Advertisement

                           தங்கம்மை – 4

தங்கம்மையின் கன்னம் தீயாய் எரிந்தது.. அவனின் அடி தாங்கியதுமே, அதிர்ந்து பார்த்தவளின் கண்களில் அவளையும் அறியாது மீண்டும் கண்ணீர் துளிகள் துளிர்த்திட, நொடிப் பொழுதே தங்கம்மை அப்படி திகைத்து நின்றது.

அடுத்த நொடி எங்கிருந்து தான் அவளுக்கு அப்படியொரு வேகம் வந்ததோ, “என்னை அடிப்பியா நீ…”என்று அவனின் சட்டையை கொத்தாய் பிடித்து தன்னருகே இழுத்து நிறுத்தியவள்,

“உன்னை திருப்பி அடிக்க எனக்கு ஒரு செக்கன்ட் ஆகாது.. அடிக்க முடியாதுன்னும் இல்லை.. ஆனா அதை விட உன்னை வலிக்க வைக்கவும் எனக்குத் தெரியும்..” என்று வார்த்தைகளை விட்டவள்,

அதே தீவிரம் குறையாது அவனின் முகம் பார்க்க, அவனோ அவள் இழுத்த விதத்தில் கொஞ்சம் திணறித்தான் போனான்..

உச்சந்தலையில் ஏறியிருந்த கோபம், அப்படியேத்தான் இருந்தது, ஆனால் அந்த கோபத்தினூடே இப்போது இன்னமும் எதோ ஒன்று. அவளின் நெருக்கம்.. அவளின் ஸ்பரிசம்.. அதற்குமேலாய் அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசம்.. இதெல்லாம் தாண்டி   தங்கம்மை கண்களில் தெரிந்த சீற்றம் அவனை எதுவோ செய்ய,

“என்ன தெரியும் உனக்கு??!!!” என்று சொன்னவன் கரமோ, தன் சட்டை மீதிருந்த அவளின் கரத்தினை பற்றி விலக்க, அவளோ இன்னமும் இறுகப் பற்றினாள். அவனும் கூட..

கைகளை விலக்க பற்றினான இல்லை விலக்கிடாமல் இருக்க பற்றினானா அவனே அறியான்..

“தெரியும்… உன்னை திருப்பி அடிச்சாலோ.. இல்லை உன்னை விட்டு போனாலோ.. அசிங்கம் உனக்குத்தான்னு நல்லாவே தெரியும்..” என்று நிறுத்தி நிதானமாய் சொல்ல,

“தங்கம்மை..” என்று முன்னை விட மேலாய் கத்திவிட்டான்.

தீனதயாளனுக்கு அவளின் இவ்வார்த்தைகள் உடலெல்லாம் ஒரு அதிர்வு கொடுப்பது போலிருந்தது. நிஜமும் அதான்..

அவன் கத்திய கத்தல் வீட்டிலிருந்த அனைவர்க்கும் கேட்க, என்னவோ ஏதோவென்று தான் வந்தனர் வேகமாய். அதிலும் ரோஜா எதிர் அறையில் தானே இருந்தாள், வேகமாய் வந்தவள்,

“என்னடா???” என்று பார்க்க, தங்கம்மை அவனின் சட்டையை பிடித்து நிற்பதும், அவளின் கன்னத்தில் தீனா அடித்த தடயம் தெரியவும், என்னவோ ஏதோவென்று தான் பதறி,    “என்ன தீனா நீ..??” என்றாள் தம்பியை கோபமாய் பார்த்து..

ரோஜா வந்து அதட்டவும் தான் அந்த சத்தத்தில் தங்கம்மை பட்டென்று கைகளை எடுத்துக்கொள்ள, அதற்குள் வீட்டிலிருந்த மற்றவர்களும் வந்துவிட,

“இப்போ என்ன??!!” என்பதுபோல் தான் அவளும் பார்த்தாள் அனைவரையும்.

பிரச்சனை என்று புரிந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை. தீனா அடித்தது மட்டுமே தெரிந்தது. அதுவும் கூட தங்கம்மையின் கன்னச் சிவப்பினால். இப்போது எல்லோரும் தீனாவை பார்க்க,

“இப்போ என்ன??” என்று வார்த்தைகளாய் கேட்டான் அவன்..

தான் நினைத்த அதே வார்த்தைகள் என்று எப்போதும் தங்கம்மைக்கு தோன்றாமல் இல்லை.

“அடிச்சியா தீனா??!!” என்று சங்கர் கேட்க, கணவன் மனைவி இருவருமே மௌனமாய் நிற்க,

“பார்த்தாலே தெரியுதே..” என்றார் குருசாமி..

அவரின் முகமோ ‘நீயா இப்படி..’ என்று குற்றம் சாட்ட,

செவ்வந்தியோ “ஏன் டா நீ இப்படி ஆகிட்ட??” என்று அதட்ட, அவ்வளோதான் தங்கம்மைக்கு பொறுமை எல்லாம்..    

“நாங்க ரெண்டுபேரும் தானே சண்டை போட்டோம்.. அவர் சத்தமா பேசினதுனால நீங்க எல்லாம் வரவேண்டியதா போச்சு.. மெதுவா கத்தியிருந்தா கேட்டிருக்காது..” என, தீனாவையும் சேர்த்து அனைவரும்,

“ஆ..!!” என்றுதான் பார்த்தனர்.

அவள் சொல்வதிலேயே புரிந்தது, இது எங்களுக்குள்ளான விஷயம் நீங்கள் யாரும்  தலையிட வேண்டாம் என்று..

ஆனாலும் யாரின் மனதும் கேட்கவில்லை.. முக்கியமாய் சங்கருக்கு.. அவன் பார்த்து முடித்து வைத்த திருமணம் தானே இது..

“சாரி தங்கம்..” என,

“அச்சோ.. அண்ணா.. நீங்க பீல் பண்ண வேணாம்.. நா.. நான் பார்த்துப்பேன்..” என்றவள், அவ்வளோதான் இதற்கு மேல் எதுவும் பேச முடியாது என்பதுபோல் வாய் மூடிக்கொண்டாள்.

அதற்குமேல் என்ன பெசவேன்றும் தெரியவில்லை..

கத்தி ஆர்பாட்டம் எல்லாம் அவளுக்கு வரவே வராத ஒன்று.. தீனா இப்படி சொன்னான் என்று பெரியவர்களிடம் சொல்லிடவே முடியாது வேறு.. இப்போது இந்த சூழலை மௌனமாய் கடந்திட தான் வேண்டும்.

அது தீனாவிற்கும் புரிந்ததுவோ என்னவோ “ம்மா நான் பேசிக்கிறேன்..” என்றவனின் குரல் இறங்கியிருந்தது..

எதுவாகினும் அடித்தது தவறு என்று இப்போது தான் புரிந்தது போல.

தங்கம்மை அவனை ஒரு பார்வை பார்த்தவள் ரோஜாவிடம் “நீங்க போங்கண்ணி.. குட்டி அங்க தனியா இருப்பானே..” என, ரோஜாவிற்கு வேறு வழியே இல்லை.. நகர்ந்திடத்தான் வேணும்..

அது ரோஜாவிற்கு மட்டும் சொல்லப்பட்ட ஒன்றாய் தெரியவில்லை. அனைவர்க்கும் சொல்லப்பட்ட செய்தியாய் இருக்க, அவர்களும் வேறு வழியில்லாது வெளியில் வர,  

செவ்வந்தியோ “நீ பையனை தூக்கிட்டு வந்து கொஞ்ச நேரம் இப்படி சோபால உக்காந்திரு..” என்றுவிட்டு போக, அவளும் அதுபோலவே செய்துகொண்டாள்.

அமர்ந்திருந்தவளின் கவனம் எல்லாம் தீனாவின் அறையில் தான் இருந்தது. எங்கே திரும்ப சண்டை வருமோ என்று.

அதிலும் அடிக்க வேறு செய்திருக்கிறான்.. ஒருவித பதட்டமாக கூட இருந்தது.. சங்கரோ “சொல்லி வை அவன்கிட்ட..” என்றுவிட்டு போக, ரோஜாவிற்குத்தான் டென்சன் ஆக,

உள்ளே தங்கம்மையோ தீனாவைப் பார்த்து “போ போய் ஐஸ் கியூப் எடுத்துட்டு வா.. எரியுது..” என்றுசொல்ல, அது அப்படியே வெளியே கேட்கவும் செய்தது.

இப்போது அக்கா தம்பி இருவரும் தான் இன்னும் திகைத்தனர்..

ரோஜாவோ ‘அடிச்சிருக்கான்.. இவ சட்டையைப் பிடிச்சிட்டு நிக்கிறா… இப்போ என்னடான்னா அவனையே ஐஸ் கியூப் எடுத்துட்டு வர சொல்றா..’ என்று நினைக்க,

அவனோ ‘என்ன பொசுக்குனு ஏக வசனத்துல பேசுறா..’ என்று பார்க்க,

“என்ன?? அடிச்ச தானே.. போ.. போய் எடுத்துட்டு வா..” என்றவள், முகத்தினை அழுந்த துடைத்துவிட்டு அமர்ந்துகொண்டாள். கன்னம் மட்டுமா எரிந்தது அவளின் மனதும் எரிந்துகொண்டே தான் இருந்தது..

உஷ்ண மூச்சுக்களை வெளிவிட்டு அமர்ந்திருக்க,    தீனாவோ ஐஸ் கியூப் எடுக்கச் சென்றவன், திரும்பி நின்று பார்க்க “உன்னை என்ன சொன்னேன்..” என்றாள் அடுத்து தங்கம்மை.

ரோஜாவிற்கு சிரிப்பை இப்போது அடக்க முடியவில்லை ‘தம்பி இப்படி ஒரு தங்க கம்பிக்கிட்ட சிக்கிட்டியே டா…’ என்று எண்ணிக்கொண்டாள்.

தீனா வெளியே வர, அக்காவின் கிண்டல் சிரிப்பை பார்த்து “என்ன இப்போ எதுக்கு சிரிக்கிற??!!” என்று கேட்க,

“டேய் டேய் போ.. போய் ஐஸ் கியூப் எடுத்து கொடு.. இல்லை உன்னை திரும்ப அடிச்சாலும் அடிப்பா..” என்று சொல்லிவிட்டு அவளின் அறைக்குள் போய்விட்டாள்.

தீனாவிற்கு இப்படி மொத்த குடும்பமும் தங்கம்மைக்கு ஆதரவாய் இருப்பது கண்டு கொஞ்சம் வியப்பாகக் கூட இருந்தது.

தங்கம்மை தன்னை விட்டுப் போவாள் என்றெல்லாம் அவனுக்கு இப்போது தோன்றவில்லை.. அதுவே ஒரு சிறு மகிழ்வு கொடுத்தது.

‘நான் போ சொன்னா கூட போகாம இருக்கா…’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொள்ள, இதழ்களில் வந்து ஒரு புன்னகையும் அமர்ந்துகொள்ள, அதே உணர்வோடு தான் ஐஸ் கட்டி எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்..

அவளோ ‘அடிச்ச தானே.. அப்போ மட்டும் கை நீளுது.. ஐஸ் வைக்க முடியாதா??’ என்று பார்க்க,

அவளின் பார்வை புரிந்ததா தெரியவில்லை, கடுப்பாய் அமர்வது போல் அவளருகே அமர்ந்தவன், ஒரு துண்டு ஐஸ் கட்டியை எடுத்து அவளின் கன்னத்தில் வைக்க அவளோ ஜில்லிப்பினால் “ஷ்..” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டாள்.

‘அப்பா… கண்ண மூடிட்டா…’ என்றெண்ணியவனின் பார்வையோ இப்போ அவளின் முகத்தை ஆராய,

“ம்ம்ச் வச்ச இடத்துலேயே வைக்காம கொஞ்சம் தள்ளி வைங்க..” என்றவளின் குரலில்,

“என்ன நீ மாத்தி மாத்தி பேசுற??” என்றான் தீனாவும்..

என்னவோ பேச்சு இப்போது சட்டென்று வந்தது..

“இப்போ என்ன மாத்தி பேசிட்டேன்..” என்று இமைகள் திறந்தவளுக்கு அப்போதுதான் அவன் ஒட்டி அமர்ந்திருப்பது தெரிய, கொஞ்சம் பின் சாய்ந்த வாக்கில் தள்ளிக்கொண்டாள்.

விலகி அமரவில்லை ஆனால் உரசாது இருந்துகொள்ள, அது தீனாவிற்கு புரியாதா என்ன,

“இப்போ நான் வைக்கணுமா வேணாமா??” என்றான் அதே குரலில்..

“வை.. ஆனா ஒரே இடத்துல வைக்கக் கூடாது..” என,

“ம்ம்.. நீ ஆடாம உக்காரு..” என்றவன், ஐஸ் கியூப் வைத்து அவளின் கன்னம் தடவ “நீங்க என்ன பேசியல் பண்றீங்களா??!!” என்றாள் இப்போது..

‘ஷோ..!!! என்ன இப்படி வாய் குடுக்கிறா.. என்னை பேச வச்சிடுவாளோ..’ என்றெண்ணி அமைதியாகவே இருக்க,

“ம்ம்ம் தண்ணியா ஒழுகுது..” என்று உதட்டினை பிதுக்கி அவளின் கழுத்தினை துடைக்க,

‘இது வேலைக்கே ஆகாதுடா சாமி..’ என்று எழுந்துவிட்டான்..

தங்கம்மையோ “என்ன??” என்று கேட்க,

“நீ மரியாதை குடு.. இல்லை எப்படினாலும் பேசு.. ஆனா இப்படி ஐஸ் வைக்க மட்டும் சொல்லாத..” என்று கையில் இருந்த கிண்ணத்தை அவளிடம் நீட்ட,

“போதும்..” என்று அவளே எழுந்து கொண்டாள்.

சிறிது நேரத்திற்கு முன்பிருந்த கோபம் அவளுக்கு இப்போது உண்டா என்று கேட்டால் அது தெரியவில்லை.. அவன் இத்தனை பேசியது பெரிய விசயமாய் இருந்தது.

இந்த வாழ்வில் இருந்து வெளியேற முடியாது.. போராடியேனும் வாழ்ந்து தான் ஆகவேண்டும். ஆனால் இது சுகமான போராட்டமாய் தான் தோன்றியது தங்கம்மைக்கு. தீனாவை மாற்றுவது அத்தனை சிரமம்மல்ல என்றும் தோன்ற,

“எனக்கு கோவம் வந்தா அப்படிதான் பேசுவேன்..” என்றுவிட்டு போனாள்.

தீனாவும் அவளோடு பின்னே வர, கூடவே அவனின் செல் போன் ட்ரிங்கிட தங்கம்மை இப்போது திரும்பிப் பார்க்க,

“பேங்க்ல இருந்து..” என்றவன், “ஹலோ..” என்றபடி தள்ளிப்போனான்.

தங்கம்மை கீழே போய் செவ்வந்தியோடு சேர்ந்து இரவு உணவு செய்ய, அவரோ அவளின் முகத்தை முகத்தைப் பார்க்க,

“நான் பார்த்துக்கிறேன் அத்தை..” என்றவளை கொஞ்சம் வியந்து தான் பார்த்தார் செவ்வந்தி.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை தங்கம்.. அவனை ரொம்பவும் சொல்லவும் முடியலை..” என,

“ம்ம் எனக்கு புரியுது..” என்றவள் “நானும் தப்பா நினைக்கல.. நாளைக்கு எங்களுக்குள்ள எல்லாம் சரியாகிட்டா இதெல்லாம் மறந்துகூட போயிடும் தானே..” என்றபடி வேலையை செய்தாள்.

தீனாவோ பேசிவிட்டு வந்தவன், கொஞ்சம் குழப்பமாய் இருப்பது போல் தெரிய, மகனை கவனித குருசாமியோ “என்ன தீனா??” என,

“பேங்க்ல இருந்து தான் ப்பா.. நாலு மாசம் முன்னாடி ட்ரான்ஸ்பர் கேட்டிருந்தேன்.. அப்போ முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. ஆனா இப்போ போட்டிருக்காங்க..” என,

“என்னது ட்ரான்ஸ்பர் கேட்டியா??!!” என்றார் அதிர்ந்து..

“ப்பா.. நாலு மாசம் முன்னாடிப்பா..”

“அதைக்கூட சொல்லலையே..”

“அப்போ இல்லைன்னு சொன்னதும் நானும் அப்படியே விட்டுட்டேன் ப்பா..” என்றவனுக்கு இப்போது என்ன செய்வது என்று சுத்தமாய் தெரியவில்லை..

நிச்சயம் தங்கம்மையை இங்கே விட்டுச் செல்ல அனுமதிக்கவே மாட்டார்கள்.. ஆனால் அவளோடு அங்கே தனியாய் என்று தோன்ற, ‘வேண்டாம் தீனா..’ என்று மனம் சொன்னது..

தனியாய் இருப்பது தான் இருவருக்கும் நலம் என்று நினைக்க, சங்கரோ “ட்ரான்ஸ்பர் தானே.. பிளேஸ் சேஞ் ஆனா நல்லது தான்.” என்றான்..

ரோஜாவிற்கு கூட அதே கருத்து தான்..

ஆனால் செவ்வந்தி தான் “ஏன்டா இப்போ மாத்திக்க முடியாதா??” என,

“ம்மா இது ப்ரோமோசன் கூட வந்த ட்ரான்ஸ்பர்..” என, தங்கம்மைக்கு சந்தோசமாக இருந்தது.

இருந்தும் அவர்கள் பேச்சில் எதுவும் கலந்துகொள்ளவில்லை. அமைதியாய் அனைவரும் எடுத்து வைத்துகொண்டு இருந்தாள்.

எப்படியும் பேசி ஒரு முடிவிற்கு வரட்டும் என்று பார்க்க, செவ்வந்தியோ “பாரேன்.. தங்கம்மை வந்த நேரம் ப்ரோமோசன் எல்லாம் வருது..” என,

“மேல மேல எக்ஸாம்ஸ் எழுதுறது நானும்மா..” என்றான் உண்டபடி.

தீனா இப்படி வீட்டினில் பதிலுக்கு பதில் பேசிக்கூட நாள் ஆனதால், அனைவரும் நிறைய நிறைய பேசினர் தான்.. எல்லாமே இந்த ப்ரோமோசன் ட்ரான்ஸ்பர் இதைவைத்து.. வேறு எதுவும் பேசவில்லை.. சூழலை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை..

ரோஜா மகனுக்கு ஊட்டிக்கொண்டு இருக்க, செவ்வந்தியோ “தங்கம்.. நீயும் வந்து சாப்பிடு..” என,

“இருக்கட்டும் அத்தை அண்ணியோட சாப்பிடுறேன்..” என்றவளை தீனாவும் தான் இப்போது பார்த்தான்..

அடித்திருக்கிறேன்.. அதை சிறிதும் வெளிக்காட்டாது இப்போது வந்து எல்லோரோடும் அமார்ந்திருக்கிறாள்.. அதையே நினைத்தவன் பார்வை அவள் மீதே இருக்க, அவளோ ப்ரித்விக்கு விளையாட்டுக்காட்டிக்கொண்டு இருக்க,

ரோஜா இதனை கவனித்தவள் “அவனுக்கு என்ன வேணும்னு பார்த்து வை தங்கம்மை.. உன்னையே பார்க்கிறான்..” என்று மெதுவாகவே சொல்ல,

இவளோ “என்ன வேணும்??!!” என்று சத்தமாகவே கேட்டுவிட்டாள்.

தீனாவோ வேகமாய் தலையை இல்லையென்று ஆட்டியவன், தட்டில் கவனம்கொள்ள, வீட்டில் அனைவருக்கும் தங்கம்மையை இன்னமும் பிடிக்கச் செய்தது..

தீனாவிற்கும் தானோ??!!      

Advertisement