Advertisement

                           தங்கம்மை – 10

தங்கம்மை நினைத்தது போல் அத்தனை எளிதாய் எதையும் சமாளிக்க முடியவில்லை. வேலைக்கு ஆள் இருந்தாலும் கூட, அனைத்துமே அவள் முன் நின்று பார்க்க வேண்டியதாய் இருந்தது. முன் போல நினைத்த நேரத்திற்கு எல்லாம் தீனாவோடு பேசவும் முடியவில்லை.

அவனுக்கும் அங்கே அவனின் வேலைகள் இழுத்துக்கொண்டன. பழைய குப்பைகளை எல்லாம் இப்போது நினைக்கவும் தீனாவிற்கு நேரமில்லை. யாருக்காகவும் எதற்காகவும் காலமும் நேரமும் நிற்காது.. அதுபோல யாருக்காகவும் அவரவர் அன்றாடம் ஸ்தம்பிக்காது.

தீனதயளானுக்கும் அதுவே தான் ஆனது..

மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் எங்கோ சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போக, அவனின் வேலை, வேலை முடிந்து வந்து வீட்டில் இருப்பவர்களுக்கு அழைத்துப் பேசுவது. அதன்பின் முதலும் முற்றிலுமாய் தங்கம்மை..

ஆம்.. இப்போதெல்லாம் அவளோடு வாழப் போகும் முழுமையான ஒரு வாழ்விற்காக அவனின் மனது ஏக்கம் கொண்டது நிஜமே நிஜம்..    இதற்கும் வாரம் ஒருமுறை வந்து வந்து பார்த்துவிட்டுத்தான் சென்றுகொண்டு இருந்தான்.

ஆனால் அதெல்லாம் எத்தனை செல்லுபடியாகும்??!!!

முதல்வாரம் தங்கம்மை எப்போதும் போலிருக்க,  நாள் செல்ல செல்ல தங்கம்மை முகத்தினில் தோன்றும் சோர்வே அவனுக்கு மனதிற்கு சங்கடம் கொடுத்தது. அடுத்த வாரம் வந்தவனோ கேட்ட முதல் கேள்வியே

“வேணும்னா இன்னொரு ஆள் போட்டுக்கலாமா??!!” என்றுதான்.

“வேண்டாங்க அதெல்லாம்..” என்றுவிட்டாள்.

“இல்லை நீ ரொம்ப டல்லா இருக்க தங்கம்மை.. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு..” என்று தீனா வருந்த,

“அடடா அதெல்லாம் இல்லை.. நீங்க ஏன் இப்படி நினைக்கணும்…” என்று அவள் சமாதானம் செய்ய,

“நான் உன்னை நல்லா பார்த்துக்கணும்னு நினைக்கிறப்போ தான் இதெல்லாம் நடக்குது..” என்றான் உளமார வருந்தி.

தங்கம்மை லேசாய் சிரித்துக்கொண்டாள். அவ்வளவே.  பொறுப்புகள் கூட கூட தன்னைப்போல் அவளுக்கு ஒரு இறுக்கம் வந்தது நிஜம்தான்.   இதில் எல்லாம் என்ன பெரிய விஷயம் என்றால், ரோஜா  முழு நேரமும் பிள்ளையை கவனிக்கிறேன் என்று பிள்ளையோடு இருந்துகொள்ள, வேலையால் வந்து மேல் வேலை மட்டும் பார்த்துக்கொள்ள, சமையல் செய்து, பின் செவ்வந்தியை கவனித்து பின் அவ்வப்போது ப்ரித்வியை பார்த்து என்று தங்கம்மைக்கு ஓய்வு என்பதே இல்லாது போனது தான் நிஜம்.

தீனா வரும் நேரத்தில், கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் தங்கம்மையும் தீனாவும் அமர்ந்து வெறுமெனே பேசிக்கொண்டு இருப்பது கூட அரிதாகிப் போனது. தீனாவும் ஊருக்கு வந்தால், செவ்வந்தியை செக்கப் அழைத்து செல்வான்.. அதிலேயே அரைநாள் முடிந்துவிடும்..

கிளம்பும் நாள் சட்டென்று வந்துவிடும்… கிளம்புகையில் முகம் தூக்கி வைத்துக்கொண்டு தான் செல்வான்..

“சின்ன பையனா நீங்க..” என்று தங்கம்மை சொன்னால் “வீட்ட விட்டு போய் தனியா இருந்து பார்த்தா தான் தெரியும்..” என்றவனுக்கு,

“இதெல்லாம் நீங்க செஞ்சது தானே..” என்றும் அவள் பதில் சொல்ல, அப்படியே அந்த வாரமும் நகர்ந்துவிட்டது.

இருவருக்கும் சிரித்துப் பேசுவது என்பது கூட மறந்துவிடும் போலிருக்க,    அடுத்த வாரம் வந்த தீனாவோ “கிளம்பு கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம்..” என,

“நைட்டுக்கு டிபன் செய்யணுமே…” என்றாள்.

“இட்லி சட்னிதானே அக்கா செய்ய மாட்டாளா??!!! இல்லன்னா கடைல வாங்கிட்டு வரலாம்..” என்று சொல்ல,

“ம்ம் கடைல வாங்கிக்கலாம்..” என்றவள், “எங்க போலாம்..” என்று கேட்கும் போதே அவளுக்கு முகம் மலர்ந்தது.

வெளி காற்று முகத்தினில் பட்டுக்கூட நாட்கள் ஆகிப்போனதாய் தான் உணர்ந்தாள் தங்கம்மை. செவ்வந்தி என்ற ஒரு மனுசி படுத்தது, அந்த வீட்டின் சூழல் முற்றிலும் மாறிப்போனதாய் தங்கம்மைக்கு நன்கு உணர முடிந்தது.

அதை அவரிடம் கூட சொல்லவும் செய்தாள், “அத்தை உங்களோட அருமை இப்போ எல்லாருக்கும் தெரியும்..” என்று.. செவ்வந்தியும் சிரித்துக்கொண்டார்.

“மெல்ல நடந்து பாக்குறேன்னா இவன் கேட்கவே மாட்டேங்கிறான்.. எத்தனை நாளைக்கு இப்படி படுக்க??!! கால் அசைக்க நல்லா முடியுது.. வலியும் இல்லை..” என்றவர்,

“ஒரு வீட்ல பொம்பளை படுத்துட்டான்னா அந்த வீடு ஒண்ணுமில்லாம போயிடும்.. தெம்பு பாதி வைராக்கியம் பாதின்னு எந்திரிச்சு நின்னுடனும்…” என்று மருமகளுக்கும் சொல்ல,

“நிஜம் தான்…” என்றும் சொல்லிக்கொண்டாள்.

இப்போது தீனாவோ வெளியே போகலாம் என்றதுமே மனதினில் சட்டென்று உற்சாகம் தொற்றிக்கொள்ள, அவளின் முகத்தினைப் பார்த்தவனோ “முதல்ல உங்கம்மா வீட்டுக்கு போயிட்டு அப்படியே சும்மா பைக்ல ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்..” என,

உற்சாகத்தின் அளவு எல்லையை கடந்து  “சூப்பர்ங்க..” என்றவள், பின் என்ன நினைத்தாளோ அவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “தேங்க்ஸ்..” என,

“போ போ.. போய் ரெடி ஆகு.. நான் அம்மாக்கிட்ட சொல்லிக்கிறேன்…” என்றவனும் சிரித்தபடி தான் கீழே வந்தான்..

ரோஜா ப்ரித்வியோடு செவ்வந்தி அருகினில் இருக்க, “ம்மா நானும் தங்கம்மையும் வெளிய போயிட்டு வர்றோம்..” என,

செவ்வந்தியோ “சந்தோசமா கூட்டிட்டு போய்ட்டு வாடா..” என்று சொல்ல,

“எப்போ வருவீங்க??!!” என்றாள் ரோஜா பட்டென்று.

என்னவோ தீனாவிற்கு எப்போதும் அப்படிக் கேட்காதவள் இன்று அப்படி கேட்டதுமே வித்தியாசமாய் பட, “ஏன் க்கா..” என்றான்..

“இல்ல நைட்டுக்கு டிபன் செய்யணுமே..” என்று ரோஜா இழுக்க “கடைல வாங்கிட்டு வந்திடுறோம்..” என,

“ஓ..!! சரி.. எங்க போறீங்க..??!!” என்றாள் அடுத்து..

அதற்கு தீனா பதில் சொல்வதற்கு முன்னமே செவ்வந்தி அதட்டியவர் “அவங்க எங்கயோ போறாங்க.. நீ ஏன் இதெல்லாம் கேட்கிற…”  என்றிட,

தங்கம்மை அங்கே வரவும் ப்ரித்வி அவளிடம் போக விளைய ரோஜாவிற்கு என்ன தோன்றியதோ “சும்மா இருடா.. அவங்க வெளிய போறாங்க…” என்று மகனை அதட்ட,

“என்ன அண்ணி.. அவன் எப்பவும் என்னை பார்த்தா வர்றதுதானே..” என்றவள் தூக்கிக்கொண்டாள்.

தீனா இதற்க்கெல்லாம் எதுவும் சொல்லவில்லை.. அவனுமே கூட தீனாவை கொஞ்ச, செவ்வந்தி தான் “கிளம்பனும் சொல்லிட்டு நின்னுட்டு இருந்தா எப்படி.. போயிட்டு வாங்க..” என்று சொல்ல, அடுத்து தான் இருவரும் கிளம்பினர்.

நேராய் அம்மா வீடு சென்று, அங்கே ஒரு ஒருமணி நேரம் இருந்துவிட்டு, பின் வந்து தீனா சொன்னதுபோல் வெறுமனே சிறிது நேரம் பைக் பயணம்.. தங்கம்மைக்கு சொல்லவும் வேண்டுமா??!!!

மனது அதனை இலகுவாய் மாறிட, தீனாவின் இடுப்பினை சுற்றி கை போட்டு அவனை ஒட்டி அமர்ந்துகொண்டாள்.

“ஓய்!! என்ன பண்ற நீ…” என்று அவனும் கேட்க,

“ஒண்ணுமில்ல சும்மாதான்..” என்றவள் “ரொம்ப சந்தோசமா இருக்கு…” என்றும் சொல்ல, அவளிடம் இருந்து இந்த வார்த்தை வரவும் தான் தீனதயாளனுக்கு மனது நிம்மதியை உணர்ந்தது. ஒரு கையால் அவளின் கரத்தினை இறுகப் பற்றிகொண்டவன், மறுகையால் வண்டியோட்ட,

“ஷ்.. பார்த்துப் போங்க…” என்றவள் கைகளை உருவிக்கொண்டாள்..

பின் ஹோட்டல் போய், அனைவர்க்கும் என்ன வேண்டும் என்று கேட்டு வாங்கி வீடு வர, நினைத்ததை விட சிறிது தாமதம் ஆனதுதான். ஆனாலும் இவர்களும் முடிந்த அளவு சீக்கிரமும் வந்துவிட்டார்கள்.  

வீட்டினுள்ளே நுழைந்ததுமே தங்கம்மைக்கு அவசரம் வந்து ஒட்டிக்கொண்டது.

“பார்த்து போ..” என்று தீனா சொல்லிக்கொண்டே வர, உள்ளே நுழையவுமே,  

“என்ன தங்கம் இவ்வளோ நேரம்??!! நானா எப்படி இவனை வச்சிட்டு சமாளிப்பேன்.. நீங்க கிளம்பவுமே ஒரே அழுகை.. எவ்வளோ நேரம் நானும் அப்பாவும் மாறி மாறி தூக்கி வச்சிக்க…” என்று ரோஜா சொல்ல,

“கொஞ்சம் லேட்டாகிடுச்சு அண்ணி..” என்று தன்மையாகவே சொல்ல, ரோஜாவின் இந்த பேச்சு தீனாவிற்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.

‘என்னது இது..’ என்று அப்பாவை பார்த்தவன்,  ஒன்றும் சொல்லாது குருசாமியோடு அமர,

தங்கம்மையோ “சாப்பிட எடுத்து வைக்கிறேன் மாமா..” என்றபடி நகரப் போக,

“இந்தா தங்கம் இவனை பிடி.. நான் கொஞ்ச நேரம் கால் நீட்டி உக்காரணும்..” என்று ப்ரித்வியை தங்கம்மையிடம் கொடுத்த ரோஜா  அப்படியே அமர்ந்து கொள்ள, தங்கம்மை ப்ரித்வியை தூக்கியபடி அனைவர்க்கும் உணவு எடுத்து வைக்க, எல்லாம் தீனா கவனித்துக்கொண்டே தான் இருந்தான்.

தங்கம்மை வாய் திறக்கவில்லை.. குட்டியை தூக்கிக்கொண்டே அனைவருக்கும் உண்ண எடுத்து வைக்க, அவனோ அவளை இன்னொரு பக்கமாய் இழுத்துக்கொண்டு இருந்தான். அதிலும் அவனின் வழக்கமாய் அவளது உடையை இறுக்கி வேறு பிடித்திருக்க,

தங்கம்மைக்கு அது எப்படியோ வேறு இருந்தது.. எங்கே அன்றுபோல் சேலையை இழுத்துவிட்டான் என்றால், அனைவரின் முன்னும் அசிங்கமாகிவிடும் என்று எண்ணியவள்

தீனாவைப் பார்க்க, அவனோ அடுத்த நொடி எழுந்து வந்தவன் “மாமாக்கிட்ட வாடா..” என்று வாங்கிக்கொண்டான்..

அவனும் அப்படியே தீனாவிடம் தாவ “எல்லாம் ஒன்னாவே உக்காந்துக்கலாம்.. அத்தைக்கு போய் கொடுத்துட்டு வந்திடுறேன்..” என்று செவ்வந்திக்கு கொண்டு போனவள் அடுத்து அனைவருக்கும் எடுத்து வைக்க,

ரோஜாவோ “எனக்கு இப்போ வேணாம்..” என்றாள்.

“ஏன் அண்ணி..??!!” என்று தங்கம்மை கேட்க, “வேணாம்.. அவனுக்கு ஊட்டனும்..” என, அதுவும் சரிதான் என்றாகியது அனைவர்க்கும்.

என்னவோ ரோஜாவின் முகமே சரியில்லை என்று அனைவர்க்கும் புரிந்தது. இருந்தாலும் வீட்டினில் எதுவுமே சரியில்லாதாது நடக்கவும் இல்லை.. ஆனால் பெண்களின் மனது எப்போது எதற்கு சுணங்கும் என்று யார் அறிவார்??!!

அதிலும் இப்போது கணவன் வெளியூரில், அம்மாவோ உடல் முடியவில்லை என்று படுக்கையில்.. தம்பி வாரம் ஒருமுறை.. அப்பாவினை எப்போதுமே அதிகம் நாடி பழக்கமுமில்லை.. அனைத்திற்கும் தம்பி மனைவியை எதிர்பார்ப்பது என்னவோ அவளுக்கு ஒரு அலுப்பை கொடுத்திருந்தது.

அனைத்துக்கும் தங்கம்மையை எதிர்பார்க்கும் சூழல்.. எந்த நாத்தனாருக்கும் அது ஒத்துவராத ஒன்று.. அதிலும் அண்ணனோ தம்பியோ அவர்களின் திருமணத்திற்கு முன் வரை தலையை உடைக்கும் அளவு சண்டை போட்டாலும் ஒன்றும் தெரியாது, ஆனால் திருமணம் என்று ஒன்றாகி அவர்களுக்கு மனைவி என்று ஒருத்தி வந்துவிட்டால் போதும், உடன் பிறப்புக்களின் முறைப்பு கூட பல பிரச்னைகளை கிளப்பி விட்டுவிடும்..

அதே நிலைதான் இப்போது இங்கே…

அனைவரும் உண்டு முடிக்க, செவ்வந்தி அருகேதான் அமர்ந்து ரோஜா மகனுக்கு ஊட்டிக்கொண்டு இருக்க, தீனா அம்மாவை பார்க்க வர, அப்படியே தங்கம்மையும் வர,    

செவ்வந்திக்கோ மகன் மருமகள் முகம் பார்த்தே என்ன தோன்றியதோ “நான் எழுந்து நடந்து பாக்குறேன் சொன்னாலும் தீனா வேணாங்குறான்.. நாளைக்கு டாக்டர்கிட்ட கேட்கணும்..” என,

“ம்மா நடக்கவே கூடாதுன்னு சொல்லலை. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் செய்யலாம்..” என்று தீனா சொல்ல,

“தங்கம்மைக்கு தான் ரொம்ப கஷ்டம்..” என்று அம்மாவும் சொல்ல,

ரோஜாவோ “ஏன் ம்மா.. இப்படி சொல்ற.. எல்லாருக்கும் ஒவ்வொரு கஷ்டம் தான்..” என,

தீனா பட்டென்று கேட்டுவிட்டான் “இப்போ நீ இங்க என்ன கஷ்டப்படுற..” என்று..

தங்கம்மை திக்கென்று பார்க்க, செவ்வந்தியும் அப்படிதான் பார்த்தார். ரோஜாவும் கூட.  தீனா முகம் கடுகடுவென இருக்க, இவர்களின் பேச்சு கேட்டு குருசாமி உள்ளே வந்துவிட்டார்.

“என்னடா இப்படி சொல்ற.. அம்மாவும் படுத்துட்டாங்க.. இவனை வச்சிட்டு நாள் பூரா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா??!!!” என,

“ஏன் தனியா பிள்ளை வளக்குறவங்க எல்லாம் எப்படி வளக்குறாங்க…” என்றவன் “நானும் பார்த்துட்டு தானே இருக்கேன் நீ மட்டுமே ஒன்னும் இவனை வைக்கலை..” என்றும் சொல்ல,

தங்கம்மைக்கு ‘ஐயோ..’ என்று இருந்தது.

சிறிது நேரத்திற்கு முன் தான் அவனிடம் கெஞ்சாத குறையாய் சொன்னாள் “இதைப் பத்தி எதுவும் பேசாதீங்க..” என்று..

ஆம் செவ்வந்தி எழுந்து உள்ளே சென்றதும், குருசாமியும் நகர்ந்ததும் தீனாவின் முகம் பார்த்தே தங்கம்மை சொல்லிவிட்டாள், “அண்ணிக்கு அண்ணா இங்க இல்லைன்னு லோன்லியா பீல் பண்றாங்க போல.. சோ நீங்க எதுவும் காட்டிக்க வேணாம்…” என்று.  

அங்கே சரி என்றவன் இப்போது பட்டென்று இப்படி கேட்டிட குருசாமியோ “தீனா இந்த பேச்சு விடுங்க..” என,

ரோஜாவோ “ஏன்பா அப்போ நான் எதுவுமே இந்த வீட்ல சொல்லக் கூடாதா??!!! நான் எங்க இங்கேவா இருந்திட போறேன்.. அவர் வரவும் எங்க வீட்டுக்கு போயிட போறோம்..” என்று ஆரம்பிக்க,

செவ்வந்தி “விடு விடு..” என்று சமாதானம் செய்ய, ரோஜா கிஞ்சித்தும் சமாதானம் ஆகிடவில்லை.

தீனாவுமே இறங்கி வந்தவன், அவள் பேச பேச திரும்ப கோவம் வந்துவிட்டது.

“இப்போ நான் என்ன சொல்றேன்னு நீ இவ்வளோ பேசுறக்கா…” என்று குரலை உயர்த்த,

“இன்னும் என்னடா சொல்லலை நீ.. சும்மா உக்காந்து நானும் என் பிள்ளையும் சாப்பிடுறோம்னு சொல்லாம சொல்லிட்ட தானே..” என்று ரோஜா இல்லாத ஒன்றை சொல்ல

அனைவர்க்கும் ‘ஐயோ..!!’ என்று ஆனது..

தங்கம்மை “அண்ணி..!!” என்று எதுவோ சொல்ல வர,

“நீ பேசாத தங்கம்…” என்றவள், அப்படியே பிள்ளையையும் தூக்கிக்கொண்டு உண்ணாமல் அவளின் அறைக்குச் சென்றுவிட்டாள்.

மற்ற நால்வருக்கும் அதிர்ச்சிதான். அவள் உண்ணாமல் சென்றது வேறு வருத்தமாய் இருக்க, குருசாமி மகனிடம் “நீ எதுவும் பேசாத.. நான் பேசிக்கிறேன்..” என்றவர்,

“அவனை கூட்டிட்டு போ மா..” என்றார் மருமகளிடம்.

செவ்வந்தியின் முகம் அப்படியே வாடிப் போய்விட்டது. வீட்டினில் இதுவரை இப்படியான பிரச்னைகள் இருந்ததில்லை.. லேசாய் யாருக்கேனும் முட்டும் நிலை வந்தாலும் கூட செவ்வந்தியே அதை சரி செய்துவிடுவார்.

ஆனால் இன்று??!!!!

தீனா அம்மாவைப் பார்க்க “நீ போ.. நான் பேசிக்கிறேன்.. அவளுக்கு எதுவோ மனசு சரியில்லை போல..” என்று அவரும் சொல்ல,

அவனுக்கு இப்போதும் புரியவில்லை தான் அப்படி என்ன தவறாய் சொன்னோம் என்று.. இதைவிட மோசமான சண்டை எல்லாம் நிறைய போட்டு இருக்கிறார்கள்.. அதேதான் மொட்டை மாடியில் நின்றுகொண்டு தங்கம்மையிடமும் சொன்னான்..

அவளோ “நான் அவ்வளோ சொல்லியும் நீங்க ஏங்க இப்படி பட்டுன்னு பேசிட்டீங்க..” என்று கேட்க,

“நான் தப்பா எதுவும் கேட்கலை.. சிரமம் கஷ்டம்னு சொல்றா??!! அப்படி எதுவும் இல்லைதானே.. எல்லாத்தையும் நீதான் செய்ற.. ஆள் வேற இருக்கு. பின்ன எதுக்கு இந்த பேச்சு..” என ,

“இப்போ என்ன சொன்னா சொல்லிட்டு போகட்டுமே..” என்று தங்கம்மையும் சொல்ல,

தீனாவோ அவளை முறைத்தவன் “நீ புரிஞ்சு தான் பேசுறியா இல்லையா தங்கம்மை..” என்று அதட்டிவிட்டான்..

அக்காவின் மேல் ஆறாத கோபம் இப்போது மனைவியின் மீது பொத்துக்கொண்டு வந்தது.

“எனக்கு எதுவும் புரியவேணாம்.. என்னால உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வேணாம் அவ்வளோதான்..” என்று தங்கம்மை சொல்ல,

“உன்னாலன்னு யார் சொன்னா..??!!” என்று தீனா முறுக்கிக்கொண்டு நிற்கவும் இப்படி பேசி பேசி இவர்கள் இருவருக்கும் தான் சண்டையானது. 

“அச்சோ யாரும் சொல்லலை..” என்று அவள் வேகமாய் சொல்ல,

“பின்ன பின்ன எதுக்கு நீ இப்படி நினைக்கிற??!! ரோஜா என்னோட அக்கா.. அவளும் நானும் சண்டை போடுறது புதுசு இல்லை..” என்றவன்,

“ஆனா நீ என்னோட பொண்டாட்டி.. உனக்காக நான் தான் பேசியாகணும்…” என்றும் சொல்ல, இப்படி பேசுபவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாது பார்த்து நின்றாள் தங்கம்மை.

என்னவோ அவளுக்கு மனது கனத்துப் போனது. அவனின் மாற்றங்கள் எல்லாம் சரிதான். ஆனால் ரோஜாவிற்கும் அவளுக்கும் எதுவும் விரிசல் வந்திடுமோ என்று பயமாகவும் இருந்தது. ஒன்றும் சொல்லாது நிற்பவளையே பார்த்தவன்,

“என்ன தங்கம்மை..” என,

“ம்ம் நீங்க அக்கா தம்பி ஆயிரம் சண்டை போட்டுக்கலாம்.. நாளைக்கு நீங்க கிளம்பியும் போயிடுவீங்க.. ஆனா அதுக்கப்புறம் அண்ணி என்னை எதுனா சொன்னா என்ன செய்றது??!! எனக்கு மூஞ்சி பார்த்து சண்டை போட எல்லாம் வராது..” என்று தங்கம்மை சின்ன குரலில் சொல்ல,

“அம்மாடி..!!! இது உலகமகா நடிப்பு டா சாமி..” என்று வாயில் கை வைத்தான் தீனதயாளன்.

“ம்ம்ச் என்னவாம்??!!”

“பின்ன.. என் சட்டை பிடிச்சு உலுக்கின உனக்கா சண்டை போட வராது..” என,

“அது நீங்க… அதனால உலுக்கினேன்.. ஏன் கிழிச்சு கூட போடுவேன்.. அது நமக்குள்ள.. ஆனா அண்ணி விஷயம் வேற.. புரிஞ்சதா..” என்றவள்

“போய் உங்க அக்காவ சாப்பிட வச்சிட்டு தான் ரூமுக்கு வரணும்..” என்றுவிட்டு போய்விட்டாள்.

தீனாவோ ‘இது வேறயா…’ என்று நின்றிருந்தான்.   

Advertisement