Advertisement

அத்தியாயம் – 9    

அனைத்தையும் கடந்து வந்தாகிவிட்டது, இனி மகனுடைய எதிர்காலம் தான் தன்னின் பிடிப்பு என்று எண்ணியிருந்தவளுக்கு, அவளின் வார்த்தைகளே அதிர்ச்சியைக் கொடுக்க, கையில் இருந்த உணவு அப்படியே இருக்க, அந்த இரவு நேர அமைதியையும் தாண்டி அங்கே மேலுமொரு அமைதி குடியேறியது.

நித்யா மற்ற இருவரையும் பார்த்தவள் மெதுவாய் அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள். அதற்குமேல் தான் இங்கிருப்பது சரியல்ல என்று அவள் எண்ணிவிட, நிரஞ்சனனோ சிலையென அமர்ந்திருந்தான்.

அவனுக்குமே ராதிகாவின் வார்த்தைகள், நெஞ்சில் முள்ளாய் குத்தியது. முன்னெல்லாம் ராதிகாவிற்கு இப்படி குத்திக்காட்டியோ, இல்லை இடக்காகவோ பேசிட வராது. எதுவென்றாலும் வெளிப்படையாய் பேசுவாள்.

ஆனால் இப்போது நித்யாவிடம் அவள் அப்படி பேசியது ஆச்சர்யமே.

ராதிகாவும் சரி, நிரஞ்சனனும் சரி, எத்தனை நேரம் அப்படி அமர்ந்திருந்தார்களோ, மழை காற்றிற்கு, ஜன்னல் டப்பென்று அடிக்க, அதில் சுயம் தெளிந்தவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,  இருவருக்கும் உடனே எழுந்து செல்லவும் முடியவில்லை.

மனதினில் பழைய விஷயங்கள் படையெடுக்க, நிரஞ்சனன் என்ன நினைத்தானோ “சாப்பிடு.. ஏற்கனவே ரொம்ப லேட்டாகிடுச்சு.. சாப்பிட்டு உன் அப்பா அம்மாக்கு பேசிடு.. போன் பண்ணாங்க..” என்று பட்டும் படாது சொல்ல,

‘அப்பா.. அம்மா..‘ என்று எண்ணியவள், அவனை மேலும் அதிர்ந்து பார்க்க, “அம்மா எல்லாம் சொல்லிட்டாங்க.. நீயும் பேசிடு..” என்றவன், அவளின் அலைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு, தள்ளிப்போய் சோபாவில் அமர்ந்துகொள்ள, வேகமாய் அவளின் அம்மாவிற்கு அழைத்தாள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் ராதிகாவிடம் இருந்து அழைப்பு என்றதுமே ராணி பதறி அடித்து “என்னாச்சு ராதி..” என,

“ம்மா.. இப்போ ஓகே….” என்று இவளும் சொல்ல,

“ம்ம் உன்னையும் அத்துவையும் விட்டுட்டு வந்தது எங்கத்தப்பு தான்..” என்று ராணி வருந்தவும்,

“நீங்க நாளைக்கு வாங்க பேசிக்கலாம்..” என்றவளுக்கு அதற்குமேல் என்ன சொல்லத் தெரியவில்லை.

“ம்ம்.. நீ.. நீ இருந்துப்பியா அங்க..” என்று ராணி கேட்கையிலேயே அவருக்கு வார்த்தைகள் திணறியது.

மகள் இதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்று.  ராதிகாவிற்கும் ராணி அப்படி கேட்கவும், நொடியில் மனதினில் ஒரும் பெரும்வலி. இதே கேள்வியை முன்னொரு தரம் கேட்டும் இருக்கிறார் ராணி. ஆனால் அப்போதிருந்த சூழலே வேறு.

ராதிகா வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற பிடிவாதம் எல்லாம் அடுத்த மாதம் அவளுக்கு தேதி தள்ளிப் போயிருக்கிறது என்ற ஒன்றிலேயே காணாமல் போயிருந்தது. மனதினில் ஏமாற்றம் இருந்ததுதான். கணவன் தனக்கு சாதகமாய் நிற்கவில்லை என்ற வருத்தம் இருந்ததுதான்.  ஆனால் பிள்ளை விஷயம் உறுதியாகவும், ராதிகாவிற்கு வானத்தில் பறக்காத குறைதான்.

“வாவ்.. நமக்கு ஒரு பேபி..” என்று அப்போதிருந்தே வயிற்றினில் கை வைத்து வைத்து கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டாள்.

ஆனால் ராதிகாவின் எதிர்பார்ப்பு எல்லாம், நிரஞ்சனனும் தன்னைப்போல் எண்ணவேண்டும் என்பதுதான். இரண்டாவது  மாதத்தில்  இருந்தே அவளுக்கு நிறைய போட்டு உடம்பு படுத்த,

சுந்தரியே பார்த்து “அம்மா வீட்ல இருக்கணும்னு தோணிச்சுன்னா இருந்துட்டு வா ராதிகா..” என,

அன்றைய இரவில் நிரஞ்சனன் வரவுமே கேட்டாள் “ஏங்க நான் போய் கொஞ்ச நாள் அம்மாவீட்ல இருக்கவா..” என்று,

“ஏன் திடீர்னு..” என்று அவனும் கேட்க “இல்லை அம்மாகூட இருக்கணும் போல இருக்கு..” என்றவள் அவனின் முகத்தினை ஆவலாய் பார்த்தாள்.

‘ஏன் அப்போ என்னோட இருக்கணும் தோணலையா??!!’ என்று கேட்பானோ என்று.

அவனுக்கு எங்கே அதெல்லாம் தோன்றிட போகிறது, “அப்படியா.. ம்ம் சரி.. இங்க அம்மாக்கிட்ட..” எனும்போதே, “அத்தையும் மதியமே சொன்னாங்க அங்க போறதுன்னா போய் இருந்துட்டு வர சொல்லி..” என்றாள் ராதிகா வேகமாய்.

“ஓ!! அப்போ ஓகே..” என்றவன் அதற்குமேல் எதுவுமே பேசவில்லை..

ராதிகாதான் அவன் முகத்தை முகத்தைப் பார்த்து படுத்திருக்க, நிரஞ்சனனோ “நாளைக்கு கிளம்புறப்போ சொல்லு ராதிகா..” என,

“ம்ம்…” என்றவளுக்கு, இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று தோன்றியது. இல்லை இவனின் இயல்பே இதுதானோ என்றும் இருந்தது.

ஆனால் நித்யாவிடம் எல்லாம் நன்றாய் தானே பேசுகிறான். வார்த்தைக்கு வார்த்தை.. பதிலுக்கு பதில் என்று. பிள்ளைகூட வரப்போகிறது ஆனால் இன்னமும் இவனை தானும் முழுதாய் புரிந்துகொள்ளவில்லை, அதற்கான சந்தர்ப்பம் அவனும் கொடுத்திடவில்லை, அவனாவது தன்னை புரிந்துகொள்வான் என்று பார்த்தால் அதுவுமில்லை.

இத்தனை நாள் தன்னோடு இருந்தவள், இப்போது தன் பிள்ளையை வேறு சுமக்கிறாள், நாளை கிளம்பி அம்மாவீடும் செல்லப் போகிறாள், மனதினில் சிறு ஏக்கம் கூடவா இருக்காது?

‘அங்க போனாலும் எனக்கு போன் பண்ணனும்.. நீ இல்லாம எனக்கு இங்க கொஞ்சம் நல்லாருக்காது..’ இப்படி ஏதாவது சொல்வான் என்று பார்த்தாள்.

ம்ம்ஹும் நிரஞ்சனன், அவள் கிளம்பும் வரைக்கும் கூட, ஏன் அதன் பின்னரும் கூட எதுவும் அப்படி பேசினான் இல்லை. தினம் தினம் சுந்தரியும், நித்யாவும் அழைத்துப் பேசுவர். அவ்வப்போது குணசேகரனும் சுந்தரியும் வந்து பார்த்துவிட்டு செல்வர்.

முதலில் நிரஞ்சனனும் கூட இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து பார்ப்பான். பின் அப்படி அப்படியே அது குறைந்திட, பேசும் நேரம் கூட குறைந்து போனது.

ராதிகா அழைத்தால் “ஆபிஸ்ல இருக்கேன்ம்மா.. வீட்டுக்கு போய்ட்டு பேசுறேன்..” என்பான்.

சரி வீட்டிற்கு வந்திருப்பான் என்று அவள் காத்திருந்து அழைத்தாள் “என்ன நீ இன்னும் முழிச்சிட்டு இருக்க.. தூங்கு முதல்ல..” என்ற அதட்டல் வரும்.

அது அவளின் மீதான அக்கரையில் வரும் அதட்டல் தான். இருந்தாலும் அந்த நேரத்தில் அவனோடு பேசிடும் சிறு நேரம் கொடுக்கும் நிம்மதியும் மகிழ்வும், அவளின் அந்த நேர உறக்கம் கொடுக்காது. இதை அவனிடம் சொன்னால் அவனுக்குப் புரியுமா என்று யோசிக்கவில்லை அவள்.

‘இவர்கிட்ட சொல்றதுக்கு நான் சும்மாவே இருந்துப்பேன்..’ என்ற எண்ணம் வர, அடுத்து அவளாக அழைப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாய் நிறுத்த, மாதம் ஒருமுறை செல்லும் மருத்துவ பரிசோதனைகளின் போது மட்டும் சரியாய் நிரஞ்சனன் வந்துவிடுவான்.

சொல்லப்போனால் மருத்துவமனைக்கு செல்ல அப்பாயின்மென்ட் வாங்குவதே அவன்தான். ராதிகாவிற்கும் அழைத்து ‘ரெடியா இரு.. வந்து கூட்டிட்டு போறேன்..’ என, அவளின் மனதில் சிறு சந்தோசம் என்பதெல்லாம் அப்போது மட்டும் தான்.

முதல் நான்கு மாதங்கள் இப்படியே முடிந்திட, ஐந்தாவது மாதம், சுந்தரி “ராதிகா இனி அங்க வந்து இருக்கட்டும்.. வளைகாப்பு முடிஞ்சு அடுத்து இங்க வந்துக்கட்டும்..” என,

ஒருவேளை தான் அங்கிருந்து, நிரஞ்சனனோடு நேரம் செலவிட்டாலாவது அவனிடம் கொஞ்சம் மாற்றங்கள் வருமென்று எண்ணி சந்தோசமாகவே கிளம்பினாள் ராதிகா.

அப்போதுதான் ராணி இப்போது கேட்ட இதே கேள்வியைக் கேட்டார் “நீ நீ இருந்துப்பியா அங்க…” என்று.

“ஏன் ம்மா இருந்துக்க மாட்டேனா.. அதெல்லாம் இருந்துப்பேன்..” என்று சந்தோசமாய் சொல்லிக் கிளம்பியவள் தான் ராதிகா.

அந்த நொடி அவளுக்கு புதிய தெம்பும் வந்திருந்தது. நிச்சயம் நிரஞ்சனன் இனியாவது தன்னோடு நேரம் செலவழிப்பான் என்று. இனியாவது ஒரு புதிய மாற்றம் வரும் என்ற நினைப்போடு தான் போனாள் ராதிகா. மாற்றங்கள் வந்தது.. ஆனால் எதுவுமே அவள் நினைத்தும் பார்க்காதது.

அதெல்லாம் இப்போது நினைவு வந்திட, ராணி அந்தப்பக்கம் அலைபேசியில் “ஹலோ ஹலோ..” என்று கத்திக்கொண்டு இருக்க, இங்கே ராதிகாவோ பழைய எண்ணங்களில் மூழ்கிப்போனாள்.

உண்ணவும் செய்யவில்லை, போனிலும் பேசவில்லை, ஆடாது அசையாது என்னதான் செய்கிறாள் இவள் என்று பார்த்த நிரஞ்சனன் எழுந்து வந்து மீண்டும் பார்க்க, அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் முகத்தினைப் பார்த்து எதுவும் யூகிக்க முடியவில்லை..

அதற்குள் ராணி, அழைப்பை துண்டித்துவிட்டு திரும்ப அழைக்க, அந்த சத்தத்தில் உலுக்கிவிழுந்தவள் அழைப்பினை ஏற்று “ஹலோம்ம்மா..” என,

“என்னாச்சு ராதிகா..” என்றார்..

“ஒ.. ஒண்ணுமில்லம்மா..” என்கையிலேயே அவளின் குரல் உடையத் தொடங்க, அருகில் நிரஞ்சனன் நிற்பது வேறு தெரிய, மொத்தமாய் தன் தெம்பினை இழந்தாள் ராதிகா..

“ராதி.. ராதிம்மா…” என்று ராணி அழைக்க,

“நான்.. நான்.. நாளைக்கு பேசுறேன்ம்மா..” என்றவள் அவரின் பதிலையும் எதிர்பார்க்கவில்லை.

அழைப்பை துண்டித்துவிட்டு, உண்பதையும் அப்படியே நிறுத்தியவள், தட்டினை எடுத்து உள்ளே சென்று வைத்துவிட்டு, தான் படுத்திருந்த அறைக்குள் சென்றுவிட, நிரஞ்சனன் அதே இடத்தில் நின்றிருந்தவன், இவளின் நடவடிக்கைகளைப் பார்க்க விசித்திரமாய் இருந்தது.

நித்யாவிடம் எதையோ மறைமுகமாய் சொல்வது போல் பேசினாள். அதன்பின்னே இப்போது என்னானது என்று இப்படி எழுந்து செல்கிறாள் என்று பார்க்க, ராதிகாவோ அங்கே கட்டிலில் குப்புற விழுந்து அழுதுகொண்டு இருந்தாள்.

அவளையும் மீறிய அழுகை அது..

இங்கே வந்து, அதுவும் இப்போது நிரஞ்சனன் முன்பு கண்ணீர் வடிப்பது இருக்கவே கூடாது என்று மனதை பிடிவாதமாய் திசை திருப்ப எண்ணிய வேளையில், தன் மனதில் இருக்கும் ஏக்கங்கள் எல்லாம் எழுந்து வந்து அவளைப் பார்க்க, அவளோ இத்தனை வருடங்களை ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று எண்ணியது எல்லாம் இப்போது வெடித்துக் கிளம்பியது.

அழுகைக்கு இதுதான் காரணம் என்று ஒன்றை சொல்ல முடியாது.. நிறைய நிறைய இருந்தது. ஆனால் ஒரு விஷயம் அடித்துக் கூறுவாள், அவளின் அத்தனை காரணங்களும் முடிவில் வந்து நிற்பது நிரஞ்சனனிடம்.

வேலை முக்கியம்.. தொழில் முக்கியம்.. வீட்டின் நிம்மதி முக்கியம்.. அப்பா அம்மா தங்கை இவை எல்லாமே முக்கியம்.. அதே நேரம் தன் மனைவியின் சந்தோசமும் முக்கியம் என்பது அவன் ஏன் அறிந்துகொள்ளாது போனான்?? என்று இப்போதும் அக்கேள்வி அவளுள் எழுந்து அவளை நிலைகுழையச் செய்தது.

இதோ அவன் இங்கேதான் இருக்கிறான்.. அவனிடமே கேட்கலாம்தான்.. ஆனால் அதுவும் முடியாதே..

என்னவென்று கேட்பாள்..??!!

மனதில் ஆயிரம் இருந்து அதில் ஒன்றைக்கூட வெளிப்படுத்த முடியாத சூழல் தனக்கு வந்ததை எண்ணி எண்ணி அவளால் நொந்துகொள்ளவே முடிந்தது.

நிரஞ்சனனோ பழையபடி அதே சோபாவில் வந்தமர்ந்தவன் ராதிகாவைக் காண அவள் உடல் குலுங்குவதிலேயே அவள் அழுகிறாள் என்றும் தெரிய பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.

‘எந்திரிச்சு போ நிரஞ்சன்.. போ.. போய் என்னன்னு கேளு.. இது உன் வீடு.. இங்க வந்து அழுதுட்டு படுத்திருக்கா.. நீ பார்த்திட்டு இருக்க .. போ டா போ..’ என்று அவனின் மனம் போட்டு உந்த, எழுந்தும் கூட விட்டான் தான்.

ஆனால் அடுத்த நொடி  அதே மனம் ‘எந்த உரிமைல நீ போய் அவளைக் கேட்ப..’ என்றும் கேட்க, அப்படியே தொய்ந்து போய் அமர்ந்தும் விட்டான்..

நிஜம் அதுதானே… உரிமை இருக்கும் காலத்திலேயே அவளிடம் இப்படி எல்லாம், எதுவும் கேட்டவனில்லை.. ராதிகாவும் அதிகம் எதற்கும் அழுதது போல் அப்போது இல்லை.. என்று எண்ணியிருந்தவனுக்கு, இவர்களின் பிரிவின் பின்னே தான் புரிந்தது அவளின் நிறைய உணர்வுகளை தன்னிடம் வெளிக்காட்டவில்லை என்று.

‘அப்படி என்னடி பண்ணிட்டேன்.. என்ன பண்ணிட்டேன்.. இப்போ நீயும் நிம்மதியா இல்லை.. என்னோட நிம்மதியையும் கொன்னுட்ட.. எவ்வளோ எடுத்து சொன்னேன்.. கேட்டியா நீ.. கோபத்துல வார்த்தை விட்டது என் தப்புதான்.. ஆனா…’ என்று பல்லைக் கடித்தவனுக்கு, அங்கே அமர்ந்திருக்கவும் முடியவில்லை, எழுந்து போகவும் முடியவில்லை.

வெகு நேரம் ராதிகாவைத்தான் பார்த்தபடி இருந்தான். அவளின் அழுகை தானாக மட்டுப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் அவள் உறக்கத்தின் பிடிக்குள் செல்ல, மெதுவாய் எழுந்து வந்தவன், அவளின் அருகே நின்றும் பார்க்க, ராதிகா நன்றாய் உறங்குவது தெரிந்தது..

சுவாசம் சீராகி வந்துக்கொண்டு இருக்க, அவளை நேரே படுக்க வைத்தவன், போர்வை போர்த்திவிட்டு, விடிவிளக்கை போட்டுவிட்டு வந்து தானும் அந்த சோபாவில் படுத்துகொண்டான்.

இதெல்லாம் அவள் அவனோடு இருந்த காலத்தில் செய்திருந்தால், ராதிகா அகமகிழ்ந்து போயிருப்பாள்.. இப்போது செய்து, அதுவும் அவள் உறங்கியபின் செய்து என்ன பிரயோஜனம்..  

படுத்தவனுக்கு உறக்கமில்லை. மனம் எதை எதையோ நினைத்தது.. கடந்த காலமா, இல்லை எதிர்காலமா எதைப் பற்றி நினைக்கிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அனைத்திலும் ராதிகா இருந்தாள்.

அவள் மட்டுமே இருந்தாள்..

எப்போதாவது ‘ராதி…’ என்று அழைப்பான்..

அப்படி அழைக்கும் வேளையில் எல்லாம் அவளின் முகத்தினில் ஒரு தனி பளிச்சிடல் வந்து போகும்..

“ம்ம் அம்மா எப்போவாது இப்படி சொல்வாங்க.. பட் நீங்க சொல்றது சோ ஸ்பெசல்..” என்பாள்.

நினைத்துப் பார்த்தால், இப்போது நித்யாவை விட சிறியவள் தான் ராதிகா திருமணம் நடக்கையில். நித்யா மனதில் என்னென்னே எதிர்பார்ப்புகள் இருக்கின்றதோ அதெல்லாம் தானே அப்போது அவளுக்கும் இருந்திருக்கும். நிரஞ்சனன் முதல் முறையாக, ராதிகாவைப் பற்றி வேறொரு கோணத்தில் சிந்திக்கலானான்..

என்ன யோசித்தும் என்ன??!! பிரிவு என்ற ஒன்று நிகழ்ந்தாகிவிட்டது.. இனியென்ன செய்ய முடியும்..

ஆழ்ந்த பெருமூச்சு அவனிடம் இருந்து வெளிவர, மெல்ல மெல்ல அவனும் கண்ணுரங்கிப் போனான்.

சோபாவில் படுத்தவனும் உறங்கிவிட, அழுதுகொண்டே படுத்தவளும் உறங்கிவிட, காலை பொழுதில் இருவருமே எழும் நேரத்திற்கு எழவில்லை.

அத்து கூட எழுந்து சரியாய் பள்ளி கிளம்பிவிட, ‘அம்மா.. அம்மா..’ என்றவனை நித்யா தூக்கிக்கொண்டு போய் ராதிகாவை காட்ட, தொட்டுப் பார்த்தவனுக்கு அதோடு சமாதானம் ஆகிப்போனது மனது.

‘அம்மாக்கு பீபர்…’ என்று அவனே சொல்லியும்கொள்ள, நித்யா கொண்டு போய் அவனை பள்ளியில் விட்டும் வந்துவிட, இன்னமும் கூட இருவரும் எழவில்லை.

“என்னம்மா இப்படி தூங்கிட்டு இருக்காங்க..” என்று நித்யா அம்மாவிடம் கேட்க,

“அண்ணனை எழுப்பிவிடு நித்யா.. இப்படி எவ்வளோ நேரம் ஒரே மாதிரி படுத்திருப்பான்..” என்ற சுந்தரி ராதிகாவைக் காணச் செல்ல, அவளுக்கோ காய்ச்சலில் உடல் கொதித்துக்கொண்டு இருந்தது.

இனி பொறுத்துப் பயனில்லை. மருத்துவமனை சென்றால் தான் ஆகும் என்று எண்ணியவர், நிரஞ்சனனிடம் வர அவனோ அப்போதுதான் எழுந்துகொண்டு இருந்தான்.

“நிரஞ்சன்.. ராதிகாக்கு ரொம்ப கொதிக்குதுடா.. ஹாஸ்பிட்டல் போனாதான் ஆச்சு..” என,

அவர் பேசும்போதே, அவனின் பார்வை அங்கே அவளைத் தொட்டு மீண்டு வர, “ம்ம் ரெடியாக சொல்லும்மா…” என்றவன் தானும் தயாராகப் போனான்.

வீட்டின் சூழலே மாறியதாய் இருந்தது அனைவர்க்கும்.. ஒரு குடும்பமாய் இருக்கும் உணர்வு.. அம்மா.. மகன்.. மருமகள்.. பேரன்.. மகள், அவர்களின் அன்றாட வேலை இப்படி திடீரென வீட்டின் சூழல் மாறிப்போக, சுந்தரி என்ன யோசித்தாரோ ராணிக்கு அழைத்து பேசினார்..

“இன்னிக்கு நைட் வந்திடுவோம்.. வந்து கூட்டிட்டு போயிக்கிறோம்..” என்று ராணியும் சொல்ல,

“அதுனால ஒண்ணுமில்லை.. ஒருவார்த்தை சொல்லிடனும் இல்லையா.. அதான்..” என்ற சுந்தரிக்கு அடுத்து ராதிகாவை எழுப்பி, உண்ண வைத்து கிளப்பவே நேரம் போய்விட்டது.

‘வேண்டாம்..’ என்று பிடிவாதம் செய்யவெல்லாம் அவளால் முடியவேயில்லை..

கண்களே திறந்திட முடியவில்லை. இதிலெங்கே அவள் வீட்டிற்கு கிளம்புவது??! நடக்குமா என்ன?

“அ.. அத்து. எங்க..” என்று மட்டும் கேட்க, “அவன் சமத்தா கிளம்பி ஸ்கூல் போயிட்டான் அண்ணி..” என்றாள் நித்யா..

“எ… என்னை தேடலையா??!!” என்றவளுக்கு மனதில் இப்படியே போனால் அத்துவிற்கு நான் தேவையே இல்லை என்ற நிலை வருமோ என்ற பயம் வந்தது.

“அதெல்லாம் வந்து உங்களைத் தொட்டுப் பார்த்துட்டு பீவர்னு சொல்லிட்டுத்தான் போனான்..” என்று நித்யா சிரித்தபடி சொல்ல, அதன் பின்னே தான் ஒரு ஆசுவாச மூச்சு வந்தது அவளிடம்.

“ம்மா கிளம்பலாமா..” என்றபடி நிரஞ்சனன் வர, அவனின் பார்வை மொத்தமும் ராதிகாவின் மீதிருப்பதை அனைவருமே கண்டு இருந்தாலும், ராதிகாவோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அம்மாவும் மகனும் எங்கேயோ கிளம்புகிறார்கள் போல என்று எண்ணினாள். சுந்தரி சொல்லவே இல்லை மருத்துவமனை செல்லவேண்டும் என்று. சொன்னால் நிச்சயம் எழுந்து கிளம்பி அமர்ந்திருக்கவே மாட்டாள் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.

நிரஞ்சனன் வந்து பேசட்டும் என்று இருக்க “நீ சாப்பிட்டு வா.. டோக்கன் சொல்லணும் ஹாஸ்பிட்டல்ல..” என்றபடி சுந்தரி அவனுக்கு எடுத்து வைக்க,

“ம்ம்..” என்றவன், மருத்துவமனைக்கு அழைத்து டோக்கன் புக் செய்ய “பேசன்ட் நேம் ராதிகா..” என்று அவன் சொல்கையில் தான், இது தனக்கு என்று ராதிகாவிற்கு புரிந்தது.

“அத்தை..!!!” என்று அவள் விளிக்க,

“ம்ம் உனக்குத்தான் ராதிகா.. அடம் பண்ண கூடாது… உங்கம்மா கிட்ட பேசிட்டேன்.. நைட் வந்து கூட்டிட்டு போவாங்களாம்.. அதுவரைக்கும் இங்கதான் நீ.. அதனால சொல்றதை கேட்டு அமைதியா இரு..” என்ற சுந்தரி கொஞ்சம் அதட்டியே பேச, மறுவார்த்தை பேச முடியவில்லை அவளால்.

எது எப்படி இருந்தாலும், பிரிவே நேர்ந்திருந்தாலும் மாமியார் அல்லவா.. எப்போ எந்த நேரத்தில் எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசி காய் நகர்த்தினார்.

முதல் நாள் இரவு பேசிய அளவு கூட நிரஞ்சனன் இப்போது பேசவில்லை. உண்டு முடித்து எழுந்தவன் “கார் எடுக்கிறேன்..” என்று சொல்லி வெளியேற,

“வா ராதிகா போவோம்..” என்று சுந்தரி சொல்ல,

“இ.. இல்லத்தை..” என்று அவள் தயங்க, “அண்ணி போயிட்டு வாங்க.. இல்லன்னா அவ்வளோ சீக்கிரம் காய்ச்சல் விடாது..” என்று நித்யாவும் சொல்ல,

‘நான் வீட்டுக்கு போறதுக்காகவாவது சரியாகிடனும்..’ என்ற எண்ணத்தோடு கிளம்பினாள் ராதிகா..   

Advertisement