Advertisement

தங்கம்மை – சரயு

அத்தியாயம் – 1

“தங்கம்மை… தங்கம்மை..” என்று அழைப்பு வர, மடித்துக்கொண்டு இருந்த துணிகளை அப்படியே சோபாவின் ஒரு ஓரத்தில் நகர்த்தி வைத்துவிட்டு,

“இதோ வர்றேன் அத்தை..” என்றபடி போனாள், கூடவே அவள் அணிந்திருந்த மெட்டியின் ஒலியும்.

அறையை விட்டு வெளியேறிய போது அவனையும் திரும்பிப் பார்த்துவிட்டு போனது போல் இருந்தது. அவன்.. தீனதயாளன்.. தங்கம்மையின் கணவன்.. இந்த ஆறு நாட்களாய்.

துவைத்துக் காயப்போட்டிருந்த அவனின் ஆடைகளைத்தான் மடக்கிக் கொண்டு இருந்தாள். இதெல்லாம் செய் என்று அவனும் சொன்னதில்லை. அவள் செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவுமில்லை. ஆனாலும் அவள் செய்வதை அவ்வப்போது கவனிப்பான்.

‘ஓ… இந்த சட்டையை இப்படி மடக்கனுமா??!!!’ என்றுதான் முதல் முறை தோன்றியது.

என்னவோ அவள் வந்தபிறகு இந்த அறையில் ஒரு நேர்த்தி இருப்பது போலிருந்தது. இல்லை அப்படியொரு தோற்றம் அவள் கொடுக்கிறாளா?? அந்த ஆராய்ச்சிக்கு எல்லாம் அவன் போகவே விரும்பவில்லை. காரணம் இந்தத் திருமணம் அவனின் விருப்பம் இல்லை.

அறைக்கு வெளியே தான் பேச்சுக்குரல் கேட்டது.

“ம்ம் சரிங்கண்ணி.. போலாம்..” என்ற தங்கம்மையின் குரல் அதன் பின்னே ரோஜாவினது,

“ரெடி ஆகிட்டு எனக்கு ஒரு மிஸ்ட் கால் விடு..” என,

“ஹா ஹா.. கால் பண்ணா எடுக்கமாட்டீங்களா அப்போ??” என்ற இவளின் குரலும்.

“சரிதான் போ.. நல்லா பேசுற.. இப்படித்தான் நாங்க எதிர்பார்த்தோம்..” என்றுவிட்டு ரோஜா போக, திரும்ப தங்கம்மை அறையினுள் வரும் ஓசை கேட்டது.

வேகமாய் எழுந்து போய் பால்கனியில் நின்றுகொண்டான். கண்டிப்பாய் அறைக்குள் வந்ததும் தன்னிடம் ஏதாவது சொல்வாள் என்று தெரியும். பேச்சு, அவளாகவே தான் எப்போதும் அவனிடம் பேசுவாள்.

நீ என்னோடு பேசித்தான் நான் உன்னோடு பேசவேண்டியது இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபித்துகொண்டு இருந்தாள். ஆச்சர்யமாய் தான் இருந்தது அவனுக்கு. ஆனாலும் அவனால் தன்னை இந்த வாழ்விற்கு உட்படுத்திக் கொள்ள முடியவில்லை.     

இந்தத் திருமணம் என்பது மட்டுமில்லை, யாரோடான திருமணமும் அவனின் விருப்பமாய் இல்லை. போதுமடா சாமி ஒருமுறை பட்டதே என்றுதான் நினைத்தான்.. அட ஆமாம்..!! போதும் போதும் என்றளவிற்கு பட்டுவிட்டான் தான். ஒருத்தியை திருமணம் செய்து.

அவள் தங்கம்மை அல்ல.

ரூபினி.. அழகி.. அப்படித்தான் அனைவரும் சொன்னார்கள். இவனுக்கும் அவளைக் கண்டதில் இருந்து அதே எண்ணம் தான்.. இத்தனை அழகானவள் என் மனைவியா என்று?!! ஒரு பெருமை.. ஒரு கர்வமும் கூட..

ஆனால் அதெல்லாம் திருமணம் ஆன முதல் நாளே முற்றுப்புள்ளியில் நின்றது.

திருமணம், ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி பலவிதமான கனவுகளையும் கற்பனைகளையும் கொடுத்திருக்கும். அதுபோலவே தீனதயாளனுக்கும், அதிலும் ரூபினி பார்த்ததுமே கவர்ந்தவள். அவனின் கனவு கற்பனைகளுக்கு பஞ்சமேயில்லாது தான் இருந்தது.

நிச்சயம் முடிந்து அவளோடு தினமும் பேசவேண்டும்  என்ற ஆசையில் இருந்தவனுக்கு, அவளின் வீட்டினரே ‘இப்போவே எதுக்கு இதெல்லாம்.. கல்யாணத்துக்கு அப்புறம் காலம் முழுக்க பேசிக்கட்டுமே..’ என்ற பதில் ஏமாற்றம் தான் கொடுத்தது.

ஆனாலும், அதுவும் கூட சரிதான். மனதில் ஒருவித த்ரில் இருக்கும். நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் ஒரு மாதமே இருக்க, இவர்களும் சரியென்றுவிட்டனர்.  ரூபினியோடு பேச வேண்டும் என்று திருமணம் ஆன முதல் நாள் இரவு ஆவலோடு தான் எதிர்பார்த்தான்.

ஆனால் அந்த த்ரிலின் வர்ணம் தான் வேறு விதமாய் இருந்தது.

ஆசையாய் அவளை பார்வையால் வருடி, மெதுவாய் அவளின் கை பற்ற நினைக்கையில், “எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமில்லை..” என்ற ரூபினியின் குரல், அவன் கன்னத்தில் ஓங்கி அறைவது போலிருக்க,

“என்ன சொல்ற நீ??!!!” என்றுதான் கேட்டான்.

கோபமா?? ஏமாற்றமா?? இதில் எந்த ஒன்று?? இல்லை இரண்டுமோ. ஆனால் அவனின் குரலில் ஒரு அதட்டல் தெரிய, திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள், பட்டென கையெடுத்து கும்பிட்டு,

“ப்ளீஸ்.. நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க… எனக்கு இதுல துளியும் இஷ்டமில்லை.. ப்ளீஸ்..” என,

“பின்ன எதுக்கு கல்யாணம் பண்ண??” என்றான் கோபமாய்.

ஏமாற்றம் போய்விட்டது.. கோபம் மட்டுமே.. தான் ஏமாற்றப் பட்டோம் என்ற கோபம் மட்டுமே.

“வீட்ல எல்லாம் போர்ஸ் பண்ணாங்க.. செத்து போய்டுவோம் சொன்னாங்க.. அதான் உங்களோட பேசக் கூட விடலை..” என்றவளுக்கு விசும்பல் கூட,

‘சோ..!! இது வேறா??!!’ என்று பார்த்தான்.

இப்போதென்ன நான் இவளை சமாதானம் செய்யவேண்டுமா??!!!

ரூபினியின் மேலிருந்த அந்த மயக்கம் நொடியில் மறைந்து போயிருந்தது. விசும்பல் கூடுதலாகி அழுகையாய் மாறி, அவளின் கண்களில் இருந்த காஜல் எல்லாம் கரைந்துகொண்டு இருக்க, அவன் பார்த்தபடி தான் இருந்தான்..

அவளோ இன்னமும் முகத்தை மூடிக்கொண்டு அழ,  “ம்ம்ச்.. இப்போ என்னதான் செய்ய??!!” எரிச்சலுடனே கேட்க,

“என்னை போக விடுங்க!! ப்ளீஸ்..” என்றாள்.

‘எது??!! போக விடுறதா??!!’ என்று கண்களை விரித்தவன், “எங்க??!!” என,

“அ.. அது… அது நான் போகணும்.. என்னோட லவ்வர் வெய்ட் பண்ணுவான்.. ப்ளீஸ்.. நான் சொல்லிருந்தேன்.. எப்படியாவது உங்க கைல கால்ல விழுந்தாவது வந்திடுவேன்னு..”

இது அடுத்த அடி… அவனுக்கு..

கோபம் கண்மண் தெரியாத கோபம் வர, “ஏய் என்ன??!! என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது??!!” என்றுதான் கத்தினான்.

“ஷ்..!! ப்ளீஸ்.. ப்ளீஸ் சத்தம் போடாதீங்க.. ப்ளீஸ்.. இது என் லைப்கான ஹெல்ப்..” என்று அவள் கெஞ்ச, அவனுக்கு என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை..

இதை நேற்று சொல்லியிருக்கலாம், அத்தனை ஏன், இன்று காலையில் தாலி கட்டும் ஒருநொடி முன்னம் சொல்லியிருந்தால் கூட ‘போ..’ என்றுதான் அனுப்பியிருப்பான்.

அப்போதும் இதே கோபம் ஏமாற்றம் எல்லாம் இருந்திருக்கும் தான். ஆனால் இப்போது?? இந்த அர்த்த ராத்திரியில்… நான் போகிறேன் என்று நிற்பவளை அனுப்பினால்?? அவனுக்கு கண்ணைக் கட்டியது. சத்தியமாய் இதில் என்ன முடிவெடுக்கத் தெரியவில்லை. மாறாக அவனுள் அப்போது கோபம் கோபம் கோபம் மட்டுமே..

அவனின் பதிலுக்காக இறைஞ்சலாய் அவன் முகம் பார்த்தவளைப் பார்த்தவன் “எனக்கு டைம் கொடு..” என,

“ட.. டைம்.. டைம் எதுக்கு..??” என்றாள் நடுங்கி.

“யோசிக்க வேணாமா??? உனக்கு எப்படியோ எனக்குத் தெரியாது.. இது என்னோட வாழ்க்கையும் கூடத்தான்..” என்றான் பல்லைக் கடித்து.

ஆனால் என்ன யோசித்தும் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவளோடு அந்த நிமிடம் அந்த அறையினில் இருக்கவே முடியவில்லை. மூச்சு முட்டுவது போலிருக்க, அவன் கண்ட கனவுகள் எல்லாம் அவனைக் கேலி செய்து சிரிப்பது போலிருந்தது.

வேகமாய் அறையில் இருந்து வெளியில் வந்தவன், யாரும் கண்டுவிடாதபடி  மொட்டை மாடி செல்ல, அவனின் அக்கா ரோஜா பார்த்துவிட்டாள்.

“தீனா??!!! என்னடா??!!” என்று கேட்டபடி அவள் பின்னேயே வந்ததில், அவனின் அம்மா அப்பா எல்லாம் வந்துவிட்டனர்.

கொஞ்சம் யோசிக்கவேண்டும் என்று தனிமை நாடி போக, வீட்டினர் இப்போது அவனை சூழ்ந்துகொள்ள, அவனின் முகமே அவர்களுக்கு என்னவோ பிரச்சனை என்று சொல்ல “என்னடா என்னாச்சு??!” என்றார் அவனின் அம்மா செவ்வந்தி கேட்க,

“ஒண்ணுமில்ல..” என்றான் கடினக் குரலில்.

“ஏன்டா எந்திரிச்சு வெளிய வந்திருக்க. உன் பொண்டாட்டி எங்க??” அக்கா ரோஜா கேட்க,

“ம்ம்ச்..” என்றான் ஒரு சலிப்போடு.

“என்னடா??!!” என்று அப்பாவும் கேட்க,

“என்னை என்னதான் செய்ய சொல்றீங்க??!!” என்றவன் அப்படியே தலையில் கை வைத்து மாடி படிகளிலேயே அமர்ந்திட, வீட்டினர் என்னவோ ஏதோவென்று தான் நினைத்தனர்.

ரோஜாவின் கணவன் சங்கர் எழுந்துவந்து “என்ன??!” என்று கேட்டவனுக்கு என்ன புரிந்ததோ, “டேய் மச்சான் வா மேல வா.. என்ன??” என்று இழுத்துக்கொண்டு போனான்.

தீனதயாளனுக்கு நன்கு புரியும். இதில் தான் மட்டுமே முடிவு செய்ய முடியாது என்று. வீட்டில் சொல்லத்தான் வேணும். சொல்லியும் விட்டான் சங்கரிடம்.

“டேய்.. என்னடா??!!” என்று சங்கரும் வருந்த, “வேற வழி இல்லை மாமா.. அனுப்பிடுவோம்..” என,

“இது சட்டுன்னு முடிவு எடுக்குற விஷயம் இல்லை தீனா..” என்றான் சங்கர்.

“விட்டுடுங்கன்னு கெஞ்சுறவக் கூட வம்படியா வாழ முடியுமா மாமா??!!”

அவனின் குரலில் அப்படியொரு கசப்பு.. எப்படியோ இருந்திருக்க வேண்டிய நாள் இது.. ஆனால் இப்படி.

“ம்ம்… விடியட்டும் பேசிப்போம்..” என்று சங்கர் சொல்ல, “அப்படிதான் நினைச்சு நானும் வந்தேன்..” என, அதற்குள் ரோஜா வந்தேவிட்டாள்.

“டேய் என்னடா.. அங்க உன் பொண்டாட்டி தேம்பி தேம்பி அழுதுட்டு இருக்கா.. நீ இப்படி இருக்க??!!” என,

“அக்கா ப்ளீஸ்.. இனி ஒன் டைம் என் பொண்டாட்டின்னு சொல்லாத..” என்றவனை விக்கித்துப் பார்த்தாள்.

“என்னங்க சொல்றான் இவன்…” என,

சங்கர் விஷயத்தை சொல்ல, “ஐயோ..!!” என்று வாயில் கை வைத்தவள் “பாதகத்தி.. இப்படி என் தம்பிய நிக்க வச்சுட்டாளே..” என்று சத்தமிட்டுக் கொண்டே தான் கீழே போக,

“ரோஜா நில்லு..” என்று சங்கரும் போக, தீனதயாளன் அப்படியே தான் நின்றான்.

அதன் பின் எல்லாமே சட சடவென்று நடந்து முடிந்தது. இரு வீட்டாட்களும் பஞ்சாயத்து பேச, ரூபினியின் அம்மாவோ தீனதயாளனின் காலிலேயே விழுந்தார்.

“தம்பி.. அவ ஒரு முட்டாள்.. எடுத்து சொல்லணும். வாழ்க்கையினா என்னனு புரியாது.. கொஞ்சம் அவகாசம் கொடுங்க..” என, அவரின் அந்த செயலுக்கு பிறகு யாரும் எதுவும் எதிர்த்து பேசவே முடியவில்லை.

‘உனக்கு விதித்தது இந்த வாழ்க்கை தானோ..’ என்று நினைத்தான்.

பின் அவளின் நிலையில் இருந்து யோசித்தான். அவளுக்கும் சரி தனக்கும் சரி இருவருக்குமே ஒரு அவகாசம் வேண்டுமானதாய் இருக்க, அவனே அதை சொல்லவும் செய்தான். ஆனால் ரூபினியின் ரூபம் அதன்பின் மாறிப்போனது.

கெஞ்சியவள் அப்படியே மாறிப்போனாள். தினமும் அவனோடு சண்டைகள் போட்டாள். அவன் தன்மையாய் பேச நினைத்தாலும் கூட அவனால் அது முடியவில்லை. வீட்டினர் அனைவரோடும் சண்டையிட்டாள். யாரையும் மதிக்கவும் இல்லை.

‘என்னை விட்டா நான் போயிருப்பேன்.. இதெல்லாம் எனக்குத் தேவையா??!!’ என்றுதான் இருந்தாள்.

செவ்வந்தி கூட, குடும்ப கௌரவம் கருதி, மகனின் வாழ்வை எண்ணி, மருமகளுக்குத் தன்மையாய் எடுத்து சொல்லி புரியவைக்க முயன்றார். ஆனால் அவளோ “இங்க பாருங்க.. அசிங்கமா இல்லை உங்களுக்கு.. இன்னொருத்தனை விரும்பறவளை பிடிச்சு என் பையனோட வாழுன்னு சொல்றீங்க?? வெக்கமாயில்லை..” என, அவரோ வாயடைத்துத்தான் போனார்.

அழுகை கூட வந்திட்டது அவருக்கு. ஆனாலும் மகனுக்காக என்று அனைவரும் பொறுத்துப் போக, நாளுக்கு நாள் வீட்டின் களேபரங்கள் கூடிக்கொண்டே போனது.

கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்டவள் போல நடந்துகொள்ள ஆரம்பித்தாள் ரூபினி.. கையை அறுத்துக்கொண்டாள். மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள். மருத்துவர்கள் வைத்தியம் மட்டுமல்லாது, அவளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனையும் வழங்க, நல்லபிள்ளை போல அனைத்தையும் கேட்டும் கொண்டாள்.

“அவங்க வீட்ல விட்டுடலாம்..” என்று குருசாமி சொல்ல, “அப்பா… இதைதான் நானும் நினைச்சேன்..” என்றான் முடிவாகவே தீனதயாளனும்.

இதற்குமேல் அவனுக்கு அவள் மனம் மாறுவாள் என்றெல்லாம் நினைக்கவே தோன்றவில்லை. பயம் வந்துவிட்டது. உயிர் போயிருந்தால் என்ன செய்வது?? ஒருத்தியின் சாவிற்கு தாங்கள் யாரும் காரணமாக வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டான்.

செவ்வந்தியும் ரோஜாவும் தான் அப்படி அழுதனர் வீட்டினில். இதற்கு ரோஜா கர்ப்பிணி வேறு. அம்மாவிற்கோ மகனை எண்ணி வருந்துவதா இல்லை மகளை கவனிப்பதா என்ற நிலை.. வீட்டின் சூழலே மாறிப்போனது..

“பார்த்து பார்த்து செஞ்சோமேடா.. இவ இப்படியா செய்வா.. எப்படினாலும் நல்லபடியா வாழ்ந்தா சரின்னு தானே நினைச்சோம்..” என,

“ம்மா விடுங்க ப்ளீஸ்.. இனிமே நம்ம கம்ப்பல் செய்ய கூடாது..” என்றாவன், ரூபினியின் அப்பா அம்மாவை வர சொல்லி திரும்ப பேச, இப்போது இவர்கள் திடமாய் சொல்லிவிட்டனர் அவளை அழைத்துக்கொண்டு போங்கள் என்று.

மகள் இப்படி படுத்துக்கிடக்க, அவர்களுக்கும் வேறு வழியே இல்லாது, ரூபினியை அழைத்துக்கொண்டு போய்விட்டனர்.

தீனதயாளன் குடும்பம் கோடீஸ்வரர்கள் கிடையாது. ஆனால் நல்ல வசதியானவர்களே. அவர்கள் சமூகத்தில் பேர் சொல்லும் குடும்பமும் வேறு. ஆகையால் கொஞ்சம் பெரிய ஆட்கள் வைத்து, வீட்டிலேயே வைத்து பேசி முடித்து தீர்த்துக்கொண்டனர். அனைத்தையும். வக்கீல் வைக்கவில்லை.. கோர்ட் போகவில்லை.. ஆனாலும் ஒரு விவாகரத்து நடந்து முடிந்தது.

ரூபினி கையெழுத்துப் போட்டுவிட, தீனதயாளனும் போட்டுவிட்டான்.. அவ்வளோதான் முடிந்தது. அனைத்தும்.. அவன் கட்டிய தாலி அவனிடமே திரும்ப.

கனமான பொழுதுகள் தான்.. என்னவோ அதன் சுமைகள் எல்லாம் முழுவதும் தீனதயாளன் மீதே இருப்பதாய் இருந்தது. அவள் சென்றுவிட்டாள் வெளிநாட்டிற்கு. தனக்கு விருப்பமான ஒருவனோடு வாழ்வு அமைத்துக்கொண்டு.

ஆனால் அவன்??!!!!

அப்படியே தேங்கிப் போனான்..

“ஐயோ பாவமே..”

“இப்படியா நடக்கணும்..”

“அட நெஜமாவா??!!”

“இவங்க என்ன பண்ணாங்களோ…??”

ஒரு மாசம் வரைக்கும் கூட அந்த பொண்ணு இங்கதானே இருந்தது.. என்று இப்படி கலவையான பேச்சுக்கள்.  அனைத்தையும் தாங்கியதும், சந்தித்ததும் தீனதயாளனும், அவனின் குடும்பமும் தான்.. மனது கசந்து வெறுத்துப் போனது அவனுக்கு..

வீட்டினர் ஒரு ஐந்து மாதம் வரை சும்மா இருந்தனர். அடுத்து மீண்டும் திருமணப் பேச்செடுக்க, வேண்டவே வேணாம் என்றான் தீனதயாளன். மனது எதையும் ஏற்றுக்கொள்ளும் தைரியத்தில் இல்லை. அதற்கும் மீறி, மனதின் எதோ ஒரு மூலையில் ரூபினி பதிந்திருந்தாள்..

பிடித்துத் திருமணம் செய்து, பின் பிடிவாதமாய் பிரிந்தது. இப்போது பிடிவாதமாய் வீட்டினர் திருமணம் செய்துவைக்க இது பிடித்தமா இல்லையா என்றே புரியவில்லை. யோசனையில் இருந்தவனை தங்கம்மையின் மெட்டி ஒலி தான் திரும்பச் செய்தது. முத்து வைத்து அணிந்திருந்தாள். அவள் அணியும் கொலுசு ஒற்றை கம்பிப் போல் இருக்க, மெட்டி தான் சத்தம் எழுப்பியது.

“கோவிலுக்கு அண்ணி அண்ணாவோட போகணுமாம்.. கிளம்பச் சொன்னாங்க..” என,

“ம்ம்..” என்றுவிட்டு உள்ளே போனான்.

இவ்வளோதான்.. அவர்களின் பேச்சு எல்லாம்.. அதுவும் அவனுக்கு ‘ம்ம்..’ என்பதில் எல்லாம் முடிந்துவிடும்.

 

                              

      

           

 

                     

                        

  

    

 

 

Advertisement