Advertisement

அத்தியாயம் – 21

அவ்வப்போது, அடிக்கடி என்பது போய் தினம் தினம் என்றானது அதோஷஜன் நிரஞ்சனன் இல்லம் செல்வது. மாலையில் பள்ளிவிட்டு நேராய் அப்பாவின் வீடு செல்பவன், இரவு உறங்கும் நேரத்தில் தான் அம்மாவிடம் வர, மறுநாள் விடிந்தால் பள்ளிக்கு இங்கிருந்துச் செல்ல, இதுவே அவனுக்கு பழகியும் போனது.

வார இறுதி நாட்களில் அவனுக்கு எங்கே விருப்பமோ அங்கே இருக்க, பெரியவர்கள் தான் ‘இதென்ன சங்கதி..’ என்று பார்த்து நின்றனர்.

ஆனால் நிரஞ்சனனும் சரி, ராதிகாவும் சரி  இதனை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

‘இப்போ என்ன.. அத்து ஜாலியா இருக்கான்.. அவன் சந்தோசம் தான் முக்கியம்..’ என்றுசொல்லி வாயடைத்துவிட்டனர்.

நிரஞ்சனன் இப்போதெல்லாம் தனது வேலைகளை சற்றே தள்ளி வைத்துக்கொண்டான். வேலை வேலை என்று அதிலே கவனம் செலுத்தாது, மகனுக்காக என்று அதனை தளர்த்த பின் அதுவே அவனுக்கு வாடிக்கையும் ஆனது.

இத்துனை சிரமம் செய்து சம்பாரிப்பது யாருக்காக…? எதற்காக..??

குடும்பம் நன்றாய் இருந்திட வேண்டும் என்பதற்காகத்தானே.. குடும்பமே இல்லாது வெறும் வேலையும் சம்பாத்தியமும் இருந்து என்ன செய்ய??

மூன்று வேலை உணவும், உடுத்தத் துணியும், உறங்க இடமும் இருந்தால் போதுமா?? அது முழுமையான வாழ்வாகிடுமா என்ன..??!

இதெல்லாம் நிரஞ்சனனுக்கு இப்போது தான் புரிந்தது, முன்னமே இப்படி இருந்திருந்தால் என்று நினைக்காமலும் இருந்திட முடியவில்லை. சில விஷயங்கள் காலம் தாழ்த்தித் தானே புரிகிறது.

என்ன அதற்கு நாம் கொடுக்கும் விலை தான் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது.. சிலருக்கு பணம் காசு.. சிலருக்கு நட்புறவு.. சிலருக்கு வாழ்க்கை..

அன்றும் நிரஞ்சனன், மகனை இரவு கொண்டு வந்து விட வர, மணிவண்ணன் தான் வெளி கேட்டினை திறந்துவிட, ராதிகா வந்து வாசலில் நின்றுகொண்டாள். இது தினமும் நடக்கும் ஒன்றுதானே.

‘உள்ளே வாங்க…’ என்ற வார்த்தைகள் எல்லாம் அவளிடம் இருக்காது.

மகனைத் தூக்கிக்கொண்டு வந்து தருவான். இவளும் வாங்கிக்கொள்வாள். அவ்வளவே. மணிவண்ணனும் ராணியும் மட்டும் நிரஞ்சனனை அழைப்பர்

“இல்ல இருக்கட்டும் மாமா.. இருக்கட்டும் அத்தை..” என்றிடுவான்.

ஒருவேளை ராதிகா அழைத்தால் வந்திருப்பானோ என்னவோ. வாசலோடு நின்று கிளம்பிடுவான். இன்னமும் ராதிகா அளவிற்கு வீட்டினுள் சென்று அளவளாவ நிரஞ்சனனுக்கு தைரியம் வரவில்லை போல.

அன்றும் வர, மணிவண்ணன் “வாங்க தம்பி..” என, அவரைப் பார்த்து புன்னகைத்தவன் “கார்ல வர்றப்போவே தூங்கிட்டான் மாமா..” என்றபடி மகனைத் தூக்கிக்கொண்டு வர,

ராணியோ “வாங்க தம்பி..” என்றவர், மகளைத் தான் முறைத்தார்.

நைட்டியில் நின்றிருந்தாள். வாசல் நிலைப்படியில் சாய்ந்து. மகனைத் தூக்கிக்கொண்டு வரும் கணவனைத் தான் பார்த்து நின்றிருந்தாள். பேச்சுக்கள் இல்லை. ஆனால் பார்வை மொத்தமும் அவனிடம்தான் இருந்தது. அவனுக்கும் அப்படித்தான். பேச்சுக்கள் பெரியவர்களிடம் இருந்தாலும் பார்வை எல்லாம் அவளின் மீது தான் இருந்தது.

என்னவோ ஒன்று, அவளின்பால் இன்று அதிகம் இழுப்பதாய் இருக்க, பார்வையை திருப்பவே முடியவில்லை. அத்துவை தூக்கிக்கொண்டு வந்தவன், எங்கே வாசல் படியிலேயே நிற்க,

“உள்ள வாங்க..” என்று பெரியவர்கள் இருவர் சொன்னது எல்லாம் அவன் காதில் விழுந்ததா தெரியவில்லை.

“பால் குடிக்கலை இன்னும்.. அடம் பண்ணிட்டான்.. வரும்போதே தூங்கிட்டான்.. நீ குடிக்க வச்சிடு..” என்றபடி அவளிடம் மகனை நீட்ட,

“ஏன்.. ஹொம் வொர்க் பண்றது எல்லாம் மட்டும் கூட்டுக் களவாணித் தனம் பண்றீங்க தானே.. இதுல முடியலையாக்கும்..” என்று வேண்டுமென்றே நொடித்தபடி மகனை வாங்க, நிரஞ்சனனோ நிறுத்தி நிதானமாய் சிறுவனைக் கொடுக்க, அவள் மேற்படியில் நிற்க, இவன் அடுத்த படியில் நின்று கொடுத்தமையால் வேண்டும் என்று இல்லாமலே இருவரின் உடலும் உரசிக்கொள்ள, அந்த க்ஷணம் இருவருக்குமே ஒரு சிலிர்ப்பு வந்து போனது.

மகனை வாங்கிக்கொண்டாளும் ராதிகா அப்படியே நிற்க, நிரஞ்சனனும் நிற்க, ராணியும் மணிவண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள், பேசாது உள்ளே செல்ல, ராதிகாவின் வாய் தன்னப்போல் “உள்ள வாங்க..” என,

“இருக்கட்டும்..” என்றான் இவனும் வேண்டுமென்றே.

“சரி அப்போ கிளம்புங்க..” என்றவள் திரும்பிப் போக நகல, “வந்தா என்ன கொடுப்ப..” என்றபடி அவனும் உள்ளே வந்தான்.

இதென்ன பேச்சுக்கள்.. இதற்கு முன்னே இல்லாத பேச்சுக்கள்.. ஒரே வீட்டில், ஒரே அறையில் என்று வாழ்ந்திட்ட போதெல்லாம் இப்படி பேசியிறாதவன், இன்று இப்படிக் கேட்க, சட்டென்று அவளுள் ஒரு வெம்மை வந்து போனது.

வராண்டாவில் அப்படியே நின்றுவிட, நிரஞ்சனன் இரண்டு அடி எடுத்து வைத்தவன், திரும்பிப் பார்க்க “என்ன ராதிகா…” என்றான் ஒன்றுமே அறியாதவன் போல.

“இ.. இல்லையே.. ஒண்ணுமில்லையே..” என்றவளுக்கு, இதழ்கள் நடுங்கத் தொடங்கியது.

அவள் அதிகம் படபடப்பாக இருக்கும்போது தான் அவளுக்கு இப்படி ஒரு நடுக்கம் ஏற்படும், அது நிரஞ்சனனிற்கும் நன்கு தெரியும்.

“அப்.. அப்போ ஒண்ணுமேயில்லையா..” என்று கேட்டவன் வெகு நிதானமாய் இவளிடம் நெருங்கி வர, ராதிகா அப்படியே கண்கள் விரித்துப் பார்த்தபடி நிற்க,

அருகே வந்தவனோ “இப்போ எதுக்கு இந்த டென்சன்..” என்றான்..

‘பண்றதெல்லாம் பண்ணிட்டு என்ன கேள்வி இது..’ என்று அவளுக்கு கேட்கத் தோன்றினாலும், அதை கேட்கக் கூட முடியாது போக,

“ம்ம் சொல்லு ராதிகா.. உள்ள வந்தா ஒரு டம்பளர் தண்ணி கூட கொடுக்க மாட்டியா..” என,

‘ப்பூ.. தண்ணி தான் கேட்டானா..’ என்று அவள் ஆசுவாசம் அடைய,

“ம்ம்.. நானும் பாக்குறேன்.. நீ என்னவோ சரியே இல்ல போ..” என்றவன், அவளுக்கு பின்னே சென்று அத்துவின் நெற்றில் முத்தமிட்டு, “குட் நைட்..” என்று மெதுவாகச் சொல்ல, ராதிகா அவ்வளோதான் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

இதயம் தடக் தடக் என்று அடித்துக்கொள்ள, “பை…” என்று சொல்லி நிரஞ்சனன் கிளம்பியவன்

“நான் கிளம்புறேன் மாமா.. அத்தை..” என்று சப்தமாகச் சொல்ல, அந்த சத்தத்தில் மீண்டவள், அவனை திரும்பியும் பாராது நிற்க,

அப்பாவும் அம்மாவும் வெளியே வரவும் வேகமாய் தன் முகத்தினை மாற்றிக்கொள்ள, மணிவண்ணன் வெளியே வந்தவர் நிரஞ்சனன் முகம் பார்க்க,

“எதுவும் சொல்லனுமா..??!!” என்றான்.

ராதிகாவோ உள்ளே வராண்டாவில் நின்றுகொள்ள, ராணியோ “நீ பண்றது எதுவமே சரியில்லை ராதிகா.. வர்ற மனுசனை உள்ள வான்னு கூப்பிடக் கூட உனக்கு முடியாதா..” என்று கடிந்தபடி நிற்க, அவளோ பேந்த பேந்த விழித்தாள். 

ராணியோ ‘முத்திடுச்சு..’ என்று எண்ணியவர், அவரும் அங்கே ஆண்கள் பக்கம் செல்ல, இவள் இங்கேயே நின்றுகொண்டாள்.

“இல்ல.. அது.. நாங்க நாளைக்கு ஊருக்கு போறோம்.. வர பத்து  நாள் ஆகும்..” என்று மணிவண்ணன் சொல்ல,

“ஓ..!! நல்லபடியா போயிட்டு வாங்க..” என்று இவனும் சொல்ல,

“இல்ல தம்பி.. அது.. கொஞ்சம் பார்த்துக்கோங்க. எப்பவும் இப்படி அதிக நாள் விட்டுப் போனது இல்லை..” என்று ராணி தயங்க,

“என்ன விஷயம்..” என்றான் நிரஞ்சனன்.

“நார்த் டெம்பிள்ஸ்க்கு ராதிகா தான் நாலு மாசம் முன்னாடி எங்களுக்கு புக் பண்ணா.. எல்லாம் சேர்ந்து போவோம் சொன்னதுக்கு, இப்போ நீங்க போயிட்டு வாங்க அத்து பெரியவன் ஆகவும் எல்லாம் சேர்ந்து போவோம்னு சொல்லிட்டா..” என்று ராணி சொல்ல,

“சரிதானே அத்தை.. இப்போ அவனுக்கு பார்த்தாலும் ஒன்னும் புரியாது. பெரியவனாகட்டும்..” என,

“அதான்.. கொஞ்சம் பார்த்துக்கோங்க.. அவளுக்கு எப்போ ஆபிஸ்ல என்ன டென்சன் வரும்னு தெரியாது..” என்று மணிவண்ணன் சொல்ல,

“டோன்ட் வொர்ரி நான் பார்த்துக்கிறேன்.. வேணும்னா ராதிகாவும் அத்துவும் வந்து அங்க இருக்கட்டும்..” என்று நிரஞ்சனன் சொல்ல,

“அது நீங்க பேசி முடிவு பண்ணிக்கோங்க..” என்றுவிட்டார் ராணி.

“ம்ம்.. இப்போவேணாம்.. நாளைக்கு நீங்க நல்லபடியா கிளம்புங்க.. நான் அம்மாவை விட்டு கூப்பிட சொல்றேன்..” என்றவனும் கிளம்பிட, நிரஞ்சனனிடம் என்ன பேசினார்கள் என்று தெரியாது ராதிகா உள்ளே நின்றவள், அப்பாவும் அம்மாவும் உள்ளே வரவும்

“என்ன இவ்வளோ நேரம் வெளிய..” என்றாள், என்னை விட்டு என்ன பேசினீர்கள் என்று கேட்கும் தொனியில்.

“அது எதுக்கு உனக்கு..??” என்று ராணி சொல்ல,

“ம்மா…” என்று ராதிகா குரலை உயர்த்த, “நீ இன்னும் சிலை மாதிரி எத்தனை நேரம் இங்கனவே நிக்கிறன்னு பாக்குறேன்..” என்றவர், பேரனை அவளிடம் இருந்து தூக்கிக்கொண்டு செல்ல,

“ப்பா.. என்னப்பா..” என்றாள் அப்பாவிடம்.

“ஒண்ணுமில்லடா.. நித்யா கல்யாண விசயம் பேசினோம்.. அவ்வளோதான்..” என்று மணிவண்ணன் மாற்றி சொல்ல, ராதிகாவிற்கு திடுக்கென்று இருந்தது.

ஒருவேளை சொல்லிவிட்டானோ என்று. இன்னமும் அவள் இங்கே சொல்லவில்லைதானே தாரைவார்த்து கொடுக்கப் போவது பற்றி. அடுத்த படபடப்பு தொடங்க, அப்பாவை ஆராய்ச்சியை பார்த்தாள்.

“அவ்வளோதான் ஒண்ணுமில்ல.. போ… நீயும் போய் தூங்கு..” என்றுவிட்டு மணிவண்ணன் நகர,

“நித்யா கல்யாணம் பத்தி உங்கக்கிட்ட என்னப்பா பேசினார்..” என்று இவள் வால்பிடித்து உள்ளே வர,

“அட நாங்க என்னவோ பேசினோம் உனக்கு என்ன…” என்றார் ராணி.

“அப்.. அப்போ எனக்கு தெரியவேணாமா..”

“நீ பண்றது எல்லாம் எங்கக்கிட்ட சொல்றியா நீ..”

“ம்மா…!!!”

“ராதிகா…!!”

“அடடா.. போதும் ரெண்டுபேரும் நிறுத்துங்க.. பொதுவான பேச்சுத்தான் ராதிகா.. வேறெதுவும் இல்லை.. நாளைக்கு ஊருக்கு போறதைப் பத்தி சொன்னோம்..” என்று மணிவண்ணன் இடைபுக,

“அதை எதுக்கு அவர்க்கிட்ட சொல்லணும்..” என்றாள் பிகுவாய்.

“அது உனக்குத் தேவையில்லை..” என்று ராணி சொல்லவும், “எல்லாம் என்னவோ பண்ணுங்க..” என்று அறைக்குள் நுழைந்துகொண்டாள் ராதிகா.

அதற்குமேல் யாரோடும் பேச பிடிக்கவில்லை. கோபமாகவும் இருந்தது. உற்சாகமாகவும் இருந்தது. சிரிப்பும் வந்தது, முறைப்பும் வந்தது.  மகனின் அருகே படுத்துக்கொண்டவள்

‘நீ டெய்லி நல்லா சொகுசு பழகிட்ட டா..’ என்று முணுமுணுக்க, ராதிகாவின் உறக்கம் என்பது காணாது தான் போனது.

நிரஞ்சனன் வீட்டிற்கு வந்தவன் முதல் வேலையாய் சுந்தரியிடம் “ம்மா, ராதிகா அப்பா அம்மா ட்ரிப் போறாங்களாம்.. நாளைக்கு அவளையும் அத்துவையும் நீ இங்க கூப்பிடு..” என,

‘ஆங்..!!!’ என்று பார்த்தார் சுந்தரி.

நித்யா வேடிக்கைப் பார்க்க “என்னம்மா.. கூப்பிடு.. தனியாவா அங்க இருப்பாங்க.. அவளா எப்படி வீட்டு வேலை செஞ்சு அத்துவை கிளப்பி ஆபிஸ் போய்ட்டு வந்து எல்லாம் செய்ய முடியும் கஷ்டம் தான..” என,

சுந்தரி ‘அதுசரி..’ என்று பார்க்க,

நித்யாவோ “ம்மா இப்பவும் சொல்றேன், இவங்க விளையாட்டுல நீ ரெப்ரீ ஆகாத..” என,

“ஓய் நீ போ.. போய் அரவிந்த் கூட பேசு.. இங்க என்ன வேடிக்கை..” என்று நிரஞ்சனன் விரட்ட,

“எல்லாம் பேசி முடிச்சிட்டோம்..” என்றாள் நொடிப்பாய்.

“ம்மா இவ சொல்றதை கேட்காத.. நான் சொல்றதை கேளு நீ..” என,

“இதெல்லாம் ராதிகா சம்மதிப்பாளா டா..” என்றார் அவரும் தயக்கமாய்.

“நீ கூப்பிடு.. அவளை ஓகே பண்றது என் பொறுப்பு..” என,

“ம்ம்.. கல்யாணம் ஆகி குழந்தை பெத்து.. டைவர்ஸ் வேற ஆகி.. அதுக்கப்புறம் பொண்டாட்டிய ஓகே பண்றது நீயாதான் இருப்ப..” என்று நித்யா அண்ணின் முகத்திற்கு என்றே சொல்லிட,

‘அச்சோ..’ என்று சுந்தரி அதிர்ந்து மகனைப் பார்க்க, அவனோ “ஆமா இப்போ என்னவாம்..” என்றான் கெத்தாய்.

அவன் முகத்தில் புன்னகை தான் இருந்தது, இந்த சில நாட்களாய் நடக்கும் சங்கதிகள் எல்லாம் இருவருக்குமே கடந்த கால கசப்புகளை தாண்டி வந்திட செய்தது. மறக்கச் செய்தது. அதை நினைக்கவேண்டாமே என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ள செய்தது..

ஆக அதைப் பற்றிய பேச்சு இப்போது நிரஞ்சனனுக்கு பெரிதாய் தெரியவில்லை.

“இது வேலைக்கு ஆகாது..” என்று நித்யா எழுந்து சென்றுவிட,

“ம்மா ஓகேவா..” என்றுவிட்டு நிரஞ்சனனும் செல்ல, “நாளைக்கேல்லாம் முடியாது நிரஞ்சன்.. ரெண்டு நாள் ஆகட்டும்..” என்றார் சுந்தரியும்.

ஆனால் அந்த இரண்டு நாட்கள் கழித்து ராதிகாவுமே வெளியூர் கிளம்பும் நிலை ஏற்பட்டது.

எப்போதும் போல் ராதிகா அலுவலகம் சென்றிருக்க, மதிய உணவு வேலை நெருங்குகையில் சுலேகா அழைக்கவும்,

“எஸ் மேம்..” என்று போய் நின்றாள்.

“ப்ரோமோசன் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க தானே..” என,

‘தெரியாதமாதிரி ஒரு கேள்வி..’ என்றெண்ணியவள் “எஸ் மேம்..” என,

“உங்களுக்கு ஒரு சான்ஸ் வந்திருக்கு.. பட் யூ ஹேவ் டூ அட்டென்ட் ட்ரைனிங் இன் சிங்கப்பூர்..” என, வேகமாய் மலர்த் தொடங்கியிருந்த முகம் அப்படியே வாடிப்போது ராதிகாவிற்கு.

‘சிங்கப்பூரிலா…’ என்று மனம் யோசிக்க,

“என்ன ராதிகா..??” என்றார் சுலேகா..

“ந.. நத்திங் மேம்.. சொல்லுங்க..” என,

“ம்ம் நாளைக்கு ஈவ்னிங் கிளம்புறதுபோல இருக்கும்.. ஒன் வீக் ட்ரைனிங்.. எல்லா அலொவன்சும் கம்பனி பார்த்துக்கும்… சோ வேறெந்த பிராப்ளமும் இல்லையே..” என்று சுலேகா கேட்க,

எப்போது எப்போது என்று காத்திருந்த வாய்ப்பு இப்போதுதானா வரவேண்டும் என்று தோன்றியது ராதிகாவிற்கு. அப்பாவும் அம்மாவும் ஊரில் இருந்தால் பிரச்னையே இல்லை. தாராளமாய் கிளம்பியிருப்பாள். இப்போது அவர்களும் இல்லை, அத்துவை மட்டும் விட்டு அவள் எப்படி போக முடியும்.

நிரஞ்சனன் எண்ணம் வந்தது தான். சொன்னால் அவன் என்ன மாட்டேன் என்றா சொல்வான். இருந்தும் ராதிகாவிற்கு மனம் இடம் கொடவில்லை.

பதில் சொல்லாது அமைதியாய் இருந்தவளையே சுலேகா பார்த்தவர் “என்ன ராதிகா.. இப்படியொரு சான்ஸ்காக தானே நீங்க வெய்ட் பண்ணீங்க..” என,

“யா மேம்.. பட் இப்போ ஐ கான்ட்.. வே.. வேற யாரையும் அனுப்ப முடியுமா..” என்றாள் கொஞ்சம் சங்கடப்பட்டுப் போய்.

“வொய்.. ஏன் அப்படி சொல்றீங்க.. ஆக்சுவலி இந்த சான்ஸ் வேற பிரான்ச்க்கு போயிருக்கனும். யுவர் குட் டைம் உங்களுக்கு வந்திருக்கு..” என்ற சுலேகாவின் குரலில் காட்டம்.

“கொஞ்சம் பெர்சனல் ரீசன்ஸ்..” என்றவளுக்கு குரலே எழும்பவில்லை.

“வாட் தி ஹெல்… பெர்சனல் ப்ராப்ளம்ஸ் யாருக்குத்தான் இல்லை.. உங்க ஏஜ்க்கு இது எவ்வளோ பெரிய சான்ஸ் தெரியுமா..” என்று சுலேக குரலை உயர்த்த, ராதிகாவிற்கு பதிலே சொல்ல முடியவில்லை.

அவர் சொல்வது எல்லாம் உண்மைதான். அரியதொரு வாய்ப்புத்தான். ஆனால் சூழல் அப்படியிருக்கையில் யார் என்ன செய்திட முடியும்.

பதில் சொல்லாது அமைதியாகவே நிற்க, “என்ன ப்ராப்ளம்..??” என்றார் சுலேகா.

“இல்ல பேரன்ட்ஸ் ஊர்ல இல்லை.. பையனை மட்டும்விட்டுட்டு..” என்று அவள் சொல்லி முடிக்குமுன்னே,

“பையனோட அப்பாக்கு பொறுப்பு இருக்கும்தானே..” என்றார் சுலேகா.

நிரஞ்சனன் பற்றி சொல்லவும், ராதிகாவிற்கு சுரீரென்று வந்தது. இருந்தும் இப்போது பேசிடக் கூடாது என்று அமைதியாய் நிற்க,

“பதில் சொல்லுங்க ராதிகா.. அன்னிக்கு உங்களுக்கு ஒன்னுன்னதும் எப்படி பேசினார். அதே பொறுப்பு பையன் விசயத்துலயும் இருக்கணும்தானே.. ஏன் ஒன் வீக் பையனை கேர் பண்ணமாட்டாங்களா..” என்று சுலேகாவும் விடாது பேச,

“மேம் கொஞ்சம் டைம் கொடுங்க..” என்றாள் நிதானமாய்.

இதற்குமேல் மறுப்பாய் எதுவும் சொன்னால், சுலேகா இதுதான் வாய்ப்பென்று எண்ணி சுலேகா அதிகம் பேசிக்கொண்டே செல்வார் என்பது அவளுக்குத் தெரியாதா என்ன..??

அதனால் டைம் கேட்க, அவளையே எடை போடுவது போல் பார்க்க “நாளைக்கு மார்னிங் வரைக்கும் டைம்.. அதுக்குள்ள சொல்லிடுங்க நான் ரிப்போர்ட் பண்ணனும்..” என,

“ஓகே..” என்றுவிட்டு வெளியே வந்தாள்.

உணவு வேலையிலோ ஒருவாய் கூட அவளுக்கு உள்ளே செல்லவில்லை. மனதில் இதே யோசனை. நல்லதொரு வாய்ப்பு. ஆனால் அவளுக்கு அதெல்லாம் தாண்டி அத்து மிக மிக முக்கியம். அவனை விட்டு இத்தனை நாட்கள் இருந்ததுமில்லை.

யோசித்துக்கொண்டே இருக்க, சுந்தரி அழைத்தார். மகனின் படுத்துதல் தாங்கள் அழைத்துவிட்டார்.

“ராதிகா.. சாயங்காலம் நேரா இங்க வந்திடுறியா..” என,

“ஏ.. எதுக்கு அத்தை..” என்றாள் சுரத்தே இல்லாது.

“எப்படியும் அத்து நைட் தான் அங்க வருவான்.. நீ மட்டும் அங்க போய் என்ன செய்ய போற, வந்தைன்னா டின்னர் இங்கவே முடிச்சிக்கலாம் தானே..” என, அவர் சொன்னது என்ன புரிந்ததோ,

“ம்ம்..” என்றுமட்டும் சொல்ல,

‘என்ன டல்லடிக்கிறா…’ என்று எண்ணியவர், சரி வரட்டும் என்று எண்ணிக்கொண்டார்.

சொன்னதுபோல் ராதிகாவும் மாலை நேரே அங்கே செல்ல, அவளுக்கு முன்னமே அத்துவும் நிரஞ்சனனும் வீட்டினில் இருந்தனர். உள்ளே நுழையும் போதே எப்போதும் அத்து என்பவும் இப்போது எதுவும் சொல்லாது அமைதியாய் வர,

அத்து தான் “ம்மா..” என்று அருகே செல்ல, அவனை மடியில் இருத்தியபடி, ராதிகா சோபாவில் அமர்ந்துகொள்ள, மற்றவர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் ‘என்னாச்சு இவளுக்கு…’ என்று.

நித்யா கேட்டேவிட்டாள் “என்னண்ணி..” என்று.

நிரஞ்சனனும் அவளையே பார்த்துகொண்டு இருக்க, சுந்தரியோ “முதல்ல இந்த டீ குடி.. பிரெஷ் ஆகிட்டு வா பேசலாம்..” என்று டீ கொடுக்க,

அத்துவோ அவளின் மடியில் இருந்து நகராது இருக்க “அத்து இங்க வா.. அம்மா டீ குடிக்கட்டும்..” என்று நிரஞ்சனன் அழைக்க, “ம்ம்  நோப்பா.. அம்மா டென்சன்..” என்றான், அவளின் முகம் எப்படியோ இருப்பது பார்த்து.

அவளுடனே எப்போதும் இருந்ததால், ராதிகாவின் சிறு சிறு மாற்றங்கள் கூட அவனுக்கு நன்கு புரியும். அதிலும் முகத்தை சுருக்கி ‘அம்மாவை டென்சன் பண்ணாத அத்து..’ என்று அவள் சொல்வது மிக மிக நன்கு புரியும்.

எப்போது ராதிகா முகம் சுருக்கினாலும் அத்துவிற்கு ‘அம்மா டென்சன்..’ என்றுதான் சொல்வான்.

இப்போது அதையே சொல்ல, ராதிகாவிற்கு அனைத்தையும் மீறி ஒரு முறுவல் வந்து அமர்ந்துகொள்ள, மகனின் கன்னத்தில் இதழ் பதித்தவள் “அதெல்லாம் இல்லை.. நீ அப்பாக்கிட்ட இரு..” என்று அவனை இறக்கிவிட, அதன் பிறகே தான் சிறுவன் இறங்கினான்.

டீ குடித்தபின்னும் அவள் அப்படியேதான் இருக்க சுந்தரி தான் “என்ன ராதிகா ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையா??” என,

“பிராப்ளம்னு இல்லை அத்தை.. பட் ஒரு நல்ல சான்ஸ்.. என்னால தான் யூஸ் பண்ணிக்க முடியலை..” என,

நிரஞ்சனன் “ஏன்.. ஏன்..??!!” என்றான் வேகமாய்.

“ப்ரோமோசன் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. எங்க ஹெட் ஆபிஸ் சிங்கபூர்ல தான். சோ அங்க ஒன் வீக் ட்ரைனிங் போட்டிருக்காங்க.. நாளைக்கே கிளம்பனும்னு சொன்னா எப்படி.. அதான்..” என,

“ஏன்.. போனா என்ன.. நல்ல சான்ஸ் எல்லாம் வர்றப்போவே யூஸ் பண்ணிக்கணும்..” என்று நிரஞ்சனன் சொல்ல, ஆச்சர்யமாய் பார்த்தாள் ராதிகா.

‘நீ வேலைக்கு போனா என்ன போகலைன்னா எனக்கென்ன..’ என்ற ரீதியில் இருந்தவனா இவன்..??!!

அப்படித்தான் பார்த்தாள். அவளின் பார்வை நிரஞ்சனனுக்கு புரிந்தாலும், “சொல்லு ராதிகா.. என்ன பிரச்சனை…” என்றான் நேருக்கு நேரே.

நித்யாவும், சுந்தரியும் அவர்களே பேசி முடிவிற்கு வரட்டும் என்று இருக்க, “இல்ல.. அத்து.. அப்பா அம்மா வேற இங்கயில்லை.. அத்து.. அ.. அவன்..” என்று அவள் சொல்லத் தயங்குகையிலேயே

“அத்துவ நாங்க பார்த்துக்க மாட்டோமா..” என்றான் நிரஞ்சனன் கோபமாய்.

சடுதியில் அவனின் தொனி, முகம், பார்வை எல்லாமே மாறிப்போனது. என்ன பேச்சு இது என்ற விதமாய் அவளைக் காண,

“ஐயோ.. அப்படியில்ல..” என்றாள் வேகமாய்..

அவளின் குரலும், முகமும் பதற்றம் காட்ட “வேற எப்படி..” என்றான் அதே காட்டம் குறையாது.

“நா.. நான் அத்து விட்டு இத்தனை நாள் எல்லாம் இருந்ததில்லை..” என,

“ஓ.. அப்போ நான் இருந்திருக்கேனே.. அதுக்கென்ன சொல்வ நீ..” என்றான் பட்டென்று நிரஞ்சனன்.

ராதிகா விதிர் விதிர்த்துப் போனாள்..!!

Advertisement