Advertisement

அத்தியாயம் – 23

இதோ ராதிகா இந்தியா வந்துவிட்டாள். அவளை அழைக்கவென்று நிரஞ்சனன் நித்யா மற்றும் அத்து மூவரும் விமான நிலையம் வந்திருக்க, நேற்றே நிரஞ்சனன் அவளிடம் சொல்லிவிட்டான்

“வந்து நேரா நம்ம வீட்டுக்குத்தான்..” என்றிட

ராதிகாவிற்கு இவன் எந்த முறையில அழைக்கிறான் என்ற குழப்பம் வந்துவிட்டாது. அவளின் அப்பா அம்மா வருவதற்கு இன்னமும் இரண்டு தினங்கள் இருக்க, அவள் போய் தான் இனி வீட்டினை எல்லாம் சுத்தம் செய்திடவும் வேண்டும். அதைதான் அவனிடமும் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

இந்த வாரத்தில் இருவருக்கும் பேச்சு தங்குதடையில்லாது நிகழ்ந்து கொண்டு இருந்தது. அதிலும் சின்ன சின்ன சண்டைகள், சீண்டல்கள், சமாதானங்கள் என்று இன்னும் என்ன என்னவோ நடக்க, ஒருவர் மனதில் இருப்பது மற்றவருக்கு நன்கு புரிந்தாலும், அதைப்பற்றி வெளிப்படையாய் பேசிக்கொள்ளவில்லை.

நேரில் காணும்போது என்ற முடிவில் இருக்க, நிரஞ்சனன் ‘நம்ம வீட்டுக்கு..’ என்றதும்,

‘அப்பா அம்மா வர்ற வரைக்குமா.. இல்ல எப்போதைக்குமா..’ என்ற கேள்வி ராதிகாவினுள்.

பதிலே சொல்லாது அவனை அலைபேசி  திரையில் காண, “என்ன ராதிகா..” என்றான் நிரஞ்சனன்.

“இல்ல அங்க வீட்ல எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு.. அதான்..” என்று இழுக்க,

“அதுக்கென்ன மாமா அத்தை வர ரெண்டு நாள் இருக்கே.. நீ இங்க வந்து ரெஸ்ட் எடுப்பியாம்.. அப்புறம் போய் கிளீன் பண்ணிக்கலாம்..” என்று அவனும் சொல்ல,

“ம்ம்..” என்றாள் பொத்தாம் பொதுவாய்.

‘இங்கேயே இரேன்..’ என்று அழைத்திட மாட்டானா என்று தோன்றியது அவளுக்கு.

அவனோ ‘வாய் தொறந்து சொல்றாளா பாரேன்..’ என்று மனதினுள் கடிய, இதோ ராதிகாவே இங்கே வந்திட, அம்மாவினைக் கண்டதும் அத்துவிற்கு சந்தோசம் தாங்கவில்லை.

போகும்போது ஒரு பெட்டியோடு போனவள், திரும்பி வருகையில் இரண்டு பெட்டிகளோடு வர “என்ன அண்ணி ஹெவி பர்சேஸ் போல…” என்றாள் நித்யா கிண்டலாய்.

நிரஞ்சனன் எதுவும் பேசினான் இல்லை.

ஆனால் அவனின் பார்வை அவள் மீது படர்ந்தது. வாஞ்சையாய்.. கரிசனமாய்.. காதலாய்.. பின் ஆர்வமாகவும் ஆசையாகவும்..

அலைபேசி திரையினில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பேசிய போதெல்லாம் தோன்றாத ஒரு கூச்சம், ராதிகாவிற்கு இப்போது அவன் பேசாது பார்த்து நிற்கையில் தோன்ற, அவன்பக்கம் பார்வையை திருப்பவேயில்லை இவள்.

‘என்னதிது புதுசா பாக்குறது போல..’ என்று செல்லமாய் கடிந்தாலும், மனது இன்னும் இன்னும் என்று எதிர்பார்க்க,

“ம்மா ம்மா..” என்று அத்து அவளிடம் கதை பேசிக்கொண்டே வர, நிரஞ்சனன் அவளின் சூட்கேஸினை தள்ளிக்கொண்டு வர, இவர்களைப் பார்த்தால் யாரும் விவாகரத்து வாங்கியவர்கள் என்று சொல்லிடவே மாட்டார்கள்.

இருவர் முகத்தினில் இருக்கும் புன்னகையும், பார்வையில் தெரியும் நெருக்கமும், கையில் குழந்தையோடு இருக்கும் காட்சியினைக் கண்டால், நல்லதொரு குடும்பம் என்றே சொல்வர்.

நித்யாவிற்கும் அதுதான் தோன்றியது.

என்ன நினைத்தாளோ, ஏர்போர்ட் விட்டு வெளியே பார்க்கிங் ஏரியா வருகவுமே “அண்ணி.. அண்ணா.. அத்துவ வச்சிட்டு அப்படியே லக்கேஜோட நில்லுங்களேன்..” என்றவள், அவர்களை நிற்கவும் வைத்து அவளின் அலைபேசியில் புகைப்படமாய் எடுக்க, கணவன் மனைவி இருவரின் முகத்திலும் மேலும் புன்னகை விரிந்தது.

நிரஞ்சனன் வேண்டுமென்றே “என்ன நித்யா..” என,

“ம்ம் இதெல்லாம் நீங்க எடுக்கணும்.. நான் செய்றேன்னு சந்தோசப் படு..” என்று சொல்ல,

அத்துவோ “அத்தை சம் மோர் போட்டோஸ்..” என,

“பாரு இவன் செம பாஸ்ட்..” என்ற நித்யாவும், இன்னும் இரண்டு மூன்று புகைப்படங்களும், செல்பிக்களும் எடுத்தவள் அதன் பின்னே தான் கார் எடுக்க விட்டாள்.

காரில் அத்துவின் பேச்சு மட்டும் தான். மகன் கேட்பதற்கு எல்லாம் அம்மா பதில் சொல்லிக்கொண்டு வர, அதை நிரஞ்சனன் கேட்டபடி காரோட்டிக்கொண்டு இருக்க, ஒரு இதமான சூழல் அங்கே.

வீட்டிற்கு வந்ததுமே சுந்தரி “வாம்மா..” என்றவர், “எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா..” என,

“ஆமாங்கத்தை.. இங்க போலவே தான் அங்கயும்..” என்றவள், அமரவும், அத்து அவளின் மீதேறிக்கொள்ள, கணவனின் பார்வை எல்லாம் தங்கள் மீது இருப்பது கண்டு கொஞ்சம் லஜ்ஜையாகவும் இருந்தது ராதிகாவிற்கு.

அத்து இன்னமும் அவனின் அம்மாவை கொஞ்சுவதை நிறுத்தவில்லை.. ராதிகாவும் அவனுக்கு பதில் கொடுத்தபடி தான் மற்றவரோடு பேச,

“ராதிகா சப்பிட்டுக்கிறயா..” என்று சுந்தரி வினவ, “இல்ல அத்தை.. பிளைட்ல சாப்பிட்டேன்.. இப்போ வேணாம்..” என,

“சரி நீ போ.. போய் ரெஸ்ட் எடு..” என்றான் நிரஞ்சனன்.

வந்தமைக்கு இப்போதுதான் வாய் திருந்திருக்கிறான் அவன். அவளுக்கும் அப்படியொன்றும் அலுப்பாய் இல்லைதான். இருந்தாலும் காய் கால் நீட்டி சுகமாய் ஒரு நித்திரை தேவையாகவும் இருக்க,

“ம்ம் கொஞ்ச நேரம் போகட்டும்..” என்று ராதிகா சொல்ல, அது மகனுக்காக என்று புரிந்தது அவனுக்கு.

“அவனுக்கு லீவ் தான்.. அவனையும் சேர்த்து படுக்க வச்சிக்கோ.. அப்புறம் கொஞ்சலாம்..” என்றவன், அவளின் பெட்டிகளை எல்லாம் நகர்த்திக்கொண்டு போய் அவனின் அறையில் வைக்க,

‘இதோடா..!!’ என்று பார்த்தாள்.

‘அங்கே தான் உறங்குவதா..??!!’ என்று பார்க்க, உள்ளிருந்து நிரஞ்சனன் அழைப்பு மனைவிக்கு அல்ல, மகனுக்கு.

“அத்து.. அம்மா கூட்டிட்டு வா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்..” என்று.

இதுதான் சாக்கென்று மகனும் “ம்மா.. ம்மா… பா..” என, “இருடா..” என்றாள் தயக்கமாய்.

சுந்தரியின் அறையோ, நித்யாவின் அறையோவாக இருந்தால், ராதிகா தயக்கம் கொள்ளாது எழுந்து சென்றிருப்பாள், ஆனால் நிரஞ்சனன் அவனின் அறைக்குள் சென்றுவிட்டு பின் அங்கிருந்து அழைப்பதும் தான் உடனே போனால் எப்படி என்று ஒருவித யோசனையாய் இருந்தது.

அவன் இல்லாத நேரத்தில் கூட அவள் அங்கே போகிடமாட்டாள், அப்படியிருக்கையில்.

சங்கடமாய் மாமியார், நாத்தனார் முகம் பார்க்க, அதற்குள் திரும்பவும் அவன் அழைத்துவிட்டான் “அத்துக்குட்டி..” என்று.

“ம்ம் ப்பா..” என்றவன் “ம்மா..” என,

அவளின் தயக்கம் உணர்ந்த சுந்தரியோ “போய் தூங்கு ராதிகா..” என,

“அது.. அது அத்தை..” என்று தயங்கினாள்.

“நீ போ ராதிகா.. அவனுக்கும் வெளிய வேலை இருக்கு.. கல்யாண பத்திரிக்கை வாங்கப் போகணும்னு சொல்லிட்டு இருந்தான்…” என,

அதன்பின்னே தான் ராதிகாவிற்கு அப்பாடி என்றானது. பார்வைகள்.. பேச்சுக்கள் எல்லாம் தாண்டி, ஸ்பரிசங்களோ, நெருக்கங்களோ இன்னும் இல்லைதானே. இதற்கு கல்யாணம் முடிந்து குழந்தை பெற்றவர்கள் வேறு.

ராதிகா அறைக்குள் நுழைய, அவளுக்கு முன்னம் நுழைந்த அத்து, கட்டிலில் ஏறி “ஏ… ஏ…” என்று கத்திக்கொண்டே குதித்துக்கொண்டு இருக்க, நிரஞ்சனன் “டேய் டேய்…” என்று சொல்ல,

ராதிகா உள்ளே வந்து மகனை ஒரு பார்வை பார்க்க, “அம்மா….” என்று சொல்லியபடி மெத்தையில் இருந்தே அவளிடம் தாவினான்.

“என்னடா ஒரே குஷியா..” என்றவள் “அமைதியா அம்மாவோட தூங்கனும்..” என,

“ம்ம்ஹும்…” என்றான்.

“அத்து குட் பாயாம்..” என்று நிரஞ்சனன் சொல்ல, ராதிகா மெதுவாய் மெத்தையில் அமர, அவளுக்கோ இவன் எப்போதடா செல்வான் என்று இருக்க,

நிரஞ்சனனோ “நீ ட்ரெஸ் மாத்திக்கலயா..??!!” என்றான்.

‘நீங்க போனாதானே..’ என்று எண்ணியவள், “மாத்திக்கணும்..” என,

“இப்படி டைட்டா போடாம கொஞ்சம் லூஸ் பிட்டிங் போடு… ப்ரீயா தூங்கலாம்..” என, ராதிகா திடுக்கிட்டுத்தான் அவனைப் பார்த்தாள்.

“இப்படி ஜீன்ஸ் டாப்ஸ் போட்டு தூங்கினா உனக்குத் தூக்கம் வருமா..” என்றவன், அவளைப் பார்த்தபடி “நைட்டியே நீ கொஞ்சம் டைட்டா தான் போடுற…” என, ராதிகாவிற்கு மூச்சடைத்துப் போனது.

‘இது என்ன பார்வை.. இது என்ன பேச்சு…’

எப்போதுமே ராதிகாவின் உடைகள் பற்றி நிரஞ்சனன் பேசியதேயில்லை. ஆனால் அவள் எதிர்பார்ப்பாள்.

‘இந்த ட்ரெஸ் உனக்கு செமையா இருக்கு..’ என்றோ ‘வேற போடேன்.. கன்றாவியா இருக்கு..’ என்றோ அவன் எதுவும் சொல்வானா என்று நிறைய நிறைய எதிர்பார்த்திருக்கிறாள்.

ஆனால் இப்போது அப்படியெல்லாம் எதுவும் அவளின் மனதில் இல்லாத போது, நிரஞ்சனன் இப்படிப் பேசுவது ஆச்சர்யமாய் இருந்தாலும் ஆனந்தமாகவும் இருந்தது.

இருந்தும் ‘என்னிஷ்டம்.. நான் போடுறேன்…’ என்று முணுமுணுத்தபடி, அவளின் பெட்டியில் இருந்து வேறு உடை எடுக்க,

“பாக்குறது நாங்கம்மா..” என்றான் கேலியாய்.

“ம்ம் கண்ண மூடிக்கோங்க..” என்று பட்டென்று சொன்னவள், குளியல் அறைக்குள் நுழைந்துகொள்ள, மனதோ ‘சரியான ஆளுதான் போல..’ என்று எண்ணிச் சிரித்தது.

லேசாய் ஒரு குளியல் போட்டு, உடைமாற்றி வெளி வருகையில், அப்பா மகன் இருவரும் அங்கில்லை. ராதிகாவும் வெளியே வர, “நீ நல்லா தூங்கு ராதிகா.. இவனை நான் வெளிய கூட்டிட்டு போறேன்.. எப்படியும் தூங்க விடமாட்டான்..” என்ற நிரஞ்சனன் கிளம்பிவிட, ராதிகா மௌனமாய் பார்த்து நின்றிருந்தாள்.

திடீரென்று ஒரு குடும்பம் எனும் கட்டமைப்பிற்குள் வந்தது போலிருந்தது. கணவன், மகன், வீடு என்று.

உள்ளே சென்று படுத்தவள், எப்படி அத்தனை சீக்கிரம் உறங்கினாள், எவ்வளவு நேரம் உறங்கினாள் என்றெல்லாம் தெரியவேயில்லை. உறக்கம் களைந்து கண்களைத் திறந்து பார்க்க, அப்போதும் அந்த அறை இருள் சூழ்ந்துதான் இருந்தது. ஏசி மட்டும் ஓடிக்கொண்டு இருக்க, நைட் லேம்ப் மட்டும் எறிந்துகொண்டு இருக்க, கண்களை சுழற்றிப் பார்த்தாள். அவள் உறங்குகையில் ஏசி எல்லாம் போடவேயில்லை.

யாரோ வந்து.. என்று தோன்ற, யாரோ என்ன யாரோ.. நிரஞ்சனன் தான் இதெல்லாம் செய்திருப்பான் என்று தோன்றவும், ‘அதுக்குள்ளே வந்துட்டாங்களா..’ என்று எண்ணியவள், எழுந்து, மீண்டும் முகம் கழுவி, தலை சீவி, அறையை விட்டு வெளியே வர, அத்து உண்டுகொண்டு இருந்தான்.

அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது இரவு எட்டுமணி என்று.

‘இவ்வளோ நேரமா..’ என்று அவளே அசந்துதான் போனாள்.

மதியம் ஒருமணிக்கு வந்தாள், வந்தவள் சிறிது நேரத்தில் உறங்கிப் போக, இத்தனை நேரம் அவள் உறங்கியிருப்பது அவளுக்கே அதிசயமாய் இருந்தது. ஏனெனில் இத்தனை ஆண்டுகளில் இரவு நேரங்களில் கூட அவளுக்கு உறக்கம் என்பது அத்தனை இல்லைதானே.

“என்ன அண்ணி.. நல்ல தூக்கமா..” என்று நித்யா கேட்க,  “வா ராதிகா சாப்பிடு முதல்ல..” என்று சுந்தரி சொல்ல,

“ம்ம்..” என்று லேசாய் புன்னகைத்தவள், நிரஞ்சனனைத் தேடினாள். அவன் அங்கில்லை.

அவளின் தேடலை உணர்ந்த நித்யாவோ “அண்ணா வெளிய போயிருக்கான் அண்ணி. மண்டபம் டெக்கரேசன் ஆளுங்க கூட கல்யாண மண்டபத்துக்கு போயிருக்கான்.. டிசைன்ஸ் எது செட்டாகும்னு பார்க்க..” என,

அதன் பின்னே தான் இவளுக்கு நினைவே வந்தது நித்யா திருமணத்திற்கு இன்னமும் ஒரே மாதம் மட்டுமே இருப்பது. இப்போதிருந்து வேலைகள் ஆரம்பித்தால் தானே.. அதுவும் இப்போது நிரஞ்சனன் ஒற்றையாய் எல்லாம் செய்திட வேண்டும்.

“ஓ..!! சரி நித்யா..”  என்றவள் “நீங்களும் உட்காருங்க அத்தை..” என,

“இருக்கட்டும் ராதிகா. அவன் வரட்டும்..” என, “ம்ம்..” என்று தலையை ஆடியவளுக்கு, நிரஞ்சனனோடு சேர்ந்து அமர்ந்து உண்ண வேண்டும் போலிருக்க, அம்மாவினைப் பார்த்ததும் அத்து “ம்மா ஊட்டு..” என,

“டேய் இவ்வ்வ்ளோ நேரம் நீயா தானே சாப்பிட்ட..” என்று வேண்டுமென்றே நித்யா அதட்ட,

ராதிகாவும் “இருக்கட்டும் நித்யா..” என்றவள், அவனுக்கு ஊட்டத் தொடங்கிவிட்டாள்.

அத்து வேகமாய் உண்டுவிட, நித்யா உண்டுவிட்டு கொஞ்சம் காப்பி மட்டும் ராதிகாவிற்கு கலக்கி கொண்டு வந்து தர “தேங்க்ஸ் நித்யா நானே கேட்கனும்னு இருந்தேன்..” என்றவள், அதை வாங்கிப் பருக,

“ம்மா நீயும் சாப்பிடு. அண்ணன் வரவும் அண்ணியும் அண்ணனும் சாப்பிடட்டும்..” என்று நித்யா சொல்லவும், “சரிம்மா..” என்றுவிட்டார் சுந்தரி.

ராதிகாவிற்கு முகம் மலர்வது என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை. சுந்தரி எல்லாம் கவனித்துக்கொண்டே தான் இருந்தார். எதுவாக இருந்தாலும் கணவன் மனைவி இருவரின் வாயில் இருந்து வரட்டும் என்று இருக்க, நிரஞ்சனனும் அடுத்து வீட்டிற்கு வந்துவிட்டான்.

வந்தவன் நித்யாவிடம் “ராதிகாக்கு இன்விடேசன் காட்டினியா..” என,

“அச்சோ மறந்தே போனேன்ணா..” என்றவள், அதனை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க, வாங்கிப் பார்த்தாள் ராதிகா.

அவள் சிங்கப்பூர் சென்ற மறுநாளே நிரஞ்சனன் அவளுக்கு ‘இதான் டிசைன் நல்லாருக்கா.. எதுவும் சேஞ் பண்ணனுமா சொல்லு..’ என்று கேட்டு, திருமணப் பத்திரிக்கையின் டிசைன் அனுப்பியிருக்க,

அதிலோ, பெண் வீட்டார் பெயரில் சுந்தரி குணசேகரன் பெயருக்கு அடுத்து நிரஞ்சனன் – ராதிகா என்று போடப்பட்டிருக்க, அப்போது ஏற்பட்ட ஒரு படபடப்பு இப்போதும் ராதிகாவினுள்.

‘அப்.. அப்போ.. அப்போ.. அவங்களுமா…’ என்று மனது ஓடுகையிலேயே ஏகப்பட்ட பட்டாம்பூச்சிகள் பறந்தது அவள் மனதில்.

சொல்லப்போனால் அதன்பின்னே தான் அவனோடு வார்த்தையாட முடிந்தது அவளுக்கு.

அவள் ஏதாவது சொல்வாளோ என்று நிரஞ்சனன் அன்று காத்திருக்க “சூப்பர்..” என்று மட்டும் பதில் அனுப்பியிருந்தாள்.

இப்போது பத்திரிக்கையை வாங்கிப் பார்த்தவளுக்கு, என்ன சொல்வது என்றே விளங்கவில்லை. நிரஞ்சனன் இப்போதும் கேட்டான் “எல்லாம் ஓகே தானே..” என, மெதுவாய் அவளின் விரல்கள் அவர்களின் பெயரை வருடியபடி இருக்க,

“ராதிகா…” என்றான் கொஞ்சம் அழைப்பில் அழுத்தம் கொடுத்து,

“ம்ம்..” என்று அப்போதும் அவனை நிமிர்ந்து பார்த்தவளிடம்,

“எல்லாம் ஓகேவான்னு கேட்டேன்..” என்றான் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து.

அவன் எதைக் கேட்கிறான் என்று புரிந்தாலும், அவளின் பார்வை மீண்டும் அந்த பத்திரிக்கைக்குச் செல்ல, தானாய் இதழ்கள் “ம்ம்..” என்றுமட்டும் சொல்ல, சுந்தரிக்கு அப்போதுதான் நிம்மதியானது.

மகன் இப்படி போடவேண்டும் என்று சொல்கையில், சுந்தரிக்கு ராதிகாவிடம் ஒருவார்த்தைக் கேட்டுவிட்டு செய்வோம் என்றுதான் சொன்னார். ஆனால் அவன்தான் அதெல்லாம் கேட்காமலே போடலாம் என்று சொல்லி, அரவிந்த் வீட்டினருக்கும் அழைத்து இப்படி போடச் சொல்லியும் விட்டான்.

இப்போது ராதிகா மறுப்பாய் எதுவும் சொல்லாமல் போகவும்தான் சுந்தரிக்கு நிம்மதியே. 

நிரஞ்சனனோ “ராதிகா..” என்றழைக்க, அவனின் குரலில் அப்படியொரு மாறுபாடு.

குரல் கரகரத்துப் போய் இருக்க, பட்டென்று விழிகள் நிமிர்த்திப் பார்த்தாள். பார்வைகள் இரண்டும் என்ன பரிபாஷைகள் பேசியதோ, நிரஞ்சனன் மனதில் அப்படியொரு ஆசுவாசம்.

எல்லாமே அவனின் வாழ்வில் பரிபூரணத்துவம் அடைவதாய் இருக்க, ஏதேதோ அவளோடு பேசிடவேண்டும் என்று தோன்றினாலும், அந்த நிலையில் எதை எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை.

எங்கே தெரிந்தோ தெரியாமலோ கூட அவளை இனியும் நோகடித்து விடக்கூடாது என்றெண்ணியவன் “சாப்பிட்டியா..” என்று கேட்க,

‘இதுக்குத்தானா..’ என்று பார்த்தவள், “இல்ல..” என,

“சரி வா எடுத்து வை.. நானும் சாப்பிடறேன்..” என்றபடி நிரஞ்சனன் எழுந்து செல்ல, ராதிகாவும் பின்னோடு சென்றாள். உண்ணும் போது இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

நிறை குறை இல்லாத மனிதனும் இல்லை. நிறை குறை இல்லாத வாழ்வும் இல்லை. எதை நாம் அதிகம் காண்கிறோமோ, அப்படித்தானே நாம் வாழும் விதமும் இருக்கும்.

அன்றைய நிரஞ்சனனும் மாறியிருந்தான்..

அன்றைய ராதிகாவும் மாறியிருந்தாள்..

அவர்கள் வாழ்வைப் பற்றி அவர்கள் காணும் விதமும் மாறியிருந்தது.

இருவரும் உண்டு முடித்து வரவும், அத்து “ம்மா டாய்ஸ் எங்க..” என்று குதிக்க,

“ஆரம்பிச்சுட்டியா..” என்றான் நிரஞ்சனன்.

அப்போதிருந்தே கேட்டு அடம் செய்யத் தொடங்கியிருந்தான். இத்தனை நேரம் பொறுமையாய் இருந்ததே பெரிது.

ராதிகா அவளின் மற்றொரு பெட்டியை இழுத்துக்கொண்டு வந்தவள், ஹாலில் வாய்த்த கடை பரப்பத் தொடங்கிவிட்டாள். மற்றவர்களுக்கு வாங்கியதை விட நித்யாவிற்கு வாங்கியதுதான் அதிகம்.

அங்கிருந்தே அழைத்து வேறு கேட்டிருந்தாள் ‘என்ன வேணும் என்ன வேணும்…’ என்று.

அவள் கேட்டது சில என்றால், தானாய் வாங்கியது பல,

“இந்தா நித்யா இதெல்லாம் உனக்கு..” என்று பெரிய பாக்ஸ் ஒன்றை நீட்ட,

“தேங்க்ஸ் அண்ணி..” என்று நித்யா சொல்ல, “ரூம்ல வச்சு ஒப்பன் பண்ணிக்கோ..” என்றுவிட்டாள்.

சிறுவன் இருக்கிறானே, எல்லாம் பிரித்து பிரித்து போட்டுவிட்டால் என்ன என்றுதான். சுந்தரிக்கும் அவருக்கு வாங்கியதை கொடுத்தவள், பின் மகனுக்கு வாங்கியது என்று சில பொம்மைகள் எடுத்து கொடுக்க,

“ம்மா சூப்பர் ம்மா..” என, நிரஞ்சனன் ஆவலாய் பார்த்துகொண்டு இருந்தான்.

அவனின் மனம் எதிர்பார்த்தது ‘எனக்கென்ன வாங்கிருப்பா..’ என்று.

ராதிகாவோ அவனின் பார்வை அறிந்தே பொறுமையாய் நீட்டி நிதானமாய் மற்றவர்களுக்கு எடுத்து கொடுத்துக்கொண்டு இருக்க, நிரஞ்சனன் கம்மென்று அமர்ந்துகொள்ள,

“ம்மா இது என்ன..” என்றான் அத்து, ஒரு கவரினைக் காட்டி.

“ட்ரெஸ் டா..” என,

“ஆருக்கு..” என்றான் சிறுவன்.

நிரஞ்சனன் பார்வையில் மீண்டும் ஒரு ஆவல் எட்டிப்பார்க்க, ராதிகா புன்முறுவல் பூத்தபடி “டாடி சன் காம்போ ட்ரெஸ்..” என்றபடி அந்த கவரினை நிரஞ்சனனிடம் நீட்ட,

இரண்டு டி ஷர்ட், பேன்ட்கள் இருந்தது. ஒரே வண்ணத்தில், ஒரே டிசைனில்  அப்பா மகன் ஒன்றுபோல் அணிவது போல.

“வாவ்..!!” என்று நிரஞ்சனன் சொன்ன விதத்திலேயே, அவன் இதனை எதிர்பார்க்கவில்லை என்பது தெரிய,

“அத்துக்குட்டி பாரு பாரு..” என்று மகனிடம் காட்ட, அவனுக்கு என்ன புரிந்ததோ “வாவ்..!!” என்றான் அப்பாவைப் போல.

இருந்தும் நிரஞ்சனன் பார்வை அடிக்கடி ராதிகாவைக் காண, அவளோ கண்டும் காணாதது போல இருக்க, சுந்தரியும் நித்யாவும் அவரவர் அறைக்குச் செல்லவும் கேட்டான்,

“அவ்வளோதானா..” என்று.

“ம்ம் என்னது..??!!” என்று ராதிகாவும் புரியாது கேட்பது போல் கேட்க,

“இவ்வளோ தான் வாங்கினியா..” என்று அவனும் கேட்க, “அப்பா அம்மாக்கும் வாங்கினேன் அதெல்லாம் அந்த பெட்டில இருக்கு..” என,

“ம்ம்ச்..” என்றான் கடுப்பாய்.

“என்னது..??!!” என்று அப்போதும் ராதிகா கேட்க,

“நித்யாக்கு மட்டுமென்ன அவ்வளோ பெரிய பாக்ஸ்..” என,

“அதெல்லாம் பொண்ணுங்க சீக்ரெட்.. உங்களுக்கு எதுக்கு..” என்றாள் மிதப்பாய்.

வேண்டுமென்றே அவனை சீண்டவேண்டும் போலிருக்க, திரும்பவும் “அப்போ இவ்வளோதானா உன் ஷாப்பிங்..” என்றார் அவனும் கேட்க,

“ம்ம் எனக்கும் கூட கொஞ்சம் வாங்கினேன்..” என்றவள், “எதுக்கு..??!!” என,    

“ஒண்ணுமில்ல..” என்றவன் மனது ஏமாந்து போனது.

தனக்கு மட்டுமே பிரத்தியேகமாய் ஏதேனும் வாங்கி வந்திருப்பாள் என்று எதிர்பார்த்திருக்க, அவளோ மகனுக்கும் அவனுக்கும் மட்டும் ஒன்றுபோல் வாங்கிவிட்டு அவ்வளோதான் என்பதுபோல் இருக்க, மனம் சுருங்கிப்போனது.

ராதிகா அமட்டு கடித்து சிரிப்பினை அடக்கியவள், உள்ளே எழுந்து போய் வேறொரு பேப்பர் பேக் கொண்டு வந்து அவனின் முன் நீட்ட ‘என்ன..??’ என்பதுபோல் பார்த்தான்.

‘பாருங்க..’ என்பதுபோல் அவளும் பார்வையை காட்ட, வாங்கிப் பார்த்தவனுக்கு அத்துனை சந்தோசம்.

அவனின் மிக பிடித்தமான பிராண்டின் லேட்டஸ்ட் கை கடிகாரமும், கூலர்சும். இன்னும் இங்கே கூட அறிமுகம் ஆகவில்லை. அதனை வாங்கி வந்திருக்கிறாள்.

“வாவ்…. வாவ்….!!!” என்று நிரஞ்சனன் ஆர்ப்பரிக்க, அதனை சந்தோசமாய் பார்த்து நின்றிருந்தாள் ராதிகா.

Advertisement