா??!” என்றவள்,

“குடும்பம்னா எல்லாமேத்தான் இருக்கும்.. உங்களுக்கு நான் பொண்டாட்டி மட்டும் இல்லை.. இந்த வீட்டுக்கு மருமகளும் கூடத்தானே.. அதுக்கான பொறுப்புகள் எல்லாம் நான் செய்யாம வேற யார் செய்வா??!!” என்று கேட்க, தீனாவின் மனது மிக மிக அமைதியாகிப்போனது..

‘இவளை எனக்குக் கொடுத்ததற்கு மிக மிக  நன்றி ஆண்டவா…’ என்று சொல்லிக்கொண்டான்.  

Advertisement