Advertisement

அத்தியாயம் – 22

விமானம் ஏறி பறந்தது போலானது ஒரு வராமும். ராதிகாவும் சிங்கப்பூர் வந்து ஆறு நாட்கள் ஆகியது. இதோ நாளைக்குக் கிளம்பிட வேண்டும். இன்று அவளுடைய ட்ரைனிங் எல்லாம் முடிந்து அதற்கான அனைத்து பார்மாலிட்டியும் முடிந்து வெளிவர, கொஞ்சம் ஷாப்பிங் செய்யலாம் என்று சுற்றிக்கொண்டு இருந்தாள்.  

புதிய இடம்.. புதிய மக்கள்.. எல்லாமே புதிது. முதல் நாள் தான் அவளுக்குக் கொஞ்சம் திகட்டலாய் இருந்தது. அங்கே தமிழ் ஆட்கள் நிறைய இருக்க, அடுத்து அவளுக்கு அந்தத் திகட்டலும் இல்லாது போக, அவளின் அலுவலகத்தில் இருந்தே ராதிகா தங்குவதற்கு ஒற்றை படுக்கை அறை கொண்ட பிளாட்டும், கார் வசதியும் கொடுத்துவிட, வேறெதெற்கும் சிரமப்பட வேண்டியதாய் இல்லை.

இஷ்டமிருந்தால் சமைத்து உண்ணலாம், இல்லையோ அலுவலக கேண்டீனில் பார்த்துக்கொள்ளலாம். ராதிகா காலையும் மதியமும் அங்கே பார்த்துக்கொள்ள, இரவு மட்டும் சமைத்துக்கொண்டாள்.

இங்கே வந்தபிறகு அவளுக்கு இன்னமும் நாட்கள் அழகாய் ஆனதுபோல் இருந்தது. காரணம், வந்ததில் இருந்து தினமும் நிரஞ்சனனோடு அலைபேசியில் பேசுவது. முன்னே பேசிடாதது எல்லாம் இப்போது பேசினர். ராதிகாவிற்கு இத்தனை மாற்றங்கள் அதிலும் எல்லாமே அழகாய் மாறியது ஆச்சர்யமாய் போனது.

அன்றைய தினம், நிரஞ்சனன் ‘அப்போ நான் இருந்திருக்கேனே.. அதுக்கென்ன சொல்வ நீ..’ என்று மகனை விட்டு இருந்ததைப் பற்றி பேச, ராதிகாவிற்கு வார்த்தையே வரவில்லை.

விதிர்த்துப் போய் பார்க்க, “சொல்லு ராதிகா..” என்றான் அதட்டலாய்.

சுந்தரி அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவர், “நிரஞ்சன் என்ன இது..” என்று கேட்க,

“பின்ன என்னம்மா.. நம்ம இல்லையா..??!! இவ சொல்றது பார்த்தா நம்ம என்னவோ அத்துவ பார்த்துக்க மாட்டோம்னு நினைக்கிறது போல தானே இருக்கு..” என,

“அச்சோ அப்படியெல்லாம் இல்லை…” என்றாள் ராதிகாவும் மிக மிக பதட்டமாய்.

“பின்ன எதுக்கு உனக்கு அவ்வளோ தயக்கம்..?? நான் ட்ரைனிங் போகணும்.. அத்துவை நீங்க பார்த்துக்கோங்கன்னு சொன்னா, நாங்க முடியாதுன்னு சொல்லப் போறோமா.. இந்த ஏஜ்ல உனக்கு இப்படியொரு சான்ஸ் கிடைச்சிருக்கு.. அதை யூட்டிலைஸ் பண்றது விட்டுட்டு.. கதை சொல்லிட்டிருக்க நீ..” என்று அப்போதும் அதட்டலாகவே பேச, ராதிகா மௌனமாய் பார்த்தாள் கணவனை.

திட்டுகிறானா, போ என்கிறானா, என்ன சொல்கிறான் இவன் என்று பார்த்தாள்.

“என்ன ராதிகா பாக்குற..” என்று மீண்டும் அவனே பேச,

“கொஞ்சம் அதட்டாம பேசேன் டா..” என்றார் சுந்தரி.

“நான் சாதாரணமா தான் சொல்றேன்ம்மா..” என்றவன் “என்ன…” என்று மனைவியைப் பார்த்துக் கேட்க, அவளின் பார்வை அத்துவைத் தொட்டு மீண்டது.

நிரஞ்சனன் இதைப் பார்த்து மகனைத் தன் மடியில் அமர்த்தி “அத்து.. அம்மாக்கு கோச்சிங் கிளாசாம்… சோ அம்மா ஒன் வீக் ஊருக்கு போகணுமாம்..” என, அதில் அம்மா ஊருக்கு போகணுமாம் என்பது மட்டும் சிறுவனுக்குப் புரிய, திரும்பி அம்மா முகம் பார்த்தான்.

“நான் போயிட்டு வரட்டுமா அத்து..” என்ற ராதிகாவின் குரல் மெல்லியதாய் ஒலிக்க, அவளின் மனது ஓட்டம் நிரஞ்சனனுக்கு புரிந்துகொள்ள முடிந்தது.

எங்கே மகனை தன்னிடம் இருந்து பிரித்துவிடுவானோ என்று அஞ்சிய ராதிகா இப்போதில்லை. அதற்கு பதிலாய், தன்னை விட்டு மகன் அப்பாவினோடு இருந்துகொள்வானா என்று யோசிக்கும் ராதிகா தான் கண்முன்னே இருக்க,

அத்துவோ “எங்கம்மா..” என்றான்.

ராதிகா அதற்கு பதில் சொல்லுமுன்னே “ஷ்ஷ்…” என்று கையை விமானம் பறப்பது போலே மேலே உயர்த்திய நிரஞ்சனன், “அம்மா ப்ளைட்ல போகப் போறாடா… அம்மாக்கு டாட்டா சொல்லிட்டு அப்பாவும் நீயும் ஜாலியும் இங்க சுத்தலாம்.. பீக் போலாம்.. கேம் சென்ட்டர் போகலாம்..” என,

நிரஞ்சனன் பேசிய விதம் கண்டு, ராதிகாவிற்கே சிரிப்பு வந்துவிட்டது. அதோஷஜன் அப்பா அம்மா முகத்தினை மாறி மாறிப் பார்க்க,

“அம்மா உனக்கு வர்றப்போ நெறைய டாய்ஸ் எல்லாம் வாங்கிட்டு வர்றேன் அத்து..” என்று ராதிகா சொல்லவும்,

நிரஞ்சனன் “ஓஹோ..!!!” என, அவனின் கிண்டல் பார்வை சொல்லாமல் சொல்லியது, அன்று தான் ஒரு ரிமோட் கார் வாங்கிக் கொடுத்ததற்கு என்ன பேச்சு பேசினாள் என்று.

ராதிகாவிற்கும் அது புரிய, “ம்ம்ச் சும்மா இருக்கணும்..” என்று அதட்டுவது போல் அதட்டி, “என்னடா அத்து குட்டி..” என்றாள் மகனிடம்.

“ம்ம்ம் ஓகேம்மா…” என்ற சிறுவனுக்கு அதற்குமேல் அதனை யோசிக்கத் தெரியவில்லை.  அம்மா எங்கேயோ செல்கிறாள் ஊருக்கு. அப்பாவோடு தான் இருப்போம். அதுமட்டும் புரிந்தது.

மகன் சட்டென்று சரி சொன்னது அவளுக்குச் சங்கடமாய் இருக்க, அவளால் முழு மனதாய் சரியென்று சொல்லிடவே முடியாதுப் போக,

“இன்னும் என்ன..??” என்றான் நிரஞ்சனன்.

நித்யா, சுந்தரியிடம் “ம்மா அவங்க பேசிக்கட்டும்..” என்றுசொல்லி எழுந்து சென்றுவிட, சுந்தரியும் அடுத்து எழுந்துவிட்டார்.

ராதிகாவோ “இல்ல..” என்று தயங்க, “இந்த சான்ஸ் எப்போன்னாலும் உனக்கு வரும்தானே..” என்றான் நிரஞ்சனன்.

“ம்ம்..”

“அப்போவும் நீ அத்துவை விட்டிட்டு தானே போகணும்.. இல்லை நான் அவனை சரியா பார்த்துக்க மாட்டேன் நினைக்கிறியா..” என,

“இல்லை இல்லை..” என்றாள் வேகமாய்.

“பின்ன என்ன ராதிகா..” என்றவன் “ஏன் உனக்குத் தனியா போக பயமா இருக்கா.. வேணும்னா சொல்லு.. நானும் அத்துவும் உன்னோட வர்றோம்..” என்றானே பார்க்க வேண்டும். ராதிகாவோ  வாய் பிளந்தே விட்டாள். 

“என்ன சொல்லு…” என,

“அச்சோ அதெல்லாம் வேணாம்..” என்றவள், “நான்.. அப்பாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என, சரியென்றுவிட்டான்.

இப்போது வரைக்கும் அவர்கள் பொறுப்பில் தான் இருக்கிறாள். அவர்களை கேளாது எந்தவொரு முடிவும் எடுத்திட முடியாது. அது மரியாதையும் இல்லை தானே. ராதிகா அவளின் அப்பா அம்மாவோடு பேசி வரைக்கும் காத்திருந்தான். ராதிகா தனியே சென்று எல்லாம் கூட பேசவில்லை, அவனின் முன்னமே தான் அமர்ந்து பேசினாள்.

மணிவண்ணனும் சரி, ராணியும் சரி, பேரன் அவனின் அப்பாவின் பொறுப்பில் இருக்கப் போகிறான் என்ற தைரியத்திலேயே “நல்லபடியா பார்த்து போயிட்டு வா ராதிகா..” என்றுவிட்டனர்.

அதன் பின்னம் தான் ராதிகாவிற்கு முகமே தெளிய, “அப்பாவும் அம்மாவும் சரின்னு சொல்லிட்டாங்க..” என,

“அப்போ உனக்கு ஓகே வா..” என்றான் நிரஞ்சனன்..

சரி என்று வாய் சொல்லவில்லை என்றாலும், சம்மதம் என்று தலை தன்னப் போல் ஆட, அத்துவைத் தூக்கி மடியில் வைத்துக் கட்டிக்கொண்டாள், நிரஞ்சனன் இதைப் பார்த்து முறைக்க,

“ப்ளீஸ்…” என்று ராதிகா பாவனைக் காட்ட,

“நீ இப்படி பண்ணினா என்னவோன்னு அவனுக்குத் தோணும்.. அப்புறம் அழுவான்.. அங்க போய் டெய்லி வீடியோ கால் பண்ணு.. அவனோடு பேசு.. சிங்கப்பூர்ல என்னோட பிரண்ட்ஸ் ரெண்டு பேர் இருக்காங்க.. உன்னோட பிளேஸ் சொன்னா வந்து பார்க்கச் சொல்றேன்.. இல்லன்னா இப்பவும் சொல்லு, நானும் அத்துவும் உன்னோட வர்றோம்..” என,

“வேணாம் வேணாம்.. ஐ கேன் மேனேஜ்…” என்றாள் பிகுவாய்.

“ம்ம் ஓகே.. உன் ஹெட்க்கு சொல்லிடு..”

“நாளைக்கு மார்னிங் சொன்னா போதும்..”

“நாளைக்கு நைட் பிளைட் தானே.. இப்போவே சொல்லு.. இல்ல நான் சொல்லவா..” என்று நிரஞ்சனன் சொல்லவும்,

“அச்சோ வேணாம்.. அன்னிக்கு நீங்க பேசினதே போதும்..” என்றாள் வேகமாய்.

‘ரொம்ப படுத்துறானே..’ என்று இருந்தது அவளுக்கு.

‘ஒன்னு அந்த எக்ஸ்ட்ரீம் எதையும் கண்டுக்காம இருந்தது.. இல்லன்னா இப்படி.. யப்பா..!!’ என்று எண்ணியவள் ஒரு பெரு மூச்சு விட, 

நிரஞ்சனன் முகத்தினில் சிரிப்பு வந்துவிட்டது. அது ராதிகாவிற்கும் தொற்றிக்கொள்ள, முழு மனதாய் இல்லை என்றாலும் மகன் அவனின் அப்பாவோடு தானே இருக்கிறான் என்ற தைரியம் இருந்தது.

சுந்தரியோ நித்யாவிடம் “இவங்க ரெண்டு பேரும் எப்போ இப்படி பேசிக்க ஆரம்பிச்சாங்க..” என,

“அதெல்லாம் கண்டுக்காத மாதிரியே இருந்துப்போம் ம்மா.. கேட்டா அதுக்கப்புறம் ரெண்டுபேரும் எதாவது நினைச்சுக்கப் போறாங்க.. ப்ரீயா விடு..” என்று சொல்ல,

“இப்படி முன்னாடியே இருந்திருக்கலாம்ல..” என்றார் வருத்தமாய்.

“அதுக்கென்ன செய்றதும்மா.. சொல்லப்போனா தப்பு அண்ணன் பக்கம் தான்.. அது அவன் இப்போ ரியலைஸ் பண்ணிருக்கான்.. அண்ணியும் அவங்களோட வட்டம் தாண்டி வெளிய வர்றாங்க.. எல்லாம் நன்மைக்கே..”

“ம்ம்.. என்னவோ.. உனக்கும் அவனுக்கும் நல்லபடியா வாழ்க்கை அமைஞ்சா அதைவிட வேறெதுவும் எனக்குத் தேவையில்ல நித்யா..” என்றவர், இரவு உணவிற்கு தயார் செய்யப் போக, நித்யாவும் அவரோடு செல்ல,

ராதிகாவும், சுலேகாவிற்கு அழைத்து சொல்லியிருக்க, “ஓகே.. மார்னிங் ஆபிஸ்ல வந்து பார்மாலிட்டி முடிச்சிட்டு பிளைட் டிக்கட் வாங்கிக்கோங்க ராதிகா..” என்றுவிட்டார்.

இன்னமும் எதுவும் எடுத்து வைக்கவில்லை. நாளைக்கு இரவு கிளம்பிட வேண்டும் என்றால், இப்போதிருந்தே எல்லாம் எடுத்து வைத்தால் தான் நாளைக்கு சிறிதேனும் இலகுவாய் இருக்க முடியும். ஆக ராதிகா “அப்.. அப்போ நான் கிளம்புறேன்..” என,

“என்னாச்சு…??!!” என்றான் நிரஞ்சனன்.

எல்லாமே கூடி வருகையில் ராதிகா இப்படி கிளம்புவது அவனுக்குமே சங்கடமாய்த்தான் இருந்தது. இருந்தும்  அவளின் வேலை மீதான பற்றுதலை புரிந்துகொண்டான். எத்தனை தூரம் கடின உழைப்பு அவள் போட்டிருந்தால், அவளுக்கு இப்போது இப்படியொரு வாய்ப்பு கிட்டும். காலம் எங்கே ஓடிவிட போகிறது என்று எண்ணினான். அவளுக்கான இடம் அவன் கொடுத்துத் தானே ஆகிட வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தானே ஆபிஸ் டென்சன், ப்ரோமோசன்.. ட்ரைனிங் எல்லாம் இருக்கும்.

“இல்ல.. எல்லாம் பேக் பண்ணனும்…” என்று ராதிகா சொல்லவும்,

“ஷாப்பிங் எதுவும் செய்யனுமா..” என்றான் நிரஞ்சனன் அவனும் எழுந்தபடி.

“ம்ம் கொஞ்சம் இருக்கு நான் பார்த்துக்கிறேன்..” என்றவளும் எழுந்துவிட,

“என்ன என்ன வேணும் எழுதி கொடு.. நான் வாங்கிட்டு வந்திடுறேன்.. நீ அதுக்குள்ள என்ன என்ன வேணுமோ எடுத்து வை..” என, மேலும் அவளுக்கொரு அதிர்ச்சி.

‘என்ன இப்படி மாறிப்போனான்…’ என்று.

“இ…” என்று அவள் மறுக்க வர,

“ம்ம்ச் ராதிகா..” என்ற அவனின் தொனியில் “உங்களுக்கு லேடிஸ் திங்க்ஸ் எல்லாம் வாங்கத் தெரியுமா…” என்றாள் வேண்டுமென்றே.

“அடேங்கப்பா..!! நீ எழுதி கொடு.. எப்படி வாங்கிட்டு வர்றேன் மட்டும் பாரு..” என்று அவனும் சவடால் பேச, ராதிகாவிற்கு சிரிப்புத் தாங்கவில்லை.

அப்படியொன்றும் அதிகமாய் அவள் எழுதிடவில்லை, பேஸ்ட் பிரஷ் சோப் இப்படித்தான். நித்யாவோடு ஷாப்பிங் சென்றபோது தான் நிறைய புதிய பொருட்கள் வாங்கியிருந்தாள் அவளுக்குத் தேவையானது எல்லாம்.

அவள் எழுதி கொடுத்ததை நிரஞ்சனன் பார்த்தவன் “ம்ம் இதான் நீ சொன்ன லேடீஸ் திங்க்ஸா…” என்று முணுமுணுத்தபடி நகர, ராதிகா சுந்தரியிடமும், நித்யாவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப,

“ஒரேதா சாப்பிட்டு போயிடலாம் ராதிகா..” என்றார்.

நிரஞ்சனனுக்கும் அதுவே சரியெனப் பட, “ஆமா ராதிகா.. நீ சாப்பிட்டிட்டு இரு.. நான் அதுக்குள்ள இதெல்லாம் வாங்கிட்டு வந்திடுவேன்..” என, அவளால் தான் இப்போது எதையும் மறுக்க முடிவதில்லையே. மறுக்கும் எண்ணமும் வரவில்லையே.

நித்யாவோ “அண்ணி.. ஒன்னு பண்ணுங்களேன்.. நானும் வர்றேன் உங்களுக்கு பேக்கிங் ஹெல்ப் பண்றேன்.. எல்லாம் எடுத்துட்டு இங்க வந்திடுங்க.. எப்படியும் அத்துக்கு ஒன் வீக் தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுக்கணும் தானே.. லாஸ்ட் மினிட்ல ஏன் நீங்க இங்கயும் அங்கயும் அலையணும்..” என,

“இது பெட்டர் ஐடியா நித்யா..” என்றான் நிரஞ்சனன்.

‘என்னது இங்க ஸ்டே பண்றதா…’ என்று ராதிகா திடுக்கிட்டுப் பார்க்க, “ஆமா ராதிகா ஏன் அலையணும்.. நீயும் நித்யாவும் பேக் பண்ணிட்டு இங்க லக்கேஜ் எல்லாம் எடுத்திட்டு வந்திடுங்க..” என்று சுந்தரியும் சொல்ல,

“அது அத்தை…” என்று தயங்கினாள் ராதிகா.

“ராதிகா..!!!” என்ற நிரஞ்சனன் அழைப்பிலும், பார்வையிலும் என்ன இருந்ததுவோ அவளுக்கு, “பேக்கிங் முடிச்சிட்டு வர்றோம்.. நீங்க உங்க புள்ளைய கூட்டிட்டு வெளிய போயிட்டு வாங்க..” என்று அவனைத் துரத்தத் தொடங்க,

“அடேங்கப்பா.. அ..!!!” என்றுவிட்டு போனான் நிரஞ்சனன்.

அவனுக்கு இப்படி ராதிகாவோடு வார்த்தைக்கு வார்த்தை வாயாடுவதும், தான் சத்தமாய் அதட்டினாள் என்னவோ அவள் அந்த நொடி அமைதியாய் போவதும், பின் அவளும் அதட்டுவது போல் பேசுவதும் எல்லாம்.. எல்லாமே தித்திப்பாய் இருக்க,

‘இதெல்லாம் ஏன்டா நிரஞ்சா முன்னமே செய்யலை நீ..’ என்று தனக்கு தானே கேட்டுகொண்டவன்,

“வாடா.. உங்கம்மாக்கு பர்சேஸ் பண்ணிட்டு வரலாம்..” என்று மகனை அழைத்துக்கொண்டு கார் எடுக்கப் போக,

“அப்பா.. பைக்..” என்றான் சிறுவன்.

இந்த நேரத்தில் ட்ராபிக் வேறு அதிகம் இருக்கும். பைக்கில் சிறுவனை வைத்துகொண்டு சிரமம் என்று உணர்ந்தவன் “நாளைக்கு போலாம்.. இப்போ கார்..” என, அத்து உதட்டினைப் பிதுக்கவும், பின்னே வந்த ராதிகாவோ

“அத்து அப்பா என்ன சொன்னாலும் கேட்கனும்..” என்று கண்டிப்புப் பாவனையில் சொல்ல, அதே உதட்டு பிதுக்களோடு தலையை சரி என்று ஆட்டினான் சிறுவன்.

‘இந்த பொடிசு கூட அவங்கம்மா சொல்றது தான் கேட்குது..’ என்று நினைத்தபடி நிரஞ்சனன் காரினைக் கிளப்பிக்கொண்டு செல்ல, ராதிகாவும் நித்யாவும், சுந்தரியை அமரச் சொல்லிவிட்டு இட்லி சட்னி மட்டும் செய்து வைத்துவிட்டு அவர்களும் கிளம்பினர்..

அப்படி இப்படி என்று ராதிகா மறுநாள் விமான நிலயமும் வந்துவிட, அத்துவிற்கு என்னத் தோன்றியதோ அழத் தொடங்கிவிட்டான்.

“ம்மா.. ம்மா..” என்று கை நீட்டி சிறுவன் அழுகையில், ராதிகாவின் கண்களும் தன்னப்போல் கலங்க, அவளுக்கு பேசாது இருந்துவிடுவோமா என்று ஆகிப்போனது.

“ராதிகா.. நீ கிளம்பு.. நான் பார்த்துக்கிறேன்..” என்று நிரஞ்சனன் சொல்ல, “இல்லங்க..” என்றவள், மகனைத் தூக்கிக்கொண்டு அழுந்த முத்தமிட, சிறுவனோ மேலும் அம்மாவிடம் ஒட்ட,

“ராதிகா.. நீ பண்றது அவனை இன்னமும் அழ வைக்கும்..” என்றான் நிரஞ்சனன் கண்டிக்கும் குரலில்.

“ம்ம்.. அத்துக்குட்டி அம்மா டெய்லி உன்னோட பேசுவேன்.. சமத்தா இருக்கணும்..” என்றவள், பின் “ஹோம் வொர்க் அம்மா எப்படி சொல்லிக் கொடுத்தேனோ அப்படி செய்யணும்.. இதுலமட்டும் அப்பா சொல்றதை கேட்காதா..” என,

“போச்சுடா..” என்றான் நிரஞ்சனன்.

“பின்ன.. இதுவே பழக்கமாகிடும்..” என்று அவனுக்கும் ஒரு அதட்டல் போட்டவன் “என்னடா குட் பாயா இருக்கனும்..  பாட்டி அத்தை எல்லாம் உன்னை சமத்து சொல்லணும்..” என்று வகுப்பெடுக்க,

“யம்மா.. போதும்..” என்றான் நிரஞ்சனன் அலுத்து..

“உங்களுக்கென்ன அவ்வளோ சலிப்பு..” என்று ராதிகாவும் திரும்பக் கேட்க, “பின்ன அவன் சின்ன பையன்.. அவன் எப்படி இருப்பானோ அப்படித்தான் இருப்பான்.. இப்போயிருந்தே எல்லாரும் நம்மல குட் சொல்லனு அப்படிங்கற தாட் அவனுக்கு வர வேணாம்.. அவனோட இயல்பு மாறிடும்..” என்று அப்பாவாய் சொல்ல,

‘இதில் இப்படியொரு கோணமா..’ என்றுதான் இருந்தது அவளுக்கு.

ராதிகா அமைதியாகவும் “தைரியமா போயிட்டு வா ராதிகா.. எதுன்னாலும் கால் பண்ணு. அங்க ஹெல்ப் பண்ண நிறைய பேர் இருக்காங்க..” என்றவன், இன்னும் ஒரு அடி அவளிடம் நெருங்கி நின்று “பார்த்துக்கோ..” என, ராதிகா நிமிர்ந்து அவனின் கண்களைத் தான் பார்த்தாள்.

அதே நேரம், பயணிகளுக்கான அறிவிப்பும் வர, “ம்ம் பார்த்து போயிட்டு வா..” என்று நிரஞ்சனன் ஆதரவாய் அவளின் முதுகில் கை வைத்துத் தட்ட, மீண்டும் மகனுக்கு ஒரு முத்தம் வைத்தவள், திரும்பி திரும்பி பார்த்தபடி கை அசைத்துக்கொண்டே சென்றாள். நிரஞ்சனன் மனதிலும் தனியே போகிறாளே என்ற சங்கடம் இருந்ததுதான்.

இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவளது இலட்சியங்களும் அவளுக்கு முக்கியம் தானே. நான் எப்படி என் வேலை முக்கியம் என்று இருக்கிறேனோ அதுபோல் தானே அவளுக்கும். குடும்ப பொறுப்புகளும் பிள்ளைகளை கவனிக்கும் பொறுப்புகளும் பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன??!!

இப்படி சொல்லி சொல்லித்தானே எத்தனையோ திறமைசாலிகளை அடுப்படியோடு நிறுத்தியிருக்கிறோம்..

நிரஞ்சனன் வெகு நேரம் அங்கேயே நின்றவன், அதன்பின்னே தான் கிளம்பினான். அத்து அழுது அழுது சமாதானம் ஆகியிருக்க ஒருவழியாய் வீடு வந்தனர்.

மறுநாளில் இருந்து தினமும் வீடியோ கால்தான். முதலில் நிரஞ்சனன் எந்த நேரத்தில் வீட்டில் இருப்பான் என்று தெரியாது, நித்யாவின் போனிற்கோ சுந்தரியின் போனிற்கோ தான் அழைத்தாள் ராதிகா.

ஆனால் அதற்கு அடுத்த நாளில் இருந்து நிரஞ்சனனே அழைத்துவிட்டான். அழைப்பை ஏற்றதுமே அவன் சொன்னது “என்கிட்டயும் போன் இருக்கு..” என்றதுதான்.

இதைக் கேட்டு ராதிகாவிற்கு அப்படியொரு சிரிப்பு. சத்தமாய் அவள் சிரிக்க, “வீடியோ கால் செய்யவா..” என்று கடுப்புடனே நிரஞ்சனன் கேட்க,

“டூ மினிட்ஸ்..” என்றவள், இரண்டு நிமிடத்தில் அவளே அழைத்தும் விட்டாள்.

மகனை மடியினில் இருத்தி நிரஞ்சனன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருக்க “ம்மா..!!!” என்றான் சத்தமாய் அத்து..

“அத்துக்குட்டி..” என்று ராதிகா பல முத்தங்களை பறக்கவிட, இதைப் பார்த்த நிரஞ்சனனிற்குத் தான் பொறாமையாய் போனது.

அவன் எதுவும் பேசாது இருக்க, அம்மா மகன் இருவரும் தான் கதை பேச, பொறுக்க முடியாதவன் “ஹலோ.. இவ்வளோ பெரிய உருவம் உக்காந்து இருக்கேன் தெரியலையா..??” என்று கேட்க,

“நீங்க வாய்ல கொழுக்கட்டை வச்சு உக்காந்து இருந்தா நான் என்ன செய்றது..” என்றாள் அவளும்.

இப்படி ஆரம்பித்தது தான் இருவரும் சம்பாசனைகளும். மகன் சிறிது நேரம் தான் பேசுவான். அடுத்து இவர்கள் பேசத் தொடங்கினால், நேரம் போனது தெரியவில்லை.

‘ஸ்வீட் நத்திங்க்ஸ்..’ இவர்களுக்கு இப்போதுதான் பேசிடத் தோன்றியது போல.

என்ன பேசுகிறோம் என்றே தெரியாது பேசுவதும், அடுத்து எப்போதடா பேசுவோம் என்று ஏங்கிப் போவதுமாய் நாட்கள் நகர்ந்திட, இதோ ராதிகா அங்கிருந்து கிளம்பும் நாள் வந்துவிட்டது.

இங்கிருந்து நிரஞ்சனன் மகன் செய்யும் சேட்டைகளையும், அப்பாவும் பையனும் அடிக்கும் லூட்டிகளையும் போட்டோ எடுத்து அனுப்பினால் ஆரம்பத்தில் அவளும் அதற்கு ‘சூப்பர்..’ என்றோ இல்லை மகனைக் கொஞ்சியோ எதுவும் பதில் அளிக்க,

“இங்கிருந்து போட்டோ அனுப்பினா, நீ அங்கிருந்து போட்டோ அனுப்பனும்.. அதுகூட தெரியாதா உனக்கு..” என்று நிரஞ்சனன் கேட்க,

“முன்னபின்ன அனுப்பி இருந்தா தானே.. இனி அனுப்பிடலாம்..” என்றவள், அடுத்து இருபக்கமும் புகைப்பட பரிமாற்றங்கள் செய்து, இருவரின் போன் கேலரியும் மற்றவர் புகைப்படங்களால் நிறைந்தது.

மனதில் ராதிகாவிற்கு முன்னிருந்த தயக்கம், குழப்பம் எல்லாம் எதுவுமில்லை. அப்படியே பொருந்திப் போனாள் அவனோடு. நிரஞ்சனனும் இப்படிதான். மற்றது எதையும் நினைக்காது இப்போது இருக்கும் தருணங்களை மட்டுமே இருவரும் மனதில் பதித்தனர்.

Advertisement