Advertisement

                                                         தங்கம்மை – 6

“இப்போ போகலாம் தானே??” என்று தங்கம்மை கேட்க, தீனாவின் தலை ஆடினாலும், கண்களும் மனதும் அவள் மேனியில் வலம்வர,

“நீ.. நீ பிரெஷ் ஆகிட்டு வா.. நான் கீழ போறேன்..” என்றவன் கீழேயும் வந்துவிட்டான்.

“பைவ் மினிட்ஸ்ல வந்திடுவா..” என்றவனின் பார்வை தான் நொடிக்கொரு முறை மாடியை தொட்டு வர,

பாரிஜாதாமோ “வீட்ல எல்லாரும் எங்க??” என்று வினவ, “விசேசம்னு போயிருக்காங்க..” என்றவன்,

தினேஷிடம் “தங்கச்சி வரலையா??” என்று சுப்ரஜாவை கேட்க, அவனோ “நாங்க நேத்து தானே வந்தோம்..” என்றான்.

‘ஆமால்ல…’ என்று தீனா யோசிக்க, தங்கம்மை அதற்குள் வந்துவிட்டாள்.

“ம்மா…” என்று அம்மாவை கட்டிக்கொள்ள, தினேஷ் இருவரையும் பார்க்க, தீனாவோ அவள் சேலை மாற்றாது வந்திருப்பது கண்டு ‘நம்ம சொல்லியும் கேட்கலை..’ என்றுதான் நினைத்தான்.

தீனாவின் பார்வை தன்மீத இருப்பது உணர்ந்த தங்கம்மை, “கடைக்கு போயிட்டு வர்றீங்களா??” என,

பாரிஜாதாமோ “அதெல்லாம் எதுவும் வாங்க வேணாம் தங்கம்… தண்ணி மட்டும் கொடு போதும்..” என,

“இல்லை.. நீங்க இப்போதானே வந்திருக்கீங்க…” என்று எழுந்த தீனா, பை எடுக்கப் போக, அடுத்து அவனை தொடர்ந்து தங்கம்மையும் அடுப்படி வர “என்ன வாங்கட்டும்??” என்றான்.

“ஏதாவது டிபன் போல…” என,

“டிபன் போலன்னா??? டி பன் தான் வாங்கிட்டு வருவேன்.. இப்படி சொன்னா எல்லாம் எனக்கு புரியாது..” என்றவனை, ‘அட…’ என்றுதான் பார்த்தாள்.

“சொல்லு என்ன வாங்கட்டும்..” என்று திரும்ப கேட்க,

“அங்க போய்ட்டு என்ன இருக்குன்னு போன் பண்ணுங்க.. என்ன வாங்குறதுன்னு நான் சொல்றேன்..” என்றவள் பேசியபடி அம்மாவிற்கும் அண்ணனிற்கும் ஹார்லிக்ஸ் கலக்க,

“ம்ம்…” என்று கிளம்பி வாசல் வரைக்கும் வந்தவனுக்கு அப்போது தான் நினைவு வந்தது. அவளின் அலைபேசி எண் அவனிடம் இல்லை என்பது. வாசல் வரைக்கும் வந்தவன் திரும்ப உள்ளே வர, அனைவரும் என்னவென்று பார்க்க,

“என் போன் வச்சிட்டு போயிட்டேன்…” என்று சொல்லியபடி தீனா திரும்ப மேலே செல்ல, தினேஷ் தான் பார்த்தான் ‘நேத்து அப்படி இன்னிக்கு இப்படி..’ என்று.

தங்கம்மை கூட ‘என்னாச்சு இவருக்கு..’ என்றுதான் பார்த்தாள்.

பாரிஜாதாமோ “என்னவோ கேட்கணும் நினைக்கிறாரு போல.. போ.. போய் என்னன்னு கேட்டிட்டு வா..” என,

“போன் மாடில இல்லைம்மா..” என்று தங்கம்மை சொல்ல, அப்போது தான் அவளுக்கும் நினைவு வந்தது தன்னுடைய அலைபேசி எண் அவனிடம் இருக்காது என்று.

‘இதைக் கேட்கவா இத்தனை அலம்பல்..’ என்றெண்ணியவள், “போன் இருந்ததா??” என்று கேட்டபடி அவர்களின் அறைக்கு போக,

“போன் எல்லாம் இருக்கு.. உன் நம்பர்தான் இல்லை..” என்றவன் அவனின் அலைபேசியை அவளிடம் நீட்டி “சேவ் பண்ணி கொடு..” என,

‘ரொம்ப சீக்கிரம்த்தான்..’ என்று முனங்கியபடி, அவளின் எண்ணை மட்டும் அழுத்திவிட்டு கொடுக்க, “சேவ் பண்ணி கொடுன்னு சொன்னேன்..” என்றான் கொஞ்சம் அதட்டலாய்.

‘ஆ..!! தோடா…’ என்றுதான் அவளுக்குப் பார்க்க முடிந்தது.

சிறிது நேரம் முன் நீ இங்கே இரு நான் போகிறேன் என்று சொன்னது என்ன?? பார்த்த பார்வை என்ன?? இப்போது எங்கிருந்து வந்தது இந்த உரிமையும் அதட்டலும்.. தங்கம்மை அப்படியே நிற்க,

“உன்னைத்தான் சொல்றேன்..” என்றான் திரும்ப.

“ஏன் உங்களுக்கு என் நேம் தெரியாதா??!!!”

“தெரியும்…”

“அப்புறம் என்ன??” என்றவள் கீழே போகப் பார்க்க,

“தங்கம்னு எல்லாம் வைக்க முடியாது.. என்னவோ கொஞ்சுறது மாதிரி இருக்கு..” என்று அவனாய் சொல்ல,

“உங்க புத்தி கொஞ்சுறதுக்கு போச்சுன்னா நான் ஒன்னும் பண்ண முடியாது..” என்று சிரித்தபடி சொன்னவள் கீழே வந்துவிட்டாள்.

சிறிது நேரத்திற்கு முன் அழுதவள் தான். என்னவோ இப்போது அவன் மனதின் அலைப்புருதலும், குழப்பங்களும் இப்போது புரிப்படுவது போலிருந்தது. தானாக எதையோ நினைத்து குழம்புகிறான்.. அதுதான் பிரச்னை. அவனுக்காகவே ஒரு தெளிவு வந்தால் சரியாகிவிடும் என்று தங்கம்மை சரியாய் யூகிக்க, தன்னைப்போல் அவளின் முகத்தில் புன்னகை.

அழுதவள், இப்போது சிரித்தபடி வர, பாரிஜாதமோ ‘எதோ அவங்களுக்குள்ள சின்ன சண்டை போல…’ என்று எண்ணிக்கொண்டார்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் தீனா கடைக்குக் கிளம்பிட, தங்கம்மை “நேத்து வரல நீ.. இப்போ மட்டும் என்னவாம்…” என்று அம்மாவிடம் சண்டை பிடிக்க,

“நானே நாளைக்கு வரணும்னு தான் இருந்தேன்.. நீ அழவும் தான் எப்படியோ போச்சு தங்கம்..” என,

“என்னது அழுதியா??!!” என்றான் தினேஷ்.

“ம்ம் அது…!!!” என்று தங்கம்மை யோசிக்க “என்ன தங்கம் எதுவும் பிரச்னையா??!!” என்று தினேஷ் கேட்க,

“இல்லன்னா…” என்றவள், பின் தீனாவின் ட்ரான்ஸ்பர் விஷயம் சொல்ல, “அட இவ்வளோதனா??!!!” என்றார் பாரிஜாதம்.

“என்னம்மா இவ்வளோதானா சொல்ற நீ…”

“பின்ன.. ப்ரோமோசன் கூட வந்திருக்கு.. என்ன அங்க இட வசதி பத்தாதுன்னு மாப்பிள்ளை நினைக்கிறார் போல.. சிலது எல்லாம் விட்டுத்தான் பிடிக்கனும்..” என்று அம்மா சொல்லவும்,

“ம்ம் அப்போ நீயும் என்னை இங்க இருக்க சொல்றியா??” என்ற தங்கம்மைக்கு சட்டென்று ஒரு சுணக்கம்.

“தம்பி இருன்னு சொன்னா இரேன்.. ரெண்டு மாசம் கண் மூடி திறக்குறதுக்குள்ள ஓடிரும்…” என்று பாரிஜாதம் சொல்லும்போதே, தினேஷ் “ஏம்மா அவளுக்கு விருப்பம்னா போகட்டுமே..” என,

“இல்லண்ணா விட்டிடு இருக்கட்டும்.. இது நம்ம மட்டும் பேசி முடிவு பண்றது இல்லையே.. பார்த்துக்கலாம்…” என்றுவிட்டாள்.

என்னவோ அம்மாவும் இப்படி சொல்லவும் அதற்குமேல் இதைப்பற்றி பேச தங்கம்மைக்கு விருப்பமில்லை. வீட்டினர் வந்து என்ன சொல்கிறார்களோ அதுபடி என்று முடிவிற்கு வந்துவிட்டாள். ஆக இந்த பேச்சு இத்தோடு முடிய, வெவ்வேறு பேச்சுக்கள் எல்லாம் வர,

“சுப்ரஜா அப்பா அம்மா விருந்துக்கு கூப்பிட்டாங்களே..” என்று தினேஷ் சொல்ல,

“அவர்கிட்ட கேட்டு சொல்றேன்…” என, தீனாவும் அழைத்துவிட்டான்.

“என்னல்லாம் இருக்கு??” என்று தங்கம்மை கேட்க, அவனும் சொல்ல, அம்மாவிற்கும் அண்ணனிற்கும் அதில் எது எது பிடிக்கும் என்று தெரியுமாதலால் அதையும் சொல்லி, தனக்கு பிடித்தவைகளையும் சொல்லி

“அப்புறம் உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதையும் வாங்கிக்கோங்க..” என்றுவிட்டாள்.

தீனாவிற்கு திடீரென்று அனைத்தும் மாறிப்போனதாய் இருந்தது. அவளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நின்று அனைத்தையும் யோசித்து நடத்திட வேண்டும் என்ற முடிவில் இருப்பவனை, பின்னால் இருந்து யாரோ அவளின் பால் தள்ளுவதாகவேப் பட்டது. தனிமை வேண்டும் என்றெண்ணியவனுக்கு அந்த யோசனைகளை எல்லாம் பின்னே போய்விட்டது.

‘இப்படியே இருந்திடலமா??’ என்று கூட ஓர் நினைப்பு..

பின் அவனே ‘இல்லல்ல அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது.. பட்டது எல்லாம் போதும்… ’ என்று எண்ணிக்கொள்ள,

“சார் உங்க பார்சல்..” என்று பேரர் வந்து கொடுக்க, அப்போது தான் நினைவில் வந்தது அவனுக்கு என்று தனியே எதுவும் வாங்கவில்லை என்று.

ஹோட்டலில் கூட்டம் வேறு நிறைய என்பதனால் உள்ளே நிற்கவும் கூட முடியவில்லை. தனக்கு வேண்டியதை திரும்ப ஆர்டர் கொடுக்க “சார் ஒரு இருபது நிமிஷம் வெய்ட் பண்ண முடியுமா??” என்று பதில் கேள்வி வர,

“இல்லை பரவாயில்ல.. ” என்று கிளம்பிவிட்டான்.

உண்மையை சொல்லவேண்டுமானால் தீனாவிற்கு மனம் ஒருநிலையில் இல்லை. குழம்பியிருந்த தங்கம்மை தெளிவிற்கு வந்திட, தெளிவாய் இருந்த தீனா குழம்பிவிட்டான்.

வீட்டிற்கு வந்தவன் தங்கம்மையிடம் பை கொடுக்க, “ம்மா அண்ணா.. சாப்பிட வாங்க..” என்று அவளும் அழைக்க, தினேஷ் தீனாவை அழைத்தான் “நீங்களும் வாங்க…” என்று.

“இல்ல… நீங்க சாப்பிடுங்க.. நான் கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் சாப்பிடுவேன்..” என்றவன், ஹாலில் அமர்ந்துகொள்ள, தங்கம்மை டைனிக் டேபிளில் அம்மாவிற்கும் அண்ணனிற்கும் எடுத்து வைத்தவள், தான் சொன்னது மட்டும் தான் வாங்கியிருக்கிறான், அவனுக்கென்று எதுவும் வாங்கவில்லை என்பதை கண்டு, அப்போதைக்கு ஒன்றும் பேசவில்லை.

அண்ணனோடும், அம்மாவோடும் பேசியபடியும் சிரித்தபடியும் தான் அவர்களுக்குப் பரிமாறினாள், தீனாவின் காதில் எல்லாம் விழுந்தது தான். அவ்வப்போது பார்வை கூட அங்கே சென்றதுதான். தீனா எதுவோ சொல்ல, அதற்கு தங்கம்மைக்கு அப்படியொரு சிரிப்பு.. கண்ணில் நீர் கூட கோர்த்துவிட்டது.

சிரிப்பினூடே தங்கம்மை தீனாவைப் பார்க்க, வேகமாய் தன் பார்வையை திருப்பிக்கொண்டான்.

‘நீ ரொம்ப பாக்குற தீனா??!?!’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொள்ள, விசேசத்திற்கு சென்றவர்கள் எல்லாம் வந்திட, திரும்ப அங்கே ஒரே பேச்சு, சிரிப்பு எல்லாம் தான். என்னவோ எதிலும் கலந்துகொள்ளாது, இல்லை தன்னை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை என்கிற பாவனையில் தான் தீனதயாளன் அமர்ந்திருந்தான்.

சங்கர் வந்ததும் தினேஷோடு பேசிக்கொண்டு இருக்க, ரோஜா குழந்தைக்கு கவனிக்கவேண்டும் என்று சென்றிட, தங்கம்மை வீட்டினரோடு பேச, தீனா மட்டும் அப்படியே.

“நீ சாப்பிடலையா??” என்று குருசாமிதான் கேட்டார்.

“ம்ம் சாப்பிடனும் ப்பா..” என்றவன், அசையாது தான் இருந்தான்.. அவளாய் வந்து அழைக்கிறாளா?? என்று.    

ஆனால் தங்கம்மையோ, அம்மாவும் அண்ணனும் கிளம்பியபின் தான் “சாப்பிட வாங்க..” என்று அழைக்க, “நான் தான் எதுவும் வாங்கலையே…” என்றான்.

“ஓ..!! சப்பிடமாட்டீங்களா??” என, “அப்படியில்லை…” எனும்போதே, “தோசை ஊத்துறேன்..” என்று போய்விட்டாள்.

செவ்வந்தியோ “ரொம்ப பண்ணாம போய் சாப்பிடுடா..” என,

‘நான் என்ன பண்ணிட்டேன்…’ என்று யோசித்தபடி தீனாவும் செல்ல, தங்கம்மை அவளுக்கு வாங்கி வந்ததில் கொஞ்சம் எடுத்து அவனின் தட்டிலும் வைத்து கூட தோசை வைத்து பரிமாற,

“இது உனக்கு பிடிக்கும்னு தானே வாங்க சொன்ன..” என்றான்.

“பிடிக்கும்னு சொன்னேன்.. கொடுக்கமாட்டேன்னு சொல்லலைதானே…” என்றவள், அடுத்து அவளுக்கும் தோசைகள் சுட்டு எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்துகொள்ள, இருவரின் உணவு பொழுதும் ஒன்றாய் தான் நகர்ந்தது.

திருமணம் முடிந்த முதல் இரண்டு நாட்கள் இப்படித்தான் ஒன்றாய் அமர்ந்து உண்டனர். ஆனால் பார்வை கூட மற்றவர் பக்கம் போகாது. அதன்பின் இப்போதுதான் அப்படியான சந்தர்ப்பம்.. என்ன பார்வை மட்டுமல்ல கொஞ்சம் பேச்சுக்களோடும் நகர்ந்தது.          

வீட்டினர் அனைத்தையும் கவனித்தாலும், கண்டுகொள்ளாதது போலிருக்க, தீனா உண்டு முடிக்கவும், ரோஜா ப்ரித்வியோடு வர “குடுக்கா நான் வச்சிருக்கேன்…” என்று வாங்கிக்கொண்டான்.

வாங்கியவன், அவர்களின் அறைக்கும் சென்றிட, தங்கம்மை அவளுக்கான வேலையை முடிக்க, மனதிலோ பாரிஜாதம் சொல்லிச் சென்றது தான் ஓடியது.

‘இது உன்னோட வாழ்க்கை தங்கம்.. மனசு கலங்குறப்போ நிதானமா இருக்கணும்.. சட்டுன்னு உணர்சிவசப்பட்டு ஒரு முடிவுக்கு வரக் கூடாது.. புத்திசாலித்தனமா வாழக் கத்துக்கோ… எதுக்கும் இப்படி இனி அழக் கூடாது…’ என்றுவிட்டு போனார்.

உண்மையும் அதானே. எப்படியும் இவனோடு தான் இந்த வாழ்வு என்று முடிவாகிப்போனது. என்ன கொஞ்ச நாள் கழித்து அழைத்துப் போகிறேன் என்கிறான். பொறுப்போமே… என்று அவள் மனது சொல்ல, தீனா சொன்னதற்கு சரி சொல்வோம் என்ற நினைப்பில் தான் அவளும் மாடி ஏற, ப்ரித்வி அழுதுகொண்டு இருப்பது தெரிந்தது.

“அடடா என்னாச்சு?? குட்டி இப்படி ஒரு அழுகை…” என்றபடி தங்கம்மை வர,

“என்னனு தெரியலை.. நல்லாத்தான் இருந்தான்..” என்று தீனாவும் சொல்ல, தங்கம்மையைப் பார்த்ததும் கைகளை நீட்டிக்கொண்டு ப்ரித்வி அழ,

தங்கம்மை தீனாவைப் பார்த்த பார்வையில் “நான் எதுவும் செய்யலை…” என்றபடி அவனை அவளிடம் நீட்ட, அச்சிறுவனோ, அத்தையிடம் போகவும், அவளின் தோள் பகுதி சேலையை இறுகப் பற்றிக்கொண்டு மீண்டும் அழுகை.

“என்ன செல்லம் எதுக்கு இவ்வளோ அழுகை…” என்று தங்கம்மை முத்தமிட்டு கொஞ்ச, ப்ரித்வி அழுகை நின்று சமாதானம் ஆகிட நேரம் பிடித்தது.

மேலும் ஐந்து நிமிடம் வரைக்கும் அவளே தூக்கி வைத்து சமாதானம் செய்ய, தீனாவோ ‘இந்த பொடிசு கூட என்ன வில்லத்தனம் செய்யுது…’ என்று பார்க்க,   

தங்கம்மையோ “மாமாக்கிட்ட போறியா???!!” என்றபடி “இந்தாங்க…” என்று தீனாவிடம் கொடுக்க, ப்ரித்வி இறுகப் பிடித்திருந்த சேலையும் அப்படியே வந்தது.

பின் குத்தியிருந்தாள் தான், ஆனால் அது எங்கே என்றுதான் இப்போது ஒன்றும் விளங்காது போக, தங்கம்மை “அச்சோ..” என்று பதறி திரும்பி நிற்க, அவளின் ‘அச்சோவில்..’ தான் தீனா என்னவென்று நிமிர்ந்து பார்க்க, அப்போதுதான் அவனுக்கும் புரிந்தது, சேலையை ப்ரித்வி இழுத்திடவில்லை, அவனை தூக்குகிறேன் என்று சேலையோடு சேர்த்துத் தான் தூக்கியது.

“சாரி…” என்று அவனும் பதற, சில நொடிகள் வரை இருவருக்குமே ஒரு பதற்றம் தான்..

குழந்தையை கட்டிலில் விட்டுவிட்டு சேலையை கொடுக்கவேண்டும் என்றெல்லாம் தீனாவிற்கு அப்போது தோன்றாது போக, “குட்டி அசையாம இருடா..” என்று அவனிடம் சொன்னால் அவனுக்குப் புரியுமா என்ன??

மாமன் என்னவோ சொல்கிறான் என்று பார்த்தது, மீண்டும் உதடு பிதுக்கி அழுது தங்கம்மையை நோக்கி கை நீட்ட, தங்கம்மை திரும்பாதது கண்டு அதுவோ அகப்பட சேலை பகுதியை பிடித்து இழுக்க,

அவளோ “என்னதாங்க செய்றீங்க?? கொஞ்சம் பிடிங்களேன்…” என்று  வேகமாய் பதறி சொல்ல, தீனா குழம்பித்தான் போனான்.

எதை பிடிக்க சொல்கிறாள் என்று??  

“எ.. என்ன??!!” என்று அவன் புரியாது கேட்க, 

“அவனை படுக்க வச்சிட்டு சேலையை விடுங்க… அழ வேற செய்றான்..” என்றாள் அதே எரிச்சலில்.. பதற்றம் கொடுத்த எரிச்சல் இது.. ஒருவித படபடப்பு..

“ம்ம்..” என்ற தீனா எழுந்துகொண்டு ப்ரித்வியை படுக்கவைக்கப் போக,   

ரோஜா “ப்ரித்வி…” என்று அழைத்துக்கொண்டு வருவது தெரிந்து, வேகமாய் சேலையை எடுத்து அவள் மேல் போட்டவன், அது நழுவிடாத வன்னம் அவளின் தோள் மீது கரம் வேறு போட்டுக்கொண்டான். ஒருகரத்தில் குட்டியையும் தூக்கிக்கொண்டான்.

தங்கம்மைக்கு இதயம் தாறுமாறாய் துடிக்க, தீனாவிற்கோ உடலில் ஒரு அதிர்வு.. குழந்தையை தூக்கியிருந்தாலும், பார்வை எல்லாம் அவள்மீது இருக்க,  ரோஜா வந்தவளோ இருவரும் இப்படி போஸ் கொடுத்து நிற்பது பார்த்து “என்ன ரெண்டு பெரும் திருட்டு முழி முழிச்சிட்டு நிக்கிறீங்க??” என்று பார்க்க,

“அ.. அது.. அண்ணி…” என்று தங்கம்மை எதையோ சொல்லவர, ரோஜாவிற்கு என்ன புரிந்ததோ,  “அவன் தூங்குற நேரமாச்சு.. அதான்..” என்றவள்

“குடு தீனா…” என்றுசொல்லி ப்ரித்வியை வாங்க கை நீட்ட, ஒரு கையால் தூக்கியிருந்தவன் அப்படியே குழந்தையை நீட்ட, அவனின் செயல் கண்டு ரோஜா வித்தியாசமாய் தான் பார்த்தாள்.

தங்கம்மைக்கோ லக்ஜையாய் இருக்க, தீனாவை ஒரு பார்வை பார்த்தவள், சேலையை அப்படியே முன்னே கொண்டு வந்து இடுப்பினில் சொருக்கிட, ரோஜா அப்போதும் இருவரையும் குழப்பமாய் தான் பார்த்துவிட்டு ப்ரித்வியை தூக்கிக்கொண்டு போனாள்.

ரோஜா சென்றதுமே, இருவருக்குமே ஒரு ஆசுவாசப் பெருமூச்சு.. சொல்லிவைத்தார்போல் இருவருமே கட்டிலில் ஒரே நேரத்தில் அமர, தீனாவோ “இதுக்குதான் சுடிதார் போடுன்னு சொன்னேன்…” என,

“அவன் பிடிச்சு இழுப்பான்னு பார்த்தேனா…” என்றவளுக்கு உள்ளிருக்கும் படபடப்பு இன்னமும் குறையவில்லை.

“நான் பார்த்தேனே…” என்று தீனா முணுமுணுக்க,

“ம்ம் ம்ம்…” என்றாள் அவன் சொன்னது சரியாய் கேட்கவில்லை என்ற விதத்தில்.

தீனாவிற்கு அவனுள் ஏற்படும் இம்மாற்றங்கள் அவனுக்கே புதிதாய் இருக்க, ஒருவித தயக்கம் வேறு. தங்கம்மை எதுவும் நினைப்பாளோ என்று. ஆனாலும் தயக்கங்கள் உடைக்கவே அவனின் மனது ஆசைகொள்ள,

“நான் பார்த்தேன்.. சொன்னேன்…” என்றான் இப்போது அவளை நேர்கொண்டு பார்த்து.

தங்கம்மைக்கு ஒருமாதிரி மூச்சு முட்டுவதாய் இருக்க, எழுந்து பால்கனி செல்லப்போக,

“எங்கப் போற நீ..” என்று அவளின் கரம் பற்றியவன், எப்போது அவளை நெருங்கினான் என்பதும் தெரியவில்லை.. அணைத்தான் என்பதும் புரியவில்லை, நடுங்கும் அவளின் இதழ்கள் எப்போது அவனது ஆகியது என்றும் விளங்கவில்லை,

மறுப்பாளோ என்று பார்க்க, தங்கம்மையோ அவனிடம் உருகிடவே ஆசைக்கொள்ள, தீனாவிற்கோ அவன் மனதில் இருக்கும் அத்தனை உணர்வுகளுக்கும் தஞ்சம் தங்கம்மை என்றே அந்த நொடி தோன்ற,   

“இதுக்குத்தான் சேலை எல்லாம் கட்டாதன்னு சொன்னேன்…” என்று தங்கம்மையின் செவிகளில் முத்தமிட்டபடி தீனா அவளை தன்னை நோக்கி சரிக்க, தங்கம்மையின் இதழ்கள் வெக்கத்தில் வளைய, மீண்டும் ஓர் முத்த ஊர்வலம்.

முத்தமிட்டு முத்தமிட்டு “இனி நீ கட்டுவ??!!” என்று கேட்க,  “கட்டினா??!!!” என்று அவளும் கேட்க, “அப்புறம் என்னை தப்பு சொல்லக் கூடாது…” என்றவனின் அணைப்பு இறுகித்தான் போனது.

மனம் முந்தியதோ… விழி முந்தியதோ…

கரம் முந்தியதோ.. எனவே…    

Advertisement