Advertisement

அத்தியாயம் – 3 

ராதிகாவிற்கு ஒருவழியாய் அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றாகிவிட்டது. என்னவோ இந்த முறை அவள் மனதினில் ஒரு தடுமாற்றம். ஆக கிளம்பியே ஆகவேண்டும் என்று கிளம்ப,  சுந்தரியோ விடாது “சாப்பிட்டு போ…” என்றார்..

“இல்லத்தை ஏற்கனவே நேரமாச்சு.. இன்னிக்கு ஒரு மீட்டிங் வேற இருக்கு.. சோ நான் கிளம்புறேன்…” என்றவள், அவரின் அறையிலேயே தன் உடையை சீர் செய்துகொண்டு கிளம்ப  

“அண்ணி நீங்க சாப்பிடாம தானே வந்தீங்க…” என்றாள் நித்யாவும் வந்து.

“இல்ல நித்தியா.. இனி நான் சாப்பிட்டு கிளம்ப ரொம்ப லேட்டாகிடும்.. என்னைப் பார்த்ததும் அப்புறம் அத்துவும் சாப்பிட அடம் செய்வான். நான் இல்லைன்னா கூட சமத்தா சப்பிட்டுடுவான்…”  என்று கிளம்பி வாசலுக்கே வந்துவிட்டாள்.

மற்ற இரு பெண்களும், இதற்குமேல் வற்புறுத்தினால் எங்கே உள்ளதும் கெட்டுவிடுமோ என்று அஞ்சியே, வாய் மூடி நிற்க, ராதிகா சரியாய் காலணிகளை மாட்டிக்கொண்டு கிளம்பும் நேரம் “ம்மா….” என்றபடி அவனின் அப்பாவின் கரங்களை பிடித்தபடி அறையினுள் இருந்து வந்துவிட்டான் அத்து.

அப்பாவும் மகனும் ஒரே வண்ணத்தில், உடைகள் போட்டிருந்தனர். அத்துவை பார்த்ததுமே அவளுக்குத் தெரிந்தது. தன்னையும் அறியாது பார்வை நிமிர்ந்து நிரஞ்சனனைக் காண, அவனோ அத்தனை நேரம் அவளைத்தான் பார்த்துகொண்டு இருந்திருப்பான் போல, இவள் பார்க்கவும் உடனே பார்வையை திருப்பிக்கொண்டான்.

இதனை எல்லாம் பார்த்துகொண்டு இருந்த சுந்தரியும், நித்யாவும்  ஒருவர் முகத்தினை ஒருவர் பார்க்க,       

“ம்ம் ம்ம்ம் புவ்வா….” என்றான் சிறுவன் தன் வயிற்றினை பிடித்து.

அவளுக்கும் தெரியும் அவனுக்கு பசி எடுத்திருக்கும் என்று. ஆனால் தான் இருந்தால் செல்லம் கொஞ்சிக்கொண்டு சரியாய் உண்ண மாட்டான் என்பதும் அவள் அறிந்ததே.  ஆனால் இப்போதோ மகனின் பசி அறிந்தபின்னே கிளம்பவும் அவளால் முடியாது போனது தான் அந்தோ பரிதாபம்.

இருக்க இருக்க அத்து ஒன்றும் சின்ன பிள்ளை இல்லையே.. ஒவ்வொரு வருடமும் அவன் வயதும் கூடுகிறது விபரங்களும் புரிகிறது தானே. அந்த மட்டும் என்னவோ மாதம் ஒருநாள் மட்டும் இங்கே இருக்க அவன் எந்த பிடிவாதமும் செய்வதுமில்லை.

இங்கே இருந்து அங்கே ராதிகாவின் வீட்டிற்கு வந்துவிட்டாலும் கூட என்ன ஏது என்றோ, அப்பா வேண்டும் என்றோ எதையும் கேட்டுக்கொள்ள மாட்டான்.. எந்த இடத்தில் இருக்கிறோமோ அதற்கு தாக்க இருந்துகொள்வான். அதுவே அவளுக்கு பெரும் நிம்மதியை கொடுக்க, இப்போது மகனின் பசி தெரிந்த பின்னும் கிளம்புவது அவளுக்கு சரியென்று படவில்லை.

பேரன் பசி என்று சொல்லவும் சுந்தரி இது தான் வாய்ப்பென்று எண்ணி “ராதிகா அவனுக்கு ஊட்டிவிட்டு, நீயும் சாப்பிட்டிட்டு போ.. ஆபிஸ்ல போன் பண்ணி சொல்றதுன்னா சொல்லிடு லேட்டாகும்னு…” என்றவர், மகளிடம் கண் காட்ட,

“நான் போய் எடுத்து வைக்கிறேன்..” என்றபடி நித்யா வேகமாய் சென்றாள்.

ஏற்கனவே டைனிங் டேபிளில் அனைத்தும் இருந்ததுதான், தட்டுகள் மட்டும் வைத்து நித்யா பரிமாற நிற்க,  “நிரஞ்சன் நீயும் வா…” என்றபடி சுந்தரி உள்ளே சென்றார்.

அவனோ, மகனை தூக்கிக்கொண்டு செல்ல, ராதிகாவோ ‘கடவுளே இதுக்கு நான் யார் கூடவும் பேசாமலேயே இருந்திருக்கலாமோ..’ என்று முதல் முறையாய் நினைத்தாள்.

உள்ளே போகாது அப்படியே நிற்க “அண்ணி வாங்கண்ணி..” என்று நித்யா  திரும்ப வந்து அழைக்க, “இ.. இதோ..” என்றவள் மகனுக்கு ஊட்டவேண்டும் என்று செல்ல,

அங்கே அதோஷஜனோ, நிரஞ்சனன் அருகே டைனிங் டேபிள் மீது அமர்ந்து, அவனுக்கு எதிரே ஒரு குட்டி தட்டு வேறு வைக்கப்பட்டு இருந்தது. அதிலும் அத்துவோ வெகு குஷியாய் அமர்ந்திருந்தான் வேறு.

“அத்தை இப்படி வச்சா அவன் எல்லாத்தையும் கீழ..” என்று ராதிகா  சொல்லும்போதே,

“அத்து.. அப்பா எப்படி சாப்பிடுறேனோ அப்படியே பார்த்து சாப்பிடனும்..” என்று நிரஞ்சனன்  சொல்லவும்,

அத்துவும் “சரிப்பா…” என்று தலையை உருட்டியவன், அப்படியே அச்சரம் பிசகாது அப்பா எப்படி உண்ணுகிறானோ கர்ம சிரத்தையாய் அதை அப்படியே செய்தான் மகன்.

என்ன சிறுவன் அல்லவா.. அவனின் பிஞ்சு விரல்களில் குட்டி இட்லி தான் வாய்க்குள் போனது. அதனைப் பார்த்த நிரஞ்சனனோ அவனுக்கு சின்ன சின்னதாய் இட்லியை பிய்த்து போட்டுவிட,

“ம்ம் நோ ப்பா.. நா தான்…” என்று அத்து, நானே சாப்பிடுவேன் என்பதுபோல் சொல்லி உண்ண, நிரஞ்சனன்  அப்போது தான் நிமிர்ந்து ராதிகாவை பார்த்தான்.

அவளோ மகன் உண்பதை ஒருப்பக்கம் ரசித்தாலும், இன்னொரு புறம் மனதில் ஒரு பாரம் கூடியது போல் நின்றாள். அங்கே வீட்டினில் ராணி, அத்துவை உண்ண வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுவார். பின்னேயே ஓடி வா என்று சொல்லாமல், செய்ய வைத்து விடுவான் சிறுவன். ஆனால் இங்கேயோ சமத்தாய் அப்பாவின் அருகே அமர்ந்து உண்ணும் மகனைப் பார்க்க ஆச்சர்யமாக கூட இருந்தது.

என்னதான் ஒரு குழந்தைக்கு அம்மாதான் முதலில் என்றாலும், அப்பாவின் அரவணைப்பும், அறிவுரையும், வழி நடத்தலும் எத்தனை முக்கியம் என்பது இந்த ஒரு செயலிலேயே அவளுக்கு புரிந்து போனது.

ஆனால்???????

ராதிகா விழி இமைக்காது பார்த்து நிற்க, நிரஞ்சனன் அவளைத்தான் பார்க்க, சுந்தரி  தான் ஒருநிலையில் மகனின் பார்வை உணர்ந்து, “அ… ரா. ராதிகா.. நீ.. நீயும் உட்காரும்மா..” என்றார்

தனது சிந்தனையில் இருந்து பட்டென்று வெளியே வந்தவள், “ஹா.. இ.. இல்ல அத்தை.. நேரமாச்சு…” என்று திரும்பவும் கிளம்பினாள்.

அவ்வளவுதான் நிரஞ்சனனின் பார்வை அடுத்து அவனின் தட்டிற்கும், மகனின் தட்டிற்கும் மட்டும் சொந்தம் என்றாகிவிட,

“சொன்னா கேளு ராதிகா.. சாப்பிட்டுதான் போகணும்…” என்றவர், மகள் மருமகளுக்கும் எடுத்து வைக்க, அவளால் அதற்குமேல் மறுக்கவே முடியவில்லை.

வேக வேகமாய் உண்டு முடித்தவள், “நான் கிளம்புறேன் அத்தை, ஆபிஸ் விட்டு வீட்டுக்கு போறப்போ வந்து அத்துவ கூட்டிட்டு போறேன்…” என்றுசொல்லும் போதே,

நிரஞ்சனன் “ம்மா…” என்று சுந்தரியை அழைத்திருந்தான்.

என்னவோ சொல்லப் போகிறான் என்று பார்க்க, “அத்து நாளைக்கு தான் வருவான்னு சொல்லிடுங்க…” என்றவன் திரும்பவும் உண்ணத் தொடங்கிவிட, ராதிகா பதற்றமடைந்து விட்டாள்..

“ஏ.. ஏன்.. ஏன்..” என்று சுந்தரியைப் பார்த்து கேட்க, அவரோ ‘இதென்ன புதிதாய்…’ என்று மகனைப் பார்த்தார்.

நித்யாவும் அப்படியே பார்க்க, “ம்மா அப்படித்தான்.. அத்து நாளைக்குதான் வருவான்.. ஏன் எனக்கு என் மகன் கூட ஒருநாள் தூங்கி எழணும்னு கூட ஆசை இருக்காதா…??” என்று நிரஞ்சனன்  கேட்கவும், ராதிகாவின் தொண்டை வறண்டு போனது.

அவன் கேட்ட கேள்வி நியாயமான ஒன்று தான். அதோஷஜன் பிறந்து, மருத்துவமனையில் இருந்து வீடு வந்தபிறகு, அவனைத் தூங்க வைப்பது என்பது இவனின் வேலை. ராதிகா இடையினில் விழித்தாலும் கூட சொல்லிடுவான்,

“நீ தூங்கு.. நான் பார்த்துக்கிறேன்..” என்று..

ஆனால் அதெல்லாம் அங்கே கொஞ்ச நாட்களில் மட்டும் நடந்தவை. அதாவது ஓரிரண்டு மாதங்கள்.

பின்னே இருவருக்குமே மனதினில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் போக, ராதிகா  மகனை தூக்கிக்கொண்டு நேராய் அவளின் அப்பாவின் வீடு வந்துவிட்டாள்.

பிரசவம் முடிந்து அம்மாவின் வீடு செல்லவில்லை ராதிகா. அதற்குமுன்னே சென்றவள், குழந்தை பிறந்ததும் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு இங்கேதான் வந்தாள். 

“நாங்க இத்தனை பேர் இருக்கோம்.. பார்த்துப்போம்.. நீங்க அங்க ஒரு ஆளா சிரமப்படணும்..” என்று சுந்தரியும் ராணியிடம் சொல்ல, சரி என்றுவிட்டனர் அவர்களும்.

சொன்னது போலவே குறைவில்லாமல் தான் பார்த்தும் கொண்டனர் இவர்களும்..

அதன் பின் இத்தனை நாளில் நிரஞ்சனன் மகனை மாதம் ஒருமுறை மட்டுமே பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டான். இடையில் எங்காவது காண நேர்ந்தால், அந்த இடத்தில் ராதிகா இல்லையென்றால் மட்டுமே மகனை தூக்கி வைத்திருப்பான்..

அவளிருந்தாள் அதுவுமில்லை. அத்துவாக இவனிடம் வந்தால் விலக்கி வைத்ததும் இல்லை.  ஏன் தேவையில்லாது அடுத்தவரின் பார்வைக்கும் பேச்சிற்கும் இடமளிக்கவேண்டும் என்று இருந்திடுவான்.

ஆனால் இன்றோ, திடீரென்று நிரஞ்சனன் அப்படி சொல்லவும், ராதிகா  குழம்பித்தான் போனாள்.

சுந்தரியோ, எங்கே இருவரும் பழையபடி முட்டிக்கொள்ள போகிறார்களோ என்றெண்ணி “என்னடா இது…” என்று கேட்க,

“அத்து இன்னிக்கு இங்கதான் இருப்பான்.. நாளைக்கு காலைல எட்டு மணிக்கு சரியா அங்க இருப்பான்.. அவ்வளோதான்..” என்றவன், மகன் உண்டானா என்று பார்க்க, அவனோ சமத்தாய் அவன் தட்டில் இருந்ததை காலி செய்திருந்தான்.

“ம்ம் வெரி குட் பாய்…” என்றவன், மகனுக்கு கை கழுவி, வாய் துடைத்துவிட்டு, அவனை தூக்கிக்கொள்ள,

அத்துவோ தன் அம்மாவை பெருமையாய் ஒரு பார்வை பார்த்தான், நான் சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்வது போல்.. மகனின் பார்வையை உணர்ந்தவளும் மெச்சுதலாய் பார்த்து புன்னகை புரிந்தாள். அவனிடம் அவளின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா?? இல்லையே.

ராதிகா கிளம்பி நிற்பதை பார்த்த அத்துவோ, “டாட்டா ம்மா…” என்று சொல்லி அவனின் அப்பாவின் தோளில் சாய்ந்துகொள்ள,

என்னவோ அந்த நொடி ராதிகாவிற்கு  மனதில் அத்தனை பெரும் வலி. தினமும் அவளும் அவனும் தானே கிளம்பிச் செல்வார்கள், பள்ளியில் மகனை விட்டு கிளம்பும்போது அவன் தினம் சொல்லும் ‘டாட்டா…’ தான் இது.

ஆனால் இன்றோ, அவன் அவனின் அப்பாவின்  கரங்களில் இருக்க, மகனின் வழக்கமான இந்த சிறு செயல் அவள் மனதில் இன்று பூதாகரமாய் தோன்றியது. அத்துவிற்கு பதில் சொல்லாது அவனையே பார்த்தபடி, இமைக்கவும் மறந்து ராதிகா நிற்க, சுந்தரி என்ன நினைத்தாரோ,

“நீ கிளம்பு ராதிகா.. நைட் அத்து வீட்டுக்கு வந்திடுவான்..” என்று உறுதி கொடுக்க, நிரஞ்சனன்  இப்போது தன் அம்மாவை முறைத்தான்.

“நீ சும்மா இருடா…” என்று அதட்டியவர், “ராதிம்மா நீ போ..” என்றுசொல்ல, அவளோ மௌனமாய் கிளம்பினாள்.

திரும்பவும் அத்துவின் ‘டாட்டா ம்மா…’ சப்தமாய் ஒலித்தது அவளின் மனதினுள்ளே.

மனதினில் பல பல சிந்தனைகள். அதனூடே எப்படித்தான் அலுவலகம் வந்து சேர்ந்தாளோ. அவளுக்கே தெரியாது. காரை நிறுத்திவிட்டு, லிப்டினில் ஏறி, தன் இருக்கையில் வந்தமர்ந்து சிறிது நேரம் கழித்து தான் அவளால் ஒரு இயல்பு நிலைக்கே திரும்ப முடிந்தது.

அவளுக்கு விவாகரத்து கிடைத்த அடுத்த இரண்டாவது மாதத்தில் இருந்து இந்த வேலையில் இருக்கிறாள். ராதிகாவிற்கு இதே நிறுவனத்தில் எப்படியாவது மேலே மேலே முன்னேறிவிட வேண்டும் என்பது இப்போதெல்லாம் ஒரு எண்ணமாகவே இருந்தது. ஆசையும் கூட..

அதன்பொருட்டே நிறைய வேலைகளை தனதாக்கிக்கொண்டு இருந்தாள். நிறைய நிறைய கற்றுக்கொண்டும் இருந்தாள். மீட்டிங், ட்ரைனிங் என்று எது வந்தாலும் மறுக்காமல் சென்று கலந்துகொள்வாள்.

அவளின் பாஸ் கூட “வெல்டன் ராதிகா குட் ஸ்ப்ரிட்…” என்று நேரடியாகவே அவளை பாராட்டியும் இருக்க, இது அவளுக்கு மேற்படி இருக்கும் நேரடி லீடுக்கு பிடிக்காது எப்போதுமே.

கிட்டத்தட்ட ஒரு ஐம்பது வயதிருக்கும். எப்போதுமே ராதிகாவிடம் ஒரு ஆராய்ச்சி மற்றும் ஒரு நக்கல் பார்வை.. இவளின் சொந்த வாழ்வு பற்றியும் தெரியும். ஆக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்கே எப்படி சுட்டி பேசவேண்டுமோ அங்கே அப்படி சுட்டி பேசும் ஆள், சுலேகா.

அவளின் இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்திலேயே, ராதிகாவின் முன்னிருந்த தொலைபேசி அடிக்க, எடுத்துப் பேசியவள் “ஓகே மேம்..” என்றுவிட்டு வைத்தவளுக்கு மூஞ்சு வாங்குவது போல் இருந்தது.

அவளுக்குத் தெரியும், நிச்சயம் இன்று ஏதாவது ஒரு வில்லங்கம் வரும் என்று. பாட்டிலில் இருந்த தண்ணீரை பருகி, சிறிது தன்னை தெம்பாக்கிக்கொண்டே சுலேகாவை பார்க்கச் சென்றாள். வழக்கம் போலவே அதே ஏளன பார்வயோடு இவளைப் பார்த்ததுமே “ஹ்ம்ம்…” என்று ராதிகாவை மேலும் கீழுமாய் பார்த்தவர்,

“என்ன விசேசம் ராதிகா.. சேலைல வந்திருக்கீங்க…??” என்று சம்பந்தமே இல்லாத கேள்வியை கேட்க, அவளுக்கோ உள்ளே எரிய தொடங்கியது.

‘நான் எப்படி வந்தால் உனக்கென்ன …’ என்று கேட்கவேண்டும் போல் இருக்க, ஆனால் அது முடியாது என்றும் தோன்ற, பல்லைக் கடித்தவள்,

“நீங்க கேட்ட டீடெயில்ஸ் இதுல இருக்கு மேம்…” என்று ஒரு பென் ட்ரைவை நீட்டினாள்.

“நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே…” என்றபடி, அந்த பென் ட்ரைவை வாங்கிய சுலேகா, திரும்பவும் அவளை பார்க்க,

இப்போது கொஞ்சம் நிமிர்வாகவே “என் மாமனார்க்கு திதி..  சோ போயிட்டு வந்தேன்…” என்றாள் ராதிகாவும்.

“ஓ…… முன்னாள் மாமனாருக்கா….”  என்று சுலேகா இழுத்து சொல்லும்போதே, ராதிகாவிற்கு  அவளை ஒரு அப்பு வைக்க வேண்டும் போலிருந்தது. பொறுமை பொறுமை என்று தனக்குள்ளே சொன்னவள், அமைதியாகவே நிற்க,

“ஓகே யூ கோ.. நான் பார்த்துட்டு சொல்றேன்…” என்று சுலேகா சொல்லவும், கிளம்பிவிட்டாள்..

இது அவ்வப்போது நிகழும் ஒன்றுதான்.. முன்னெல்லாம் இப்படியில்லை, அத்துவை பள்ளியில் சேர்க்கும்போது, ராதிகாவும், நிரஞ்சனனும்  சென்றிருக்க, அங்கே சுலேகாவை பார்க்க நேர்ந்தது.  ராதிகா விவாகரத்து ஆனவள் என்பது நன்கு தெரியும், இப்போது ஒருவனோடு பார்க்கவும் சுலேகா மனதில் லேசாய் சந்தேகம் முளைக்க, அலுவகலத்தில் இவளை கேட்டேவிட்டார்.

“அத்துவோட அப்பா…” என்று ராதிகா சொல்லவும்,

“ஓஹோ… உன்னோட.. எக்ஸ் ஹஸ்பன்ட்…” என்று அன்று ஆரம்பித்தது தான் இதோ இப்போது வரைக்கும் ஒரு கேலி கிண்டல் என்று செமத்தியாய் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குட்டுவார்..

“டிவோர்ஸ் வாங்கியாச்சு.. பின்ன எப்படி ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்குறீங்க…? சங்கடமா இருக்காதா???” என்ற சுலேகாவின் கேள்விக்கு பதிலே சொல்ல முடியாது இவளால்.

‘நீ கேட்டு நான் சொல்ல வேண்டியதில்லை..’ என்ற எண்ணமே ராதிகாவிற்கு, நேருக்கு நேர் பார்த்து அமைதியாய் நிற்பாள்.

“ம்ம் ராதிகா.. பட் உங்க போல்ட்னஸ் யாருக்கும் வராதும்மா…” என்பவரை மனதினுள்ளே எத்தனை அர்ச்சனைகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்திடுவாள் இவள்.

எப்போதுமே தன் கோபத்தை வெளிக்காட்டாதவளுக்கு இன்று ஏனோ அது முடியவில்லை. தன் இருக்கைக்கு வந்து அமர்ந்த பின்னும்கூட அவளால் மனதில் எழும் அனலை தடுக்க முடியவில்லை.

‘இவளுக்கு என்ன… நான் என்னவோ பண்ணிட்டு போறேன்.. என் லைப்.. அதுல இவளுக்கு என்ன அவ்வளோ கேள்வி….’ என்று முனங்கியபடி இருக்க, திரும்பவும் அவளின் முன்னிருந்த தொலைபேசி தொல்லை செய்தது.

எடுத்து பேசியவள் “எஸ் மேம்..” என்றுவிட்டு மறுபடியும் சுலேகாவை காண செல்ல,

அவரோ “வாட் இஸ் திஸ் ராதிகா.. வேலைலயாவது சின்சியரா இருப்பீங்கன்னு பார்த்தா இவ்வளோ மிஸ்டேக்ஸ் இருக்கு..” என்று கணினியை சுட்டிக்காட்ட,

ராதிகாவோ  ‘எல்லாமே சரியாதானே இருக்கு…’ என்றெண்ணியபடி பார்த்தாள்.

“எதுன்னாலும் சைலன்ட்டா நின்னுடுங்க.. இன்னிக்கு ஈவ்னிங் இந்த பைல் சம்பிட் செய்யணும் ஆனா இப்போ வரைக்கும் எதுவும் கிளியர் ஆகலை. இதுல எல்லா ட்ரைனிங்கும் அட்டென்ட் பண்ணிட்டு வர்றீங்க.. உங்க கவனம் எல்லாம் எங்கதான் இருக்குமோ..” என்று பொரிய

“நோ மேம்.. நீங்க கொடுத்த டீடேயில்ஸ் வச்சு நான் சரியாதான் பார்ம் பண்ணிருக்கேன்..” என்றவள், கணினியை தன்புறம் திருப்பி, சுலேகா தவறு என்று  சுட்டி காட்டியதை,

அவர் கொடுத்த விபரங்களை சொல்லியே, தான் செய்த வேலையை விளக்கி  விவரித்து, தான் செய்தது சரிதான் என்று ராதிகா சொல்லவும், சுலேகாவிற்கும்  அது சரி என்று புரிந்தாலும் அதனை உடனே ஏற்றுகொள்ள முடியவில்லை.. திரும்ப திரும்ப அவர் இல்லை இல்லை என்று சொல்லி சொல்லி மறுத்து பேச, ஒருநிலையில் ராதிகாவிற்கு பொறுமை போய்விட்டது.

“அப்போ நீங்களே இதை ரெடி பண்ணிக்கோங்க மேம்..” என்றுவிட்டாள்.

“வாட்??? இங்க நான் லிடா இல்லை நீங்களா?? தப்புன்னு சொன்னா அதை சரிபண்ணிட்டு வர தெரியலை. அதுவிட்டு என்னை பண்ணச் சொல்றீங்க… வாட் யூ ஆர் திங்கிங் இன் யுவர் மைன்ட்..” என்று சுலேகா அடுத்தடுத்து அடுக்கத் தொடங்கிவிட்டார்.

ராதிகாவும் இன்று உன்னை சும்மா விடுவதில்லை என்று, “எஸ் மேம் நீங்கதான் லீட்.. பட் யூ ஆர் டூயிங் திஸ் வாண்டட்லி.. என்னோட பெர்சனல் பத்தி பேச உங்களுக்கு எதுவும் ரைட்ஸ் இல்ல.. பட் அதுவும் செய்றீங்க… இப்படியே போனா நான் கம்ப்ளைன்ட் தான் செய்யணும் மெண்டல் டார்ச்சர் கொடுக்குறீங்கன்னு..” என்று அவளும் பதிலுக்கு பதில் கேட்டுவிட்டாள்.

எப்போதுமே வாய் திறக்காதவள் இன்று எதிர்த்து பேசவும், சுலேகாவின் ஈகோ நிரம்பவே சீண்டப்பட்ட, அடக்கப்பட்ட கோபத்தோடு ராதிகாவைப் பார்த்தவர், என்ன நினைத்தாரோ “யூ மே கோ…” என்றார் வேறெதுவும் சொல்லாது..

Advertisement