Advertisement

அத்தியாயம் – 4

சுந்தரி மகனிடம் என்ன சொன்னாரோ தெரியாது ஆனால் அதோஷஜன் அன்றைய தின இரவே ராதிகாவின் வீட்டில் இருக்க, மகனை கண்ட பிறகுதான் அவளுக்கு பெரும் நிம்மதி. நித்யா தான் அழைத்து வந்து விட்டுப் போனாள்.. ராதிகா அப்போது தான் வீட்டிற்கு வந்திருக்க,

“ம்மா…” என்றபடி வந்த மகனை கண்டவள், அப்படியே போய் கட்டிக்கொண்டாள்..

காலையில் இருந்து இருந்த பதற்றம் இப்போது  மகனின் ஸ்பரிசத்தில் அப்படியே காணாது கரைந்து போக, “அத்தும்மா…” என்று இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்.

“உக்காரும்மா…” என்று நித்யாவை ராணி  சொல்லும் சத்தம் கேட்டுத்தான், தன் பார்வையை நிமிர்த்தியவள்,

“வா.. வா நித்யா.. உக்காரு.. சாரி கவனிக்கலை..” என்று திணறினாள்  ராதிகா..

“பரவால்லண்ணி..” என்று நித்யா சொல்லும் போதே “டிபன் எடுத்து வைக்கறேன் எல்லாம் வந்து சாப்பிடுங்க..” என்று ராணி சொல்ல,

“அதெல்லாம் வேணாம் அத்தை.. நாங்க சாப்பிட்டு தான் வந்தோம்… அத்துவும் சமத்தா சாப்பிட்டான்..” என்று நித்யா சொல்லவும் ராணி நம்ப முடியாத பார்வை தான் பார்த்தார்.

“நிஜமா அத்தை.. தட்ல வச்சதை மிச்சம் வைக்காம சாப்பிட்டான்..”

“பார்த்தியா இவனை.. இங்க என்னை எவ்வளோ ஓட விடுவான்.. அங்க போனதும் வால் எங்க போச்சு..” என்று செல்லமாய் கடிந்தபடி பேரனின் கன்னம் தொட்டு முத்தமிட, “வால் காணோம்..” என்றான் அத்துவும் சிரிப்பாய்..

“பார்த்தியா இவனை..” என்று ராணி திரும்ப மகளிடம் முறையிட,

“அவன் காலைலயே சமத்தா சாப்பிட்டான் ம்மா.. எனக்கே கொஞ்சம் ஆச்சர்யமா தான் இருந்தது..” என்றவளும் அத்துவின் கன்னத்தில் இதழ் பதிக்க,

“சரி அண்ணி நான் கிளம்புறேன்..” என்று நித்யா கிளம்பினாள்.

“நீயா போயிப்பியா?? மாமாவ வந்து விட சொல்லவா??” என்று ராணி  கேட்க,

“கார் எடுத்துட்டு தான் வந்தேன் அத்தை. ஒன்னும் பிரச்னையில்லை..” என்றவள் ராதிகாவிடம் “உடம்பு எதுவும் சரியில்லையா??” என்றாள் அவளின் முகத்தினையே பார்த்து.

“வந்ததுல இருந்து இப்படிதான் இருக்கா…” என்று ராணியும் சொல்ல, 

“ம்மா இப்போதானே வந்தேன்..” என்றவள்  “அதெல்லாம் இல்ல நித்யா ..” என்று சொல்ல,

“ரொம்ப டல்லா தெரியுறீங்களே அண்ணி..” என்றாள் விடாது.

“எப்பவும் போலதானே இருக்கேன்…”

“இல்ல காலையில இருந்த ஒரு பிரிஸ்க் கூட இப்போ இல்லைண்ணி.. ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க போல இருக்கு..” என்று நித்யா திரும்ப திரும்ப கேட்க,

“ம்ம் ஆபிஸ்ல ஒரு சின்ன பிரச்சனை.. அதுதான்..” என்றாள் வேறு வழியில்லாது.

“நானும் சொல்லிட்டேன் இந்த வேலை பிடிக்கலைன்னா வேற பாத்துக்கலாம்னு.. கேட்டா தானே.. எல்லாத்திலும் பிடிவாதம்..” என்று ராணி வழக்கம் போலவே மகளை சொன்னாலும்,

அது நித்யாவின் முன் சொல்லப்பட்டதால் ராதிகாவிற்கு  மனதில் சுருக்கென்று போனது. அது அவளின் முகத்திலும் தெரிய, “நீங்க எதுவும் வொர்ரி பண்ணிக்காதீங்க அண்ணி.. ரெஸ்ட் எடுங்க..” என்றுமட்டும் சொல்லிவிட்டு  நித்யா  கிளம்பிவிட்டாள்.

அவள் கிளம்பிய பின்னும் சிறிது நேரம் ராதிகா  வாசலில் நிற்க, அத்து வந்தபின்னே கொஞ்சம் மனது நிம்மதியை உணர்வது போல் இருந்தது.. எங்கே  நிரஞ்சனன் மகனை அனுப்ப மாட்டானோ என்ற பயம் உள்ளே இருந்துகொண்டே தான் இருந்தது. இதுவே ஒவ்வொரு முறை தொடர்ந்தால்??

அத்துவிற்கு இதுவே பழக்கமாகி, அப்பாவின் அருகாமை தனக்கு வேண்டும் என்று அவன் பிடிவாதம் செய்யத் தொடங்கினால்??

உன்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பிற்காக, நான்கு வயது சிறுவனையும் அவனின் அப்பாவையும் பிரிப்பதா??

அத்தனை சுயநலமா எனக்கு??

இப்போது வரைக்கும் நான் என் அப்பாவோடு பேசுகிறேன், சிரிக்கிறேன், சண்டை போடுகிறேன், எது வேண்டுமென்றாலும் தயங்காது கேட்கிறேன்.. எனக்கொரு இக்கட்டான நிலை என்றதும், சரியோ தவறோ தந்தையின் நிழல் எனக்கு கிடைத்ததே. 

ஆனால் என் மகனுக்கு??

இந்த கேள்விகள் எல்லாம் அவளுள் அவளாகவே கேட்கத் தொடங்கிட, நேரம் செல்ல செல்ல தலைவலி அதிகரிப்பதாகவே இருந்தது. விவாகரத்து ஆகி இத்தனை ஆண்டுகளாய் இல்லாத இந்த எண்ணங்கள் எல்லாம் அவளுள் படையெடுக்க, இவ்வெண்ணங்களின் படையெடுப்பில் கரை காண முடியாது தவித்துத்தான் போனாள் ராதிகா.

வெளியே எத்தனை நேரம் அப்படியே நின்றாளோ, ராணி வந்து அழைக்கவும் தான் உள்ளே சென்றாள். மனது என்னவோ சமாதானமே ஆகாது போல என்று தோன்ற, மகனை அணைத்தபடி, அவனுக்கு மெதுவாய் தட்டிக்கொடுத்த படி படுத்திருந்தவள், உறங்கியும் போனாள்.

அத்துவை விட்டுவிட்டு தன் வீடு சென்ற நித்யாவோ உள்ளே நுழையும் போதே தன் அண்ணன் உம்மென்று அமர்ந்திருப்பதை தான் கண்டாள். மாலை வரைக்கும் கூட நன்றாகத்தான் இருந்தான். சுந்தரி வந்து அத்துவை கிளப்பி அனுப்பவேண்டும் என்று சொல்லவும் அப்படியே முகம் மாறிப் போனது.

இன்று முழுதும் அவன் எங்கேயும் செல்லவில்லை. வீட்டிலேயே மகனோடே தான் இருந்தான். ஒவ்வொரு நிமிடத்தையும் அத்துவோடு செலவழிக்க, அவனை அனுப்பவே மனமில்லை அவனுக்கு. ஒவ்வொரு மாதமும் இதே கதை தான்.. அத்து வந்துவிட்டால் போதும், நிரஞ்சனனுக்கு வேறெதுவும் கருத்தில் பதியாது.

‘அத்து என்கிட்ட தான் இருப்பான். உன்கிட்ட அனுப்ப முடியாது.. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ போ டி…’ என்று ராதிகா முன்னே முடிவாய்  சொல்லவேண்டும் என்று மனம் சண்டித்தனம் செய்தாலும், ஏனோ இத்தனை நாளில் அவன் அதெல்லாம் சொன்னது இல்லை.

ஆனால் இன்று அவனுக்கு என்னானது என்றே தெரியவில்லை..

அத்து வந்ததில் இருந்து அவனை தன்னோடு இறுதிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் புகை போல் வேகமாய் அவனுள் பரவியது. ஒரு குழந்தைக்கு அம்மா முக்கியம்தான். அதே நேரம் அப்பாவும் முக்கியம் தானே..

‘ப்பா….’ என்று அதோஷஜன் அழுத்தம் திருத்தமாய் அழைக்கையில் அகமகிழ்ந்து தான் போவான்.

அத்துவுடனே இருந்திருந்தால், அத்துவின் ஒவ்வொரு செயல்களையும் உடனிருந்து பார்த்திருந்தால், அவன் நடக்கையில், சிரிக்கையில், பேசத் தொடங்கையில் என்று ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நிரஞ்சனன்  இருந்திருந்தால் அவனின் அப்பா மனம் திருப்தியாகி இருக்குமோ என்னவோ.

ஆனால் இப்போதோ தன் பிள்ளையின் பஞ்சு விரல் பிடிக்கக் கூட வெகுவாய் அவன் மனம் ஏங்குகையில் அவனும் தான் என்ன செய்வான் பாவம்.. அதிலும் இன்று.. வழக்கத்திற்கு மாறாய் சுந்தரி பிடிவாதமாக அத்துவை கிளப்பி அனுப்ப, கோவம் வந்துவிட்டத..

“இவன் என் பையன்.. எனக்கு உரிமை இல்லையா???” என்று அம்மாவிடம் சத்தம் போட,

“உன் பையன் தான்.. உனக்கு உரிமை இருக்குதான்.. ஆனா அதெல்லாம் இப்போ செல்லுபடியாகுமா??? டைவர்ஸ்க்கு சைன் பண்றதுக்கு முதல்ல நீ இதெல்லாம் யோசிச்சு இருக்கணும்..” என்று சுந்தரியும் இத்தனை நாள் பேசாத பேச்சை பேசிவிட்டார்.

“ம்மா…!!!!”

“அம்மாதான் டா.. ஆனா ஒண்ணுமே செய்ய முடியாம இருக்கேன்.. என்னை என்ன செய்ய சொல்ற?? இல்ல என்ன செய்யணும் நான்.. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ.. உனக்குன்னு ஒரு குடும்பம் அமைச்சிக்கோன்னு சொன்னா அதுவும் கேட்கலை…” என்று ஆரம்பிக்க,

“போதும்மா…, எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஒரு பையனும் இருக்கான்..” என்றான் அழுத்தம் திருத்தமாய் நிரஞ்சனன்..

இதையே இவன் முன்னமும் சொல்லியிருக்கிறான். போன வருடம் கூட, உறவில் ஒருவர் பெண் கொடுப்பதாய் சொல்ல, சுந்தரியும் மகனைக் கேட்டார்தான். ஆனால் அவனோ இதோ இப்போது சொன்னதை தான் அப்போதும் சொன்னான்..

“ஆமா இதையே தான் சொல்ற… கல்யாணம் ஆச்சு.. குழந்தையும் இருக்கு.. யார் இல்லைன்னு சொன்னா… ஆனா உன் வாழ்க்கை சந்தோசமா இருக்கா?? நீயும் என்ன குடும்பமாவா இருக்க?? இதோ இவ கல்யாணம் பண்ணிட்டு போயிடுவா.. அடுத்து நான் இருக்க வரைக்கும் உன்னை பார்த்துப்பேன்.. அடுத்து?? யோசிடா.. இப்போ இவ்வளோ பேசுற, அன்னிக்கு ஏன்டா சைன் பண்ண?? உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தானே டைவர்ஸ் கொடுக்க முடியாதுன்னு…

இப்போ பேசி, இப்போ வருந்தி, இப்போ மகனுக்காக ஏங்கி என்ன பிரயோஜனம்.. இது குறையாது நிரஞ்சன்.. இருக்க இருக்க உன் புள்ள வளர வளர கூடிட்டே தான் போகும்.. அப்போ என்ன செய்வ நீ??? பேச வேண்டிய நேரத்துல நீ பேசலை…” என்றார் மகனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்து.   

அவ்வளவு தான் அடிப்பட்ட பாவனையோடு தன் அம்மாவை பார்த்தவன், அடுத்து ஒன்றுமே சொல்லவில்லை. டைவர்ஸ் வேண்டும் என்று சாவு வரைக்கும் சென்றவளிடம் இவன் என்ன பேசியிருக்க முடியும்??

இல்லை என்னதான் பேசினாலும் அவள் கேட்கும் நிலையில் இருந்தாளா என்ன?? மௌனமானது அவனின் தவறா?? இல்லை அவனை அப்படி மௌனமாய் நிறுத்தியது அவன் விதி செய்த சதியா..?? ஓய்ந்து போய் அமர்ந்து விட்டான்.

இவை அனைத்தையும் நித்யாவும் பார்த்துகொண்டு இருந்தாள் தான். ஆனால் ஒன்றும் பேசவில்லை. அத்துவை தயார் செய்து அழைத்து வர, மகனை இறுக அணைத்து கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தவன்,

“கூட்டிட்டு போ…” என்று அனுப்பிவிட்டான்.

‘ச்சே இப்படி பேசிட்டோமே..’ என்று வருந்திய சுந்தரியோ “சாரிடா…” என்று அருகே வர, “விடும்மா…” என்றான் விரக்தியாய்..

நிரஞ்சனனின் முகத்தினில் இப்போதெல்லாம் ஒருவித விரக்தி, ஒரு சலிப்பு மட்டுமே. இதெல்லாம் என்ன வாழ்க்கை என்று. நித்யாவின் திருமண பேச்சு வருகையில் மட்டும் கொஞ்சம் சந்தோசமாய் பேசுவதாய் இருந்தது. நிரஞ்சனன்  பொதுவாய் கலகல பேர்வழி இல்லையென்றாலும், அதற்காக உம்மணா மூஞ்சியும் இல்லை..

ஆனால் இப்போதோ.. அவன் பேசுவதே அரிதாகி போனதே..

நித்யா திரும்பி வரும் வரைக்கும் கூட அவன் அப்படியே இருக்க, உள்ளே வந்தவளோ “என்னண்ணா…??” என்றாள் மெதுவாய்..

“ம்ம்…” என்று தங்கையின் முகம் பார்த்தவன், ஒன்றுமில்லை என்று தலையை ஆட்ட,

“வந்துட்டியா..??” என்றபடி சுந்தரியும் அங்கே வந்தார்.

நித்யா அம்மாவின் முகம் பார்க்க, அவரோ ‘அப்போயிருந்து இப்படிதான் இருக்கான்..’ என்று சைகை செய்தார்.

நித்யா நொடிப்பொழுது யோசித்தவள் “ம்மா அத்து வர வர ரொம்ப ஷார்ப் ம்மா.. கார்ல போறப்போ இதென்ன அதென்னன்னு கேள்வி மேல கேள்வி.. எனக்குதான் பதில் சொல்ல முடியலை..” என்று அண்ணனைப் பார்த்தபடி பேச,

அவனோ மகனைப் பற்றிய பேச்சென்றதும் காதுகளை மட்டும் இப்பக்கம் நீட்டியிருந்தான்.

“இல்லையா பின்னே, இவனும் சின்ன வயசுல அப்படித்தான், நீயும் அப்படித்தான். அத்து அப்படியே உங்கள போலத்தான்…” என்று சுந்தரி பேச்சைத் தொடங்க, கடைசியில் அங்கே தொட்டு இங்கே தொட்டு பேச்சு ராதிகாவில் வந்து நின்றது.

“அம்மா அண்ணிக்கு வேலைல எதோ பிரச்சனை போல. முகமே சரியில்ல..”  என்று நித்யா போகிற போக்கில் சொல்லிச் செல்ல, அதுவோ சொல்லாமல் கொள்ளாமல் நிரஞ்சனனின் மனதில் கடந்த கால நிகழ்வுகளில் கல்லெறிந்து சென்றது.

அமைதியாய் எழுந்து அறைக்குள் வந்தவனுக்கு உறங்கும் எண்ணமில்லை, உறக்கமும் இல்லை. அவனது சிந்தனை முழுதும் தங்களின் திருமண நாட்களை பற்றி எண்ணத் தொடங்கியது. வேண்டாம் வேண்டாம் என்று கடிவாளம் போட்டாலும், அதுவோ கட்டவிழ்க்கவே விருப்பப்பட்டு கடைசியில் வலிக்க வலிக்க தாங்கள் வாழ்ந்த வாழ்வை பற்றி எண்ணலானான் நிரஞ்சனன்..

அதுவும் ராதிகாவின் வேலை பற்றி கேட்டதுமே, அவள் வேலைக்குப்  போக எத்தனை ஆவலும் ஆசையுமாய் இருந்தாள் என்றதெல்லாம் நினைவில் வந்து தொல்லை செய்தது.

இருவருக்கும்  திருமணம் முடிந்து சுமார் ஐந்து மாதங்கள் இருக்கும், வழக்கமான பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமண வாழ்வு எப்படியிருக்குமோ அப்படியே அவர்களுக்கும் ஆரம்பித்தது அனைத்தும்.

ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் கூச்சம், லேசான ஒரு பயம் அதையும் தாண்டி நிரஞ்சனன் மீது தோன்ற ஆரம்பித்த ஒருவித ஈர்ப்பு என்று ராதிகாவிற்கு அவளின் திருமண வாழ்வு அழகாகவே இருப்பதாக இருந்தது.

நிரஞ்சனனுக்கும் அப்படித்தான். புது மனைவி, அழகானவள், அன்பாகவும் இருக்கிறாள் இதற்குமேல் என்ன வேண்டும்?? அவனது மனது அதிலே திருப்தி பட்டுப்போனதாக இருக்க, முதல் ஐந்து மாதங்கள் எவ்வித பிரச்சனையும் இல்லாமலே இருந்தது.

நிரஞ்சனன் சொந்தமாய் ஆடிட்டிங் ஆபிஸ் ஆரம்பித்து அப்போது தான் ஓராண்டு முடிந்திருக்க, இன்னும் நன்றாய் மேலே வரவேண்டும் என்ற முனைப்பில் தொழிலில் மிக மிக சிரத்தையாக இருந்தான். அது புது மனைவியான ராதிகாவிற்கு  அவ்வப்போது கொஞ்சம் மன பிசகு கொடுத்தது.

அவள் முகம் தூக்குகையில் “என் வேலை அப்படிம்மா.. நல்லா ஸ்டேபிள் ஆகிட்டா அப்புறம் எந்த பிரச்சனையும் இல்லை…” என்று சமாதானம் செய்தாலும்,

“பின்ன ஏன் இப்போவே கல்யாணம் செஞ்சீங்கலாம்..?? ஸ்டேபிள் ஆகிட்டு செய்யலாமே..” என்பாள் இவள்.

இப்படியே நாட்கள் போக, ராதிகாவும் படித்திருக்கிறாளே, அவளின் கல்லூரித் தோழி ஒருத்தி ‘நீ ஏன் வீட்ல சும்மா இருக்க, பாரு நான்லாம் கல்யாணம் பண்ணிட்டு பத்தாவது நாள் வேலைக்கு போறேன்.. கை நிறைய சம்பளம்.. வீட்டுக்குள்ளயே இருக்க எப்படி முடியுது உன்னால..’ என்றுசொல்ல,

ராதிகாவிற்கு பணம் பற்றிய பிரச்சனை எல்லாம் இல்லை, ஆனால் வீட்டில் ஏன் இருக்க வேண்டும். அதுவும் படித்துவிட்டு சும்மா என்று  தோன்ற, வேலைக்கு போகும் ஆசை வந்தது. அதன் பின்னே தான் இவர்கள் வாழ்வில் வினையும் வந்தது என்று சொல்லவேண்டும்.

“என்னங்க.. எனக்கு போர் அடிக்குது.. நான் வேலைக்கு போகட்டுமா??” என்று ஆவலாய் கணவனிடம் கேட்க,

நிரஞ்சனன் இரண்டு நொடி யோசித்தவன் “தாராளமா போயிட்டு வா.. ஆனா ஒருவார்த்தை அப்பா அம்மாக்கிட்ட சொல்லிடனும்…” என்றான்.

அவனுக்கு இது பெரிதாய் தெரியவில்லை. ராதிகா வேலைக்கு சென்றாலும் சரி, வீட்டிலிருந்தாலும் சரி அவனுக்கு அது ஒரு விசயமே இல்லை. அவனை பொருத்தமட்டில் அவன் வேலையில் யாரின் தலையீடும் இல்லாதிருந்தால் போதும். வீட்டிற்கு வருகையில் வீடு நிம்மதியும் சந்தோசமாகவும் இருந்தால்  போதும்.

வாழ்வில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு விதமல்லவா.. ஆக ராதிகாவின் எதிர்ப்பார்ப்பும் கணவனிடத்தில் வேறாய் இருந்தது.

“நிஜமாவா… வாவ்… தேங்க்ஸ் சரின்னு சொன்னதுக்கு.. கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்ல சொன்னேன் வேலைக்கு போறேன்னு. அம்மாதான், மாப்பிள்ளை வீட்ல என்ன சொல்றாங்களோ கேட்டு நடந்துக்கோன்னு சொல்லிட்டாங்க.. எனக்கு கேட்க பயமா இருந்தது தெரியுமா??” என்று சந்தோஷத்தில் சொல்ல,

அவளையே பார்த்தவன் “எனக்கென்ன இதுல வந்தது.. போறது உன் விருப்பம்.. நான் சொல்ல என்ன இருக்கு..” என்றான், யாருக்கோ என்னவோ என்பதுபோல்.

அவ்வளவு தான் அடுத்தநொடி ராதிகாவிற்கு முகம் வாடி, மனதும் வாடிப் போனது. எனக்கான மாற்றங்கள் எதுவும் இவனுக்கு ஒன்றுமேயில்லையா என்ற கேள்வி எழ,

“அப்.. அப்போ அத்தை மாமாக்கிட்ட மட்டும் ஏன் சொல்லணும் சொன்னீங்க??” என்றாள் ஏமாற்றத்தை மறைத்து.

“வீட்ல பெரியவங்க இருந்தா சொல்லணும்.. ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்க கூடாது ராதிகா..” என்றவன் “எனக்கு தூக்கம் வருது.. வா…” என்றழைக்க, என்னவோ அந்த நொடி ராதிகாவிற்கு அவன் அழைத்ததும் அவனிடம் செல்ல மனம் வரவில்லை.

அவள் சந்தோசமாய் பேசுகையில், அவன் ஏனோ தானோவென்று பதில் சொன்னதுமில்லாது, நீ வேலைக்கு போனாலும் சரி, இல்லையென்றாலும் சரி எனக்கு எதுவுமில்லை என்பதுபோல் பேசியது மனதில் ஒரு கசப்பை கொடுத்தது.

‘சூப்பர் ராதிகா.. குட் ஐடியா…’

‘என்ன மாதிரி ஜாப் பாக்கணும் உனக்கு??’

‘எந்த ஏரியா உனக்கு இன்ட்ரெஸ்ட்??’

‘நான் எதுவும் செய்யனுமா??’

‘உனக்கு ஹெல்ப் வேணும்னா சொல்லு..’

என்றெல்லாம் கணவன் சொல்வான், தன்னை உற்சாகமூட்டுவான், அவனும் சில பல யோசனைகளை சொல்வான் என்று எண்ணியிருந்த அவளின் மனம், ‘எனக்கென்ன இதுல..’ என்ற அவனின் வார்த்தைகளில் அப்படியே சுடு நீர் உற்றிய மலராய் வாடிப்போனது.

“எனக்கு தூக்கம் வரலை..” என்று முகம் திருப்ப,

“ஓகே குட் நைட்…” என்றுசொல்லி நிரஞ்சனன் படுத்துவிட, அடுத்து வெகு நேரம் ராதிகாவிற்கு உறக்கம் வரவேயில்லை.

“ஏன் தூக்கம் வரலை.. ஒழுங்கா வந்து படு..” என்று ஒரு அதட்டாலாவது போடுவானோ என்று அவள் மனது எதிர்பார்க்க,

அவனோ ‘நீ தூங்கு தூங்காம போ.. எனக்கென்ன நான் தூங்கனும்..’ என்று உறங்கியது எதோ ஒருவகை ஏமாற்றம் கொடுத்தது.

உறங்கும் அவனின் முகத்தினையே பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு, அவன் முகத்தில் இருந்த களைப்பு புரிய ‘ச்சே ரொம்ப டயர்ட் போல.. அதான் இன்ட்ரெஸ்ட் இல்லாம பேசிருக்காரு… முதல்ல ஒரு ஜாப் தேடிட்டு அடுத்து சர்ப்ரைஸா சொல்லணும்..’ என்று தானாகவே தனக்கொரு சமாதானம் செய்துகொண்டவள்,

நிரஞ்சனனின் கோர்த்திருந்த கரத்தினை எடுத்து தானாகவே தன்மீது போட்டுக்கொண்டு உறங்கியும் போனாள்.

ஒருநேரம் நம்மை நாமே சமாதானம் செய்துகொள்ளும் சூழல் வரும். அதுவும் நம் மனதிற்கு பிடித்தவருக்காக. பிடித்த விசயங்களுக்காக என்று நாமே நம் மனதோடு போராடி, சரி அடுத்து பார்த்துகொள்வோம் என்று நம்மை நாமே சமாதானம் செய்து, மனதில் தோன்றும் ஏக்கங்களையும் ஆசைகளையும் ஒரு பெருமூச்சில் மட்டுமே வெளியிட்டு கடந்து போகும் தருணம் வரும்..

ஆனால் அதுவுமே ஒவ்வொரு முறையும் நீடிக்குமாயின்??? வாழ்வு கசந்து தானே போகும்..        

Advertisement