Advertisement

                           தங்கம்மை – 5

“வாழ்த்துக்கள் தீனா சார்.. தொடர்ந்து நல்ல விசயமா நடக்குது.. ஆனா கண்டிப்பா நீங்க இந்த ப்ரோமொசன்ஸ் எல்லாத்துக்கும் ட்ரீட் கொடுத்துட்டு தான் ரிலீவ் ஆகணும்..” என்று தீனதயாளனிடம் செல்வம் சொல்ல,

“கொடுத்திடலாம்..” என்றான் தீனா அமர்த்தலாய்.

மனதினுள்ளே அப்படியொரு போராட்டம். தங்கம்மையுடனான திருமணம் முடிந்து இன்றுதான் பேங்க் வந்திருக்கிறான். அரசு வங்கி அதிகாரி. உயர் பதவிதான், அதுவும் இந்த வயதில். இப்போது ப்ரோமோசன் வேறு. சந்தோசமாய் இருந்திடவேண்டிய நேரமிது. ஆனால் அவன் மனதிலோ அப்படியொரு உறுத்தல்.

என்னவோ அனைவரும் தன்னையே பார்ப்பதுபோல் ஓர் உணர்வு. பார்க்கிறார்களோ இல்லையோ ஆனால் அவனுக்கான இந்த எண்ணம் பெரும் இம்சை கொடுத்தது. அனைவரும் என்றால் அங்கே வேலையில் இருப்பவர்கள். இவனின் கடந்த காலம் பின் இப்போது நடந்த திருமணம் முதற்கொண்டு தெரிந்தவர்கள். செல்வம் பியூன்.

ட்ரான்ஸ்பர் என்பதே அவனுக்குத் தான் முதலில் தெரியும். தீனா காலையில் வந்ததும் வாழ்த்திட,  தீனாவோ முகத்தில் எதுவும் பிரதிபலிக்காது இருக்க,

“சார் என்ன சார் நீங்க… சோகமா இருந்தா நிறைய கேட்போம்னு நினைச்சிட்டீங்களா??” என்று செல்வம் பழக்க தோஷத்தில் வாய் விட,

“செல்வம்.. போய் வேலை பாருங்க.. லஞ்ச் டைம்ல பார்த்துக்கலாம்..” என்று அனுப்பியவனுக்கு, அடுத்து அடுத்து முடிக்க வேண்டிய வேலைகளும், ட்ரான்ஸ்பர்காக முடிக்கவேண்டிய பார்மாலிட்டீஸ் நிறைய இருக்க, மதிய உணவு வேலை தாண்டியும் கூட வேலை இருந்தது தீனதயாளனுக்கு.

அவனின் வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளித்தான் பேங்க் என்பதால் எப்போதும் மதிய உணவு சூடாகத்தான் செவ்வந்தி கொடுத்துவிடுவார். குருசாமி வந்து கொடுத்து விட்டு செல்வார் இல்லை செல்வம் வாங்கி வருவான்.

‘ம்மா அப்பாக்கிட்ட கொடுத்துவிடு இல்லைன்னா விடு.. ஆனா செல்வம்க்கு போன் பண்ணி கொடுத்துவிடாத..’ என்று எத்தனையோ முறை சொல்லியிருந்தாலும் அதை செவ்வந்தியும் கேட்டதில்லை செல்வமும் கேட்டதில்லை.

இன்றும் அதுபோலவே செல்வம் மதிய உணவு வாங்கி வந்திட, நேராய் இவனின் கேபின் வந்து கதவு தட்டி வைத்துவிட்டு போனவன், இத்தனை நேரம் உண்ணாதது பார்த்து “சார் நேரமாச்சு..” என,

“ஓ.. சாரி கவனிக்கலை..” என்றவன் “நீ சாப்பிட்டாச்சா??” என,

“அப்போவே சார்.. அண்ணி ஜூஸ் கொடுத்தாங்க..” என்ற செல்வத்திற்கு அப்படியொரு சிரிப்பு.

‘அண்ணியா??!!!’ இப்படிதான் பார்த்தான் தீனா..

“வீட்ல இருக்காங்களே.. அவங்கதான் சாப்பாடு எடுத்து கொடுத்தாங்க.. போனதுமே ஜூஸ் வேற கொடுத்தாங்க..” என, தீனாவிற்கு புரிந்தது தங்கம்மை என்று.

“ம்ம்…” என்று மட்டும் சொன்னவன், சாப்பிட எடுத்து வைக்க, “ஆனா சார் எனக்குதான் சங்கடமா போச்சு..” என்றான் செல்வம்..

“ஏன்??!!!” என்றபடி தீனா உண்ண ஆரம்பிக்க, “இந்த வாரம் கிளம்பிடுவீங்க.. பின்ன நான் யாருக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றது..” என,

“வேலையில இருந்து ஓப்பி அடிக்க நீ என்னென்ன பேசுற..” என்று தீனா சிரித்தபடி உண்ண,

“சார் சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேணாம்.. இப்போதான் பழைய தீனா சார் போல இருக்கீங்க..” என்றதும் தீனாவின் பார்வை பட்டென்று நிமிர்ந்து செல்வத்தைப் பார்க்க, செல்வம் கொஞ்சம் பயந்து தான் போனான்.

எங்கே அந்த சிடு சிடு கடு கடு தீனா திரும்ப வந்திடுவானோ என்று. ஆனால் தீனதயாளன் அதெல்லாம் ஒன்றும் சொல்லாது “ம்ம் போய் உருப்படியா ஏதாவது செய் செல்வம்.. அடுத்து வர்றவர் எப்படின்னு தெரியாது.. இப்போ இருந்தே பழகிக்கோ..” என்று அவனை அனுப்பிவிட்டு உண்டு முடித்தவனுக்கு எண்ணிலடங்கா யோசனை.

சற்று நேரத்திற்கு முன்பு தான் சென்னை வங்கியில் இருந்து அழைப்பு.

“சார் நீங்க ஒன் பெர்சன்னு மென்சன் பண்ணதுனால சிங்கிள் பெட் ரூம் பிளாட் தான் அரேஜ் பண்ணிருக்கோம். கொஞ்சம் சின்னது வேற.. ரு டூ மன்த்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. இப்போ சடன்னா மாத்த முடியாது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..” என்றுவிட்டனர்..

ட்ரான்ஸ்பர் கேட்டபோது அப்படிதான் தீனாவும் கூறியிருந்தான். ஆனால் இப்போது அவன் சிங்கிள் அல்லவே??!!!

‘அப்போ தங்கம்மையோட கிளம்பத்தான் போறியா??!!’ என்று அவன் மனதே ஆச்சர்யப்பட,  “இல்லை அவக்கிட்ட பேசிப் பாப்போம்..” என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.

தங்கம்மையை இங்கே சில மாதங்களாவது இருக்கச் செய்திட வேண்டும் என்பது அவனின் முடிவு. அதாவது தீனா ஒரு முடிவிற்கு வரும்வரைக்கும். திருமண வாழ்வு வேண்டாம் என்ற நிலைதான் இப்போது வரைக்கும். ஆனால் தங்கம்மை விலகுவதாய் இல்லை. வீட்டினரும் அதை ஏற்பர் என்ற நம்பிக்கை இல்லை.

ஆனாலும் முழு மனதாய் இந்த வாழ்வில் ஒன்றிட முடியும் என்ற உறுதியும் அவனிடம் இப்போது இல்லை..

இப்போதைக்கு தீனாவிற்கு தனிமை தேவை. நிறைய யோசித்திட, தன்னை தானே நிலைப்படுத்திக்கொள்ள இப்படி.. புது இடம்.. புதிய மனிதர்கள்.. எல்லாம் கண்டிப்பாய் அவனுக்கு ஒரு மாற்றம் கொடுக்கும்தான்..

ஆனால் புதிய மனைவி??!!!! அவள் மாற்றம் கொடுப்பாளா??!!!

தீனாவிற்கு இன்று இதைப்பற்றி எப்படியும் தங்கம்மையோடு பேசிடவேண்டும் என்று உறுதியாய் இருக்க, மாலை வேலை முடிந்து கிளம்புகையில் அங்கிருக்கும் ஊழியர்கள் அனைவரும் இவனை சூழ்ந்துகொண்டு வாழ்த்த,

“சார் கண்டிப்பா ட்ரீட் வேணும்..” என்றாள் ஒருத்தி.

“ட்ரீட் மட்டும் போதாது.. உங்க மேரேஜ்க்கு கூப்பிடலை.. சோ அதுக்கு தனியா வீட்டில விருந்து வேணும்..” என்று மற்றொருவர் சொல்ல, பேச்சு இப்படியே நீண்டது.

அனைவரும் சிரித்துக்கொண்டு பேசினாலும், மகிழ்வாய் வாழ்த்தினாலும் எங்கே தங்களுக்குள் தன்னை எதுவும் மட்டமாய் நினைப்பரோ என்றார் உறுத்தல் தீனாவிற்கு இல்லாமல் இல்லை.

இது அவனுக்கு அவனே ஏற்படுத்திக்கொண்ட உறுத்தலா?? அதுவும் தெரியவில்லை. எல்லார் பேச்சிற்கும் ஒரு பதில் சொல்லிவிட்டு வீட்டிற்கு வர, தங்கம்மை தவிர வீட்டில் ஒருவரும் இல்லை.

‘எல்லாரும் எங்க??’ என்று கேட்டிட தோன்றினாலும், தீனா கேட்காமல், வீட்டினை சுற்றி சுற்றி வர, தங்கம்மை இவன் வந்ததை கவனித்தவளோ “எல்லாம் விசேசத்துக்கு போயிருக்காங்க..” என,

அவனின் வழக்கமாய் “ம்ம்..” என்றுமட்டும் சொன்னவன், அப்படியே ஹாலில் அமர்ந்துகொண்டான்.

மனதோ ‘பேசு பேசு..’ என, அவனுக்கோ எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனை.. தங்கம்மை அவன் அமர்ந்திருப்பதை பார்த்து “காபி போடவா??!!” என,

“இல்ல டீ போடு..” என்றவன் முகமே தங்கம்மைக்கு சரியில்லை என்று சொல்ல,

அவளாகவே “எதுவும் சொல்லனுமா??!!” என்று ஆரம்பித்தாள்.

‘இதெப்படி இவளுக்குத் தெரியும்..’என்று பார்க்க, “என்கிட்டே ஏதாவது சொல்லனும்னா மட்டும் தான் உங்க முகம் இப்படி இருக்கும்..” என்றவள், பேசியபடி அடுப்படிக்குள் செல்ல,

‘இப்படி இருக்கும்னா??!! எப்படி?? அவ்வளோ கேவலமாவா இருக்கோம்..’ என்று தீனாவின் எண்ணம் போக,

“ச்சே ச்சே..” என்று தானே தலையை உலுக்கியவன், “இப்படின்னா எப்படி??!!!” என்று கேட்டபடி அவனும் பின்னே செல்ல,

அவளோ அடுத்து கேள்வி கேட்பான் என்று நினைக்காததால், கொஞ்சம் திணறி  “எப்படி இருந்தாலும் முகம் அதே இடத்துல தானே இருக்கும்..” என்று எதையோ சொல்லி சமாளிக்க, டீ தயாரானா நேரத்தில் இருவரின் பேச்சும் கூட கொஞ்சம் வாசம் கொண்டது.

தீனாவோ சொல்ல வந்ததை மறந்து, சம்பாசனையில் ஈடுபட, தங்கம்மைக்கு அவன் இலகுவாய் பேசுவது அத்தனை சந்தோசம் கொடுக்க, கடைசியில்  “என்னவோ சொல்ல வந்தீங்களே…” என்றாள்.

“ஓ..!! ஆமால்ல…” என்றவன் “அது… அது.. கொஞ்ச நாள் நீ இங்கயே இருக்கியா?? அங்க எல்லாம் செட் ஆனதும் நீ வந்தா போதும்…” என்று தீனா சொல்ல, தங்கம்மை மௌனமாய் இருந்தாள்.

தீனாவும் அவள் யோசித்து பதில் சொல்லட்டும் என்று பார்க்க, அவளோ பதிலே சொல்லாது இறுகக் “உன்னைத்தான் கேட்டேனே..” என,

“இல்ல.. கொஞ்சநாள் முன்னாடி இங்க இருந்து போ அப்படிங்கற மீனிங்ல பேசினீங்க.. இப்போ இங்க இரு, நான் போறேன் அப்படின்னு சொல்றீங்க.. அதான் ஒரே குழப்பம்..” என்றவளின் முகமும் குழப்பத்தை தான் காட்டியது.

“ஏன் இதுல என்ன குழப்பம்..???”

“அப்போ நான் இங்க இருந்து போயிடனும்ங்கிற உங்க மைன்ட் செட் மாறிடுச்சா??” என்று கேட்கவும்,

‘இதுல இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ..’ என்றுதான் தோன்றியது அவனுக்கு..

உண்மையும் அதுதானே..

இங்கே இரு என்றால்.. என் மனைவியை இரு என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்.. அவள் பொம்மையாய் இருக்க இங்கே வந்திடவில்லையே..

இப்போது தங்கம்மை பதிலுக்காக அவனைப் பார்க்க “அது.. அங்க சிங்கிள் பெட்ரூம் பிளாட் தான் கொடுத்திருக்காங்க. சின்னதுன்னு வேற சொன்னாங்க.. திங்க்ஸ் எல்லாம் வச்சு அது சௌகர்யமா இருக்காது… சும்மா சும்மா வீடு மாறவும் முடியாது.. நான் போய் ஏதாவது ரூம் பார்த்து இருந்துட்டா அப்புறம்…” எனும்போதே,

“ம்ம் நான் வர்றப்போ வீடு பாப்பீங்களா??!!!” என்றாள் தங்கம்மை.

அதை அவனால் உறுதியாய் கூறிட முடியுமா என்ன??

அவனுக்கே ஒன்றும் விளங்காது இருக்கையில்..

தீனாதயளானோ முகத்திற்கு நேரே சொல்லவும் முடியாது, “எப்படின்னு அங்க போயித்தான் பார்க்கணும்…” என,

“ம்ம்.. அதாவது ஒன்னு நான் இங்க இருந்து போயிடனும்.. இல்லை என்னை இங்கவிட்டு நீங்க போய்டுவீங்க.. அப்படிதானே..” என்று தங்கம்மை கேட்கையில், அவள் குரல் நடுங்கியதோ என்னவோ,

தீனாவிற்குத்தான் மனது மிக மிக சங்கடமாய் போனது. தன் மன குழப்பத்தில், இப்படி ஒருத்தியை வருந்தச் செய்கிறோமே என்று. ஆனால் இப்போது அவனுக்கு வேறு வழியும் இல்லை. இங்கேயானால் கூட வீட்டில் இத்தனை பேர் இருக்கிறார்கள். எதுவென்றாலும் பார்த்துகொள்வர். அங்கே, தங்கம்மை தனியே தான் இருக்க வேண்டும்.

அதுவும் இருவருக்குள்ளும் எதுவும் சரியாகாத பொழுது, அவனுக்கு அவளை அங்கே அழைத்துச் செல்வதும் உசிதமாய் இல்லை.

“நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன்..” என்று அவன் விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கையில்,

“நீங்க சொல்றதுக்கு அதுதான் அர்த்தம்.. என்னை அங்க கூட்டிட்டு போக உங்களுக்கு இஷ்டமில்லை.. அவ்வளோதானே.. நான் போர்ஸ் பண்ண மாட்டேன்.. எல்லார்க்கிட்டவும் நீங்களே சொல்லிடுங்க..” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

அத்தனை நேரம் மனதில் இருந்த சந்தோசம் இப்போது தங்கம்மைக்கு இல்லை. தான் விலகாது இருப்பதால் தான் இவன் விலகிப் போகிறானோ என்று மனம் எண்ண, ஒரு அவமானமாய் கூட இருந்தது தங்கம்மைக்கு.

விருப்பம் இல்லாதவனோடு வம்படியாய் ஒரு வாழ்வு. போ என்றும் கூட சொல்லிவிட்டான். அதுதான் அவளால் முடியவும் இல்லை. அதற்காக தனக்கு பிடித்திருந்தாலுமே தன்மானம் விட்டு என்னை ஏற்றுக்கொள் என்றெல்லாம் அவளால் சிந்திக்கக் கூட முடியாது.

‘என்ன செய்யலாம்…’ என்று யோசிக்கையில், அம்மாவின் நியாபகம்.

காலையில் இருந்து பாரிஜாதத்தோடு பேசிடவும் கூட இல்லை.. இப்போது உடனே பேசவேண்டும் என்று தோன்ற, அழைத்துவிட்டாள்.

அழுதுவிட கூடாது என்பதில் உறுதியாய் இருக்க அம்மாவின் “சொல்லுடா தங்கம்.. என்ன காலைல இருந்து பேசலை..” என்ற விசாரிப்பில் நொடியில் உடைந்து போனது அவளின் தீர்மானம்.

“ம்மா…!!!!” என்றவளுக்கு அவளையும் மீறிய கேவல்.

“டேய்.. தங்கம்.. தங்கம்மா.. என்னாச்சு??!!” என்று பாரிஜாதம் பதற,

“நீ.. நீ ஏன் என்னை பார்க்கவே வரலை…” என்று கேட்டவளுக்கு அழுகை வெடிக்க,

“ச்சி.. நாய் குட்டி.. இதுக்குத்தானா அழுகை.. நானே நாளைக்கு வரணும்னு தான் இருந்தேன்..” என,

“அப்போ.. போ நான் போன் வைக்கிறேன்..” என்று பட்டென்று வைத்துவிட்டாள் தங்கம்மை.

தன் மனம் இத்தனை பலவீனப் பட்டு, ஆறுதலுக்காக யாரேனும் ஒருவரை நாடும் என்பதெல்லாம் கனவில் கூட அவள் நினைக்காத ஒன்று. பாரிஜாதம் பேச பேச எங்கே அனைத்தையும் சொல்லிடுவோமோ என்று அஞ்சியே தங்கம்மை போனை வைத்திட, அவருக்குத்தான் என்னவோ போல் ஆகியது.

முதல் நாள் தானே மகனும் மருமகளும் பார்த்துவிட்டு வந்தனர். இப்போது அழைத்து அழுகிறாள் என்றால்??!!

அம்மாவின் மனது அடித்துக்கொள்ள, “தினேஷ்.. போய் தங்கத்தை பார்த்துட்டு வருவோமா?!!” என்றார் மகனிடம்.

“என்னம்மா இப்போவா??!!!” என,

“ம்ம் ஆமாடா.. அவளைப் பார்க்கணும் போல இருக்கு ஒரு எட்டு போயிட்டு வருவோமே…” என்று அம்மாவும் சொல்ல, தினேஷ் சரியென்று சொல்ல இருவரும் தங்கம்மை பார்க்கக் கிளம்பினர்.

அங்கே தீனாவிற்கு இது எதுவும் தெரியாதே. தங்கம்மை அறையில் இருக்கிறாள். அவ்வளவே.. எதுவாக இருந்தாலும் அவளும் யோசிக்கட்டும் என்று அவளையும் தனியில் விட்டவன், டிவியை போட்டு அமர்ந்துவிட, அடுத்த பத்து நிமிடத்தில் தினேஷ், பாரிஜாதம் வந்திட தீனாவிற்கு இது கொஞ்சம் எதிர்பாராத நிகழ்வு என்பதால்,

“வா… வாங்க… உள்ள வாங்க..” என்று வரவேற்றவன் முகத்தில் கலவையான உணர்வுகள் ..

‘என்ன திடீரென்று..’ என்று கேட்கவும் முடியாது இல்லையா..

இருவரையும் பார்த்து நிற்க, “எப்படி இருக்கீங்க தம்பி..” என்று பாரிஜாதம் கேட்டதும், “ம்ம் நல்லாருக்கேன்..” என்றவன் மாடியைப் பார்த்தான்.

அவன் பார்வை புரிந்து “தங்கம் எங்க??!!” என்று தினேஷ் கேட்க,

“இப்.. இப்போதான் மாடிக்கு போனா..” என்றவன் “உட்காருங்க…” என்று கை காட்டியவன், அவளை இவர்கள் முன் எப்படி அழைக்கவென்றும் தெரியாது, அழைத்தும் பழக்கமில்லாததால்

“நா.. நான் போய் கூட்டிட்டு வர்றேன்..” என்று அவனும் படியேற, பாரிஜாதம் இருவருக்குள்ளும் எதுவோ சரியில்லை என்பதனை மட்டும் கண்டுகொண்டார்.

அறைக்கு போனாளோ தங்கம்மை கட்டிலில் குப்புறப் படுத்து இருக்க, தீனா அருகே போனவன் “உங்கம்மா அண்ணன் எல்லாம் வந்திருக்காங்க..” என்றதும், பட்டென்று எழுந்து அமர்ந்தவள்,

“என்ன சொல்றீங்க?? நிஜமாவா??!!” என,

“ம்ம்..” என்று தலையை ஆட்டவும், வேகமாய் முகத்தினை அழுந்தத் துடைத்தவள் “நான் வர்றேன்..” என, “இப்படியேவா??!!!” என்றான் அவளைக் காட்டி..

தலை கலைந்து, முகம் வாடி, ஆடைகள் சீராய் இல்லது அங்கே இங்கே விலகி இருக்க, தீனா அப்படி கேட்டதும், அவளையும் அறியாது அவன் முன்னேயே சேலையை சரி செய்ய, இப்போதைய சங்கடம் தீனாவிற்கு.

அழுதிருக்கிறாள் என்பது நன்கு புரிந்தது. ஏன் என்று கேட்கலாம்.. ஆனால் கீழே காத்துக்கொண்டு இருக்கிறார்களே.. இது போதாது என்று அவள் இப்போது செய்த காரியம் வேறு.. உடை விலகியிருக்க, தன்னையும் அறியாது நம் கை அங்கே சரிசெய்ய செல்வது போல்தான் தங்கம்மை செய்ய, தீனாவிற்குத்தான் மூச்சு முட்டிப் போனது.

“வீட்ல தானே இருக்க சுடிதார் போல போட்டா என்ன??!!” என்று கேட்க, ‘நீ இன்னும் போகலையா??!!’ என்று பார்த்தாள் தங்கம்மை..

“இல்லை.. அது.. கூட்டிட்டு வர்றேன் சொன்னேன்…” என்றவனின் பார்வையே அவளை விட்டு விலகுவேணா என்று சண்டித்தனம் தான் செய்தது.    

Advertisement