Advertisement

                                                            தங்கம்மை – 7

ஞாயும் ஞாயும் யாராகியறோ ?? நெஞ்சில் நேர்ந்தததென்ன

யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன..

தங்கம்மை –  தீனதயாளன் இருவரின் நிலையும் இதுதான். யார் தொடங்க, யார் முடிக்க யாரும் அறியவில்லை. ஆனாலும் அங்கே ஓர் உறவு முகிழ்ந்தது நிஜம்.. இருவரின் சம்மதத்தின் பேரில்.. இருவரின் விருப்பத்தின் பேரில்.  இருவருக்குமே உறக்கம் இல்லை… மற்றவரின் விழிப்பு ஒருவர் அறிந்ததாகவே இருந்தது. ஆனாலும் பேசிக்கொள்ளவில்லை..

நடந்தது எல்லாம் தங்களை மீறிய செயலாகவே இருந்தாலும் அது பிடித்திருக்கிறது என்பது மட்டுமே நிஜம் என்று உணர்ந்தனர்.

தங்கம்மைக்கு ஒருவித ஆச்சர்யம் என்றால், தீனாவிற்கு அது இன்னமும் கூடுதலாய் இருந்தது..

‘நானா இப்படி??’ என்று.

திருமணமே வேண்டாம் என்றவன்.. திருமணம் நடந்தபின்னோ அவளிடமே இவ்வாழ்வு வேண்டாம் என்றவன்.. இப்போது இப்படி.. தங்கம்மைக்கு வேறெதுவும் மனதில் இல்லை. இவன் என் கணவன்.. அந்த எண்ணம் மட்டுமே.. அவன் பேசியது நடந்துகொண்டது எல்லாம் எதுவும் மனதில் இல்லை.. இல்லை இதைமட்டுமே வைத்து வாழ்வை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதா??!!

அதுவும் நினைக்கவில்லை அவள்.. இந்த நொடி அவனுக்கும் அவளுக்கும் இடையில் என்னவோ அதுவே நிதர்சனம் என்று இழைந்துவிட்டாள்.  அவனின் தோள்களில் தான் தலை வைத்திருந்தாள். அணைத்தது போல்தான் பிடித்திருந்தான்.. இருந்தும் பேச்சில்லை.. தங்கம்மையின் கண்கள் மூடியிருக்க, தீனாவின் கரமோ அவளின் வெற்று தோளை வருடியபடி இருந்தது..

இருவர் மனத்திலும் மற்றவர் பற்றிய சிந்தனை.. இப்போது அவன் என்ன நினைப்பான்??!! என்றும் இப்போது அவள் என்ன நினைப்பாள் என்றும்.

உறக்கம் என்ற ஒன்று இருந்திருந்தால் இப்படியே இருவரும் உறங்கியிருப்பர். ஆனால் அது இல்லையென்றதும் எத்தனை நேரம் அப்படியே இருக்க??!! யாரேனும் ஒருவர் பேசித்தானே ஆகவேண்டும்.

தங்கம்மைக்கோ அவன் வருட வருட, கூச்சமாய் இருக்க, மெதுவாய் தோள்களை அசைக்க, அவளின் அசைவு கண்டு “தூங்கலையா நீ??!!!” என்று கேட்க,

“தெரியாத மாதிரியே கேள்வியா??!!” என்றாள் அப்படியே இருந்து.

“அமைதியா இருந்தியா…” என,

“நீங்களும்தானே..” என்று அவளும் சொல்ல, “ம்ம் என்ன பேசறதுன்னு தெரியலை..” என்று தீனா சொல்லவும்,

“நான் ஒன்னு கேட்கணும்..” என்றாள்.

“ம்ம்…” என்றவன் இப்போது அவளின் பக்கம் திரும்பிப்படுக்க, அவனைப் பார்க்காது, தலையணையில் முகம் வைத்துக்கொண்டு,  “உங்க போன்ல என் நேம் என்ன நேம்ல சேவ் பண்ணீங்க??!!” என,

“அது ஏன் இப்படி கேட்கிற??!!” என்றான் அவனும்.

“சொல்லுங்க…” என,

“ஒண்ணுமே சேவ் பண்ணல.. நம்பர் மட்டும் தான் இருக்கு..” என்று தீனாவும் சொல்ல,

“ஏன்??!!!” என்று கேட்டபடி அவள் வேகமாய் எழ, தீனா அவளைப் பார்த்தவிதம் கண்டு, “அச்சோ…” என்றபடி திரும்ப தங்கம்மை படுத்துக்கொள்ள,

“என்ன நேம்ல வைக்கிறது தெரியலை.. தங்கம்.. தங்கம்மை இதெல்லாம் எல்லாருமே யூஸ் பண்றாங்க..” என்றவன் “கோல்ட்னு வச்சுக்கவா??!!” என்று அவளை கேட்க,

“அது உங்க போன்.. உங்க இஷ்டம்..” என்று பிகு காட்டிக்கொண்டாள்.

அதன்பின் தீனாவும் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. திரும்ப மௌனம்.. தங்கம்மைக்கு நன்கு புரிந்தது. தீனதயாளன் உணர்வுகளின் பிடியில் இருக்கிறான் என்று. அதன்பொருட்டே இப்படியான பேச்சுக்கள் என்று. ஆக அவளும் அமைதியாகிட,

“நீ உங்கம்மாக்கிட்ட அழுதியா??!!” என்றான்.

“ம்ம்…”

“ஏன்??!! ஏன் அழுத.. அன்னிக்கும் அப்படிதான் அழுத.. ஏன் சட்டுன்னு அழற..” என,

“சட்டுன்னு எல்லாம் இல்லை.. எனக்கு சில விஷயங்கள் புதுசு.. அப்போ ஷேர் பண்றதுக்கோ இல்லை சப்போர்ட் பண்றதுக்கோ யாருமில்லைன்னு ஒரு பீல் வந்தா யாருக்கா இருந்தாலும் அழுகை வரும்..” என

“ம்ம்..” என்று இப்போது இவனும் சொல்லிக்கொள்ள, அடுத்து இருவரும் எப்படி உறங்கினார்கள் என்று நினைவு இல்லை..

நல்ல உறக்கம்.. எதோ ஒருவிதத்தில் இருவரின் மனதிலும் இனி அனைத்தும் சரியாகும் என்ற நிம்மதி இருக்க, இத்தனை நாள் கை படுமோ, கால் படுமோ என்று பார்த்து பார்த்து படுத்திருந்தது எல்லாம் மாறி இன்று அப்படியொரு நல்லுறக்கம்..

ப்ரித்வியின் அழுகை சத்தத்தில் தீனா முழிக்க, தீனா நேரம் பார்த்தவன், அப்படியொன்றும் தாமதமில்லை என்பதனை உணர்ந்து, தங்கம்மையைக் காண, அவளோ இன்னமும் நல்ல தூக்கத்தில் தான் இருந்தாள்.

எழுப்புவோமா என்று நினைக்க, பின் வேண்டாம் என்று எழுந்து குளித்து, உடைமாற்றி பேங்க் செல்ல கிளம்பி வர, ரோஜாவும் செவ்வந்தியும் அவர்களின் அறைப் பக்கம் எட்டி எட்டிப் பார்ப்பதும் பின் வேலையைப் பார்ப்பதும் தெரிந்தது.

‘போச்சுடா..’ என்று எண்ணியவன், எதையும் கவனிக்காதது போல் வெளிவர,  சங்கர் அவனின் முகம் பார்க்க “குட் மார்னிங் மாமா..” என்றபடி தீனா அமர,

செவ்வந்தியோ “காபி கலக்கவா??!!” என்று கேட்டவரின் பார்வை கலக்கமாய் இருக்க, “என்னம்மா??!!” என்றான்.

“இல்ல தங்கம் எங்க??!!!” என, “தூங்கிட்டு இருக்கா…” என்றான் செய்தித்தாளில் முகத்தை மறைத்தபடி.

என்னவோ அந்த நொடி அனைவரையும் காண கொஞ்சம் சங்கடமாய் இருக்க, “என்னாச்சு?? உடம்பு எதுவும் முடியலையா??!! நான் போய் பாக்குறேன்..” என்று ரோஜா சொல்ல,

“ஏய் ஏய்.. அக்கா நில்லு..” என்று பதறிப்போனான் தீனா.

அவன் பதறியத்தில் என்னவோ ஏதோவென்று அனைவரும் பார்க்க “அ.. அது.. நைட்டெல்லாம் தலைவலின்னு சொன்னா.. நான்தான் மாத்திரை கொடுத்து தூங்க வச்சேன்.. ம்மா காபி கலந்து கொடு.. நான் போய் எழுப்பிக்கிறேன்..” என்று தீனா வேகமாய் பேச,

அனைவரும் அவனை ‘ஆ!!’ என்றுதான் பார்த்தனர். தேவைக்கு மட்டுமே பேசியவனா இவன் என்று..

“என்ன பாக்குறீங்க.. போங்க..” என்று அக்காவையும் அம்மாவையும் சொல்ல, “ம்ம் என்னவோ டா.. நீ பண்றது எதுவுமே சரியில்லை..” என்றபடி செவ்வந்தி, காபி கலக்கி கொண்டுவந்து கொடுக்க, வேகமாய் குடித்தவன், தங்கம்மைக்கும் எடுத்துக்கொண்டு செல்ல, தங்கம்மை குளித்துத் தயாராகிக்கொண்டு இருந்தாள்.

“உனக்கு தலைவலின்னு சொல்லிருக்கேன்…” என்றபடி அவளிடம் காபி நீட்ட,

“என்னைப் பார்த்தா தலைவலி போலவா இருக்கு??!!” என்று சிரித்தபடி கேட்டவள், “தேங்க்ஸ்..” என்றுசொல்லி அதனை வாங்கிப் பருக,

“டெய்லி எனக்குக் கொடுக்கற.. நான் தேங்க்ஸ் சொல்றேனா??!!” என்றான் தீனாவும்.

“இல்லைதான்.. பட் சொல்லணும் தோணிச்சு..” என்றவளுக்கு பதில் சொல்லாது அவன் பார்வை அவளில் நிலைத்திட, “நான் ஒன்னு சொல்லணுமே..” என்றாள்.

“என்னது??!!”

“அது.. நேத்து நீங்க கேட்டீங்க இல்லையா??” என,

‘எங்கே என்னை நீ அழைத்துக்கொண்டு தான் செல்லவேண்டும்..’ என்பாளோ என்றெண்ணி, “இப்போ அது பேசவேணாமே..” என்றான்.

“இல்லை சொல்லிடறேன்.. அது.. நீங்க மட்டும் முன்னாடி போங்க.. தென் எப்போ வீடெல்லாம் பார்த்து என்னை கூப்பிடனும் தோணுதோ அப்போ.. அப்போ நான் வர்றேன்…” என, என்னவோ தீனாவிற்கு அந்தநொடி மனதில் திக்கென்று தான் இருந்தது..

“ஏன்??!! ஏன் திடீர்னு..” என்று கேட்டவன் முகத்தினில் அப்படியொரு டென்சன்..

“திடீர்னு எல்லாம் இல்லை.. நேத்தே உங்கக்கிட்ட சொல்லனும்னு தான் வந்தேன்..” என்றவள் “எனக்கும் புரியுது இன்னும் எதுவும் முழுசா சரியாகலைன்னு…” என,

“ம்ம் தேங்க்ஸ்.. என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு…” என்றான் மனதார.

“ஆனா வீட்ல நீங்கதான் சொல்லணும்..” என்றவளிடம், “சொல்லிக்கலாம்.. பட் நீ தப்பா எதுவும் நினைக்கலை தானே.. ஏன்னா நேத்து வரைக்கும் எப்படியோ. பட் எனக்கு ஒருமாதிரி இருக்கு.. எங்க இதுக்காகத்தான் உன்னை கூட்டிட்டு போறேன்னு நீ நினைப்பியோன்னு…” என்றவன் தங்கள் இருவரையும் சுட்டிக்காட்ட, தங்கம்மை சிரித்துக்கொண்டாள்.

“நான் நிஜமாதான் சொல்றேன்..” என,  “சரி கீழ போலாம்..” என்று கீழே வந்துவிட்டாள் தங்கம்மை.

“தலைவலின்னு சொல்லிட்டு ஏன் தலைக்கு ஊத்திருக்க..” என்று ரோஜா கேட்க, “சும்மாதான் அண்ணி..” என்றுவிட்டு வேலையில் இறங்கிவிட்டாள் தங்கம்மை.

இனி பிரிவு பற்றி அவன் யோசிக்க மாட்டான் என்பது அவளுக்கு நன்கு தெரியும். எதுவாக இருந்தாலும் அவனாகவே தெளியட்டும். நான் மாற்றிட எல்லாம் இதில் எதுவுமில்லை என்பதே நிஜம் என்பது அவளுக்கு நன்கு புரிந்துபோனது.

மனதினில் ஆனாலும் ஓர் எதிர்பார்ப்பு. வேலை முடிந்து எப்போது வருவான் என்று. அவனி எப்போதும் வரும் நேரத்தை விட அன்று லேட்டாகவே வர,

“என்னடா இவ்வளோ லேட்டு..” என்று குருசாமி கேட்க, “ட்ரான்ஸ்பர்ல ப்பா.. சோ முடிக்கவேண்டியது நிறைய இருந்தது..” என,

“வீடெல்லாம் சொல்லிட்டியா அங்க ???” என்றார்.

“ம்ம்.. முன்னாடியே சொன்னதுதான் ப்பா. போய் தான் வேற வீடு பார்க்கணும்.. இப்போ கொடுத்து இருக்கிறது ரொம்ப சின்னதாம்..” என,

“அதுக்கென்னடா.. இருக்கப் போறது ரெண்டு பேரு..” என்றார் செவ்வந்தி.

“இல்லம்மா.. நான்மட்டும் தான் முன்னாடி போறேன்.. த.. தங்கம்மை புது வீடு பார்க்கவும் தான் வருவா..” என,

‘என்ன இது??!’ என்று எல்லாம் பார்க்க, அவளோ உங்கள் பேச்சு இது என்று இருந்தாள்

“என்ன தங்கம் இது??!!” என்று செவ்வந்தி கேட்க, “சௌகர்யமா இருக்காதுன்னு அவங்க நினைக்கிறாங்க அத்தை.. இப்போ என்ன ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தானே.. லீவ்னா வந்திட போறாங்க..” என,

யாருக்குமே வீட்டினில் இதற்கு சம்மதமில்லை. சங்கரோ “நான் என் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேன்..” என,

குருசாமி “உங்க சித்தி அங்கதானே இருக்கா.. அவக்கிட்ட பேசலாம்..” என,

ரோஜாவோ “என்ன தங்கம்.. உன்னை இங்க இருக்கச் சொல்லி சொன்னானா??!!” என்று கேட்க, கணவன் மனைவி இருவருக்கும் அனைவரையும் சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றானது. இறுதியில் அனைவரும் தீனாவை திட்ட, தங்கம்மை தான் பின் அனைவரையும் பேசி சரி செய்தாள்.

“நானே எதுவும் நினைக்கலை.. நீங்க ஏன் இவ்வளோ டென்சன் ஆகுறீங்க..” என்று.

அப்போதுதான் தீனாவிற்கு ஒன்று மட்டும் நன்றாய் புரிந்தது. தங்கம்மை இதுநாள் வரைக்கும் எங்கேயும் யாரிடத்திலும் தன்னை விட்டுக்கொடுக்கவில்லை என்பது. மனதார பிடித்தே தன்னோடு இருக்கிறாள் என்பது. அவனுக்கு மனதினில் ஓர் எண்ணம் இருந்தது, எங்கே எதிர்காலம் பற்றிய பயத்தில் போகாது இருக்கிறாளோ என்று. அது இப்போது அடியோடு மாறிட,

தங்கம்மை அறைக்கு வந்ததுமே, “தேங்க்ஸ் அ லாட்…” என்று சொல்லி இறுக அணைத்துக்கொண்டான்..

“கொஞ்ச நேரம் ப்ளீஸ்..” என்றவன், “நீ.. நீ ஏன் என்னைவிட்டு போகலை??!!!” என்று அப்படியே நின்றபடி கேட்க,

“எ.. எனக்கு மூச்சு முட்டுது..” என்றாள் அவள்.

“ஓ!!!” என்றவன் உடனே தள்ளி நிற்க, அவன் என்னவோ சொல்ல வருகிறான் என்பதனை உணர்ந்து,  “சாரி கேட்டீங்க.. அப்படியே கொன்னுடுவேன்…” என்று தங்கம்மை சொல்ல,

“ஹா ஹா அப்போ ஒன்ஸ் மோர் கேட்கவா??!!!” என்றான் தீனா.

கீழே அனைவரின் பேச்சுக்கும் பதிலுக்கு பதில் பேசியவளுக்கு இப்போது அவனிடம் அப்படியே பேச்சு நின்றுபோக, “அப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…” என்று தீனா கேட்க,

“ம்ம்ச் அதெல்லாம் முடியாது..” என்று அவளும் சொல்ல,

“சொல்லித்தான் ஆகணும்.. நீ ஏன் என்னைவிட்டு போகலை.. ஏன் யார்கிட்டயும் என்னை சொல்லலை??!! நேத்து கூட நீ..” என்றவன் பேச்சை நிறுத்த, என்ன வருமோ என்றுதான் பார்த்தாள்.

“சரி நான் எதுவும் சொல்லலை.. நீ பதில் சொல்லு தங்கம்மை ..” என்றவனுக்கு என்னவோ அப்போதே அவளின் மனதில் இருக்கும் அனைத்தையும் தெரிந்துகொள்ளும் ஆவல்.

“இப்போ எதுக்கு இதெல்லாம்.. நீங்க ரிலாக்ஸா இருங்க..” என,

“அப்போ.. இதெல்லாம் உனக்கு பிடிக்கலைன்னு தான் அர்த்தம்.. அப்படிதான் நான் மீன் பண்ணிப்பேன்..” என்று இவனும் சொல்ல, ‘அய்யோடா…’ என்று பார்த்தாள்.

“அப்போ சொல்லு

“ஹ்ம்ம்.. பொதுவா ஜென்ட்ஸ்க்கு மட்டும் தான் இந்த கனவு கற்பனை ரொமாண்டிக் தாட்ஸ் எல்லாம் இருக்கும்னு இல்லை.. நாங்களும் யோசிப்போம்.. புரிஞ்சதா…” என்று தங்கம்மை முகத்தினில் ஒரு பாவனை காட்டி சொல்ல,

“ஆ..!! அப்புறம்..” என்றான் தீனா கொஞ்சம் ஆவலாய்.

தங்கம்மையோ பதில் சொல்லாது, அவனின் முகத்தினையே இரண்டு நொடி பார்த்து பின் சிரித்தவள் “புருஷன் ஆகப் போறவர்தானே அப்படின்னு…” என்று இழுக்க,

“அப்படின்னு??!!!” என்று அவனும் இழுக்க,

“அப்படின்னு…”

“ம்ம் சொல்லு…” என,

“ஒரு உரிமைல நான் வேற உங்களோ ரொம்ப ரொமான்ஸ் பண்ணிட்டேனா.. அதெல்லாம் மாத்திக்க முடியும்னு தோணலை.. அதான்..” என்றபடி திரும்ப அவனைப் பார்க்க அவனோ ‘அடிப்பாவி?!!!’ என்று பார்த்தாலும், மனதிற்குள் ஒரே உற்சாகம்..

“அப்படியா என்ன பண்ண எப்படி பண்ண??!!” என்று கேட்க, “ச்சி ச்சி.. நான்தான் சொல்றேனா நீங்களுமா வெட்கமில்லாம கேட்பீங்க.. போங்க போங்க..” என்று அவனின் முதுகில் அடித்தவள் ஓடிவிட்டாள்.

‘சொல்றதையும் சொல்லிட்டு இதுல நான் வெட்கப்படனுமா??!!’ என்று நினைத்த தீனாவிற்கு அவன் வாழ்வு மிக மிக அழகாகிப் போனதாய் இருந்தது.

அடுத்து வந்த நான்கு நாட்களும் அப்படியே கழிய, மறுநாள் தீனதயாளன் சென்னை கிளம்ப வேண்டிய தினம். முன்தினம் தான் சுப்ரஜாவின் அப்பா அம்மா வீட்டிற்கு விருந்துக்கு என்று சென்றுவிட்டு வந்தனர். அங்கே கூட சொன்னார்கள் தான், “நாங்க வீடு ஏற்பாடு செய்றோம்..” என்று.

தங்கம்மை யார் சொன்னதற்கும் சரி என்று சொல்லவில்லை.

அவளைப் பொருத்தவரைக்கும் தீனா வீடு பார்த்து நீ என்னோடு வா என்று அழைக்கவேண்டும் அவ்வளவே.. அது மட்டுமே. இருவருக்குமான உறவில் நல்ல முன்னேற்றம் இருக்க,  இனி எல்லாமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் இருந்தது இருவருக்கும்.

எல்லாம் பார்த்து பார்த்து அவனுக்காக அவள்தான் எடுத்து வைத்தாள்.  

“எல்லாம் பேக் பண்ணியாச்சா ??!!” என்று ரோஜா கேட்க, “ம்ம் ஆச்சு அண்ணி.. இனி அவர் வந்து ஒன்ஸ் செக் பண்ணிட்டா போதும்..” என்று தங்கம்மையும் சிரித்தபடி சொல்ல,

“பார்ரா இப்போதான் உங்க அத்தைக்கு இப்படியொரு சிரிப்பு வருதுடா..” என்று மகனிடம் சொல்வது போல் ரோஜா கேலி பேச, தங்கம்மையின் சிரிப்பு இன்னமும் மலர்ந்தது.

தீனா வந்தவனோ “எல்லாம் ஓகேவா??” என்று பார்க்க, “என் சர்டிபிகேட்ஸ் இருக்க பைல் இதுல இல்லையே??!!” என,  

“அது எல்லாமே கொண்டு போகவா இல்லை உங்களுக்குத் தேவையானது மட்டும் போதுமான்னு கேட்கத்தான் அந்த பைல் அப்படியே வச்சிருக்கேன்..” என்றவள் அந்த ஜிப் பைல் வந்து கொடுக்க,

“இப்படி உக்கார்ந்து, நான் சொல்றதை மட்டும் எடுத்து கொடு..” என்றவன், அவனும் அவளின் அருகேயே அமர்ந்துகொண்டு சொல்ல, தங்கம்மையும் அவன் சொல்ல சொல்ல எடுத்துக் கொடுத்தவளின் கரத்தினில் அடுத்து வந்து சிக்கியது தீனா, ரூபினி இருவரின் பிரிவு பத்திரம்..

என்னவோ என்று கையில் எடுத்தவளின் பார்வை அதிலேயே நிலைத்து, தீனா கேட்பதை கூட கவனிக்காது அமைதியாகிட “தங்கம்மை…” என்று அழைத்தவன் பதிலே இல்லாது போகவும் அவளைப் பார்க்க, அவளின் கையில் இருந்த பத்திரம் என்ன என்று அவனுக்குத் தெரியாதா என்ன??!!

அவன் கடந்த காலத்தின் தோல்விச் சின்னம் அல்லவா அது…

மனதில் இருந்த உற்சாகம், சந்தோசம், எதிர்காலம் பற்றிய ஒரு ஆசுவாசம் எல்லாமே மறைந்து, அந்த கருப்பு நாட்கள் இப்போது அவனின் மனதினில் வலம் வந்தது.

தங்கம்மைக்கு என்னவோ தோன்ற, அவனை நிமிர்ந்து பார்க்க, தீனாவின் முகம் இறுகி, கறுத்து எப்படியோ இருக்க , அவளையும் அறியாது “எ.. என்னங்க??!!” என, அவனோ ஒன்றுமே சொல்லாது எழுந்து பால்கனி சென்று நின்றுகொண்டான்.

எது எப்படி இருந்தாலும், இன்னமும் கூட தங்கம்மையிடம் இவைகளை பகிர்ந்துகொள்ளும் மன தைரியம் மட்டும் அவனுக்கு வரவேயில்லை. அந்தத் தைரியம் இனி அவர்கள் வாழப் போகும் வாழ்வு தான் கொடுக்கும் என்றாலும், இந்த நொடி மனது வலித்தது நிஜம்..

அன்றைய தினத்தில் தன் ஆசைகள் எல்லாம் நிராசைகள் ஆகிப்போனதும், அனைவரின் முன்னும் அசிங்கப்பட்டு நின்றதும் தான் அவன் மனதினில் வந்துப் போனது. அனைத்தையும் மீறி ரூபினி. எல்லாம் தெரிந்தும் இங்கே அவளை ஒரு மாதம் வரைக்கும் வைத்திருந்தது.

அவளின் மனது மாறுமா என்று காத்திருந்தது.. நினைக்க நினைக்க “ச்சே…” என்றதொரு உணர்வு.

தங்கம்மையோ, அந்த பத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் செவ்வந்தியிடம் கொடுத்தவள் “இதெல்லாம் நீங்க தான் வச்சிருக்கணும்.. அவர்கிட்ட ஏன் கொடுத்தீங்க..” என,

“என்ன இது??!!” என்றபடி வாங்கிப் பார்த்தவர், “ஐயோ.. இதெப்படி..” என,

“அவர் பைல்ல இருந்தது..” என்றவள் ஒன்றும் சொல்லாது திரும்ப மாடியேற, மீண்டும் ஓர் மௌனத்திரை இருவருள்ளும்.    

Advertisement