Advertisement

அத்தியாயம் – 24

“இப்போவாது வாயை தொறந்து பேசேன்டி..” என்று கடிந்துகொண்டு இருந்தார் ராணி மகளிடம்.

மணிவண்ணனோ “ராணி…” என,

“அட எப்போ பாரு என்னையே சொல்லாதீங்க.. இவ்வாளோ தூரம் வந்தாச்சு.. பத்திரிக்கைல பேர் போட்டிருக்காங்க.. ஆனா இவ ஒருவார்த்தை நம்மக்கிட்ட சொன்னாளா. நம்ம என்ன வேணாம்னா சொல்லிட போறோம்.. நல்லது நடந்தா சரின்னு தானே இருக்கோம்..” என்று ராணி தாங்கலாய் பேச,

ராதிகாவிற்கு நிரஞ்சனன் மீதுதான் கோபம் கோபமாய் வந்தது.

‘லாஸ்ட்ல என்னை மாட்டிவிட்டு நல்லபேர் வாங்கியாச்சு..’ என்று நினைத்தவள் ‘வரட்டும்..’ என்று எண்ணிக்கொண்டாள்.

அத்துவை விட வருவான் தானே.. அப்போது பேசவேண்டும் என்று இருக்க, அதற்குள் ராணி ஆரம்பித்துவிட்டார்.

“பதில் பேசு ராதிகா.. மாப்பிள்ளை எங்கட்ட கேட்டார்.. ஆனா நீ சொல்லிருக்கனுமா இல்லையா..” என,

“ம்மா.. எனக்கே பேர் போடுவாங்கன்னு தெரியாதும்மா.. அங்க இருக்கப்போ போட்டோ அனுப்பினார்..” என்று இவளும் சொல்ல,

“அங்க இருக்கப்போ நீ எங்களோட பேசவேயில்லையா..” என்றார் அதற்கும் பதிலாய்.

“இதெல்லாம் போன்ல பேசறது இல்லையேம்மா..” என்றவளுக்கு கண்களில் நீர் கூட முட்டிவிட்டது.

தவறு செய்துவிட்டோமோ, அப்பா அம்மாவிடம் கேட்டு கலந்தாலோசித்து முடிவு செய்யாமால், தானாய் ஒரு போக்கில் சென்றுவிட்டோமோ என்று தோன்ற, ராணி அவளின் முகத்தினைப் பார்த்தவர்

“நீ தப்பு பண்ணிட்டன்னு நான் சொல்லலை ராதிகா.. நீ இப்போ எடுத்திருக்க முடிவு எங்க எல்லாருக்குமே ரொம்ப சந்தோசம் தான்..” என,

மணிவண்ணனும் “ராதிகா.. முன்ன விட இப்போ உனக்கு இன்னமும் மெச்சூரிட்டி வந்திருக்கும்.. லைப் பத்தின கண்ணோட்டம் மாறியிருக்கும்.. நடந்ததுல தப்பு உன்மேல இல்லைன்னோ, எல்லாம் தப்பும் உன்மேல தான்னோ யாரும் நினைக்கல..  ஆனா இப்போ இந்த முடிவுக்கு வந்திட்டு இனியொரு தரம் தப்பா எதுவும் நடந்திடாம பார்த்துக்கணும்..” என,

“ம்ம் ப்பா…” என்றாள் அவளும்.

நிஜம் அதுதானே.. பிரிவு நேர்ந்தபிறகு இணைவது என்பது கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போல்தானே.

அது ராதிகாவிற்கும் புரிந்தே இருந்தது.

மகனுக்காகவா என்று யோசித்துப் பார்த்தால், அதையும் தாண்டி நிரஞ்சனனை பிடித்திருந்தது. இனி வேறாரும் என் வாழ்வில் இல்லை எனும் அளவிற்கு அவனைப் பிடித்திருக்கிறது. இன்னொரு முறை முயன்றால் என்ன என்று திடமாகவே தொன்றியும்விட்டது. இத்தனை தூரம் வந்தாகியும் போனது.

இதற்குமேல் இனி வாழ்ந்து தான் பார்த்திடவேண்டும்.

நிரஞ்சனன் வீட்டில் இருந்து அன்றைய காலையில் தான் பத்திரிக்கை வைத்துவிட்டு சென்று இருந்தனர்.

மணிவண்ணன் நிரஞ்சனனிடம் சொல்லியேவிட்டார் “ப்ரீ ஆகிட்டு சொல்லுங்க.. கொஞ்சம் பேசணும்..” என்று,

அவனும் “நைட் அத்து விட வர்றப்போ பேசலாம்..” என்றுவிட்டான்.

இதற்கு இடையில் மகளின் மனதில் என்ன என்று கேட்டிட வேண்டும் தானே.

ராதிகாவிற்கோ, ஒருவேளை நிரஞ்சனன் நித்யாவின் திருமணம் முடியட்டும் என்று பார்க்கிறானோ என்று தோன்றியது. இருக்கும் வேலையில், இவர்களின் பேச்சு, பின் லீகல் வேலைகள் என்று மேலும் அலைச்சல் என்றே எண்ணினாள். முதலில் நிரஞ்சனன் அப்படித்தான் நினைத்தான்.

ஆனால் எப்போது ராதிகா, கன்னிகாதானம் செய்வது பற்றி முடிவிற்கு வந்தாளோ, அப்போதே பத்திரிக்கையில் பேர் போடுவது என்று அவனும் வந்துவிட்டான்.

பின்னே சொந்தங்கள் நிறைய பேருக்குத் தெரியும் இவர்களின் விஷயம். மாப்பிள்ளை வீட்டில் கூட முன்னம் சொல்லித்தானே இருந்தார்கள். இப்போது பத்திரிக்கையில் பேர் போடாமல், திருமணத்தன்று இருவரும் ஜோடியாய் நின்றால், நிச்சயம் அதுபற்றி பேச்சு வரும்.  

அரவிந்தின் அம்மா கூட சொன்னார்தானே “எதுவா இருந்தாலும் ஒரு முடிவுல சொல்லுங்க.. எங்க பக்கத்து சொந்தங்க கேட்கிறதுக்கும் நாங்க பதில் சொல்லணும்..” என்று.

அதனால் தான் நிரஞ்சனன் அப்படி செய்தான்.

அதன் பின்னம் தானே இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தும் கூட.

என்ன, ராதிகாவின் பெயரை போடவேண்டும் என்று மணிவண்ணனிடம் கேட்டிருந்தான் நிரஞ்சனன். அவர்களுக்குள் ஆயிரம் இருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை கொடுக்கத் தானே வேண்டும்.

அத்தனை ஏன் ராதிகா கூட சுந்தரியிடம் தனியே கேட்டாள், “என் பேர் போட்டதுக்கு அவங்க வீட்ல இருந்து ஒன்னும் சொல்லலையா..” என்று.

“அவங்க சொல்ல என்ன இருக்கு ராதிகா..” என,

“இல்லத்தை அன்னிக்கு அவங்க சொன்னாங்க தானே..” என்று, அந்த பெண் விஷயம் சொல்ல,

‘கேட்டிருக்கிறாளா…??!!’ என்று இருந்தது சுந்தரிக்கு.

“அவங்க கேட்டாங்க ராதிகா.. நிரஞ்சனன் எப்பவுமே இதுக்கு சம்மதிக்க மாட்டான் தெரியும். அவன் என்கிட்டே சொன்னது ஒன்னே ஒண்ணுதான்.. எனக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி பையன் எல்லாம் இருக்காங்க. அவங்க தான் கடைசி வரைக்கும்னு சொல்லிட்டான்..” என, ராதிகாவிற்கு மழுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.

இப்போது கூட அதை எண்ணுகையில் நெஞ்சு நிறைந்தது தான்.

இதெல்லாம் நினைத்துதான், நித்யா கல்யாணம் நெருங்குகையில் தானும் மேலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று அமைதியாய் இருந்தால், இவன் நல்ல பிள்ளை போல அப்பாவிடம் கேட்டிருக்கிறான் என்றதும் கோபம் வந்துவிட்டது.                       

“ம்மா நாங்களே இன்னமும் ஒன்னும் இதை பேசல..” என்று ராதிகா சொல்ல,

“சரி.. அதுக்கு முன்னாடியே உன் மனசு மாறிடுச்சு தானே.. மத்தவங்களை விடு.. என்கிட்டே கூட உனக்கு சொல்லனும்னு தோணலையா..” என்ற ராணிக்கு ஆற்றாமை தான்.

அன்றும் அப்படித்தான் செய்தாள். இன்றும் அப்படித்தான். முடிவு எடுப்பதற்கு முன்னும் பின்னும் யாரிடமும் கேட்கவில்லை. அந்த மன தாங்கள் தான் அவருக்கு..

“ம்மா என்னம்மா…” என்று அவரை ராதிகா கட்டிக்கொள்ள, “போ டி.. என் பொண்ணுக்கு எதோ இப்போதான் நல்ல புத்தி வந்திருக்குன்னு நினைச்சேன்…” என,

“ம்மா இதெல்லாம் டூ மச் ம்மா..” என்றாள் வந்த சிரிப்பினை அடக்கி.

அதே நேரம் வெளியே நிரஞ்சனன் கார் சத்தம் கேட்க, பட்டென்று முகத்தினை மாற்றிக்கொண்டவள் “நான் ரூமுக்கு போறேன்..” என்று சொல்லியபடி நடந்து போக,

“ஏய் ராதிகா..” என்று ராணி அதட்டுவது காதில் விழுந்தாலும் விழாதது போல் இருந்துகொண்டாள்.

எப்படியும் அவன் வருவான் என்று மனம் எதிர்பார்த்தது. ஆசைக்கொண்டது என்றும் சொல்லலாம்.

நிரஞ்சனன் மகனைத் தூக்கிக்கொண்டு இறங்குகையில், மாமனார் மாமியார் மட்டும் வாசலில் நிற்க ‘இவ எங்க..’ என்றுதான் பார்த்தான்.

அத்து வீட்டினுள் வரவுமே இறங்கி  “ம்மா..” என்று கத்தியபடி ஓடிவிட, “ராதிகா எங்க..” என்று நேரடியாகவே கேட்க,

“பேசிட்டு இருந்தா.. நீங்க வரவும் உள்ள ஓடிட்டா..” என்றார் மணிவண்ணன்.

“நீங்க எதுவும் சொன்னீங்களா..” என்று இருவரையும் பார்த்து நிரஞ்சனன் கேட்க,

“கேட்காம இருக்க முடியுமா..” என்றார் ராணி.

‘சரிதான்.. இப்போ மொத்த கோபமும் என்மேல திரும்பிருக்குமே..’ என்றெண்ணியவன், “நான்.. நான் போயி பேசலாமா..??” என்றான்.

மணிவண்ணன் “பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாங்க..” என, பதிலுக்கு ஒரு புன்னகையை கொடுத்து ராதிகாவின் அறையினுள் சென்றான்.

பல வருடங்கள் கழித்து இன்றுதான் அங்கே செல்கிறான். இப்போதெல்லாம் அடிக்கடி ராதிகாவின் அப்பா வீட்டிற்கு சென்றுவந்தாலும், அவளின் அறைக்குள் இன்றுதான். அதுவும் அவளாக அழைத்து அல்ல.

அத்து ஹாலுக்கும், ரூமுக்கும் ஓடிக்கொண்டு இருக்க, ராதிகா வேண்டுமென்றே குப்புறப் படுத்துக்கொண்டாள். வந்தான் என்றால் தூங்குகிறாள் என்று போகட்டும் என்று. அதிலும் அத்துவிடம் வேறு “அம்மா தூங்குறாங்க சொல்லிடு..” என்று வேறு சொல்லியிருக்க,

நிரஞ்சனன் கேளாமலேயே “அம்மா ஜோ ஜோ ப்பா..” என, அவனுக்கு புரிந்து போனது மனைவி ஆட்டம் காட்டுகிறாள் என்று.

“சரி நீ போய் பாட்டிக்கிட்ட கதை கேளு..” என்று மகனை அனுப்பியவன், அறைக்குள் வர, அரவம் கேட்டு, ராதிகாவின் உடலில் தன்னப்போல் ஒரு திடுக்கிடல் வரத்தான் செய்தது.   

கதவின் அருகே உள்பக்கம் நின்றவன் “ராதிகா..” என்றழைக்க, இவள் பதிலே சொல்லவில்லை.

நின்று ஒருநொடி பார்த்தவனோ, அவளின் அருகே வந்து “உன்ன எப்படி எழுப்பணும்னு எனக்குத் தெரியும்.. நீயா எழுந்துட்டா பெட்டர்…” என,

‘அப்படி என்ன செஞ்சிடுவாங்கலாம்…’ என்று ராதிகா நினைத்தாலும், ‘என்ன செய்வானோ..??’ என்று படபடக்கவும் செய்தது.

“ராதிகா…” என்று நிரஞ்சனன் மீண்டும் அழைக்க, அவள் திரும்பலாம் என்று நினைக்கும் வேளையில்,

‘ம்ம்ஹும் இது வேலைக்கு ஆகாது..’ என்று எண்ணி, ஏற்கனவே குப்புறப் படுத்திருந்ததில் அவளின் நைட்டி சற்றே காலில் மேலேறியிருக்க, சரியாய் அங்கே தான் கை வைத்தான்.

அதிகப்படியோ என்று தோன்றினாலும், நீ இவ்வளோ பிடிவாதம் செய்தால் பின் நான் அப்படித்தான் செய்வேன் என்று அவளின் நைட்டியில் கை வைத்தவன் “இப்போ நீ எழல, உன் நைட்டி தான் ஏறும்..” என, பட்டென்று எழுந்து அமர்ந்தவளுக்கு படபடப்பு குறையவேயில்லை.

இப்போதெல்லாம் தினம் தினம் பார்க்கிறார்கள் பேசுகிறார்கள் தானே. இலைமறை காயாக அவ்வப்போது ஏதாவது இப்படியான பேச்சுக்கள் வருவதுண்டு தான். இருந்தாலும் தொடுதல் என்பது வேறு அல்லவா.

அவளின் இதழ்களும், இமைகளும் படபடக்க, அவனை முறைக்க முயன்றுகொண்டு இருந்தாள்.

“ம்ம் அப்படி வா வழிக்கு…” என்றவன், அவளின் அருகேயே கட்டிலில் அமர, சட்டென்று அவளின் பார்வை வெளியே சென்று வந்தது.

“அத்து, உங்கம்மாவோட இருக்கான்..” என,

“என்னோட பேசணும்னு எங்கப்பாக்கிட்ட கேட்டிட்டு வந்திருப்பீங்களே..” என்றாள் பட்டென்று.

அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. இதென்ன சின்ன பிள்ளைப் போல் இப்படி என்று. அடிக்கடி ராதிகா இப்போது இப்படித்தான். அது அவனுக்கும் பிடித்தேயிருக்க,

“இது அவர் வீடு.. அப்போ கேட்டிட்டுத்தான் வரணும்.. நம்ம வீடுன்னா நம்ம என்னவேனா செய்யலாம்..” என,

“ம்ம்ஹும்.. செஞ்சிட்டுத்தான் மறுவேலை..” என்றாள் முணுமுணுப்பாய்.

“எதுவா இருந்தாலும் சத்தமா சொல்லு ராதிகா..” என,

“ஒண்ணுமில்ல..” என்றாள் உர்ரென்று.

“ம்ம்ச் ராதிகா.. நான் சுத்தி வளைச்சு எல்லாம் பேசலை.. நேராவே கேட்கிறேன்.. நீ, அத்து என்னோட நம்ம வீட்டுக்கு எப்போ வர்றீங்க..??” என அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவன் கேட்க,

“விடுங்க.. விடுங்க கையை..” என்றாள் மேலும் கோபமாய்.

“ஏய்.. என்ன ராதிகா…” என்று நிரஞ்சனன் திகைத்துப் பார்க்க, அவன் கைகளை விட்டதும், அவனின் புஜத்திலேயே அடித்தவள் “இத்தனை நேரமா.. இல்ல இத்தனை நாளா இதை கேட்க.. நாள் கூட இல்லை வருஷம்… இத்தனை வருஷம் ஆச்சுல்ல உங்களுக்கு இந்த கேள்வி கேட்க…” என, அசந்து போனான் நிரஞ்சனன்.

அதனை சொல்கையில் அவளுக்கு கண்களில் நீர் கட்டிவிட,

“ஷ்..!! ராதிகா என்ன இது.. நல்ல விஷயம் பேசுறப்போ இப்படியெல்லாம் அழக்கூடாது..” என்றவன், அவளின் கன்னம் பற்றி, கண்ணீரைத் துடைக்க, அவனின் கரத்தினை இறுகப் பற்றிக்கொண்டாள்.

“பின்ன.. அழாம.. வேற என்ன செய்ய.. நான்.. நான் அப்.. அப்போயிருந்த டென்சன்ல புரியாம டைவர்ஸ் கேட்டா, உங்களுக்கு எங்க போச்சு புத்தி.. இந்தா வச்சுக்கோன்னு கொடுத்துட்டீங்க…” என்று இப்போதுதான் ராதிகா முதலில் இருந்து ஆரம்பிக்கத் தொடங்கினாள்.

நிரஞ்சன் இதனை ஒருவகையில் எதிர்பார்த்து தான் இருந்தான். பேசட்டும் எல்லாம் பேசட்டும்.. அவள் மனதில் இருந்தது இருப்பது எல்லாம் வெளிவரட்டும். எதுவாகினும் சரி, இனி வாழப் போவது தாங்கள் தான் அதில் மற்றும் எந்த மாற்றமும் இல்லை என்ற முடிவில் தான் அவனும் இங்கே வந்தான்.

“என்ன அமைதியா இருக்கீங்க..” என்று அவனின் முகம் பார்க்க,

“ஐம் சோ சாரி ராதிகா…” என்றான் குரல் கமறி.

அவனுக்குமே கண்கள் கலங்கியதோ என்னவோ, “நிஜமா ஐம் சோ சாரி..” என்றவன், அவளின் இரண்டு கரத்தினையும் ஒன்றாய் பற்றி தன் நெஞ்சில் அழுத்திக்கொள்ள ராதிகா அமைதியாகவே இருந்தாள்.

“உ.. உனக்கு அவ்வளோ ஸ்ட்ரெஸ் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை ராதிகா..” என்கையில் நிரஞ்சனன் உடைந்தே போனான்.

நெஞ்சில் பதித்திருந்த கரத்தினை, அவனின் முகத்தினில் வைத்து அழுதிக்கொள்ள, அவள் கைகளில் ஈரம் உணர்ந்தாள்.

“ஏங்க… என்ன இது..” என்று பதற,

“நான்.. நான் கொஞ்சம் உன்னோட ப்ரீயா பேசணும்.. வெளிய போலாமா..” என,

“வெ… வெளிய…” என்று யோசித்தவள் “மாடிக்கு போலாமா..” என்று கேட்க,

“ம்ம்..” என்றான்.

“இருங்க வர்றேன்..” என்றவள், அம்மாவிடம் போய் அத்துவையும் உறங்க வைக்கச் சொல்லிவிட்டு, மொட்டை மாடி கேட் சாவி எடுத்துக்கொண்டு வந்தாள். இருவரும் மேலேறி செல்ல, ஜில்லென்று தான் இருந்தது கிளைமேட்.

பேசவேண்டும் என்று வந்துவிட்டாலும், அந்த சூழலில் சிறிது நேரம் இருவரும் மௌனமாய் தான் இருந்தனர் இருவரும். நேரமாகிக்கொண்டு இருப்பது புரிய,

நிரஞ்சனன் தான் “எனக்கு சிலது எல்லாம் புரியவேயில்லை ராதிகா.. அப்.. அப்போ எனக்கு மைன்ட்ல இருந்தது எல்லாம், அப்பாவோட ஹெல்த்.. அதனால வீட்ல அமைதியான சுமுகமான சூழ்நிலை இருக்கணும். அதைதான் யோசிச்சேன்.. சொல்லப்போனா அப்போவோட ஹெல்த் கண்டிசனால தான் நம்மளோட கல்யாணமே அவ்வளோ வேகமா நடந்தது…” என,

“இதெல்லாம் எனக்கு நானே யோசிச்சு புரிஞ்சுக்கிட்டேன்..” என்றாள் ராதிகா ஒரு மென்னகையோடு.

“ம்ம் அப்.. அப்பாவோட டெத் யாருமே எதிர்பார்க்காத ஒன்னு.. அவர் இறப்பு பத்தி மட்டுமே அப்போ எல்லாம் யோசிச்சோமே, அத்துவோட பர்த் பத்தி யோசிக்கல.. டெலிவரி ஆகி நீ அங்க இருந்தப்போ உன்னோட கஷ்டம் என்னன்னு நான் யோசிக்கவேயில்லை..

நம்ம வீட்ல என்ன குறை.. எல்லாமே இருக்கு.. பிரச்னைக்குரிய ஆளுங்களும் கூட இல்லை. பின்ன ஏன் இவ எல்லாத்தையும் இப்படி எடுதுக்கிறா அப்படின்னு தான் தோணிச்சு..  அ.. ஆனா.. நீ.. நீ டேப்ளட்ஸ் போட்டு..” என்று சொல்லிக்கொண்டே வந்தவன்,

அதற்குமேல் முடியாதவனாய் “ஓ..!! மை காட்..” என்று அவனின் தலையில் பட்டென்று அடித்துக்கொண்டான்

“ஷ்..!! என்னங்க..” என்று ராதிகா அவனின் கரம் பிடிக்க,

“சத்தியமா.. அப்போ நான் என்ன பீல் பண்ணேன் எனக்கே தெரியலை.. ஏற்கனவே ஒரு உயிர் போயிடுச்சு.. அடுத்து நீ.. நீயும் அப்படி பண்ணவும்.. எனக்கு அப். அப்போ உன்னோட உக்காந்து பேசக் கூட தோணலை.. நீ கேட்டது கொடுத்திட்டா நீ உயிரோட இருப்ப.. அது மட்டும் தான் என்னோட எண்ணம் அப்போ..” என,

“ம்ம்..” என்றவளுக்குமே மனம் சுணங்கியது.

அவர்களுக்கு அப்போது என்னமாதிரி வேதனை இருந்திருக்கும். அதில் தானும் அப்படி செய்திருக்க, எல்லாரும் எப்படி துடித்திருப்பார்கள் என்று யோசித்தவள், “நா.. நான்.. வேணும்னே பண்ணல…” என்றாள் இறங்கிய குரலில்.

ஆம்..!! அவள் வேண்டும் என்றெல்லாம் மாத்திரை விழுங்கவில்லை தானே. அவளுக்கே அவள் அந்த நேரத்தில் என்ன செய்தாள் என்று தெரியாது. உறங்கவேண்டும் என்ற எண்ணம். ஆழ்ந்த உறக்கம் வேண்டும் என்ற எண்ணம். அதனால் தான் ஒரு மாத்திரை போட்டாள். பின் எத்தனை போட்டாள் என்பது அவளுக்கே வெளிச்சம்.

ராதிகாவிற்கு இதனை சொல்வதற்குள் மிக மிக வேதனையாகிப் போனது..

“தெரியும்… அதான் சொல்றேன்.. நீ என்ன பண்றன்னு தெரியாத அளவுக்கு உனக்கு ஸ்ட்ரெஸ்.. அதுக்கு ரீசன் நான்…” என்றவன் “அப்.. அப்போ நீ கண் முழிச்சதும், உன்னை அவ்வளோ டைட்டா ஹக் பண்ணனும் போல இருந்தது எனக்கு..” என்றான் கரகர குரலில்.

“ம்ம்ம்..” என்றவளும் உணர்வுகளின் பிடியில் இருக்க,

“என்மேல அழுத்தமா சாஞ்சிக்கோ ராதிகா..” என்றவன், அவள் சாயுமுன்னே அவனே தன்மீது அவளை சாய்த்துகொள்ள,

“நீங்க இப்படியெல்லாம் முன்னமே பண்ணிருக்கலாம்..” என்றாள் தாங்கலாய்.

“ம்ம்ம்.. நான் தான் முட்டாள் ராதிகா…” என, “அப்படியெல்லாம் இல்லைங்க..” என்றாள் அவனை சமாதானம் செய்யும் பொருட்டு.

அவன் வந்து தன்னை சமாதானம் செய்யவேண்டும் என்று இருந்தவள், இப்போது எல்லாம் தலைகீழாய் மாறிப்போய் அவனை சமாதானம் செய்ய,

“நீ என்ன சொல்லு ராதிகா.. நான் உன்னோட பாயின்ட் ஆப் வியூல யோசிச்சு இருக்கணும்.. நிறைய நிறைய நான் ஹர்ட் பண்ணிருக்கேன்.. நீயும் ஒவ்வொரு டைமும் இறங்கி தான் வந்த.. பட் நான் தான்..” என்று அவன் பேசிக்கொண்டே போனான்.

அதிலும் கடைசியாய் ‘இதுதான் சாக்குன்னு..’ என்று அவன் சொன்னது எல்லாம் இப்போது அவனுக்கு வாய் வார்த்தையாய் கூட சொல்லிட முடியவில்லை.

“ம்ம் அந்த மொமன்ட் எல்லாம் கடந்து போயிடுச்சுங்க…” என்றவளின் குரலிலுமே ஒரு நடுக்கம்.

“கடந்து போச்சுத்தான்.. ஆனா அதோட வடு அப்படியேதானே இருக்கு..” என்றவன் “ராதிகா… எ.. எனக்கு சொல்லத் தெரியலை.. ஆனா என்னால இன்னொரு கல்யாணம் வாழ்க்கை எல்லாம் நினைக்கக் கூட முடியலை. எத்தனை பேர் கேட்டிருப்பாங்க சொல்லிருப்பாங்கத் தெரியுமா.. சரியோ தப்போ ஒருத்தியோட வாழ்ந்திட்டோம்.. அவளோட இடம் வேற யாருக்கும் இல்லை.. அப்படிதான் நினைப்பேன்..” என்றதும், ராதிகாவிற்கு இதற்குமேல் வேறென்ன வார்த்தைகள் வேண்டும்..??!!

இதைவிட அவன் வேறு என்ன சொல்ல முடியும்…

அவள் எண்ணிய அதே விஷயம், இன்று அவனின் வார்த்தைகளாய் கேட்கையில் உள்ளம் பூரித்தது. அவனின் முகத்தினையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

மேற்கொண்டு நிரஞ்சனன் எதுவோ சொல்லவர “போதும்..” என்று அவன் வாய் மூடியவள்,

“பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. எல்லாம் போகட்டும்… இனியென்ன அதை பேசலாமே..” என்றாள்.

“இல்ல.. நான் சிலது சொல்லணும்..” என்று நிரஞ்சனன் பிடிவாதமாய் சொல்ல,

“ம்ம்.. அப்போ அத்தைக்கு சொல்லிடுங்க.. வர லேட்டாகும்னு…” என, சுந்தரிக்கு அழைத்தவன் அவள் சொன்னதுபோலே சொல்லிவிட்டு வைக்க,

“ம்ம் சொல்லுங்க..” என்றாள் ராதிகாவும்.

“இப்படி உக்காந்துக்கலாமா..” என்றபடியே, நிரஞ்சனன் அங்கேயே சுவரில் சாய்ந்து அமர்ந்துகொள்ள, ராதிகாவும் அவனை ஒட்டியே அமரப்போக,

“என் மடியில படுத்துக்கிறியா நீ…” என்றான்.

ராதிகா திகைத்துப் பார்க்க, “இதுவரைக்கும் அப்படியெல்லாம் உன்னை நான் படுக்க வச்சது இல்லைதானே.. ஆனா அன்னிக்கு நீ அத்துவோட மடியில தலை வச்சப்போ எனக்கு ஆசையா இருந்தது..” என, ராதிகாவின் கண்களிலும் கண்ணீர்.

ராதிகா அவனின் மடியில் சாய்ந்தவள் “என்மேல கோபமே இல்லையா…” என,    

“இருந்தது. முன்ன எல்லாம் உன்மேலயும் கோபம் வரும்.. அத்து அங்க மன்த்லி ஒன்ஸ் மட்டும் வந்து போறப்போ எல்லாம்.. உன்மேல அவ்வளோ கோபம் வரும்.. ஆனா நித்யா கல்யாணம் முடிவாகவும் தான் எனக்கே சிலது எல்லாம் புரிய ஆரம்பிச்சது ராதிகா..” என,

“தெரியும்..!!” என்றாள்.

“எப்.. எப்படி…”

“உங்கக்கிட்ட அதுக்கப்புறம் தான் நிறைய சேஞ்சஸ்.. முன்ன எல்லாம் என்னை பார்க்கக் கூட மாட்டீங்க.. அ.. அன்னிக்கு மாமாவோட திதிக்கு வந்தப்போவே தெரிஞ்சது நீங்க எதோ மாறியிருக்கீங்கன்னு..”

“ம்ம் எஸ்.. அம்மாக்கூட சொல்வாங்க.. கல்யாணம்னா சும்மா இல்லை.. ஒரு பொண்ணு மனசுல நிறைய மாறுதல்கள் வரும்னு.. அவங்க நித்யாக்கு தான் சொல்லிட்டு இருப்பாங்க.. ஆனா அப்போதான் நான் உன்னை பத்தி யோசிச்சேன்.. நித்யாக்கு எப்படி இருக்குமோ அப்படித்தானே உனக்கும்னு..”

“ம்ம்ம்..”

“அன்னிக்கு நீ கேட்டியே.. நீங்க ஏன் இப்படியெல்லாம் இல்லைன்னு.. என்கிட்டே பதிலே இல்லை.. பொறுப்பா இருக்கணும், கடமையை சரியா செய்யணும், வேலை சரியா பண்ணனும், வீட்ல எல்லாமே சுமுகமா இருக்கணும்னு நினைச்சேனே தவற, நம்மகூட வாழ்றவ சந்தோசமா இருக்காளான்னு நினைக்கல நான்..” என்றவனின் பிடி இறுக,

“ம்ம்ம் இப்போ இதெல்லாம் பேசணுமா..??!!” என்றாள் ராதிகா.

“வேற எப்போ பேச..??!!”

“பேசவே வேண்டாம்.. பழசு எல்லாம் நானும் பேசணும்னு நினைச்சுதான் இருந்தேன். சில விஷயங்கள் விளக்கம் சொல்லலாம். ஆனா நம்ம வாழ்ந்தது என்னன்னு நமக்குத் தெரியும்போது அதை நம்மக்கிட்டயே நம்ம விளக்கி பேசணுமா.. ” என,

“இப்படியெல்லாம் பேசுவியா நீ.. ” என்றான் ஆச்சர்யமாய்.

“வெளிய சொல்லிக்காதீங்க.. கல்யாணம் ஆகி ஒரு குழந்தை கூட இருக்குன்னு..” என்று ராதிகா கிண்டலாய் பேச, அவனின் கரம் அவளின் மீது தான் பட்டுக்கொண்டு இருந்தது.

அதை இருவரும் உணரவில்லை என்பது வேறு விஷயம்..

“ஹெலோ.. கல்யாணம் ஆகி.. பையன் பெத்து ஒரு டைவர்ஸ் வேற வாங்கி வச்சிருக்கேன்… தெரியுமா..” என்று நிரஞ்சனன் பெருமையாய் சொல்வது போல் சொல்ல,

“ஓ..!! உங்க மேரேஜ் லைப்கான  டிகிரியா டைவர்ஸ்.. இது எனக்குத் தெரியாதே…” என,

“நம்ம மேரேஜ்கான டிகிரி.. சொல்லப்போனா இந்த பிரிவு கூட ஒருவகையில நல்லதுதான் போல.. இல்லன்னா ஒரு உப்புசப்பு இல்லாத வாழ்க்கை தான் வாழ்ந்திருப்போமோ என்னவோ..” என்று நிரஞ்சனன் சொல்ல,

“ம்ம்ம்.. இது புரிய உங்களுக்கு இத்தனை வருஷம்..” என்றாள் எகத்தாளமாய்.

“தோடா..!! இவ்வளோ பேசற நீ.. லாஸ்ட் வர பிடிகொடுத்து பேசினியா.. என்னோவோ இன்னிக்கு நானா வரவும் தான் இவ்வளோ பேசின.. எல்லாம் நானா பார்த்து பார்த்து பண்ணது தான்..” என்று கெத்தாய் சொல்ல,

“யப்பா.. நீங்களே வச்சுக்கோங்கப்பா உங்க பட்டத்தை…” என்று கிண்டலாய் சிரித்தாள் ராதிகா.

Advertisement