Advertisement

                           தங்கம்மை – 3

கோவிலுக்குள் நுழையவுமே, ரோஜா குழந்தையை தான் வாங்கிக்கொண்டாள். சங்கரோ “நான் போய் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு வர்றேன்..” என்று போக, தங்கம்மை, அவர்கள் கொண்டு வந்திருந்த அர்ச்சனை பொருட்கள், மாலை என்று எல்லாம் எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு இருந்தாள்.

ரோஜாவோ குழந்தையை வைத்தபடி ‘இதை அப்படி வை.. அதை இப்படி வை..’ என்று ஒவ்வொன்றாய் சொல்லிட, தங்கம்மை அதற்கேற்ப எடுத்து வைத்துகொண்டு இருக்க, தீனதயாளனுக்குத்தான் எரிச்சல் ஆனது.

“அக்கா.. பையனை வச்சிட்டு ஏன் நின்னுட்டு இருக்க.. அப்படி உக்கார்..” என,

“அதை ஏன்டா இவ்வளோ கடுப்பா சொல்ற நீ..” என்றவள், “அவர் வந்ததுமே மறுபடியும் எந்திரிக்கனும்.. அதுக்கு நான் நின்னுட்டே இருப்பேன்..” என,

“ம்ம்ச்.. குட்டியை இப்படி கொடு.. நீ போய் உட்கார்..” என்று குழந்தையை அவன் வாங்கிக்கொண்டான்.

“பார்த்துடா கழுத்து இன்னும் நிக்கல..” என்றபடி ரோஜா கொடுக்க,

‘அவ தூக்கினா மட்டும் ஒன்னும் சொல்றதில்லை.. எனக்கு மட்டும் இப்படி..’ என்றுதான் தீனா நினைத்தான்..

அக்கா தம்பியின் இத்தனை பேச்சிற்கும் தங்கம்மை நிமிர்ந்துகூட பார்த்திடவில்லை. அவளுண்டு அவளின் வேலையுண்டு என்றுதான் இருந்தாள். சங்கர் சிறிது நேரத்தில் வந்துவிட,

“போலாமா..” என்று ரோஜா கேட்க, “இல்ல அங்க ரொம்ப கூட்டமா இருக்கு.. பூஜை நடக்குது போல.. சோ கூட்டம் கம்மியாகவும் போகலாம்..” என, அதற்கும் சரியென்று நால்வரும் அப்படியே அமர்ந்துகொண்டனர்.

ரூபினியோடு திருமணமான புதிதில், இதே கோவிலுக்கு வம்படியாய் அவளை அழைத்து வந்திருந்தார்கள். வந்தவளோ முகத்தை உம்மென்று வைத்திருக்க, அப்போது ரோஜா கர்ப்பிணி வேறா, அவளால் ஒரு இடத்தில் நிற்கவும் முடியவில்லை.

சக பெண் என்ற அக்கறை கூட அல்லாது ரூபினி வேண்டா வெறுப்பாய் இருக்க, அன்றும் கூட இதேபோல் தான் கூட்டம். சங்கரோ “நீங்க போய் சாமி கும்பிட்டு வாங்க.. நாங்க இங்க இருந்துக்கிறோம்..” என்றுவிட,

தீனாவோ ரூபினியைப் பார்க்க “எனக்கு சாமி கும்பிட எல்லாம் எதுவும் இல்லை.. யாருக்கு வேணுமோ போய் கும்பிட்டுக்கோங்க…” என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

வேறு வழியில்லாது கொண்டு வந்திருந்த அர்ச்சனைப் பொருட்களை எடுத்துப் போய், தீனா மட்டுமே அர்ச்சனை செய்துவிட்டு வந்தான்..

அதெல்லாம் அவனுக்கு இப்போது நியாபகம் வர, அவனின் கவனம் கையில் இருக்கும் குழந்தையின் மீது இல்லாது போக, தங்கம்மை இதனை கவனித்து சரியாய் யூகித்தாளோ என்னவோ,

“அண்ணி.. ப்ரித்வியை வாங்கிக் கொடுங்களேன்..” என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டாள்,

அவள் சொன்னதற்கு அப்புறம் தான் தீனா, ப்ரித்வியை கொஞ்சம் இறுக்கிப் பிடித்தவன் “எதுக்கு நான் தூக்கினா என்ன??” என்று ரோஜாவினைப் பார்த்துக் கேட்க,

அவளோ “ஏன் தங்கம்.. அவன் தூக்கி வைக்கட்டுமே.. இப்போ இருந்து பிள்ளைத் தூக்கி பழகட்டும்..” என்று சாதரணமாய் சொல்லிவிட, கணவன் மனைவி இருவருமே முகத்தினை திருப்பிக்கொண்டனர்.

சங்கரோ ‘பார்த்து பேசு..’ என்று எச்சரிக்கைப் பார்வை பார்க்க, ரோஜாவோ ‘எல்லாம் எனக்குத் தெரியும்..’ என்று கழுத்தை நொடித்தாள்.

கணவனோடு இயல்பாய் கொஞ்சமாவது பேசினால் தானே, தன்னைப்போல் கணவன் வீட்டு ஆட்களோடும் அது இதென்று பேச வரும். இங்கே அவனை மௌன சாமியாரை அமர்ந்திருக்க, தங்கம்மைக்கு எரிச்சலாக இருந்தது.. சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு இருக்க, சுவாமி சந்நிதானம் முன்னிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைவது கண்டு,

“அண்ணி.. கூட்டம் கம்மியாகுது..” என, சங்கரோ “நீயும் தீனாவும் தட்டு எடுத்துட்டு முன்ன போய் நில்லுங்க.. இவனைத் தூக்கிட்டு நாங்களும் அப்படியே வர்றோம்..” என்று தன் மகனை இப்போது தான் வாங்கிக்கொண்டான்.

அர்ச்சனை தட்டோடு, எழுந்து நின்றவள், ‘வருகிறாயா??!!’ என்பதுபோல் தீனாவைப் பார்க்க, அவனோ அவளிடம் இருந்து இரண்டடி முன்னே நடந்தான்.

‘இதுக்கு நானே முன்ன நடந்திருக்கலாம்..’ என்றெண்ணியவள், அவனோடு ஒட்டியும் நடக்கவில்லை, அவனுக்கு பின்னேயும் வந்திடவில்லை, வேகத்தினைக் கூட்டி அவனை கடந்து முன்னே சென்றுவிட்டாள்.

பின்னிருந்து இதனை எல்லாம் சங்கரும் ரோஜாவும் பார்த்தபடி இருக்க, “விடு.. போக போக சரியாகிடும்..” என்று சங்கர் சொல்ல,

“இந்த வாழ்க்கையாவது என் தம்பிக்கு நல்லபடியா இருக்கணும்…” என்று ரோஜா சொல்ல, “உன் தம்பிக்கு மட்டும்மில்லை தங்கம்மைக்கும் இந்த வாழ்க்கை நல்லபடியா இருக்கணும்..” என்றான் சங்கர்.

அவன் சொல்வதும் நிஜம்தானே.. கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே மகிழ்வாய் இருந்தால், அது எப்படி நல்லதொரு வாழ்வாகும்.. இருவருமே மகிழ்வாய் இருந்தால் தானே அது நிறைவான வாழ்வென்று கூறிட முடியும். தங்கம்மை முகத்தினை வைத்து எதுவுமே கண்டுகொள்ள முடியவில்லை..

ஆனால் தீனா??!!

வீட்டினர் யாருக்கும் ஒரு அளவிற்கு மேலே சொல்லிடவே முடியாத நிலை.

தங்கம்மை அர்ச்சனை தட்டுக் கொடுத்து நிற்க, இவர்களும் பின்னே வந்திட, அர்ச்சகரோ “ராசி நட்சத்திரம் பேர் எல்லாம் சொல்லுங்க..” என, ரோஜாவோ, சங்கரினது, அவளது மற்றும் குழந்தையினது பெயர் நட்சத்திரம் சொல்ல, அடுத்து அர்ச்சனை தட்டு தங்கம்மையிடம் வர,

அவளோ முதலில் தீனாவினது சொல்லி, பின் அவளது சொல்ல, தீனதயாளனுக்கு நெஞ்சை பட்டென்று என்னவோ வந்து அடைத்தது போலிருந்தது.  இரு கரமும் குவித்திருக்க, பார்வையோ அவனின் மனைவி மீதிருக்க, அவளோ மனமார கண்களை மூடி கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தாள்.

ரோஜாவோ “டேய் சாமி கும்பிடு..” என்று லேசாய் அவனின் தோளை தட்ட, “அ..!!” என்றவன் அப்போதுதான் பார்வையை திருப்பினான்.

அதன் பின் வீட்டிற்கு வரும் வரைக்கும் கூட தீனாவிற்கு அப்படியான உணர்வு தான். என்னவோ இன்னது என்று இனம் காணவே முடியாத ஒன்று. ஆனால் பார்வை மட்டும் அவ்வப்போது தங்கம்மை பக்கம் சென்றுவந்து கொண்டிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்ததும் தான் தெரிந்தது தினேஷ் சுப்ரஜா, சுப்ரஜாவின் அப்பா அம்மா எல்லாம் வந்திருப்பது.

தங்கம்மையோ “அண்ணா.. அண்ணி..” என்று சந்தோசமாய் அழைத்தவள், “வாங்க மாமா அத்தை..” என்று அவர்களையும் அழைக்க, அடுத்து தீனாவின் முகம் தான் பார்த்தாள்.

அவனோ அப்படியே நிற்க, குருசாமியோ “தீனா..” என்று மெதுவாய் சொல்ல, அடுத்து தான் “வாங்க..” என்று அவனால் சொல்லவே முடிந்தது.

ஆனால் இந்த சிறிது நேர இடைவெளியில், தங்கம்மைக்கு மனது வெகுவாய் தவித்துப் போனது. எங்கே வந்தவர்களை மரியாதை குறைவாய் நடத்திடுவானோ என்று. அந்த தவிப்பு அவளின் முகதினிலும் வந்து போனதை தீனா கவனிக்கவும் செய்தான்.

ஆனால் ‘வாங்க..’ என்று சொன்னதைத் தாண்டி அவனால் வந்தவர்களோடு எல்லாம் அமர்ந்து சகஜமாய் பேசிட முடியவில்லை.

தினேஷோ “அப்போவே வந்திட்டோம் மச்சான்.. நீங்க கோவிலுக்கு போயிருக்கிறதா அத்தை சொன்னாங்க..” என்று பேச ஆரம்பிக்க,

“ஆ.. ஆமா..” என்றவன், “பேசிட்டு இருங்க..” என்று மேலே சென்றுவிட்டான்..

அவ்வளவுதான்.. அவனால் அங்கு நிற்கவே முடியவில்லை.. மனதினில் என்னவோ ஒரு அழுத்தம்.. ஊர் உலகில் எத்தனையோ பேர் தான் இரண்டாவது திருமணம் செய்கின்றனர்.. ஆனால் இவனுக்கு ஏன் இப்படி என்று அவனே கேட்டும் கொண்டான்..

எத்தனை ஆண்கள், ஒரு பெண்ணோடு பல ஆண்டுகள் வாழ்ந்து, பிள்ளைப் பெற்று பின் அந்த பெண் இல்லை என்றானதும் வேறொரு பெண்ணை மணப்பதில்லை. ஆனால் தீனாவிற்கு இதெல்லாம் கூட இல்லையே.. அவனின் தவறு என்று எதுவுமில்லை..

ஆனால் இப்போது தவித்து நிற்பதும் அவனே.. இயல்பாய் யாரோடும் ஒன்றிடவே முடியாது போனது..  வந்திருப்பவர்களோடு நல்லபடியாக நடந்துகொள்ள வேண்டும் என்று அவனின் புத்தி சொன்னாலும்,  மனது அதற்கு ஒத்துழைக்கவில்லை.

தீனா மேலே சென்றுவிட, தங்கம்மையோ அப்படியே நின்றவள், பின் ரோஜாவின் அழைப்பில் “சொல்லுங்கண்ணி..” என,

“முகம் அப்படியே டல்லாகிடுச்சு.. எல்லாரும் உன்னைத்தான் பாக்குறாங்க..” என்று மெதுவாய் சொல்லிவிட்டு, “என்ன பார்த்துட்டே நிக்கிற தங்கம்மை.. தீனாக்கு வர்றப்போவே  போன் வந்துச்சு தானே பேச போயிருப்பான்..” என்று அனைவர்க்கும் கேட்கும்படி சொல்ல,

“ஆ.. ஆமா..” என்றவள் “நான்.. நான் ஜூஸ் போட்டுட்டு வர்றேன்..” என,

சுப்ரஜா எழுந்து அவளின் அருகே வந்தவளோ “அதெல்லாம் செவ்வந்தி அம்மா போட்டுக் கொடுத்துட்டாங்க..” என்றவள் “நீ எப்படி இருக்க தங்கம்???” என,

“ம்ம்.. நான்.. நான்.. நல்லாருக்கேன் அண்ணி..” என்று சொல்வதற்குள் தங்கம்மைக்கு நாக்கு உலர்ந்து போனது..

“ம்ம் அப்படியா..” என்ற சுப்ரஜாவின் பார்வை தங்கம்மையின் முகத்தினில் படிந்து மீள,

“எ.. என்ன அண்ணி..”  என்றாள் கேள்வியாய்.

“இல்ல முகமே எப்படியோ இருக்கே அதான்..” என்று சுப்ரஜா இழுக்க, தினேஷோ “என்னாச்சு?? தங்கம்.. உடம்பு எதுவும் சரியில்லையா..” என்றபடி அவனும் அருகே வர, தீனாவின் வீட்டினரோ ஒருவித பதற்றமாய் தான் பார்த்தனர்.

“இல்.. இல்லையே.. நான் நல்லாத்தான் அண்ணி இருக்கேன்.. கோவில்ல செம கூட்டம்.. ரொம்ப நேரம் நின்னுட்டே இருந்தோம்.. அதான் எப்படியோ இருக்கு..” என்றவள்,

“அண்ணா.. இவ்வளோ டென்சனா??!!” என்று சிரித்தவள், “எப்படி இருக்கீங்க மாமா.. அத்தை உங்க பேக் பெய்ன் சரியா போச்சா??!!” என்று பேச்சை சுப்ரஜாவின் அப்பா அம்மாவிடம் திருப்பிவிட்டாள்.

மருமகளின் சாமர்த்தியம் கண்டு தீனாவின் பெற்றோர்களுக்கு நிம்மதியானாலும், அவன் இப்படி போனது மனதை மிகவும் சங்கடப்படுத்தியது.

யாரும் ஒன்றும் சொல்லவும் முடியாத நிலை இப்போது.. சங்கர் மட்டுமே வந்தவர்களோடு பேசிக்கொண்டு இருக்க, ரோஜா குழந்தையை தூக்கிக்கொண்டு அவளின் அறைக்கு மேலே வந்தவள் அப்படியே தீனாவின் அறையையும் எட்டிப் பார்க்க, அவனோ எப்போதும் போல் பால்கனியில் போய் நின்றிருந்தான்.

வந்தவர்கள் கிளம்பட்டும் தம்பியிடம் பேசுவோம் என்று எண்ணி அவள் சென்றிட, கீழேயோ சுப்ரஜா “அப்பாவும் அம்மாவும், இவங்களை விருந்துக்கு கூப்பிடத்தான் வந்தாங்க..” என்று செவ்வந்தியிடம் சொல்ல,

“ஓ…!!” என்றவர் “தங்கம்.. நீ போய் தீனாவை கூட்டிட்டு வா..” என,

“சரியத்தை..” என்றவளோ, ‘நான் அழைத்து அவன் என்ன வரவாப் போகிறான்?? இதில் விருந்து வேறு..’ என்று நினைத்தபடி மேலே போனவள், அறையினுள் அவன் இல்லாது போக, நேராக பால்கனிக்குத்தான் போனாள்.

அவளின் மெட்டிச் சத்தமே அவள் வருகிறாள் என்று சொல்லிட, தீனாவின் முதுகு தன்னைப்போல் விறைக்க, தங்கம்மையோ “உங்களை கீழ அத்தை கூப்பிடுறாங்க..” என,

“ம்ம்ச் நான் யாரோடவும் இப்போ பேசுற மைன்ட் செட்ல இல்லை..” என்றான் திரும்பிக்கூட பார்க்காது..

முதல் முறையாய் இப்படி கோர்வையாய் வார்த்தைகள் அமைத்து பேசிய வாக்கியம். அதுவும் கூட ஒரு மறுப்புச் செய்தி.. அவன் முதுகைப் பார்த்து நின்றவளோ,

“கூப்பிட்டது உங்க அம்மா..” என்றுமட்டும் சொல்லிவிட்டு கீழே சென்றிட, “ஷோ…..” என்று எரிச்சலாய் மொழிந்தவன், பின் கீழே வர,  

“விருந்துக்கு கூப்பிட வந்திருக்காங்க தீனா..” என்றார் குருசாமி..

“உங்களுக்கு என்னிக்கு தோதோ அன்னிக்கு சொல்லுங்க மச்சான்..” என்று தினேஷ் சொல்ல,

“ஆமா தம்பி.. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசிக்கிட்டா தானே சொந்தம் வளரும்..” என்று தினேஷ் மாமனாரும் சொல்ல,

“ம்ம்.. இன்னிக்கோட லீவ் முடியுது.. எப்படியும் வீக்கென்ட்ல பார்க்கலாம்..” என்று சொல்லி அத்தோடு முடித்துக்கொண்டான்.

தங்கம்மையோ இதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதுபோலத்தான் இருந்தாள். சுப்ரஜாவோ “என்ன தங்கம்.. பார்க்கலாம்னு சொல்றார்..” என்று கிசுகிசுக்க,

“நான் சொல்றேன் அண்ணி..” என்றுவிட்டாள் அவளும்..

தீனா அங்கே முள்ளின் மீது அமர்ந்திருப்பது போல் இருந்தது தங்கம்மைக்கு. என்னவோ அண்ணன் வழிய சென்று பேசுவது போலவும், தீனதயாளன் அதற்கு போனால் போகிறது என்று பதில் சொல்வது போலவும் தோன்ற

‘ஆண்டவா.. இப்படியான ஒரு வாழ்க்கை தான் எனக்கு நீ கொடுக்கணும்னு நினைச்சியா…’ என்று எண்ணிக்கொண்டாள்.

ஏனெனில் இதுநாள் வரைக்கும் அவர்களின் வீட்டில் உதாசீனங்களுக்கு இடமே இருந்ததில்லை. யாராக இருந்தாலும், யார் வந்தாலும் பேசினாலும் முகம் பார்த்து மதித்து பேசுவது தான் வழக்கம்.. பாரிஜாதம் அதைதான் எப்போதும் செய்வார்.. மக்களையும் அப்படியேத்தான் வளர்த்தார்.

ஆனால் இன்றோ..

அண்ணன் தனக்காக பார்க்கிறானா?? என்று தங்கம்மையின் பார்வை எல்லாம் தினேஷ் மீதே இருந்தது. அவனின் முகத்தினில் எதுவும் தெரியவில்லை தான். ஆனால் இவளுக்கு எல்லாம் தெரியும் அல்லவா. மனது வலித்தது..

நேரம் இப்படியே செல்ல, செவ்வந்தியோ “சாப்பிட்டுத்தான் போகணும்..” என, தங்கம்மை வாய் திறக்கவேயில்லை.

இவர்கள் கிளம்பிவிட்டால் கூட போதும் என்றுதான் தோன்றியது அவளுக்கு.

சுப்ரஜா கூட “ஓய் என்ன உங்க மாமியார் தான் கவனிக்கிறாங்க.. நீ எதுவும் சொல்லாம இருக்க..” என, “அவங்களே சொல்றப்போ நான் என்ன தனியா சொல்றதாம்..” என்று சிரித்து மழுப்பிவிட்டாள்.

“அதுசரிதான்..” என்று சுப்ரஜாவும் சிரித்தவள், “இருக்கட்டுங்கம்மா.. அப்பாவும் அம்மாவும் இனி எங்க வீட்டுக்கு வந்திட்டு அப்புறம் அவங்க வீடு போகணும். லேட்டாகிடும்.. இன்னொரு நாள் எல்லாம் சேர்ந்து சாப்பிடுவோம்..” என்றுவிட, அடுத்து சில நேரத்திலேயே அனைவரும் கிளம்பிவிட,

போகும்போது தினேஷ் தங்கமையின் தலையை லேசாய் வருடியவன் “பார்த்துக்கோ தங்கம்.. எதுன்னாலும் எனக்கு போன் பண்ணு..” என்றிட, அவளுக்கு சட்டென்று கண்கள் கலங்கிப் போனது.

‘இப்போ கூட சொல்றதுக்கு நிறைய இருக்குத்தான்.. ஆனா என்னன்னு சொல்ல??’ என்று நினைத்திட,  “அண்ணா…” என்று அவனின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

தீனாவும் இதனை பார்த்துக்கொண்டு தான் இருந்தான். சொல்லப்போனால் இந்த நேரத்தில், “நீங்க தைரியமா போயிட்டு வாங்க.. உங்க தங்கச்சியை நான் பார்த்துக்கிறேன்..” என்று சொல்லிட வேண்டும்.

ம்ம்ஹும் அப்படியான முத்துக்கள் எல்லாம் அவனின் வாயில் இருந்து விழுமா என்ன?? மனதில் கூட தோன்றவில்லை அப்போது.. என்னவோ வேடிக்கை இது. அப்படிதான் இருந்தான்.

“அட என்ன இது.. ரெண்டு பேரும்..” என்ற சுப்ரஜா “அண்ணனுக்குத்தான் பேசணும்னு இல்லை. என்னோடவும் பேசலாம்..” என்று சிரித்தபடி சொல்ல, தங்கம்மைக்கு கண்ணீரோடு இப்போது புன்னகையும்.

“எப்போன்னு முடிவு பண்ணிட்டு சொல்லுங்க..” என்றுவிட்டு அண்ணனும் அண்ணியும் கிளம்ப அடுத்த நொடி தங்கம்மை விடுவிடுவென அவர்களின் அறைக்குச் சென்றுவிட்டாள்.

என்னவோ அப்படியொரு அழுகை. இப்படியே அண்ணனோடும் அண்ணியோடு கிளம்பிடுவோமா என்ற எண்ணம்.. கிளம்பிடலாம் தான்.. யாரும் இங்கே குறுக்கே புகுந்து தடுக்கப் போவதில்லை. ஆனால் அம்மா??!!

அவரை அவளால் எதிர்கொள்ளவே முடியாதே.

அதினும் மேலாய் வாழ்வில் தோற்றுப் போனவள் என்ற பெயர் தனக்கேன் என்ற கேள்வி?? முயற்சிக்கூட செய்யாது தோல்வியைத் தழுவிட வேண்டுமா என்ற எண்ணம்..

மனது திடமாய் இருந்தாலும் கூட இந்த நொடியை கடந்திட முடியாது அவளுக்கு அழுகை வரத்தான் செய்தது.

தங்கம்மை செல்வதைப் பார்த்த சங்கரோ “என்ன தீனா  இதெல்லாம்..” என்றான் கடியும் விதத்தில்.

“நான் என்ன செஞ்சேன்???!” என்று தீனாவும் கேட்க,

“நீ போய் முதல்ல அந்த பொண்ண சமாதானம் பண்ணு..” என்று குருசாமி சொல்ல,

“ஏன்?? நான் என்ன தப்புப் பண்ணேன்..” என்றான் தீனா இப்போது கோபமாய்.

“சொன்னா கேளு தீனா.. போ.. அழுதுட்டே போறா..” என்று செவ்வந்தி சொல்ல,

“ஆமா எப்போ பாரு எல்லாரும் என்னையே சொல்லுங்க..” என்று கத்தியவன், அதே வேகத்தில் மேலே வர, தீனாவின் காலடி சப்தம் கேட்கவுமே தங்கம்மை முகத்தினை அழுந்தத் துடைத்துக் கொள்ள,

“இப்போ என்ன?? என்னை எல்லாரும் தப்புன்னு சொல்லனும்னு நினைக்கிறியா நீ??” என்று அவளிடமும் கத்தல்.

அவளோ இவன் என்ன கேட்கிறான் என்று புரியாது பார்க்க, “நீ பண்றது எல்லாம் சரி.. நான் பண்றது தப்பு.. அப்படித்தானே இப்போ ஒரு சீன் க்ரியேட் பண்ண..” என்றவன்,

“ம்ம்ச்.. உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா?? எனக்கு இந்த மேரேஜ் லைப்ல இன்ட்ரெஸ்ட் இல்லை. அதை உன்கிட்ட முதல் நாளே சொல்லிட்டேன்.. அப்படியிருக்கிறப்போ நீ இப்படி பண்றதுதான் தப்பு..” என்று இவனே ஒரு முடிவிற்கு வர, 

“போதும்..” என்று எழுந்துவிட்டாள்.

இவனளவு கத்தவில்லை. ஆனால் அவள் போதும் என்றதில் தன்னப்போல் அவனின் பேச்சு நின்றது. கண்களில் ஒரு தீவிர பாவத்தோடு அவளின் முகத்தினை நேருக்கு நேராய் தீனா பார்க்க, அழுது சிவந்திருந்த கண்களும், இன்னமும் ஈரமாய் இருந்த இமைகளும், கண்களை விட லேசாய் சிவந்திருந்த கன்னமும், அதைவிட இன்னமும் பளபளத்த அவளின் துடிக்கும் இதழ்களும் அவனின் கண்களில் பட்டு, மனதினுள்ளே போக முயல மீண்டும் ஓர் நெஞ்சடைக்கும் உணர்வு அவனுள்.

ஆனால் தங்கம்மையோ “வந்தவங்க என்னோட சொந்தம்ங்கிறதுக்காக சொல்லலை.. பட் நம்மளை தேடி யாரா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வர்றாங்கன்னா அவங்களை எப்படி ட்ரீட் பண்ணனும், எப்படி பேசணும்னு கூடவா உங்களுக்குத் தெரியாது..??” என்று அவளும் பதிலுக்கு கேட்டுவிட,

அவள் பேசுகையில் அவளின் முகத்தினில் தோன்றிய கோபம் கூட அவனை திகைக்க வைப்பதாய் இருக்க, அந்த எரிச்சலில் “நான் என்ன செய்யனும்னு நீ எனக்கு சொல்ல வேண்டியது இல்லை.. உனக்கும் எனக்கும் ஒண்ணுமே இல்லைங்கிறப்போ நீ இதெல்லாம் சொல்லக் கூடாது..” என்று விரல் நீட்டிச் சொல்ல,

“ஓ..!!! ஒண்ணுமில்லை.. அப்படிதானே.. எப்படி எப்படி?? என்னை அனுப்பிட்டு.. அப்புறம்?? சார் என்ன செய்யப் போறீங்க?? உங்க வீட்ல அப்போவும் கம்ப்பல் பண்ணி மூணாவதா கல்யாணம் செஞ்சு வைப்பாங்க.. அப்போ வர்ற பொண்ணுக்கிட்டையும் இதையே தான் சொல்வீங்களா??!!” என்று இவளும் வார்த்தையை விட,

“ஏய்…” என்று கத்தியவன், கத்திய வேகத்தில் அவளை அறைந்தும்விட்டான்.

Advertisement