Advertisement

அத்தியாயம்  – 8

நிரஞ்சனனுக்கு உறக்கம் இல்லை. சிறிது நேரத்திற்கு முன்னம் தானே நன்கு உறங்கிப்போனான். அவனுக்கே அது ஆச்சர்யம் தான். இடைப்பட்ட பொழுதில் அவனுக்கு உறக்கமா?? அதுவும் அத்தனை ஆழ்ந்து?? உறங்கும் வேளையில் கூட அப்படி உறங்க முடியாதே.

‘ம்ம்ம்…’ என்று தனக்கு தானே தலையை ஆட்டிக்கொண்டான்.

வீடே அமைதியாய் இருந்தது. இதற்கு முன்னமும் இப்படிதான் இருக்கும்.. ஆனால் அந்த அமைதியில் ஒரு வெறுமையும் சூழ்ந்திருக்கும். இப்போதோ, இனம் புரியா ஒரு உணர்வு கலந்திருப்பது போலிருந்தது அவனுக்கு.

ஒரு அறையில் மகன், இத்தனை நேரம் ஆட்டம் போட்டுவிட்டு போய் படுத்திருக்க, இன்னொரு அறையில் மனைவி.. அதுவும் அவள் எப்போது விழிப்பாள் என்ற காத்திருப்போடு இவன். நினைக்கவே வியப்பாய் இருந்தாலும் கொஞ்சம் விந்தையாகவும் இருந்தது..

அன்றைய விடியலில் கூட நிரஞ்சனன் இதெல்லாம் நடக்கும் என்று எண்ணினான் இல்லை. அத்துவை பள்ளியில் பார்த்ததுமே அவனுள் எழுந்த உணர்வும், பின் கோபமும் இப்போது துளியும் இல்லை. அதுவும் மகனை நினைக்கையில் மனது மகிழ்வாய் உணர்ந்தது.

‘நன்றாக வளர்த்திருக்கிறாள்…’ என்றும் எண்ணத் தோன்றியது.

நடுவில் அத்து விழித்துவிட, அவனை உண்ண வைத்து நித்யா கொஞ்சம் நேரம் அவனோடு விளையாடிக்கொண்டு இருக்க, “ம்மா… ம்மா…” என்று அம்மாவை தேட தொடங்கிவிட்டான்.

“அம்மாக்கு காய்ச்சல் கண்ணா.. தூங்குறா…” என்று சுந்தரி சொன்னதற்கும், அத்து கேட்கவில்லை,

“ம்ம்ஹும் ம்மா…” என்று உதட்டை பிதுக்க,

“அத்து அம்மா நல்ல ஜோ ஜோ டா….” என்றான் நிரஞ்சனனும்.

“ம்ம்ஹும்……..” என்று இன்னும் சத்தம் கூட்டினான்..

அவனைப் பொறுத்தமட்டில் சும்மாவேனும் அவனின் அம்மாவை கண்களில் காண வேண்டும். அதைவிட்டு இவர்கள் சொல்லும் சாக்கெல்லாம் செல்லாது. என்ன இருந்தாலும் அவனின் அம்மா என்றால் சும்மாவா??

“அத்து.. அம்மாவை பாக்கலாம்.. பட் டிஸ்டர்ப் பண்ண கூடாது ஓகே வா…” என்று நிரஞ்சனன் மகனைத் தூக்கிக்கொண்டு செல்ல,

“ஓகே ப்பா…” என்றான் சமத்தாய் சிறுவனும்..

அத்துவை நிரஞ்சனன் அழைத்து செல்ல, ராதிகாவோ தன்னை மறந்து உறங்கிக்கொண்டு இருந்தாள். ஆழ்ந்த நித்திரை என்பது அவளைக் கண்டாலே தெரிந்தது. இத்தனை நாள் இப்படியொரு உறக்கம் எனக்கில்லை என்பது அவளின் முகத்தினில் தெரிந்ததுவோ என்னவோ, நிரஞ்சனன் மகனை கையில் ஏந்தி, ஒருவித ஆராய்ச்சி பார்வை போல் ராதிகாவின் முகத்தினைப் பார்க்க,

“ப்பா… ம்மாக்கு பீவர்…” என்றான் சிறுவன் அவனின் அம்மாவைக் காட்டி..

“ஆமாடா… சோ நம்ம டிஸ்டர்ப் பண்ண கூடாது…” என்று நிரஞ்சனன் சொல்கையில்,

“ம்மா…” என்றான் அத்து மெதுவாய் குனிந்து..

“ஷ்.. அத்து..”

“ஷ்ஷ்ஷ்..!!!” என்று அத்து ‘சைலன்ஸ்..’ என்பதுபோல் வாயில் விரல் வைத்து சொல்ல, நிரஞ்சனன் மகனின் இச்செய்கையில் அசந்து தான் போனான்..

“ம்ம்மா….” என்று அத்து மிக மிக மெதுவாய் சொன்னவன், தன்னை இறக்கிவிடு என்பதுபோல் உடலை அசைக்க, மகன் என்னதான் செய்கிறான் என்று பார்க்கும் எண்ணத்தில் நிரஞ்சனன் அவனை இறக்கி மெதுவாய் ராதிகாவிடம் அமர்த்திவிட,

அடுத்த நொடி, அதோஷஜன் ராதிகாவின் நெற்றியை மெதுவாய் தொட்டுப் பார்த்து, அதைவிட மெதுவாய் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, பின் தன் அப்பாவினைப் பார்க்க,

‘என்னடா??’ என்று சைகை செய்தான் பெரியவனும்..

அதை புரிந்த சிறியவனோ ‘போலாம்…’ என்பது போல் அப்பாவைப் போலவே சைகை செய்ய, பட்டென்று நிரஞ்சனன் முகத்தினில் வந்து முறுவல் அமர்ந்துகொண்டது.

இந்த குட்டி பையனுக்குள் இத்தனை புரிதலா?? என்று தோன்றும் அதே நேரம் நிரஞ்சனனுக்கு ‘இவ்வளோ அழகா பையனை வளர்த்து வச்சிருக்கா.. ஆனா இந்த புரிதல் ஏன் இவளுக்கு இல்லாம போச்சு…’ என்று அப்போதும் கூட ராதிகாவை எண்ணாமல் இருக்க முடியவில்லை.

மகனைத் தூக்கிக்கொண்டு திரும்ப வெளியே வந்தவன் மகனை அமர்த்தி தானும் அமர்ந்திட, நித்யாவோ “அத்து உனக்கு ஹோம் வொர்க் இருக்கா??” என,

“ம்ம்…” என்றவனின் பார்வை வேகமாய் அவனின் பள்ளிக்கூட பையை தேடியது.

“நித்யா விடு அவன் ப்ரீயா இருக்கட்டும்…” என்று நிரஞ்சனன் சொல்ல,

“அதெல்லாம் இல்லை பண்ணட்டும்..” என்று சுந்தரியும் சொல்ல, அதன் பின் என்ன, மூவருக்கும் இடையில் அமர்ந்துகொண்டு அத்து ஹோம் வொர்க் முடிப்பதற்குள் அடுத்து ஒருமணி நேரம் கடந்திருந்தது.

அப்போது வரைக்கும் கூட ராதிகா எழவில்லை.

சுந்தரியோ அத்துவின் கவனம் திரும்பாமல் “நிரஞ்சன் என்னடா ராதிகா இன்னும் தூங்கிட்டு இருக்கா??!!” என, மணியைப் பார்த்தவன் “ஒரு ஹால்ப் ஹவர் போகட்டும்மா பார்த்துக்கலாம்..” என்றவன்,

“நித்யா நீ இவனை உள்ள கூட்டிட்டு போ.. போங்க எல்லாம் தூங்குங்க.. நான் இங்க ஹால்ல இருக்கேன்…” என்றவன் தான் அரைமணி நேரம் சென்றும் கூட மேலும் அரைமணி நேரம் வரைக்கும் ராதிகா விழிக்காது இருக்க, மெதுவாய் அருகே சென்று பார்த்தான்.

திருமணம் முடிந்து, அந்த நாட்களில் கூட நிரஞ்சனன் ராதிகாவை இப்படி கவனித்திருப்பானா என்று கேட்டால் விடை தெரியவில்லை. இப்போதோ ஒவ்வொரு நொடியும் உள்ளம் பதறிக்கொண்டு இருந்தது.

ஆனால் அவனே சொல்லிக்கொண்டான் ‘இவ அப்பா அம்மா வந்து கேட்டா என்ன சொல்றது…’ என்று.. அதெல்லாம் வெறும் வெற்று காரணங்கள் அவனுக்கு அவன் சொல்லிக்கொண்டது.

எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தானோ, ராதிகா மெதுவாய் அசைவது கண்டு, வேகமாய் வெளியே வந்து அறைக்கு நேரே இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான். என்னவோ அந்த நொடி இருதயம் படபடவென்று அடிப்பது போலிருக்க,

மெதுவாய் கழுத்தைத் திருப்பாது, கண்களை மட்டும் ராதிகா என்ன செய்கிறாள் என்று பார்க்க திருப்ப, அவளோ எழுந்து அமர முயல்வது தெரிந்தது. ஆனாலும் அவளால் எழுந்து அமர முடியவில்லை. உண்ணாது உறங்கியது வேறு உடலை அசதியாக்கி இருந்தது. நிரஞ்சனன் இப்போது நேராகவே அவளைப் பார்த்தவன், எழுந்து போய் சுந்தரி என்ன செய்கிறார் என்று பார்க்க, அவரோ அத்துவோடு உறங்கியிருந்தார்.

அடுத்து போய் நித்யாவைப் பார்க்க, அவளோ அரவிந்தோடு அலைபேசியில் மூழ்கியிருப்பது தெரிந்தது. அம்மாவை எழுப்பவும் முடியாது, நித்யாவை அழைக்கவும் முடியாது.

ஆனால் இவன் போய் அவளுக்கு உதவலாமே.. மனம் நானா என்று திடுக்கிட்டது. இதேது அவளின் இடத்தில் வேறு யாராவது வேற்று மனிதர்கள் இருந்தால் இந்நேரம் நிரஞ்சனன் தயங்கி நிற்பானா என்ன??

ஹ்ம்ம்.. இந்த ராதிகாவை வேற்று ஆளாகவும் நினைக்க முடியவில்லை. வீட்டு மனுசியாகவும் நினைக்க முடியவில்லை. அதுதானே கொடுமையாய் போனது. அவளை தன்னவள் என்று நினைக்கவேண்டிய நேரத்தில் அவன் நினைக்கவும் இல்லை. இப்போது மூன்றாவது ஆளாக எண்ணி உதவி செய்யவும் முடியவில்லை தவித்துப் போனான் நிரஞ்சனன்.

ஆனால் அதற்குள் அறையில் இருந்து “அ.. அத்து…” என்று மெதுவாய், பலகீனமாய் ராதிகாவின் குரல் கேட்க, நிரஞ்சனன் அங்கே விரைந்தான்..

வேகமாய் எட்டுக்கள் வைத்தவன், அதைவிட வேகமாய் அங்கே அறையின் கதவருகே நிற்க, ராதிகாவோ இவனைப் பார்த்து கொஞ்சம் திடுக்கிட்டு தான் பார்வையை திருப்பினாள். நித்யாவோ சுந்தரியோ வருவார்கள் என்று அப்படியே படுத்திருந்தது போலவே எழுந்து அமர்ந்து, இப்போ இறங்கவும் முயற்சிக்க, தனது ஆடைகள் எப்படி இருக்கிறது என்றெல்லாம் அவள் கவனிக்கவில்லை.

எழுந்ததும் மகனைக் காணவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. ஆனால் நிரஞ்சனன் வந்து நிற்கவும், தன்னை தானே சுதாரித்து பார்த்தவளுக்கு தான் அவளின் ஆடைகள் விலகி இருந்ததே தெரிந்தது. ஒருவேளை அப்படிக்கண்டு தான் இவனும் வேகமாய் நின்றுவிட்டானோ என்னவோ.

ராதிகாவின் இருதயம் திடுக் திடுக்கென்று அடித்துக்கொள்ள, வேகமாய் உடையை  சரி செய்து கொண்டவள், ஒருவித பதற்றத்தோடு அமர்ந்துவிட்டாள். சுண்டு விரல் கூட அசைக்க முடியுமா என்பது அவளுக்கு சந்தேகமே.

அதிலும் இதோ நிற்கிறானே நிரஞ்சனன் அவனைத் தாண்டி வெளியே செல்வதென்பது முடியாது என்பதாய் தான் தோன்றியது. ராதிகா அப்படியே இருக்க, நிரஞ்சனனின் தவிப்போ வேறுவிதமாய் இருந்தது. மனதில் ஒரு சங்கடம்.

பேசாது போய் நித்யாவை அழைத்து வரலாமா என்று யோசித்தவன், அது தான் சரி என்பதுபோல் நித்யாவை அழைக்கவும் வந்துவிட்டான். நிரஞ்சனன் நகரந்ததுமே எங்கிருந்து தான் ராதிகாவிற்கு அப்படியொரு வேகம் வந்ததோ, இல்லை மகனைக் காணும் உந்துதலோ தெரியவில்லை, அவளும் எழுந்து வெளியே வர, நிரஞ்சனனோடு நித்யா வருவது தெரிந்து ஒரு சிறு நிம்மதி மனதினுள்.

‘அப்பாடி..!!!’ என்று உள்ளுக்குள்ளே சொல்லியவள், “அத்து..!!!” என்றாள் நித்யாவைப் பார்த்து.

“அத்து தூங்குறான் அண்ணி.. நீங்க வாங்க சாப்புடுவீங்க..” என்று நித்யா அழைக்க,

“இ.. இல்ல.. அவனைப் பாக்கணும்..” என்று நின்றாள் ராதிகா..

சுந்தரி எனில் அதட்டி உருட்டி பேசி அவளை முதலில் உண்ண வைத்துவிட்டு தான் மறுவேலை பார்க்க வைப்பார், ஆனால் நித்யாவிற்கு அது முடியாதே. அவளோ என்ன செய்ய என்று அண்ணன் முகம் பார்க்க,

அவனோ “அத்து இவ்வளோ நேரம் விளையாடிட்டு இப்போ தான் தூங்குறான்…” என்றான் யாருக்கோ பதில் சொல்வதுபோல்.

ராதிகாவோ இப்போதும் நித்யாவையே பார்க்க, க்ஷன நேரத்தில் நிரஞ்சனன் பார்வை அவளை தொட்டு மீண்டது. இப்படியொரு பார்வையை சந்திக்கக் கூடாது என்பதால் தானோ என்னவோ ராதிகா பிடிவாதமாய் தன் கவனம் மொத்தமும் நித்யா மீது வைத்திருந்ததே.

நித்யாவோ இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டதாய் உணர, இருவரையும் மாறி மாறிப் பார்க்க, “நித்யா… சாப்பிட எடுத்து வை.. எம்ப்டி ஸ்டமக்ல மாத்திரை போட்டது..” என்றான் நிரஞ்சனன் ஒருவித அதிகார குரலில்..

சட்டென்று இவனுக்கு ஏன் இப்படி ஒரு மாற்றம் என்று ராதிகா பார்க்க, நித்யா சரியென்று அவன் சொன்னதை செய்யப் போக, ராதிகாவினுள் இப்போது மீண்டும் ஒரு பிடிவாதம். இவன் சொன்னால் கேட்டிட வேண்டுமா என்று.

அவனோ ‘ஆம் கேட்கத்தான் வேண்டும்..’ என்பதுபோல் பின்னே இரு கைகளையும் கட்டி நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தான்.

‘பையனை கூட்டிட்டு வந்து வச்சுக்கிட்டு எல்லாரும் என்னை அவங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கணும் நினைக்கிறாங்க..’ என்று அவளின் மனது கடிய,

“அண்ணி சாப்பிட வாங்கண்ணி..” என்று நித்யா அழைக்க,

“எனக்கு வேணா…” என்று ராதிகா சொல்லும் போதே,

“சாப்பிட்டா தான் அத்துவை பார்க்க முடியும்..” என்றான் நிரஞ்சனன் இன்னும் அழுத்தம் திருத்தமாய்.

“என்னது??!!!” என்று ராதிகா நிரஞ்சனனை முறைக்க,

“இங்க பாரு.. நடுராத்திரி.. எல்லாருக்கும் தூக்கம் முக்கியம்.. அத்து உனக்கு மட்டும் மகனில்லை.. என் பையனை எப்படி பார்த்துக்கணும்னு எங்க எல்லாருக்கும் தெரியும்.. உன்னைப்போல வாட்ச்மென் கிட்ட விடலை.. ஒழுங்கா சாப்பிட்டா அவனைப் பார்க்கலாம்…” என்று அவளை உண்ண வைக்க வேண்டும் என்ற நோக்கில் வார்த்தைகள் என்னவென்று கவனிக்காது விட்டான்.

ஆனால் நாம் உதிர்க்கும் வார்த்தைகளும், அதன் வலிமையும் பிறரை தாக்கும் போது அதன் வலி என்பது எதிராளி தானே உணர முடியும்.

ராதிகாவும் உணர்ந்தாள்.

எப்போதுமே நிரஞ்சனன் வார்த்தைகள் அவளுக்கு காயம் தானே கொடுக்கும்.. இப்போதும் அவ்வேளையை செவ்வனே செய்தது.

‘ச்சே நீயெல்லாம் என்ன மனுஷன்…’ என்றுதான் ராதிகா பார்த்தாள்..

அதற்குள் நித்யா வந்துவிட “அண்ணா என்னண்ணா…” என்று அண்ணனை கடிந்தவள், “அண்ணி ப்ளீஸ் வாங்க…” என,

“எல்லாம் என் நேரம்… அப்போவே என் மகனை கூட்டிட்டு போயிருக்கனும்…” என்று ராதிகா சொல்ல,

“ஹலோ..!!! அவன் எனக்கும் தான் மகன்..” என்றான் நிரஞ்சனன்..

பதிலுக்கு பதில் அவள் பேச்சிற்கு நிரஞ்சனன் சொல்ல, ராதிகாவிற்கோ ‘என்ன இது??!!’ என்ற கேள்வியும் சிறு வியப்பும்..

பார்வை கூட அவள் மீது பதியாது அப்படியிருக்கையில், இப்போது வீம்பாய் அவனின் பேச்சிற்கு இழுப்பது போல் தோன்ற, நித்யாவோ இருவரையும் வேடிக்கையாய் பார்க்க, ராதிகாவிற்கு அதற்குமேல் அவனோடு வார்த்தையாட முடியவில்லை.

முடியவில்லை என்பதனை விட பிடிக்கவில்லை.. நித்யாவைப் பார்த்தவள் அப்படியே உண்ணப் போக, நிரஞ்சனனோ ‘அது..!!!’ என்று பார்த்தான்..

ராதிகாவிற்கோ மனது குமைந்து கொண்டே இருந்தது. என்னமாதிரி வார்த்தைகள் இது. இவன் வீட்டில் நிற்க வேண்டிய சூழ்நிலை என்றால் என்னவும் பேசுவனா?? இவன் என்னவும் பேசட்டும் என்று நானும் தான் சும்மா விடுவேனா??? மனதிற்குள் கடிந்தபடியே உண்ண, எப்போதடா விடியும் மகனை அழைத்துக்கொண்டு கிளம்பிடலாம் என்று தான் எண்ணம் ஓடியது.

ஆனாலும் இந்த நிரஞ்சனன் பேசியதற்கு சும்மா விடுவதா???

இதோ கொஞ்சம் தள்ளி தான் அமர்ந்திருக்கிறான். நிச்சயம் ராதிகாவும், நித்யாவும் பேசுவதை எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருப்பான்.. இவன் செய்தது எல்லாம் அப்படியே மறந்துபோகுமா?? இன்றென்னவோ நல்லவன் போல் பேசுகிறானே..

நல்லவன் தான்.. ஆனால் வாழ்வை அதுவும் மனைவியோடான வாழ்வை எப்படி வாழவேண்டும் என்று தெரியாத நல்லவன்.. அப்படியாயின் அவன் கெட்டவனே..

ராதிகாவின் பார்வை நிரஞ்சனன் மீது இருக்க, நித்யாவோ ‘இவங்களை புரிஞ்சுக்கவே முடியலையே..’ என்று நினைக்கும் நொடி,

“நீ என்ன நித்யா இவ்வளோ நேரம் தூங்காம முழிச்சிட்டு இருக்க??” என்றாள் ராதிகா.

“இல்ல அண்ணி.. அது…” என்று நித்யா சொல்லும்போதே,

“கல்யாண பொண்ணு.. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்.. நல்லா தூங்கி எந்திரி.. அப்போதான் நல்லது..” என்று ராதிகாவும் சொல்ல,

அண்ணன் தங்கை இருவருக்குமே ஆச்சர்யமாய் இருந்தது. இவளா இப்படி பேசுகிறாள் என்று. முன்னே அனைவரோடும் நன்றாய் தான் பேசுவாள் ராதிகா.. ஆனால் அதன்பின் அப்படியே குறைத்துகொண்டாள். தேவைக்கு மட்டும். தேவை என்பதுகூட அவளுக்கு இல்லை இல்லையா??

ஆனால் இப்போதோ அவளே பேச்சை ஆரம்பிக்க, நித்யாவிற்கு மனம் வேறு எண்ணியது. இப்படியே எல்லாம் சரியாகிப் போனால் என்ன என்று.

சரியாகுமா என்ன??

“தூங்கனும் அண்ணி…” என்று இழுத்த நித்யா, “அது.. அவங்க.. அரவிந்த் போன் பண்ணிருந்தார்..” என,

“ஓஹோ..!!! சூப்பர்…” என்று சிரித்தபடி சொன்ன ராதிகா, ஒரு ஏளன பார்வையை நிரஞ்சனன் மீது வீசிவிட்டு, “இப்போவே சிலது மனசுவிட்டு பேசிடு நித்யா.. அப்போதான் கல்யாணத்துக்கு அப்புறம் அவங்களும் உன்னை புரிஞ்சு நடந்துக்க ஈசியா இருக்கும்..” என, நிரஞ்சனன் ‘என்ன சொல்றா இவ..’ என்று பார்த்தான்..

நித்யாவோ, ராதிகா என்னவோ அறிவுரை சொல்கிறாள் என்றெண்ணி “ம்ம் சரி அண்ணி..” என,

“ஏன்னா கல்யாணத்துக்கு அப்புறம், இது ஏன் இப்படி, அது ஏன் இப்படின்னு நம்மள நாமலே கேள்வி கேட்டு, நம்மள நாமலே சமாதனம் செய்ற நிலைமை எல்லாம் வரும்.. அதெல்லாம் தாண்டி வர்றக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்…” என, சட்டென்று நிரஞ்சனன் முகம் மாறிப்போனது.

நித்யாவிற்கும் அப்படியே. ஆனால் ராதிகாவோ உண்டபடி “நான் சொல்றது இப்போ உனக்கு புரியாது நித்யா.. ஆனா உனக்கு அந்த சூழ்நிலை வரவேணாம்.. அதான் சொல்றேன்..” என்று ஆழ்ந்து கூற,

அந்த குரலில் இருந்த, வலி, ஏக்கம், ஏமாற்றம் ஒருவித கசப்புணர்வு எல்லாம் அண்ணன், தங்கை இருவருக்குமே நன்கு புரிந்தது..

ஆனால் இதில் அதிர்ந்தது ராதிகாவுமே..

பிரிவு.. அவள் தேடியது தான்.. நிரஞ்சனனை குத்திக்காட்டவேண்டும் என்று பேச ஆரம்பித்து, இப்படி அவள் தன் மனதின் வலியை வெளியே சொல்ல நேரிடும் என்று நினைக்கவில்லை. சொல்லப்போனால் தனக்கு இன்னமும் கூட இத்தனை வலி உள்ளே இருக்கிறதா என்ற ஆச்சர்யம்..

இதெல்லாம் வேண்டாம்.. தேவையில்லை என்று தூக்கிப்போட்டு தானே வந்தாள். வருடங்கள் கூட ஆகிப்போனதே.. அப்படியிருக்கையில் இப்போதும் அவ்வுணர்வு.. அதே ரணம்.. அர்ரணத்தின் அதே சுவை மனதில் இன்னமும்..

அப்படியெனில்… நிரஞ்சனன் மீதான எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் கூட இன்னமும் அப்படியே இருக்கிறதுவா என்ன??

ஒருவித அதிர்வு அவளுள்..

நிரஞ்சனன், நித்யா இருவரும் ராதிகாவை திகைத்துப் பார்த்திருக்க, ராதிகாவோ, கையில் உணவோடு அதை உண்ணும் நிலையில் நான் இல்லை என்ற நிலையில் கண்களிலும் முகத்தினிலும் தன் அவள் மனதின் அதிர்ச்சியை அப்படியே காட்டி அமர்ந்திருந்தாள். 

Advertisement