Advertisement

      அத்தியாயம் – 25

இந்த மனித வாழ்வு தான் எத்தனை விந்தையானது.. விசித்திரமானது.. கொடுமையானது.. சில நேரம் கோமாளித்தனமானது. சகிக்கவே முடியவில்லை என்றும் நினைக்க வைக்கும். சகித்துக்கொண்டு கூட இருந்திருக்கலாமோ என்றும் நினைக்க வைத்துவிடும்.

அப்படியொரு வல்லமை கொண்டது தான் நம் வாழ்வு..!!

அப்படியிருக்க அதனை துணித்து வாழ்ந்துப் பார்ப்பதுதானே சாலச் சிறந்தது…!!

ஆம் இனி வாழ்ந்து பார்த்துவிடுவோம் என்று முடிவிற்கு வந்துவிட்ட நிரஞ்சனன், ராதிகா இருவருமே தங்களின் முடிவினை பெரியவர்களிடம் சொல்லிட, அனைவருக்குமே அப்போதுதான் பரிபூரண நிம்மதி.

முடிவிற்கு வந்துவிட்டாலும், சட்டென்று இணைந்திட முடியுமா என்ன?? அதற்கென்று முறைகள் இருக்கிறதே.. நம் மரபு, நம் பழக்கவழக்கம், குடும்ப பழக்கம், சமுதாய கட்டமைப்பு என்று இத்தனையும் கடந்து தானே கணவன் மனைவி என்கிற உறவு நிலைத்து நிற்கிறது.

‘இதெல்லாம் இந்த காலத்துல ஒண்ணுமில்ல..’ என்று வாய் சொன்னாலும், நம்மில் அநேகம் பேரால் இதனைத் தாண்டி வேறு நிலையில் நிற்க முடிவதில்லை என்பதுதான் நிஜம்.

சுந்தரி கூட சொன்னார் “இங்கேயே இரேன்..” என்று.

அன்று ராதிகா அங்கேதான் வந்திருந்தாள். இப்போதெல்லாம் தினம் தினம் மாலை நேரம் அங்கேதான். நிரஞ்சனன் எப்படி அத்துவை அழைக்கப் பள்ளிக்கூடம் போகிறானோ அப்படியே கையோடு மனைவியை அழைக்கவும் சென்றுவிடுகிறான்.

அவளுக்கு வேலைகள் நிறைய இருக்கும் பட்சத்தில், வேலை முடித்து அவளே அங்கே சென்றிடுவாள்.

திருமண வேலைகள், பேச்சுக்கள் என்று நிறைய நிறைய இருக்க, ஒரு பக்கம் பத்திரிக்கை வைக்கும் படலமும் நடந்தேரிக்கொண்டு இருந்தது. நிரஞ்சனனும் சுந்தரியும் அவர்களின் சொந்த ஊரில் இருக்கும் சொந்த பந்தங்களுக்கு பத்திரிக்கை வைக்கச் செல்ல, நித்யா வந்து ராதிகாவினோடு அவளின் அப்பாவின் வீட்டில் இருந்துகொண்டாள்.

பத்திரிக்கையில் நிரஞ்சனன் – ராதிகா பேர் பார்த்தவர்கள் நிறைய பேருக்கு ஆச்சர்யம். சந்தோசம்.. பின் எப்படி இப்படி..??! என்ற கேள்வி வேறு.

அன்றைய தினம் காலையில் தான் ஊரில் இருந்து இருவரும் வந்திருக்க, மாலை வேலை முடிந்து ராதிகா அவர்களை காண வந்திருந்தாள்.

“எல்லாருக்குமே சந்தோசம் ராதிகா..” என்ற சுந்தரி தான் “இங்கேயே இரேன்..” என்று சொல்ல,

“ம்மா லீகல் பார்மாலிட்டீஸ் எல்லாம் இருக்கு..” என்று நிரஞ்சனன் சொல்ல,

“அடப்போடா.. பெரிய லீகல் பார்மாலிட்டீஸ்.. அவனவன் சொந்த பொண்டாட்டி விட்டுட்டு யாரோ பொண்டாட்டி கூட குடும்பம் பண்றான்..” என்று சுந்தரி சொல்ல, ராதிகா அப்படி சிரித்துவிட்டாள்.

நிரஞ்சனன் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே..!!

அதை பார்த்து பார்த்து அப்படி சிரிப்பு அவளுக்கு..!!

அத்துக்கூட “ம்மா ஏம்மா…” என, மகனை தன்னோடு இறுத்திக்கொண்டவள், “அத்தை அவ்வளோ தைரியம் எல்லாம் உங்க பையனுக்கு இல்லை..” என்று கிண்டலடிக்க,

“அதான் பார்த்தாலே தெரியுதே.. யூ டேர்ன் போட்டு உங்கக்கிட்டயே வந்தாச்சே..” என்று நித்யாவும் சொல்ல,

“ஹலோ.. ஹலோ.. அதுக்கு பேரு பயமில்ல..” என்றான் நிரஞ்சனன் நெஞ்சை நிமிர்த்தி.

“பின்ன..??!!”

“தெரியாத பேய்க்கு தெரிந்த பிசாசே மேல்னு அர்த்தம்..” என, ராதிகா “அப்போ நான் பிசாசா…??!!” என்று கண்களை உருட்ட,

“இதோ இதோ…!!” என்று நிரஞ்சனன் அவளை இப்போது கிண்டல் செய்து சிரிக்க, சுந்தரி திரும்பவும் கேட்டார் ‘எப்போ வருகிறாய்..’ என்று.

இப்போது ராதிகா நிரஞ்சனன் முகம் பார்க்க, “ம்மா லாயர் கிட்ட பேசணும். மியூச்சுவல் தானே சோ சீக்கிரம் எல்லாம் முடிஞ்சிடும்.. அப்.. அப்புறம் நீங்க எதுவும் ஐ மீன் நம்ம எதுவும் பண்ணனுமா??!!” என்றான், சம்பிரதாயங்கள் எதுவும் இருக்கிறதா என்று.

சுந்தரி, ராணியிடம் பேசினார் இதனை..

“அவ அதே தாலிதான் இன்னமும் போட்டிருக்கா..” என்று ராணி சொல்ல,

“இதை கோவில் உண்டியல்ல போட்டு.. புது தாலி கட்டலாமா??!!” என்றார் சுந்தரியும்.

“எப்படினாலும் நல்ல நாள் பார்த்து பண்ணிடலாம்.. ரொம்ப எல்லாம் நாள் எடுத்துக்க வேண்டாம்..” என்று மணிவண்ணன் சொல்லிட,

சுந்தரி தன் மகனிடம் அதனையே கேட்டார்..!!

பொதுவாய் ‘டிவோர்ஸ்…’ என்று ஒன்று ஆனால், அந்த தாலியை கழட்டி கொடுத்து விடுவார்கள்தானே..

ராதிகா இன்னமும் அணிந்துதான் இருக்கிறாள் என்பது நிரஞ்சனனுக்கு எப்போதோ தெரியும். சொல்லப்போனால் அது கொடுத்த உணர்வுதான். அவனும் இவள் இருந்தாலும் இல்லையென்றாலும் என் வாழ்வில் இவள் மட்டுமே என்ற திடம் கொடுத்தது.

சுந்தரி மகனிடம் இதனை தனியே தான் சொன்னார். அவனோ  “ம்மா இவ்வளோ சீரியஸா கொண்டு போகனுமா..” என,

“நீங்க பண்ண கொடுமைக்கு இதெல்லாம் எவ்வளவோ மேல்..” என்று அவரும் சொல்லிட,

“ம்ம் ராதிகா சரின்னு சொன்னா மட்டும்தான்..” என்றவனும், ராதிகாவிடம் தனியே தான் கேட்டான்.

அவளோ “இந்த தாலியை கழட்டனுமா??!!” என்று அதிர்ந்து கேட்க, “நீ என்ன சொல்ற..” என்றான் கணவன்.

“இதுவும் இருக்கட்டுமே..” என்று அவள் சொல்லும்போதே, அவனுக்குப் புரிந்துபோனது..

“ம்ம் அம்மாவ நாள் பார்க்கச் சொல்லவா..??” என்று நிரஞ்சனன் கேட்கையில் அவன் கண்களில் என்னத் தோன்றியதோ அவளுக்குப் புரியவில்லை.

ஆனால் ராதிகாவோ “என்னங்க..” என்று கேட்க,

“ம்ம்.. இல்ல… பொண்ணுங்க எவ்வளோ செண்டிமெண்ட்ஸ் தாண்டி வர வேண்டியதா இருக்கு..” என,

“ஆரம்பிக்காதீங்க… என்ன செய்யணுமோ அதெல்லாம் செய்யலாம்..” என்றுவிட்டாள் ராதிகா.

இவர்கள் முடிவினை சொல்லியபிறகு, நிரஞ்சனன் வக்கீலிடம் பேசி, லீகல் வேலைகள் எல்லாம் பார்க்க, அவரவர் வேலையில் நாட்கள் கடந்துகொண்டு இருக்க,  பெரியவர்கள் நாள் பார்க்க, நல்ல முஹூர்த்த தினமோ இன்னும் பத்து நாட்களுக்கு பிறகுதான் வந்தது.

“பத்து நாளா..??!!” என்று நிரஞ்சனன் கேட்க,

“அதுக்குள்ள கோர்ட் விசயம் எல்லாம் முடிஞ்சிடும்தானே..” என்றார் சுந்தரி.

மணிவண்ணன் அவர்பக்கத்து நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் இதுதான் விஷயம் என்றுமட்டும் சொல்லிவிட்டார்.

இதற்கிடையில், அரவிந்த் வீட்டில் இருந்து வந்திருந்தார்கள். அப்போது ராதிகா அவர்களை தைரியமாகவே எதிர்கொள்ள, சியாமளாவும், கணபதியும் அவளைப் பார்க்கும் விதமே மாறியிருந்தது.

அந்த வீட்டின் மருமகளுக்கு, நிரஞ்சனன் மனைவிக்கு என்ன மரியாதை கொடுத்திடவேண்டுமோ அதை செய்தனர்.

“தாலிக்கு பொன் உருக்கும்போது மகனையும் மருமகளையும் அனுப்பிவைங்க.. எங்க பக்கத்து ஆளுங்க எல்லாம் வருவாங்க… வேற பேச்சக்கு இடமில்லாம போயிடும்…” என்று சியாமளா சொல்லிவிட்டுச் செல்ல, சுந்தரி அதை அப்படியே பிடித்துக்கொண்டார்.  

“போயிட்டு வந்திடுங்க..” என்று.

“ம்மா என்னம்மா…” என்று நிரஞ்சனன் சொல்ல,

ராதிகாவோ “ப்ளைட்ல காலைல போய்ட்டு சாயங்காலம் ரிட்டன் ஆகிடலாம்..” என்றாள் பட்டென்று.

இந்த பேச்சுக்கள் எல்லாம் ஆரம்பித்து, இவர்களுக்குள் எல்லாம் சரியாய் போனாலும், இன்னமும் ராதிகாவும் நிரஞ்சனனும் தனியே வெளியே எங்கேயும் செல்லவில்லை. வாய்ப்புக்கள் அமையவில்லை.

இப்படி ஒரு சூழல் வர, ராதிகாவும் போக விரும்பினாள்.

“உனக்கு ஓகே வா..” என்று நிரஞ்சனன் இரண்டொரு முறை கேட்க, “ம்ம்ச் இப்போ என்ன…” என்று ராதிகா குரல் உயரவும் தான்,

“சரி சரி.. நாளைக்கு பின்ன என்னை எதுவும் சொல்லக் கூடாது..” என்று சொல்லியவன், “உன் பேரன்ட்ஸ் கிட்ட கேட்டுக்கோ..” என்றும் சொல்லிவிட, அவர்களும் காலையில் போய் இரவு வந்திடுவர் தானே என்று சரி சொல்லிவிட்டனர். அதோஷஜனை அப்பா அம்மாவிடம் விட்டு வந்திருந்தாள் ராதிகா.

ஆனால் அங்கே போனால் நிலைமையே மாறிவிட்டது.

கோவையிலிருந்து பதினைத்து கிலோமீட்டர் தள்ளி ஒரு டவுன் ஏரியா. சொந்தமாய் இரண்டு மில் வைத்திருந்தார்கள். நிலபுலன் எல்லாம் நிறையவே இருந்தது. அனைத்திற்கும் அரவிந்த் தான் ஒற்றை வாரிசு.

தாலிக்கு பொன் உறுக்கத்தானே என்று போனால், அங்கேயோ கிட்டத்தட்ட நூறு பேர் இருந்தார்கள்.

ராதிகா மலைத்தே போனாள்.  “என்னங்க…??!!” என்று நிரஞ்சனன் முகம் பார்க்க “ப்ரீயா விடு.. யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க..” என்று தைரியம் சொன்னான்.

கணபதி வந்து, அவர்களின் பக்கத்து உறவுகளை எல்லாம் அறிமுகம் செய்ய, நிரஞ்சனன் இதில் நிறையபேரை ஏற்கனவே கண்டிருக்கிறான் ஆனால் ராதிகா அப்போதுதானே பார்க்கிறாள். ஆக இது ராதிகாவிற்காக என்று புரிந்தது.

சிலர் கேள்வியாய் பார்த்தார்கள் தான். ஒருசிலர் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள் தான். ஆனால் இவர்களிடம் நேரடியாய் யாரும் கேட்டிடவில்லை.

அந்த மட்டும் நிம்மதி என்றானது..

அனைவரும் நித்யாவின் புகுந்தவீட்டு ஆட்கள். நாளை அவள் வந்து இங்கேதான் வாழ்ந்திட வேண்டும். தங்களை முன்னிட்டு அவள் யாருக்கும் பதில் சொல்லும் நிலைக்கு வந்திட கூடாது என்று எண்ணியவள், மலர்ந்த முகத்துடனேயே அனைத்திலும் பங்குகொண்டாள்.

இவர்கள் பக்கத்து முறை செய்து, பின் மதிய விருந்துண்டு, மேலும் சில நேரம் அளவளாவி கிளம்புகையில் நான்கு மணியாகிப் போனது.

“மழை வர்றதுபோல இருக்கு.. நானே வந்து டிராப் பண்றேனே..” என்று அரவிந்த் சொன்னமைக்குக் கூட,

“வேண்டாம்… நாங்களே போயிப்போம்… நீங்க மப்பிள்ளையாகிட்டு இனி இப்படியெல்லாம் அலையக் கூடாது..” என்று சொன்னது ராதிகாவே.

ஆம்..!! அவளினுள் ஒரு நிமிர்வு வந்துவிட்டது.

எனக்கும் என் கணவனுக்குள்ளும் ஆயிரம் இருக்கும். அது மற்றவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.. அப்படியொரு பாவனை தான் அவளின் முகத்தினிலும்.

ராதிகா பதில் சொல்லவும், நிரஞ்சனன் கூட சிறிது வியந்துதான் பார்த்தான். அவளோ “இன்னிக்குதான் மாப்பிள்ளை காப்பு போட்டிருக்காங்க.. அவர் வெளிய வரகூடாது..” என,

“ஓ..!! சரி சரி..” என்றுவிட்டான் நிரஞ்சனன்.

ஆனால் கனபதியோ “நான் டிரைவர் அனுப்புறேன்..” என்றவர், அவரின் டிரைவர் அழைத்து இவர்களை கொண்டு போய் கோவை விமான நிலையம் விட்டு வரச் சொல்ல, அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.

கார் கிளம்பி சிறிது நேரத்திலேயே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. முதலில் மிதமாய் ஆரம்பித்து பின் அழுத்திப் பேய, ஒருவழியாய் டிரைவரும் கொண்டுபோய் இவர்களை விமான நிலையம் கொண்டு போய் சேர்த்துவிட்டார்.

ஆனால் அதன் பின்னோ பேய் மழை..!!

இடி.. மின்னல்.. மழை…

“என்னங்க இப்படி…” என்று ராதிகா சொல்ல, அவர்களின் விமானம் கிளம்ப இன்னமும் இரண்டு மணி நேரம் இருக்க,

“கொஞ்ச நேரம் போகட்டும் பார்த்துக்கலாம்..” என்றான் நிரஞ்சனன்.

விமான நிலையத்திலேயே அமர்ந்திருக்க, வீட்டினர்கள் மாறி மாறி அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

‘பார்த்து வாங்க.. பார்த்து வாங்க…’ என்று வீட்டினர் சொல்ல,

அரவிந்த் வீட்டில் இருந்தும் அழைப்பு வந்துவிட்டது. அரவிந்தின் அப்பா “நான் கார் அனுப்புறேன் தம்பி..” என,

“வேணாங்க மாமா.. ரோட் எல்லாம் ப்ளாக் போல.. ரிஸ்க் தான்.. இங்க பார்த்துக்கலாம்..” என்று நிரஞ்சனன் சொல்ல,

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எப்படியும் ப்ளைட் எல்லாம் ஸ்டாப் பண்ணிடுவாங்க.. அங்க ஏர்போர்ட் பக்கத்துலையே ஸ்டார் ஹோட்டல் இருக்கு.. நீங்க சொன்னீங்கன்னா நான் இங்க இருந்தே ரூம் புக் பண்ணிடுவேன்..” என்று அவர் சொல்ல,

‘தங்குவதா…??!!’ என்று யோசித்தான்.

ஆனால் இவர்களின் தயக்கம் எல்லாம் அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது.

“நான் புக் பண்ணிட்டு சொல்றேன் தம்பி.. நீங்க அங்க போயிக்கோங்க..” என்ற மனிதர் சொன்னதை செய்தும் விட்டார்.

அவர் சொன்னது போலவே சில நிமிடங்களிலேயே விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து என வர, ராதிகா என்ன செய்வது என்று கணவன் முகம் பார்க்க, அவனோ “ரூம் புக் பண்ணிட்டாங்க.. ஸ்டே பண்ணிட்டு மார்னிங் தான் போகணும்..” என,

“ஹா..!!!” என்று ராதிகா அதிர்ந்து பார்க்க,

“பிராக்டிகலா யோசி ராதிகா..” என, நிஜமும் அதுதான். வேறு வழியே இல்லை..

அரவிந்த் அழைத்தவன் “ரூம் நம்பர்..” என்று சொல்லி, “உங்களுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கும் அதை ரிசப்சன்ல காட்டிருங்க..” என, வேறு வழியே இல்லாது இருவரும் அங்கே கிளம்பினர்.

ஒருவித தயக்கம் இருவருக்கும் இருந்ததுதான். இருந்தும் தங்களை மீறி அப்படியென்ன ஆகிவிடப் போகிறது என்ற திடமும் இருந்தது.

விமான நிலையம் வெளியே இருந்த ஒரு கேப் டிரைவரை பிடிக்க, அவரோ முதலில் முடியாதென்றவர் பின் சம்மதித்து, இரண்டு நிமிடத்தில் செல்ல வேண்டிய ஹோட்டலுக்கு பத்து நிமிடம் ஆகியது.

கேட்டதை விட  நிரஞ்சனன் அதிகமாகவே கொடுத்தவன், உள்ளே செல்வதற்குள்ளே இருவரும் நனைந்து விட்டார்கள்.

ரிசப்சனில் சொல்லி, அவர்களின் அறை சென்று நுழையும் வரைக்கும் ராதிகா வாயே திறக்கவில்லை. அவள் மனதில் என்ன ஓடும் என்று நிரஞ்சனனுக்குத் தெரியாமல் இல்லை.

முதல் வேலையாய் மணிவண்ணனுக்கு அழைத்தவன் இங்கிருக்கும் சூழ்நிலை சொல்ல, ராதிகா அப்போதும் மௌனமாய் தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவரோடு பேசியவன்

“ராதிகா…” என்றழைத்து, “இந்தா பேசு..” என, அவளோ முடியாது என்று தலையை ஆட்டினாள்.

“ம்ம்ச்..” என்று நிரஞ்சனன் முறைக்க, அவளின் கை அலைபேசியை வாங்க, “ஹலோ அப்பா..” என, இப்போது பேசியது அம்மா.

“பார்த்து வாங்க ராதிகா.. ஒன்னும் பிரச்னை இல்லை..” என்று ராணி சொல்லிய பிறகுதான் அவளுக்கு நிம்மதியே ஆனது.

அவள் பேசி முடிப்பதற்குள், நிரஞ்சனன் ரூம் சர்வீஸ் அழைத்து சூடாக பால் கொணர்ந்து கொடுக்கச் சொல்ல, அதுவும் வந்திருந்தது.

அவன் என்னவோ இயல்பாய் இருப்பதாய் தான் இருந்தது. அவளால் தான் சட்டென்று அந்த இயல்புநிலைக்கு வர முடியவில்லை.

‘ராதிகா.. என்னாச்சு உனக்கு..’ என்று தனக்கு தானே கேட்டவள் “நீங்க அத்தையோட பேசலையா..??!!” என,

“அப்பா.. இப்போவாது வாய் பேசுதே..” என்றவன், சுந்தரியிடம், நித்யாவிடம் பின் அரவிந்த் வீட்டினரிடம் எல்லாம் பேசிவிட்டு வைக்க,

“அத்துவோட பேசலாமா..” என்றாள். மகன் தேடுவானே என்று அதுவேறு.

“நல்லா தூங்குறானாம். உங்கம்மா சொல்லலையா…” என, அவள் கேட்கவேயில்லையே முதலில்.

“ம்ம்..” என்றவள், அங்கிருந்த குஷனில் ஒருவித தவிப்போடு அமர்ந்திருக்க, பல வருடங்கள் கழித்து முதலும் முழுமையான தனிமை இது அவர்களுக்கு..

நான்கு சுவர்களுக்குள் இவர்கள் இருவர் மட்டுமே..!!

வீட்டினில் பெரியவர்கள் என்னென்னவோ சாஸ்திரங்கள் சொல்லிக்கொண்டு இருக்க, இப்போது இந்த சூழலோ இருவருக்குமே அபாயமாய் தான் தெரிந்தது. இருவரையும் ஒரு மௌனம் வந்து சூழ்ந்துகொள்ள, நிரஞ்சனனால் வெகு நேரம் பேசாது இருக்க முடியவில்லை.

உடை மாற்றி வந்தவன் “ட்ரெஸ் மாத்திட்டு வா ராதிகா..” என, அப்போதுதான் அவனைப் பார்த்தாள். ஒரு ஷார்ட்ஸ் மற்றும் பனியன்..

எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு செட் உடை கொண்டு வந்திருந்தார்கள்.

“பாரு.. உன்னோட சேலை எல்லாம் ஈரம்..” என கை காட்ட, வேகமாய் போய் அவளும் உடைமாற்றிக் கொண்டு வந்தாள்.

ஒரு டாப்ஸ் மற்றும் லெக்கின்ஸ்..

“இது தூங்க உனக்கு கம்பர்ட்டா இருக்குமா..” என்று நிரஞ்சனன் கேட்க,

‘இன்னிக்கு எங்க தூக்கம் வரப்போகுது..’ என்று நினைத்தாலும், தலையை தலையை ஆட்டினாள்.

“ம்ம் சரி…” என்று அறையின் விளக்கினை அணைத்தவன், நைட் லேம்ப் போட்டுவிட்டு, படுக்க, அவளோ இன்னமும் நின்று கொண்டு தான் இருந்தாள்.

“ராதிகா…” என்றழைக்க,

“ம்ம்..” என்றவள், “நான் தூங்கிப்பேன்.. கொஞ்ச நேரம்..” என,

“ம்ம் சரி..” என்றவனும், எழுந்து போய் வெளியே மழையைப் பார்க்க, அடித்து ஊத்தியது மழை. அத்தனை எளிதாய் நிற்பது போலவும் அல்ல.

நிரஞ்சனன் அங்கே நின்று பார்க்க, அவனுக்கு அவனையும் அறியாது அவர்களின் முதல் கூடல் நினைவு வந்தது. அதுவும் கூட இப்படியானதொரு மழை நாளில் தான்.

இவர்களின் திருமணம் முடிந்து, முதல் நான்கு நாட்கள் இருவரும் பேசியபடியும், விருந்து அலைச்சல், கோவில் வேண்டுதல், அது இதென்று உறக்கத்தில் தான் இருந்தார்கள். நிரஞ்சனனும் கூட அவள் சற்று பழகட்டும் என்று இருக்க, அன்றொரு தான் சரியான மழை.

ராதிகா சும்மா அல்லாது மழையில் நனைந்து விட்டுவர, “என்ன நீ இப்படி..” என்றவன், டவல் கொண்டு அவள் தலை துவட்ட, அடுத்து அடுத்து நடந்ததெல்லாம் இப்போது நிரஞ்சனன் மனதினுள் ஓடியது.

திரும்பிப் பார்த்தான், ராதிகா படுத்திருப்பது தெரிந்தது. அவள் உறங்கட்டும் என்று காத்திருந்தானோ என்னவோ, ஆனால் இப்போது அங்கே போனால் என்று மனது போகும் பாதை உணர்ந்தவன், “வேணாம்…” என்று எண்ணியே நின்றுகொண்டான்.

ராதிகா அதற்குள் இரண்டு முறை திரும்பிப் பார்த்திருந்தாள். அவள் மனதிலும் அந்த மழை நாளின் நியாபகம் தான். ஒரு தாக்கம் தான்.

தனிமை… அது தந்த எண்ணவோட்டங்கள்.. ஒருவருக்கு மற்றவர் மீதான ஈர்ப்பு.. இத்தனை வருடங்கள் கடந்து வந்திருந்த, மோகம்.. தாபம்.. எல்லாம் எல்லாமே இப்போது இவர்களின் முன் நிற்க, ராதிகா கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவளிடம் அசைவு தெரியவில்லை என்றதும் தான் நிரஞ்சனன் வந்து படுத்தான்.

நான்கு பேர் படுத்துறங்கும் அளவிற்கு பெரிய கட்டில் தான். தள்ளித்தான் படுத்திருந்தாலும், ஒருவரின் அசைவு இன்னொருவர் உணர்வதாய் இருக்க,  இவன் படுத்ததுமே ராதிகா மௌனமாக கூட இருந்திருக்கலாம்.

சரி பேசிக்கொண்டு இருந்தால் தூக்கமும் வந்துவிடும் என்றெண்ணி “இப்படி மழை பேயுது..” என்றாள்,

“ஹேய்..!! நீ தூங்கலையா..” என்று நிரஞ்சனன் சாதாரணமாய் திரும்பிப் படுத்துக்கொள்ள, இருவருமே அருகருகே வந்திருந்தனர்.

“ம்ம்ஹும் தூக்கம் வரலை..”

“ஏன்…”

“தெரியலை..”

“ம்ம்.. எனக்கும் தூக்கம் வர்றதுபோல தெரியலை..” என, “ம்ம்..” என்றாள் ராதிகா.

அடுத்தது என்ன..?!!

பேசவேண்டும் போலிருக்க, எதுவும் தோன்றவில்லை.. உறக்கமும் வருவதாய் காணோம்..

“ஏதாவது சொல்லு ராதிகா…” என்றான் மேலும் அவளிடம் நெருங்கிப் படுத்து, அவனின் தேகம் உணரவுமே, ராதிகாவிற்கு மனம் குளிர ஆரம்பித்துவிட்டது.

“நான் என்ன சொல்ல..??” என்று கேட்டவளுக்கோ சத்தமே வரவில்லை.

“ஏதாவது..” என்றவன், மெதுவாய் அவளின் விரல் நகம் பிடித்து பார்த்துக்கொண்டு இருக்க,

“ஏதாவது கேளுங்க சொல்றேன்..” என்றவளின் குரல் மேலும் இறங்கியது.

“என்ன வாய்ஸ் இப்படி ஆகுது… பீவர் எதுவுமா..” என்றவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்திருக்கலாம்.. கழுத்தினில் கை வைத்துப் பார்க்க, ஜில்லென்று இருந்தது.

ஆனால் அந்த ஜில்லிப்பில் நிரஞ்சனன் கரம் தான் சூடாக, “என்ன ராதிகா…” என்றான் அவளின் முகத்தினையே பார்த்து.

அவளிடம் எவ்வித அசைவும் இல்லை. பார்வை எல்லாம் அவனின் முகத்தினில் தான்.. அவன் முகம் நெருங்க நெருங்க, தள்ளிப் படுக்கவோ, அவனைத் தவிர்க்கவோ எதுவும் எதுவுமே அவளுக்குத் தோன்றவில்லை.

ஒருபுறம் அவளின் கரமும், அவனின் தோளில் இருக்க,  “ராதிகா ஏதாவது பேசேன்…” என்று கேட்டவனின் இதழ்களோ அவளின் கன்னம் உரச,

“என்ன பேச…??!!” என்று கேட்டவளின் மறுகரமும், அவன்மீது இருக்க,

“ஏதாவது…” என்று தன் முகத்தினை அவள் கன்னத்தில், கழுத்தில் என்று வைத்து நிரஞ்சனன் அழுத்த, ராதிகா விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.

“அன்னிக்கு கூட இப்படித்தானே ராதிகா மழை அடிச்சது..” என, அவளுள் ஒரு சிலிர்ப்பு ஓடியது. அதுவும் அவன் உணரும் விதமாய்.

இவன் என் கணவன்..  இவள் என் மனைவி..

இது மட்டுமே அவர்களுள்..

நாங்கள் ஒன்றாய் இருந்தாலும் இல்லையென்றாலும் எப்போதுமே இதுதான்.. இதுமட்டும் தான் எங்களுள். அப்படியிருக்க எங்களின் உறவு என்பது எங்களுக்கு மட்டுமே சொந்தமானது..

“என்னைப்  பாரு ராதிகா…” என்றான் நிரஞ்சனன்..

இது எப்போதும் அவன் சொல்வது.. இப்படியான தருணங்களில், ராதிகா கண் மூடி லயித்திருக்க, அப்போதெல்லாம் அவன் சொல்வது இதுதான் “என்னைப் பாரு ராதிகா..” என்று.  

அவளோ “ம்ம்ஹும்…” என்று எப்போதும் போல் இப்போதும் சிணுங்க,

“என்னைப் பாரு டி..” என்றவனின், பேச்சும், செயலும் அடுத்த நிலைக்குச் செல்ல, ஒருநிலைக்கு மேலே அவளால் அவனை காணாது இருக்க முடியவில்லை.

அவள் கழுத்தில் இருந்த தாலி அவனின் கன்னம் அழுத்த, அந்த அழுத்தம் தாண்டி, இன்னும் இன்னும் என்று அவன் முன்னேற,  

கண்கள் திறக்கவில்லை எனில் இனியும் இவன் என்ன செய்வானோ..??!!

அப்படிதான் ஆகிப்போனது.

இத்தனை வருடங்கள் கழித்து என்பதாலா..??

முன்னிருந்தை விட இப்போது புரிதல் அதிகம் என்பதாலா..??   

இல்லை இன்னும் என்ன என்ன காரணங்கள் சொல்லலாம்..??

ஆசையாகி.. ஆவலாகி.. தீவிரமாகி பின் அதிதீவிரமாகியது இருவரின் தேடல்களும்.

முழுக்க முழுக்க அவர்களின் உலகத்தில் சஞ்சரிக்க, அங்கே ஒலித்துக்கொண்டு இருந்தது எல்லாம்

“ராதிகா..”

“ராதி…”

“ராதிம்மா…” என்ற அவனின் அழைப்புகள் தான்.

ஒவ்வொன்றும் ஒரு விதம்.. ஒரு ஒரு பாவனை.. ஒரு ஒரு அழுத்தம்.. அவை ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் அவள் உணர்வாள். அவன் உணரச் செய்துகொண்டு இருந்தான்..

அவனின் இந்த ஒவ்வொரு அழைப்பிற்கும், அவள் முகம் காட்டும் பாவனைகளும் வேறு.. பதிகளும் வேறு.. அது அவன் மட்டுமே அறிவான்.. புரிவான்.. பூரிப்பான்..

மனதில் மிச்சம் மீதி என்று எங்கோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டு இருந்த தயக்கம், பயம் எல்லாம் கூட இப்போது காணாது போகியிருந்தது. இருவருக்குமே.

கணவன் மனைவி உறவில், பரிபூரணத்துவம் என்பது  இப்படியும் ஒரு சிருங்காரத்தில் தான் முழுமையடையுமோ..??!!  

Advertisement