Advertisement

அத்தியாயம் – 2  

“தங்கம் நல்லாருக்கியா டா??!!” என்று அம்மா பாரிஜாதம் கேட்டதற்கு,

“ம்ம் நல்லாருக்கேன்மா..” என்றுதான் சொன்னாள்.

ஆனால் அதை சொல்வதற்குள் ஒரு பிரளயமே நடந்தேறியது அவளுள். இதுநாள் வரைக்கும் அம்மாவிடம் எதையும் மறைத்ததே இல்லை. பொய் சொல்லும் சூழல் எல்லாம் இதுவரை அவளின் வாழ்வில் வந்ததேயில்லை. ஆனால் இனி அப்படி இருந்திட முடியாது என்பது அவளுக்கு உறுதியாய் தெரிந்துபோனது. அதுவும் தீனதயாளன் போன்ற ஒருவனை திருமணம் செய்த பிறகு??

“என்னடா வாய்ஸ் எப்படியோ இருக்கே??!!”

“இ.. இல்லையேம்மா.. நே.. நேத்து ஐஸ் க்ரீம் சாப்பிட்டேன்… ஒருவேளை..” எனும்போதே,

“என்ன தங்கம் நீ..??!! ஐஸ் க்ரீம் உனக்கு சேராதுன்னு தெரியாதா..” என்று படபடத்தார் பாரிஜாதம்.

உண்ணாத ஐஸ் க்ரீம்முக்கு இப்படி படபடப்பவர், மகளுக்கு தான் அமைத்துக் கொடுத்த வாழ்வு சரியாய் அமையவில்லை என்று தெரிந்தால்..

ம்ம்ஹும் தெரியவே கூடாது..

இதுமட்டும் தான் தங்கம்மையின் மனதில்.

‘தங்கம்மை..’ அவர்களின் குலசாமி பெயர்.. அவளுமே அவள் வீட்டிற்கு குலசாமி தான்.

அப்படித்தான் வளர்த்தார் பாரிஜாதம். கண்ணுக்கு கண்ணாய் மகளைப் போற்றித்தான் வளர்த்தார். மகன் தினேஷ் மீது பாசம் இருந்தாலும், மருமகள் வந்திட்ட பிறகு, இன்னமும் மகளின் நலம் நாடினார். தான் நன்றாய் இருக்கும்போதே அவளுக்கு நல்லதொரு வாழ்வு அமைதிட வேண்டும் என்று துடியாய் துடித்தார் பாரிஜாதம்.

“இவர்தான் உனக்கு பாத்திருக்க மாப்பிள்ளை..” என்று தீனதயாளன் புகைப்படம் காட்டுகையில் அவளுக்கு அவனின் தோற்றம் பிடித்திருந்தது.

அதன்பின் அவன் பற்றியும், அவன் குடும்பம் பற்றியும் அம்மா சொல்லிட ‘இரண்டாவதா??!!’ என்று தோன்றினாலும், அம்மாவின் சொல்லுக்கு கட்டுப்பாட்டாள்.

தினேஷ், அவன் மனைவி சுப்ரஜா முதலில் இது வேண்டாம் என்றாலும் கூட, பின் பாரிஜாதம் அவர்களை சமாதானம் செய்திட, அனைத்தும் சுமுகமாய் முடிந்தது.

பாரிஜாதமும், ரோஜாவின் கணவன் சங்கரும் தபால் துறையில் வேலையில் இருக்க, பாரிஜாதத்திற்கு தீனாவின் குடும்பமும் தெரியும், குடும்பத்தில் நடந்த சங்கதிகளும் தெரியும். சங்கர், அவருக்கு கீழே தான் வேலை என்பதால் தீனாவிற்கு திரும்பப் பெண் பார்க்கிறார்கள் என்று சொன்னதும் முதலில் பாரிஜாததிற்கு எந்த யோசனையும் இல்லை.

பேச்சு வாக்கில் சங்கரிடம் தங்கம்மைக்கு வரன் பார்ப்பது சொல்ல, தயங்கி தயங்கித்தான் சங்கர் கேட்டான். பாரிஜாதம் கூட யோசனை செய்ய, விஷயம் தெரிந்து செவ்வந்தி நேராகாவே வந்துவிட்டார்.

“நான் என் பொண்ணு போல பார்த்துப்பேன்..” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்டவரிடம்,

“எனக்கு உங்க எல்லாரையும் தெரியும்.. ஆனா என் பொண்ணுக்கு அப்படியில்லை.. அவளுக்கு இது பிடிச்சு இருந்தா தான் எனக்குமே..” என்றவருக்கு, மகள் இவர்கள் வீட்டினில் நல்லபடியாய் வாழ்வாள் என்று நம்பிக்கை அசைக்க முடியாது இருந்தது.

ஆனாலும் தங்கம்மையின் முடிவு என்று அவளிடம் கேட்க, அவளோ “நீ சொன்னா சரிதான் ம்மா..” என்றுவிட்டாள்.

“இல்ல தங்கம்.. இது..” என்று இழுக்க,

“ம்ம்ச் ம்மா.. உனக்குத் தெரியாதா என்னோட நல்லது எதுன்னு??? உனக்கு இது சரின்னு தோணிச்சுன்னா கண்டிப்பா இது சரியா தான் இருக்கும்..” என்றுவிட்டாள்

ஆனால் தினேஷும் சுப்ரஜாவும் சண்டையிட, தங்கம்மை தான் “அண்ணா.. அம்மாதான் உனக்கும் அண்ணியப் பார்த்தாங்க.. நீ சந்தோசமா இல்லையா என்ன??” என்று வாயடைத்தாள்.

அனைத்துக்கும் மேலாகா தீனதயாளனை அவளுக்குப் பிடித்திருந்தது. இரண்டாவதோ முதலாவதோ, திருமணம்.. கணவன்.. அவனோடான வாழ்வு.. இப்படிதான் எண்ணினாள் தங்கம்மை. அவர்கள் வீட்டிலேயே வந்து பேசியிருக்கிறார்கள் என்றால் அப்போது அவனுக்கும் சம்மதம் இல்லாமலா இருக்கும்??!!!

அப்படி ஏற்றுக்கொண்ட வாழ்வு. ஆனால்… தீனதயளான் திருமணமான முதல்நாளே “ஐம் சோ சாரி..” என, புரியாது தான் பார்த்தாள்.

“வீட்ல சொன்னாங்கன்னு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.. மத்தபடி வேறொண்ணும் இல்லை.. மேரேஜ் லைப் எல்லாம் எனக்கு செட்டே ஆகாது.. சோ..” என்று பேச்சை நிறுத்த,

“சோ??!!!” என்றாள் கேள்வியாய்.

“நீதான் முடிவு செய்யணும்..”

“ம்ம்…” என்றவள் அடுத்து அதைப் பற்றி அவனோடு பேசிடவே இல்லை.

நிச்சயம் இந்த வாழ்வில் இருந்து அவளால் பின்வாங்கிப் போகவே முடியாது. காரணம் பாரிஜாதம்.. தன் வாழ்வையே முடித்தாலும் முடித்துக்கொள்வார். பின் இன்னொன்று.. அவளின் மனது..

இவன் தான் கணவன் என்றானபின் அவர்கள் வாழ்வை பற்றிய ஒரு கற்பனை அவள் மனதினில் இருந்தது. ஆனால் இனிமேல் அது மனதளவில் இருப்பது மட்டுமே உசிதம் என்று அவளுக்குத் தோன்றியது..

திருமணம் முடிந்து இதோ ஆறு நாட்கள் ஆகிப்போனது.. அவர்களுக்குள் சாதாரண ஒரு பேச்சுக்கூட இல்லை.. அவள் பேசினால் இவனோ “ம்ம்..” என்பதனை தவிர வேறொன்றும் சொல்லிட மாட்டான்.. கோவிலில் வைத்து எளிய முறையில் திருமணம்.

மிக மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே ..

சங்கர் கூட சொன்னான் “அந்த பொண்ணுக்கும் ஆசை இருக்கும்ல..” என்று, ஆனால் இப்போது தங்கம்மைக்குத் தோன்றியது “நல்ல வேளை அவ்வளோ கிரான்டா எல்லாம் பண்ணலை..” என்று..

ஆம் அம்மாவிற்கு செலவுகள் இழுத்து வைத்திருந்தால்?? இப்போது அது வேறு அவளுக்கு துன்பமாய் போயிருக்குமே??!!!  தீனதயாளன் பற்றிய அனைத்தும் அவளுக்குத் தெரியும்..

இருந்தாலும்…. என்னவோ அவனின் அதே பழைய அறையில் அவளுக்கு தங்களின் வாழ்வை தொடங்கிட விருப்பமில்லை.. ரூபினி ஒரு மாத காலம் அங்கிருந்தாள் என்றால் ??!! வேறுமாதிரி யோசனைகளை இல்லை என்றாலும் கண்டிப்பாய் தீனதயாளனுக்கு அந்த அறையில் சில பல நல்லதோ கெட்டதோ நியாபகங்கள் இருக்கும்தானே..

திருமணம் முடிந்த மறுநாளே செவ்வந்தியிடம் சொல்லிவிட்டாள், “அத்தை.. தப்பா எடுத்துக்காதீங்க.. அந்த.. அந்த ரூம் எங்களுக்கு வேணாமே…” என்று..

தீனதயாளனிடம் கூட கேட்கவில்லை. சொல்லப் போனால் இந்த யோசனை கூட ‘ஐம் சோ சாரி..’ என்று அவன் சொன்ன பிறகுதான் தோன்றியது. இனி இந்த அறையில் இவனும் கூட இருந்திட கூடாது என்று..

செவ்வந்தியோ புதிய மருமகளின் இந்த பேச்சில் கொஞ்சம் திகைக்க, ரோஜா வந்தவள் என்னவென்று கேட்க “ரூம் வேற வேணும் சொல்றா..” என,

“ஷ்…!!!! அம்மா நம்மலே இதை முன்னாடி யோசிச்சிருக்கணும்..” என்றவள், “நாளைக்கு குள்ள ரெடி பண்ணிடலாம்..” என,

மலர்ந்து சிரித்தவள் “தேங்க்ஸ் அண்ணி..” என்றுவிட்டுப் போனாள்.

ஆனால் இது தெரிந்து தீனாவோ “ஏன் இந்த ரூம்க்கு என்ன??!!” என்று அக்காவிடம் சத்தம் போட,

“தீனா சிலரோட உணர்வுகளை புரிஞ்சுக்கணும்.. உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சு கல்யாணம் பண்ணிருக்கா.. அப்படியிருக்க இது கூட நம்ம செய்யலைன்னா எப்படி??!!” என,

“அக்கா???!!” என்று அதிர்ந்து பார்த்தான் தீனதயாளன்..

“என்னடா??!!”

“நடந்ததுல என் மேல எதுவும் தப்பிருக்கா??”

“டேய் ஏன் டா.. நான் அப்படி சொல்லலை..” எனும்போதே, ரோஜாவின் குழந்தை அழும் சத்தம் கேட்டது..

ஆம் ஆண் குழந்தை, இரண்டு மாதங்கள் முன்னே தான் பிறந்திருந்தது.. ‘ப்ரித்வி..’ என்று பெயர் சூட்டியிருந்தார்கள். தங்கம்மைக்கு இப்போதிருக்கும் ஒரே பொழுது போக்கு அம்சம் அவன்மட்டுமே..

“அண்ணி.. ப்ரித்வி அழறான்…” என்று கீழிருந்து தங்கம்மை குரல் கேட்க,

“ஆ..!! இதோ வரேன் தங்கம்…” என்றவள் “சொல்றதை கேளு தீனா.. உன்மேல தப்பில்ல.. ஆனா இனியும் உன்னோட வாழ்க்கைல எதுவும் தப்பாகிட கூடாதுன்னு தான் சொல்றோம்..” என்றுவிட்டு போனாள்.

தீனதயாளனுக்கு, எரிச்சலாய் இருந்தது. என்ன இந்த பெண்.. நேற்றே தன் மனதில் இருப்பதை சொல்லியாகிற்று. இப்போது போய் அறையை மாற்றச் சொல்லியிருக்கிறாள் என்றால்??!!

இவளா விலகிப் போவாள்??!!

சங்கர் வந்தவன், தீனாவின் இந்த அறையை தான் பயன்படுத்திக்கொள்வதாய் சொல்ல, புதிய அறையில் அனைத்தும் புதிய பொருட்கள்.. தீனாவும் தீனாவின் ஆடைகள் தவிர அனைத்தும் புதியது.. அதில் மிக மிக கவனமாய் இருந்தாள் தங்கம்மை..

சங்கர் பொருட்களை மாற்றி வைக்க ஆள் அழைத்து வந்துவிட “அண்ணா எதுக்குண்ணா எல்லாம் மாத்தி மாத்தி வச்சுக்கிட்டு.. அதெல்லாம் அங்கேயே இருக்கட்டும்.. அம்மா அனுப்பின திங்க்ஸ் எல்லாம் அப்படியே தானே இருக்கு.. அதை மட்டும் இங்க செட் பண்ணலாமே..” என்று மிக மிக தன்மையாய் தான் சொன்னாள்.

ஆனாலும் அவளின் அந்த சொற்களை சங்கரால் மறுக்கவே முடியவில்லை.. அப்படியொரு அழுத்தமும் இருந்தது..

“அப்படியா தங்கம்மை சொல்ற??!!” என,

“அப்படித்தான் ண்ணா…” என்றுவிட்டு போய்விட்டாள்.

தீனா இதல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். கோபம் வந்தது.. அம்மாவிடம் தான் சொன்னான்..

“ஏன்ம்மா இப்படி..??” என்று..

“சும்மா இருடா.. தங்கம் தங்கமான பொண்ணு.. அது மனசு கோணிட கூடாது.. அப்புறோ அந்த பொருள் எல்லாம் எங்க வைக்கிறதாம்..” என்று எளிதாய் தட்டிவிட்டார்.

அந்த அறைக்கு வந்து பார்க்க, அவனுக்கோ யாரினது அறையிலோ தான் இருப்பதாய் ஓர் உணர்வு.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் “உனக்கு வேணும்னா இந்த ரூம்ல நீ இருந்துக்கோ..” என்று அவளிடம் எங்கோ பார்த்தபடி சொல்ல,

“எனக்கு எது வேணும் வேணாம்னு உங்களுக்கு என்ன தெரியும்??!!!” என்று அவள் கேட்ட விதத்தில் என்னவென்றே சொல்ல முடியாத ஓர் அழுத்தம் அவனுள் வந்து ஒட்டிக்கொண்டது..

தான் நினைத்தது போல் இவள் இல்லையோ??!! என்று தோன்ற, அவனின் மனதோ இவளை நீ நினைத்தாயா??!! என்று கேட்டது.

இல்லைதான்.. ஆனால் தனக்கு இந்த திருமண வாழ்வில் விருப்பமில்லை என்றால் அவள் நிச்சம் விலகிப் போவாள் என்ற நினைப்பு இருந்தது.. அவள் செய்யும் காரியங்களோ அவனின் நினைப்பை ஒவ்வொன்றாய் தவிடு பொடியாக்கும் போல.

என் வாழ்வில் இருந்து போ என்று அவன் சொல்ல, அவளோ அவனையே புதிய அறைக்கு மாற்றிக்கொண்டு வந்துவிட்டாள்.

தங்கம்மை சொன்னதற்கு பதில் சொல்லாது தீனா நிற்க, அவளோ அவ்வளோதான் நான் பேசி முடித்துவிட்டேன் என்பதுபோல் கீழே சென்றுவிட்டாள்.. சங்கர், ரோஜா ப்ரித்வி என்று அனைவரும் இவனின் பழைய அறையில் அன்றே வந்துவிட, இவனுக்கு வேறெங்கும் போகும் வழியும் இல்லை. 

அடுத்து வந்த நாட்கள் கூட இப்படித்தான்..             

இதோ இன்று ஆறாவது நாள்.. கோவிலுக்கு போக வேண்டும் என்று வந்து சொல்லிவிட்டுப் போகிறாள். இப்போதெல்லாம்  வீட்டிலிருப்பவர்கள் கூட எதுவென்றாலும் இவனிடம் நேராய் சொல்வதில்லை. தங்கம்மை தான் அவர்களுக்கான தொடர்பு சாதனம் என்பது போல் அனைத்திற்கும் அவளைத்தான் அனுப்புகிறார்கள்..

“உங்களை பார்க்க யாரோ வந்திருக்காங்க..”

“மாமா இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க..”

“அத்தை இதை வாங்கிட்டு வரச் சொன்னங்க..”

இப்படி எதுவாகினும் அவளே தான் வந்தாள். அனைத்திற்கும் அவனின் பதில் ‘ம்ம்..’ மட்டுமே..

சில நேரங்களில் அவளின் பார்வை தன்னை தொடர்வதாய் இருக்கும். திரும்பிப் பார்த்தால் தங்கம்மை ஏதாவது வேலை செய்துகொண்டு இருப்பாள். வீட்டில் அவளின் இருப்பை அவளது மெட்டிச் சத்தமோ இல்லை ப்ரித்வியை அவள் கொஞ்சும் குரலோ தான் சொல்லும்.

அதற்குமேல் அவளின் பேச்சு எங்கும் கேட்காது.. ரோஜாவோ இல்லை செவ்வந்தியோ ஏதாவது பேசினால் பதிலுக்கு நன்றாய் பேசுவாள்.. அதுவும் சிரிக்க சிரிக்கப் பேசுவாள்..  இன்னும் அத்தனை ஒட்டவில்லை என்று நன்கு புரிந்தது.

அனைவர்க்கும் ஏதுவாய் அவளும், அவளுக்கு ஏதுவாய் அனைவரும் இருக்க, இந்த அனைவர் என்ற பிரிவில் தீனதயாளன் மட்டும் பிரிந்து நின்றான். என்னவோ இவள் வந்த பிறகு, வீட்டினரிடம் கூட தான் ஒன்றிட முடியவில்லையோ என்று தோன்றியது..

அதிலும் அக்காவின் மகனை, ஆசையாய் கொஞ்சலாம் என்று பார்த்தால் அவனோ எந்நேரம் பார் அவனின் அத்தையின் கையில் தான் இருக்கிறான்..

ரோஜா கூட கேட்டுவிட்டாள் “வர வர என் பையனை நீ தூக்குறது கூட இல்லை..” என்று..

ஆகமொத்தம் தான் அனைவர்க்கும் அந்நியமான தோற்றம் தீனாவின் மனதினுள்.

இப்படியே சிந்தித்தே நிற்க, தங்கம்மை தயாராகிக் கூட வந்துவிட்டாள். இவன் அப்படியேதான் நின்றான். அவனைப் பார்த்தவள், ஒன்றும் சொல்லாது, ரோஜாவிடம் போய் குழந்தையை வாங்கிக்கொள்ள,

“என்ன நீ மட்டும் வர?? அவன் எங்க??” என்று அவள் கேட்க,

“கோவிலுக்கு போகணும்னு நான் சொன்னப்போ எப்படி நின்னாரோ இப்போவரைக்கும் அப்படிதான் அண்ணி..” என்றவள் “டேய் குட்டிம்மா.. கோவிலுக்கு போறோமா??!! சார் அதான் அழாகா ரெடியாகிருக்கீங்களா..” என்று ப்ரித்வியை கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.

ரோஜாவோ “தீனா..” என்றழைத்தபடி வர, “அக்கா.. என்ன??!!” என்றுதான் வந்தான் இவனும்..

“என்னடா??!! இன்னும் ரெடியாகலையா??!! நாங்க எல்லாம் ரெடி..” என, அவனின் பார்வை, தங்கம்மை இங்கே இருக்கிறாளா என்றுதான் தேடியது.

“ஓய்!!! என்ன யாரைப் பாக்குற??!! தங்கம்மை ரெடியாகி ப்ரித்வி கூட இருக்கா.. சீக்கிரம் வா.. எதையாவது யோசனை பண்ணிட்டே நிக்காத..” என்று அவன் தோள்களை தட்டிவிட்டுப் போக, அடுத்து பத்து நிமிடங்களில் தீனாவும் தயாராகி கீழே வர, சங்கர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

“மாமா நான் டிரைவ் பண்றேன்..” என்றவனை, “வேணாம் தீனா..” என்றுவிட்டான்..

ரோஜா வந்தவள், முன்னே அமர்ந்துகொள்ள, தங்கம்மை குழந்தையை தூக்கியபடி வர, தீனாவோ அப்படியே நிற்க, “டோர் ஒப்பன் பண்ணுங்க..” என்ற அவளின் வார்த்தைகளில் தன்னையும் அறியாது தான் அவனின் கரங்கள் கார் கதவினை திறந்துவிட்டது..

சங்கரோ “தீனா வண்டில ஏறு.. இன்னும் எவ்வளோ நேரம் இப்படியே நிக்கப் போற..” என,

‘இதென்னடா தன் வாழ்வு…’ என்ற நிலையில் அவன் இருந்தான்.

வீட்டிற்கும் கோவிலுக்குமாய் ஒரு இருபது நிமிட கார் பயணம்.. அந்த இருபது நிமிடமும் தங்கம்மையின் பார்வை குழந்தை மீது மட்டுமே.. தீனாவிற்கு ஆசையாய் இருந்தது.. ப்ரித்வியை தூக்கிக் கொஞ்சிட வேண்டும் என்று. ஆனால் அவள் வைத்திருக்கையில் தான் எப்படி கொஞ்சுவது என்ற தயக்கம். இருந்தாலும் அவனும் ப்ரித்வியை தான் பார்த்துகொண்டு இருந்தான்.

போக்கை வாய் தெரிய ப்ரித்வி சிரிக்க, தங்கம்மையின் முகத்தினில் ஒரு மெல்லிய புன்னகை..

“என்ன செல்லம் அப்படி சிரிப்பு..” என்று தங்கம்மை கொஞ்ச, தீனாவின் பார்வை இப்போது தங்கம்மை மீது பதிந்து மீண்டது. 

Advertisement