Advertisement

                           தங்கம்மை – 8

இரண்டு வாரம் ஆகியிருந்தது தீனதயாளன் சென்னை சென்று. அனைத்தும் நன்றாகிடும் என்ற எண்ணம் இருவருக்கும் வந்த நேரம், மீண்டும் ஒரு மனக்குழப்பம் வந்திட, தீனா அவனுக்குள் சுருண்டு கொண்டான். தங்கம்மைக்கு என்ன கேட்க என்று எதுவும் விளங்கவில்லை.

இன்னமும் அவன் தன் கடந்த காலத்தை பற்றி அவளிடம் பேசும் அளவு எல்லாம் எதுவும் வரவில்லை.. உடல் மட்டுமே உறவு கொண்டாடிக்கொண்டு இருக்க, உள்ளம் இரண்டும் பிணக்குகள் கடந்து ஒன்றிட ஆவல் கொண்ட வேலையில், அந்த பிரிவு பத்திரம் இருவரின் மனதையும் சற்று உறுத்தியது நிஜமே..

அதிலும் தீனாவை நிறையவே..

அன்றைய இரவு அவன் வெகு நேரம் உறங்கவேயில்லை என்பது நன்கு அறிவாள் தங்கம்மை. பின் அவள் மட்டும் எங்கே உறங்குவது??!!

கண்கள் மூடி,  நெற்றி சுருக்கி, உடல் விரைத்துப் படுத்திருந்தவனைக் காண, கஷ்டமாய் தான் இருந்தது அவளுக்கு. ஆனாலும் தான் ஏதாவது கேட்கப் போக அது இன்னமும் அவனை நோகடிக்குமோ என்று எதுவும் பேசினாள் இல்லை. உறங்க முடியாது புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள், அவனின் அவதி தாங்காது

“அமைதியா தூங்குங்க…” என்றுசொல்ல, மெதுவாய் அவனின் நெஞ்சில் தட்டிக்கொடுக்க,

“ம்ம் ஒண்ணுமில்ல..” என்று சொன்னாலும், அவனின் கரம் அவளின் கரத்தினை அப்படியே பற்றி அழுத்திக்கொண்டது.

“ஆமா ஒண்ணுமே இல்லைதான்.. சோ நிம்மதியா தூங்குங்க..” என்றவள் கொஞ்சம் நேரம் அப்படியே அவனின் கேசத்தை வருடிக் கொடுக்க, சிறிது நேரம் அமைதியாய் இருந்த தீனா, அவளின் அருகில் இன்னும் ஒண்டிக்கொண்டான்.

ஒண்டிக்கொண்டவனின் அணைப்பு இறுக, தங்கம்மை எதுவும் சொல்லவில்லை. மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை.. அப்படியே இருந்தாள். அவளுக்கு நன்கு அவனின் உணர்வுக்கள் புரிய,

“நான் இப்படியே படுத்துக்கவா??!!” என்று தீனா கேட்க, சட்டென்று அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

என்னவோ அந்த நேரம், அவனின் வேதனை எல்லாம் அவளின் வேதனையாய் மாறியது போல் இருக்க, “ம்ம்..” என்று தலையை ஆட்டியவள், அவனின் கன்னத்தில் இதழ் பதிக்க, தீனா அவளை மேலும் இறுக அணைத்தபடி உறங்கிப்போனான்.

ஆனால் தங்கம்மை வெகு நேரம் உறங்கவில்லை. இந்த மன சோர்வில் இருந்து இவனை எப்படி வெளிக்கொண்டு வர என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். நாளைக்கு கிளம்பியும் விடுவான். அருகில் இருந்தாலாவது பரவாயில்லை. இப்போது அதற்கான வாய்ப்பும் இல்லை.

மனது தீனாவையே நினைக்க, மறுநாள் அவன் கிளம்பும் நேரம் வந்திட, தங்கம்மை பிறந்த வீட்டினர் அனைவருமே வந்திருந்தனர். தீனா கிளம்பும் வரைக்கும் கூட எதுவும் பேசவில்லை.. அறையில் சிறிது நேரம் அவளை அணைத்தபடி நின்றிருந்தான் அவ்வளவே..

பின் கிளம்புகையில் “பார்த்து இரு..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

கார் கிளம்பி வெகு நேரம் வரைக்கும் கூட தங்கம்மை வெளியே நின்றுதான் பார்த்துக்கொண்டு நின்றாள். எப்படியெல்லாமோ வழியணுப்ப எண்ணி கடைசியில் இப்படியா என்று யோசித்து நிற்க,

“இதுக்கு தான் உன்னையும் கூட போ சொன்னோம்..” என்று ரோஜா வர, “அவர் கூப்பிட்டுப்பார் அண்ணி..” என்றாள் உணர்வுகளை மறைத்து.

இப்போது தோன்றியது தானும் சென்றிருக்க வேண்டுமோ என்று. வருகிறேன் என்று சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பான்??!! என்றும் கேள்வி பிறக்க, அக்கேள்வியை தனக்குள் விழுங்கிக்கொண்டாள். இப்படியெல்லாம் நடக்கும் என்று அவள் மட்டும் என்ன கண்டாளா??!!

“அவன் கூப்பிடுறது எல்லாம் இருக்கட்டும்.. ஆனா நீயும் தினமும் கேட்கணும் எப்போ எப்போன்னு சரியா??!!!” என, “சரிண்ணி..” என்று தலையை உருட்டிக்கொண்டாள்.

பாரிஜாதம் “நம்ம வீட்ல வந்து ரெண்டு நாள் இருக்கியா??!!” என்று கேட்டதற்கு,

“இல்லைம்மா இருக்கட்டும்… இன்னொரு நாள் வர்றேன்..” என்றிட,

“எதுவும் பிரச்னை இல்லையே??!!” என்ற அம்மாவிற்கு “எதுவும் இல்லைம்மா..” என்று உறுதியாய் சொல்லிவிட்டாள்.

சுப்ராஜாவோ “உன் முகமே சரியில்லை.. அண்ணா வீக்லி ஒன்ஸ் வருவார்தானே..” என, “வருவார் அண்ணி..” என,

“சரி உனக்கு எப்போ வரணும்னு தோணுதோ சொல்லு.. நான் வந்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்..” என்று தினேஷும் சொல்ல, அனைவர்க்கும் சரி என்பதை தவிர தங்கம்மை வேறொன்றும் சொன்னாள் இல்லை.

அம்மா, அண்ணன் அண்ணி எல்லாம் கிளம்பவும், ஒரு வித சோர்வாய் இருந்தது. அதனைப் போக்க ப்ரித்வியை தூக்கி வைத்துக்கொண்டாள்.    

தீனாவிற்கோ மனது ஒருவித கனமாய் இருந்தது. அங்கே போயும் தனிமைதான். தங்கம்மையை அழைத்து வந்திருக்கலாமோ என்று கூட தோன்றியது. ஆனால் ஆரம்பத்தில் இருந்து வேண்டாம் என்றுவிட்டு இப்போது அவனுக்குத் தேவை என்றதும் மட்டும் வா என்றால்??!!

அது அவளுக்குத் தரும் சரியான மரியாதை அல்லவே.

இனி அவளோடு தான் இந்த வாழ்க்கை என்பது உறுதி.. ஆனால் மனம் திறந்த, நிறைந்த ஒரு வாழ்வாய் இருந்திட வேண்டும்..  அழைத்திருந்தால் வந்திருப்பாள் என்று தெரியும்.. இருந்தாலும் அழைக்கும் தைரியம் வரவில்லை. பழைய நினைவுகள் போக இப்போது தங்கம்மையின் நினைவு..

‘என்னடா இது நிம்மதியா வாழவே முடியாதா…’ என்று நினைக்க, தன் போக்கில் சிந்தித்துக்கொண்டு இருந்தவனுக்கு தங்கம்மையை அழைத்துப் பேசும் எண்ணம் வர, யோசிக்காது அழைத்துவிட்டான்.

ஆனால் அவன் அழைத்த நேரம் பார்த்து தங்கம்மை ப்ரித்வி வைத்திருக்க, ரோஜா அவனுக்கு ஊட்டிக் கொண்டு இருந்தாள். தங்கம்மையின் அலைபேசி மாடியில் இருக்க, இவர்கள் கீழே இருக்க, அழைப்பு வந்தது கூட கேட்கவும் இல்லை. தீனாவோ திரும்ப திரும்ப அழைக்க அது எடுக்கப் படாமலே போக.

தான் அழைத்து எடுக்கவில்லை என்றதும் தீனாவிற்கு கோபம் வேறு வந்தது. அனைத்து உணர்வுகளின் மொத்த உருவமாய் கோபம் வர “ச்சே…” என்று முனங்கிக்கொண்டான்.

‘போன் பண்ண எடுக்க முடியாதாமா??!!’ என்ற கோபம் அவனுள்ளே இருக்க, அடுத்து தங்கம்மை கீழே வேலைகள் முடித்து, உண்டு பின் அறைக்கு வந்து அலைபேசி எடுத்துப் பார்க்க, தீனாவின் அழைப்பு இருக்கிறது என்றதும் திரும்ப அழைத்துவிட்டாள்.

ஆனால் தீனா அப்போது தான் சென்னை கிளை வங்கிக்கு சென்றிருக்க, அவனால் அந்த நேரம் தங்கம்மையின் அழைப்பை எடுத்து பேசிட முடியவில்லை. அவனின் பார்மாலிட்டீஸ் முடிந்து, அவனுக்கு கொடுத்திருக்கும் வீடு வர மேலும் ஒரு மணி நேரம் ஆகிப்போனது.

சுத்தம் செய்து தான் வைத்திருந்தார்கள். இருந்தாலும் என்னவோ அவனுக்கு மனம் ஒப்பவில்லை. உடன் வந்த பியூன் “சார் என்ன வேணும்னாலும் சொல்லுங்க.. நான் வாங்கிட்டு வந்து தர்றேன்…” என,

“நீங்க போங்க நான் பாத்துக்கிறேன்..” என்றுவிட்டான்.

சென்னை அவனுக்குப் புதிது இல்லை. இருந்தாலும் மனதில் இருக்கும் அழுத்தம் அவனை ஒரு இயல்பு நிலையில் நிற்க விடவில்லை. அவன் நினைத்து வந்ததையும் விட சிறு வீடு தான். இருவர் தங்கலாம். ஆனால் அதிக பொருட்கள் எல்லாம் ஆகவே ஆகாது. படுக்கையறையில் ஒரு பீரோ வைத்து கட்டில் போட்டாலே அடுத்து ஆட்கள் போய் வர முடியாது. அப்படி இருந்தது.

சமையல் அறையோ அதைவிட கொஞ்சம் சின்னது.. ஹால்.. ஓரளவு பரவாயில்லை.

‘தங்கம்மை வந்திருந்தா ரொம்ப கஷ்டம்..’ என்று அவனுக்காகவே தோன்ற, அப்போது தான் நினைவு வந்தது அவள் அழைத்தது.

திரும்ப அழைத்தவன் “ஹலோ..” என,  “என்னங்க??!!!” என்றாள் அவளோ உறங்கியபடி..

‘நான் இங்க முழிச்சிட்டு நிக்கிறேன்.. இவ நல்லா தூங்கிட்டு இருக்கா..’ என்று எண்ணியவன் “போன் போட்டா எடுக்க முடியாதா??!! அப்படி என்ன பண்ணிட்டு இருந்த நீ..” என,

“அ.. அது.. கீழ இருந்தேன்..” என்று அவளும் சொல்ல,

“போன் அடிச்சா எடுக்கனும்னு தெரியாதா??!!” என்றான் திரும்ப.

“போன் நம்ம ரூம்ல இருந்ததுங்க..”

“ரூம்ல வச்சிட்டு நீ ஏன் கீழ போன..” என்று தீனா கத்த, ‘இதென்னடா…’ என்று பார்த்தாள் தங்கம்மை..

“உன்கிட்ட தான் கேட்கிறேன்.. ரூம்ல போன் வச்சிட்டு நீ ஏன் கீழ போன..” என,

“அ.. அது.. நீங்க போன் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாதே..” என்று இவளும் சொல்ல,

“ஏன் ஏன் தெரியாது??!! நான் போனே பண்ணமாட்டேன்னு நினைச்சிட்டியா??” என்றவனுக்கு திரும்பவும் கோவம்.

‘இவ எப்படி அப்படி நினைக்கலாம்..’ என்று..

“இல்லைங்க.. அப்படி எல்லாம் இல்லை..” என்ற தங்கம்மைக்கு இவனுக்கு என்னாச்சு என்ற நினைப்பே..

“இனிமே போன் எப்பவும் உன்கிட்ட தான் இருக்கும்.. நான் அப்பப்போ கால் பண்ணி செக் பண்ணுவேன்..” என, அவன் சொன்ன விதத்தில் தங்கம்மைக்கு சிரிப்பு வந்திட,

“என்ன டி.. சிரிக்கிற.. ஒருத்தன் ஊரு விட்டு ஊரு வந்து இப்படி தனியா நிக்கிறான்.. போன் பண்ணா எடுக்க முடியலை.. இதுல சிரிப்பு வேற..” என்று அவன் பாட்டிற்கு பேச, தங்கம்மை அமைதியாகிவிட்டாள்.

‘யப்பா முழுசா ஒருநாள் கூட ஆகலை அதுக்கே இப்படியா??!!!’ என்று தோன்ற, “நீங்க சாப்பிட்டீங்களா??!!” என,

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்..” என்றவனுக்கு என்னவோ அந்த வீட்டு சூழல் மேலும் ஒரு வெறுமையை கொடுக்க,  “ஆமா இப்போ அது ஒண்ணுதான் குறைச்சல்..” என,  

“முதல்ல ஏதாவது வாங்கி சாப்பிடுங்க.. ரிலாக்ஸா இருக்கும்..” என,  

“ம்ம்..” என்று மட்டும் சொல்லி வைத்துவிட்டான்.

அதன் பின் தீனா, அவனுக்குத் தெரிந்த வகையில் வீடு சுத்தம் செய்து, ஓரளவு அவனுக்கு ஏற்றபடி மாற்றி, பின் அருகில் இருந்த கடைக்குப் போய் பெயருக்கு உண்டுவிட்டு வந்து படுக்க, வீட்டினர் அனைவரும் அழைத்து பேசினர்.

புது இடம் என்பதால் உறக்கம் வரவில்லை. கடந்த காலம் பற்றிய கவலையோ வருத்தமோ எதுவுமில்லை. ஆனாலும் அது அவனுக்குக் கொடுத்த அவமானம் இன்னமும் அவன் மறக்க முடியாத ஒன்றாய் இருந்தது. அதிலும் தங்கம்மையோடு திருமணம் என்ற செய்தி கேட்டு கூட, ஒருசிலர்

“புது பொண்ணு.. ம்ம் புது வாழ்க்கை.. இனியென்ன ஒரே என்ஜாய் தான்..” என்று சொல்ல, அதுவே அவனுக்கு அசிங்கமாய் இருந்தது.

ஏன் இவர்களின் புத்தி எல்லாம் கீழாகவே இருக்கிறது என்று. சொல்லப்போனால் இதுவும் கூட ஒரு காரணம் அவனுக்கு திருமண பந்தம் வேண்டாம் என்று தோன்றுவதற்கு.. ஆனால் எல்லாமே மாறியது.. மாற்றினாள் தங்கம்மை.. இதற்கும் அவனை நீ இப்படியெல்லாம் மாறிட வேண்டும் என்று சொல்லாது..

குறுகிய காலம் தான்..

இருந்தாலும் எல்லாம் நிகழ்ந்தது..   

தங்கம்மைக்கு எப்படியோ, ஆனால் தீனாவிற்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அவஸ்தை. தங்கம்மை இன்றி எதுவும் அசையாது போல் இருந்தது. அவனே தேடிக்கொண்ட தனிமை தான் இது. ஆனால் தனிமையில் இனிமை கிட்டவில்லை.  முதல் வாரம் ஊருக்குச் செல்ல நினைத்தான். வேலை அவனை இழுத்துக்கொண்டது.

ஊரில் இருந்ததை விட இங்கே இன்னும் அதிக வேலை. வீடு வரவே இரவு ஆகிவிடுகிறது. வந்தும் கூட அவனுக்கு வீட்டில் இருந்து செய்ய நிறைய வேலைகள் காத்துக்கிடந்தன. ஆக முதல் வாரம் ஊருக்குச் செல்வது என்பது சுவாகாவாகிப் போனது.

“நீங்க ஊருக்கு வரலையா??!!!” என்று தங்கம்மை கேட்க,

“வரலை..” என்றான் முகத்தை தூக்கி..

இப்போதெல்லாம் வீடியோ கால் தான் அடிக்கடி.. அதுவும் அவனே தான் ஆரம்பித்தான்.. உன்னை பார்க்கவேண்டும் என்று சொல்லாது “ப்ரித்வி என்ன செய்றான்…” என்று கேட்டு அப்படி ஆரம்பித்தது.

தங்கம்மையும் குழந்தையை காட்டிவிட்டு ‘சரிங்க வச்சிடவா??!!’ என, “ஏன் என் கூட எல்லாம் வீடியோ கால் பேச மாட்டியா??!!” என்று கேட்டு பேச வைத்தான். பின் அது தினமும் தொடர,

காலையில் ஆரம்பித்தால் காலை வணக்கத்தில் இருந்து இரவு வணக்கம் வரைக்கும் வாட்ஸ் அப்பிலும், தீனா ப்ரீயாக இருந்தால் வீடியோ கால் என்றும் அவர்கள் உறவு மேலே மேலே முன்னேற, தங்கம்மைக்கு இந்த சிறிய பிரிவு கூட சரிதானோ என்று தோன்ற, தீனா தான் மிகவும் ஏங்கிப் போனான்.

தங்கம்மை, அவனின் மன நிலை தெரியாது தான் எதுவும் கேட்டிடவோ பேசிடவோ கூடாது என்பதில் உறுதியாய் இருக்க,

“நான் இவ்வளோ பேசுறேன்.. ஆனா நீ எதுவுமே சொல்ல மாட்டேங்கிற..” என்று அதுக்கும் ஒரு அதட்டல் போட,

“உங்களுக்குத் தான் அங்க எல்லாமே புதுசு.. சோ நிறைய சொல்றதுக்கு இருக்கு.. இங்க நான் என்ன சொல்ல??!!” என்று அவள் சொல்ல,

‘ச்சே நமக்கு தோன்ற மாதிரி எல்லாம் இவளுக்குத் தோணவே இல்லையா??!!’ என்று ஏக்கமாய் போனது..

ஒருதடவையாவது ‘மிஸ் யூ..’ சொல்வாளா என்று ஆவலாய் பார்த்தான்.. அவனும் சொல்லவில்லை தான். ஆனால் அவனின் அத்தனை பேச்சிலும் அதை உணர்த்தினான்.

“இந்த சட்டை நீ மடிச்ச மாதிரி மடிக்க வரலை.. அப்படியே அயன் பண்ணி தொங்க விட்டிருக்கேன்..” என்பான்,

“ஆமா நீ ஏன் சுடிதார் போட்டிருக்க?? என்னோட வீடியோ கால் பேசுறப்போ சேலை கட்டு..” என்று ஒருநாள் பிடிவாதம் பிடித்தான். கட்டவும் வைத்தான் என்பது தான் அதீதம்.

ப்ரித்வியோடு இருந்தால் “ஆமா உனக்கு அவன்தான் எப்பவும் முக்கியம்.. உனக்கா போன் பண்ண தோணுதா..” என்று அதற்கும் சலிப்பான்..

இன்னும் நிறைய நிறைய..  

இது எல்லாமே தங்கம்மைக்கு பிடித்திருந்தது. அவள் எதிர்பார்த்த தீனா இவன் தான். ஆனாலும் அவன் முழுதாய் வெளிவரவில்லை என்பது நன்கு தெரியும். அவன் சொல்லும் அனைத்திற்கும் பதில் சொல்வாள்.

“குழந்தை மேல உங்களுக்கு என்ன பொறாமை..” என, “ஆமாமா அவனையே கொஞ்சிக்க..” என்று இவனும் சொல்ல,

“ஹா ஹா நீங்களும் வாங்க உங்களையும் கொஞ்சலாம்..” என்று சிரிக்க,

“அப்போ இப்போவே கொஞ்சு..” என்று எல்லாவற்றிற்கும் தீனா இப்போது பிடிவாதம் தான் செய்து கொண்டு இருந்தான்.   

நாட்கள் இப்படியே செல்ல, “இந்த வாரமாவது ஊருக்கு வருவீங்களா??!!” என்று தங்கம்மை கேட்க,

“தெரியலை.. வேலை இருக்கு நிறைய.. இயர் எண்டு வருது இல்லையா..” என, முதல் வாரம் தாக்குபிடித்தது போல் இந்த வாரம் அவளால் இதை சுலபமாய் ஏற்றுகொள்ள முடியவில்லை.

“ம்ம்ம் நிறைய வேலையா??!!!” என்றவளுக்கு முகமே வாடிப்போனது..

‘ஆகா..!! என்னை தேடுறா..’ என்று தீனாவிற்கு கொஞ்சம் சந்தோசமாய் இருக்க, சர்ப்ரைஸ் விசிட் தான் அவன் எண்ணியிருந்தான்.

“நிறைய நிறைய தான்.. பாக்குறேன்.. இல்லன்னா அடுத்த வாரம் கண்டிப்பா வந்திடுவேன் சரியா..” என, அவன் இதுவரைக்கும் புது வீடு பார்ப்பது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்று அதுவேறு தங்கம்மைக்கு உறுத்தலாய் இருந்தது.

‘வரட்டும் கேட்டுவிடுவோம்..’ என்று இருக்க, செவ்வந்தியோ மருமகளின் முகம் பார்த்தே “உங்க அம்மா கூட போய் இருக்கிறதுன்னா ரெண்டு நாள் இருந்துட்டு வாயேன்..” என, அவர்களும் அழைத்துக்கொண்டே இருக்கவும் தங்கம்மை சரியென்றுவிட்டாள்.

தீனாவிடம் அங்கே செல்வது பற்றி சொல்லலாம் என்று அழைத்தால், அவனோ எடுக்கவேயில்லை. ‘கால் யூ லேட்டர்..’ என்று பதில் வர, சரி அம்மா வீட்டிற்கு போய் பேசிக்கொள்வோம் என்று தங்கம்மை கிளம்பிட, தீனாவோ இங்கே ஊருக்கு வந்துக்கொண்டு இருந்தான்.

இந்த இரண்டு வார இடைவெளி தீனாவிற்கு நிறைய கற்றுக் கொடுத்திருந்தது. சீக்கிரமே வீடு பார்த்து தங்கம்மையை தன்னோடு அழைத்து செல்லவேண்டும் என்ற முடிவில் இருக்க, முதலும் கடைசியுமாய் அவளிடம் தன் மனதில் இருக்கும் எல்லா குழப்பங்களையும் சொல்லிட வேண்டும் என்ற முடிவிலும் இருக்க,

‘அதுக்கு மேல எல்லாம் அவ பார்த்துப்பா..’ என்ற தைரியம் வேறு..

தன்னைக் கண்டதும் தங்கம்மையின் முகம் எப்படி மாறும் என்று ஆவலாய் காண வீட்டிற்கு வந்தால், அவளைத் தவிர அனைவரும் இருந்தனர்.

“டேய் தீனா..” என்று அனைவருமே சந்தோசிக்க, எல்லாரிடமும் பேசினாலும் தீனாவின் கண்களோ தங்கம்மையை தேட,

“தங்கம் அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா டா.. சாயங்காலம் தான் கிளம்பினா..” என்று செவ்வந்தி சொல்ல,

‘என்னது??!!!’ என்று மனது அதிர, வெளியில் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.

‘நான் வர்றப்போ இருக்கவேணாமா??!!’ என்று யோசிக்க, வேறெதுவும் அவன் சிந்திக்கும் நிலையில் எல்லாம் இல்லை..

ஆவலாய் வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்ச, அது கோபமாய் வெளி வந்தது.. விளைவு அவளுக்கே அழைத்தே “ அப்போ நான் வரலைன்னா நீ கிளம்பி போயிடுவா நான் வரவரைக்கும் வெயிட் பண்ண மாட்ட ” என்று கத்த வைத்தது.       

Advertisement