Advertisement

                                                            தங்கம்மை – 11

தீனாவிற்கு போதும் போதும் என்றாகிப்போனது ரோஜாவை சமாதானம் செய்வதற்குள். அவளோ அவன் என்ன சொன்னாலும் கேட்பதாய் இல்லை..

“நீ இப்படி பேசுவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடா..” என்று அதையே திரும்ப திரும்ப சொல்ல,

“சரிக்கா.. நானும் ஒரு வேகத்துல பேசிட்டேன் போதுமா.. இப்போ வந்து சாப்பிடு..” என,

“வேணாம் எனக்கு பசிக்கல..” என்று பிகு செய்துகொண்டாள் ரோஜா.

தம்பி வந்து சமாதானம் செய்வது ஒருபக்கம் சந்தோசம் என்றாலும், அத்தனை சீக்கிரம் இறங்கி வருவதா??!!!

“அதெப்படி பசிக்காம போகும்.. உனக்கு பிடிச்சது வேற வாங்கிட்டு வந்தோம்..” என,

“ஓ… அதெல்லாம் கூட உனக்கு இப்போ நியாபகம் இருக்க??!!” என்றாள் இடக்காய்.

“ம்ம்ச் நீ ஏன் க்கா இப்போ இப்படி பேசுற??! இல்லை நான் என்ன செய்யனும்னு சொல்லு.. செய்றேன்..” என்ற தீனாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

இந்த பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று.. தானாக ஒன்றை எண்ணி, அவர்களாகவே அது அப்படிதான் என்று முடிவும் செய்து, பின் நீ இப்படி இல்லை என்று சொன்னால் இந்த ஆண்கள் வர்க்கம் என்னதான் செய்வர்.. பாவம்…

“எனக்காக ஒன்னும் நீ செய்ய வேணாம்..”

“சரி நான் ஒன்னும் பண்ணலை.. நீ வந்து சாப்பிடு..”    

“எனக்கு பசிக்கிறப்போ நான் சாப்பிட்டுப்பேன்.. இப்போ எனக்கு வேணாம் நீ போ..” என,

“ஏன் இதுக்கு முன்னாடி நமக்குள்ள சண்டையே வந்தது இல்லையா??!!” என்று தீனா கேட்கவும்,

“அதெல்லாம் எனக்குத் தெரியாது…” என்று அவள் முகம் தூக்க, ‘இதற்குமேல் முடியாதடா சாமி..’ என்று தீனா வெளியே வந்து அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்துகொண்டான்.

தீனா வெளியே அமரும் சத்தம் கேட்டு, தங்கம்மை வந்து எட்டிப் பார்த்துவிட்டு போனாள் தான். ஆனால் ஒருவார்த்தை என்னவென்றோ இல்லை உள்ளே வா என்றோ சொல்லவில்லை.

அவனும் ‘போ டி..’ என்று சொல்லிக்கொள்ள,

சிறிது நேரத்தில் ரோஜா வெளியே வந்தவள் அவன் அங்கிருப்பதை பார்த்து “இங்க என்ன பண்ற??!!” என்றாள் குழப்பமாய்..

“ம்ம் வேண்டுதல்..” என்று தீனா சொல்ல,

“ம்ம்ச் என்னடா??!!” என,

“உன்னை சாப்பிட வைக்காம நான் உள்ள வரக்கூடாதுன்னு என் பொண்டாட்டி சொல்லிட்டா…” என்று தீனா சொல்லவும்,

‘என்னது??!!!’ என்று பார்த்தா ரோஜாவிற்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.

ரோஜா சிரிக்கவும் அது தீனாவிற்கு அப்பாடி..!! என்று இருந்தாலும், தான் இப்படி அல்லல்படுவது சிரிப்பாகவா இருக்கிறது என்றெண்ணி

“இப்போ என்னத்துக்கு இப்படி சிரிப்பு உனக்கு.. போ போ போய் சாப்பிட்டு வா.. எனக்குத் தூக்கம் வேற வருது..” என,

அவனைப் பார்த்து நின்றவளோ “தங்கம்மை…” என்று அழைத்தாள்.

“இப்போ எதுக்கு அவளை கூப்பிடுற..” என்று தீனா கேட்க,

“யப்பா சாமி.. உன் பொண்டாட்டியை ஒன்னும் செஞ்சிட மாட்டோம்..” என்றவள், தங்கம்மை வரவும்,

“இவனை ஏன் இப்படி வெளிய உக்கார வச்சிருக்க..” என்று கேட்க,

“ரூம்குள்ள தான் வரக்கூடாது சொன்னேன்.. இப்படி வெளிய உட்காரணும்னு எல்லாம் சொல்லலை அண்ணி..” என்ற தங்கம்மையின் பார்வையோ கணவன் பக்கம் சென்று வர,

அவனோ ‘சுத்தம்…!!!’ என்று பார்த்தான்.

இருவரையும் பார்த்த ரோஜாவோ “வீடுன்னா சண்டை எல்லாம் வரத்தான் செய்யும்.. அதுக்காக என் தம்பியை  நீ உள்ள வரக்கூடாது சொல்வியா??!!” என,

‘அடுத்ததா??!!’ என்று தீனா திகைத்துப் பார்க்க,

“சண்டை வரும்தான்.. ஆனா உள்ள வரக்கூடாதுன்னு சொன்னது என் புருஷனை.. உங்க தம்பியை இல்லை..” எனும்போதே தங்கம்மைக்கு சிரிப்பு வந்துவிட்டது.

இதென்னடா கடைசியில் தட்டு நம் பக்கம் திரும்புகிறது என்று. ஆனாலும் அவளுக்கு மனதில் ஓர் எண்ணம், எது எப்படியாக இருந்தாலும், அது சின்ன சண்டையோ இல்லை பெரிய சண்டையோ இப்போதே ஒரு விஷயத்தை தெளிவு படுத்திட வேண்டும் என்று.

அதாவாது அக்கா தம்பி என்ற உறவுக்குள் நான் வரமாட்டேன்.. அதேபோல் எங்கள் கணவன் மனைவி என்ற உறவுக்குள் யாரும் தலை கொடுக்கக் கூடாது என்று.

இது தீனாவிற்கும் புரிந்தது. ரோஜாவிற்கும்  புரிந்தது.

சொல்வதை சொல்லியாகிவிட்டது என்ற ரீதியில் தங்கம்மை நிற்க, தீனாவோ “நீ போய் சாப்பிடுக்கா.. நான் பார்த்துக்கிறேன்..” என,

ரோஜாவோ “ம்ம் பார்த்துப்பா தம்பி..” என்று கேலியாய் சொல்லிவிட்டுப் போனாள்.

அவள் இறங்கியதும், “ஓய் என்ன??!! பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு..” என்று கேட்டுக்கொண்டே தீனா அருகில் வர,

“ம்ம் அங்க ப்ரித்வி மட்டும் தூங்கிட்டு இருக்கான்.. அண்ணி வர வரைக்கும் அவனோட இருந்துட்டு வாங்க..” என்றுசொல்லிவிட்டு தங்கம்மை மீண்டும் உள்ளே சென்றிட,

‘இதுக்கு நான் ஊருக்கே வந்திருக்கத் தேவையில்லை..’ என்று சொல்லிக்கொண்டே போனான் ப்ரித்வியை காண..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் ரோஜா வந்திட இப்போதும் “என்னடா??!!” என்று கேட்க,

“நீ வர வரைக்கும் இவனோட இருங்கன்னு சொல்லிட்டு போயிட்டா..” என்றவன் எழுந்தபடி “ஏதாவது வேணும்னா கூப்பிடுக்கா..” என்று சொல்லிவிட்டு  அறைக்குச் செல்ல, அங்கேயோ தங்கம்மை அவனுக்காக காத்திருந்து அமர்ந்திருப்பது தெரிந்தது..

ஆனால் தீனாவோ கதவை அடைத்தவன், அவளோடு ஒன்றும் சொல்லாது, பீரோவில்  இருந்து தேடி பிடித்து ஒரு சட்டையை எடுத்து போட

“இந்நேரம் வெளிய போறீங்களா??!!” என்று தங்கம்மை கேட்க,

“ம்ம்ம் ஒருத்தி என் சட்டையை கிழிப்பேன் சொன்னா.. அதான் போடறேன்..” என,

“ஆ!!” என்று தங்கம்மை வாய் பிளக்க,

“என்ன பேச்சு மட்டும்தானா??!!” என்று தீனா அவளை சீண்ட, தங்கம்மை அமைதியாய் அவனைப் பார்த்தபடி இருக்க,

“அப்போ பேச்சு மட்டும்தான்..” என்றபடி அங்கே வந்து தீனா அமர,

“நீங்க ஏங்க இப்படி ஆகிட்டீங்க…” என்றாள் வியந்து..

“எப்படி??!!” என, “அதான் இப்படி.. சட்டை போட்டு வந்து கிழின்னு..” என்று அவள் அவனையே சுட்டிக் காட்ட,

“ஹா ஹா ஏன் சொன்னா என்ன??!! நீ சொல்லலாம்.. ஆனா நான் செய்யக் கூடாதா??!!” என்றவன்,

“ஒன்னு நீ சொன்னதுபோல சட்டையை கிழி.. இல்லை நீயே கலட்டி விடு..” என்று அவளின் முன்னே நிற்க,

அவனின் முகத்தினைப் பார்த்தவளோ “நீங்க இருக்கீங்களே..” என்றவள், அவனின் சட்டையை பற்றி தன்மீது இழுத்துக்கொண்டாள்.     

வெகு நாளைக்கு பிறகு இருவருக்குமான அந்த தனிமை பொழுது இனிமையாய், நிறைய நிறைய மனம் திறந்த பேச்சுக்களோடு கழிந்தது..

மறுநாள், வீட்டில் ஒரு சுமுக சூழல் நிலவ, பெற்றவர்களுக்கு அப்போதுதான் நிம்மதியாய் இருந்தது. தீனா செவ்வந்தியை அழைத்துக்கொண்டு அப்பாவோடு மருத்துவமனை சென்றுவிட, வீட்டினில் ரோஜாவும் ப்ரித்வியும் தங்கம்மையும் மட்டும் இருக்க, ரோஜா எதுவும் கேட்பாளோ என்று தங்கம்மை பார்க்க, ரோஜா எதுவும் பேசவில்லை..

எப்போதும் போலவே இருந்தாள். இப்போது தான் தங்கம்மைக்கு மனது முழு நிம்மதியாய் இருந்தது.

மருத்துவமனைக்குச் சென்றவர்கள், அடுத்த ஒருமணி நேரத்தில் திரும்பிட, “டாக்டர் நடக்க ஆரம்பிங்கன்னு சொல்லிட்டார்..” என்றார் செவ்வந்தி .

அவரின் முகத்தில் தெரிந்த சந்தோசமே, அனைவருக்கும் ஒரு சந்தோசம் கொடுக்க,

“ஆனா இப்போவே சொல்லிட்டேன் ம்மா ரொம்பவும் எல்லாம் ஸ்ட்ரைன் பண்ணிக்கக் கூடாது.. மெதுவா எல்லாமே பண்ணலாம்..” என்று தீனா சொல்ல, அன்றைய நாள் அப்படியே நகர்ந்து முடிந்து தீனாவும் திரும்ப ஊருக்குக் கிளம்பிவிட்டான்.

அடுத்தடுத்து நாட்கள் வழக்கம் போலச் செல்ல, செவ்வந்தி இப்போது ஓரளவு நடக்கத் தொடங்க, வீட்டு சூழல் பழையபடி மாறிடத் தொடங்கியது.

“ஆள் எல்லாம் வேணாம்…” என்று செவ்வந்தி சொல்ல,

“இருக்கட்டும் அத்தை, அப்புறோ நானும் ஊருக்கு போயிட்டா என்ன செய்வீங்க…” என,

“ஆமா முதல்ல அதுக்கு ஒரு வழி செய்யணும்.. தீனா மெலிஞ்சது போல இருக்கான்.. நீ போனாதான் சரியாவான்..” என்றவருக்கு இப்போது மகனின் வாழ்வை எண்ணி பெரும் நிம்மதி.

தங்கம்மைக்கும் அது தான் தோன்றியது. தீனாவின் மெலிவு.. நிறைய மனதில் போட்டு உருட்டுகிறானோ என்று தோன்ற, இத்தனை நாள் செவ்வந்தியை கவனித்ததில் இவனைக் கவனிக்கத் தவறினோமோ என்றும் இருக்க, அன்றைய இரவில் பேசும்போது கேட்டாள்

“மனசுல எதுவும் போட்டு குழப்பிக்கிறீங்களா ??!!” என்று.

ஆனால் தீனாவிற்கு அவள் எதைக் கேட்கிறாள் என்று விளங்காது “நான் என்ன குழப்பிக்கிறேன்..??” என்று கேட்க,

“அதான்.. அது.. வந்து..” என்று இழுக்க,  

“எதுன்னாலும் சொல்லு..” என்றான், என்ன கேட்கப் போகிறாளோ  என்று.

“இல்லை பழசை தான் இன்னும் ஏதாவது போட்டு..” என்று சொல்லும்போதே,

“போதும் தங்கம்மை..” என்று சத்தம் போட்டுவிட்டான் தீனா..

சட்டென்று ஒரு கோபம் வந்துவிட்டது தீனாவிற்கு. என்ன இப்படி கேட்கிறாள் என்று தோன்ற, முகத்தை சுருக்கி வைத்துகொள்ள, “இல்லைங்க.. நீங்க மெலிஞ்சது போல..” என்று தங்கம்மை சொல்லும்முன்னே,

“மெலிஞ்சது போலன்னா??!! என்ன யாருக்கு ஏங்கி இப்படி மெலிஞ்சிட்டேன்னு கேட்கிறயா??!!” என்றான் காட்டமாய்..

பழையது என்பது அவனைப் பொருத்தமட்டில் இப்போது ஒன்றுமே இல்லாதது.. அவ்வளவே. அதை அவன் மறந்துகூட போய்விட்டான்.. இப்போது அவன் மனதில் இருப்பது எல்லாம் அவனின் இப்போதைய வாழ்வு, குடும்பம், தங்கம்மை இவைகளே…

‘நான் இவளைப் பத்தி மட்டும்  நினைச்சிட்டு இருக்க.. இவ நான் பழசை நினைக்கிறேன்னு எப்படி நினைக்கலாம்..’ என்று எண்ணியவன்,

 ‘நீயே இப்படி கேட்கலாமா..’ என்ற கோபம் அவனுக்கு.

“அச்சோ அப்படி எல்லாம் இல்லைங்க..” என்று அவள் சொல்லும்போதே,

“இப்போ எதுக்கு நீ பழசை பேசுற??!!” என்றவன் “சரி கேளு உனக்கு என்ன வேணுமோ கேளு..” என,

“இல்லை ஒண்ணுமில்லை..” என்றாள் வேகமாய்.

“அப்படியா??!! நிஜமாவா?!!” என,

“ம்ம்..” என்றவளுக்கும், அவனின் பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை. நான் என்ன கேட்கிறேன் இவன் என்ன சொல்கிறான் என்று. அவளுக்குமே முகம் மாறிவிட,

“இப்போ என்ன மனசுல நினைக்கிற??!!” என்றான் திரையில் தெரியும் அவளின் முகத்தினைப் பார்த்தே.

“நான் எதுவும் நினைக்கல..” என்றவளுக்கு குரலும் மாறிட,

“ம்ம்ச் தங்கம்மை.. என் மனசுல எதுவுமே இப்போ இல்லை.. நம்ம வாழ்கையை தவற..” என,

“அப்.. அப்போ நான் மட்டும் என்ன நினைச்சேனாம்??!! சொல்லுங்க.. என்ன நினைச்சேனாம்..??!!” என்று அவளையும் மீறி கத்திவிட்டாள்.

“தங்கம்மை..!!!” என்று அதிர்ந்து தீனா பார்க்க,

“ஆமா தங்கம்மை தான்… என்னோட பேர் சொல்லி கூப்பிட கூட உங்களுக்கு அவ்வளோ நாள் ஆச்சுல… இதெல்லாம் நான் என்னிக்காவது சொல்லிருக்கேனா??!! மெலிஞ்சது போல இருக்கீங்களே என்னன்னு கேட்டா இப்போ இப்படி கத்துறீங்க??!!” என்று தங்கம்மை பதிலுக்கு கோபிக்க,

“சரி சரி.. விடு.. இப்போ உனக்கு என்னவோ மனசு சரியில்லை போல.. நீ தூங்கு” என்று தீனாவே இறங்கி வர,

“ஏன்??!! எனக்கு மனசு சரியில்லைன்னு இப்போதான் தெரிஞ்சதா?!!! இப்போ மட்டும் என்ன கரிசனம்… உங்களுக்கு.. பெருசா பேச வர்றீங்க.. என்னை போன்னு சொல்றப்போ எங்க போச்சு இதெல்லாம்..” என,

‘அய்யோடா..’ என்றாகிப் போனது தீனாவிற்கு..

தான் ஒன்று நினைத்துப் பேச அது எங்கோ தொட்டு கடைசியில் இப்படி ஆரம்பிக்க, தங்கம்மைக்கு இத்தனை நாள் மனதில் அழுத்தி அழுத்தி வைத்தது எல்லாம் வெளி வந்துவிட்டது..

“பதில் பேசுங்க.. என்னவோ நான் தப்பா கேட்டதுபோல பேசுறீங்க.. அப்போ நீங்க எதுவுமே பண்ணலையா??!! ஹா.. பண்ணது எல்லாம் நீங்க.. நான் ஏதாவது சொல்லிருப்பேனா??!!” என்றவள்,

“என்னவோ.. அன்னிக்கு அப்படி நடந்திடுச்சு.. வாழணும்னு ஆரம்பிச்சிட்டீங்க.. அதான் உண்மை..” என்றவள் கோபமாய் பார்க்க,

“போதும் நிறுத்து டி.. விட்ட ரொம்ப பேசுற..” என்றவன் அப்படியே அழைப்பையும் துண்டித்துவிட்டான்..

கோபம் இருவருக்குமே கோபம்.. ஏனிந்த கோபம்?? என்று ஒன்றும் விளங்கிடவில்லை. எங்கே பேச்சு மாறியது என்றும் புரியவில்லை..  யார் மீது தவறு என்றும் புரியவில்லை..

ஆனால் அதன்பின் இருவருக்கும் பேச்சு இல்லை..

மூன்று நாட்கள் சென்றபிறகும் கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவளும் அழைக்கவில்லை.. அவனும் அழைக்கவில்லை.. இருவரின் கோபமும் அப்படியே இருக்க,

தீனாவோ குருசாமிக்கு அழைத்தவன் “ஒரு நல்ல நாள் பார்த்து தங்கம்மையை இங்க கூட்டிட்டு வாங்கப்பா..” என்றுவிட்டான்..

“சந்தோசம்டா தீனா.. நீ வரலையா..” என,

“இல்லப்பா.. நிறைய வேலை இருக்கு.. வர முடியாது.. லீவ் எடுக்கவும் முடியாது..” என்றிட,

“சரி நாள் பார்த்துட்டு சொல்றேன்..” என்றவர் அதற்கான ஏற்பாடையும் செய்துவிட்டார்.                          

சென்னை செல்வது சந்தோசமாய் இருந்தாலும், இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் அந்த சந்தோசத்தின் அளவை குறைத்திடவே செய்திருந்தது. இருவருமே முகம் தூக்கிக் கொள்ள, வீட்டினர் தான் என்னவோ ஏதோவென்று நினைக்கவேண்டியதாய் இருந்தது.

ஏற்கனவே பொருட்கள் எல்லாம் அங்கே தீனா எடுத்து வைத்திருக்க, இப்போது தங்கம்மை அவளின் உடைகள், பின் அவளுக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே கொண்டு செல்வதால், அத்தனை வேலைகளும் நிறைய இல்லை.  போய் பால் காய்ச்சி குடியேறுவது மட்டும் தான்..

தீனா வரவில்லை அவளை அழைத்துக்கொண்டு செல்ல. அவளுக்கு அது வருத்தம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

இரு வீட்டினரும் எல்லாருமே இருக்க, வீடும் நல்ல விஸ்தாரமாய் இருக்க, அனைவர்க்கும் தங்கம்மை தான் பார்த்து பார்த்து எல்லாம் செய்து கொண்டு இருந்தாள்.

நல்ல நேர்ம் பார்த்து பால்காய்ச்சி, விளக்கேற்றி சாமி கும்பிட, தீனாவோ இன்னமும் கோபம் குறையாமல் தான் இருந்தான்.. இத்தனை பேர் இருக்கையில் அவனிடம் நின்று பேசவும் முடியாது. சண்டையோ சமாதானமோ எல்லாமே தனியேதான் என்று எண்ணிய தங்கம்மையும் அமைதியாகவே இருக்க,

ஆண்கள் அனைவரும் ஹாலில் படுத்துக்கொள்ள, ரோஜா பிள்ளையோடும் செவ்வந்தியோடும் ஒரு அறையிலும், தங்கம்மை சுப்ரஜா பாரிஜாதம் மூவரும் ஒரு அறையில் இருந்துகொள்ள, தீனாவிற்கும் சரி தங்கம்மைக்கும் சரி உறக்கம் என்பதே இல்லை..

‘நானும் தான் கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கனும்..’ என்று தங்கம்மை நினைக்காத நேரமில்லை..

தீனாவோ ‘என்னை பார்த்து இப்படி கேட்டுட்டா..’ என்று வருந்தாத நொடிகள் இல்லை.

ஆம் தங்கம்மைக்கு தான் பேசியது தவறு என்று தோன்ற, அவனோடு தனியே பேசும் நேரத்திற்காக காத்திருந்தாள். வீட்டினர் இத்தனை பேர் இருக்க எங்கே தனியே பேசுவது??!!

இரண்டு நாட்கள் அனைவரும் இருந்துவிட்டு கிளம்ப, முதன் முதலாய் இருவரும் தனியே இருக்கும் சூழல்..

என்னதான் கணவன் மனைவி என்று வாழ்வு இருந்தாலும், முதல் முறையாய் இருவரும் தனியே இருப்பது இருவருக்குமே ஒரு புதுவித படபடப்பு கொடுக்க, தங்கம்மையோ ஏதாவது சொல்வானோ என்று பார்க்க, அவனோ வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தான்..

அப்போதும் அவள் அப்படியே தான் பார்க்க, “கிளம்பு.. இங்க எது எது எங்க கிடைக்கும்னு கூட்டிட்டு போய் காட்டிடறேன்.. இல்லை உனக்கு ஏதாவது தேவைன்னா சொல்லு வாங்கிக்கலாம்.. நாளைக்கு இருந்து நான் வேலைக்கு போனா வர லேட்டாகும்..” என்று பார்வையை எங்கோ பதித்து சொல்ல,

“அது… இல்லை.. இப்போ எதுவும் தேவையில்லை..” என்றவள்,

“சாரிங்க.. நா..” என்று ஆரம்பிக்க,

“போதும்.. நான் என்னவோன்னு நினைச்சேன்.. பட் உன் மனசுல இவ்வளோ இருக்குன்னு தெரியலை.. ஆமா நீ சொன்னது மாதிரி எப்படியோ வாழணும்னு ஆரம்பிச்சிட்டேன்.. இனிமே உனக்கு பிடிக்காம எதுவும் நடக்காது..” என்றவன்,

வெளியே போய் நிற்க, தங்கம்மை மனது வலித்தது..           

Advertisement