அத்தியாயம்  – 7

ராதிகாவிற்கு நிரஞ்சனன் கூறிய வார்த்தைகள் நெஞ்சில் அமிலம் தெளிப்பது போலிருக்க, “ஏன்.. ஏன் அனுப்ப மாட்டீங்க??” என்றாள் நேராக அவனையே பார்த்து.

விவாகரத்து ஆன பிறகு இத்தனை ஆண்டுகளில் அவனிடம் முகம் பார்த்து ஒருவார்த்தை பேசியிருக்கவில்லை அவள்.. இன்று மகனை அனுப்ப முடியாது என்று சொன்னதும் மட்டும் அவளுக்கு எங்கிருந்து தான் அப்படியொரு வேகம் வந்ததோ தெரியவில்லை, நேராய் அவனிடமே கேட்க,

அவனோ அவளை அசட்டையாய் ஒரு பார்வை பார்த்தவன் “ம்மா… மழை விடாது… க்ளைமேட் இப்படியிருக்கப்போ, பீவர் ஈசியா ஒட்டிக்கும்.. நான் அத்துவ அனுப்ப மாட்டேன்..” என்றான் சுந்தரியிடம் முடிவாய்.

அப்போதும் கூட அவன் அவளை பார்க்கவில்லை, தான் கேட்டு, தன்னிடம் பதில் சொல்லாது சுந்தரியிடம் நிரஞ்சனன் பேசியது, அவளின் தன்மானத்தை வெகுவாய் சீண்ட, “என் பையனை எப்படி கூட்டிட்டு போகணும்னு எனக்குத் தெரியும்..” என்று பொதுவாய் சொன்னவள்,

வேகமாய் அவனின் அறைக்கு சென்று “வா அத்து..” என்று அவனை தூக்க, சிறுவனோ பாதி உறக்கத்தில் இருந்தான்.

“ம்மா..” என்று அவனும் கட்டிக்கொள்ள,

நிரஞ்சனனோ அடக்கப்பட்ட கோபத்தோடு “ம்மா அவளுக்கு காய்ச்சல் அடிக்குது.. இதுல பையனுக்கும் இழுத்து விட்டுடுவா..” என்றான் நீ ஏதாவது சொல் என்று.

சுந்தரியோ “ராதிகா…” என்று உள்ளே போக,

நித்யாவோ “நீயும் தான் கொஞ்சம் பொறுமையா இருந்தா என்னண்ணா??” என்றபடி அவளும் உள்ளே போக,

ராதிகா அங்கே அத்துவை தூக்கிக்கொண்டு கிளம்ப, “ராதிகா சொன்னா கேளேன்.. உனக்கும் உடம்பு முடியலை…. இதுல அவனை தூக்கிட்டு போய் என்ன செய்வ??” என்றார் சுந்தரியும்.

“இல்லத்தை.. நான் பாத்துக்கிறேன்..” என்றவள் நடந்துவர, அவளுக்கு அப்போது என பார்த்து உடல் தள்ளாடியது.

மனதின் நடுக்கங்கள் எல்லாம் உடலில் தெரிந்தனவோ என்னவோ, லேசாய் தல்லாடிட, “அண்ணி பார்த்துண்ணி…” என்று நித்யா அவளை தாங்கிப் பிடிக்க,

“என்னாச்சு..!!!” என்று சுந்தரி வந்து பதறி ராதிகாவை மறுபுறம் பற்ற, நொடிப்பொழுதில் அங்கே அனைவருக்குமே கலவரமாய் போனது.

நிரஞ்சனன் கூட இவர்களின் சத்தத்தில் என்னவென்று வந்து பார்க்க, ராதிகாவின் முகமே காட்டிக்கொடுத்தது அவளுக்கு ஒன்றும் முடியவில்லை என்று. பிடிவாதத்திற்காக பிள்ளையை தூக்கிக்கொண்டு செல்ல நினைக்கிறாள் என்பது அவனுக்குப் புரியாது இருக்குமா??

அதுவும் இந்த மழையில்.. கார் வேறு ரிப்பேர்.. வீட்டில் வேறு யாருமில்லை..

‘இவல்லாம் திருந்தவே மாட்டா…’ என்றெண்ணியவன், கொஞ்சம் கூட யோசிக்காது அவளின் கரங்களில் இருந்த அத்துவை எடுத்துக்கொண்டான்.

ஆம் எடுத்துதான் கொண்டான். அவளாய் கொடுக்கவில்லை. அவளால் அந்த நேரத்தில் மறுக்கவும் கூட முடியவில்லை. சுந்தரியும் நித்யாவும் அவளை தாங்கிப் பிடித்திருக்க, நிரஞ்சனன் மகனைத் தூக்கிக்கொண்ட போது ராதிகா செய்வது அறியாதுதான் நின்றாள்.

ஆனாலும் கூட மகனின் பின்னே தான் சிரமமாய் பார்வை செல்ல “ஹேய்..!!! ரொம்ப பிடிவாதம் செய்யாம சொல்றதை கேளு… உனக்கு நான் இருக்கிறது தானே பிரச்சனை.. நான் கிளம்பி வெளிய போறேன்.. அத்து இங்கதான் இருப்பான்.. இந்த மழைல அவனை அனுப்ப முடியாது.. அண்ட் நீ….” என்று விரல் நீட்டியவன்,

“புரியும்னு நினைக்கிறேன்…” என்றுமட்டும் சொல்லிவிட்டு, நிரஞ்சனன் அதோசஜனை உள்ளே திரும்ப படுக்க வைத்துவிட்டு வர, அதற்குள் ராதிகாவை இருவரும் அமர வைத்திட, அவளுக்கோ உடம்பெல்லாம் தூக்கி அடிப்பது போலிருந்தது.

அவளோடு பேசவேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனாலும் தவிர்க்க முடியாது போனது. நிரஞ்சனன் கொஞ்சம் கடியவில்லை எனில் கண்டிப்பாய் ராதிகா மீண்டும் முரண்டு பிடிப்பாள்.

மனதோ ‘கடவுளே இங்க வந்தா இப்படியெல்லாம் ஆகணும்…’ என்று எண்ண, இந்த நேரத்தில் அப்பா அம்மா கூட இல்லையே என்றும் தோன்ற, தன் நிலை எண்ணி அவளுக்கு அழுகை கூட வந்துவிடும் போலிருந்தது. ஆனால் கண்களைக் கூட திறக்க முடியவில்லை. சுந்தரியும் நித்யாவும் ராதிகாவின் கைகளை தேய்த்துவிட, நிரஞ்சனன் நின்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவனையும் மீறி அவனின் நெஞ்சத்தில் பல பல எண்ணங்கள்..

அவனின் மனைவி.. அவனின் மகன்.. விவாகரத்து என்று ஆனால் இதெல்லாம் மாறிடுமா என்ன??

மனதில் எழும் உணர்வுகளுக்கு பின் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது?? நிரஞ்சனின் மனது என்ன எண்ணுகிறது என்பது அவனுக்கே அனுமானிக்க முடியவில்லை..

ராதிகாவோ உடல் கொதிப்பில் அனத்தவே ஆரம்பித்திட, “அண்ணா.. அண்ணிக்கு ரொம்ப முடியலை போலண்ணா…” என்று நித்யா சொல்ல, 

சுந்தரியோ “ஆமாடா.. அவங்க அப்பா அம்மா வேற இல்லை போல.. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடலாம்…” என, நிரஞ்சனனுக்கு என்ன சொல்லவென்பது தெரியவில்லை.

“அண்ணா யோசிக்கிற நேரமில்லை..” என்று நித்யா அழுத்தி சொல்ல,

“ம்ம்….” என்று கண்களை இறுக மூடித் திறந்தவன், “அம்மா நீங்க அத்துவோட வீட்ல இருங்க… நித்யா நான் போய் கார் எடுக்கிறேன்…” என்று நகர்ந்து போக, வெளியேவோ மழை அடித்து ஊத்தியது.

‘இதுல எப்படி போறது…’ என்று நிரஞ்சனன் யோசிக்க, சுந்தரியும் அதே கேள்வியை கேட்டார்.

“இதுல எப்படி டா போறது…?”

“ம்ம்ம் தெரியலைம்மா.. இதுல பையனை தூக்கிட்டு வேற கிளம்பிட்டா..” என்று கடிய,

“ஷ்… நீ எதுவும் சொல்லாத நிரஞ்சன்..” என்றவர் “மாத்திரை கொடுத்து தூங்க வைக்கலாம்.. எதுவும் சப்பிடலைப் போல.. தூங்கி எழவும் சாப்பிட கொடுக்கலாம்.. அதுக்குள்ள மழையும் நின்னுடும்..” என்றவர், உள்ளே போய்

“ராதிகா மெதுவா எழுந்துக்க முயற்சி பண்ணேன்..” என்றபடி அவளை சோபாவில் இருந்து தூக்க முயற்சிக்க, இரு பெண்களாலுமே அது முடியவில்லை.

நித்யாவும் சுந்தரியும் ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்துக்கொள்ள, “அத்தை ப்ளீஸ்…” என்றாள் முனங்கலாய்.

“இல்லை ராதிகா உனக்கு ரொம்ப கொதிக்குது.. மழை வேற கொட்டி தீக்குது.. உள்ள வந்து படும்மா.. கொஞ்சம் முயற்சி பண்ணு…” என, அவளால் கை காலை கூட அசைக்க முடியவில்லை.

“எ.. எனக்கு முடியலை…” எனும்போதே, ராதிகாவின் இதழ்கள் எல்லாம் நடுங்கத் தொடங்க, அதற்குமே நிரஞ்சனனுக்கு பொறுக்க முடியவில்லை.

இதனை எல்லாம் கண்கொண்டு காண முடியவில்லையோ என்னவோ..

“ம்மா கொஞ்சம் தள்ளுங்க…” என்றவன், யாரையும் எதுவும் கேட்காது, அத்தனை ஏன் ராதிகாவிடம் கூட எதுவும் சொல்லாது அவளை அப்படியே இடையிலும், கால்களிலும் கையை கொடுத்து தூக்கியவன், நேராய் சுந்தரியின் அறைக்குத் தூக்கிச் சென்றான். 

நிரஞ்சனனின் இச்செயல் சுந்தரியையும், நித்யாவையும் ‘ஆ!!!!’ என்று பார்க்க வைக்க,

அந்த நேரத்தில் கூட ராதிகாவின் உடலில் ஒரு நடுக்கம் மின்னல் வெட்டாய் ஓடி மறைய, அவளின் திடுக்கிடலும், கண்களை விரல் சொடுக்கிடும் நேரத்தில் அவள் பட்டென்று திறந்து மூடியதும் என்று எதுவுமே நிரஞ்சனன் பார்வையில் இருந்து தப்பவில்லை.

சொல்லப்போனால் அவனுக்கே அவன் செயல் ஆச்சர்யம் தான்.

ஆனால் அது அவனையும் மீறி செய்யும் ஒன்று..

அறையின் வாசலில் இருந்து கட்டில் என்னவோ ஐந்து எட்டுக்கள் இருக்கும் தான். ஆனால் அதுவே பெரும் நேரம் கழிந்ததாய் இருந்தது. நிரஞ்சனனின் பார்வை ராதிகாவின் முகத்தினில் இருக்க, அவளோ கண்களை இறுக மூடியிருந்தாள்.. இருதயம் அவளுக்கு மட்டுமில்லை அவனுக்கும் கூட வேகமாய் துடித்தது..

“என்னங்க ஒன் டைம் என்னை தூக்குங்களேன்… ப்ளீஸ் ப்ளீஸ்…” என்று முகத்தை சுறுக்கி செல்லம் கொஞ்சிய ராதிகா.

“ஒன் டைம் தூக்கினா என்னவாம்…??!!!” என்று கழுத்தை நொடித்த ராதிகா.

“உங்கக்கிட்ட ஆசைப்பட்டு கேட்டேன் பாருங்க.. என்னை சொல்லணும்…” என்று வெடுக்கென்று கோபித்துக்கொண்ட ராதிகா.

இதெல்லாம் அவனின் கண் முன்னே வந்து போனது. நிறைய முறை ஆசைப்பட்டு கேட்டிருக்கிறாள் என்னை தூக்கு என்று. ஆனால் ஒருமுறை கூட நிரஞ்சனன் செய்ததேயில்லை. இதென்ன சிறுபிள்ளை போல என்றுதான் இருக்கும் அவனுக்கும். அவள் கேட்காமல் இருந்திருந்தால் ஒருவேளை செய்திருப்பானோ என்னவோ. இல்லை அவனுக்கு இது போல் எல்லாம் தோன்றியிருக்குமோ என்னவோ??

ஆனால் அவள் கேட்ட பொழுதுகளில் எல்லாம் “ம்ம்ச் நீயென்ன குட்டி பாப்பா வா??!!” என்பது மட்டுமே அவனின் பதிலாய் வரும்.

சில நேரம் கிண்டலாய்.. சில நேரம் கோபமாய்.. சில நேரம் எரிச்சலாய்… ஆனால் ஒருமுறை கூட நிரஞ்சனன் அவளைத் தூக்கியதில்லை..

ஆசைகள் எதுவாகினும் என்ன??

அதுவும் கணவன் மனைவி என்ற இருவருக்குள்…

நிராகரிப்புகள் சின்னதோ பெரியதோ.. அது நிகழப்படுமாயின் அதன் ஏமாற்றம் என்பது எப்போதுமே பெரும் வலியைத் தான் கொடுக்கும்..

அன்றைய பெரு வலி ராதிகாவினது.. இன்றைய பெரு வலி நிரஞ்சனன் உடையது.

மெதுவாக ராதிகாவை கட்டிலில் கிடத்தியவன், இரண்டொரு நொடிகள் வரைக்கும் கூட அப்படியே தான் இருந்தான். எப்போதுமே அவளின் முகம் பார்க்காதவன், இன்று என்னவோ அவளின் முகத்தினை தவிர வேறெதுவும் அவனால் காண முடியவில்லை.

பார்வையை அகற்ற முடியவில்லை.. அவனின் கரங்கள் இன்னும் அவள் மீதே இருக்க, எதுவும் செய்ய முடியா நிலையில், ஆனால் அவனின் தொடுகையை உணர்ந்து கண்களை இறுக மூடியிருந்தவளுக்கும் கூட கடந்த கால நினைவுகளோ என்னவோ.

மெல்லிய கோடாய் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் மெதுவாய் வழிந்தது.

உடல் நோவில் வந்ததோ, இல்லை மன நோவில் வந்ததோ, ஆனால் அவளின் கண்ணீர் கண்ட அடுத்த நொடி, நிரஞ்சனன் தன் கைகளை எடுத்து “ம்மா…!!!” என்றான் சத்தமாய்.

சுந்தரிக்கு இன்னமும் கூட அதிர்ச்சி நீங்கவில்லை போல, ஆனால் மகனின் அழைப்பில் வந்தவர் என்னவென பார்க்க, “டேப்லெட் கொடுங்க.. சூடா பால் குடிக்க மாட்டா… வெது வெதுப்பா கொடுங்க…” என்று பார்வையை எங்கோ வைத்து சொன்னவன், வேகமாய் வெளியே சென்றுவிட்டான்.

நிரஞ்சனன் வெளியே சென்றதுமே, நித்யா உள்ளே வர, அவன் சொன்ன ‘சூடா பால் குடிக்க மாட்டா…’ என்ற சொற்கள், ராதிகாவின் உள்ளே இன்னொரு நடுக்கத்தை கொடுத்தது..

‘இதுகூட இவனுக்குத் தெரியுமா??!!!!!!’

ஆம்… அவளுக்கு சூடாக பால் அருந்தவேமாட்டாள். கை பொறுக்கும் சூடு கூட இல்லை.  அதை கூட நினைவில் வைத்து சொல்கிறான் என்றால்??

என்னவோ அவளையும் அறியாது ஒரு கேவல் பிறக்க, சுந்தரியும் நித்யாவும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை.

ஆனால் அவர்கள் இப்போது என்ன சொல்லிட முடியும்??

சுந்தரி மகளுக்கு ஜாடை செய்ய, நித்யாவோ வேகமாய் சென்று காய்ச்சல் மாத்திரையும், பாலை நன்கு ஆற்றியும் கொண்டு வர யாரும் எதுவுமே சொல்லாது “மாத்திரை போட்டுக்கோ ராதிகா..” என்றுமட்டும் சொல்ல,

ராதிகாவும் எதுவும் சொல்லாது வாங்கிப் போட்டவள், அப்படியே கண்கள் மூடிக்கொண்டாள்.

மனது என்னவோ முரண்டியது..

உடலில் இருக்கும் அசதியும், காய்ச்சல் தந்த கொதிப்பும் எதுவும் நினைக்க விடாது, மாத்திரை வேறு உறக்கத்திற்கு அழைத்து செல்ல, ராதிகா எதுவும் எண்ணாமல், எண்ணவும் முடியாமல் உறங்கிவிட்டாள்.

ஆனால் நிரஞ்சனன், அவனால் எதுவும் செய்ய முடியாது அழகாய் அமைதியாய்  சமர்த்தாய் உறங்கும் மகனின் முகம் பார்த்து படுத்திருந்தான். மெதுவாய் அவனின் கன்னம் வருட, எங்கே உறக்கத்தில் எழுந்துவிடுவானோ என்றுகூட எண்ணினான்..

இது எல்லாமே புதிது.. முற்றிலும் புதிது.. அதோஷஜன் இங்கிருக்கும் நாளில் இப்படியெல்லாம் ஆர அமர பொறுமையாய் நிரஞ்சனன் தன் மகனை ரசித்ததில்லை. எங்கே நேரம் போய்விடுமோ, கிளம்பிடுவானோ என்ற பதற்றம் இருந்துகொண்டே இருக்கும்.. இன்றோ நடந்த அனைத்துமே எதிர்பாரா ஒன்று..

மகனுக்கு காய்ச்சல் ஒட்டிக்கொள்ளும் என்று அனுப்ப மறுத்தானா?? இல்லை ராதிகாவின் நிலை கண்டு இருவரையுமே இங்கே நிறுத்தினானா என்பது அவனுக்கே புரியாத ஒன்று..

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயமாய் உணர முடிந்தது.. அது அவனின் மனதின் நிம்மதியை.

இன்று இதோ இந்த நொடி.. நிரஞ்சனன் வெகு நிம்மதியாய் இருந்தான். இத்தனை நாள் இல்லாத ஒரு அமைதி அவனை குடிகொண்டது. சற்று நேரத்திற்கு முன் வரைக்கும் கூட ராதிகா மீது கோபம் இருந்தது தான். ஆனால் அவன் தொட்டதும் அவளின் உடலில் ஓடிய நடுக்கமும், அவளின் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரும் அவனுக்குப் பல கதைகள் சொல்லியது..

பார்வை எல்லாம் மகனின் மீது இருக்க, சிந்தனை எல்லாம் ராதிகாவின் மேலே இருக்க, நிரஞ்சனன் எப்போது உறங்கினான் என்பது கூட அவனுக்கே தெரியவில்லை.

ஆனால் நித்யாவோ “ம்மா என்னம்மா இதெல்லாம்??!!!” என்று நடந்தவைகளை நம்ப முடியாது சுந்தரியிடம் கேட்க,

“எனக்கும் ஒன்னும் புரியலை டி.. ஆனா என்னவோ சந்தோசமா இருக்கு.. அவனை இப்படி பொண்டாட்டி பிள்ளைன்னு பார்க்க..” என,

“ம்மா..!!! ரெண்டு பெருக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சு…” என்றாள் பட்டென்று..

“ஆனா என்ன??!! திரும்ப சேரக் கூடாதுன்னு எதும் சட்டமிருக்கா என்ன??” என்றார் அவளை விட வேகமாய் சுந்தரி.

‘இல்லைதான்….’ என்று நித்யா பார்க்க,

“நீவேனா பாரு.. கண்டிப்பா ஒரு நல்லது நடக்கும்.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…” என, சரியாய் அப்போது ஹால் டீபாய் மீதிருந்த ராதிகாவின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது.

எடுப்பதா வேண்டாமா என்று யோசிக்கும்போதே திரும்ப அழைப்பு வர, நித்யா பார்த்தவள் “ம்மா, அண்ணியோட அம்மா…” என, சுந்தரிக்கு அவரோடு பேசுவதா என்ற யோசனை.

ஆனாலும் பேசிதானே ஆகவேண்டும்..

“கொடு…” என்றவர், ராணியிடம் நடந்தவைகளை சொல்ல, ராணிக்கோ பலவேறு யோசனைகளை.

இதையெல்லாம் விதி என்பதா??

இல்லை வேறொரு வினை நடக்க ஆரம்பம் என்பதா??

எது எப்படியாகினும் சரி, ராதிகாவோ, நிரஞ்சனனோ, இல்லை அத்துவோ யாருக்கும் எவ்வித தீங்கும் நிகழ்ந்திட கூடாது என்றே எண்ணியது அவருள்ளம்.

“நா… நாங்க நாளைக்கு கிளம்பிடுவோம்.. அதுவரைக்கும்…” என்று ராணி இழுக்க,

“நீங்க ஒன்னும் வருந்திக்க வேணாம்.. கண்டிப்பா ராதிகாவை நல்லபடியா பார்த்துப்போம்…” என்று சுந்தரி சொல்ல,

“இல்ல.. அது.. அத்து…” என்றார் முழுவதும் சொல்லி முடிக்காது..

“எது எப்படி என்ன நடந்திருந்தாலும் அத்து எங்க வீட்டு புள்ள தான்..” என்ற சுந்தரி பேச்சை முடித்து வைத்துவிட, ராணி இவை அனைத்தையும் கணவரிடம் சொல்ல,

“என்ன ராணி இதெல்லாம்??!!!” என்றார் அவரும் கொஞ்சம் அதிர்ந்து.

“எனக்கும் ஒன்னும் புரியலைங்க.. ராதிகா எப்படி அங்க தங்க சம்மதிச்சான்னு இருக்கு.. ரொம்ப முடியலைப் போல.. அதுவேற சங்கடமா இருக்கு.. ம்ம்ச் நம்ம இப்படி தனியா விட்டு வந்திருக்கக் கூடாது…”

“அப்படியில்ல ராணி.. எல்லா நேரத்துலயும் நம்ம ராதிகா கூடவே இருக்க முடியாது.. சிலது அவளா சந்திக்கிற சூழ்நிலை இப்பன்னு இல்லை எப்பவுமே வரும். குடும்பம்னா எல்லாமே இருக்கும்னு அவளுக்கும் புரியணும்.. தப்பு அவ பேர்லயோ இல்லை மாப்பிள்ளை பேர்லயோ யார்மேல இருந்தா என்ன… இதெல்லாம் ஒரு வாய்ப்பா கூட இருக்கலாம்..” என்று மணிகண்டனும் சொல்ல,

“வாய்ப்பா??!!!!” என்றார் ராணி புரியாது.

“ஆமா வாய்ப்பு தான்…” என்றார் ஆணித்தரமாய் மணிகண்டன்..

“என்னங்க சொல்றீங்க??!!”

“இத்தனை நாள் இதெல்லாம் நடக்கலை.. ஆனா இப்போ நடக்குது.. இன்னும் எத்தனை வருசத்துக்கு அவ தனியா இருப்பா சொல்லு??!! ஏன் பிரிஞ்சவங்க திரும்ப சேரக்கூடாதா??” என,

“எதுன்னாலும் என் பொண்ணு நல்லபடியா வாழ்ந்தா போதுங்க…” என்றார் ராணியும் உணர்ந்து..

பெரியவர்கள் அனைவருமே இவர்கள் திரும்ப இணைந்துவிட மாட்டார்களா என்று நினைக்கத் துவங்கிட, ஒரு விஷயம் நடக்கவேண்டுமெனில் அதற்கான காரண காரியங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தேறும் தானே.

நிரஞ்சனன் வெகு நேரம் உறங்கியவன், சஞ்சீவின் போன் காலில் தான் கண் விழித்தான். எங்கே தன் மகன் விழித்துவிடப் போகிறான் என்று வேகமாய் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளிவர,

“ஹலோ சார்.. ஸ்கூல்ல இருந்து அந்த மிஸ் ஆனா பில் கொண்டு வந்து கொடுத்துட்டாங்க..” என்றான் சஞ்சீவ்.

“ஓ..!! குட்… நாளைக்கு அந்த வொர்க் முடிச்சிட்டு நீயே போய் ஸ்கூல்ல பைல்ஸ் கொடுத்திடு சஞ்சீவ்…” என,

“அ… அது சார்.. எப்பவும் நீங்க…” என்று இழுத்தான் சஞ்சீவ்..

“நாளைக்கு நீ போன்னு சொன்னேன்..” என்றவன் வைத்துவிட, இவனின் பேச்சு சத்தம் கேட்டு சுந்தரியும் நித்யாவும் வந்தனர்.

‘என்ன..??’ என்பதுபோல இருவரையும் பார்க்க,

“ராதிகா அப்பா அம்மா நாளைக்குத் தான் கிளம்புறாங்கலாம் நிரஞ்சன்..” என்று சொல்லி மகனின் முகம் பார்த்தார் சுந்தரி.

“ஓ..!!!” என்றவன் “நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா..?” என்று பேச்சினை மாற்ற,

“நீ எழுந்ததும் சாப்பிடலாம்னு இருந்தோம் ண்ணா.. எடுத்து வைக்கவா???” என்று கேட்டபடி நித்யா டைனிங் டேபிள் பக்கம் போக,

“ம்மா… நீ நைட் அத்து கூட தூங்கிக்கோ.. நைட் எனக்கு வேலை இருக்கு.. ஹால்ல படுத்துக்கிறேன்..” என்று நிரஞ்சனன் சொல்லவும், சுந்தரி அமைதியாய் மகனின் முகத்தினை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தார்.

“என்னம்மா??!!!!”

“ஒன்னுமில்லடா… அத்து எழவும் ஊட்டனும்.. ராதிகா வெறும் மாத்திரை மட்டும் போட்டு படுத்திருக்கா..” என்றபடி அவரும் நகர்ந்து போக, நிரஞ்சனன் அப்படியே நின்றான்.