Advertisement

அத்தியாயம் – 26

ராதிகாவை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிப்போனது நிரஞ்சனனுக்கு.. முதல் நாள் இரவு அவனோடு அப்படி மூழ்கித் திளைத்தவள், ஊருக்கு கிளம்பும் நேரம் வர வர, முகம் தவிப்பாய் மாற,

“ஹேய்.. நம்மள யாரும் தப்பா நினைக்கப் போறதில்லை..” என்று அவனும் எத்தனை முறை சொன்னாலும், அவள் கேட்பதாய் காணோம்.

விமான சேவை அப்போதும் நிறுத்தப்பட்டு தான் இருந்தது. மழை மறுநாள் காலையிலும் பொழிந்து கொண்டு தான் இருந்தது. விடிந்ததுமே அரவிந்தன் அழைத்து பேச, அவன் அழைத்தப் பின்னே தான் இருவரும் கண் விழித்ததே.

நேரம் பார்க்க காலை எட்டுமணி என்று காட்ட “ஓ..!! காட்…” என்று நிரஞ்சனன் வேகமாய் எழ, ராதிகா அப்போதும் படுத்தபடி தான் இருந்தாள்.

எழ மனமில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும்,  வீட்டில் எதுவும் யாரும் நினைத்திடுவார்களோ என்று இருந்தது.

தங்களிடம் பத்திரிக்கையில் பேர் போடுவது பற்றி சொல்லாது விட்டதற்கே அம்மா அப்படி பேசினார், இப்போ.. என்று யோசிக்க, அவள் அப்படியே தான் படுத்திருந்தாள்.

அரவிந்தோடு பேசிய நிரஞ்சனன், ராதிகாவைப் பார்க்க, அவளோ தலையணையில் முகம் புதைத்திருக்க, அவளின் வெற்று முதுகுதான் அவனுக்குத் தெரிந்தது. விழித்திருக்கிறாள் என்று தெரியும்.

இப்போது என்ன எண்ணுகிறாள் என்பதும் அவனுக்குப் புரியும்.

“ராதிகா..  அரவிந்தும் அவங்கப்பாவும் வர்றாங்களாம்..” என,

“ம்ம்..” என்று மட்டும் பதில் சொல்ல,

“உன்னத்தான்.. நம்ம கிளம்ப வேணாமா..” என்று திரும்பவும் கேட்க,

அதற்கும் பதில் “ம்ம்..” தான் அவளிடம்.

“போகனுமா போகவேண்டாமா..??!!” என்று அவன் கேட்ட விதத்தில் அவன் சிரிக்கிறான் என்பது புரிய, அருகில் இருந்த ஒரு தலையணையை அவன் மீது படுத்த வாக்கிலேயே வீச,

“ஏய் என்ன டி.. அத்துவ விட எழுந்துக்க அடம் பண்ற..??!!” என்று அவன் இன்னமும் நகைக்க,

“ம்ம்ச் சிரிக்காதீங்க..” என்றாள் கோபமாய் சொல்வது போல்.

அவன் சிரிக்க சிரிக்க, என்னவோ அவளுக்கு சங்கோஜமாய் இருந்தது. அவள் முகம் திருப்பாமலே இருக்க, “இப்போ என்ன உன் மண்டைக்குள்ள ஓடுது..” என்று அவளின் கேசம் தடவியவன், அவள் முதுகினில் முகம் வைக்க,

“போதும்… போதும்.. எந்திரிக்க..” என்றுசொல்லி அவளும் எழுந்து போர்வையை சுற்றி அமர்ந்துகொள்ள,

“யப்பா..!!! சத்தியமா இப்போதான் எனக்கு எப்படியோ இருக்கு..” என்று இடுப்பினில் கை வைத்து அவளைப் பார்த்து நிற்க,

“ம்ம்ச் போங்க..” என்றாள் சிணுங்கலாய்.

“என்ன யோசிக்கிற..” என்று அவன் சாதாரணமாய் தான் கேட்டான். வேறெதுவும் கேட்டு அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை.

“ஒண்ணுமில்ல.. வீட்ல..” என்கையிலேயே, “யாரும் என்ன நினைக்கப் போறாங்க.. நம்ம பாதுகாப்பா அங்க வந்துட்டா போதும்னு தான் நினைப்பாங்க..” என,

“இல்ல.. இன்விடேஷன்ல நேம் போட்டது சொல்லலைன்னு அம்மா என்னை அப்படி பேசினாங்க..” என்றாள் முகத்தை சுறுக்கி.

“ஓ..!! அப்போ இதை போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவோமா டி..” என்றான் கடுப்பாய்.

“ஏங்க..??!!”

“பின்ன என்ன.. நமக்கு கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கு. உன் கழுத்துல நான் கட்டின தாலி இருக்கு.. இதெல்லாம் உனக்கு நியாபகம் இருக்கா..??!!” என, அவளிடம் பதிலே இல்லை.

“இப்போ நீ பண்றது எப்படியிருக்குத் தெரியுமா உன்ன நான் தள்ளிட்டு வந்து இதெல்லாம் பண்ணது மாதிரி இருக்கு..” என்றவனின் குரலில் நிஜமாகவே ஒரு கோபம் எட்டிப் பார்க்க,

அவன் சொன்னது கேட்டு ராதிகா பட்டென்று சிரித்துவிட்டாள்.

“என்னை சிரிக்காத சொல்லிட்டு நீயென்ன இப்போ..” என்றவன்,  “கெட் அப்.. இந்த ட்ரிப் நமக்கு ஒரு ப்ரீசியஸ் ட்ரிப்.. மூட் ஆப் பண்ணிடாத..” என்று அவளின் கைகளை பிடித்து இழுக்க,

“நீங்க போய் பர்ஸ்ட் ரெடியாகுங்க.. அடுத்து நான்..” என்றாள் அப்போதும்.

ஏன் என்றே தெரியாத ஒரு பிடிவாதம். சிறுபிள்ளைகள் செல்லம் கொஞ்சிக்கொண்டு பிடிவாதம் போலிருக்க,

“இங்க பாரு ராதிகா.. என்னை பொறுத்தவரைக்கும் அந்த டிவோர்ஸ் எல்லாம் ஒன்னுமேயில்லை.. புரிஞ்சதா..” என,

“இப்போ நான் மட்டும் என்ன சொன்னேனாம்..” என்றாள்.

“பின்ன என்னத்துக்கு நீ இப்படி இருக்க.. ஏன் டி இத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்துட்டு, நேத்து அவ்வளோ பண்ணிட்டு இப்போ என்னோடவே இப்படி வாயாடுற.. இதெல்லாம் எதுவுமே தெரியாத உங்கம்மா அங்க நம்ம எப்போடா வருவோம்னு இருப்பாங்க அவங்களை பார்க்க யோசிக்கிற.. லேட்டாக ஆக நான் சொல்லிடுவேன் உங்க பொண்ணு தான் அடம் பண்ணா கிளம்பாமன்னு..” என்று நிரஞ்சனன் ஒரே போடாக போட,

“ஓ..!! ரொம்பத்தான். ஏதாவது வாய் திறந்தீங்க கொண்டுவேன்…” என்றவள்,

“அம்மாவும் அத்தையும் அன்னிக்கு எதோ நல்ல நேரம் அது இதுன்னு பேசிட்டு இருந்தாங்களா அதான்..” என்று இழுத்தவள், அவளே குளிக்கச் செல்ல,

“அதெல்லாம் பர்ஸ்ட் கல்யாணம் ஆகுறவங்களுக்கு.. நம்ம கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்து…”

“ஒரு டைவர்ஸ் வேற வாங்கி வச்சிருக்கோம்.. அதானே சொல்ல வர்றீங்க..” என்றவள், பாத்ரூமினுள் இருந்து கடுப்பாய் போர்வையை வீசிவிட்டு கதவினை டம்மென்று சாத்த,

“ஹா.. ஹா..” என்று சிரித்தபடி, நிரஞ்சனன் அதனை மடித்து வைத்தவன், அறையில் இருந்த ஸ்க்ரீன் விளக்கி வெளிச்சம் பரவ விட்டவன், ரூம் சர்வீஸ் அழைத்து காபியும் டிபனும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க, அடுத்து அடுத்து நேரம் நகர்ந்தது.

ஒருவழியாய் இருவரும் தயாராகி, உண்டு முடித்துவிட்டு ரெடியாய் இருக்க, அரவிந்தும், கணபதியும் வந்துவிட்டனர்.

“நம்ம கார்லயே போயிடுங்க..” என்று கணபதி சொல்ல, நிரஞ்சனனுக்கும் மறுத்து பேச தோன்றவில்லை.

ஏற்கனவே இருவர் வீட்டினில் இருந்தும் அழைப்புகள் வந்துவிட்டது  மகன் வேறு “ப்பா.. அம்மா எங்க…” என்று ஆரம்பித்துவிட்டான்.

இருவரும் அவர்களிடம் சொல்லிவிட்டு, கிளம்பிட, கோவை தாண்டி வருகையில் அப்படியொன்றும் மழை இல்லை. அடுத்து மழையே இல்லை எனலாம்.

மதிய உணவிற்கு ஒரு ஹோட்டலில் நிரஞ்சனன் நிறுத்தச் சொல்ல ராதிகா சரியாய் உண்ணாது அளந்து கொண்டு இருந்தாள்.

“ராதிகா…!!” என்ற அவனின் அழைப்பில் இருந்த வேறுபாடு உணர்ந்து, “ம்ம் என்னங்க..” என,

“புருஷன் பொண்டாட்டின்னா, அவங்களுக்குள்ள சில ரகசியங்கள் எல்லாம் இருக்கும்.. இருக்கணும். அது அவங்களுக்கானது.. அவங்க மட்டுமே நினைச்சிக்க முடியுறது.. அவங்க மட்டுமே பேசிக்க முடியுறது.. நான் இதை அப்படிதான் நினைக்கிறேன்.

நீ தேவையில்லாம, மத்தவங்க என்ன யோசிப்பாங்கன்னு யோசிச்சு யோசிச்சே, யாரும் நினைக்காத ஒன்னை நினைக்க வச்சிடாதா.. புரிஞ்சதா..” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்ல, அதன்பின்னே தான் அவளின் முகம் ஒரு தெளிவிற்கு வந்தது,

நிஜம் அதுதானே..

கணவன் மனைவி என்றால் அவர்களுக்கு ஆயிரம் என்ன லட்சம் கோடி விஷயங்கள் இருக்கும்.. பலது வெளியே சொன்னாலும், சிலது அவர்களுக்கு மட்டுமானது. அந்தரங்கமானது.. அன்னியோன்யமனது..

யாரிடமும் அதை சொல்லும் அவசியமும் இல்லை. சொல்லிடவும் கூடாது…!!

நிரஞ்சனன் இப்படி சொல்லவும் தான் ராதிகாவும் ஒருநிலைக்கு வர, “யப்பா… கொஞ்சம் கஷ்டம் தான்..” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

“என்ன சொன்னீங்க..??!!” என்று ராதிகா பழைய தொனியில் கேட்க, “ஒன்னுமில்லையே…” என்று பாவனை காட்டினான் அவன்.

இப்படி பேசி பேசி ஒருவழியாய் ஊர் வந்து சேர, அம்மாவினைப் பார்த்ததும் அத்து “ம்மா…” என்று ஓடி வந்து கட்டிக்கொள்ள,

“பார்த்தீங்களா..??!!” என்று கணவனை ஒரு மென்னகையோடு பார்க்க,

“போ டி…” என்றுவிட்டு கிளம்பிப் போனான் நிரஞ்சனன்.

“நியூஸ்ல அப்படி காட்டினாங்க ராதிகா  ரொம்ப பயந்து போனோம்..” என்று ராணி சொல்ல, அப்பாவும் வந்து எதையோ கேட்க, பின் சிறிது நேரம் கழித்து சுந்தரி நித்யா இருவரும் இவளுக்கு அழைத்துப் பேச,

‘ச்சே நம்மதான் ரொம்ப குழம்பிட்டோமோ…’ என்று நினைத்துக்கொண்டாள்.

பின் நிரஞ்சனனே அழைத்து “என்ன மேடம் கிளியரா…” என,

“போய் வேலையை பாருங்க…” என்று அவனிடம் செல்லமாய் முறைத்து வைத்துவிட்டாள்.

அதன் பின்னே நாட்கள் ஜெட் வேகத்தில் தான் பறந்தது. எத்தனை வேகத்தில் இவர்களின் விவாகரத்தை ரத்து செய்து கோர்ட் ஆர்டர் வாங்கிட முடியுமோ அத்தனை துரிதமாய் வாங்கியிருந்தான் நிரஞ்சனன்.

அவனுக்கு ராதிகாவின் மனதில் சிறு உறுத்தல் கூட இருந்திடக் கூடாது என்பது ஓர் எண்ணம்..

நிரஞ்சனன் பூர்வீக வீட்டில், குணசேகரனின் புகைப்படத்திற்கு முன்பு தான் நிரஞ்சனன் மறுதாலி கட்டினான். யார் என்ன சொல்லியும் ராதிகா முன்னே அவன் கட்டியதை கழட்டின மாட்டேன் என்றுவிட்டாள்.

“ம்மா இந்த புது தாலி கட்றதே நீங்க எல்லாம் சொல்றீங்கன்னு தான்.. ரெண்டையும் சேர்த்து நான் போட்டுப்பேன்.. உனக்கு என்ன..” என்றுவிட்டாள்.

அன்றிலிருந்து அனைவரும் அங்கேதான் வாசம்.

சுந்தரி ராணியிடம் சொல்லிவிட்டார் “நித்யா கல்யாணம் முடியர் வரைக்கும் நீங்களும் அண்ணனும் இங்கயே இருங்களேன்.. வீடும் நல்லாருக்கும்..” என,

“ம்மா எனக்கு வேலை எக்கசக்கமா இருக்கும்.. நீ இரு..” என்று ராதிகாவும் சொல்லிட, அவர்கள் அங்கே தான் இருந்தனர்.

அனைவரையும் விட அத்துவிற்கு தான் கொண்டாட்டமாய் இருந்தது.. அதுவும் அத்தனை பெரிய வீட்டினில் ஓடிக்கொண்டே இருந்தான். ஒரே குஷி அவனுக்கு. அனைவரும் ஒன்றாய் இருப்பது கண்டு.

சிறுவர்களுக்கு சந்தோசமாய் இருக்க காரணம் வேண்டுமா என்ன..

நித்யாவின் திருமண நாள் நெருங்க நெருங்க, அனைவருக்குமே வேலைகள் நிறைய இருக்க, வீட்டினில் ஆட்கள் கூடத் தொடங்கிவிட்டனர்.

“ம்மா எத்தனை பேர் வச்சுக்கனுமோ வேலைக்கு வச்சுக்கோங்க..” என்று நிரஞ்சனன் சொன்னவன்,

ராதிகாவிடம் “உனக்கு எது தேவைன்னாலும் என்கிட்டே நீ சொல்லிடனும்..” என்றும் சொல்லிவிட்டான்.

முன்னே செய்த தவறுகள் எல்லாம் தெரிந்தோ தெரியாமலோ கூட இப்போது நடந்திடக் கூடாது என்பது அவனின் எண்ணம்.

ராதிகாவோ “நான் பார்த்துக்கிறேங்க..” என,

“என் பொண்டாட்டிய பார்த்துக்கிறதும் என்னோட பொறுப்பு தான்..” என்றான்.

ஒருவழியாய் நித்யா – அரவிந்த் திருமண நாளும் வர, இங்கே சென்னையில் தான் திருமணம், பின் கோவையில் ரிசப்சன்.

அண்ணன் அண்ணியாய் இல்லாது அப்பா அம்மா ஸ்தானத்தில் நின்று நிரஞ்சனன் ராதிகா தான் அனைத்தும் செய்தனர். சுந்தரிக்கு பார்த்து பார்த்து மனம் நிறைந்துவிட்டது.

வந்தவர்கள் எல்லாம் அந்த திருமணம் பற்றி பேசினார்களோ இல்லையோ, இவர்கள் இணைந்து நின்று செய்வது பற்றி பேசாது இருந்திட முடியவில்லை.

“இந்த பையன் இப்படியே இருந்திடுவானோன்னு நினைச்சோம் சுந்தரி.. பரவாயில்ல நல்லது நடந்திடுச்சு…” என்றனர் சுந்தரியிடம்.

மணிவண்ணன், ராணி இருவருக்கும் மனதில் இருந்த பெரும் பாரம் இப்போது தான் அகன்றது. மகள் அவள் கணவனோடு குடும்பமாய் நின்று, அவர்களின் பொறுப்பினை சீரும் சிறப்புமாய் செய்வது கண்டு நிம்மதியானது.

“இப்போதாங்க அவ முகத்துல சந்தோசமே தெரியுது..” என்றார் கணவரிடம்.

“ம்ம் இனி அவ சந்தோசமா தான் இருப்பா…” என்று மணிவண்ணனும் சொல்ல, அதோஷஜன் அனைவரிடமும் கலந்து கட்டி ஓடிக்கொண்டு இருந்தான்.

என்னதான் வேலைகள் இருந்தாலும் நிரஞ்சனன் மகன் மீது ஒரு பார்வை வைத்தே இருந்தான். இப்போதெல்லாம் மகனின் வேலைகள் பலது அவனின் தள்ளிவிட்டாள் ராதிகா.

“என்ன பாக்குறீங்க… ஹோம் வொர்க் மட்டும் கள்ளத்தனம் செய்றீங்க தானே.. இதெல்லாம் யார் செய்வா.. எண்ணெய் வச்சு குளிக்க வைங்க..” என்றுவிட்டு போவாள்.

“ஏன் டி அவன் சும்மா குளிக்கவே அடம் பண்றான்.. இதுல எண்ணெய் வச்சா..” என்று நிரஞ்சனன் கேட்டால்,

“அதெல்லாம் அப்பா பாடு.. புள்ள பாடு..” என்றுவிடுவாள்.

இன்று திருமணத்தில் கூட, நிரஞ்சனன் மகன் எங்கே யாரிடம் இருக்கிறான் என்று ஒரு பார்வை அவ்வப்போது பார்த்துக்கொள்ள,

“யப்பா.. சாமி.. இங்க பாருங்க.. உங்க பையன் ஒய்யாரமா தான் அங்க அப்பாக்கிட்ட உக்காந்து இருக்கான்..” என்று ராதிகா காட்டியவள், அவனை அழைத்துக் கொண்டு மேடையேற,

சாஸ்திரத்திற்கு அல்லாது, சம்பிரதாயத்திற்கு அல்லது, இந்த கடமையை முடிக்க வேண்டும் என்று அல்லாது, உள்ளன்போடு, ஆதர்ஷ தம்பதிகளாய் நின்று, இவர்களின் வாழ்வு சந்தோசமாய் இருந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, பிரார்த்தித்து நித்யாவை கன்னியாதானம் செய்துகொடுத்தனர் அரவிந்திற்கு.

இதற்குமேல் வேறென்ன வேண்டும்..??!!

திருமணம் நல்லபடியாய் முடிந்து, அங்கே கோவையில் ரிசப்சன் கொண்டாட்டமாய் முடிந்து, மறுவீடு அது இதன்று எல்லாம் முறைப்படி செய்து, நித்யாவை அவளின் கணவன் வீட்டில் குடி வைத்து, அவளுக்குக் கொடுக்க வேண்டிய சீர் செனத்திகள் எல்லாம் சிறப்பாகவே செய்து, எல்லாம்.. எல்லாமே நல்லபடியாய் முடிந்து அவரவர் அன்றாடமும் தொடங்கிவிட்டது.                   

ஒருமாதம் கடந்திருக்க ராதிகாவிற்கு அவளின் வேலையில் பதவியுயர்வு வேறு வந்திருந்தது. எதிர்பார்த்த ஒன்றுதானே. சுலேகாவின் இடத்தினில் இப்போது ராதிகா அங்கே. சுலேக வேறு ஒரு கிளைக்கு சென்றுவிட்டார்.

மனைவியின் பதவி உயர்விற்கு பரிசாய் நிரஞ்சனன் ஒரு தங்கச் சங்கிலி வாங்கிக் கொடுக்க,

“ம்ம்ம் பாரப்பா..” என்று பகுமானமாய் வாங்கிக்கொண்டாள் ராதிகா..

ஆனால் அதனை அணியாது சுற்றிக்கொண்டு இருக்க, அதனைக் கவனித்தவன் “அந்த செயின் போட்டுக்கலயா??!!” என்று நிரஞ்சனன் கேட்க,

“வாங்கி கைல கொடுத்த போதுமா.. போட்டு விடனும்..” என்று இவளும் சொல்ல,

“கைல கொடுத்ததுமே ஆசையா நீயா போட்டுக் காட்டுவன்னு நினைச்சேன்..” என்றவன் அவளுக்கு அணிவித்துவிட, நிரஞ்சனன் முகத்தினை தான் பார்த்து நின்றாள் ராதிகா.

இதே வீட்டினில் தான் அவர்களின் வாழ்வு தொடங்கியது. நிறைய நிறைய கனவுகளோடு தான் இங்கே கால் வைத்தாள்.. அதெல்லாம் நடந்தேறியாதா என்றால், இப்போது அதெல்லாம் அவளுக்கு நினைக்கக் கூட நேரமில்லை.

கடந்த கால கச்சடாக்கள் எல்லாம் காணாது போனது..

இப்போது வாழ்வது ஒரு புதிய வாழ்வாய் தான் அவளுக்குத் தோன்றியது, தோன்ற வைத்தான் நிரஞ்சனன். ஒவ்வொன்றும் அவளுக்காக, என்று நிறைய பார்த்து பார்த்து செய்தான்.

அதே நேரம், இருவரும் மற்றவரின் தனிப்பட்ட வேலைப்பளுக்கள் அறிந்து புரிந்து நடந்தனர். தனிமைகளும், இடைவெளியும் எங்கே தரவேண்டுமோ அங்கே கொடுத்தனர்.

ஆக மொத்தம், ஒரு நிம்மதியான வாழ்வு.. ஆர்பாட்டம் இல்லாத அமைதியான, சந்தோஷமான ஒரு வாழ்வு வாழ்ந்தனர்.

சண்டைகள் இல்லை என்று சொல்லிடவே முடியாது. அவ்வப்போது ஏதாவது தலை தூக்கும். அதுவும் அத்துவை முன்னிட்டு அடிக்கடி வேறு வரும்.

இருந்தும் அதெல்லாம் கை கோர்த்தே கடந்து வரப் பழகினர்.. 

இதெல்லாம் எண்ணி ராதிகா அப்படியே நிற்க “நானும் நீ செயின்  பார்ப்ப பார்ப்பன்னு பார்த்து நின்னா… நீ இன்னும் எவ்வளோ நேரம் என் முகம் பார்ப்ப..” என்று கேட்டான் நிரஞ்சனன்.

“ஆ..! என்ன என்ன சொன்னீங்க…” என்று ராதிகா அப்போதும் கேட்க,

“போச்சுடா…” என்றவன் “இங்க பாரும்மா…” என்று அவளின் கழுத்தில் இருந்த புதிய சங்கிலியை தூக்கிக் காட்ட,

“ம்ம் நல்லாருக்கு..” என்றாள்.

“என்ன பார்த்து சொல்லு டி..” என,

“ம்ம் முடியாது..” என்று அவள் பிகு காட்டித் திரும்ப, அவனோ அவளைத் தன் பக்கம் திருப்ப,

“விடுங்க.. கொஞ்ச நேரத்துல உங்க பையன் ஓடி வருவான்..” என்று சொல்லி முடிக்கவில்லை அத்து ஓடித்தான் வந்தான்

“ப்பா…” என்று கத்திக்கொண்டே.

“பார்த்து வா அத்து..” என்று ராதிகா சொல்லும்போதே, நிரஞ்சனன் மகனை தூக்கி கட்டிலில் நிறுத்த, அவனோ அப்படியே குதிப்பது போல் அப்பாவின் கரத்தினில் குதிக்க வாகாய் பிடித்துக்கொண்டான் நிரஞ்சனன்.

இது தினமும் இவர்களின் விளையாட்டு.

ராதிகா இதனை பார்த்து நிற்பாள். மகனின் முகத்தினில் இருக்கும் மகிழ்வு அவளுக்கு அப்படியொரு நிம்மதி கொடுக்கும்.

“அப்பா.. அப்பா…” என்று அவன் கொஞ்சுகையில் எல்லாம், அதனை கேட்டு கேட்டு ரசிப்பாள் ராதிகா.

“பாருடா உங்கம்மாக்கு பொறாமை.. அதான் உம்முனு இருக்கா..” என்று நிரஞ்சனன் சீண்ட,

“நான் பாட்டுக்கு கம்முனு இருக்கேன்..” என்பாள் இவள்.

“கம்முனு இல்லடி.. கும்முன்னு இருக்க…” என்று நிரஞ்சனன் கமுக்கமாய் சொல்ல, மகன் முன்னே அவளால் ஒன்றுமே சொல்லிட முடியாது..

“நீங்க இருக்கீங்களே…” என்று பாசாங்காய் முறைப்பாள்.

இப்படித்தான் அவர்களின் ஒவ்வொரு நாளும் கடந்தது. இத்தனை ஆண்டுகள் தனிமையில் ஊஞ்சலாடிய அவர்களின் பொழுதுகள், இப்போது, கணவன், மனைவி, மகன் என்று ஒரே குடும்பமாய் உறவுகளோடு உல்லாசமாய் ஊஞ்சலாடத் தொடங்கியது..  

கனவுகளின்றி சுயம்வரமா..?

கனவுகள் தொலைந்தால்அது வரமா..?

நான் எனது கனவு கணவனின் கனவு

வேறு வேறாக இருக்க!!

மனங்கள் இணையாத

திருமணத்தால் இணைந்த

உறவு நிலைத்திடுமா..??

நிலையான சிறு மகவு

வந்த பின்னும்

இறுக்கி வைத்திட முடியுமா?

சின்ன சின்ன சஞ்சலங்கள்

வெடித்து சிதறுகையில்

பொறுமை கரைகடந்த நிலையே..

உயிரை பிடித்து வைக்க

உறவைவிட்டு கொடுத்த கணவன்

உணரவேயில்லை என் மனதின் காயங்களை..

காலத்தின் மாயம் தனிமையின் சாபம்

சின்ன சின்ன காயங்களை

உணர்ந்த நேரம் பிரிவு

பெரிய தவறாய் தோண்றிட…

இணையின் ஏக்கங்கள்

சிறிது சிறிதாய் உணர..

அவளுக்கான அவனின் தவிப்புகள்

தொடங்க, தடுமாற்றங்கள் தடுத்தாலும்..

அவளின்றி முழுமையடையாத தினங்கள்.

அவளருகில் முழுமையை உணர..

விடை கொடுத்தோம் விரிசல்களுக்கு…

  • ஃபாத்திமா அப்துல்

Advertisement