Advertisement

அத்தியாயம் – 6

அன்றைய இரவு நிரஞ்சனனின் உறங்கா இரவாகிப்போக, மறுநாள் அவனின் அலுவலகம் வந்தவனோ  “சஞ்சீவ்… இன்னிக்கு முடிக்க வேண்டிய பேலன்ஸ் சீட் எல்லாம் டேலி பண்ணியாச்சா??” என்று கேட்டபடி வந்தவனை  ஒருவித பயம் கலந்த பார்வையோடு தான் பார்த்துவைத்தான் சஞ்சீவ்.

நிரஞ்சனன் இந்த ஆடிட்டிங் கம்பனி ஆரம்பித்த நாள் முதலாய் அங்கே வேலைக்கு என்று இருப்பவன் சஞ்சீவ். அங்கிருக்கும் மற்றவர்களை விட  சஞ்சீவ் கொஞ்சம் ஒருபடி மேல் தான் என்றாலும், சமயத்தில் நிரஞ்சனனிடம் சிக்கி முழிப்பதும் அவனே.

நிரஞ்சனன் பல நேரம் எந்த கேள்வி கேட்பது என்றாலும் சஞ்சீவ்தான் பலியாடு. அதே போல் இன்றும் சிக்கிக்கொள்ள, “என்ன சஞ்சீவ்??” என்று அமர்த்தலாய் கேட்டவனைப் பார்த்து,

“அது சார்…” என்று இழுத்தான்.

“என்னாச்சு??”

“லாஸ்ட் நவம்பர்  மன்த் அக்கவுன்ட் டீடைல்ஸ் டேலி ஆகலை..”

“சோ…”

“அது… சார்… மத்த எல்லா மன்த்தும் ஓகே ஆகிடுச்சு.. பட்…”

“சோ…”

“சார்…..”

“என்ன சஞ்சீவ்..? நாளைக்கு நம்ம பைல் பண்ணி அனுப்பனும்.. இப்போ வந்திட்டு டேலி ஆகலை அது ஆகலைன்னு…” என்று நிரஞ்சனன் வழக்கத்திற்கு மாறாய் கொஞ்சம் கடுகடுவென பேச, சஞ்சீவ் வாயே திறக்கவில்லை.

அவனை ஏறிட்டு பார்த்த நிரஞ்சனனோ, “கம்மான்… சே சம்திங்…” என,

“இல்ல சார்.. நாங்களும்..” என்று இழுக்க,

“ட்ரை பண்ணிட்டோம்.. பட் முடியலை.. அதானே…” என்று நெற்றியை தடவியவன்,

“ஓகே பைல்ஸ் எடுத்துட்டு வாங்க..” என்றான்.

“எ.. எல்லாமே சிஸ்டம்ல இருக்கு..” என்று சஞ்சீவ் சொல்ல,

“சிலது மேனுவலா பாக்கணும்.. கம்மான்.. லேட் பண்ணவேணாம்..” என்று அனைத்து பைல்களையும் கொண்டு வரச் சொல்லி பார்த்தான்.

சஞ்சீவ் சொன்னது போல நவம்பர் மாத விபரங்கள் மட்டும் சரியாய் பொருந்தி வரவில்லை. சென்னையின் புகழ் பெற்ற ஒரு பள்ளிக்கூடத்தின் கணக்கு வழக்கு எல்லாம் சரிபார்த்து கொடுப்பது என்பது இவர்களின் பொறுப்பு.. அதற்கென பெரும் தொகையும் வரும்..

வெவ்வேறு கம்பனிகளுக்கு மட்டுமே ஆடிட் செய்துகொடுத்து கொண்டு இருந்தவர்களுக்கு, முதன்முதலில் இத்தனை பெரிய பள்ளிக்கூடம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியே. கடந்த நான்காண்டுகளாய் எப்போதுமே சரியாய் பொருந்தி போகும் விபரங்கள். தலையை போட்டு நிறைய உருட்டவேண்டிய அவசியம் இல்லாது, அவர்கள் கொடுக்கும் பில்கள் எல்லாம் வரவு, செலவு, சம்பளப் பட்டுவாடா கணக்கோடு எளிதாய் முடிந்துவிடும்.

ஆனால் இன்றோ.

‘என்னடா…??’ என்று நிரஞ்சனன் திரும்ப திரும்ப, கணக்கிட்டுப் பார்க்க, நவம்பர் மாத பேலன்ஸ் சீட் சரியாகவே வரவில்லை..

“இது மட்டும் டேலி ஆகிட்டா.. மொத்தமா பைல் பண்ணிடலாம் சார். பட் சம்திங் எதோ ஒரு டீடெய்ல்ஸ் மிஸ் ஆகுது..” என்று சஞ்சீவும் சொல்ல,

“ம்ம் இதை இப்போ சொல்லி என்ன செய்ய??” என்று கடிந்தவன், “ஓகே.. நான் ஸ்கூல்கே போறேன்.. அங்க செக் பண்ணிக்கலாம்….” என்றவன், பள்ளிக்கூடத்திற்கு அழைத்து ஒருமுறை பேசி, அடுத்த பத்து நிமிடத்தில் கிளம்பியும்விட்டான்.

அப்பள்ளிக்கூடம் செல்லும்போதெல்லாம் நிரஞ்சனனுக்கு மனதில் அப்படியொரு குஷி கிளம்பிடும். காரணம் அத்துவும் அங்கே தான் படிக்கிறான். ராதிகா வேறு பள்ளிக்கூடம் சேர்க்கவேண்டும் என்று சொன்னதற்கு இவன்தான் இங்கே தான் சேர்க்கவேண்டும் என்று சொல்லியிருந்தான் சுந்தரியிடம்.

“ராதிகா.. இது அவனுக்கு தெரிஞ்ச ஸ்கூலாம்.. நல்லா பாத்துப்பாங்கன்னு சொல்றான்..” என்று அவரும் ராதிகாவிடம் சொல்ல,

ராணியோ “இதுலயாவது சொல்றதை கேளு ராதிகா..” என,

“ம்ம் சரி..” என்றுவிட்டாள்.

நிரஞ்சனன் அப்படியொன்றும் அடிக்கடி எல்லாம் மகனை சென்று காண மாட்டான் தான். ஆனாலும் அங்கே போக நேர்ந்தால் கண்டிப்பாய் மகனைக் காணாது வரவும் மாட்டான். இன்றும் மனதில் அப்படித்தான் நினைத்துக்கொண்டான் “கிளம்புறப்போ அத்துவ பாக்கணும்..” என்று..

நிரஞ்சனன் சென்று, தனக்கு வேண்டிய தகவல்களை எல்லாம் பள்ளிக்கூட அலுவலகத்தில் வாங்கி, அங்கேயே உட்கார்ந்து சரி பார்த்து, அங்கிருந்த அக்கவுண்டன்ட், மேனேஜர், அட்மின் என்று எல்லாரிடமும் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்க, ஒரே ஒரு பில் மட்டும் இவர்கள் கொடுக்காது போயிருந்தது தெரிய வந்தது..

அட்மினோ மேனேஜரை முறைக்க, மேனேஜரோ அக்கவுண்டன்ட் முகம் பார்க்க,

“சார்.. இப்படி எல்லாருமே பார்த்துட்டு இருந்தா எப்படி.. எங்களுக்கும் வேலை முடியனும் தானே..” என்றான் நிரஞ்சனன்.

“இல்லை நிரஞ்சன்.. ஒரு பில் மட்டும்… ஸ்கூல்க்கு ஸ்போர்ட்ஸ் மெட்டீரியல்ஸ் வாங்கினது.. எங்க போச்சு தெரியலை..” என்றார் அக்கவுண்டன்ட்.

“எங்க போச்சு தெரியலையா??” என்று அட்மின்ட் கேட்க,

“இல்ல சார் வேற எதுவும் பைல்ஸ்ல இருக்கும் எடுத்துடலாம்..” என்ற அக்கவுண்டன்ட் வேகமாய் அவரின் பணியைப் பார்க்கப் போனார்.

நிரஞ்சனனோ “சார்.. எப்பவுமே எல்லாமே சரியா இருக்கும்.. திஸ் டைம் தான் இப்படி.. இன்னிக்குக்குள்ள அந்த பில் எடுத்துட்டா நைட்டே எல்லாம் பைனல் பண்ணி நாளைக்கு பைல் கொடுத்துடுவோம்..” என,

“எஸ் எஸ்.. உங்களைப் பத்தி தெரியாதா நிரஞ்சன்..” என்றார் அட்மினும்..

மேலும் சிறிது நேரம் பேசியவன், “அந்த பில் ஆபிஸ்க்கு  கொடுத்துவிடுங்க..” என்றவன், நேரம் பார்க்க, பள்ளிக்கூடம் முடிந்து வெகு நேரம் ஆனது என்று அப்போதுதான் புரிந்தது.

‘அத்து வீட்டுக்கு போயிருப்பானே…’ என்று அவனின் மனம் சுனங்க, “ச்சே வேலை வேலைன்னு.. இதை எப்படி மிஸ் பண்ணேன்..” என்று தன்னையே நொந்தவன், கார் எடுக்க வர, அத்துவோ அங்கே வாட்ச்மென் அருகில் அமர்ந்திருப்பது தெரிந்தது..

‘வீட்டுக்கு போகலையா இவன்….’ என்று உள்ளம் துள்ள, “அத்து..!!!” என்றான் சத்தமாய். அவனையும் மீறி குரலில் ஒரு உற்சாகம்.

நிரஞ்சனன் குரல் கேட்டதுமே அதோஷஜன் திரும்பியவன் “ப்பா..!!!” என்று வேகமாய் ஓடி வர,

“டேய்.. அத்து..” என்று தூக்கிக்கொண்டான்.

“ப்பா…” என்று அப்பாவின் முகம் பார்த்த சிறுவனுக்கு அதற்குமேல் சொல்லத் தெரியவில்லை.

“என்னடா அத்து.. வீட்டுக்கு போகலையா??” என்று சுற்றிலும் பார்வையை செலுத்தினான் நிரஞ்சனன்.

“ம்ம்ஹும்…” என்று அத்து தலையை மறுப்பாய் ஆட்ட, அதற்கும் வாட்ச் மென் இவர்களிடம் வந்துவிட்டார்.

“சார் மேடம் போன் பண்ணாங்க.. அவங்களே வந்து கூட்டிட்டு போறேன்னு அதான் தம்பியை உக்கார வச்சிருக்கேன்..” என்றார்.

“ஓ.. ஓகே…” என்றவன் அடுத்து என்னவென்று யோசிக்கும் முன்னே,

“அதான் நீங்களே வந்துட்டீங்களே சார்.. கூட்டு போங்க..” என்று அவர் மேலும் சொல்ல, இவரிடம் தங்கள் வாழ்வு முறைகளை விளக்க முடியுமா என்ன??

“இ.. இல்ல.. அத்துவோட அம்மா வந்துட்டு இருக்கேன்னு கால் பண்ணாங்க.. அதான்.. நா.. நானும் வெய்ட் பண்றேன்..” என,

“சரிங்க சார்..” என்றுவிட்டு நகர்ந்துவிட்டார் வாட்ச்மென்.

அவருக்கு பொறுப்பு முடிந்த நிம்மதி. மகனோ அப்பாவின் தோளை இறுகப் பற்றியிருக்க, நிச்சயம் அவனுக்கு இந்நேரம் பசி எடுக்கும் என்பது நிரஞ்சனனுக்கு தெரியும்.

“பசிக்குதா அத்து..” என,

“ம்ம்ம் ப்பா..” என்றான் ஆம் என்பதுபோல்..

“அப்பாவும் நீயும்… ஜாலியா சாப்பிடலாமா..” என்று கேட்டவன், வாட்ச் மென்னிடம் சொல்லிவிட்டே மகனை அழைத்துச் சென்றான். எங்கே ராதிகா வந்து தேடினால் என்ன செய்வது என்று.

அங்கே பள்ளிக்கூடம் அருகேயே ஒரு பேக்கரி இருக்க, அங்கே போனவனோ மகன் கை நீட்டியதை வாங்க, அதோஷஜனோ அது இதென்று தேவையில்லாதது எல்லாம் கேட்காது அவனுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் கேட்டான்..

“ப்பா.. பட்டர் கேக்..”  என்று விரல் நீட்ட,

‘இவனுக்கும் இதுதான் பிடிக்குமா???!!’ என்று அவனின் உள்ளம் வேகமாய் எகிறிக் குதித்தது.. காரணம் ராதிகாவின் மிக மிக பிடித்தமான கேக் வகை ‘பட்டர்  கேக்…’

பிள்ளைத்தாய்ச்சியாய் இருக்கும் போது அவள் விரும்பி உண்டதும் இதைதான்..

“என்னவோங்க இதான் உங்க புள்ளைக்கு பிடிக்குது போல.. மத்தது எது சாப்பிட்டாலும் வாமிட் வருது..” என்று சொல்லி சிரித்த ராதிகா இப்போதும் அவன் கண் முன்னே.

சந்தோசமாய் தான் இருந்தாள். அவன் மீது அத்தனை ப்ரியம் வைத்திருந்தாள்.. பின் ஏன் இப்படி??

உன்னிடமிருந்து பிரிவு, இல்லையோ இவ்வுலகை விட்டே போகிறேன் எனும் அளவிற்கு எது அவளை மாற்றியது என்ற ஆராய்ச்சி வழக்கம் போல் அவனுள் முளைக்க,

“ப்பா..” என்று அழைத்த அத்துவோ, “இந்தா…” என்று ஒரு குட்டி கேக் வில்லையை பிய்த்துக் கொடுக்க, நிரஞ்சனனுக்கு அவன் மனதில் எழும் உணர்வுகளை அடக்கத் தெரியவில்லை.

அதோஷஜனை இறுக அணைத்தவன், அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட, “ம்ம்ம் ப்பா…” என்றான் வழக்கமான செயலை.

என்னவோ சமீப நாட்களாய் மகன் தன்னோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பார்வை அத்துவின் முகத்தினிலேயே நிலைத்திருக்க,

‘எல்லாத்துலயும் அப்படியே அவன் அம்மா போல..’ என்று பார்த்தவன், “என்னாச்சு இன்னும் வராம இருக்கா??” என்று நேரம் பார்த்தான்.

மேலும் அரைமணி நேரம்.. இன்னும் ராதிகா வருவதாய் இல்லை.

தான் மட்டும் வரவில்லை என்றால் அத்து இந்நேரம் வாட்ச்மென்னிடம் பசி என்று கூட சொல்ல தெரியாது அமர்ந்திருப்பான். பசித்து பசித்து உறங்கியும் போயிருப்பான். பிள்ளையை கவனிக்காது, சரியான நேரத்தில் வந்து அழைத்துப் போகாது என்னதான் செய்கிறார்கள் அனைவரும்..

மழை வேறு வரும்போல் இருந்தது.. நேரம் கடக்க கடக்க, நிரஞ்சனனுக்கு கோபம் வேறு அதிகரிக்க, அத்துவோ “ப்பா ம்மா எங்க??” என்று கேள்வி கேட்கத் தொடங்கியிருந்தான்.

இன்னும் கொஞ்ச நேரம் போனால் பிள்ளை பொறுக்கமாட்டான் என்பது நிரஞ்சனனுக்கு புரிய, ‘இதான் இவ பிள்ளை வளக்குற லச்சணமா..’ என்று கடிந்துகொண்டு சுந்தரிக்கு அழைப்பு விடுத்தான்.

“ம்மா.. அவளுக்கு போன் போட்டு எங்க இருக்கான்னு கேளு..” என்று மொட்டையாய் நிரஞ்சனன் எடுத்ததுமே சொல்ல, சுந்தரிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“என்ன நிரஞ்சன் சொல்ற?? யாரை கேட்கிற..” என்று அவர் கேட்க,

“ம்ம்ச் ம்மா..” என்றவன் “அ.. அதான்.. ராதிகா..” என்றான்.

தன்னைப்போல் அவளின் பெயரை உச்சரிக்கையில் குரல் கம்மியது. கோபமாய் இருந்தாலும் கூட அவளின் பெயர் சொல்லுகையில் அத்தனை கோபமாய் வெளிப்படுத்த முடியவில்லை.

“ராதிகாவா??!!!” என்று சுந்தரி ஆச்சர்யமாய் கேட்க,

“ம்மா ஸ்கூல் ஆடிட்டிங் விசயமா வந்தேன்.. அத்து இன்னும் வீட்டுக்கு போகலை. வாட்ச்மென் வந்து அவங்க அம்மா கூட்டிட்டு போறேன் சொன்னாங்க சொன்னார்.. இன்னும் வரக்காணோம்.. மழை வேற அடிக்குது.. நீ போன் பண்ணி கேளு.. அப்படி இல்லைன்னா  நான் அத்துவ கூட்டிட்டு வந்திடுறேன்..”  என,

“இரு இரு.. நான் கால் பண்ணிட்டு சொல்றேன்..” என்ற சுந்தரி வேகமாய் ராதிகாவிற்கு அழைப்பு விடுக்க, அவளோ எடுக்கவேயில்லை. இரண்டொரு முறை அழைத்துப் பார்க்க, எவ்வித பதிலும் இல்லை.. 

‘என்னாச்சோ…’ என்று எண்ணியவர், ராதிகாவின் அப்பா அம்மாவிற்கு அழைத்துப் பார்க்க, அவர்களும் எடுக்கவில்லை.

மனது என்னானதோ என்று பதறியது. அதே பதற்றத்தில் நிரஞ்சனனுக்கு அழைத்தவர் “யாருமே போன் எடுக்கலை நிரஞ்சன்.. என்னாச்சோ தெரியலையே..” என,

“என்னவோ ஆகட்டும்.. நான் என் மகனை கூட்டிட்டு வீட்டுக்கு வர்றேன்..” என்று வைத்துவிட்டான்.    

சஞ்சீவ் வேறு போன் மேல் போன் போட, “ஸ்கூல்ல ஒரு பில் கொடுக்கலை.. அவங்க கொடுக்கவும் நம்ம முடிச்சா போதும்..” என்று எரிந்து விழ, மழை வேறு நன்கு வலுக்கத் தொடங்கியது.

நிரஞ்சனன் மனதோ, ‘நான் மட்டும் வரலைன்னா.. என் பிள்ளை தனியா உக்கார்ந்திருக்கணும்..’ என்பதிலேயே நின்றுவிட, வேறெதையும் யோசிக்கவில்லை,

“அத்து நம்ம வீட்டுக்கு போலாம்..” என்று மகனை தூக்கியவன், வாட்ச் மென்னிடம் “இவங்கம்மா வந்தா நாங்க வீட்டுக்கு போயிட்டோம் சொல்லிடுங்க..” என்று கிளம்பிவிட்டான்.

“என்ன பொறுப்பா இருக்காங்க எல்லாம். எப்பவும் அவளோட அப்பாதானே வருவார்.. இன்னிக்கு என்ன இவ.. வரட்டும்.. எப்படியும் பையனை கூப்பிட வருவா தானே.. வரட்டும்.. அப்போ இருக்கு…” என்று பல்லைக் கடித்தபடி தான் காரினை செலுத்தினான்.

அத்துவோ, அப்பா எதுவும் சொல்வானா என்று அவனின் முகம் பார்த்து பார்த்து, ஒன்றும் இல்லை எனவும் உறங்கிப்போனான். சரியாய் இருபது நிமிடத்தில் வீடு வந்திட, பேரன் வந்தது சந்தோசமே என்றாலும் கூட, அவன் வந்த சூழ்நிலை சுந்தரிக்கு சந்தோசம் கொடுக்கவில்லை..

“டேய் குட்டி கண்ணா…” என்று நித்யா வந்து தூக்கிக்கொள்ள, “சீக்கிரம் உள்ள கூட்டிட்டு போ நித்யா..” என்றான் நிரஞ்சனன்..

“குடை தான் பிடிச்சிருக்கேனே…” என்றபடி நித்யா அத்துவை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றிட, சுந்தரியோ “இப்போ வரைக்கும் கால் எடுக்கவே இல்லடா..” என்றார் வருத்தமாய்.

“எடுக்கலைன்னா விடுங்க..” என்றவன், மகனுக்கு தானே  முகம் கழுவி, உடை மாற்றி விட “ப்பா ஜோ ஜோ..” என்றான் சிறுவனும்.

“சாப்பிட்டு அப்புறம் ஜோ ஜோ..” என்றவன்,

“ம்மா…” என, அதற்குள் சுந்தரி அவனுக்கு பால் காய்ச்சி எடுத்து வந்திட, பெரியவர்கள் மூவருக்குமே என்னவோ பேரரசன் தங்கள் வீட்டிற்கு வந்திருப்பது போலவும், அவனை கவனிக்க அரக்கப் பறக்க அலைவது போலவும் இருந்தது அத்துவை பால் அருந்த வைப்பதற்குள்.

“அண்ணா ஆனாலும் இவன் ரொம்ப வாலு…” என்று நித்யா சொல்ல,

“வாலு காணோம்..” என்றான் அத்துவோ தன் பின்னே திரும்பிப் பார்த்து சொல்ல, மற்றவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

அனைவரும் சிரிக்க, நிரஞ்சனனோ, மகனின் பேச்சிலும் செயலிலும் மயங்கித்தான் போனான். அதோஷஜனை தூக்கி வைத்துக்கொண்டவன், “அத்து கண்ணா…” என்று கொஞ்ச,

அதே நேரம், ராதிகாவும் “அத்து…” என்றபடி உள்ளே வந்தாள் வேகமாய்.

அவள் உள்ளே நுழைந்த விதமே, அவளின் பதற்றத்தை காட்டிக்கொடுக்க, போதாத குறைக்கு மலையில் நனைந்திருக்கிறாள் என்பதும் விளங்கியது.

ராதிகாவின் குரல் கேட்டதுமே, “அம்மா..!!” என்று சந்தோசமாய் கூச்சலிட, நிரஞ்சனனோ மகனை தன் பிடியில் இருந்து விடவேயில்லை.

“ப்பா.. அம்மா..” என்று மகன், அப்பாவிடம் கை காட்டி சொல்ல, நிரஞ்சனன் பார்வையும் ராதிகாவிடம் தான் இருந்தது..

“வாம்மா..”  சுந்தரியும், “வாங்கண்ணி..” என்று நித்யாவும் வரவேற்க, அவளின் பார்வையோ மகனிடம் மட்டுமே இருந்தது. அவனைப் பிடித்திருந்த நிரஞ்சனனின் வலிமையான கரங்கள் மீதும்.

‘என் மகனை நான் விட மாட்டேன்..’ என்பது போல் நிரஞ்சனன் அதோசஜனை பிடித்திருக்க, சிறுவனோ “ம்மா..” என்றான் அப்பாவிடம் இருந்து திமிறியபடி.

“உட்கார் ராதிகா..” என்று சுந்தரி, அப்போதுதான் கவனித்தார், ராதிகாவின் முகமும் சரியில்லை, மழையில் வேறு நனைந்திருக்கிறாள் என்று..

“எ.. என்னாச்சு ராதிகா…” என்று சுந்தரி விசாரிக்க,

“ம்மா நான் அத்துவை தூங்க வைக்கிறேன்.. நீங்க பார்த்துக்கோங்க..” என்றுவிட்டு நிரஞ்சனன் மகனைத் தூக்கிக்கொண்டு எழ,

“இ.. இல்ல.. நான் அத்துவ கூட்டிட்டு கிளம்பனும்..” என்றாள் ராதிகா சுந்தரியிடம்.

நித்யாவோ “அண்ணி, பர்ஸ்ட் தலை துவட்டுங்க.. இவ்வளோ ஈரமா இருக்கு..” என்று துண்டை எடுத்துக்கொடுக்க,

அத்துவோ “ப்பா.. அம்மாட்ட…” என்றான் அப்பாவின் கன்னம் தொட்டு.

“அம்மாக்கு பீவர்டா.. நீ அம்மாட்ட போனா உனக்கும் ஊசி போடணும்..” என்று நிரஞ்சன் சொல்ல,  ‘ஊசி..’ என்ற ஒற்றை சொல் நன்கு வேலை செய்தது.

ஆனால் ராதிகாவோ ‘எனக்கு பீவர்னு இவருக்கு எப்படி தெரியும் ???’ என்று அதிர, “காய்ச்சலா??!!” என்றார் சுந்தரியும்..

“ஆ.. ஆமாத்தை.. நேத்திருந்து..” என்றவள் “நா.. நான் அத்துவை கூட்டிட்டு கிளம்புறேனே..” என்றாள் பாவமாய்..

முகமெல்லாம் சிவந்து வேறு இருந்தது. மழையில் நனைந்து வந்தது வேறு அவளுக்கு ஒரு நடுக்கம் கொடுக்க, சுந்தரி நித்யாவிடம் கண் காட்டியவர், “போகலாம் போகலாம்.. முதல்ல சூடா டீ குடி.. அப்புறம் ஒரு மாத்திரை போடு.. நித்யா ட்ரெஸ் கொடுக்குறேன் மாத்திட்டு அப்புறம் போலாம்..” என்றவர், அவளை அமர வைத்துவிட,

ராதிகாவின் பார்வையோ நிரஞ்சனன் அறைப்பக்கமே சென்று சென்று வந்தது. உள்ளே அப்பாவும் மகனும் பேசி சிரிக்கும் குரல் கேட்டது.. அத்து எதுவோ “அப்பா அப்பா..” என்று சொல்லி பேசிக்கொண்டு இருந்தான்.

ராதிகாவிற்கோ இங்கிருந்து மகனைக் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டால் போதும் என்றிருக்க, “இல்லத்தை.. இனி போனா ஆட்டோ கிடைக்கிறது கஷ்டம்.. மழை இப்போதான் கொஞ்சம் நின்னிருக்கு..” என்றாள் கிளம்பும் எண்ணத்தில்.

நித்யாவோ அவளுக்கு மாற்றுடை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தபடி “ஏன் அண்ணி கார் என்னாச்சு…??” என,

“வர்ற வழியில கார் ப்ரேக் டவுன்.. திடீர்னு ஒரு மீட்டிங் வேற. அதான் லேட்..” என்றவள் “தேங்க்ஸ் நித்யா.. ட்ரெஸ் ஒன்னும் பிராப்ளம் இல்லை..” என்றபடி “அத்து…” என்றாள் சத்தமாய்.

சுந்தரியும், நித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “அத்தை ப்ளீஸ்.. இப்போ கிளம்பினாத்தான் சரியா இருக்கும்.. அப்பா அம்மாவும் இல்லை ஊருக்கு போயிருக்காங்க.. இனி போய் அத்துவுக்கு ஹோம் வொர்க் சொல்லிக் கொடுக்கணும்..” என,

சுந்தரியோ “சாப்பிட்டு போலாமே ராதிகா..” என்றார்.

“அ… இல்லத்தை..” என்றவள் மறுக்க, வேகமாய் அறையினுள் இருந்து வெளி வந்த நிரஞ்சனனோ

“ம்மா.. யார்வேணா கிளம்பி போகட்டும்.. ஆனா நான் என் மகனை இந்த மழையில அனுப்ப மாட்டேன்..” என்றான் தீர்க்கமாய்.    

Advertisement